Wednesday 16 March 2016

விஞ்ஞானம் பகுதி-3: மனாziல் ஒரு பார்வை

இன்று நாம் அனைவரும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தத் துவங்கிவிட்டோம். அவைகள் நம் வாழ்கையின் ஒரு அங்கமாகிவிட்டன. முன்னர் ஒரு ஊருக்கு வழி சொல்வதெனில் அதன் பக்கத்து ஊரில் துவங்கி, குளம், குட்டை, வயல், ஆலமரம், சூப்பர் மார்க்கட், மால், எனப் பல அடையாள இடங்களைச் சொல்ல வேண்டும். இப்போது அந்தச் சிரமம் இல்லை. வாட்ஸ்ஆப்பில் லொகேஷனை ஷேர் செய்து விட்டால் அந்த இடத்திற்கு அவர் எளிதில் சென்று சேர்ந்துவிடுவார். இது எவ்வாறு வேலை செய்கிறது? பூமியில் அட்ச ரேகைகள் தீர்க்க ரேகைகள் என்று கற்பனை கோடுகளை வரைந்துள்ளனர். ஒவ்வொரு இடத்தின் வழியாகவும் ஒரு அட்ச ரேகையும் தீர்க்க ரேகையும் செல்லும். நாம் இருக்கும் இடத்தின் வழியாக ஒரே ஒரு அட்ச ரேகையும் தீர்க்க ரேகையும் மட்டுமே செல்லும். இந்த அட்ச ரேகையையும் தீர்க்க ரேகையையும் GPS எனும் கருவியின் உதவியுடன் வாட்ஸ்ஆப் கண்டு பிடித்து மற்றொருவருக்கு அனுப்புகிறது. அதைப் பெறுபவரின் ஸ்மார்ட் போனிலும் ஒரு GPS கருவியும் வரைபடமும் இருக்கும். ஸ்மார்ட் போன் GPS கருவியைப் பயன்படுத்தி அவர் இருக்கும் இடத்தையும் சென்று சேரவேண்டிய இடத்தையும் வரைபடத்தில் காட்டும். எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதையும் காட்டிவிடும்.
இங்கே நாம் தெரிந்து கொள்ள வேண்டியது வாட்ஸ்ஆப் அல்லது GPS பற்றியல்ல. பூமியில் ஒரு இடத்தை எப்படி அடையாளம் இடுகிறார்கள் என்பதையே. பூமியில் இடங்களை அட்ச ரேகை latitude தீர்க்க ரேகை longitude எனும் கோடுகளைப் பயன்படுத்தி அடையாளப்படுத்துவதைப் போல வானிலும் அடையாளங்கள் இருக்கின்றன. வானத்தில் சந்திரன் எங்கே இருக்கிறது சூரியன் எங்கே இருக்கிறது எந்தக் கோள்கள் எங்கே இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ள பூமியில் இருக்கும் லாடிடூட் லாஞ்சிடூட்களைப் போல் வானத்திலும் கற்பனையான கோடுகளை மனிதன் இன்று அமைத்துள்ளான். இவர் Right Ascension & Declination என்று அறியப்படுகின்றன. Right Ascension (சுருக்கமாக RA) என்பவை தீர்க்க ரேகைகளுக்கு இணையாக வானில் கற்பனையாக வரையப்பட்டவை. Declination (சுருக்கமாக DEC) என்பவை அட்ச ரேகைகளுக்கு இணையாக வானில் வரையப்பட்ட கற்பனைக் கோடுகள்,
இன்று மனிதன் RA & DEC க்களை வைத்து வானில் ஒரு கொள் எங்கே இருக்கிறதென்று எளிதில் சொல்லிவிடுகிறான். இந்த இரண்டு மதிப்புகளையும் உள்ளீடு செய்தால் இன்றைய நவீன தொலைநோக்கிகள் மிகச்சரியாக ஒரு கோளை நோக்கி நின்று விடும். ஆனால் பண்டைய மக்கள் ஒரு கோள் எங்கே இருக்கிறதென்பதை எப்படி குறித்துகொண்டார்கள். பார்ப்போம்.
