எம்மைப்பற்றி

முஹம்மத் பீர்:
அறிவியல் என்ற பெயரில் கண்ட கட்டுக்கதைகளை இணையத்தில் பரப்புபவர்களை நாம் அன்றாடம் காணலாம். அவை அறிவியல் அல்ல பொய்யான தகவல் என்று மறுப்பவர்கள் சிலரே. பலரும் அதை உண்மை என்றே நம்பி பகிர்கின்றனர். மேலும் குர்ஆனுக்கு அறிவியல் விளக்கம் கொடுக்கப்போகிறேன் என்றும் பலர் களத்தில் குதிப்பதைக் காணலாம். இதில் பலர் அறிந்தோ அறியாமலோ குர்ஆனுக்காக அறிவியலை அல்லது அறிவியலுக்காக குர்ஆனையும் வளைத்துவிடுகின்றனர். அத்தகைய பதிவுகளைப் பார்த்த உடன் மறுப்புகளை இயன்ற அளவு வழங்கிவந்தேன்.
அந்த வரிசையில் கண்ணில் பட்டதுதான் உலகில் ஒரு நாளில் நோன்பு வரவேண்டும் ஒரே நாளில் பெருநாள் கொண்டாட வேண்டும் எனும் சித்தாந்தம். இந்த சித்தாந்தம் வளர்வதற்கு முக்கிய காரணம் மக்களின் அறியாமையே. பூமி உருண்டை என்பதும் இரவு பகல் எப்படி ஏற்படுகிறது சூரியன்-சந்திரன்-பூமி ஆகியவற்றின் இயக்கங்கள் எவ்வாறு உள்ளது என்பது போன்ற அடிப்படி அறிவில்லாத மக்களே இந்த வெற்று சித்தாந்தத்தில் வீழ்வதைக் காணமுடிந்தது.
ஒரு facebook பதிவில் ஏற்பட்ட வாதங்களில் கல்வி அறிவு பெற்ற மக்களே கிப்லா என்றால் என்ன, உலகம் உருண்டையில் நாள் எங்கே துவங்குகிறது என்பது போன்ற அடிப்படை அறிவு-இயல் தெரியாமல் இருப்பதைக் கண்டேன். அன்றிலிருந்து கிப்லாவைப் பற்றிய தகவல்களிலிருந்து தொடங்கின எனது எழுத்துக்கள். நம் ஆக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது சமூக வலைத்தளங்கள்தாம். ஆனால் இவைகளில் (text-based) எழுத்து வடிவிலான விளக்கங்களை மட்டுமே எழுத முடிகிறது. இடையிடயே விளக்கத்திற்காக படங்களையோ, வீடியோக்களையோ, அனிமேஷன்களையோ இணைக்க முடிவதில்லை. இதை செய்வதற்கு blogதான் சிறந்த வழி என்பதாலும். நமது எழுத்துக்களை ஒரே இடத்தில் தொகுப்பாக வைத்துக்கொள்ளலாம், தேவைப்படின் லிங்க் வடிவில் எளிதில் பகிரலாம் என்பது போன்ற பல வசதிகள் இருப்பதால் எனது ஆக்கங்களை blogஇல் வெளியிடத் துவங்கினேன். இதுவே பிறைவாசியின் துவக்கம்.
இந்த சமூகத்தில் அறிவியலின் பெயரால் ஏற்பட்ட பாதிப்புகளில் மிகப்பெரியது பிறை பற்றிய குழப்பம்தான். தவறான பிறைக் கொள்கையில் இருப்பவர்கள் அறிவியல் என்ற பெயரில் சிலர் சொல்லும் பொய்களை உண்மை என்று நம்பி வாழ்கின்றனர். சரியான கொள்கையில் இருப்பவர்கள் அந்தப் பொய்யர்கள் சொல்லும் அறிவியல் உண்மைதான், சரிதான் ஆனால் இஸ்லாம் பிறையைக் கண்ணால்தான் பார்க்கச் சொல்கிறது என்பதால் அறிவியலை தேவையில்லை என்று ஒதுக்கி விடுகின்றனர். இதனால் அறிவியல் என்ற பெயரால் இந்தப் பொய்யர் கூட்டங்கள் சொல்வது எத்தனை மடைமை என்று மக்களுக்கு விளங்காமல் போய்விட்டது. சர்வதேச பிறை என்ற வெற்று சித்தாந்திலும் விஞ்ஞானப் பிறை என்ற போலி சித்தாந்தத்திலும் ஒரே நாளில் பெருநாள் வராது. இந்த உண்மை அறிவியலை அறிவு-இயலைக் கொண்டே விளக்க வேண்டும். உலகில் இல்லாத ஒன்றை அல்லாஹ்வோ அவனது தூதரோ சொல்லி இருப்பார்களா?
