Thursday 31 August 2017

ஹிஜ்ரா காலண்டரின் தந்தை!

திருவாளர் அலிமாணிக் பான்!
**விஞ்ஞானி
**பன்மொழி வித்தகர்
**கப்பல் கட்டும் வல்லுநர்
இதுபோல பல சிறப்புகளைக் கொண்ட ஒரு மனிதராக ஹிஜிரா கமிட்டியால் வர்ணிக்கப்படும் ஒரு மனிதர்தான் ஜனாப் அலிமாணிக் பான் அவர்கள் ஆவார். இவருடைய அறிவும், அன்னாரின் ஆய்வும் குறைத்து மதிப்பிடக்கூடியதல்ல. உலக விஷயங்களில் அன்னாரின் ஆய்வின் பலனை நாமும் அடைந்து கொள்ள முயற்சிப்போமாக. நிற்க!
மார்க்க விஷயத்தில் அன்னார் ஒரு ஆய்வு செய்து "மனிதகுல சந்திர நாட்காட்டி"யை உருவாக்கினார் என்று அன்னாரை ஹிஜிரா கமிட்டி வானளாவிய அளவிற்கு உயர்த்தி சிறப்பிக்கிறது. மனிதகுல சந்திர நாட்காட்டி என்ற ஒரு புது விஷயத்தையும் அதன் தேவையையும் அதன் உருவாக்கத்தில் அன்னாரின் பங்களிப்பையும் பார்ப்போம்.
பிறைக் குழப்பங்கள் :
அலிமாணிக் பான் அவர்கள் பல நாடுகளில் பணிபுரிந்தவர். அன்னார் தாயகத்திற்கும் அயல்நாடுகளுக்குமிடையில் அடிக்கடி பயணப்பட்டுக்கொண்டிருந்த நேரம் அது. பெருநாள் சமயங்களில் இந்தியாவில் இருக்கும்போதெல்லாம் பிறை சர்ச்சைகள் ஏற்படுவதைக் கண்டார். ஒரு தரீக்காவின் பிறை அறிவிப்பை மற்றொரு தரீக்கா எடுக்காத நிலையையும் கண்டார். ஒரே ஊரில் இரண்டு பெருநாள் என்ற மோசமான நிலையையும் கண்டு வருந்தினார்.
தகவல் தொடர்பு வளர்ந்து கொண்டிருந்த நேரம் அது. இலங்கைப் பிறையும், கேரளப் பிறையும் மக்களை கூறுபோட்டுக்கொண்டிருந்த நேரம் அது. இதற்கு ஏதும் தீர்வு கிடைக்காதா என்று தனிமனிதராக அவர் ஏங்கிக் கொண்டிருந்த நேரம் அது.
ஒரே கிழமையில் பெருநாள்:
அப்போதுதான், சவுதி அரேபியாவில், அந்நாட்டின் அரசாங்க அலுவலக தேவைகளுக்காக ஒரு விஞ்ஞான சந்திர காலண்டரை உருவாக்கியிருந்தார்கள். அந்த காலண்டரின் நோக்கம் என்னவென்றால் "சூரிய வருடத்தின் ஒரு தேதியில் சந்திர மாதத்தின்படி என்ன நாளாக இருக்கும்" என்பதை குத்துமதிப்பாக தெரிந்து கொள்வதற்காக மட்டுமேயாகும். (For Gregorian to Hijri dates conversion purpose only)
ஐந்து அல்லது பத்து வருடங்களுக்குப் பிறகும் வரவிருக்கும் பெருநாளின் ஆங்கில மாதங்களை தோராயமாக அறிந்து கொள்ள முடிந்தது. இதற்கேற்ப பல முன்னேற்பாடுகளை செய்ய முடிந்தது.
அலுவலக பயன்பாட்டிற்கான அந்த காலண்டரின் தேதிப்படியே சில பெருநாட்களை சவுதி அரசாங்கம் அறிவித்து ஒத்திகை பார்த்தது. சந்திரனைப் பற்றிய பெரிய தெளிவு மக்களிடம் இல்லாத காரணத்தால் சவுதி மக்களிடம் இருந்து எதிர்ப்பு எதுவும் வராததால் தன்னுடைய காலண்டரின்படியே பெருநாட்களை அறிவிப்பதை சவுதி வழமையாக்கியது. அந்த காலண்டரின்படி சவுதி மக்கள் அனைவரும் ஒரே கிழமையில் பெருநாள் கொண்டாடி மகிழ்வதை அலிமாணிக் பான் கண்டார். அதே மகிழ்ச்சியை உலகம் முழுவதும் அடையச் செய்ய சூளுரை பூண்டார். சவுதியின் அந்த காலண்டரை கண்ணும் கருத்துமாக பார்க்கத் தொடங்கினார்.
