Thursday 29 September 2016

நாசா அவர்களின் விண்ணியல் தேவைக்காகத்தான் அமாவாசையை கணக்கிட்டார்களா?


* நாசா என்ன செய்கிறது?
நாசா, இது அமெரிக்காவின் வான்வெளி மற்றும் விண்வெளித்துறை ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளும் நிறுவனம். வான் மற்றும் விண்வெளி துறைகளில் அரசுக்கு அறிவியல் ஆலோசனைகளை வழங்குவதும் இந்நிறுவனமே. இத்துடன் இவர்களின் பணியை நிறுதிக்கொள்ளலாமல் கல்வியித்துறையிலும் இன்னபிற மக்களுக்கு பயன்படும் துறைகளிலும் ஈடுபடுகிறார்கள். இவர்களின் இணையதளத்திலேயே குழந்தைகளுக்கான விண்ணியல் தகவல்களை கொடுத்துள்ளனர். குழந்தைகளுக்கும் விண்ணியல் அறிவை புகட்டுவதற்காக இதை செய்கின்றனர். இவர்கள் தங்களின் கண்டுபிடிப்புகளை அல்லது அவற்றின் பார்முலாக்களை வெளியிடுவதில்லை. நாசா மட்டுமல்ல பாதுகாப்பு கருதி எந்த விண்வெளி ஆய்வு நிறுவனமும் தங்களது பார்முலாக்களை ரகசியமாகவே வைத்திருப்பார்கள்.
* நாசா எதற்காக அமாவாசையை கணக்கிடுகிறார்கள்
நாசா ஜோதிட கம்பனியோ, கம்பியூட்டர் சிவகாமியோ அல்ல. அவர்களுக்கு அமாவாசையை கணக்கிட எந்த தேவையும் இல்லை. பவுர்ணமியில் ராக்கட் விட்டால் வெளிச்சமாக இருக்கும் என்றோ, வளர்பிறையில் ராக்கட் அனுப்பினால் அது ராக்காட்டின் ஆயுளை அதிகரிக்கும் என்றோ நாசா நம்பவில்லை. நாசாவிற்கு அமாவாசையையோ, பவுர்ணமியையோ, வளர் பிறையையோ தேய்பிறையையோ கணக்கிட எந்த தேவையுமில்லை. அவர்கள் அவற்றை கணக்கிடவுமில்லை.
* பின்னர் ஏன் நாசா தங்கள் இணையதளத்தில் அமாவாசை தேதிகளை வெளியிட்டுள்ளனர்?
Mr. Eclipse என்று மக்களால் அறியப்பட்ட Fred Espinak எனும் வானியல் ஆய்வாளர், இவர் சிறுவயதிலிருந்து கிரகணங்களை பார்ப்பதிலும் ஆராய்வதிலும் ஆர்வம் கொண்டவர். பிற்காலத்தில் வானியற்பியல் வல்லுநர் ஆனார். நாசாவில் பணியிலமர்த்தப்பட்டார். இவர் நாசாவில் பணிபுரியும்போது கிரகணங்களை கணித்து வெளியிட்டார். நாசாவின் கிரகணங்களுக்கான இணையதளத்தை நடத்தும் பொறுப்பு இவரிடம் இருந்ததால் இவரே அதை வெளியிட்டார். மேலும் நாசாவுக்கும் அமாவாசைக் கணிப்பிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற அடிக்குறிப்புடன் அவற்றை வெளியிட்டார்.
All SKYCAL astronomical calculations are by Fred Espenak, and he assumes full responsibility for their accuracy
இந்த அடிக்குறிப்பு கிரகணம் மற்றும் அமாவாசைக் கணக்கில் இடம்பெறுகிறது. பார்க்க http://eclipse.gsfc.nasa.gov/SKYCAL/SKYCAL.html ஃபிரெட்டின் எந்த கணக்கிற்கும் நாசா பொறுப்பேற்கவில்லை. கிரகணத்தை கணக்கிடும் அதே அல்காரிதத்தில் சிறு மாற்றத்துடன் அமாவாசை மற்றும் பவுர்ணமிகளையும் கணிக்கலாம். செக்கில் எண்ணெய் ஆட்டும்போது பிண்ணாக்கும் வருவதுபோல கிரகணத்தை கணக்கிடும்போது கிடைத்த அமாவாசையும் பவுர்ணமியையும் அவர் வெளியிட்டார்.
* தனி மனிதனின் கணக்கே அமாவாசைக் கணக்கு
கிரகணத்தை கணிக்கும் அறிவை ஈசா நபிக்கு முன்பே மனிதன் பெற்றிருந்ததாக வரலாறு கூறுகிறது. கிரகணத்தைக் கணிப்பதைவிட எளிது அமாவாசையை கணிப்பது. அதையும் மூஸா நபிக்கும் முன்னர் வாழ்ந்த பாபிலோன் மக்கள் அறிந்திருந்தனர். பிற்காலத்தில் மனிதன் அதிக துல்லியத்துடன் அதை கணிக்கலானான். Fred Espinakஐப் போலவே வானியல் கணிதத்தில் வல்லவராக இருந்த ஒருவர்தான் Jean Meeus. தற்போது இருக்கும் கிரகண கணிப்பும் அமாவாசைக் கணிப்பையும் இவர்கள் இருவரும் சேர்ந்தே உருவாக்கினர்.
இந்த இரண்டு தனி நபர்களின் கணக்குதான் அமாவாசைக் கணக்கு. அதற்கும் நாசாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை.
* இந்த கணக்கைத்தானே நாசா தனது ஆய்வுகளுக்கு பயன்படுத்துகிறது.
இல்லை!. ஃப்ரெட் & மீயஸ் வெளியிட்ட சந்திரக்கணக்கை நாசா பயன்படுத்தி ராக்கட் ஏவுவதில்லை. இரண்டு காரணங்களுடன் இதை நாம் அறுதியிட்டுக் கூறுகிறோம்.