பூமி உருண்டையைச் சுற்றிலும் வான் உருண்டை இருப்பதாக மனிதன் கற்பனை செய்தான். அந்த உருண்டையில் நட்சத்திரங்கள் ஒட்டி வைக்கப்பட்டிருப்பதாக எண்ணினான். இந்தக் கோளம் வான்கோளம் என்றறியப்பட்டது. மனிதன் தன்னுடைய நெடுநாள் கவனிப்பின் விளைவாக நட்சத்திரங்கள் ஒன்றிற்கொன்று நகராமல் நிலையாக இருப்பதை அறிந்தான். சில நட்சத்திரங்கள் மற்றவற்றிலிருந்து நகர்வதையும் கண்டான். நகரும் நட்சத்திரங்கள் என்று அவற்றுக்குப் பெயரிட்டான். பின்னாளின் இவைதான் சூரிய குடும்பத்தின் கோள்கள் என்று அடையாளம் கண்டுகொள்ளப்பட்டன. ஆங்கிலத்தில் planet எனும் வார்த்தை கிரேக்க மொழியில் planētēs எனும் வார்த்தையிலிருந்து வந்ததுதான். Planētēs என்றால் நாடோடி என்று பொருள். மற்ற நட்சத்திரங்கள் நிலையாக இருந்தபோது இவை ஓடித்திரிந்ததால் அதை அவ்வாறு அழைத்தனர். பிற்காலத்தில் கோள்களுக்கு அதுவே பெயராகிவிட்டது. அரபியிலும் கோள்களுக்குச் சொல்லப்படும் கவ்கப் எனும் வார்த்தையின் மூலமும் “அலையும் நட்சத்திரங்கள்” என்று பொருள்படும் கொவ்கோப் எனும் வார்த்தையிலிருந்து வந்ததுதான்.
மேற்சொன்ன வான்கோளத்தில் இந்த நிலையான நட்சத்திரங்கள் ஒட்டி வைக்கப்பட்டுள்ளதாகவும் இக்கோளத்தினுள்ளே பூமியும் சூரியனும் சந்திரனும் இன்ன பிற கோள்களும் சுற்றி வருவதாக எண்ணினான். கீழே நீங்கள் பார்ப்பதுதான் வான்கோளம் ஆங்கிலத்தில் celestial sphere.
https://i.ytimg.com/vi/aFIR7hbqed4/maxresdefault.jpg
நீங்கள் இரவில் வானதைப்பார்க்கும்போது டூம் வடிவில் ஒரு அரைக்கோளத்தால் பூமி மூடப்பட்டுள்ளது போல் உணர்வீர்கள். கீழே படத்தில் இருப்பதைப் போல. இரவில் இந்த அரைக்கோளத்தையும் பகலில் ஒரு அரைக்கோளத்தையும் கண்ட மனிதன் பூமியை சுற்றி இருக்கும் வான் கோளை இதைவைத்தே உருவகப்படுத்தினான்.
http://www.herongyang.com/astrology_horoscope/celestial_sphere_relative_coordinate.gif
ஒன்றிக்கு ஓன்று நகராமல் நிலையாக இருக்கும் நட்சத்திரங்களுக்கு மனிதன் பெயரிட்டான். இவையே அளவுகோலாக மாறின. இந்த நிலையான நட்சத்திரங்கள் என்றுமே நகர்ந்ததில்லை. (பூமியில் இருந்து பார்க்கும்போது அவை நகாராமல் காட்சியளிக்கின்றன. ஆனால் அவையும் சூரியனைப் போல் வினாடிக்குப் பல மைல் வேகத்தில் பயணித்துக்கொண்டிருக்கின்றன). இந்த நட்சத்திரங்களைத்தான் மனிதன் வானில் இருக்கும் கோள்கள் அவை எங்கே இருக்கின்றன என்பதை அறிந்துகொள்ளப் பயன்படுத்தினான்.
நட்சத்திரங்களுக்குப் பெயரிட்டால் மட்டும் போதாது பல நாட்களுக்குப் பிறகு பார்க்கும்போது இந்த நட்சத்திரம்தானா அது என்ற குழப்பம் வந்துவிடக் கூடாது. எனவே நட்சத்திரங்களை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள மனிதன் ஒரு முறையைக் கையாண்டான். தான் வானில் பார்த்த, பெயரிட்ட, நட்சத்திரங்களைக் கற்பனைக் கோடுகளால் இணைத்தான். புள்ளியிட்டு கோலமிடுவதைப் போல. அவன் கற்பனையான இணைக்கும் கோடுகள் ஏதாவது அவனுக்கு எளிதில் விளங்கும் வடிவத்தைக் காட்டுவதாக இருக்குமாறு அவன் இணைத்தான்.
