Monday 17 July 2017

நபி (ஸல்) காலத்தில் மக்காவும், மதீனாவும் ஒரே தேதியில் இருந்ததற்கு என்ன ஆதாரம்

அவதூறு கமிட்டியின் அவதூறுகளை ஒவ்வொன்றாக பார்த்துவருகிறோம். அவ்வரிசையில் அடுத்த அவதூறு:
நபி (ஸல்) காலத்தில் மக்காவும், மதீனாவும் ஒரே தேதியில் இருந்ததற்கு என்ன ஆதாரம்? - TNTJ அதிரடி கேள்வி..!!
//நபிகளார் காலத்தில் ஒருநாளுக்கு மக்காவில் ஒரு தேதியும், அதே நாளுக்கு மதீனாவில் மற்றொரு தேதியும் இருந்ததா? என்று ஒரு சகோதரர் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு TNTJ பிறைவாசி மக்காவும் மதீனாவும் ஒரே தேதியில் இருந்ததற்கு என்ன ஆதாரம்? என்று திருப்பி கேட்டுள்ளார்.
நபி (ஸல்) அவர்கள் தங்கள் இறுதி ஹஜ்ஜின் போது மதீனாவிலிருந்து புறப்பட்டு மக்காவுக்குள் வந்து தங்கள் ஹஜ் கிரியைகளை நிறைவேற்றினார்கள். எத்தகைய தேதி வித்தியாசங்களும் மக்காவுக்கும், மதீனாவுக்கும் இடையே அன்று இருக்கவில்லை. பிற பிரதேசங்களிலிருந்தும் நபித்தோழர்கள் வருகை புரிந்தனர். மக்காவில் வைத்து, நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜூக்குரிய இஹ்ராமில் இணைந்த நபித்தோழர்களும் இருந்தனர். அந்த அனைத்து நபிதோழர்களும் நபி (ஸல்) அவர்களோடு ஒற்றுமையுடன் ஒரே தேதியில்தான் ஹஜ்ஜூ செய்தனர். ஹஜ்ஜின் அனைத்து கிரியைகளையும் ஒன்றுபட்டே நிறைவேற்றினர். மக்காவிலும், மதீனாவிலும் வெவ்வேறு தேதிகள் வித்தியாசப்பட்டு இருந்திருந்தால் ஹஜ்ஜூக்காக பிரயாணம் செய்து மக்கா வந்த நபி (ஸல்) அவர்களுக்கும், ஸஹாபாக்களுக்கும் இச்செய்தி தெரிவிக்கப்பட்டிருக்கும். அத்தகைய எந்தக் குறிப்புகளும் ஹதீஸ்களில் இல்லவே இல்லை.
இதை உறுதிப்படுத்தும் விதமாக நபி (ஸல்) அவர்கள் தங்கள் இறுதிப் பேருரையில்கூட 'இந்த நாள் எந்த நாள்?' என்று கேள்வி கேட்டு, அந்த நாள் முஸ்லிம்கள் அறுத்துப் பலியிடும் 'யவ்முன்நஹர்' – அது துல்ஹஜ்ஜூ 10-ஆம் நாள் என்பதை உறுதியும் படுத்தினார்கள் (புகாரி 1740, 1741). மக்கா மதீனாவிடையே வெவ்வேறு தேதிகளாக வித்தியாசப்பட்டு இருந்திருந்தால் அல்லாஹ் வஹியை இறக்கி நபி (ஸல்) அவர்களுக்கு அப்போது விஷயத்தை சொல்லியிருப்பான். அல்லது 'நபியே அது மதீனாவின் தேதியாகும், இன்று மக்காவில் வேறு தேதி அல்லவா' என்று கூடியிருந்த ஸஹாபாக்கள் சொல்லியிருப்பார்கள். எந்த ஒரு ஸஹாபியும் அப்படி சொல்லிடவில்லை. மக்காவில் ஒரு தேதியும், மதீனாவில் மற்றொரு தேதியும் இருந்திருக்க வேண்டும் என்று TNTJ பிறைவாசிகள் நம்புவது அவர்களின் வடிகட்டிய மனோ இச்சையே ஆகும்.
நபி (ஸல்) அவர்கள் தங்கள் இறுதிப் பேருரையில் இன்று 'யவ்முன்நஹர்தான்' என்று உறுதிப்படுத்திய நிகழ்வு இன்றைய TNTJ வினரின் மனோ இச்சைக்கு பதில் சொல்வதுபோல இருக்கிறது - ஸூப்ஹானல்லாஹ். ஆக மக்காவிலும், மதீனாவிலும் ஒரே நாளுக்கு வெவ்வேறு தேதிகள் வித்தியாசப்பட்டு இருக்கவேயில்லை என்பது உறுதியாகி விட்டது.
