Thursday 26 March 2015

திரிக்கப்பட்ட குர்ஆன் வசனங்கள்; பகுதி-4. இரு உதயங்கள்! இரு மறைவுகள்!!

بِسْــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم


https://youtu.be/VYKeRxRjis8 இந்த விடியோவில் இப்போது இருக்கும் தேதிக்கோடு இறைவனின் அத்தாட்சிதான் என்பதற்கு கமிட்டி எடுத்து வைக்கும் மூன்றாவது ஆதாரத்தின் உண்மையை நிலையை ஆய்வு செய்யும் கட்டுரை இது
رَبُّ الْمَشْرِقَيْنِ وَرَبُّ الْمَغْرِبَيْنِ
55:17 (அவன்) இரண்டு கிழக்குத் திசைகளுக்கும் இறைவன். இரண்டு மேற்குத் திசைகளுக்கும் இறைவன்.
மேலுள்ள வசனத்திற்கு “ஒரே நேரத்தில் சூரிய உதயத்தை பார்க்கும் இரண்டு நாடுகளில் ஒன்றின் சூரிய உதயம் வியாழக்கிழமைக்குரியதும் மற்றொன்றின் உதயம் வெள்ளிகிழமைக்குரியதும் ஆகும். இதைதான் இறைவன் “இரண்டு உதயங்கள் இரண்டு மறைவுகள் என்று அல்லாஹ்” சிலாகித்து கூறுகிறான் எனவே இது நிகழும் IDL இறைவனின் அத்தாட்சியாகும்.” என்றும் ஹிஜ்ராக் கமிட்டி பிரசாரம் செய்கிறது. இதன் உண்மை நிலையை அலசுவோம்.
மஷ்ரிக் மற்றும் மக்ரிப் எனும் வார்த்தைகளுக்கு கிழக்கு மேற்கு என்றுதான் இன்றுவரை மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இவர்கள் சஹி இன்டர்நேஷனல் எனும் மொழிப்பெயர்ப்பை மேற்கோள் காட்டி சூரிய உதயம் மற்றும் மறைவு என்று பொருள் வைக்கின்றனர்.
உதயம் என்பதற்கு அரபி வார்த்தை ஷுரூக் شروق அதனுடன் வை சேர்த்து மஷ்ரிக் ஆக்கினால் உதிக்கும் இடம் என்று பொருள் வரும். அதேபோல் மறைவுக்கான அரபி வார்த்தை கரூப் غروب அதனுடன் வை சேர்த்து மக்ரிப் ஆக்கினால் மறையும் இடம் என்று பொருள் வரும்.
இதை நாம் பயன்படுத்தும் அரபு வார்த்தைகளிலிருந்து எளிமையாக விளங்கிக்கொள்ளலாம். அரபி பாண்டித்துவம் தேவையே இல்லை. தவாஃப் எனும் செயலை செய்யும் இடத்தை மதாஃப் (ம + தவாஃப்) என்கிறோம். ஸஈ எனும் செயலை செய்யும் இடத்தை மஸ்ஆ (ம + ஸஈ) என்கிறோம். ஸலாத் எனும் தொழுகையை செய்யும் இடத்தை முஸல்லா (ம + ஸலா) என்கிறோம். இந்த உதாரணங்கள் போதுமானது.
கிழக்கு மேற்கு எனும் பொருட்கள் இருந்தாலும் இவ்வசனத்தை பொறுத்தவரை மஷ்ரிக் மற்றும் மக்ரிபிற்கு உதிக்கும் இடம் மறையும் இடம் என பொருள்கொள்வதே பொருத்தம். இதை பின்வரும் விளக்கங்கள் உறுதிப்படுத்தும்.
பூமி தானே சுழல்வதையும் சூரியனை சுற்றிவருவதையும் நாம் அறிந்துள்ளோம். பூமி சுழலும் அச்சும் பூமி சூரியனை சுற்றும் பாதையும் ஒரே தளத்தில் இல்லாமல் பூமியின் அச்சு 23½ டிகிரி சாய்ந்து உள்ளது. இதனால் தான் பூமியில் காலநிலை மாற்றங்கள் நிகழ்கின்றன. பூமியின் அச்சு இந்த சாய்வு இல்லாமல் இருந்திருந்தால் எப்போதும் ஒரே கால நிலை தான் பூமியில் இருந்திருக்கும். துருவப்பகுதிகளிலும் வருடத்தின் எல்லா நாட்களிலும் இரவு பகல் ஏற்பட்டிருக்கும்.
