Sunday 31 December 2023

QSF42 ஸம்ஸம் கிணற்றுக்கு கொடுக்கப்படும் போலி அற்புதம்.

 

ஸம்ஸம்

ஸம்ஸம் கிணற்றை பற்றி பலவித மூட நம்பிக்கைகள் முஸ்லிம்களிடையே மலிந்து கிடக்கின்றன. அதிலும் குறிப்பாக அறிஞர் பீஜே அவர்களின் தப்சீரில் இருக்கும் ஸம்ஸம் பற்றிய கருத்துக்களும் அவர் பேசியவற்றில் இருக்கும் கருத்துக்களுமே தமிழ் பேசும் முஸ்லிகள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

முதலில் கிணற்றின் வாரலாற்றை லேசாக பார்த்துவிட்டு பின்னர் பீஜே வைக்கும் வாதங்களைப் பார்ப்போம்.

ஸம்ஸம் கிணற்றின் வரலாறு

இறைக் கட்டளைப்படி இப்ராஹீம் (ஸல்) அவர்கள் தனது மனைவி ஹாஜர் (அலை) அவர்களையும் குழந்தை இஸ்மாயில் (ஸல்) அவர்களையும் மக்காவின் பாலைவனத்தில் விட்டுவிட்டார். மனித குடியிருப்புகளோ நீர்நிலைகளோ இல்லாத பகுதி அது. அக்குழந்தை பசியாலும் தாகத்தாலும் அழுதபோது வானவர் ஒருவர் அங்கே தோன்றி தனது காலால் நிலத்தில் அடித்து ஸம்ஸம் நீரூற்றை உருவாக்கினார். அதிலிருந்து குழந்தைக்கு நீரூட்டினார்கள் ஹாஜர் அவர்கள். இந்த வரலாற்று பின்னணியில்தான் மக்கா நகரமே உருவாகிறது.

பின்னர் இந்தக் கிணறு மூடப்பட்டுவிட்டது. பல நூற்றாண்டுகளாக மூடப்பட்டிருந்த கிணற்றை நபி (ஸல்) அவர்கள் பாட்டனார் அப்துல் முத்தலிஃப் மீண்டும் தொண்டி எடுக்கிறார். அதன் பிறகு அதனை நிர்வாகம் செய்யும் பொறுப்பும் அவரிடமே இருந்தது.

இது நபித்துவத்திற்கு முன்பு வரையிருந்த ஸம்ஸம் கிணற்றின் வரலாறு.

இந்த ஸம்ஸம் நீரைப் பற்றி இஸ்லாம் சொல்வது என்னவென்றால்:-

1. அது அற்புதமான முறையில் உருவான நீரூற்று.

2. அது பறக்கத் (மறைமுக அருள்) நிறைந்தது. சிறந்த உணவு.

3. ஹஜ் மற்றும் உம்ராவின் போது இதை பருகுவது சுன்னத்

4. நபி ஸல் அவர்களின் விண்ணுலக பயணத்திற்கு முன்னர் அவர்களின் இதயம் இதனால் கழுவப்பட்டது.

இனி பீஜே அவர்களின் வாதங்கள் ஒவ்வொன்றாக பார்ப்போம்.

https://onlinepj.in/index.php/alquran/alquran/quran-explanations/438-zamzam_thanneer

மேலுள்ள ஆராய்ச்சிக் குறிப்பிலிருந்து பீஜே அவர்கள் சொல்லும் மூன்று அற்புதங்கள்.

1.        மற்ற கிணறுகளை போல மழை நீரால் நிரப்பப்படும் நிலத்தடி நீரை ஆதாரமாக கொண்டது அல்ல ஸம்ஸமின் நீரூற்று அதிசயமான முறையில் பூமிக்கடியிலிருந்து வெளிப்படுகிறது.

2.        ஸம்ஸம் நீரில் கிருமிகள் உயிர்வாழ முடியாது. ஸம்ஸம் நீர் கெட்டுப் போகாது.

3.        எடுக்க எடுக்க ஸம்ஸம் கிணற்றின் நீர் குறையாது. வற்றாது.

இவற்றை ஒவ்வொன்றாக பார்ப்பதற்கு முன்னர் எந்த ஆதாரங்களைக் கொண்டு நாம் இவற்றை அலசுகிறோம் என்று பார்க்க வேண்டும். மார்க்க விஷயம் என்றால் குர்ஆன் மற்றும் ஸஹிஹ் ஹதீஸை நாம் ஆதாரமாக காட்டுவோம். மூட நம்பிக்கைகளை விதைப்பவர்கள் அறிவியலை சான்றாக காட்டுவதால் நாம் அறிவியல் அடிப்படையிலான சான்றுகளைக் காட்டுவோம்.

ஸம்ஸம் நீரைப் பொறுத்தவரை அது உலகின் எல்லா பாகங்களிலும் கிடைக்கிறது. 50மில்லி கிடைத்தால் போதும் அதைக் கொண்டு ஸம்ஸம் நீரின் வேதியல் பண்புகள் இயற்பியல் பண்புகள் உயிரியல் ஆய்வுகள் என அனைத்து ஆய்வுகளையும் செய்துவிடலாம். மேலும் இந்த ஆய்வுகளை யார் வேண்டுமானாலும் செய்ய இயலும்.

இதுபோன்ற ஆய்வுகள் சில ஆர்வக் கோளாறுகளால் செய்யப்பட்டு அவைதான் இன்டர்நெட்டில் மலிந்து கிடக்கின்றன. எடுத்துக் காட்டுக்கு சொல்வதாக இருந்தால் ஒருவர் ஸம்ஸம் நீருக்கு குர்ஆனை ஓதிக் காட்டினால் அதன் படிமம் கஅபா வடிவல் மாறுகிறது என்றார். இன்னொருத்தர் ஸம்ஸம் நீரில் மின்சாரத்தை பாய்ச்சி அதில் லைட் எரிவதாகவும் மற்ற நீரில் லைட் எரியவில்லை என்றும் சொன்னார்.

இது போன்ற குரளி வித்தைகளை ஆதாரமாகக் காட்டி பலர் ஸம்ஸம் நீருக்கு அற்புதத்தை சேர்கின்றனர்.

ஆனால் ஸம்ஸம் கிணற்றை ஆய்வு செய்ய வேண்டுமென்றால் அதை நிர்வகிப்பவர்களின் அனுமதி வேண்டும்.

ஸம்ஸம் நீரை யார் வேண்டுமானாலும் ஆய்வு செய்ய இயலும். ஆனால் ஸம்ஸம் கிணற்றை அதை நிர்வகிப்பவர்களின் அனுமதி இல்லாமல் ஆய்வு செய்ய இயலாது. ஆக அவ்வாறு ஸம்ஸம் கிணற்றை ஆய்வு செய்தவர்கள் தரும் அறிக்கையே அதைப் பற்றிய சரியான தகவல்களைத் தரும்.

அந்த வகையில் ஸம்ஸம் கிணற்றைப் பற்றிய ஆதரப் பூர்வமான ஆவணங்களாக நமக்கு கிடைத்திருப்பவை இரண்டே இரண்டு ஆவணங்கள் தாம்.

1.        ஸம்ஸமை நிர்வகிக்கும் சவூதி அரசின் SGS இணயதளம் https://sgs.gov.sa/pages/zamzam-studies-and-research

2.        அதை நேரடியாக ஆய்வு செய்து ஸம்ஸம் கிணற்றை சுத்தப்படுத்திய யஹ்யா ஹம்zஸா கோஷிக் எழுதிய زمزم طعام طعم وشفاء سقم எனும் புத்தகம்

சவூதி அரசின் இணையதளத்தைப் பற்றிய அறிமுகம் தேவை இல்லை. அந்தக் கிணற்றை தற்போது பரமாரித்துவரும் அரசு துறையான SGS கொடுக்கும் நேரடித் தகவல்கள் அவை. ஆனால் யஹ்யா ஹம்zஸா கோஷிக் பற்றியும் அவர் எழுதிய புத்தகத்தைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் அதனை நாம் ஏன் ஆதாரமாகக் காட்டுகிறோம் என்று புரியும்.

யாரிந்த யஹ்யா ஹம்zஸா கோஷிக்?

1941 ல் மக்காவில் பிறந்தவர். இவரது வீட்டு ஜன்னலைத் திறந்தால் ஸம்ஸம் கிணற்றையும் அங்கே நீர் அருந்துபவர்களையும் பார்க்கலாம். இவரது தந்தைதான் ஸம்ஸம் கிணற்றுக்கு மேற்கூரை இடும் பணிக்கு அமைச்சகத்தால் நியமிக்கப்பட்டவர். வாளிகளால் நீர் இறைக்கப்படுவதை நிறுத்தி விட்டு மின்சார பம்புகளை நிர்மானித்தவரும் இவரின் தந்தைதான். இவ்வாறு சிறு வயது முதலே ஸம்ஸம் உடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் யஹ்யா. பின்னர் சவுதியிலும், எகிப்திலும், அமெரிக்காவிலும் பொறியியலில் பல பட்டங்களைப் பெற்றுள்ளார். சவூதி மன்னரின் மகனும் இவரும் ஒன்றாக படித்தவர்கள் என்பதால் சவூதி அரச குடும்பத்துடன் மிகவும் நெருக்கமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பட்டப் படிப்புக்களை முடித்த பின்னர். சவூதி அரசின் பல்வேறு துறைகளில் உயரிய பதவிகளை அலங்கரித்துள்ளார். குறிப்பாக நீர் மேலாண்மை மற்றும் கழிவு நீர் மேலாண்மை துறையின் ஆக உயரிய பொறுப்பை வகிக்கும் காலத்தில்தான் ஸம்ஸம் கிணற்றில் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்கும் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்படுகிறது. 1979 ல் இவர் இந்த பணியை தொடங்குகிறார். அதை சரிவர நிறைவேற்றிய பிறகு 1983 ல் ஸம்ஸம் கிணற்றில் அவர் செய்த வேலைகளை தொகுத்து ஒரு புத்தமாக வெளியிட்டார். அந்த புத்தகத்தை பற்றித்தான் மேலோட்டமாக பார்க்கப் போகிறோம்.