மேலே இருப்பது இரவுநேர வானத்தின் காட்சி. இது தெற்கு வானத்தைக் காட்டுகிறது. இதில் இருக்கும் நட்சத்திரங்களை இணைத்து உங்களால் எதாவது கற்பனை செய்யமுடிகிறதா? இல்லையென்றால் பின்வரும் படம் அதைக் கற்பனைசெய்ய உங்களுக்கு உதவும்.
இந்தபடத்தில் நட்சத்திரங்களை இணைத்துக் கற்பனைக்கோடுகள் வரையப்பட்டுள்ளன. இதிலும் உங்களால் எந்த வடிவத்தையும் உருவகப்படுத்தமுடியவில்லையெனில் பின்வரும் படம் அவற்றைத் தெளிவாகவே உங்களுக்கு விளக்கும்.
மேலே இருக்கும் படத்திலிருந்து நட்சத்திரங்களை இணைத்து எப்படி வடிவங்களைக் கற்பனை செய்தனர் என்று எளிதில் விளங்கிக்கொள்ளலாம். இன்றும் வானியல் ஆர்வலர்கள் ஒரு கோளைப் பார்க்க வேண்டுமென்றால் அது இன்று எந்த நட்சதிரக்கூட்டதில் இருக்கும் என்பதை தெரிந்து கொண்டுதான் தங்களின் தொலைநோக்கியைக்கொண்டு பார்கின்றனர்.
இன்று வானியலில் பயன்படுத்தப்படும் RA DEC எனும் அளவீடுகளுக்கு இணையானவை அன்றைய நட்சத்திரங்களைக் கொண்டு வானில் ஒரு குறிப்பிட்ட இடத்தைக் குறிக்கும் முறை. மனிதன் இவ்வாறு பல நட்சதிரக்கூட்டங்களை உருவகப்படுத்தி அவற்றிற்குப் பெயரிட்டான். இதனால் நட்சத்திரங்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. (இன்றளவில் உலக வானியல் ஒன்றியத்தால் 88 நட்சதிரகூட்டங்கள் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டுள்ளன). ஒரு கோள் வானில் எங்கிருக்கிறது என்பதை அது எந்த நட்சத்திரக்கூட்டத்தில் இருக்கிறது என்பதை வைத்துச் சொல்ல வேண்டும். எடுத்துக்காட்டிற்கு மேலுள்ள படத்தில் சனி கிரகம் தரசு வடிவில் இருக்கும் நட்சதிரக்கூட்டத்தில் இருப்பதை நீங்கள் காணலாம். இதைத் துலாம் நட்சதிரக்கூட்டத்தில் சனி இருப்பதாகச் சொல்வார்கள். இதே போல் சந்திரனும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நட்சத்திரக்கூட்டத்தில் காட்சியளிக்கும். இதை வைத்து “சந்திரன் இன்று இந்த நட்சத்திரக்கூட்டத்தில் இருக்கிறது” என்பார்கள்.
பூமியும் இன்ன பிற கோள்களும் சூரியனை ஒரே தளத்திலேயே சுற்றிவருகின்றன. இதனால் பூமியிலிருந்து பார்க்கும்போது சூரியனும் சந்திரனும் பிற கோள்களும் ஒரே பாதையில் பயணிப்பதுபோல் காட்சியளிக்கும். அதாவது எல்லா கோள்களும் ஒரே பாதையிலே வானில் பயணிக்கின்றன. இதனால் சில குறிப்பிட்ட நட்சத்திரக் கூட்டங்களைத் தவிர மற்றவற்றில் சூரியன், சந்திரன், கோள்கள் ஆகியவற்றைப் பார்க்க முடியாது. 88 நட்சதிரக்கூட்டங்களில் 13 நட்சத்திரக் கூட்டங்களை மட்டுமே (பூமியிலிருந்து பார்க்கும்போது) சூரியனும் கோள்களும் கடக்கின்றன. இவைகள் ராசிகள் (zodiacal constellation) என்றறியப்படுகின்றன.
