Thursday 3 November 2022

QSF19. மீன் வயிற்றில் இருந்த 90% ஆக்சிஜனை சுவாசித்து யூனுஸ் நபி உயிர்வாழ்ந்தார்களா?

 

இப்படியும் சில தப்ஸீர்கள்- ஜைனுலாபுதீன் தப்ஸீர்


ஜைனுலாபிதீன் அவர்களின் தப்சீரில் அறிவியலின் பெயரால் சொல்லப்பட்டிருக்கும் பிழையான கருத்துக்களை ஆய்வு செய்வதற்காக 2017ம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு சமர்ப்பித்த ஆய்வறிக்கைகள்


QSF ஆய்வுக்குழு


அறிமுகத்தை வாசிப்பது இந்த தொடரை புரிந்துகொள்ள உதவும். அறிமுகத்தை வாசிக்க https://www.piraivasi.com/2022/11/zina-ul-abdeen-intro.html





QSF19. மீன் வயிற்றில் இருந்த 90% ஆக்சிஜனை சுவாசித்து யூனுஸ் நபி உயிர்வாழ்ந்தார்களா?

தப்ஸீர் குறிப்பு:- 395. மீன் வயிற்றில் மனிதன் உயிருடன் இருக்க முடியுமா? 

இவ்வசனங்கள் (37:142, 21:87, 68:48) யூனுஸ் நபி அவர்கள் சில நாட்கள் மீன் வயிற்றில் சிறைவைக்கப்பட்டதாகக் கூறுகின்றன. 

மீன் வயிற்றுக்குள் மனிதன் எப்படி உயிருடன் இருக்க முடியும்? ஆக்ஸிஜன் இல்லாமல் மனிதன் செத்துவிடுவானே என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். 

இறைவன் நாடினால் இது போன்ற அற்புதங்களை நிகழ்த்த முடியும் என்றாலும் மீன் வயிற்றில் யூனுஸ் நபியவர்கள் உயிருடன் இருந்ததற்கு அறிவியல் சாத்தியம் உள்ளது என்பதைக் கூடுதல் தகவலாகத் தருகிறோம். 

மனிதனை விழுங்கும் அளவில் கடலில் ஒரு மீன் உள்ளது என்றால் அது திமிங்கலம் என்ற மீன்தான். 

கடலில் உள்ள பல்வேறு திமிங்கலங்களில் நீலத் திமிங்கலம் என்ற ஒரு வகை உண்டு. இத்திமிங்கிலத்தின் நாக்கில் 50 பேர் உட்காரக்கூடிய அளவு இடமிருக்கும். இத்தகைய திமிங்கிலத்திடம் மூர்க்கமான குணங்கள் கிடையாது. இவை மிகவும் சாதுவானவை ஆகும். 

நாக்கில் மட்டும் ஐம்பது பேர் அமர முடியும் என்றால் அதன் வயிற்றுப் பகுதி எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும் என்று நாம் ஊகம் செய்து கொள்ளலாம். 

திமிங்கலம் மற்ற மீன்களில் இருந்து மாறுபட்ட படைப்பாகும். இது மீன் இனமாக இருந்தாலும் இது விலங்கினங்களைப் போல் தனது குட்டிகளுக்குப் பாலூட்டக் கூடிய உயிரினமாகும். 

மேலும் மீன்கள் தமது செவுள்களால் சுவாசிக்கின்றன. ஆனால் திமிங்கலங்கள் மனிதனைப் போன்ற நுரையீரல்களைக் கொண்டுள்ளதால் தமது நுரையீரல்களால் சுவாசிக்கக் கூடியவை. நீரின் மேல்மட்டத்துக்கு வந்து தேவையான காற்றை உள் இழுத்துக் கொள்ளும். நீருக்கு அடியில் மூச்சுவிடாமல் இரண்டு மணி நேரம் கூட மூச்சடக்கிக் கொள்ளும். மனிதர்கள் சுவாசிக்கும்போது காற்றில் இருந்து 15 சதம் ஆக்ஸிஜனை உள் இழுக்கிறோம், ஆனால் திமிங்கலங்கள் காற்றில் இருந்து 90 சதம் ஆக்ஸிஜனை உள் இழுத்துக் கொள்வதால் 7000 அடி ஆழம் சென்றாலும் இவற்றால் நீண்ட நேரம் மூச்சடக்க முடிகிறது.