http://web.gccaz.edu/~lnewman/gph111/topic_units/earth_sun/01_20.jpg
பூமியின் இந்த சாய்வின் காரணமாக இன்று உதித்த இடத்திலிருந்து நாளை சூரியன் உதிப்பதில்லை. ஒவ்வொரு நாளும் 130 மில்லி டிகிரி விலகியே உதிக்கிறது. மார்ச் 20 மற்றும் செப்டம்பர் 23 ஆகிய இரண்டு தினங்களில் மட்டுமே சரியாக கிழக்கிலிருந்து சூரியன் உதயமாகிறது. மார்ச் 20 லிருந்து ஒவ்வொரு நாளும் 130 மில்லி டிகிரி வடக்கு நோக்கி சாய்ந்து ஜூன் 21ம் தேதி 23.5 டிகிரி வடகிழக்கிலிருந்து சூரியன் உதிக்கும். பின்னர் ஒவ்வொரு நாளும் 130 மில்லி டிகிரி தெற்கு நோக்கி நகர்ந்து செப்டம்பர் 23ம் தேதி சரியாக கிழக்கிலிருந்து உதிக்கும். மீண்டும் தெற்கு நோக்கி நகர்ந்து டிசம்பர் 21ம் தேதி 23.5 டிகிரி தென்கிழக்கிலிருந்து சூரியன் உதிக்கும். இப்படி சூரியன் 23.5 வடகிழக்கு மற்றும் 23.5 தென்கிழக்கு என இரண்டு உதயத்தின் எல்லைகளை கொண்டுள்ளது. இதைதான் இறைவன் இரண்டு உதிக்கும் இடங்கள் என்று கூறுகின்றான். அதாவது வடகிழக்கில் ஓர் உதிக்குமிடதையும் தென்கிழக்கில் ஓர் உதிக்குமிடத்தையும் சூரியன் பெற்றுள்ளது. சூரியன் மறைவதிலும் இதே கணக்கு தான். 23.5 வடமேற்கு மற்றும் 23.5 தென்மேற்கு என இரண்டு சூரிய மறைவின் எல்லைகளை கொண்டுள்ளது
இதைத் தவிர வேறு பொருள் இரு கிழக்குகள் இரு மேற்குகள் வசனத்திற்கு இல்லை. ஆனால் ஒரே சூரிய உதயத்தை ஐடிஎலுக்கு இருபுறமும் இருப்பவர்கள் பார்க்கிறார்கள். ஒருவருக்கு அது வியாழக்கிழமையின் சூரிய உதயமாக உள்ளது, ஐடிஎலின் மறுபுறம் வசிப்பவருக்கு அது வெள்ளிக்கிழமையின் சூரிய உதயமாக உள்ளது. ஒரே சூரிய உதயமாக இருந்தாலும் ஐடிஎலின் இருபுறத்தில் இருப்பவர்களுக்கும் அதே இருவேறு சூரிய உதயமாக உள்ளது. இதைதான் அல்லாஹ் இரண்டு உதயங்கள் என்கிறான் என்று ஹிஜ்ராவினர் வாதம் செய்கின்றனர். இதற்கு தோதுவாக அவர்கள் இணையதளத்தில் தேடியபோது சிக்கியதுதான் சஹி இண்டர்நேசனல் மொழிப்பெயர்ப்பு. அதில் மட்டும் மஷ்ரிக் என்பதை கிழக்கு என்றில்லாமலும் உதிக்குமிடம் என்றில்லாமலும் உதயம் என்று மொழிப்பெயர்த்திருப்பார்கள். அதை சாதகமாக காட்டுகிறார்கள் ஹிஜ்ராவினர். இணையத்தில் தேடியபோது quran.com எனும் தளத்திலிருந்து கிடைக்கப்பெற்ற சஹி இண்டர்நேசனல் மொழிப்பெயர்ப்பை அப்படியே தங்களது பவர் பாயின்ட் ஸ்லைடில் காப்பி பேஸ்ட் செய்துள்ளனர். ஆனால் ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு எனும் பழமொழிக்கொப்ப சஹி இண்டர்நேசனலை மென்பதிப்பில் பார்த்தவர்களுக்கு அச்சடிக்கப்பட்ட புத்தகத்தை திறந்து பார்க்க தோன்றவில்லை.