வருடத்திற்கு பன்னிரண்டு மாதங்கள் என்பதால் மனிதன் சூரியனின் பாதையை 12 ஆகப் பகுத்து அதில் இருக்கும் ராசிகளில் சூரியன் பயணிப்பதை கவனித்து வந்தான். குறிப்பிட்ட காலநிலையில் குறிப்பிட்ட ராசியிலேயே சூரியன் இருப்பதை மனிதன் பல வருடங்களாகக் கவனித்து வந்தான். இதன்மூலம் சூரியன் இருக்கும் ராசிகளை வைத்து மனிதன் காலநிலை மாற்றத்தைக் கணித்துவந்தான். அது விவசாயத்திற்கு பயன்பட்டது. சூரியன் ஒரு ராசியில் அதன் சுற்றித் தொடங்கி மீண்டும் அதே ராசியில் முடிக்க 365.25 நாட்களை எடுக்கும்.
இதே போல் சந்திரன் கடக்கும் நட்சத்திரக்கூட்டங்களை மனிதன் கவனித்து வந்தான். சந்திரன் சூரியனைவிட வேகமாக நட்சத்திரக்கூட்டங்களை கடந்தது. எனவே நட்சத்திரக்கூட்டங்களை மொத்தமாகக் கணக்கிலெடுக்காமல் ஒரு சில நட்சத்திரங்கள் அல்லது ஒரே ஒரு நட்சத்திரத்தை மட்டும் வைத்துச் சந்திரனின் இருப்பிடங்களை மனிதன் கவனிக்கலானான். சந்திரன் சராசரியாக 27 – 28 நாட்களுக்குள் அது தொடங்கிய நட்சத்திரத்தில் மீண்டும் வந்தது. எனவே சந்திரனின் ஓடு பாதையை மனிதன் 27 பிரிவாகப் பிரித்தான் ஒவ்வொரு பிரிவிலும் ஓன்று அல்லது அதற்கு மேற்ப்பட்ட நட்சத்திரங்கள் இருந்தன. இந்த நட்சத்திரங்களில் சந்திரன் கடந்து செல்வதை மனிதன் ராசி நட்சத்திரங்கள் என்று அழைத்தான். அராபிய விஞ்ஞானத்தில் சந்திர ஓடுபாதை 28 நட்சத்திரங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இந்திய விஞ்ஞானத்தில் சந்திர ஓடுபாதை 27 நட்சத்திரங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இதற்குக் காரணம் சந்திரன் ஒரு நட்சத்திரத்தில் ஆரம்பித்து மீண்டும் அதே நட்சத்திரத்தில் முடியும் சுற்றுக்குச் சராசரியாக 27.32நாட்கள் எடுத்துக்கொண்டது.
அரபுகள் சூரிய ராசிகளை புரூஜ் என்றும் சந்திர ராசிகளை மனாசிலுல் கமர் என்றும் அழைத்தனர். எவ்வாறு நாம் பயன்படுத்தும் ஆங்கில நாட்காட்டி பருவ காலங்களைக் காட்டுகிறதோ அதே போலச் சூரியன் எந்த புரூஜில் இருக்கிறதோ அது நேரடியாக அந்தப் பருவநிலையை காட்டியது. ஆங்கில நாட்காட்டி வெய்யில் காலத்தை ஏப்ரல் மே மாதங்களிலும் குளிர் காலத்தை டிசம்பர், ஜனவரி மாதங்களிலும் காட்டும். இந்த வேலையை புரூஜுகள் அதே போல் துல்லியமாகக் காட்டின. பாபிலோனியர்கள் மூஸா நபிக்கும் முன்பு வாழ்ந்த சமூகம். இவர்கள் புரூஜுகளை வைத்துக் கால நிலை மாற்றத்தை அறிந்து கொண்டனர். இவர்கள் பயன்படுத்தியவைதான் இன்றளவு தொல்லியல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கும் முன்னரே மனிதன் இதை அறிந்திருக்கக்கூடும்.