ஸம்ஸம் – பசிக்கு உணவு, நோய்க்கு நிவாரணி” எனும் ஹதீஸ் வாசகத்தையே தனது புத்தகத்தின் பெயராக வைத்துள்ளார். புத்தகத்தின் துவக்கத்தில் தன்னைப் பற்றியும், தான் ஸம்ஸம் ப்ராஜக்ரில் நியமிக்கப்பட்டதையும் விளக்கிவிட்டு ஸம்ஸம் உருவான இஸ்மாயில் நபியின் வரலாற்றை சொல்கிறார். பின்னர் ஸம்ஸம் நீரின் சிறப்பைப் பற்றிய ஹதீஸ்களை சொல்கிறார். பின்னர் பக்கம் 30 ஸம்ஸம் பற்றி லபீப் அல் பத்னூனி என்பார் எழுதியவற்றை கடுமையாக விமர்சிக்கிறார். “இந்துக்களுக்கும், கிருத்தவர்களுக்கும் புனித நீர் இருப்பதைப் போன்று முஸ்லிம்களுக்கும் இது புனித நீர், ஸம்ஸம் அதிக உப்புத் தன்மை கொண்ட நீர் என்பதால் ஹஜ் காலத்தை தவிர மற்ற காலங்களில் இதனை யாரும் பருகுவதில்லை” என்பன போன்று லபீப் அல் பத்னூனி எழுதிய விமர்சனங்களை ஹதீஸ்களை கொண்டும் வரலாற்றை கொண்டும் கடுமையாக மறுக்கிறார். நாத்திகர்களை திருப்திப் படுத்துவதற்காக போதிய அறிவில்லாமல் பத்னூனி இப்படி எழுதியுள்ளதாக சாடுகிறார். இதை நாம் இங்கே குறிப்பிடுவதற்கு காரணம், தான் பொறியாளர் & அறிவியலாளர் என்பதை தாண்டி ஒரு நல்ல முஸ்லிமாக முஸ்லிம்களின் நம்பிக்கைகளை காயப்படுத்தாமலும் அனைத்து இடங்களிலும் அல்லாஹ்வை நினைவு கூர்ந்தவராக இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.

அதற்கு முன்னரும் அதற்கு பின்னரும் ஸம்ஸம் குறித்து இப்படி ஒரு புத்தகம் எழுதப்படவே இல்லை. ஸம்ஸம் கிணற்றின் வரலாறு, இஸ்லாத்தில் அதற்கான முக்கியத்துவம், அதன் புவியியல், அதன் நீர்மவியல், ஸம்ஸம் நீரின் வேதியியல், அதில் கிடந்த பழைய பொருட்களின் படங்கள் என வலராறு, மார்க்கம், அறிவியல் என அனைத்து கோணங்களிலும் ஆய்வு செய்துள்ளார்.

ஸம்ஸம் கிணற்றின் அளவுகள், அதன் ஆழம், ஊற்றுகண்கள் எத்தனை உள்ளன? எந்த ஆழத்தில் ஊற்றுக் கண்கள் உள்ளன என்பன போன்ற தகவலைகள் இந்த புத்தகத்தை தவிர வேறு எங்குமே பார்க்க இயலாது.

அவரின் புத்தகத்தை இங்கே நீங்கள் பார்வை இடலாம். https://drive.google.com/file/d/1wwJFXSK1TRX9saIAITTeBP6qSYR-TEPy/view?usp=sharing

இனி அறிஞர் பீஜே அவர்களின் வாதங்களை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

A. கிணற்றின் வடிவமும் அளவுகளும்.

//இந்தக் கிணறு 18 அடி அகலமும், 14 அடி நீளமும் கொண்டதாகும்.

இந்தக் கிணற்றில் தண்ணீரின் ஆழம் எப்போதும் சுமார் ஐந்து அடியாகும்.// - பீஜே ஆராய்சிக் குறிப்பு # 438

இவை ஸம்ஸம் கிணற்றின் அளவுகளாக அறிஞர் பீஜே அவர்கள் சொல்வதாகும். 18 அடி அகலமும், 14 அடி நீளமும் கொண்டதாக ஸம்ஸம் இருக்குமென்றால் அதன் வடிவம் செவ்வகமாக இருக்க வேண்டும். ஆனால் உண்மையில் ஸம்ஸம் வட்ட வடிவம் ஆகும் என்பதை பல புகைப்படங்களில் நாம் பார்த்துள்ளோம்.

அதன் ஆழம் ஐந்தடி என்கிறார் பீஜே அவர்கள். ஆனால் அதன் உண்மையான ஆழம் 100 அடி என்கிறார் அதனை அளந்து ஆவணப்படுத்திய ஒரே மனிதர் யஹ்யா

B. ஸம்ஸம் கிணற்றின் நீர் ஆதாரம் மழை நீர் அல்ல. அது அதிசயமான முறையில் பூமிக்கு அடியிலிருந்து உருவாகிறது

//பாலைவனத்தில் அமைந்துள்ள இந்தக் கிணறு குறைந்த ஆழம் கொண்டதாகும். அருகில் ஏரிகளோ, கண்மாய்களோ, குளம் குட்டைகளோ இல்லாமல் இருந்தும் அந்தக் கிணற்றில் இருந்து தினமும் 30 லட்சம் மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் வேண்டிய அளவுக்கு வழங்கப்பட்டும் அங்கு நீர் வற்றிப் போகவில்லை என்பது மிகப்பெரிய அற்புதமாகும்.// - பீஜே ஆராய்சிக் குறிப்பு # 438

உலகிலுள்ள எல்லா கிணறுகளும் நிலத்தடி நீரை ஆதாரமாகக் கொண்டவையே. நிலத்தடி நீர் என்பது இருவகைப்படும் 1) மழை நீரால் நிரப்பப்படும் நிலத்தடி நீர் 2) பூமிக்குள் அடைபட்ட படிம நீர். இவற்றுள் பொதுவாக மனிதனால் தோண்டப்படும்போது கிடைப்பது மழை நீரால் நிரப்பப்படும் நிலத்தடி நீர் ஆகும். இந்த வகை நீர் தான் ஸம்ஸம் கிணற்றின் ஆதாரமாகும்.

ஆனால் பொதுவாக முஸ்லிம்கள் மத்தியில் விதைக்கப்பட்டிருக்கும் நம்பிக்கை என்னவென்றால் “ஸம்ஸம் கிணற்றின் நீர் நிலத்தடி நீரில் இருந்து வருவதில்லை. மாறாக அதிசயமான முறையில் ஸம்ஸம் கிணற்றில் நீர் வருகிறது” என்பதாகும் . இதைதான் பீஜே அவர்களின் ஆராய்சிக் குறிப்பும் கூறுகிறது.

ஆனால் ஸம்ஸம் கிணற்றைக் குறித்து ஆய்வு செய்த எவரும் இவ்வாறு கூறவில்லை.

கஅபாவும் ஸம்ஸம் கிணறும் இருப்பது வாதி இப்ராஹிம் எனும் பள்ளத்தாக்கின் ஆக தாழ்வானப் பகுதியில் ஆகும். மலைகளால் சூழப்பட்ட தாழ்வான பகுதியையே வாதி என்று அரபியிலும் பள்ளத்தாக்கு என்று தமிழிலும் அழைக்கிறோம். இப்ராஹீம் நபியின் வாழ்க்கையுடன் மிக நெருங்கிய தொடர்பில் இருப்பதால் இப்பள்ளத்தாக்கு வாதி இப்ராஹிம் என்று பெயர் பெற்றது.

இந்த பள்ளத்தாக்கில் எவ்வளவு மழை பெய்கிறதோ அந்த மழை நீர் தான் ஸம்ஸம் கிணற்றின் நீர் ஆதாரமாகும். இதை இப்பகுதியை நிர்வகிக்கும் SGS நிறுவனம் சொல்வதைப் பாருங்கள்

The surface area of the outcrops and the alluvium of the Wadi Ibrahim covers only 45 km2. Limited re-filling or recharge of the Wadi alluvium aquifer occurs through the infiltration of storm water that fall directly on the Wadi surface. The urban development of Mecca has now extended over the Wadi bed, diminishing the already meager amount of storm water through infiltration into the underlying aquifer due to surface sealing and the channeling of storm water into the storm drainage systems.

In arid climates, such as in Saudi Arabia, where there is no permanent surface water, the natural recharge is limited to the occasional, brief storms and torrents. Water stocks can be severely affected during long dry periods or during times of increased groundwater withdrawal. To sustain the groundwater supply of the wells, the aquifers need to be continually recharged by the direct infiltration of storm water. Thus, modeling the aquifer recharge is crucial to ensure that supply and the demand for the Zamzam water is appropriately balanced. The ZSRC is, therefore, assessing and quantifying the effects of urbanization on the recharge and developing recommendations for the planning controls to guide the further development of the Wadi alluvium.

https://sgs.gov.sa/en/pages/tasks-of-center

மேலே ஆங்கிலத்தில் உள்ள செய்தியில் என்ன சொல்கிறார்கள் என்றால்.. 45 சதுர கிலோமீட்டர் விரிந்திருக்கும் வாதி இப்ராஹிமில் பெய்யும் மழை மட்டுமே ஸம்ஸம் கிணற்றின் இயற்கையான நீர் ஆதாரமாம். மக்கா நகரின் நகர்புற மேம்பாடுகள் காரணமாக நேரடியாக மழை நீர் நிலத்தடிக்கு செல்வது பெருமளவில் பாதிக்கப்பட்டதாம். இதனால் நிலத்தடி நீர் மழையில்லாத காலங்களில் வெகுவாக குறைந்தது என்கிறார்கள். இதனை சரி செய்ய மழை நீரை நேரடியாக நிலத்தடிக்குள் கொண்டு செல்லும் மழைநீர் சேமிப்புத் திட்டங்களை செயல்படுத்தியதாகவும் சொல்கிறார்கள்.