1. மீயசின் அல்காரிதத்தில் உருவாக்கப்பட்ட அமாவாசைக் கணக்கின் துல்லியத்தை அவரே தனது புத்தகத்தில் விவரித்துள்ளார். அந்த துல்லியம் ராக்கட் விடுவதற்கோ செயற்கைக்கோளை வடிவமைப்பதற்கோ போதாத ஒன்று
2. இவர்கள் வெளியிட்ட அமாவாசைக் கணக்கு புவிமையத்தை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்பட்டது. அதை வைத்து ராக்கட் விடவோ சந்திரனுக்கு செயற்கைக்கோள் வடிவமைக்கவோ இயலாது. உதாரணமாக ஒரு ஏவுகணையை இந்திய அரசு தயாரித்துள்ளதாக வைத்துக்கொள்ளுங்கள் அது பாகிஸ்தானை தாக்குவதற்காக ப்ரோக்ராம் செய்யப்பட்டுள்ளது. அந்த ப்ரோக்ராம் டெல்லியிலிருந்து பாகிஸ்தானை தாக்குவதாக வடிவமைக்கப்பட்டு ஏவுகணைக்குள் உள்ளீடு செய்யப்பட்டுள்ள்ளது. இப்போது அந்த ஏவுகணையை சென்னைக்கு கொண்டுவந்து ஏவினால் அது பாகிஸ்தானை தாக்குமா? நிச்சயமாக பாகிஸ்தானை தாக்காது. இந்தியாவின் ஒரு பகுதியையே தாக்கும். அதே போலத்தான் புவிமைய கணக்கீடும். அது பூமியின் மையப்பகுதியில் இருக்கும் நெருப்புக்குழம்புக்கு இடப்பட்ட கணக்கு. அதைவைத்து பூமியில் மேற்பரப்பில் இருந்து எந்த பணியும் செய்ய இயலாது.
(ஏவுகணை உதாரணம், ஒரு உதாரணம் மட்டுமே. எங்கிருந்து ஏவினாலும் குறித்த இலக்கை அடையும் ஏவுகணைகள் உள்ளன)
* எதற்கும் உதவாத கணக்கை ஃப்ரெட் & மீயஸ் ஏன் வெளியிட்டனர்.
நாம் பள்ளிக்கூடத்தில் பல கணக்குகளை படித்திருப்போம். பிற்காலத்தில் கல்லூரியில் படிக்கும்போது அக்கணக்குகள் நமக்கு தேவைப்படாது. அல்லது அக்கணக்குகளை நாம் எளிமையாக கால்குலேட்டரில் இட்டுவிடுவோம். அதே போலதான் இதுவும். குழந்தைகளுக்கு வானியல் அறிவைப் புகட்ட சில பக்கங்களை நாசா தனது இணையத்தில் வைத்திருப்பதைப் போல வானில் என்றும் அற்புதமாக காட்சியளிக்கும் நிலவின் கணக்கை அடிப்படைக் கல்விக்காக அவர்கள் வெளியிட்டிருக்கலாம்.
அநேக மதங்கள் மற்றும் மதப் பிரிவுகளுக்கு பவுர்ணமி மற்றும் அமாவாசை தேதிகள் தேவைப்படுகின்றன அவர்கள் பயன்படுத்திக்கொள்ளட்டும் எனும் எண்ணத்துடனும் அவர்கள் வெளியிட்டிருக்கலாம்.
இவற்றை வெளியிட்ட ஃப்ரெட் - மீயஸ் கூட்டணிக்கு நன்றாகவே தெரியும் அமாவாசைக் கணக்கு ஏட்டுச் சுரைக்காய் என்று. கிரகணத்தைக் கணிப்பதற்குக்கூட புவி மையக்கணக்கு (geocentric) பயன்படாது. கிரகணத்தை கணிக்க Topocentric என்றறியப்படும் புவிப்பரப்பு கணக்கே பயன்படுத்தப்படுகிறது. ஃப்ரெட் வெளியிட்ட புவிமைய அமாவாசை கணிப்பு ஏட்டுசுரைக்காய். ஜோதிடத்திற்கும் மற்ற மதங்களின் பண்டிகளிகளுக்கும் பயன்படுத்தலாம்.
* நாசாவின் கணக்கை சரிபார்க்கும் அறிவைப் பெற்றவர்களிடம் அதைவிட துல்லியமான கணக்கிருக்கவேண்டுமே. அந்தக் கணக்கை பயன்படுத்தாமல் நாஸாவை கண்மூடி பின்பற்றுவதேன்.
நாசாவின் கணக்கு சரிதானா என்று அறிந்துகொள்ளும் வல்லுனர்கள் எங்களிடம் உள்ளனர் என்று கூறி தமிழ்நாட்டு மக்களை முட்டாளாக்கி வருகிறது ஹிஜ்ரா கமிட்டி. அவர்களிடம் எந்த கணக்கும் இல்லை, எந்த கணக்கையும் சரிபார்க்கும் வல்லுனர்களும் அவர்களிடம் இல்லை. வானியல் கணக்கிற்கு அடிப்படையாகவும் இன்றியமையாத ஒன்றாகவும் இருப்பது Spherical trignometry என்றழைக்கப்படும் கோணமுக்கோணவியல் ஆகும். இந்த கோணமுக்கோணவியலின் பால்வாடி கணக்காக இருப்பது ஒரு உருண்டையில் திசைக்கோணத்தை கணக்கிடும் கணக்காகும். இந்த கணக்குதான் கிப்லாவையும் காட்டுகிறது. இந்த கணக்கை கூட தெரியாத கூட்டம்தான் இவர்கள். இந்தக் கூட்டம் முஸ்லிம் மக்களை லண்டனை பார்த்துத் தொழச் சொல்கிறது. பார்க்க. ஹிஜ்றாவினர் முன்னோக்கும் தீர்க்க ரேகை  |   எது சரியான கிப்லா?  |  கிப்லா மாற்றம் யூத சதியா?
இவர்களிடம் எந்த கணக்கும் இல்லை, எதையும் சரிபார்க்கும் அறிவும் இல்லை என்பதை நாம் எவ்வாறு அறுதியிட்டு சொல்கிறோம்?
ஒரு விஷயம் சரியானதா என்று சொல்லவேண்டும் எனில் அதை சரிபார்க்கும் காரணி அதைவிட சரியானதாக இருக்கவேண்டும். பரிட்சைத்தாளை திருத்தும் ஆசிரியர் அந்த பாடத்துறையில் தேர்ச்சி பெற்றவராக இருக்கவேண்டும். புத்தகத்தைப் பார்க்காமல் பரிட்சைதாளை அவர் திருத்தவேண்டும். கடைகளில் எடை பார்க்கும் தராசு-எடைக்கல் போன்றவற்றை அதற்குரிய அரசு துறைகளில் கொண்டுசென்று சரியான எடையில் இருக்கிறதா என்று சான்று பெற்ற பின்னரே பயன்படுத்த இயலும். அந்த அரசுத்துறைகளில் எடைக்கல்லை சரிபார்க்க உதவும் கருவிகள் எடைக்கல்லை விட துல்லியம் வாய்ந்ததாக இருக்கும். உதா. என்னிடம் ஒரு எடை நோக்கும் கருவி உள்ளது. அந்த கருவியில் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் பிழை இருப்பதாக வைத்துக்கொள்வோம். அதாவது என்னிடம் இருக்கும் கருவி ஒரு கிலோ எடையைக் காட்டினால் உண்மையில் அந்த பொருள் 999கிராம் எடையுள்ளதாக இருக்கும் அல்லது 1001கிராம் எடையுள்ளதாக இருக்கும். ஆனால் என்னுடைய எந்திரத்தை சரிபார்க்க உதவும் கருவி இதை விட பிழை குறைந்ததாக அதிக துல்லியம் கொண்டதாக இருக்கும். அவ்வாறு இருந்தால்தான் அதனால் என்னுடைய எந்திரத்தை சரிபார்க்க இயலும்.