ஆனால் அரபுகள் சூரியன் எந்த புரூஜில் இருக்கிறது என்று அறிந்து காலநிலை மாற்றத்தை அறிந்துகொள்ளாமல் வேறொரு முறையைக் கையாண்டனர். ஒரு ராசி (மன்சில் – நட்சத்திரம்) ஒரு வருடத்தில் முதலில் எப்போது உதிக்கிறது என்று பார்ப்பார்கள். உதாரணத்திற்கு துரய்யா எனும் ராசி (நட்சத்திரம்-மன்சில்)யை எடுத்துக்கொள்வோம். நேற்று வரை அதை நான் வானில் பார்க்கவே இல்லை. இன்று ஃபஜ்ர் வேளைக்கு சற்று முன் அது உதிப்பதை பார்க்கிறேன் என்று வைத்துகொள்வோம். எனில் இந்த வருடத்தில் இன்றுதான் அந்த நட்சத்திரம் முதல் முதலாக பஜ்ர் வேளையில் உதிக்கிறது. இதை நான் குறித்துக்கொள்வேன். நாளை அது 4 (3 நிமிடம் 56வினாடிகள்) நிமிடங்கள் முன்பாகவே உதித்து விடும். இவ்வாறு ஓவ்வொரு நாளும் முந்தைய நாளைவிட 4 நிமிடங்கள் முன்பாக உதிக்கும். அடுத்த ஆறு மாதத்தில் அந்த நட்சத்திரம் (ராசி அ மன்சில்) மக்ரிப் வேளையில் உதித்து ஃபஜ்ர் வேளையில் மறையும். அடுத்த மூன்று மாதங்கள் கடந்தால் நண்பகலில் உதித்து இஷாவுக்கு முன்னதாகத் தலைக்குமேல் காட்சியளித்து நள்ளிரவில் மறையும். அடுத்த இரண்டரை மாதங்களில் மக்ரிப் வேளையில் அதை மறைவதை மட்டுமே பார்க்க இயலும். பின்னர் சில வாரங்களுக்கு அந்த நட்சத்திரம் என் கண்ணிலேயே தென்படாது. மீண்டும் ஒரு நாள் அது ஃபஜ்ர் வேளையில் உதிக்க துவங்கும். இப்போது மிகச்சரியாகப் பூமி சூரியனை ஒரு சுற்று சுற்றி இருக்கும். அதாவது 365.2425 நாட்கள் கடந்திருக்கும். பூமி சூரியனை ஒரு சுற்று சுற்றி ஒரு ஆண்டை முடித்துக் கொண்டதை இவ்வாறுதான் அன்றைய அரபுகள் அறிந்துகொண்டனர். இது சூரிய மன்சில்கள் எனும் புரூஜ்களை கவனிப்பதை விட எளிதானது. சூரிய மன்சில்களைக் கவனிக்க நிழல் கடிகாரங்களைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் சந்திர மன்சில்களைக் கவனிக்க பார்வை மட்டுமே போதும்.
ஒரு நட்சத்திர உதயத்திலிருந்து மீண்டும் அதே நட்சத்திர உதயம் வரையுள்ள இந்தச் சுற்றை ஒரு நட்சத்திர ஆண்டு (Sidereal year) என்கிறோம். அதாவது ஒரு ராசி (நட்சத்திரம் அ மன்சில்) முதன் முதலாக ஃபஜ்ர் வேளையில் உதிக்க துவங்கி மீண்டும் அது ஃபஜ்ர் வேளையில் உதிக்கும்போது. பூமி சூரியனை ஒரு சுற்று சுற்றி முடித்திருக்கும். நட்சத்திர ஆண்டுக்கும் சூரிய ஆண்டுக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை. இரண்டிற்கும் வித்தியாசத்தை உணர நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டும்.
பல காலமாகச் சந்திர மன்சில்களைக் கவனித்துவந்த மனிதன் குறிப்பிட்ட சில மன்சில்கள் உதிப்பது காலநிலையை பிரதிபலிப்பதைக் கண்டான். இதில் ஆச்சரியம் ஏதுமில்லை. நட்சத்திர உதயம் சூரிய ஓட்டத்தைப் பிரதிபலித்ததால் அவை சூரிய காலண்டரைப் போல் காலநிலையைப் பிரதிபலித்தன. சுரையா (கார்த்திகை) எனும் ராசி உதிப்பது இளவேனிற்காலத்தை உணர்த்தியது. தபறான் (ரோகினி) எனும் ராசி உதிப்பது மழைக்காலத்தை காட்டியது எனும் தகவல்களை நம்மால் வரலாறுகளில் பார்க்க முடிகிறது.