இதே தகவலை யஹ்யா அவர்கள் தனது புத்தகத்தில் 68ம் பக்கத்தில் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.

ஆக. ஸம்ஸம் நீரின் ஆதாரம் மழை நீர் என்பதே அதை நேரடியாக ஆய்வு செய்தவர்களின் முடிவாகும். அடுத்தடுத்த பாகங்களில் இதை விட அதிகமான ஆதாரங்களை தந்துள்ளோம்.

இதனை மக்களால் ஏற்றுக்கொள்ள இயலாமல் போனதற்குக் காரணம் அதிலிருந்து எடுக்கப்படும் நீரின் அளவாகும். இதனை அடுத்த பாகத்தில் விளக்கியுள்ளோம்.

C. ஒரு சிறிய கிணற்றில் இருந்து லட்சக்கணக்கான மக்களுக்கு நாள் தோறும் குடிநீர் வழங்க இயலுமா?

//தினமும் 30 லட்சம் மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் வேண்டிய அளவுக்கு வழங்கப்பட்டும் அங்கு நீர் வற்றிப் போகவில்லை என்பது மிகப்பெரிய அற்புதமாகும். .// - பீஜே ஆராய்சிக் குறிப்பு # 438

ஒரு வருடத்தில் 50 கோடி லிட்டர் நீர் ஸம்ஸமிலிருந்து எடுக்கப்படுகிறது. இது எப்பேர்பட்ட அளவு? இந்த அளவுக்கு நீர் எடுத்தால் எந்த கிணறாவது வற்றாமல் இருக்குமா? இத்தனைக்கும் மக்காவின் வருடாந்திர மழைப்பொழிவு 110மில்லிமீட்டர் மட்டுமே. சென்னையின் வருடாந்திர மழைப்பொழிவு 1400 மில்லிமீட்டர் இருந்தும் சென்னையில் கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது. எனில் குறைந்த அளவு மழை கொண்ட மக்காவில் இந்த அளவு தண்ணீர் எடுப்பது எப்படி சாத்தியம். எனவே இது அதிசயம்தான் என்பதே மக்களின் வாதம்.

50 கோடி லிட்டர் எனும் பெரிய எண்ணிக்கைதான் நமது சிந்தனையை தடுக்கிறது. மேலும் 110 மில்லிமீட்டர் மழை பொழிவும் 50 கோடி லிட்டர் நீர் எடுப்பதும் ஒப்பிடும்படியாக இல்லாததும் நமது மூளையை சிந்திக்க விடாமல் தடுக்கிறது. முதலில் 110 மில்லிமீட்டர் மழை பொழிந்தால் எத்தனை லிட்டர் தண்ணீர் கிடைக்கும் என்று தெரிந்துகொள்ள வேண்டும்.

1 மில்லிமீட்டர் மழை என்பதன் பொருள் என்னவென்றால்... ஒரு மீட்டர் அகலம், ஒரு மீட்டர் நீளம், ஒரு மீட்டர் உயரம் கொண்ட ஒரு தொட்டியில் ஒரு மில்லிமீட்டர் அளவுக்கு உயரம் வரும் அளவு மழை பொழிந்தால் அந்தத் தொட்டியில் சரியாக ஒரு லிட்டர் அளவு மழை நீர் சேர்ந்திருக்கும்.

இப்போது ஸம்ஸம் கிணற்றுக்கு நீர் கொடுக்கும் வாதி இப்ராஹிம் பள்ளத்தாக்கில் எத்தனை லிட்டர் மழை பொழிகிறது என்று கணக்கிட்டுப் பார்ப்போம்.

மக்காவின் வருடாந்திர மழைப்பொழிவு = 110mm.

இப்ராஹிம் பள்ளத்தாக்கின் நீர் பிடிமான மொத்த பரப்பளவு = 45 சதுர கிலோமீட்டர்.

ஒரு சதுர மீட்டர் பரப்பளவில் ஒரு மில்லி மீட்டர் மழை பொழிந்தால் ஒரு லிட்டர் தண்ணீர் விழுந்திருக்கும்.

ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஒரு மில்லி மீட்டர் மழை பொழிந்தால் ஒரு லிட்டர் தண்ணீர் விழுந்திருக்கும் 10,00,000 லிட்டர் தண்ணீர் விழும்.

45 சதுர கிலோமீட்டரில் 110mm மழை பொழிந்தால் 495,00,00,000 (495கோடி) லிட்டர் தண்ணீர் விழும்.

வருடத்தில் ஸம்ஸம் கிணற்றில் இருந்து எடுக்கப்படும் நீர் 50,00,00,000 (50 கோடி) லிட்டர்.

495 ÷ 50 = 9.9

அதாவது ஸம்ஸம் கிணற்றிலிருந்து எடுக்கப்படும் தண்ணீரை விட 10 மடங்கு அதிகமாக அதன் நீர் வரத்து அமைந்துள்ளது. ஆக 495 கோடி லிட்டர் மழை பொழியும் இடத்தில் 50 கோடி லிட்டர் தண்ணீர் எடுப்பது அதிசயம் அல்ல.

மக்காவை பொறுத்தவரை நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பெய்யும் மழை நீர் முழுவதும் நிலத்தடிக்கு செல்வதற்கு எந்த தடையும் இருக்கவில்லை. மேலும் மக்காவின் மண்ணின் தன்மையும் மழை நீரை உறிஞ்சும் வகையிலானது. ஆக பெய்யும் மழை நீரில் பெரும்பகுதி நேரடியாக நிலத்தடி நீராக மாறிவிடும். வருடத்தில் 50 கோடி லிட்டர் நீர் ஸம்ஸம் கிணற்றில் இருந்து எடுக்கப்படுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

மேலும் 110மில்லிமீட்டர் என்பது சராசரி அளவே. சில வருடங்களில 400 மில்லிமீட்டர் மழையும் பொழிந்துள்ளது சில வருடங்களில மழை பெய்யாமலும் இருந்துள்ளது.

நபி (ஸல்) காலத்தில் மக்களின் பயன்பாட்டிற்கு எத்தனை லிட்டர் தண்ணீர் தேவைப்பட்டிருக்கும் என்பதை ஒரு சராசரி கணக்கீட்டின் மூலம் பார்ப்பதன் மூலமும் இந்த 50 கோடி லிட்டர் பிரமாண்டத்தை புரிந்துகொள்ள முடியும்.

ஒருமனிதன் ஒரு நாளைக்கு சரசாரியாக 1 ½ லிட்டர் தண்ணீரைக் குடிப்பான் என்று வைத்துகொள்வோம். அவனது பிற தேவைகளான, குளித்தல், சமைத்தல், துவைத்தலுக்கு நிறைய நீர் வேண்டும். இருப்பினும் வெறும் 8 ½ லிட்டர் ஆகும் என்று வைத்துகொள்வோம்.

ஒரு நாளைக்கு ஓர் ஆளுக்கு 10 லிட்டர் வீதம் ஒரு வருடத்திற்கு ஒரு லட்சம் பேருக்கு

10 x 365 x 1,00,000 = 36,50,00,000

முப்பத்தி ஆறரை கோடி லிட்டர் நீர் வேண்டும்.

ஹிஜ்ரி 10 ஆம் ஆண்டு மதீனாவில் இருந்து ஹஜ்ஜுக்கு சென்றவர்களின் எண்ணிக்கை மட்டுமே ஒரு லட்சம். ஊரில் இருந்தவர்களின் எண்ணிக்கையும் சேர்த்தால் மேலே சொன்ன 36 ½ கோடியை விட பல மடங்கு அதிகமாகும்.

அடுத்ததாக பேரீட்சை பயிருடுவதற்கு ஆகும் நீர்த் தேவையைப் பார்ப்போம்.

55,000 m3/ha/yr

ஒரு ஹெக்டேர் நிலத்தில் பேரீட்சை சாகுபடி செய்ய ஒரு வருடத்திற்கு 55,000 கன மீட்டர் தண்ணீர் தேவை.

ஒரு கன மீட்டர் = 1000 லிட்டர்

ஒரு ஹெக்டேர் = 2.47 ஏக்கர்

ஆக 50 ஏக்கர் நிலப்பரப்பில் பேரீட்சை சாகுபடி செய்ய ஒரு வருடத்திற்கு

55,000 x 1000 ÷ 2.74 x 50 = 111,33,60,323 லிட்டர்

நூற்று பதினோரு கோடியே முப்பத்தி மூன்று லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை.

50 எக்கர் என்பது அற்பமான நிலப்பரப்பு. மேலும் அவர்கள் கோதுமை, வெங்காயம், பூண்டு என பல தானியங்களையும் காய்கறிகளையும் விவசாயம் செய்தனர். பல நூற்றுக்கணக்கான கோடிகளில் தண்ணீர் தேவைப்பட்டிருக்கும். அனைத்தையும் கிணறுகளில் இருந்தே எடுத்தனர்.