இதோ சஹி இன்டர்நேஷனல் மொழிபெயர்பு புத்தகத்திலிருக்கும் தஃப்ஸீர். தர்ஜுமாவை மட்டும் எடுத்தவர்கள் தஃப்சீரை ஏன் விடவேண்டும். தஃப்சீரில் நாம் கொடுக்கும் அதே விளக்கத்தைதான் சஹி இன்டர்நேஷனல்காரர்கள் கொடுத்திருக்கிறார்கள். ஒருவர் தனது தஃப்சீரில் இருக்கும் விளக்கத்தை மனதில் கொண்டுதான் தர்ஜுமா செய்திருப்பார். டூ சன்ரைசஸ் என்று மொழிப்பெயர்த்தவர் வடகிழக்கின் ஒர் உதயத்தையும் தென்கிழக்கின் ஓர் உதயத்தையும் கருத்தில் கொண்டே மொழிப்பெயர்துள்ளார். இதை நாம் மஞ்சள் நிறத்தில் அடையாளப்படுத்தியுள்ளோம்
ஹிஜ்ராவினர் சொல்வதைப் போன்று ஐடிஎல் பகுதியில் இரு உதயங்கள் நடப்பதில்லை. காலையில் 5 மணிக்கொரு உதயம் 5:45 க்கு ஒரு உதயம் என்று அங்கே நடப்பதில்லை. அல்லது ஒரே நேரத்தில் இரு சூரியன்கள் அங்கே உதயமாவதில்லை. இரு உதிக்குமிடங்களும் அங்கில்லை. ஐடிஎலின் ஒரு புறம் வியாழனின் உதயமும் மறுபுறம் வெள்ளியின் உதயமும் இருப்பது மனிதனின் ஏற்பாடு. அல்லாஹ் உருவாக்கியதல்ல. தீவுகளுக்கிடையே மனிதன் ஐடிஎல் கோட்டைப் போட்டதால் அங்கே அவ்வாறு நிகழ்கிறது. இயற்கையாக அல்லாஹ் அமைத்த கடல்பரப்பில் ஐடிஎல் கோட்டை நிர்ணயித்திருந்தால் வியாழன் உதயம் வெள்ளி உதயம் என்றெல்லாம் ஆகாது. மனிதன் 1884 உருவாக்கிய தவறான தேதிக்கோட்டால் நிகழும் பிழையை அல்லாஹ்வின் அத்தாட்சி என்று சொல்லும் துணிவு ஹிஜ்ராவினருக்கு மட்டுமே இருக்கிறது. இவ்வசனம் பூமியின் சாய்வையும் காலநிலை மாற்றங்களையும் விளக்குவதன் மூலம் குர்ஆன் இறைவேதம்தான் என்பதன் அத்தாட்சியாக உள்ளது. அதை மாற்றி இந்த வசனங்களை மனிதன் கற்பனை செய்த IDL இன் அத்தாட்சி என்று கூறுவது ஹிஜ்ராவினரின் இறையச்சத்தைக் காட்டுகிறது
இல்லை இரண்டு உதிக்கும் இடங்கள் இரண்டு மறையும் இடங்கள் என்று இறைவன் சொல்வதற்கு நாங்கள் கொடுக்கும் விளக்கம்தான் சரி என்று சொல்பவர்கள் பின்வரும் இறைவசனங்களுக்கும் அதே விளக்கம் பொருந்துமா என்று சிந்திக்க வேண்டும்.
فَلَا أُقْسِمُ بِرَبِّ الْمَشَارِقِ وَالْمَغَارِبِ
70:40 (பல) கிழக்குகளுக்கும், (பல) மேற்குகளுக்கும் (இறைவனாகிய) றப்பின் மேல் ஆணையிடுகிறேன்.
இவ்வசனத்திற்கு பல தேதிக்கோடுகள் இருப்பதாக ஹிஜ்ராவினர் பொருள் கொடுப்பார்களா?
حَتّٰٓى اِذَا جَآءَنَا قَالَ يٰلَيْتَ بَيْنِىْ وَبَيْنَكَ بُعْدَ الْمَشْرِقَيْنِ فَبِئْسَ الْقَرِيْنُ‏
43:38. முடிவில் அவன் நம்மிடம் வரும்போது "எனக்கும், உனக்கும் இடையே கிழக்கிற்கும், மேற்கிற்கும் இடைப்பட்ட தூரம் இருந்திருக்கக் கூடாதா? நீ கெட்ட தோழனாவாய்'' என்று அவன் (ஷைத்தானிடம்) கூறுவான்.