ஃபிரெட்டின் கணக்கை சரிபார்க்கும் அறிவு தங்களிடம் இருப்பதாக சொல்லும் ஹிஜ்ரா கமிட்டியினரிடம் உண்மையாகவே அத்தகைய அறிவிருந்தால் அவர்களுக்கு ஃபிரெட்டின் கணக்கு தேவையே இல்லையே. வெண்ணை இருக்கும்போது நெய் எதற்கு? 25 கிராம் நகையை எடைபார்க்க நகைக்கடைக்காரர் பலசரக்கு கடைக்கு செல்லமாட்டார். அதைவிட அதிக துல்லியம் வாய்ந்த தனது கடையில் இருக்கும் தராசிலேயே அதை எடைபோடுவார்.
ஃபிரெட்டின் கணக்கை சரிபார்க்கும் அறிவு தங்களிடம் இருப்பதாக சொல்லும் ஹிஜ்ரா கமிட்டியினர் சொல்வது பொய். அவ்வளவு அறிவிருப்பவர்கள் ஃபிரெட்டின் கணக்கை எடுக்க மாட்டார்கள். தாங்களாகவே கணக்கிடுவார்கள்.
* நாசா முஸ்லிம்களுக்காகவா அமாவாசைக் கணக்கை வெளியிடுகிறது?
நாசாவிற்கு அமாவாசைக் கணக்கின் தேவையேயில்லை என்பதை தெரிந்துகொண்டோம். எண்ணெய் ஆட்டும் செக்கில் பிண்ணாக்கு வருவதைப் போல கிரகணங்களை கணிக்க உதவிடும் கணக்கில் அமாவாசையும் வந்தது. அதை தேவையுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளட்டும் என்ற நோக்கோடு ஃப்ரெட்டும் மீயசும் வெளியிட்டனர்.
ஃப்ரெட் மட்டுமே உலகில் அமாவாசையை துல்லியமாக கணிப்பதாக ஹிஜ்ராக் கமிட்டி எண்ணிவருகிறது. ஃப்ரெட்டைப் போல பலரும் அமாவாசையைக் கணிக்கிறார்கள். குறிப்பாக USNO (அமெரிக்க கடற்படை) மற்றும் UKHO (இங்கிலாந்து கடற்துறை) போன்ற வானியல் ஆய்வகங்கள் அமாவாசையையும் பவுர்ணமியையும் கணிக்கின்றன. இந்திய வானியல் ஆய்வகமும் அமாவாசை நேரங்களை கணித்து வெளியிடுகிறது. இவர்கள் கிருத்தவர்களுக்கும் யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் உதவட்டும் எனும் நோக்குடனேயே கணிப்பை வெளியிடுகின்றன. பார்க்க http://aa.usno.navy.mil/faq/docs/crescent.php , http://aa.usno.navy.mil/data/docs/api.php#islamiccal , http://astro.ukho.gov.uk/nao/miscellanea/ramadan_2016/ , http://www.packolkata.gov.in/phasemoon.php
நாசா முஸ்லிம்களுக்காக வெளியிடவில்லை, அவர்கள் தேவைக்காக கணக்கிட்டதை நாம் பயன்படுத்துகிறோம் என்று ஹிஜ்ராக் கமிட்டி சொல்வது பொய். அமாவாசைக் கணக்கு எந்த வானியல் ஆய்வகத்திற்கும் தேவை இல்லை. தேவையுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவே அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
USNO, HM Nautical Almanac Office போன்ற நிறுவனங்கள் முஸ்லிம்களுக்காகவே சந்திரக்கணக்கை வெளியிடுகின்றன.
* அமாவாசையை கணக்கிட பல அல்காரிதம்கள் உள்ளன. நாசாவை தூக்கிப்பிடிப்பதேன்?
ஹிஜ்ரா கமிட்டியிடம் ஃபிரெட்டின் கணக்கை சரிபார்க்கும் கணக்கு எதுவுமில்லை என்பதை ஏற்கனவே தெரிந்துகொண்டோம். ஃப்ரெட் மட்டுமே துல்லியமாக அமாவாசையைக் கணக்கிடுவதாக இவர்கள் நம்பி பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் இந்த அல்காரிதம் பல விண்வெளி ஆய்வாளர்களிடமும் ஆய்வரங்கங்களிடமும் உள்ளது. ஆனால் ஒவ்வொன்றும் மிகுந்த வித்தியாசத்துடன் இருக்கும். நாசாதான் வானியலின் ஜாம்பவான் என்று ஹிஜ்ரா கமிட்டி நம்புகிறது. நாசா சொல்வதுதான் சரியாக இருக்கும் என்றும் நம்புகிறார்கள். ஆனால் நாசாவுக்கெல்லாம் முன்னோடியாக இருந்த அதற்கு முன்பே சந்திரனுக்கு செயற்கைக் கோள்களை விட்ட ரஷ்ய ஆய்வு மையம் Roscosmos நாசாவை விட வானியலில் உயர்ந்து நிற்கிறது. அவர்களிடம் ஃபிரெட்டை விட துல்லியமான வழிமுறைகள் இருக்கும். ஜப்பானின் JAXA விடம் அவர்களின் வழிமுறைகளில் வேறு கணக்குகள் இருக்கும். ஏன்! இந்தியாவின் இஸ்ரோவிடமும் அவர்களுக்கு சொந்தமான வழிமுறைகள் இருக்கும். இவை எல்லாமே நிச்சயமாக ஃபிரெட்டின் கணக்கை விட துல்லியம் வாய்ந்ததாக இருக்கும்.
இவர்கள் நாசாவின் (ஃபிரெட்டின்) கணக்குதான் துல்லியமானது என்று கூவவதன் உண்மை நிலையைப் பார்ப்போம்.
All calculations presented here are by Fred Espenak, and he assumes full responsibility for their accuracy. The computer software for predicting the phases of the Moon and eclipses is written in THINK Pascal and run on a PowerMac G4. It is based on procedures described in Astronomical Algorithms by Jean Meeus (Willmann-Bell, Inc., Richmond, 1998).
ஃப்ரெட் தான் எவ்வாறு அமாவாசை நேரங்களை கணக்கிட்டேன் என்பதை தனது இணையதளத்தில் இங்ஙனம் தெரிவித்துள்ளார். ஜீன் மீயஸ் தனது  Astronomical Algorithms எனும் புத்தகத்தில் கூறியுள்ள வழிமுறைகளைப் பின்பற்றியே அமாவாசைகளை கணக்கிட்டதாக ஃப்ரெட் கூறுகிறார். ஜீன் மீயஸ் தனது வழிமுறைகளின் துல்லியதைப்பற்றி அதே Astronomical Algorithms (1998) புத்தகத்தில் Phases of Moon எனும் தலைப்பில் (349ம் பக்கத்தில்) இவ்வாறு தெரிவித்துள்ளார்.