திமிங்கலத்தின் இந்த தனித்தன்மையைக் கவனத்தில் கொண்டால் அவை சுவாசித்து உள்ளே சேமித்துக் கொள்ளும் ஆக்ஸிஜன் அதன் வயிற்றுக்குள் இருந்த யூனுஸ் நபி சுவாசிக்க போதுமானதாகும். ஆக்ஸிஜன் முடியும் நேரத்தில் அவை நீருக்கு மேல் தலையை நீட்டி காற்றை உள் இழுத்துக் கொள்ளும் அவசியம் உள்ளதால் யூனுஸ் நபிக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட வழியில்லை. 

ஒரு கண்ணாடி அறையில் வெளிக்காற்று புகாமல் அடைத்து ஒருவரை உள்ளே வைத்தால் அந்த அறைக்குள் இருக்கும் காற்றே சில மணி நேரங்கள் அந்த மனிதன் சுவாசிக்கப் போதுமானதாகும். திமிங்கலம் உள்ளிழுக்கும் காற்றில் அதிக ஆக்ஸிஜன் இருப்பதால் யூனுஸ் நபி மீன் வயிற்றில் உயிருடன் இருந்தது அறிவியலுக்கு உடன்பாடானது தான். இதில் அறிவியல் பூர்வமாக கேள்வி கேட்க வழியில்லை. இன்னும் சொல்வதாக இருந்தால் கடலில் இது போன்ற தனித்தன்மை வாய்ந்த மீங்களும் உள்ளன என்ற அறிவியல் முன்னறிவிப்பாக இதை எடுத்துக் கொள்ளலாம்.

∙∙∙∙∙·▫▫ᵒᴼᵒ▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫ᵒᴼᵒ end of tafseer ᵒᴼᵒ▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫ᵒᴼᵒ▫▫·∙∙∙∙∙

நமது மறுப்பு:-

இந்த தப்சீர் குறிப்பு பின்வரும் லிங்கில் இருக்கும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு பல அறியாமைகளை சேர்த்து எழுதப்பட்டதாகும்.

திமிங்கிலம் - தமிழ் விக்கிப்பீடியா (wikipedia.org)

கற்பனை : 1

காற்றில் 20% ஆக்சிஜன் இருப்பதாக நாம் பாலபாடத்தில்  படித்திருக்கிறோம். மனிதன் ஒரு லிட்டர் ஆக்சிகனை உள்ளே இழுக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அதில் 200மில்லி ஆக்சிஜன் இருக்கும். இந்த 200மில்லி ஆக்சிஜனில் 15% ஆக்சிஜனை மட்டுமே மனிதனின் நுரையீரல் கிரகிக்கும் என்று மேலுள்ள லிங்க் சொல்கிறது. அதாவது 30மில்லி ஆக்சிஜனை மட்டுமே மனித உடல் எடுத்துகொள்ளும்.

ஆனால் நீலத்திமிலங்கத்தின் நுரையீரல் அந்த 200மில்லி ஆக்சிஜனில் 180மில்லி ஆக்சிஜனையும் கிரகித்துக்கொள்ளும். கிரகித்துக்கொண்ட ஆக்சிஜனை அது வயிற்றில் சேமித்து வைத்துக்கொள்ளுமா?இல்லை !  

http://scienceline.ucsb.edu/getkey.php?key=1009

A whale's lungs work like ours do, but they make the most of each breath. In one breath, a humans body can absorb about 15 percent of the oxygen inhaled. The whale, on the other hand, absorbs as much as 90 percent of the oxygen it breathes in. Whales store this excess of oxygen in myoglobin, a special protein cell found in muscles. Whales have greater amounts of myoglobin than other animals, allowing them to store larger amounts of oxygen at a time.

மனிதனாக இருந்தாலும் மற்ற விலங்குகளாக இருந்தாலும் அவை உள்ளிழுக்கும் ஆக்சிஜன் myoglobin மயோக்ளோபின்  எனப்படும் ப்ரோடீனில் சேமிக்கப்படுகிறது. இந்த ப்ரோடீன் மனிதனின் தசையில் இருக்கும் அளவை விட நீலத்திமிங்கலத்தின் தசையில் அதிக அளவு காணப்படுகிறது. இவ்வாறு அதிக ஆக்சிஜனை சேமித்துக்கொண்டு நீலத்திமிங்கலம் அதிக நேரம் நீருக்குள் இருக்க முடிகிறது. தசையில் சேமிக்கப்படும் இந்த ஆக்சிஜனை வயிற்றில் இருக்கும் மனிதனால் அவனது மூக்கு வழியாக சுவாசிக்கவே இயலாது.