“பல கிணறுகளில் இருந்து எடுத்திருப்பார்கள், ஸம்ஸம் போன்று ஒரே கிணறு அல்ல” என்று வாதம் வைத்தாலும் அது பொருத்தமற்றது. ஒரே ஊரில் எத்தனை கிணறுகளை வெட்டினாலும் அவை நிலத்தடியில் இருக்கும் பொதுவான நீர் ஆதாரத்தில் இருந்தே தண்ணீரைக் கொடுக்கும்.

50 கோடி என்கிற எண்ணிக்கைதான் நமது சிந்தனைக்கு தடை போடுகிறதே தவிர எவ்வளவு மழை பொழிகிறது எவ்வளவு தண்ணீர் எடுக்கப்படுகிறது என்பதை ஒப்பிட்டால் இது சாதாரண விஷயம் என்பது தெளிவாகும்.

இப்போது சென்னையில் ஏற்படும் தண்ணீர் பஞ்சம் கேள்வி உங்களை உறுத்தலாம். ஸம்ஸம் புனித நீராக, குடிப்பதற்கே தவிர வேறு எதற்கும் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் சென்னையில் பொழியும் மழை நீர் குளிப்பதற்கும், துவைப்பதற்கும், சுத்தம் செய்வதற்கும், டாய்லட் flush செயவதற்கும், விவசாயத்திற்கும்,தொழிற்சாலைகளுக்கும் இன்னும் பல தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது என்பதை கவனத்தில் கொண்டால் பொருத்தமற்ற ஒப்பீட்டினால் ஏற்படும் குழப்பத்தில்இருந்து தெளிவடையலாம்.

வாதி இப்ராஹிமில் வருடத்திற்கு சராசரியாக 495 கோடி லிட்டர் மழை பொழிந்தாலும் இப்போது கட்டுமானங்களினால் நிலத்தடியில் செல்லும் மழைநீருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்குதான் வாதி இப்ராஹிமில் பொழியும் மழையை சேமிக்க பெரிய பெரிய திட்டங்களை சவூதி அரசு மேற்கொண்டுள்ளது.

5- Storm drain management related to the recharge of the aquifer

Storm drains are designed specifically to prevent flooding by capturing storm water falling on rooftops, roads, and surrounding areas, and by rechanneling the water to flow into the wadis or into safe areas. The ZSRC has undertaken intensive modeling of the natural drainage patterns within the Wadi Ibrahim basin in order to define ways and means of harnessing storm water and produce maps showing the scarcity of groundwater inside the basin. It has also proposed several ways to design storm water channels for use as a groundwater supply.

https://sgs.gov.sa/en/pages/tasks-of-center

மழை நீருக்கு சரியான வடிகால்களை அமைத்து அவற்றை நிலத்தடி நீராக சேமிக்கிறார்கள். ஆனால் வெறும் வாதி இப்ராஹிம் பள்ளத்தாக்கில் விழும் மழை நீரை மட்டுமே நம்பிக் கொண்டு இருக்க இயலாது. சில வருடங்களில மழையே இல்லாமல் இருக்கும். மேலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும ஹஜ் உம்ரா பயணிகளையும் கணக்கில் கொண்டு ஒரு திட்டத்தை செயல்படுத்தியுள்ளனர்.

//The project assessment has concluded the importance of dealing with these floods and intercepting the water through a channel that transfers this water to three dams and then draining the water through a network of tunnels to the Wadi Ibrahim basin in the Al-Maisam area.

This is why a fourth dam has been constructed in a selected area to drain the water retained in the upper part of the aquifer of the Wadi Ibrahim Basin.

These attempts to partially compensate for the loss of natural supply of water as a result of the urban development over the past years, which did not consider the importance of conserving the natural supply of the water in the Wadi Ibrahim basin. The project has two objectives.//

https://sgs.gov.sa/en/pages/projects 

மேலுள்ள தகவலைப் பாருங்கள். வாதி இப்ராஹிமில் அணைகளைக்கட்டி நிலத்தடி நீரை ரீசார்ஜ் செய்கிறார்கள். எதிர்காலத்தில் அது மட்டுமே போதாது என்பதால் சுற்றியுள்ள பகுதிகளில் அணைகளை கட்டி அங்கே வரும் நீரையும் வாதி இப்ராஹிமுக்கு திருப்பி விடுகிறது சவூதி அரசு.

ஆக வாதி இப்ராஹிமில் சராசரியாக 495 கோடி லிட்டர் வருடாந்திர மழைப்பொழிவு இருந்தாலும் சுற்றிலும் பெய்யும் நீரையும் சேர்த்து வாதி இப்ராஹிமுக்கு வரும் நீரின் அளவு பல மடங்கு அதிகமாகும். இந்த நீர் வரத்தை ஒப்பிடும்போது 50 கோடி லிட்டர் என்பது ஒன்றுமே இல்லை.

மேலும் வாதி இப்ராஹிமில் குளங்கள் கண்மாய்கள் இல்லை என்கிற வாதமும் இதனால் அடிபடுகிறது. முன்னர் இல்லாமல் இருந்தாலும் இப்போது வாதி இப்ராஹிமுக்கு தண்ணீர் வரவை உறுதி செய்ய அங்கே அணைக்கட்டுகள் உள்ளன.

https://web.archive.org/web/20230605082316/https://sgs.gov.sa/en/pages/projects

இந்த லிங்கை முழுமையாக வாசித்தால் ஸம்ஸம் நீருக்கு ஏற்பட்ட ஆபத்துகளை கட்டுப்படுத்த சவூதி மேற்கொண்ட எல்லா நடவடிக்கைகளையும் காணலாம்.

D. ஸம்ஸம் கிணறு வற்றாது அதிலிருந்து எடுக்க எடுக்க நீர் வந்துகொண்டே இருக்கும்.

யஹ்யா கோஷிக் அவர்களிடம் ஸம்ஸம் நீருக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை சரி செய்யும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அப்போது அவர் கிணற்றின் உண்மையான ஆழத்தையும் அகலத்தையும் அளவிட வேண்டும் என்று முடிவெடுத்தார். அதற்காக நீரில் மூழ்கி முத்துக்குளிக்கும் வீரர்கள் (divers) இருவரை வரவழைத்தார்.

எகிப்து நாட்டைச் சேர்ந்த முஹம்மது யூனுஸ் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த முஹம்மது லத்தீப்

60 முழம் (சுமார் 28 மீட்டர்) ஆழம் கொண்ட கிணறு என்றுதான் வரலாற்றில் அது பதிவாகி இருந்தது. ஆனால் divers இறங்கியபோது அது 13 மீட்டர் தான் இருந்தது. கிணற்றின் மீதிப் பகுதிக்கு என்ன ஆயிற்று என்று ஆய்வ்வு செய்தபோது, மீதி கிணறு குப்பைகளால் நிறைந்திருந்ததை அறிந்தார். அதில் அதிமாக வாளிகள், கயிறுகள், காசுகள், பெயர் எழுதப்பட்ட பலகைகள், மிருகங்களின் கொம்புகள் இன்னும் என்னென்னமோ குப்பைகள் இருந்தன. அனைத்தையும் வெளியே எடுத்து தரை தட்டுவதை உறுதி செய்தார் யஹ்யா. பின்னர் அளந்தபோது கிணற்றின் ஆழம் 30.5 மீட்டர் (100 அடி) இருந்தது.

நீரை இறைத்து ஸம்ஸமுக்கான நீர் ஆதாரத்தை பார்ப்பதுதான் அவர்களின் பெரிய ஆசையே. நீரை இறைத்தபோது 13 மீட்டரில் இருந்து 13.5 மீட்டருக்கு இடையேதான் நீர் வரத்துக்கான ஊற்றுக் கண்கள் இருந்தன. இந்த அரை மீட்டரில் இருந்த 3 பெரிய ஊற்றுக்களும் இன்ன பிற சிறு ஊற்றுக்களுமே ஸம்ஸம் கிணற்றுக்கு நீர் ஆதாரம். அதற்கு கீழேயும் ஊற்றுக்கள் இல்லை அதற்கு மேலேயும் இல்லை. ஆக மீதி இருக்கும் 17 மீட்டர் வெறும் சேமிப்பு தொட்டி மட்டுமே.

ஊற்றுக்கண்ணைப் பார்த்த மகிழ்ச்சியில் சிரிக்கும் முஹம்மத் யூனுஸ்

ஸம்ஸம் கிணற்றின் ஊற்றுக் கண்ணிலிருந்து நீர் வழியும் காட்சி.

ஸம்ஸம் கிணற்றிலிருந்த குப்பைகளை அகற்றிய பின்னர் அதை அளந்து அதன் ஊற்றுக் கண்களையும் கண்டறிந்து வரைபடம் வரைந்தார் யஹ்யா

இடது புறம் இருப்பது ஸம்ஸம் கிணற்றின் குறுக்கு வெட்டுத் தோற்றம். இதில் ஊற்று தெளிவாக தெரியும் படி வரைந்துள்ளார்.

வலப்புறம் இருப்பது துல்லியமான அளவுகளைக் கொண்ட குறுவெட்டு வரைபடம். எந்த ஆழத்தில் எந்த விட்டதில் இருக்கிறது என்பதை காட்டியுள்ளார்.

13 மீட்டரில் இருந்து 13.8 மீட்டர் வரையில் தான் ஊற்றுக்கண்கள் உள்ளன. அதன் பிறகு 17 மீட்டருக்கு ஊற்றுக்கண்களே இல்லை. நீங்கள் கிராமத்தில் இருந்து கையால் கிணறு வெட்டுவதைப் பற்றி அறிந்திருந்தால் மேலுள்ள தகவலை வாசித்த மாத்திரத்திலேயே உங்களுக்கு ஒரு விஷயம் மனதில் உதித்திருக்கும்.