However, if no high accuracy is required, the instants of the lunar phases can be calculated by the method described in this Chapter.
அதிக துல்லியம் தேவைப்படாதவர்கள் இந்த சந்திரக்கலைக் கணக்கை பயன்படுத்துங்கள் என்கிறார். அதாவது அவரின் இந்த வழிமுறை அதிக துல்லியம் வாய்ந்ததில்லை என்கிறார். ஹிஜ்ரா கமிட்டி பின்பற்றும் அமாவாசை நேரத்தை கணித்த ஃப்ரெட்டும் அதன் பார்முலாவை வடிவமைத்த மீயசும் அந்த வழிமுறைதான் துல்லியமானது என்று கூறவில்லை. மாறாக அதன் துல்லியக்குறைவை அவர்களே குரிப்பிட்டுள்ளனர்.
மேலும், மீயஸ் 1998 ல் வெளியிட்ட பார்முலாவை வைத்துதான் ஃப்ரெட் அமாவாசை நேரங்களை வெளியிட்டார். (இதை அவர் தனது தளத்தில் கூறியுள்ளதை மேலே தந்துள்ளோம்). ஆனால் மீயசின் 1998 பார்முலா காலாவதியாவிட்டதாம். 2002ம் ஆண்டில் அதிக துல்லியம் வாய்ந்த பார்முலாவை மீயஸ் உருவாக்கி அதை கிரகணக் கணக்கிற்கு மட்டுமே பயன்படுத்தியுள்ளார். செக்கில் எண்ணெய் ஆட்டும்போது பிண்ணாக்கின் தரத்தைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. எண்ணெய்தான் முக்கியம்
Astronomical Algorithms (1998) புத்தகத்தில் Phases of Moon எனும் தலைப்பில் (349ம் பக்கத்தில்) தான் 1988 ஆம் வருடம் வெளிவந்த ELP தியரியை பயன்படுத்தியே அமாவாசை பார்முலா உருவாக்கியதாக. விவரித்துள்ளார். பார்க்க
The expressions are based on Chapront's ELP-2000/82 theory for the Moon

பின்னர் 2002ம் ஆண்டு பார்முலாவை பயன்படுத்தி கிரகண கணக்கை உருவாக்கியதாக நாசா இணையதளத்தில் மீயஸ் கூறியிருப்பதைப் காண்க.

Improved expressions for the mean arguments L', D, M, M' and F have been taken from Chapront, Chapront-Touze, and Francou [2002].
14 ஆண்டுகள் பழமையான பார்முலாதான் அமாவாசை பார்முலா. மிகவும் பழைய பார்முலாவை பயன்படுத்தி மீயஸ் உருவாக்கிய அமாவாசை தேதிகளைதான் ஹிஜ்ரா கமிட்டி பயன்படுத்துகிறது.
இனி ஃப்ரெட் – மீயஸ் கூட்டணியின் அமாவாசைக் கணிப்பின் துல்லியத்தை நாமே அலசுவோம்.
கீழே இருப்பது ஃப்ரெட் கணக்கிட்ட அமாவாசை நேரங்கள். இதில் மஞ்சள் நிறத்தில் அடையாளப்படுத்தப்பட்ட அமாவாசை நேரத்தை கவனியுங்கள். இவற்றை நாம் இதைவிட துல்லியமான அமாவாசை நேரத்துடன் ஒப்பிடப்போகிறோம்.
NASA - SKYCAL - Sky Events Calendar
Year        New Moon       First Quarter       Full Moon       Last Quarter
2016                                                           Jan  2  05:30    
         Jan 10  01:30     Jan 16  23:26     Jan 24  01:46     Feb  1  03:28    
         Feb  8  14:39     Feb 15  07:46     Feb 22  18:20     Mar  1  23:11    
         Mar  9  01:54 T   Mar 15  17:03     Mar 23  12:01 n   Mar 31  15:17    
         Apr  7  11:24     Apr 14  03:59     Apr 22  05:24     Apr 30  03:29    
         May  6  19:30     May 13  17:02     May 21  21:15     May 29  12:12    
         Jun  5  03:00     Jun 12  08:10     Jun 20  11:02     Jun 27  18:19    
         Jul  4  11:01     Jul 12  00:52     Jul 19  22:57     Jul 26  23:00    
         Aug  2  20:45     Aug 10  18:21     Aug 18  09:27     Aug 25  03:41    
         Sep  1  09:03 A   Sep  9  11:49     Sep 16  19:05 n   Sep 23  09:56    
         Oct  1  00:12     Oct  9  04:33     Oct 16  04:23     Oct 22  19:14    
         Oct 30  17:38     Nov  7  19:51     Nov 14  13:52     Nov 21  08:33    
         Nov 29  12:18     Dec  7  09:03     Dec 14  00:06     Dec 21  01:56    
         Dec 29  06:53                                                          
All calculations presented here are by Fred Espenak, and he assumes full responsibility for their accuracy. The computer software for predicting the phases of the Moon and eclipses is written in THINK Pascal and run on a PowerMac G4. It is based on procedures described in Astronomical Algorithms by Jean Meeus (Willmann-Bell, Inc., Richmond, 1998).
*******************************************************************
கீழே வருவது உலகில் மிகத் துல்லியமான அல்மனாக்குகளை வெளியிடும் அமெரிக்க கடற்படை வெளியிட்ட அமாவாசை நேரங்கள்.