கற்பனை : 2

மனிதனின் உணவுக்குழலும் சுவாசக்குழலும் ஒன்றுதான். மனிதன் சுவாசிக்கும்போது மனிதன் உள்ளிழுக்கும் காற்று நுரையீரல்களை சென்றடையும் அதே வேளையில் வயிற்றின் ஆரம்ப பகுதிக்கும் செல்கிறது. நாம் மூச்சை வெளியே விடும்போது வயிற்றில் ஆரம்ப பகுதில் இருக்கும் காற்றும் வெளியேறுகிறது. ஆனால் நீலத்திமிங்கலத்தைப் பொறுத்தவரையில் சுவாசக்குழாய் வேறு உணவுக்குழாய் வேறு. மூக்கு நேரடியாக நுரையீரலுடன் மட்டுமே இணைந்திருக்கிறது. நீலத்திமிங்கலத்தின் வயிற்றுப் பகுதியில் எந்த காற்றும் இல்லை. மீன் உட்கொண்ட உணவு செரிமானம் ஆகும்போது ஏதேனும் மீத்தேன் போன்ற வாயுக்கள் உருவாகுமானால் அது மட்டுமே மீனின் வயிற்றில் இருக்கும். மீனின் வயிற்றில் சிறிதளவும் காற்று இருப்பதற்கு வாய்ப்பே இல்லை.

முடிவுரை:-

மனித அறிவைக்கொண்டு சிந்திக்கும்போது எந்த மீன் வயிற்றிலும் மனிதன் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளே இல்லை. அல்லாஹ்வின் தனிப்பெரும் ஆற்றலால் ஒரு மீன் வயிற்றில் யூனுஸ் அவர்களை அவன் உயிருடன் இருக்கசெய்துள்ளான். இது அற்புதம். இதில் அறிவியல் விளக்கம் தேடுவதற்கான தேவை இல்லை. பல்வேறு அற்புதங்களை பல்வேறு நபிமார்கள் மூலம் அல்லாஹ் நிகழ்த்தியுள்ளான். எல்லாவற்றிற்கும் அறிவியல் சாயம் பூசுவது இயலாது. அறிவியல் விளக்கம் கொடுத்து நாத்திகர்களை திருப்திப்படுத்த அல்லாஹ்வின் தூய மார்க்கத்திற்கு எந்த தேவையும் இல்லை. இந்த 1420 வருடங்களில் கடந்த 50 வருடங்களாக நாம் அறிவியல் விளக்கம் கொடுத்து வந்திருப்போமா? எனில் 1370 வருடங்களாக இஸ்லாத்தை ஏற்றுகொண்ட கோடிக்கணக்கான மக்கள் எந்த அறிவியலைப் பார்த்து இஸ்லாத்தை ஏற்றார்கள்? குர்ஆனை, அல்லாஹ்வின் தூய மார்க்கத்தை உண்மைப்படுத்துவதற்கு எந்த அறிவியலும் தேவையில்லை.

பிற்சேர்க்கை:-

21/06/2021



இன்று சண் டீவி யில் மேலுள்ளவாறு ஒரு செய்தி வந்துள்ளது. வழக்கம்போல இது 1400 ஆண்டுகளுக்கு முன்பே குர்ஆனில் சொல்லப்பட்டுவிட்டது என்று கிளம்பிவிட்டனர் நம்ம ஆட்கள். இதில் பிரச்சனை என்னவென்றால் இதுபோன்ற ஆர்வமிகுதி ஆட்களை மட்டும் பிறர் கேலி செய்தால் பரவாயில்லை. ஆனால் கேலி செய்யப்படுவது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் இஸ்லாமிய மார்க்கமும்... ஒவ்வொன்றாக பார்ப்போம்