மேலும் அறிவியல் என்றாலே அது நாளுக்கு நாள் மாறிக்கொண்டிருக்கும் விஷயம் என்றும் அவை மனித கண்டுபிடிப்புகள் என்றும் ஒரு சிலர் ஒதுங்கி விடுகின்றனர். இன்னும் சிலர் "அல்லாஹ் எங்களது மூளைகளை பூட்டி விட்டான் எங்கள் மண்டையில் நீ சொல்வது ஏறவே ஏறாது" என்று இவர்களாகவே ஒரு பூட்டைப் போட்டுவிடுகின்றனர். அல்லாஹ்வோ வானில் இருக்கும் அத்தாட்சிகளை சிந்திக்க மாட்டீர்களா என்கிறான்? இறைமறுப்பாளர்களுக்கு மட்டுமே அவனின் அத்தாட்சிகள் தெரிவதில்லை என்கிறான். வானம் பூமி ஆகியவற்றில் இருக்கும் சான்றுகளை இறையச்சமுள்ளவர்களால் மட்டுமே பார்க்க இயலும் என்கிறான். வானையும் பூமியையும் சிந்தியுங்கள் என்று கட்டளையிடுகிறான். வானம் பூமி பற்றி தெரிந்து கொள்வதை அல்லாஹ் கடமையாக்கிவிட்டான். சிந்திக்காதவர்களை எச்சரிக்கை செய்கிறான். ஆனால் நம் மக்கள் அவற்றை அறிவியல் என்று புறக்கணிக்கின்றனர். "அறிவியல் என்றால் என்ன?" எனும் அறிவு இல்லாமைதான் இதற்குக் காரணம்.
அறிவு+இயல் தான் அறிவியல். பல கோட்பாடுகளை அறிவியல் என்று நாம் பொதுவாக சொன்னாலும் அவற்றில் சில வேறுபாடுகள் இருக்கின்றன. பூமி உருண்டை என்று அறிவியல் சொல்கிறது. சில வருடங்களுக்குப் பிறகு பூமி முக்கோண வடிவம் என்று சொல்லிவிடுமா? சந்திரன் பூமியை சுற்றிவருகிறது என்று அறிவியல் சொல்கிறது. சில காலத்திற்குப்பின் "அவ்வாறில்லை! சந்திரன் என்பது இட்லி போன்ற ஓன்று, அது வானில் ஒட்டிவைக்கப்பட்டுள்ளது" என்று அறிவியல் மாற்றி சொல்லிடுமா? மனிதனின் கண்டுபிடிப்புகள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டிருக்கும் ஆனால் அல்லாஹ்வின் படைப்புகள் மாறுவதில்லை. அணுக்கருவை பிளக்க முடியாது என்று சொன்னது அறிவியல்தான். பிற்காலத்தில் அணுவை பிளந்ததும் அறிவியல்தான். இது மனிதனின் இயலாமையே தவிர அல்லாவின் படைப்பில் ஏற்பட்ட மாற்றமல்ல. அறிவியலில் எது மாறக்கூடியது எது மாறாதது என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். மனிதனின் அறிவு வளர்ச்சி அடையும் போது அவன் புதிதாக கண்டுபிடிப்பது மாறிக்கொண்டிருக்கும். படைப்புகளைப் பற்றி அவன் அதிகாமாக தெரிந்துகொண்டால் முன்னர் சொன்னதை மனிதன் மாற்றிச் சொல்வான்.
சூரியன் சந்திரன் பூமியின் இயக்கத்தைப் பொருத்தவரை மனிதன் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அவற்றை மிகத்தெளிவாக தெரிந்துகொண்டான். பூமி உருண்டை, அது தானே சுழன்று சூரியனையும் சுழல்கிறது, பூமியை சந்திரன் சுற்றி வருகிறது என்பவற்றை மனிதன் 4000 வருடங்களுக்கு முன்பே தெரிந்து கொண்டான். இவை இனிமேல் மாறப்போவதுமில்லை. சூரியன் சந்திரன் பூமி இவற்றின் இயக்கத்தைப் பற்றி தெரிந்து கொண்டால் ஒரே நாளில் பெருநாள் கொண்டாடுவது சாத்தியமில்லை என்பது திண்ணமாக ஒவ்வொருவருக்கும் விளங்கும்.