இங்கே மஷ்ரிகைன் என்ற வார்த்தை வந்துள்ளது. இதற்கு எவ்வாறு பொருள் கொடுப்பார்கள். ஷைத்தானுக்கும் அம்மனிதனுக்கும் உதயத்தின்போது ஐடிஎலுக்கு இடைப்பட்ட தூரம் என்று பொருள் செய்வார்களா?
رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَا وَرَبُّ الْمَشَارِقِ
37:5. (அவன்) வானங்கள்பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றுக்கு இறைவன். கிழக்குகளுக்கும் இறைவன்.
இங்கே இரண்டு உதயங்களை பற்றி மட்டுமே அல்லாஹ் சொல்கிறான். எனவே இவ்வசனத்திற்கு காலையில் மட்டுமே ஐடிஎலுக்கு இறைவன் என்று பொருள் கொடுப்பார்களா?
70:40 க்கான விளக்கம்: அரபு மொழியில் ஒருமை, இருமை, பன்மை இருப்பதை அறிவோம். உதிக்கும் இடங்கள் என்று பன்மையில் கூறினால் இரண்டிற்கும் மேற்பட்ட உதிக்குமிடங்கள் இருப்பதாக பொருள். இரண்டிற்கும் மேற்பட்ட மறையுமிடங்கள் இருப்பதாகவும் பொருள். தினமும் சூரியன் ஒவ்வொரு இடத்திலிருந்து உதிப்பதால் மொத்தம் 183 உதிக்கும் இடங்கள் உள்ளன. இதைதான் இறைவன் பல உதிக்கும் இடங்கள் என்கிறான். இந்த பல உதிக்கும் இடங்களும் இரண்டு எல்லைகளை கொண்டுள்ளதை இறைவன் இரண்டு உதிக்கும் இடங்கள் என்று 55:17இல் கூறுகின்றான்.
43:38 க்கான விளக்கம்: உருண்டையான உலகில் இது கிழக்கு இது மேற்கு என்று எந்த ஒரு இடத்தையும் குறிப்பிட்டு சொல்லவே இயலாது. கிழக்கத்திய நாடுகள் என்று நாம் ஜப்பான், கொரியா, போன்றவற்றை சொல்கிறோம். ஜப்பானுக்கு கிழக்கே இருக்கும் நாடுதான் அமேரிக்கா. ஆனால் அமெரிக்காவை நாம் மேற்கத்திய நாடு என்கிறோம். அதே போல அமெரிக்காவுக்கு மேற்கில் இருக்கும் ஜப்பானை நாம் கிழக்கத்திய நாடு என்கிறோம். மனிதனாக உருவாக்கிக்கொண்ட ஐடிஎல் காரணமாகவும் அதையே அடிப்படையாக வைத்து வரையப்பட்ட தட்டையான வரைபடத்தை பார்ப்பதாலும் ஜப்பான் கிழக்கு எல்லையில் இருப்பதாகவும் அமெரிக்கா மேற்கு எல்லையில் இருப்பது போன்ற தோற்றமும் ஏற்படுகிறது. உண்மையில் கிழக்கிற்கும் மேற்கிற்கும் எல்லையில்லை. எல்லையே இல்லாத கிழக்கும் மேற்கும் போல உனக்கும் எனக்கும் இடையே தூரம் இருந்திருக்காதா என கைசேதப்பட்ட மனிதன் மறுமையில் கூறுவானாம்.
கிழக்கிற்கும் மேற்கிற்கும் எல்லை இல்லை என்பதன் மூலம் பூமி உருண்டை என்று குர்ஆன் பறைசாற்றுகிறது.
37:5 க்கான விளக்கம்: மேற்சொன்ன அதே விளக்கம்தான் முடிவில்லா கிழக்கிற்கு இறைவன்.

இந்த இறைவசனங்கள் பூமியின் சாய்வையும் காலநிலை மாற்றங்களையும் விளக்குவதன் மூலம் குர்ஆன் இறைவேதம்தான் என்பதன் அத்தாட்சியாக உள்ளன.