“யூனுஸ் நபி அவர்கள் மீன் வயிற்றில் உயிருடன் இருந்ததாக 1400 வருடங்களுக்கு முன்பே உலகப் பொதுமறை திருக்குர்ஆன் கூறிவிட்டது.” என்று இந்த செய்தியுடன் இணைத்து சொல்கிறது ஒரு பேஸ்புக் பதிவு... சற்றேனும் சிந்தித்தீர்களா? நபி யூனுஸ் (அலை) அவர்களின் வரலாறு குர்ஆனில் மட்டுமா இருக்கிறது? கிருத்தவ பைபிளிலும் யூத பைபிளிலும் இதே வரலாறு சொல்லப்பட்டுள்ளதே. அப்படின்னா 2000 வருடங்களுக்கு முன்பே கிருத்தவ பைபிள் சொல்லி இருப்பதாகவும் 3000 வருடங்களுக்கு முன்பே யூத பைபிள் சொல்லி இருப்பதாகவும் அவர்கள் சொன்னால் நம்ம பெருமை என்னாவது?

அடுத்ததாக 30 வினாடிகள் மட்டுமே மைக்கேல் பெக்கார்ட் மீனின் வயிற்றில் இருந்துள்ளார். இது அற்புதமோ அதிசயமோ அல்ல.. அதுவும் கடலுக்குள் குதித்து மூச்சை அடக்கிக்கொண்டு கல் இறால் (அ) சிங்கி இறால் என்று அழைக்கப்படும் lobsterகளை பிடித்துவரும் அவருக்கு முப்பது வினாடிகள் மூச்சை அடக்கிக்கொண்டு திமிங்கலத்தின் வயிற்றில் இருப்பது அதிசயமே அல்ல. மேலும் இதுகுறித்து விரிவாக பின்வரும் லிங்கில் விவரித்துள்ளனர்.

https://www.capecodtimes.com/story/news/2021/06/11/humpback-whale-catches-michael-packard-lobster-driver-mouth-proviencetown-cape-cod/7653838002/

இவரை விழுங்கிய ஹம்பேக் வகை திமிங்கலங்கள் மனிதனை தாக்குபவை அல்ல. மனிதனை அவை உணவாகாவும் எடுத்துக்கொள்ளாது.
(கடலில் உள்ள எந்த திமிங்கலமும் மனிதனை உணவாக உட்கொள்ளாது) இவற்றின் மேலே ஏறிக்குதித்தால் கூட இவை மனிதனுக்கு ஊறு விளைவிப்பவை அல்ல. தவறுதலாக விழுங்கிவிட்டதால் உடனே துப்பிவிட்டது. இது அதிசயமல்ல சாதாரண நிகழ்வே. ஆனால் யூனூஸ் நபி மீன் வயிற்றில் இருந்தது அதிசய நிகழ்வு. அவர் முப்பது வினாடிகள் மட்டுமே இருக்கவில்லை.


37:141. அ(க்கப்பலிலுள்ள)வர்கள் சீட்டுப்போட்டனர், (அதில் அவர் பெயர்வரவே கடலில் எறியப்பட வேண்டிய) தோல்வியுற்றோரில் அவர் ஆகிவிட்டார்.

37:142. எனவே, (இவரை அவர்கள் கடலில் எறியவே) அவர் நிந்தனைக்கு ஆளானவராகயிருக்க, (ஒரு) மீன் அவரை விழுங்கிற்று.

37:143. நிச்சயமாக அவர் (மீன் வயிற்றினுள் நம்மைத்) துதி செய்து கொண்டிருப்பவர்களில் இல்லாமலிருந்திருந்தால்,

37:144. (மறுமைக்காக படைப்பினங்களாகிய) அவர்கள் எழுப்பப்படும் நாள் (வரும்) வரையில், அவர் அதன் வயிற்றில் தங்கியிருந்திருப்பார்.

37:145. (அவர் துதி செய்ததன் காரணமாக) அவர் நோயுற்றவராக இருந்தநிலையில் வெட்டவெளியில், (மீன் வயிற்றிலிருந்து) அவரை நாம் எறிந்தோம்.

37:146. மேலும், அவரின் மீது (நிழல்தருவதற்காக) ஒரு சுரைக்கொடியை நாம் முளைப்பித்தோம்.