ஆம். ஊற்றுக் கண்கள் தெரிந்து கிணற்றின் நீர் வரத்து உறுதி செய்யப்பட்டால் அதன் பிறகு ஒரு சில அடிகளே அன்றி கிணற்றின் ஆழத்தை அதிகப்படுத்தமாட்டார்கள். இதற்கான காரணங்கள். அதன் பிறகு கிணற்றை ஆழப்படுத்துவது மிகவும் சிரமம் ஏனென்றால் நீர் ஊறிக்கொண்டே இருக்கும். நீரை இறைத்து இறைத்து வெட்டினாலும் மிகவும் சிரமமான காரியம்.

ஊற்றுக் கண் தெரிய கிணறு வெட்டிய பிறகு அந்த கிணற்றின் ஆழத்தை அதிக்கப்படுத்துவது ஒரே ஒரு காரணத்திற்காக மட்டுமே. வறட்சி ஏற்பட்டு அந்த கிணறு வறண்டுவிட்டால் கீழே வேறு ஊற்றுக் கண்களை தேடி கிணற்றை வெட்டுவார்கள்.

ஸம்ஸம் கிணற்றை பொறுத்தவரை ஊற்றுக் கண்கள் இருக்கும் பகுதிவரை மட்டுமே வெட்டுவதற்கு சுலபமான மணற்பாங்கான பகுதி. அதற்கு கீழே இருக்கும் 17 மீட்டர் ஆழமும் கடினமான பாறைகளால் நிறைந்தது. கிணற்றில் நீர் இருக்கும் நிலையில் அந்த பாறையை உடைத்து 17 மீட்டர் தோண்டுவதற்கு வாய்ப்பே இல்லை. எவ்வளவுதான் நீரை இறைத்தாலும் பாறைகளை மெதுவாக உடைத்து வெளியே எடுக்கும் முன்னர் நீர் நிரம்பி மனிதன் இறந்துவிடுவான்.

ஆக ஸம்ஸம் கிணறு வறண்டிருந்த காலத்தில் மட்டுமே புதிய ஊற்றைத் தேடி 17 மீட்டர் பாறையை வெட்டியுள்ளனர்.

இதை உறுதி செய்வதற்கு மற்றுமோர் சான்று; மேலுள்ள படத்தை நன்றாக பாருங்கள். 13 மீட்டர் வரையில் செங்குத்தாக தோண்டப்பட்ட கிணறு அதன் பிறகு பெரிய ஊற்றுக் கண் இருந்த திசை நோக்கி சாய்வாக வெட்டப்பட்டுள்ளது. இதற்கு ஒரே காரணம் செங்குத்தாக வெட்டி ஊற்றைத் தேடுவதை விட பெரிய ஊற்று இருக்கும் பகுதிக்கு கீழே ஊற்றுக் கண்ணை தேடுவது அறிவுப்பூர்வமாக கருதியதுதான்.

ஆக ஸம்ஸம் கிணறு ஒரு காலத்தில் வரண்டது உறுதியாகிறது. வேறு எந்த ஆதாரங்களும் இல்லை என்றால் கூட மேலே நாம் செய்த பபுலனாய்வே ஸம்ஸம் ஒரு காலத்தில் வறண்டிருந்தது என்பதற்கு போதுமான சான்று. எனினும் இது வரலாற்றிலும் பதிவு செய்யப்பட்ட நிகழ்வாகும்.

ஹிஜ்ரி 223 & 224 ஆகிய வருடங்களில் மழை இல்லாமல் கடும் வறட்சி ஏற்பட்டு ஸம்ஸம் நீர் மட்டம் குறைந்து அதன் அடிப்பாகம் வரை தெரிந்தது அப்போதுதான் இந்த அளவு ஆழத்திற்கு தோண்டியுள்ளார்கள். இது அல் அஸ்றகி (الأزرقي ) அவர்களின் அக்பார் மக்கா (أخبار مكه) எனும் வரலாற்று நூலில் சான்றுகளுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.

E. ஸம்ஸம் கிணறு தூர் வாரப்பட்டதில்லை?

//எந்த ஊற்றாக இருந்தாலும் சில வருடங்களிலோ, பல வருடங்களிலோ தூர்ந்து போய் விடும். ஆனால் இந்த ஊற்று பல ஆயிரம் ஆண்டுகளாக வற்றாமல் இருப்பது இரண்டாவது அற்புதமாகும்.// - பீஜே ஆராய்சிக் குறிப்பு # 438

அடுத்ததாக பீஜே வைக்கும் வாதம் என்னவென்றால் ஸம்ஸம் கிணறு வரலாற்றில் தூர் வாரப்பட்டதே இல்லை என்பதாகும். தூர வாரப்படாமலேயே பல ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நீர் கொடுக்கிறது ஸம்ஸம் என்கிறார்.

இஸ்மாயில் நபியின் காலத்திற்குப் பிறகு ஜுர்ஹும் என்றும் குலத்தாரல் ஸம்ஸம் கிணறு மூடப்பட்டுவிட்டது. இது தபரி மற்றும் அஸ்றகி ஆகியோரின் வரலாற்று நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு நபி (ஸல்) அவர்கள் பிறந்த ஆண்டில்தான் அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் அந்தக் கிணற்றை கண்டுபிடித்து மீண்டும் தொண்டி எடுக்கிறார்.

ஆக இன்றைய ஸம்ஸம் கிணற்றின் வரலாறே தூர்வாருதலில் இருந்துதான் துவங்குகிறது.

ஸம்ஸம் கிணற்றை தூர்வாரி சுத்தம் செய்யும் பொறுப்பைத்தான் யஹ்யா ஏற்றுக்கொண்டார். அதில் கிடந்த பழைய பொருட்கள் அனைத்தையும் வெளியே எடுத்தனர் யஹ்யாவின் பணியாளர்கள். பின்னர் அதன் சுவற்றை க்ளோரின் இட்டு பிரஷ்ஷால் தேய்த்து சுத்தப் படுத்தியுள்ளனர். பின்னர் நீர் நிறைந்த பிறகு பாக்டீரியாக்களை அழிப்பதற்காக அதில் க்ளோரினை இட்டு 24 மணி நேரம் விட்டு வைத்தனர். இதன் மூலம் கிணற்றில் இருந்த பாக்டீரியாக்கள் அழிந்தன. இதை 205ம் பக்கத்தில் விலாவாரியாக விளக்கி எழுதியுள்ளார் யஹ்யா.

ஸம்ஸம் கிணற்றின் நீர்வரத்து குறைந்தாலும் அது மாசுபடுத்தப்பட்டதாலும் தான் இந்த தூர்வாரும் வடவடிக்கையும் சுத்தம் செய்யும் நடவடிக்கையும் என்பதை நாம் இங்கே எடுத்துச் சொல்லவேண்டியதில்லை.

F. ஸம்ஸம் எடுக்க எடுக்க கொடுத்துக்கொண்டே இருக்கும்.

இது உண்மையாக இருந்திருந்திருந்தால் ஸம்ஸம் கிணறு மட்டுமே குறைந்தபட்சம் மக்காவின் நீர்த்தேவையை பூர்த்தி செய்திருக்க போதுமானதாக இருந்திருக்கும். ஆனால் சவுதியின் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டு கடல் நீரை சுத்திகரிக்கும் முறை தொடங்கப்படும் வரை மக்காவின் மிகப்பெரிய பிரச்சனை குடிநீராகவே இருந்தது.

அதுவும் குறிப்பாக ஹஜ் காலத்திலும் குடிநீருக்காக ஹாஜிகள் மிகவும் அவதியுற்றனர். குடிநீரை பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலைதான் இருந்தது.

தற்போது வருடத்திற்கு 50 கோடி லிட்டர் நீரை மட்டுமே எடுக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்துள்ளது ஸம்ஸம் நிர்வாகம். எடுக்க எடுக்க ஸம்ஸம் நீரைக் கொடுக்குமென்றால் இந்த கட்டுப்பாடு தேவை இல்லை.

மேலும் மக்காவை சுற்றிலும் குடிநீர் என்பது ஒன்றில் கடல் நீரை சுத்திகரித்து சவூதி வழங்கும் நீராக இருக்கும். அல்லது தனியார் நிறுவனங்கள் விற்கும் நீராக இருக்கும். ஸம்ஸம் நீர் புனித நீராக குடிப்பதற்கு மட்டுமே பயன்படுகிறது. எடுக்க எடுக்க குறையாது என்றால் குறைந்தது மக்கா நகரத்தின் மொத்த நீர் தேவையையும் ஸம்ஸம் நீரைக் கொண்டே பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

எடுக்க எடுக்க ஸம்ஸம் நீரைக் கொடுக்கும் என்பது பீஜே உள்ளிட்டோர் உருவாக்கிய போலி அதிசயம் ஆகும்.

G. இதுபோன்று வேறு கிணறுகள் உள்ளனவா?

என்பது பீஜே அவர்களின் கேள்வியாகும்.

ஸம்ஸம் கிணறு அல்லாமல் வேறு பல கிணறுகளும் மக்காவில் இருக்கத்தான் செய்கின்றன. மக்காவில் முதலில் தோன்றிய நீரூற்றுதான் ஸம்ஸம் கிணறே தவிர அதுமட்டும்தான் மக்காவில் இருந்த கிணறு அல்ல. ஸம்ஸம் கிணறு மட்டும்தான் மக்காவிற்கே நீர் கொடுத்தது என்பது தவறான நம்பிக்கை.