Phases of the Moon
U.S. Naval Observatory
Astronomical Applications Department
Date and Time (Universal Time)
New Moon            First Quarter       Full Moon           Last Quarter
---                 ---                 ---                 2016 Jan 02 05:30
2016 Jan 10 01:30   2016 Jan 16 23:26   2016 Jan 24 01:46   2016 Feb 01 03:28
2016 Feb 08 14:39   2016 Feb 15 07:46   2016 Feb 22 18:20   2016 Mar 01 23:11
2016 Mar 09 01:54   2016 Mar 15 17:03   2016 Mar 23 12:01   2016 Mar 31 15:17
2016 Apr 07 11:24   2016 Apr 14 03:59   2016 Apr 22 05:24   2016 Apr 30 03:29
2016 May 06 19:29   2016 May 13 17:02   2016 May 21 21:14   2016 May 29 12:12
2016 Jun 05 03:00   2016 Jun 12 08:10   2016 Jun 20 11:02   2016 Jun 27 18:19
2016 Jul 04 11:01   2016 Jul 12 00:52   2016 Jul 19 22:56   2016 Jul 26 23:00
2016 Aug 02 20:44   2016 Aug 10 18:21   2016 Aug 18 09:26   2016 Aug 25 03:41
2016 Sep 01 09:03   2016 Sep 09 11:49   2016 Sep 16 19:05   2016 Sep 23 09:56
2016 Oct 01 00:11   2016 Oct 09 04:33   2016 Oct 16 04:23   2016 Oct 22 19:14
2016 Oct 30 17:38   2016 Nov 07 19:51   2016 Nov 14 13:52   2016 Nov 21 08:33
2016 Nov 29 12:18   2016 Dec 07 09:03   2016 Dec 14 00:05   2016 Dec 21 01:56
2016 Dec 29 06:53   ---                 ---                 ---
நாம் மஞ்சள் நிறத்தில் அடையாளப்படுத்திய மாதங்களில் அமாவாசை நேரங்களை பாருங்கள். ஃபிரெட்டின் கணக்கிற்கும் USNOவின் கணக்கிற்கும் ஒரு நிமிட வித்தியாசம் வருகிறது. ஒரு நிமிட வித்தியாசம்தானே என்று நீங்கள் கேட்கலாம். இந்த வித்தியாசத்தால் எமக்கேதும் பாதிப்பில்லை. எங்கள் காலண்டர் பிழைகளுக்கு அப்பாற்பட்ட துல்லியமான காலண்டர் என்று கூவும் ஹிஜ்ரா கமிட்டி இதைச் சிந்திக்கவேண்டும். நாசா என்றவுடன் கண்ணை மூடிக்கொண்டு அதுதான் உலகிலேயே துல்லியமான கணக்கென்று ஸஜ்தாவில் விழுந்தவர்கள் சிந்திக்கவேண்டும். Fred கணக்கிட்ட அமாவாசை நேரம் நள்ளிரவு 12 மணிக்கு அமைந்து உண்மையான அமாவாசை இரவு 11:59க்கு நிகழ்ந்தால் இவர்கள் காலண்டரில் ஒரு நாள் வித்தியாசம் வந்துவிடுமே. இதை ஹிஜ்ராவினர் சிந்திக்கவேண்டும்.
இவர்கள் உண்மையாக ஆய்வாளர்களாக இருந்தால் உலகிலேயே உன்னதமான அமாவாசைக் கணக்கை எடுத்து காலண்டரை வடிவமைத்திருப்பார்கள். குறைந்த பட்சம் மீயஸின் புத்தகத்தில் இருக்கும் அல்காரிதத்தையாவது பயன்படுத்தியிருப்பார்கள். ஆனால் இவர்களோ நாசா என்ற பெயரில் ஃபிரெட்டின் கணக்கை கண்மூடி வழிபடுகின்றனர். இவர்கள் வெளியிட்ட எக்ஸல் சாப்டவேரை உடைத்துப் பார்த்தோம் (பார்க்க -  மூன் காலண்டரின் அடிப்படை கிரிகோரியன் காலண்டரே) அதில் ஃப்ரெட் வெளியிட்ட அமாவாசை தேதியை அப்படியே ஒட்டிவைத்துள்ளனர். இவர்களின் ஆண்டிராயிடு அமாவாசை சாப்டவேரை உடைத்துப் பார்த்தோம் அதிலும் ஃபிரெட்டின் தேதிகளே உள்ளன. இவர்களிடம் எந்த கணக்கும் இல்லை. நாசாவின் கணக்கை சரிபார்க்கும் எந்த அறிவாளியும் இவர்களிடம் இல்லை. ஃப்ரெட் வெளியிட்ட அமாவாசை தேதிகளை கண்மூடி வழிபடுகின்றனர்.
இவர்களின் எக்சல் சாப்ட்வேரை வடிவமைத்தவரையும் ஆண்டிராய்டு சாப்ட்வேரை வடிவமைத்தவர்களையும் சிறந்த சாப்ட்வேர் எஞ்சினியர்களாக இவர்கள் புகழ்கின்றனர். தனது புரோக்ராம்களை குறைந்த வரிகள் கொண்ட கோடிங்-களில் முடிப்பவரே சிறந்த சாப்ட்வேர் எஞ்சினியர். வெறும் 130வரிகள் மட்டுமே கொண்ட ஃபிரெட்டின் கணக்கை பயன்படுத்தத் தெரியாமல் அவர்கள் வெளியிட்ட தேதிகளை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து டேட்டா பேஸ் பைலாக மாற்றி 37,000க்கும் அதிகமான வரிகளைக் கொண்டு சாப்ட்வேர் உருவாக்கிய இவர்களா வல்லுனர்கள். VB ஸ்க்ரிப்டில் Excel இல் செய்ய இயலாதவர்கள் JAVA ஸ்க்ரிப்டில் Android softwareஇல் தங்களது பார்முலாவை பயன்படுத்தியிருப்பார்கள் என்று ஆவலுடன் பார்த்த நமக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அங்கும் 200வருட தேதிகளை 6000க்கும் மேற்ப்பட்ட லைன்களில் அப்படியே காப்பி பேஸ்ட் செய்து சாப்ட்வேர் உருவாக்கியுள்ளனர். இவர்கள்தான் சாப்ட்வேர் வல்லுனர்கள்.
* மாற்று மதத்தவர்கள் கண்டுபிடிப்புகளை பயன்படுத்தும்போது சந்தோசம் ஏற்படும் உங்களுக்கு ஃபிரெட்டின் அமாவாசை நேரத்தை பயன்படுத்தும்போது ஏன் கசக்கிறது.
உண்மைதான்! பிற மதத்தவர் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகளை நாம் பயன்படுத்துகிறோம். செல்போனை பயன் படுத்துகிறோம், ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்றவற்றை பயன்படுத்துகிறோம். இவையெல்லாம் உலக விஷயங்கள் என்றால் கூட பள்ளிகளில் பாங்கு சொல்ல ஆம்ப்ளிபையறை பயன்படுத்துகிறோம், ஸ்பீக்கரை பயன்படுத்துகிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக நாசா உருவாக்கித்தந்த தொழுகை நேரங்களை பயன்படுத்துகிறோம். ஆனால் அமாவாசை நேரத்தை மட்டும் பயன்படுத்த மறுக்கிறோம்.
ஹிஜ்ரா கமிட்டியினர் இந்த வாதத்தை பல வருடங்களாக சொல்லி வருகின்றனர். இந்த கேள்வி இவர்களை பின்பற்றும் பாமர மக்களுக்கும் சந்தோஷத்தை ஏற்படுத்திவிடுகிறது. நம்முடைய எல்லா செயல்களையும் இபாதத் – உலக விஷயம் என்று இரண்டாக பிரிக்கலாம். இபாதத் என்பவற்றை நபி ஸல் காட்டித்தந்தபடியே செய்யவேண்டும். எந்த மாற்றமும் செய்யக்கூடாது. உலக விஷயங்களைப் பொறுத்தவரை மார்க்க வரம்புகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்பட்ட எல்லாவற்றையும் செய்யலாம்.