பிற வேதங்களில் யூனூஸ் நபி 3 நாட்கள் மீன் வயிற்றில் இருந்தார் என்று சொல்லப்பட்டாலும் குர்ஆனில் அவர் எத்தனை நாட்கள் மீன் வயிற்றில் இருந்தார் என்று சொல்லப்படவில்லை. மாறாக அவர் நீண்ட காலம் இருந்துள்ளார் என்பதை குர்ஆனில் இருந்து அறிய இயலும். மனிதனை விழுங்கும் அளவுக்கு பெரிய மீன் ஆழமுள்ள கடல் பகுதியிலேயே இருக்கும். அது அவரைக் கரையில் கொண்டுவந்து உமிழ்ந்துள்ளது. மீன் வயிற்றில் இருந்து நோய்வாய்ப்பட்ட நிலையிலேயே அவர் வெளியேற்றப்பட்டுள்ளார். நிச்சயமாக இது குறுகிய நேரத்தில் நடந்த நிகழ்வல்ல. இது ஒரு அற்புத நிகழ்வே...

மீன் வயிற்றில் மனிதன் சுவாசிக்கக் காற்று இருக்காது. ஆக்சிஜன் இருப்பதாக சில தப்சீர்களில் கட்டுக்கதைகளை எழுதி வைத்துள்ளனர். மனிதனால் காற்றிலிருந்து 15% ஆக்சிஜனை மட்டுமே உள்ளிழுக்க இயலும். ஆனால் திமிங்கலத்தால் 90% ஆக்சிஜனை உள்ளிழுக்க முடியும் என்று தமிழ் விக்கிபீடியாவில் வாசித்தவற்றை தவறாக விளங்கி எழுதப்பட்டவை அந்த தப்சீர்கள். திமிங்கலத்தால் 90% ஆக்சிஜனை காற்றிலிருந்து பிரிக்க இயலும் என்பது உண்மையே. ஆனால் அந்த ஆக்சிஜன் மீனின் வயிற்றுப்பகுதியில் மனிதன் சுவாசிக்க இயலும் அளவுக்கு காற்றாக இருக்காது. மீனின் தசைகளில் மயோக்ளோபின் எனும் செல்களில் அந்த ஆக்சிஜன் செமிக்கப்பட்டிருக்கும். மீனின் வயிற்றில் ஆக்சிஜன் மட்டுமல்ல அல்ல எவ்வித காற்றும் இருக்காது.

மேலும் உணவை உட்கொண்ட உடனேயே திமிங்கலத்தின் வயிறு செரிமான வேலைகளை துவங்கிவிடும். திமிங்கலம் உணவை மென்று விழுங்காது. அப்படியே முழுமையாக விழுங்கி விடும். எனவே வயிற்றின் முதல் பகுதியில் இருக்கும் சக்தி வாய்ந்த தசைகள் மெல்லும் வேலையை செய்யும். மனிதனை திமிங்கலம் விழுங்கினால் சற்று நேரத்தில் வயிற்றின் முதல் பகுதியில் அவனது எலும்புகள் உடைக்கப்படும். அடுத்த இரண்டாம் கட்டமாக செரிமானத்திற்கான அமிலங்கள் சுரக்கப்பட்டு அந்த அமிலத்தில் மனிதன் அழிந்துவிடுவான்.

ஆக மீன்களின் வயிற்றில் சில நாட்கள் என்ன சில மணி நேரங்கள் கூட மனிதனால் உயிரோடு இருக்க இயலாது. உடனே நீங்கள் வேகமாக கட கடவென மீன் வயிற்றில் உயிரோடு இருந்த மனிதர்களின் வரலாற்றை இன்டர்நெட்டில் தேடுவீர்கள். நீங்கள் தமிழில் தேடினால் நிச்சயமாக இந்த கட்டுரையை காண்பீர்கள்.

https://www.onlinetntj.com/articles/unmaipaduthapadum-islam/meen-vayitril-moondru-naatkal-uyirudan-irunthavar

வாய் வழியாக திமிங்கலத்தின் வயிற்றுக்குள் சென்ற ஒருவர் 72 மணி நேரத்திற்கு பிறகு மலத்தோடு உயிருடன் வெளியே வந்தாராம். என்ன ஒரு கட்டுக்கதை இது. செரிமானம் ஆகாமல் 72 மணி நேரம் மீன் வயிற்றில் அவர் இருந்தாரா?