ஸம்ஸம் கிணறு பல காலம் மறக்கப்பட்டு அப்துல் முத்தலிப் அவர்களால் மீண்டும் தோண்டப்பட்டது என்பது நமக்குத் தெரியும். ஸம்ஸம் கிணறு மட்டும்தான் மக்காவின் நீராதாரமாக இருந்திருந்தால் அந்த கிணற்றில் நீர் எடுக்க முடியாத இடைப்பட்ட அந்த காலகட்டத்தில் அங்கு வாழ்ந்த மக்கள் நீரின்றி எப்படி உயிர் வாழ்ந்திருக்க முடியும்!?

ஸம்ஸம் கிணற்றிலிருந்து வெறும் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள Thi Tuwa Valley (وادي ذي طوى) எனுமிடத்தில் இருக்கும் கிணறுதான் பிர் துவ்வா (بئر طوى).

இந்த கிணறு அப்துஸ் சம்ஸ் (Abd Shams ibn ʿAbd Manāf) என்பவரால் தோண்டப்பட்ட கிணறு. இவர் அப்துல் முத்தலிப் அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர். ஸம்ஸம் கிணற்றின் உரிமை அப்துல் முத்தலிப் அவர்களிடம் இருந்ததுபோல் பிர் துவ்வா கிணற்றின் உரிமை அப்துஸ் சம்ஸ் வசம் இருந்தது. ஸம்ஸம் கிணறு புணரமைக்கப்பட்டு நீர் எடுக்கப்பட்டதும், பிர் துவ்வா எனும் இந்த கிணறு தோண்டப்பட்டு நீர் எடுக்கப்பட்டதும் சமகாலத்தில் நடந்தவை.

மக்கா வெற்றியின்போது மஸ்ஜிதுல் ஹராமிற்குள் நுழைவதற்கு முன்பாக இந்த கிணற்றில் குளித்துவிட்டுதான் நபி(ஸல்) அவர்கள் மக்காவிற்குள் நுழைந்தார்கள் என்பது அறியப்பட்ட வரலாறு.

وَعَنْ اِبْنِ عُمَرَ رَضِيَ اَللَّهُ عَنْهُمَا: { أَنَّهُ كَانَ لَا يَقْدُمُ مَكَّةَ إِلَّا بَاتَ بِذِي طُوَى حَتَّى يُصْبِحَ وَيَغْتَسِلَوَيَذْكُرُ ذَلِكَ عِنْدَ اَلنَّبِيِّ صلى الله عليه وسلم -} مُتَّفَقٌ عَلَيْهِ

நபி(ஸல்) அவர்களின் அடிச்சுவட்டை பின்பற்றி அவர்கள் செய்ததுபோலவே செய்துவந்த இப்னு உமர்(ரலி) அவர்கள் மதினாவிலிருந்து மக்காவிற்கு வரும்போதெல்லாம் இந்த இடத்தில் தங்கி அதே கிணற்றில் குளித்துவிட்டு பிறகு ஊருக்குள் நுழைவதை வழக்கமாக வைத்திருந்தார்.

பாலைவன பகுதியான மக்காவில் இருக்கும் ஸம்ஸம் கிணற்றிற்கு அதிசயமான முறையில்தான் நீர் வரமுடியும் என்று நம்பினால் இந்த பிர் துவ்வா கிணற்றிற்கும் அதிசயமான முறையில்தான் நீர் வருகிறதாக நம்ப வேண்டும். ஆனால், அப்படி நம்புவதில்லை.

பிர் தாவூத் எனும் கிணறு உட்பட மக்காவில் இருந்த பல்வேறு கிணறுகளைப் பற்றி தனது புத்தகத்தில் விவரிக்கிறார் யஹ்யா. ஆக இதுபோல வேறு கிணறு உண்டா என்று கேட்பது அறியாமையாகும்.

இன்று ஸம்ஸம் கிணற்றை சுற்றிலும் குறிப்பாக வாதி இப்ராஹிமில் யாராலும் கிணறு வெட்ட இயலாது. ஸம்ஸம் நீரை அது பாதிக்கும் என்பதால் அதற்கு சவூதி அரசு அனுமதிக்காது என்பதே காரணம். ஆனால் வாதி இப்ராஹிமில் 45 கிணறுகளை சவூதி அரசே வெட்டியுள்ளது.

//A network of more than 45 monitoring wells has also been installed along the Wadi Ibrahim to monitor the response of the entire aquifer system to the filling and re-filling of water. Some of these wells are fitted with automatic digital water level recorders.//

https://sgs.gov.sa/en/pages/tasks-of-center

வாதி இப்ராஹிமின் நீர் பிடிமானத்தையும் அது மழையினால் நீரைப் பெறுகிறதா என்பதையும் கண்காணிக்க 45 கிணறுகளை வெட்டியுள்ளது சவூதி அரசு. இவை கிணறுகள் இல்லையா? அவற்றில் நீர் இருந்தால்தானே அங்கே கருவிகளை பொருத்தி கண்காணிக்க இயலும்.

H. ஹாஜர் அலை தடுக்காவிட்டால் அது பூமி முழுவதும் ஓடும் ஆறாக ஆகி இருக்கும்

"இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “அல்லாஹ் இஸ்மாயீலின் தாயார்(ஹாஜ)ருக்குக் கருணைபுரியட்டும். அவர்கள் மட்டும் (இறையருளால் பொங்கி வந்த `ஸம் ஸம்` நீரை அள்ளி எடுத்துத் தம் தோல் பையில் வைக்க) அவசரப்பட்டிருக்காவிட்டால் `ஸம்ஸம்` (கிணறு, பூமியின் மேற்பரப்பில்) ஓடிக் கொண்டிருக்கும் ஓர் ஊற்றாக ஆகிவிட்டிருக்கும்.

என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். (புகாரி 3362)

இந்த ஹதீஸை வைத்து, ஹாஜர் அம்மையார் தடுத்துவிட்டதால் அல்லாஹ்வின் அற்புதத்தால் வெளிவந்திருக்கவேண்டிய அவ்வளவு தண்ணீரும் கிணற்றுக்குள்ளேயே தங்கிவிட்டதாகவும் அது கியாமத் நாள்வரைக்கும் வந்துகொண்டேயிருக்கும் என்றும் வாதம் வைக்கின்றனர்.

ஆனால், இத்தகைய நம்பிக்கைகள் எதையும் அந்த ஹதீஸ் கூறவில்லை.

அல்லாஹ்வின் அருளால் ஸம்ஸம் நீரூற்று உருவானபோது அது வழிந்து ஓடிவிடாமல் மண்மேடு அமைத்து ஹாஜர் அம்மையார் அவசரமாக தடுத்தார்கள் என்றும் தோல்பையில் தண்ணீரை அவசரமாக அள்ளினார்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஏதோ ஒரு பதட்டத்தினால் ஹாஜர்(அலை) அவர்கள் அவசரப்பட்டிருக்கிறார்கள் என்பதை புரிய முடிகிறது. ஹாஜர் அம்மையார் அவசரப்பட்டிருக்காவிட்டால், அற்புதத்தால் உருவாகியிருந்த ஸம்ஸம் நீருற்றானது ஒரு ஓடும் ஊற்றாக (ஓடை அல்லது ஆறு) ஆகியிருந்திருக்கும், ஹாஜர் அம்மையார் அவசப்பட்டுவிட்டதால் அது கிணற்றில் மட்டுமே எடுக்கப்படும் நீராக ஆகிவிட்டது என்பதுதான் இந்த ஹதீஸின் சாரம்சம்.

அவர் அவசரப்படாமல் இருந்தால் நீர் வந்துகொண்டே இருந்திருக்கும். அவர் அவசப்பட்டுவிட்டார் அதனால் அதோடு முடிந்துவிட்டது.

இதேபோன்று நபி(ஸல்) அவர்களோடு சம்பந்தப்பட்ட ஒரு செய்தியை பார்ப்பதன் மூலம் இதை தெளிவாகப் புரிய முடியும்...

قَالَ‏: طَبَخْتُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم، قِدْرًا، وَقَدْ كَانَ يُعْجِبُهُ الذِّرَاعُ، فَنَاوَلْتُهُ الذِّرَاعَ، ثُمَّ قَالَ‏: نَاوِلْنِي الذِّرَاعَ، فَنَاوَلْتُهُ، ثُمَّ قَالَ‏: نَاوِلْنِي الذِّرَاعَ، فَقُلْتُ‏: يَا رَسُولَ اللهِ، وَكَمْ لِلشَّاةِ مِنْ ذِرَاعٍ، فَقَالَ‏: وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ سَكَتَّ لَنَاوَلْتَنِي الذِّرَاعَ مَا دَعَوْتُ‏.

"நான் அல்லாஹ்வின் தூதருக்காக ஒரு பாத்திரத்தில் உணவு தயாரித்தேன். அவர்களுக்கு (ஆட்டின்) முன்னங்கால் பிடிக்கும் என்பதால் அதை அவர்களுக்கு வைத்தேன். (அதனை உண்ட) பின்னர் "முன்னங்காலை தாருங்கள்" என்று கேட்டார்கள். நானும் கொடுத்தேன். மீண்டும் "முன்னங்காலை தாருங்கள்" என்று கேட்டார்கள். "யா ரசூலல்லாஹ்! ஓர் ஆடுக்கு எத்தனை முன்னங்கால்கள்தான் இருக்கும்?" என்று நான் கேட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் "யார் கைவசம் மீது எனது உயிர் உள்ளதோ அவன் மீது ஆணையாக நீ அமைதியாக இருந்திருந்தால் நான் கேட்கக் கேட்க உன்னால் கொடுத்திருக்க முடியும்" என்றார்கள்."