செல்போன் என்பது நபிகளார் காலத்தில் இல்லாத ஓன்று இதைப் பயன்படுத்த மார்க்கத்தில் அனுமதி உள்ளதா அல்லது தடை உள்ளதா என்று ஆய்வு செய்யவேண்டும். செல்போன் என்பது ஒரு தகவல் தொடர்பு சாதனம். தகவல் தொடர்பு விஷயத்தில் மார்க்கத்தில் அனுமதியென்ன தடையென்ன என்று பார்த்தால் செல்போனை பயன்படுத்தலாமா என்று தெரிந்துவிடும். பின்னர் மாற்றுமதத்தவரின் கண்டுபிடிப்புகளை பயன்படுத்தலாமா என்று மார்க்கத்தில் ஆய்வு செய்தாலும் தடையேதும் இல்லை என்பதையும் அனுமதி உள்ளதையும் அறிந்துகொள்ளலாம். இதே நிலையில்தான் பிற மதத்தினரின் எத்தகைய தயாரிப்புகளுக்கும் மார்க்க தீர்ப்பு எடுக்கவேண்டும். அதுவே உலக விஷயம் எனில் தடையில்லாத எதையும் பயன்படுத்தலாம்.
மார்க்க விஷயங்களில், இபாதத்துகளில் எந்த மாற்றத்திற்கும் அனுமதியில்லை. பஜ்ருக்கு 2 ரகாத் என்றால் கியாமத் நாள் வரை 2 ரகாத் தான். தொழுகைக்கு முன் பாங்கு சொல்லவேண்டுமென்றால் கியாமத் நாள் வரை பாங்கு சொல்லவேண்டும். ருக்கு செய்வதையும் சஜ்தா செய்வதையும் விஞ்ஞானம் வளர்ந்ததால் மாற்ற இயலாது. பாங்கிற்கு ஒலிப்பெருக்கியைப் பயன்படுத்துவதால் நாம் மார்க்கத்தில் எதையும் சேர்த்திடவில்லை. கட்டிடத்திற்கு உள்ளே மட்டும் கேட்கும் ஒலியை கட்டிடத்திற்கு வெளியேயும் கேட்கச்செய்கிறோம். நான் ஏசி ரூமிலேயே இருப்பதால் உளு செய்யவேண்டியதில்லை என்று சொல்ல இயலாது. தொழுகைக்கு முன் உளு செய்தே ஆகவேண்டும். இபாதத் விஷயங்களில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது. ஆனால் நாசா வெளியிட்ட தொழுகை நேரக்கணக்கை மட்டும் நாம் ஏன் பயன்படுத்துகிறோம்? தொழகை நேரத்தை சூரியனையும் நிழலையும் வைத்துதானே நபிகளார் அறிந்தார்கள்? இது அறிவுப்பூர்வமான கேள்விதான். ஆனால் இது ஆத்திரத்தில் கேட்கப்பட்ட கேள்வி. இதற்கு விளக்கமான விடையை தனிக் கட்டுரையாக வெளியிட்டுள்ளோம் பார்க்க தொழுகை நேரங்களை மட்டும் கணக்கிடலாமா? . எனினும் சுருக்கமாக... தொழுகை நேரத்தை நபிகளார் கணக்கிட்டார்கள் என்று அல்லாஹ்வே குர்ஆன் 73:20ல் சொல்லிவிட்டான். மேலும் நிழல் ஒருநாளிலேயே மிகக் குறைந்த அளவு வருவது லுஹ்ர் நேரத்தை காட்டும் என்பதும், நிழல் ஒரு மடங்கு வருவது அசர் நேரத்தை காட்டும் என்பதையும் ஏதோ கற்கால மக்களின் பழக்கவழக்கத்தைப் போல ஹிஜ்ரா அறிஞர்கள் சித்தரிக்கின்றனர். நிழலை பார்த்து நேரம் அறியும் யுக்திக்குப் பெயர் நிழல்கடிகாரம். இது இன்றளவும் மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கு உயரிய விஞ்ஞானமாக இருக்கிறது. இதை ஆங்கிலத்தில் சன் டயல் sun dial என்றழைக்கின்றனர். Science of Sundial என்று இணையத்தில் தேடினால் நிழர்கடிகாரம் எத்தகைய அறிவியல் என்று தெரிந்துகொள்ளலாம். தொழுகை நேரங்கள் தொடர்பான எல்லா ஹதீஸ்களையும் ஆய்வு செய்தால் நபிகளார் தொழுகை நேரங்களை அன்றைய அறிவியலைப் பயன்படுத்திக் கணக்கிட்டுள்ளார்கள் என்பதை அறிந்துகொள்ளலாம். மேலும் நபிகளார் பயன்படுத்திய அறிவியலை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்று நபிகளார் கட்டளையிடவில்லை. வேறு அறிவியலைப் பயன்படுத்தி தொழுகை நேரங்களை கணக்கிட தடையும் விதிக்கவில்லை.
மேலும் தொழுகை நேரங்களை நாசா கணக்கிடவில்லை. அதன் பார்முலாவையும் நாசா உருவாக்கவில்லை. தொழுகை நேரக்கணக்குகளை முஸ்லிம் அறிவியலார்களே உருவாக்கினர். வரலாறு தெரியாத ஹிஜ்ராவினர் தொழுகை நேர கணக்கின் டேட்டாவை தந்தது யார்? என்று கேட்டு தங்கள் அறியாமையை வெளிப்படுத்துகின்றனர். மேலும் தொழுகை நேரக் கணக்கை ஒரே ஒருமுறை தயாரித்து அட்டவணையிட்டால் போதுமானது எல்லா வருடத்திற்கும் அதே அட்டவணையைப் பயன்படுத்தலாம். உதா- JUNE 2016 இன் தொழுகை நேரத்தையும் JUNE 2026இன் தொழுகை நேரத்தையும் பாருங்கள் எந்த வித்தியாசமும் இருக்காது. பார்க்க http://www.timeanddate.com/sun/india/nagercoil?month=6&year=2016   |  http://www.timeanddate.com/sun/india/nagercoil?month=6&year=2026
தொழுகை நேரங்களை நபிகளார் வானியலைக் கொண்டு கணக்கிட்டார்கள். ஆனால் அமாவாசைக் கணக்கீடு அக்காலத்தில் இருந்தும் அதைப் பயன்படுத்தாமல் நோன்பு எனும் இபாதத்தை ஆரம்பிக்க பிறையை பார்க்கவேண்டும் என்று நபிகளார் கட்டளையிட்டார்கள். ஹஜ் எனும் வணக்கத்திற்கு பிறையைப் பார்க்கவேண்டும் என்று நபிகளார் கட்டளையிட்டார்கள். அத்தோடு நிறுத்தாமல் பிறையைப் பார்க்காமல் நோன்பை துவங்காதீர்கள், பிறையைப் பார்க்காமல் பெருநாள் கொண்டாடாதீர்கள் என்று கட்டளையும் விதித்துவிட்டார்கள். இக்கட்டளையை மீறி அமாவாசையைப் பயன்படுத்துவதையே நாம் எதிர்க்கிறோம். தவிர அமாவாசையை பிற மதத்தவர் கணக்கிட்டதால் நாம் எதிர்க்கவில்லை.