அது பற்றிய உண்மைத் தகவல்களை இதில் காணலாம். https://indianexpress.com/article/trending/trending-globally/man-swallowed-by-whale-survives-to-tell-the-tale/

இந்த கதை முதன் முதலாக worldnewsdailyreport.com எனும் இணையத்தளத்தில் உருவாகியுள்ளது. இந்த தளத்தின் ஸ்லோகமே “இங்கே உண்மை ஒரு பொருட்டே அல்ல” என்பதுதான். அதாவது இந்த தளத்தில் பொய்த் தகவல்கள் மட்டுமே இருக்கும் என்பதே தளத்தில் ஸ்லோகம் ஆகும். இந்த தளத்தில் வரும் செய்திகளுக்கு ஓர் எடுத்துக்காட்டு:- https://worldnewsdailyreport.com/thailand-snakegirl-attracts-crowds-of-pilgrims-and-tourists/ மனித உடலும் பாம்பு வாலும் கொண்ட சிறுமியாம். இந்த தளத்தில் வந்ததை வீர கேசரி வெளியிட்டால் என்ன சேமியா கேசரி வெளியிட்டால் என்ன? உண்மையா என்று பார்க்க வேண்டமா?

(முன்னாளில் TNTJ வில் அறிஞர்களாக இருந்தவர்கள் எழுதிய இதுபோன்ற எண்ணற்ற கட்டுக்கதைகள் TNTJ இணையத்தளத்தில் குவிந்து கிடக்கின்றன. நிர்வாகம் அவற்றை உடனடியாக அறிவிப்பு செய்துவிட்டு நீக்க வேண்டும். இல்லையேல் அறிவுடையோர் நம்மை நோக்கி நகைப்பதை தவிர்க்க இயலாது)

இதுமட்டுமல்ல மீனின் வயிற்றில் மனிதன் உயிர்வாழ்ந்ததாக சொல்லப்படும் இணையதள கதைகள் அனைத்தும் ஆதாரமற்றவை.

குர்ஆனில் பல அற்புத நிகழ்வுகள் கூறப்பட்டுள்ளன, அவற்றை பற்றிய நாத்திகர்களின் கேள்விக்கு பதில் சொல்ல இயலாத நம்மில் இருக்கும் ஆர்வமிகு சகோதரர்கள் அறிவியலை கையில் எடுக்கின்றனர். லங்கா ஸ்ரீ , வீர கேசரி என எந்த இணயதளத்தில் என்ன செய்திவந்தாலும் “இதுதான் அறிவியல் காரணம்!” “பாருங்க 1400 வருடங்களுக்கு முன்னே..” என்று எழுத ஆரம்பித்து விடுகின்றனர்...

குர்ஆன் கூறும் இத்தகைய அற்புத நிகழ்வுகளை சாதாரண நிகழ்வுகள் என்றும் இவற்றை நாங்கள் அறிவியலால் விளக்குகிறோம் என்றும் சொல்வதன் மூலம் இந்த சகோதரர்கள் சொல்ல வருவது என்ன? “இஸ்லாம் கூறும் அற்புதங்கள் எதுவுமே அற்புதங்கள் அல்ல. அனைத்தும் சாதாரண விஷயங்களே” என்பதுதானா? இது இறை நிராகரிப்பில்லையா என்று ஆர்வமிகு சகோதரர்கள் சிந்திக்க வேண்டும்.

ஒரு வாதத்திற்கு ஆக்சிஜன் சிலிண்டர், சாப்பாடு மற்றும் தண்ணீருடன் தான் யூனூஸ் (அலை) அவர்கள் மீன் வயிற்றுக்குள் சென்றார்கள் என்று வைப்போம்...

37:146. மேலும், அவரின் மீது (நிழல்தருவதற்காக) ஒரு சுரைக்கொடியை நாம் முளைப்பித்தோம்.

இந்த இறை வசனத்தில் அவருக்கு நிழல் தருவதற்காக உடனடியாக ஒரு செடியை இறைவன் முளைக்க செய்தான் என்கிறானே. இது எப்படி அறிவியலில் சாத்தியம்.. ஆங்கிலப் படங்களை பார்த்துவிட்டு இதற்கும் இவர்கள் கதை எழுதினால் ஆச்சரியம் எதுவுமில்லை.

அற்புதங்களை மறுத்து அவற்றுக்கு அறிவியல் சாயும் பூசும் செயல்களில் இருந்து விலகி, ஈமானை உறுதிப்படுத்துமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்...

மற்ற தலைப்புகளை வாசிக்க https://www.piraivasi.com/p/zina-ul-abdeen.html