ஒரு குர்ஆன் வசனத்தை எடுத்து மொழிப்பெயர்த்து பூமி செவ்வக வடிவத்தில் இருப்பதாக ஒருவர் விளக்கினால் அதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? அல்லது அவரை முட்டாள் என்பீர்களா? சந்திரனின் இயக்கத்தில் ஒரே நாளில் பெருநாள் இல்லை என்று தெளிவாக தெரிந்த பின்னால் ஒருவர் குர்ஆன் வசனங்களுக்கு அத்தகைய விளக்கத்தைக் கொடுத்தால் அந்த விளக்கம் தவறானது என்பதை தப்சீர்களிலோ அகராதிகளிலோ தேட வேண்டிய தேவையில்லை. அதே போல ஒருவர் பூனைக்கு நான்கு கால்கள் என்பதற்கு ஆதாரம் கேட்டால் அதை குர்ஆன் ஹதீஸில் தேடுவீர்களா அல்லது ஒரு பூனையைப் பிடித்து அவருக்குக் காட்டி நிறுவிவீர்களா? இதைத்தான் பிறைவாசி செய்கிறது. பிறையில் சர்வதேசம் இல்லை சந்திரனில் காலண்டர் இல்லை என்பதை அவற்றிலிருந்தே பிறைவாசி நிறுவுகிறது. அல்லாஹ் படைத்தவற்றைப் பற்றிய உண்மைகளை அந்த படைப்பினைகளைப் பார்த்தே அறிந்துகொள்ளலாம். இறைவன் தான் படைத்தவற்றின் மீது ஆணையிடுகிறான். குறிப்பாக சூரியன் சந்திரன் மீது ஆணையிடுகிறான். அவற்றை கணக்கின்படி இயக்குவதாக சத்தியம் செய்கிறான். அந்தக் கணக்கில் சர்வதேச பிறையும் சர்வதேச காலண்டரும் இல்லை எனும்போது வேறு என்ன ஆதாரத்தை குர்ஆன் ஹதீஸில் தேடவேண்டும். அல்லாஹ் மனிதனுக்கு சர்வதேசப் பிறையையோ சர்வதேச காலண்டரையோ நாடியிருந்தால் அது பூமியிலும் சந்திரனிலும் பிறையிலும் தான் இருந்திருக்கும். பூமியில், சூரிய சந்திரனின் இயக்கத்தில் சர்வதேசப் பிறையும் சர்வதேச காலண்டரும் இல்லை என்பதை அல்லாஹ் கட்டாயமாக்கிய வானியல் அறிவைக்கொண்டு ஒவ்வொருவருக்கும் விளக்குவதே பிறைவாசியின் நோக்கம். சந்திரனில் இல்லாத சர்வதேச காலண்டரையும் பிறையில் இல்லாத சர்வதேசத்தையும் நிறுவுவதற்காக இவர்கள் குர்ஆனிலும் ஹதீஸிலும் அறிவியலிலும் வரலாற்றிலும் எத்தகைய பித்தலாட்டங்களை செய்துள்ளனர் என்பதையும் பிறைவாசி தவறாமல் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
பிறையைப் பற்றிய அறிவியலானது சிலர் அஞ்சி விலகுவதைப் போன்று ராக்கட் சைன்சோ, ரோபோ டெக்னால்ஜியோ அல்ல. எழுதப் படிக்கத்தெரியாதவரால் கூட விளங்கிக்கொள்ள இயன்ற எளிமையான விஷயம்தான். அதன் கணக்கானது சிலர் ஆஸ்ட்ரோ ஃபிசிக்ஸ் என்று மக்களிடம் பூச்சாண்டி காட்டும் அளவுக்கு பெரிய விஷயம் அல்ல. பத்தாம் வகுப்பு கணித அறிவைக்கொண்டு 300ரூபாய் கால்குலேட்டரில் போடும் அளவுக்கு எளிமையான கணக்குத்தான்.
ஆர்வமுடன் படியுங்கள்! ஆர்வமுள்ளவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்!
தொடர்புக்கு:


***********************************************************************************************************

பிறை மீரான்:
மார்க்கத்தின் பெயரால் நடைபெறும் அனாச்சாரங்களில் பங்களிப்பவனாக இருந்து அல்லாஹ்வின் உதவியால் வெளியேறியவன் நான், மீரான்.
பள்ளிவாசலில் என்னுடன் தொடர்புடைய வயதில் மூத்த சகோதரர் ஒருவர் என்னிடம் "கிழக்கில் உதிக்கும் பிறையை மஃக்ரிபில் மறையும்போது பார்க்கும் மடமையிலிருந்து விடுபடமாட்டீர்களா" என்று கேட்டார்.
பிறைகள் பொறித்த காலண்டர் ஒன்றையும் கொடுத்தார்.
மஃரிப் பிறையயை விட்டுவிட வேண்டிய அனாச்சாரம் என்று நினைத்து பிறைக் காலண்டரை கண் கொண்டதாக்கினேன். அதன் அடிப்படையில் நோன்பை நான் மற்றும் என் குடும்பத்தினர் ஆரம்பிக்க முடிவு செய்தேன். ஆரம்பகாலத்தில் அனாச்சாரங்களை விட்டொழிக்க உதவிய என் குடும்பம் காலண்டர் விஷயத்தில் காலை வாரியது.