தண்ணீர், பால், உணவு என பலவற்றிலும் குறைந்த அளவின் மூலம் பெரும் எண்ணிக்கையிலானவர்களின் தேவை பூர்த்தி செய்யப்பட்ட அற்புதம் இறைவனின் அருளால் நபிகளார் காலத்தில் பல நடந்திருக்கும் நிலையில் ஆட்டின் முன்சப்பையிலும் அற்புதம் நிகழ்ந்திருக்கும். ஆனால், ஏதோ ஒரு அவசரத்தில் ஆட்டுக்கு இரண்டு முன்னங்கால்தானே இருக்கும் என்ற அவர் கூறிவிடுகிறார். இதனால் அற்புதம் நிகழாமல் போய்விட்டது. நிகழ வேண்டிய அற்புதம் நிகழாவிட்டதால் அந்த சட்டியில் பல இலட்சக்கணக்கான முன்னங்கால்கள் அப்படியே இருந்துவிட்டன என்று சொன்னால் எப்படி இருக்கும்!? அந்த சட்டிக்குள் முன்னங்கால்கள் இன்னும் இருக்கின்றன என்று சொன்னால் அது எப்படி இருக்கும்!?

இதுபோலத்தான் ஸம்ஸம் நீரூற்று அற்புதமாக தோன்றிய நிலையில் அதிலிருந்து நடக்க வேண்டிய இன்னொரு அற்புதமான ஆறாக ஓடுவது நடக்கவில்லை. காரணம், ஹாஜர் அம்மையாரின் அவசரம்.

பூமியின் நிலத்தடியில் இருந்த நீரை அற்புதமான முறையில் அல்லாஹ் வெளிப்படுத்தினான். ஸம்ஸம் நீரூற்றில் வெளிப்படுத்தப்பட்டது நிலத்தடி நீர்தான் என்று சொல்வதில் இழுக்கு ஏதுமில்லை.

I. ஸம்ஸம் பறக்கத் நிறைந்தது, ஸம்ஸம் பசிக்கு உணவு நோய் நிவாரணி

//எந்த ஒரு நீர்நிலையாக இருந்தாலும் பாசி படிந்து போவதும், கிருமிகள் உற்பத்தியாவதும் இயற்கை. இதனால் தான் குளோரின் போன்ற மருந்துகள் நீர்நிலைகளில் கலக்கப்படுகின்றன. ஆனால் ஜம்ஜம் தண்ணீரில் அது உற்பத்தியான காலம் முதல் இன்று வரை எந்த மருந்துகள் மூலமும் அது பாதுகாக்கப்படாமல் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வது மூன்றாவது அற்புதமாகும்.// - பீஜே ஆராய்சிக் குறிப்பு # 438

ஸம்ஸம் நீர் அற்புதமான முறையில் உருவானது. அது உருவான விதம் மட்டுமே அற்புதம். அதன் பிறகு அதன் நீர் வரத்து நிலத்தடி நீரை மட்டுமே ஆதாரமாகக் கொண்டது. இவ்வாறு வாதிடும்போது “ஸம்ஸம் பறக்கத் நிறைந்தது” எனும் ஹதீஸைக் காட்டி அதனால் அது அதிசயம் என்று வாதிடுகின்றனர்.

நாம் தினமும் உண்ணும் உணவிலும் பறக்கத் இருக்கிறது. அது உணவின் எந்த பகுதியில் இருக்கிறது என்பது நமக்கு தெரியாது ஆகவே சிறிதும் வீணாக்காமல் உண்ணச் சொல்கிறது மார்க்கம். உணவில் பறக்கத் இருப்பதால் அதனை அதிசயம் என்று வாதிடுவோமா? பறக்கத் என்றால் அதிசயம் அல்லது அற்புதம் என்று பொருளா?

ஸம்ஸம் நோய் நிவாரணி என்பதால் அது அற்புதம் எனும் வாதமும் நிவாரணியாக இருப்பதால் அது கெட்டுப் போகாது எனும் வாதமும் வைக்கப்படுகிறது.

ஸம்ஸம் அல்லாத பல பொருட்களை மார்க்கம் நோய் நிவாரணி என்கிறது. எடுத்துக் காட்டுக்கு பார்லியை பற்றி சிறப்பாக நோய் நிவாரணி என்று மார்க்கம் சொல்கிறது. இதனால் பார்லி அற்புதம் என்றும் கெட்டுப் போகாது என்றும் எடுத்துக்கொள்வதா?

நோய் நிவாரணிகளும் கிருமிகளால் தாக்கப்பட்டு கெட்டுப் போகிறதல்லவா?

J. ஸம்ஸம் நீரின் வேதியியல் பண்புகள்

//பொதுவாக மற்ற நீரில் இருந்து ஜம்ஜம் தண்ணீர் வேறுபட்டுள்ளதும் சோதனையில் தெரிய வந்துள்ளது. கால்ஷியம் மற்றும் மேக்னீஷியம் எனும் உப்பு மற்ற வகை தண்ணீரை விட ஜம்ஜம் தண்ணீரில் அதிகமாக உள்ளது. இந்த உப்புக்கள் புத்துணர்ச்சியைக் கொடுப்பவை. இதை ஜம்ஜம் நீரை அருந்தியவர்கள் அனுபவத்தில் உணரலாம்.// - பீஜே ஆராய்சிக் குறிப்பு # 438

ஆராய்சிக் குறிப்பில் சில தனிமங்களை மட்டுமே பட்டியலிட்டுள்ளார் பீஜே அவர்கள். ஆனால் வீடியோவில் பேசும்போது பிஸ்மத் உட்பட பல தனிமங்களின் பெயர்களை பட்டியலிட்டு அதற்கு புனிதத்தை சேர்க்கிறார்.

பீஜே அவர்கள் பட்டியலிடும் அனைத்து தனிமங்களும் பூமியில் இருக்கும் தனிமங்களே. ஒவ்வொரு கிணற்று நீரின் வேதியியல் பண்புகளும் அந்த கிணறு இருக்கும் இடத்தின் அமைப்பைப் பொறுத்து வேறுபடும். சுண்ணாம்பு கற்கள் நிறைந்த இடமாக இருந்தால் அந்த கிணற்றில் கேல்சியம் அதிகமாக இருக்கும். செம்மண் நிலமாக இருந்தால் இரும்பு அதிகமாக இருக்கும்.

ஸம்ஸம் நீரில் இருக்கும் உப்புக்கள் வேறு நீரிலும் இருக்கும். உப்புக்களை பட்டியலிட்டு அற்புதம் என்று சொல்ல இயலாது.

பூமிலேயே இல்லாத ஒரு அதிசய வேதிப் பொருள் (எடுத்துக்காட்டுக்கு கேன்சரை குணமாக்கும் அதிசய வேதிப் பொருள்) இருந்து அதன் மூலம் மனிதனுக்கு நன்மை ஏற்படுமானால் ஸம்ஸம் நீர் அற்புதமானது என்று வாதிடலாம்.

“இந்தத் தண்ணீரில் ஃபுளோரைடு உள்ளது. இது கிருமிகளை அழிக்க வல்லது” என்று தனது ஆராய்ச்சிக் குறிப்பில் சொல்கிறார் பீஜே.

ஆனால் ஸம்ஸம் நீரில் அதிக அளவில் இருக்கும் நைட்ரேட்டுகளும் அம்மோனியாவும் ஸம்ஸம் நீரின் மிதமான வெப்பநிலையும் அதில் பாக்டீரியாக்கள் பெருகுவதற்கு உதவுகின்றன என்றும் பக்கம் 118 ல் சொல்கிறார் அதனை நேரடியாக & முறையாக ஆய்வு செய்த யஹ்யா அவர்கள்.

வேதியியல் பண்புகளால் எந்த பொருளும் அதிசயம்/அற்புதம் ஆகாது.

H.ஸம்ஸம் நீரில் கிருமிகள் இருந்ததில்லையா?

//எந்த ஒரு நீர்நிலையாக இருந்தாலும் பாசி படிந்து போவதும், கிருமிகள் உற்பத்தியாவதும் இயற்கை. இதனால் தான் குளோரின் போன்ற மருந்துகள் நீர்நிலைகளில் கலக்கப்படுகின்றன. ஆனால் ஜம்ஜம் தண்ணீரில் அது உற்பத்தியான காலம் முதல் இன்று வரை எந்த மருந்துகள் மூலமும் அது பாதுகாக்கப்படாமல் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வது மூன்றாவது அற்புதமாகும்.// - பீஜே ஆராய்சிக் குறிப்பு # 438

1883ல் ஸம்ஸம் நீரை சோதனை செய்து அதில் கழிவு நீர் கலந்திருப்பதாக பிரிட்டிஷ் அறிவியலாளர்கள் குற்றம் சுமத்தினர். அப்போது மக்காவை ஆட்சி செய்த உதுமானிய பேரரசின் (ottoman empire) அறிவியலாளர்கள் அந்த விமர்சனத்தை எதிர்கொண்டனர். 

1978ல் மதாஃப் விரிவாக்கத்தின்போது நிலத்தை தோண்டியபோது ஸம்ஸம் கிணற்றை சுற்றி திடீரென நீர் வெளிப்பட்டுள்ளது. முதலில் அது ஸம்ஸம் நீர்தான் என்று நினைத்தபோதுதான் அது சாக்கடை என்று தெரிய வந்தது.