மக்காவிலும், மதீனாவிலும் வெவ்வேறு தேதிகள் இருந்தன என்று TNTJ வினர் இனியும் வாதித்தால், மதீனாவிலிருந்து வருபவர்கள் இஹ்ராம் கட்டுவதற்கு நிர்னயிக்கப்பட்ட மீக்காத்தில் (துல்குலைஃபாவில்) எந்த தேதி இருந்திருக்கும்? மக்காவின் தேதியா? மதீனாவின் தேதியா?. பிற மீக்காத்துகளில் என்ன தேதி இருந்திருக்கும்? என்பதற்கும் விளக்கம் சொல்லட்டும்.//
பொது அறிவில்லாதவர்கள்தான் ஹிஜ்ராவினர் என்பதற்கு மற்றுமோர் சான்று ஹிஜ்ராவினரின் இந்த வாதம். மேலும் மார்க்க அடிப்படை என்னவென்று தெரியாமல் இருக்கிறார்கள் என்பதற்கும் இவ்வாதம் சான்றாக அமைந்துள்ளது.
ஹஜ் எனும் வணக்கம் மக்கா எனும் நகரில் குறிப்பாக மஸ்ஜிதுல் ஹராமை மையமாக கொண்டு நடக்கும் ஒரு லோக்கல் வழிபாடு. இஸ்லாத்தில் இன்டர்நேஷனல் வழிபாடு என்று எதுவுமே இல்லை. வணக்க வழிபாடுகள் எல்லாமே லோக்கல்தான். அவரவருக்கு தொழுகை நேரம் வரும்போது அவரவர் தோழுவார். அவரவருக்கு ஜுமுஆ நாள் வரும்போது அவரவர் ஜுமுஆ தொழுவார். ஒருவர் ஜுமுஆ தொழுது 24 மணி நேரத்திற்கு பிறகு மற்றொருவர் ஜுமுஆ தொழும் நிலைமையும் பூமியின் இருபகுதியில் தற்போது நடக்கிறது என்பதை நினைவூட்டுகிறோம்.
மேலும் எவர் ரமலானை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்பார். ஹஜ் எனும் வணக்கத்தை பொறுத்தவரை இதை அவரவர் இருப்பிடத்தில் செய்ய இயலாது. மக்காவிற்கு வந்துதான் ஹஜ் செய்யவேண்டும். ஹஜ்ஜுக்காக மக்கா வருபவர் மக்காவில் எப்போது துல் ஹஜ் 8 ஆக இருக்கிறதோ அப்போது ஹஜ்ஜின் கிரியைகளை அவர் செய்யத்துவங்குவார். அவர் மக்காவில் ஹஜ் செய்யும்போது அவரது உள்ளூரில் வேறொரு தேதியாகக் கூட இருக்கும்.
ஜூலை 20 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு அமெரிக்காவில் நடக்கும் மீட்டிங்கிற்கு நீயுசிலாந்திலிருந்து ஒருவர் அமெரிக்கா செல்கிறார். மீட்டிங் நடக்கும் வேளையில் நியுசிலாந்தில் வெள்ளிகிழமை ஜூலை 21. இவரது ஊரில் வியாழக்கிழமையாக இருக்கும்போது அமெரிக்காவில் இவரால் மீட்டிங்கில் கலந்துகொள்ள இயலாது. மேலும் வியாழக்கிழமை மீட்டிங்கில் இருக்கும் அந்த நபரிடம் இன்று என்ன கிழமை என்று கேட்டால் அவரது நாட்டிலிருக்கும் வெள்ளிகிழமை என்று சொல்லமாட்டார், வியாழன் என்றே சொல்வார். மேலும் இன்று என்ன தேதி என்று கேட்டால் 21 என்று சொல்ல மாட்டார் 20 என்றே சொல்வார்.
இதே போல உலகில் எங்கிருந்து மக்கள் புறப்பட்டு வந்தாலும் மக்காவில் என்று துல் ஹஜ் 8 வருகிறதோ அப்போதுதான் ஹஜ் செய்ய இயலும். மேலும் அரபாவில் நிற்கும் ஒருவர் இன்று என்ன தேதி என்று கேட்கப்பட்டால் துல் ஹஜ் 9 என்றே சொல்வார். “எங்க ஊரில் துல் ஹஜ் 8, மக்காவில் துல் ஹஜ் 9” என்று சொல்லமாட்டார்.
ஹிஜ்ராவினரின் எண்ணம் எப்படி அமைந்துள்ளது என்று பாருங்கள்.
//மக்காவிலும், மதீனாவிலும் வெவ்வேறு தேதிகள் வித்தியாசப்பட்டு இருந்திருந்தால் ஹஜ்ஜூக்காக பிரயாணம் செய்து மக்கா வந்த நபி (ஸல்) அவர்களுக்கும், ஸஹாபாக்களுக்கும் இச்செய்தி தெரிவிக்கப்பட்டிருக்கும். அத்தகைய எந்தக் குறிப்புகளும் ஹதீஸ்களில் இல்லவே இல்லை.//
தாங்கள் ஆசைப்படுவதைப்போலவே ஹதீஸ் அமைந்திருக்க வேண்டும் என்று நினைப்பார்கள் ஹிஜ்ராவினர். இதை ஏற்கனவே அரஃபா விஷயத்தில் பார்த்தோம், பார்க்க http://www.piraivasi.com/2015/11/29.html
இனி ஹதீஸ்களைப் பார்ப்போம்.