ஊருக்கு முன்பே நோன்பை ஆரம்பிக்கவும், ஊருக்கு முன்பே நோன்பை விடவும் மறுத்தது. நான் விடவில்லை. சத்தியத்தை நிலைநாட்ட தலாக் விடுவேன் என மனைவியை மிரட்டினேன். பணிந்தாள்.
எனக்கு காலண்டரை அறிமுகப்படுத்திய "பாய்" 50 குடும்பங்களுக்கு "பிறை அறிவிப்பாளர்"ஆக இருந்தார். அந்த குடும்பங்களுடன் எனது குடும்பத்தையும் இணைத்து 51 குடும்பங்களும் சேர்ந்து ஊருக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே நோன்பு வைத்தோம். ஊரே நோன்பிருக்க ஒரு நாளுக்கு முன்னதாகவே நோன்பு மாதத்தை நிறைவு செய்து பெருநாள் கொண்டாடி மஃக்ரிப் பிறை அனாச்சாரத்தை ஒழித்தேன். பெருமிதம் கொண்டேன். என்னை சுற்றியுள்ள குடும்பங்களுக்கு "பிறை அறிவிப்பாளர்" ஆக மாறினேன்.
காலண்டரை அறிமுகப்படுத்திய பாயிடம் பிறை பற்றின நிறைய சந்தேகங்களை கேட்டேன். அவர் கூறிய பதில்கள் என்னை குழப்பத்தில் ஆழ்த்தின.
இனையதளங்கள் மூலம் தேடினேன்.
இரண்டு ஆண்டுகள் வரை ஆனது ஒரு முடிவுக்கு வருவதற்கு. அதாவது கியாமத் நாள் வரை சந்திரனுக்கு உலக காலண்டர் போடமுடியாது என்ற முடிவுக்கு வந்தேன். மஃக்ரிப் பிறையின் மகத்துவத்தை உணர்ந்தேன்.
50 குடும்பங்களின் பிறை அறிவிப்பாளரான பாயிடம் நான் அறிந்த விஷயங்களை கூறினேன். உண்மையை ஓரளவிற்கு அவர் உணர்ந்தார். ஆனாலும் "பிறை அறிவிப்பாளர்" என்ற பெருமையை அவர் விடத்தயாரில்லாததால் தன் நிலையை தொடர்கிறார். அவர் மட்டுமல்ல ஹிஜிரா கமிட்டி காலண்டரின் பிழை கண்ட பலரும் சர்வதேச பிறை, சவுதி பிறை, உம்முல் குரா என புதிதாக பல பிறைகளை பின்பற்றுவதும் "பிறை அறிவிப்பாளர்" என்ற பதவியை இழக்க விரும்பாததால்தான்.
என் குடும்பத்தாரர் கேலி செய்வார்களே என்று அஞ்சாமல் அல்லாஹ்விற்கு மட்டும் அஞ்சி நானும் மஃரிப் மடையர்களுள் ஒருவனானேன்.
ஆனாலும் கமிட்டியின் சந்திரன் பொறித்த அந்த காலண்டர் எனக்குள் பிரமிப்பாகத்தானிருந்தது. எப்படி உருவாக்கியிருப்பார்கள்?
இணையத்தில் தொடர்ந்து தேடிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் "மூன் காலண்டர் தயாரிப்பது எப்படி" என்று piraivasi.com ல் பார்த்தேன். ஹிஜிரா காலண்டர் தயாரிப்பின் ஒவ்வொரு நிலையையும் விளக்கியிருந்தார் சகோதரர் பீர் முகம்மத். அதை பார்த்த பிறகு ஹிஜிரா கமிட்டி சூரியக்காலண்டரில் ஒட்டி வைத்திருந்த சந்திர பிறை ஸ்டிக்கர் உரிந்து தொங்கியது.
அவரை தொடர்பு கொண்டேன். கமிட்டியின் கள்ளத்தனத்தை வெளிப்படுத்த சகோ பீர் எனக்கும் ஒரு வாய்ப்பளித்தார். Telegram, whatsapp குழுமங்களில் இணைத்தார். பிறைவாசியிலும் வாய்ப்பளித்தார்.
பிறை மீரான் உருவானான்.
தொடர்புக்கு:

நீங்களும் பிறைவாசியில் பங்கெடுக்கலாம். குர்ஆன்-அறிவியல் தொடர்பான உங்களது ஆக்கங்களை எங்களுக்கு அனுப்புங்கள். பிறை பற்றிய ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியானவை வெளியிடப்படும்.