விபரீதத்தை உணர்ந்த சவுதி அரசு அப்போது நீர் மேலாண்மை மற்றும் கழிவு நீர் மேலாண்மை துறையின் பொதுமேலாளராக இருந்த எஞ்சினியர் யஹ்யாவிடம் பொறுப்பை ஒப்படைத்தனர்.

மழை நீர் மற்றும் கழிவு நீருக்கு சரியான வடிகால் அமைப்பதுதான் தீர்வென கருதினார்கள். ஆனால் கஅபா இருப்பதுதான் ஆக பள்ளமான பகுதி அங்கிருந்து கழிவு நீர் & மழை நீரை வெளியேற்ற வேண்டுமென்றால் பூமிக்கடியே சுரங்கம்தான் அமைக்க வேண்டும். எனவே சுரங்கம் வெட்டினார்கள். சுரங்கம் வெட்டிய இடத்தில் வந்த நீரை வெளியேற்றியபோதுதான் ஸம்ஸம் கிணற்றின் நீர் வரத்து தடைபட்டது தெரிந்தது. இது கிணறு வெட்ட வெளிப்பட்ட முதல் பூதம்.

ஆக சுரங்கத்தை மூடிவிட்டு. வேறு திட்டத்தை கையில் எடுத்தார்கள். ஆனால் ஸம்ஸம் கிணற்றில் சாக்கடை கலந்தது உறுதியாகிவிட்டது. அதை சுத்தப் படுத்தும் பொறுப்பையும் ஏற்றார் யஹ்யா.

அப்போதுதான் தீவிரவாதிகள் கஅபாவை ஆக்கிரமித்தனர். 15 நாட்கள் போராடி அவர்களை சிறை பிடித்தது அரசு. அவர்கள் செய்த அட்டூழியத்தால் ஸம்ஸம் கிணறு இருந்த பேஸ்மெண்ட் முழுக்க வெள்ளம் நிறைந்து வெடிகுண்டும் பிணங்களும் மிதந்தன. தலைவலி அதிகமானது. அனைத்து பிரச்சனைகளையும் சமாளித்து கிணற்றை சுத்தம் செய்ய களமிறங்கினார் யஹ்யா.

நீரில் மூழ்கும் வல்லுநர்களை (divers) வரவழைத்து கிணற்றுக்குள்ளே அனுப்பினார். 60 முழம் (சுமார் 28 மீட்டர்) ஆழம் கொண்ட கிணறு என்றுதான் வரலாற்றில் அது பதிவாகி இருந்தது. ஆனால் divers இறங்கியபோது அது 13 மீட்டர் தான் இருந்தது. கிணறு வெட்ட வெளிப்பட்ட இரண்டாவது பூதம்.

மீதி கிணறு குப்பைகளால் நிறைந்திருந்தது. அதில் அதிமாக வாளிகள், கயிறுகள், காசுகள், பெயர் எழுதப்பட்ட பலகைகள், மிருகங்களின் கொம்புகள் இன்னும் என்னென்னமோ குப்பைகள் இருந்தன. அனைத்தையும் வெளியே எடுத்து தரை தட்டுவதை உறுதி செய்தார் யஹ்யா. பின்னர் அளந்தபோது கிணற்றின் ஆழம் 30.5 மீட்டர் (100 அடி) இருந்தது.

நீரை இறைத்து ஸம்ஸமுக்கான நீர் ஆதாரத்தை பார்ப்பதுதான் அவர்களின் பெரிய ஆசையே. நீரை இறைத்தபோது 13 மீட்டரில் இருந்து 13.8 மீட்டருக்கு இடையேதான் நீர் வரத்துக்கான ஊற்றுக் கண்கள் இருந்தன. அதற்கு கீழேயும் ஊற்றுக்கள் இல்லை அதற்கு மேலேயும் இல்லை. ஆக மீதி இருக்கும் 17 மீட்டர் வெறும் சேமிப்பு தொட்டி மட்டுமே.

இந்த முக்கால் மீட்டரில் இருந்த 3 பெரிய ஊற்றுக்களும் இன்ன பிற சிறு ஊற்றுக்களுமே ஸம்ஸம் கிணற்றுக்கு நீர் ஆதாரம்.

இதற்கிடையே ஸம்ஸம் நீரை சோதனை செய்தார் யஹ்யா. Salmonella, E. coli & shigella போன்ற கொடிய பாக்டீரியாக்கள் அதிக அளவில் இருப்பதை கண்டார். சாக்கடை கலந்ததால் இது நிகழ்ந்திருக்க வேண்டும்.

பின்னர் கிணற்றை நன்றாக க்ளோரின் இட்டு தேய்த்துக் கழுவினார்கள். அதன் பிறகு கிருமிகளை அழிப்பதற்காக 24 மணி நேரத்திற்கு க்ளோரின் இட்டு ஊற வைத்தார்கள். பின்னர் நீரை இறைத்துவிட்டு சோதித்த போதும் பாக்டீரியாக்கள் அதிக அளவில் இருந்தன. ஊற்றுக்களை தனித்தனியாக சோதித்தபோது மொத்தம் இருந்த மூன்று பெரிய ஊற்றுக்களில் ஓர் ஊற்றில் பாக்டீரியக்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தன. மற்ற இரு ஊற்றுக்களில் பாக்டீரியா இல்லை. அந்த ஊற்றுக்குள் எங்கிருந்தோ கழிவு நீர் கலக்கிறது. பூமிக்கடியே நடக்கும் அதை கண்டுபிடிப்பது இயலாத காரியம். கிணறு வெட்ட வெளிப்பட்ட மூன்றாவது பூதம் இது.

ஆக கிணற்று நீரை கிருமி நாசம் செய்து பருகுவதை தவிர வேறு வழியில்லை. க்ளோரின் சேர்ப்பது கொதிக்க வைப்பது ஆகிய முறைகள் முன்வைக்கப்பட்டன. க்ளோரின் சேர்ப்பது ஸம்ஸம் நீரின் தனித்தன்மையை மாற்றி விடும். கொதிக்க வைப்பது அதிக பொருட்செலவு. அப்போதுதான் புற ஊதா கதிர்கள் (ultra violet) மூலம் கிருமிகளை அழிக்கும் திட்டத்தை எடுத்து சொல்லி அரசிடம் அனுமது பெற்றார் யஹ்யா.

UV சுத்திகரிப்பு நிறுவப்பட்டது. இந்த தகவல்களை அனைத்தையும் யஹ்யாவின் புத்தகத்தில் காணலாம்.

அன்றிலிருந்து இன்றுவரை UV சுத்தம் செய்யப்பட்ட நீர் தான் வழங்கப்படுகிறது. நீர் மட்டுமல்ல அதனை தாங்கும் பாட்டில்களும் UV முறையில் கிருமி நாசம் செய்யப்படுகின்றன. ஆகயால் 1979க்கு பிறகு யார் ஸம்ஸம் நீரை ஆய்வு செய்தாலும் அதில் ஒரு பாக்டீரியா கூட இருக்காது.

அதே பாட்டிலில் எத்தனை வருடம் இருந்தாலும் அதில் பாக்டீரியாக்கள் வராது. ஏனென்றால் பாக்டீரியாக்கள் வளர வேண்டுமெனில் அவற்றுக்கு உணவு வேண்டும். வெறும் நீரில் பாக்டீரியாக்கள் உருவாகாது. ஸம்ஸம் மட்டுமல்ல இன்று நாம் கடையில் வாங்கும் சுத்திகரிப்பு செய்யப்பட்ட எந்த நீருக்கும் இது பொருந்தும்.

பூமி படைக்கப்பட்ட நாள் முதல் பூமியில் இருக்கும் நீரைத்தான் சுழற்சி முறையில் நாம் பயன்படுத்தி வருகிறோம்., உலகில் உள்ள எந்த நீரும் கெட்டுப் போவதில்லை, அதில் மாசுகள் கலக்கும் வரையில்.

குர்ஆன் ஹதீஸ் இதனை அற்புதம் என்கிறதா??

ஸம்ஸம் கிணற்று நீர் நிலத்தடி நீரில் இருந்து வரவில்லை அதிசயமான முறையில் வருகிறது என்று குர்ஆன் ஹதீஸில் எங்குமே இல்லை. ஸம்ஸம் உருவான விதம் மட்டுமே அற்புதமானது. அதன் பின்னர் அதன் நீர் வரத்து பிற கிணறுகளைப் போல மழைநீரால் நிரப்பப்படுவதுதான்.

ஸம்ஸம் நீர் பறக்கத் நிறைந்தது. அது நிலத்தடி நீராக இருப்பதாலோ மழை நீரால் ரீசார்ஜ் செய்யப்படுவதாலோ அதன் பரக்கத்திற்கு எந்தக் சிறுமையும் ஏற்படாது.

மழை இல்லாமல் அதன் நீர் வற்றிப் போனாலும் ஸம்ஸம் கிணற்றின் சிறப்புக்கு எந்தக் குறைவும் ஏற்படாது. மனிதர் செய்யும் தவறுகளால் அந்த நீர் மாசுபடுத்தப்பட்டாலும் அந்த நீரின் பறக்கத் குறையப் போவதில்லை.

பீஜே போன்ற அறிஞர்களால் யஹ்யாவின் புத்தகத்தை வாசித்து உண்மையான தகவல்களை உலகிற்கு சொல்வது இலகுவான காரியம். இருந்தும் போலி தகவல்களை ஆதாரமாகக் கொண்டு ஸம்ஸம் கிணற்றின் வடிவம் முதல் அனைத்து தகவல்களையும் தவறாக சொல்லி இருக்கிறார்கள்.

மார்க்கம் அற்புதம் என்று சொல்லாத ஒன்றை முஸ்லிம்கள்தாம் அற்புதப் படுத்துகிறார்கள்.