புகாரி 1720 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹஜ்ஜை மட்டும் எண்ணத்தில் கொண்டு துல்கஅதா மாதத்தின் இருபத்தைந்தாம் நாள் நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். நாங்கள் மக்காவை நெருங்கியதும், குர்பானிப்பிராணியைக் கொண்டுவராதவர் தவாஃப் செய்துவிட்டு இஹ்ராமிலிருந்து விடுபட நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். பிறகு துல்ஹஜ் 10ஆம் நாள் மாட்டிறைச்சி எங்களுக்கு வந்தது. இது என்ன? என நான் கேட்டேன். மக்கள், நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியரின் சார்பாகப் பலியிட்டார்கள்' என்றனர்.
இது ஹஜ்ஜுக்காக நபிகளார் புறப்பட்டபோது மதீனாவின் லோக்கல் தேதி.
முஸ்லிம்   2388. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் (துல்ஹஜ் மாதம் முதல்)பத்தின் நான்காவது நாளில் ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டி, தல்பியாச் சொன்னவர்களாக (மக்காவிற்கு) வந்தார்கள். (தோழர்கள்) தமது இஹ்ராமை உம்ராவாக ஆக்கிக்கொள்ளுமாறு நபியவர்கள் கட்டளையிட்டார்கள்.
இது நபிகளார் மக்காவை வந்தடைந்தபோது மக்காவின் லோக்கல் தேதி.
அவை லோக்கல் தேதிதான் என்பதற்கு என்ன ஆதாரம் என்று பொது அறிவில்லாதவர் மட்டுமே கேட்பார்.
துல் ஹஜ் 10ம் தேதி நபிகளார் பேருரையாற்றும்போது இது எந்த நாள் என்று கேட்டுவிட்டு நஹ்ருடைய நாள் என்று சொன்னது மக்காவின் லோக்கல் தேதியைத்தான். இதற்கு நாம் மேலே சொன்ன அமெரிக்க மீட்டிங் உதாரணம் புரிந்துகொள்வதற்கு போதுமானதாக இருந்திருக்கும்.
நபிகளார் காலத்தில் மக்காவும் மதீனாவும் ஒரே தேதியில் இருந்ததாக ஹிஜ்ராவினரால் நிறுவ இயலாது.
நபிகளாருடன் ஹஜ் செய்தவர் அன்னை ஆயிஷா. அவரிடம் நோன்பு பிடிக்காமல் வந்த ஒருவரிடம் அவர் என்ன சொல்கிறார் என்று பாருங்கள்
நான் அரஃபா நாளில் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன். இவருக்குக் கோதுமைக் கஞ்சியைக் கொடுங்கள். அதில் இனிப்பை அதிகமாக்குங்கள்’’ என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள். (அரஃபா நாளாகிய) இன்று நான் நோன்பு பிடிக்காததன் காரணம் இன்று (மக்காவில்) ஹஜ்ஜுப் பெருநாள் தினமாக இருக்கலாம் என்று நான் அஞ்சுவதே’’ என்று நான் கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் மக்கள் பலியிடும் நாளே தியாகத்திருநாள்; மக்கள் நோன்பை விடும் நாளே ஈகைத்திருநாள்” என்று விளக்கமளித்தார்கள்.
அறிவிப்பவர்: மஸ்ரூக்
நூல்: பைஹகீ 8209
இது ஹதீஸா என்று வினவுவார்கள் ஹிஜ்ராவினர். இது ஹதீசல்ல. ஆனால் இதில் அன்னை ஆயிஷா சொன்னது ஹதீஸே. இதோ:
நீங்கள் நோன்பு பிடிக்கும் நாளே நோன்பு. நீங்கள் நோன்பை விடும் நாளே ஈகைத்திருநாள். நீங்கள் பலியிடும் நாளே தியாகத்திருநாள்.
-நபி மொழி; அறிவித்தவர்: அபூஹுரைரா (ரலி); நூல்: திர்மிதீ 697
இந்த ஹதீஸைதான் அன்னை ஆயிஷா மஸ்ரூக் அவர்களுக்கு விளக்கமாக சொல்லியிருக்கிறார்கள். நபிகளாருடன் ஹஜ் செய்த அன்னை ஆயிஷாவுக்கு மக்காவும் மதீனாவும் ஒரே தேதியில்தான் இருக்குமென்று தெரியாதா? ஏன் இரண்டு தேதிகளில் இருக்குமென்றும், அப்படி இருந்தாலும் பரவாயில்லை மக்கள் பிறை பார்த்து முடிவு செய்யும் நாள்தான் பெருநாட்கள் என்றும் ஏன் விளக்கமளிக்கிறார்கள்?