எங்கள் காலண்டரில் இருக்கும் நாளில் அமாவாசையும் பவுர்ணமியும் குவாட்டர்களும் நடக்கின்றனவா இல்லையா. அதை நாம் கண்ணால் பார்த்தே ஃபிரெட்டின் கணக்கு சரிதான் என்பதை அறிந்துகொள்ளலாம் என்று ஹிஜ்ரா கமிட்டி சொல்கிறது. நாசாவின் போர்வையில் இவர்கள் வழிபடும் ஃப்ரெட் கணக்கின் துல்லியத்தை நாம் மேலே கொடுத்துள்ளோம். அதைவிட துல்லியமான USNO வின் கணக்கையும் கொடுத்துள்ளோம். இப்பொது ஒரு மாதத்தின் அமாவாசை 23:59 நடப்பதாக ஃப்ரெட் கணக்கு சொல்வதாக வைத்துக்கொள்வோம். அதே அமாவாசை 00:00 இல் நடப்பதாக USNO வின் கணக்கு சொல்வதாக இருந்தால் இந்த இரண்டில் எது சரி என்பதை ஹிஜ்ராவினர் எவ்வாறு சரி காண்பார்கள். தொழுகை நேரக்கணக்கை நம்மால் கண்ணால் பார்த்து சரிகாண இயலும். ஒரு குச்சியை நட்டுவைத்து நிழலைப் பார்த்தால் தொழுகை நேரக் கணக்கை சரிபார்க்கலாம். ஆனால் கண்ணால் பார்த்து 11 மணிக்கு அமாவாசை நடக்கிறதா 12 மணிக்கு நடக்கிறதா அல்லது 1மணிக்கு நடக்கிறதா என்று எவ்வாறு அறிந்துகொள்ள இயலும். தொழுகை நேரங்களை கண்ணால் பார்த்து சரி காண்பதுபோல அமாவாசை கணக்கை வானைப் பார்த்து சரி பார்க்க முடியாது. குறிப்பாக மேலே சொன்ன உதாரணத்தைப் போல 23:59க்கு நடக்கும் அமாவாசையில் ஒரு வினாடி பிழை ஏற்பட்டால் கூட 00:00ஆகி இவர்கள் காலண்டரில் ஒரு நாள் பிழை ஏற்பட்டுவிடும். எனில் இந்த துல்லியமான கணக்கை ஹிஜ்ராவினர் எவ்வாறு கண்ணால் பார்த்து சரிகாண இயலும்.
மேலும் இவர்கள் காலண்டரில் இருப்பதுபோல அமாவாசையோ குவாட்டர்களோ நடப்பதில்லை. இவர்கள் காலண்டரில் குவாட்டர் என்று இருக்கும் நாளில் பிறை சரியாக பாதியாக தெரியவேண்டும். ஆனால் நாம் பார்க்கும்போது அது தேய்ந்து கொம்புகளுடனோ அல்லது வளர்ந்து கர்ப்பிணி போலோ காட்சியளிக்கிறது. இவர்கள் காலண்டரில் உள்ள நாளுக்கு ஒரு நாள் முன்பின்னாக அரைப்பிறைகள் காட்சியளிக்கின்றன. இதற்கு காரணம் ஃப்ரெட் அல்ல. (1) உலக நேரத்தில் இருக்கும் ஃபிரெட்டின் அமாவாசை நேரங்களை உள்ளூர் நேரத்திற்கு மாற்றமாட்டோம் என்று ஹிஜ்ராவினர் அடம்பிடிப்பதாலும் (2) பூமியின் மையப்பகுதியை அடிப்படையாக வைத்து கணக்கிடப்பட்ட நேரத்தில் பூமியின் மேற்பரப்பில் இருப்பவர்களை பார்க்க சொல்வதாலும் ஏற்படும் பிழைகள். இவர்களின் காலண்டரின் கடவுள் ஃப்ரெட்டே அமாவாசை நேரங்களை 5 அமெரிக்க உள்ளூர் நேரங்களில் வெளியிட்டுள்ளபோது (பார்க்க http://astropixels.com/ephemeris/moon/phases2001pst.html) இந்த ஹிஜ்ராவினர் உலக நேரத்தை உள்ளூர் நேரமாக மாற்றுவது இணைவைப்பிற்கு இணையான பாவமென பரப்புரை செய்கின்றனர். லண்டனலில் மாலை 6 மணிக்கு நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கட் விளையாட்டைக் காண இந்த ஹிஜ்ராவினர் இந்தியாவிலும் மாலை 6 மணிக்கு டிவியின் முன்பாக உக்கார்ந்திருப்பார்கள். உலக அளவில் நடக்கும் நிகழ்வுகளை லோக்கல் நேரத்தில் மாற்றக்கூடாது என்பதுதானே இவர்களின் கொள்கை.
ஏற்கனவே சொன்னதுபோல பூமியின் மையத்தை அடிப்படையாக வைத்து கணக்கிடப்பட்ட எல்லாமே ஏட்டுச்சுரைக்காய். பூமியின் மையத்திற்கு அமாவாசை ஏற்படும் அதே நேரத்தில் பூமியின் மேற்பரப்பில் இருப்பவர்களுக்கு அமாவாசை ஏற்படாது. பூமியின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு நேரத்தில் அமாவாசை ஏற்படும். இதை எளிமையாக விளங்கிட கிரகணங்கள் உதவும். சூரிய கிரகணமானது அமாவாசை நடக்கும் அதே நேரத்தில்தான் நிகழும். அதாவது சூரிய கிரகணம் நடக்கும் வேளையில் நம்மால் அமாவாசையை கண்ணால் பார்க்க இயலும். கடந்த செப் 1, 2016 சூரிய கிரகண அமாவாசையை Gabon மக்களும் பார்த்தார்கள் Madagascar மக்களும் பார்த்தார்கள். ஆனால் கேபன் மக்கள் கிரகண அமாவாசையை பார்த்தபோது மடகாஸ்கர் மக்கள் பார்க்கவில்லை அங்கே அப்போது சூரியன் சுட்டெரித்தது. சில மணி நேரங்களுக்குப் பின் மடகாஸ்கர் மக்கள் கிரகண அமாவாசையை பார்த்தார்கள் அப்போது கேபன் நாட்டில் கிரகணம் இல்லை, அமாவாசையும் இல்லை, சூரியன் சுட்டெரித்தது. அமாவாசை என்பது உலகம் முழுமைக்கும் ஒரே நேரத்தில் நடப்பதல்ல. உலக நேரத்தை லோக்கல் நேரத்திற்கு மாற்றாமலும், பூமியின் மையத்தில் இருக்கும் நரக நெருப்புக்கு இடப்பட்ட கணக்கை மேற்பரப்பில் இருக்கும் மனிதனுக்கு திணித்ததாலும் இவர்கள் காலண்டரில் கொடுக்கப்பட்டிருக்கும் நாளில் பிறைகள் அதே வடிவத்தில் தெரிவதில்லை. இவர்களிடம் கணக்கும் இல்லை, ஃபிரெட்டின் கணக்கை சரிபார்க்கும் அறிவும் இல்லை, அந்தக் கணக்கை கண்ணால் பார்த்தும் சரிகாண இயலாது.
தொகுப்புரை:
> அமாவாசையைக் கணக்கிட நாசாவுக்கு எந்த தேவையும் இல்லை. அமாவாசையை நாசா கணக்கிடவுமில்லை.
> நாசாவின் இணையதளத்தில் வெளிவந்த அமாவாசை நேரங்களை கணக்கிட்டது ஃப்ரெட் எனும் தனி மனிதர். அவரின் கணக்குகளுக்கு நாசா பொறுப்பேர்க்கவில்லை.
> மக்களின் தேவைக்ககாவே ஃப்ரெட் அமாவாசை நேரங்களை வெளியிட்டார். அதை வைத்து எந்த அறிவியல் ஆய்வும் செய்ய இயலாது. ஜோதிடத்திற்கும் மத வழிபாட்டிற்கும் உதவட்டும் எனும் எண்ணத்தில் வெளியிட்டுள்ளனர்.
> உலகிலேயே துல்லியாமான அமாவாசை நேரங்களை வெளியிடுவது நாசாதான் என்பது மூடநம்பிக்கையாகும். ஃபிரெட்-மீயஸ் கணக்கின் துல்லியக்குறைவை அவர்களே வெளிப்படுத்தியுள்ளனர்.
> மீயசின் பார்முலா 28 வருட பழமையான பார்முலா. அது மிகவும் துல்லியம் குறைவானது என்று அவரே எழுதியுள்ளார். அத்தகைய பார்முலாவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டதுதான் அமாவாசைக் காலண்டர்
> ஃபிரெட்டை விட துல்லியாமான கணக்கை யாராவது வெளியிட்டுள்ளார்களா என்றுகூட தேடாமல் நாசா எனும் ப்ராண்டிற்கு அடிமையாக அந்த அமாவாசைக் கணக்கில் விழுந்துள்ளது ஹிஜ்ரா கமிட்டி.
> ஃபிரெட்டின் கணக்கை சரிபார்க்கும் வல்லுனர்கள் எங்களிடம் இருக்கிறார்கள் என்று ஹிஜ்ரா கமிட்டி மக்களை ஏமாற்றுகிறது. சரி பார்க்கும் அளவுக்கு அறிவிருந்தால் ஃபிரெட்டின் கணக்கு தேவையே இல்லை. இவர்களாகவே அமாவாசையை கணக்கிடலாமே
> இவர்களிடம் இருக்கும் வல்லுனர்கள் மீயசின் கணக்கை காப்பியடித்து சாப்ட்வேர் உருவாக்கும் திறமைகூட இல்லாதவர்கள். 130வரிகளில் முடிந்துவிடும் கோடிங்கை உருவாக்க இயலாதவர்கள் ஃபிரெட்டின் மொத்த தேதிகளையும் காப்பி பேஸ்ட் செய்து 37000 வரிகள் கொண்ட டேட்டா பேசை உருவாக்கியுள்ளனர்.
> பிறமதத்தவரின் கண்டுபிடிப்புகளை பயன்படுத்தக்கூடாது என்பதால் நாம் அமாவாசை காலண்டரை மறுக்கவில்லை. அது மார்க்கத்திற்கு எதிரானது என்பதாலேயே எதிர்க்கிறோம்.
> தொழுகை நேரங்களை சூரியனைப் பார்த்து நிழலைப் பார்த்து சரிபார்ப்பதைப் போல அமாவாசை ஏற்படும் நேரத்தை சரி பார்க்க இயலாது. அமாவாசை உலகிற்கெல்லாம் ஒரே நேரத்தில் நடப்பதல்ல. ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு நேரத்தில் நடக்கிறது.
கேள்விகள்:
> 6000 வருட காலண்டரை எங்களுக்கு நாசா உருவாக்கிதந்துள்ளது என்று பீற்றிக்கொள்ளும் ஹிஜ்ராவினர் கிபி 525 முதல் 3532 உடன் அமாவாசைக் காலண்டரை நிறுத்திகொண்டதேன். அதற்கு முன்னும் பின்னும் உள்ள கணக்கில் ஃப்ரெட் மீது உங்களுக்கு ஈமான் இல்லையா?
> உங்கள் ஆண்டிராய்டு சாப்ட்வேரில் கிபி 1900 முதல் 2100வரை மட்டுமே தேதிகள் இருப்பதன் ரகசியம் என்ன. மாயன் காலண்டரைப் போல உங்கள் கலான்டரில் 2100இல் உலகம் அழிந்துவிடுமா?
> உங்கள் ஆண்டிராய்டு சாப்ட்வேர் வெர்சன் 2 இல் இருந்த இலுமிநேசன் கணக்கு அதற்கு பின்னர் வந்த வெர்சன்களில் காணாமல் போனதேன்? அந்த ஜியோ சென்ட்ரிக் இலுமிநேசனும் பிறையின் வடிவமும் ஒத்துவாராமல் போனதை உங்களைப் பின்பற்றுபவர்களே  கண்டுபிடுத்து உங்களிடம் முறையிட்டார்களா?
> சந்திரனை துல்லியமாக கணக்கிட இயலும் என்று சொல்லும் நீங்கள் கிபி 4000க்குப் பின் அமாவாசை தேதிகளை ஏன் கணிக்கவில்லை? அதற்குப் பின்னால் சந்திரன் இயங்காதா?
> குறைந்த பட்சம் ஜீன் மீயசின் அல்காரிதத்தைப் பயன்படுத்தியாவது உங்களால், உங்கள் வல்லுனர்களால் ஒரு காலண்டர் சாப்ட்வேரை உருவாக்க இயலுமா? இதுவரை பார்முலா கேட்டு சோர்வடைந்து இப்போது அந்த பார்முலாவை நாமே உங்களுக்கு எடுத்து தந்துள்ளோம். இனிமேலாவது உங்களால் அதை உருவாக்க இயலுமா. பார்முலா இந்த புத்தகத்தின் 349ம் பக்கத்தில் உள்ளது https://goo.gl/vtjOuf