அந்த காலண்டர் மக்காவை மையமாக கொண்டு சவுதிக்காக உருவாக்கப்பட்டதாக இருந்தாலும் அதன் அளவுகோல் சர்வதேச கணக்கில் இருப்பதைக் கண்டார்
அந்த "சர்வதேச சந்திர காலண்டரின்" அளவுகோலை தேடிக் கண்டுபிடித்து தன் மனதில் அசைபோட்டார். அந்த காலண்டரின் விதிகள் அவருக்கு அத்துப்படியாயிற்று. அதில் இருக்கும் வார்த்தைகளை சாறு பிழிந்து மக்களுக்கு கொடுத்தார். அதை மக்கள் மனதில் பதியச் செய்தார். சில வார்த்தைகள் மீண்டும் மீண்டும் பதியப்பட்டதன் மூலம் அவை மார்க்கத்தின் ஒரு பகுதி போல ஆனது. அவை...
**புவிமைய சங்கமம்(Geocentric conjunction)
**மேற்படி ஒரு விநாடி நேர நிகழ்வை ஒரு முழு நாளாக மாற்றினார். "சங்கம நாள்" (Conjunction day) என்று பெயர் சூட்டினார்.
**சங்கம நாளுக்கு அடுத்த நாள் புது மாதத்தின் முதல் நாள் என்றார்.
**UT (universel time) - ல்தான் சங்கமத்தை கணக்கிட வேண்டும் என்றார்.
**Universel day (சர்வதேச நாள்) என்ற ஒன்றை அறிமுகப்படுத்தினார்.
**சர்வதேச தேதிக் கோட்டில்தான் (IDL) சந்திர மாதத்தின் ஒவ்வொரு நாளையும் துவங்க வேண்டும் என்றார்.
இதுபோல இன்னும் சில மேன்மையான விஷயங்களை அறிமுகப்படுத்தினார். இந்த பெயர்களை மீண்டும் மீண்டும் மக்கள் மனதில் ரீங்காரமிடச் செய்தார்.
ஆனால், இதில் ஒரு சிக்கல் இருப்பதைக் கண்டார். அதாவது எந்த ஒரு விஞ்ஞான விஷயமும் மார்க்கத்தை பின்பற்றும் மக்களால் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாறு இல்லை என்பதை அவர் ஏற்கனவே அறிந்திருந்தார்.
கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்டு பல வருடங்களுக்குப் பிறகே அதைத் தொழுகை நேரத்திற்கு பயன்படுத்த முஸ்லிம்கள் அனுமதித்தனர்.
அச்சு இயந்திரம் (Printing machine) கண்டுபிடிக்கப்பட்டுப் பல வருடங்களுக்குப் பிறகே அதில் இஸ்லாமிய புத்தகங்கள் அச்சடிக்க முஸ்லிம்கள் அனுமதித்தனர்.
ஒலிப்பெருக்கி கண்டுபிடிக்கப்பட்டு பல வருடங்களுக்குப் பிறகே பாங்கிற்கு முஸ்லிம்கள் அதை பயன்படுத்தினர்.
இன்னும் பல விஞ்ஞான விசயங்களை முஸ்லிம்களின் வழிபாட்டு விஷயங்களில் பயன்படுத்த / அங்கீகரிக்க பல வருடங்களை எடுத்துக்கொண்டனர். இதையும் கருத்தில் கொண்டார்.
சவுதியின் உபயோகத்தில் இருந்த அந்த சர்வதேச சந்திர நாட்காட்டியை அதாவது, அருமையான அந்த விஞ்ஞான சந்திர காலண்டரை மக்களிடம் அறிமுகம் செய்தால் வழக்கம் போல் மக்கள் ஏற்றுக் கொள்வதற்கு சில நூறு ஆண்டுகளாவது ஆகுமே என்று வேதனை கொண்டார். சந்திர காலண்டரைப் பற்றிய செய்திகள் ஏதாவது குர்ஆன் மற்றும் ஹதீஃதுகளில் இருக்கிறதா என்று தேடினார். குர்ஆனில் அவர்கண்ட "இறை மொழி"யும் ஹதீஃதுகளில் அவர்கண்ட "நபிவழியும்" சந்திர காலண்டராகவே அவர் கண்களுக்கு தெரிந்தன.
மேற்படி விஞ்ஞான விஷயங்களுக்கு ஆதாரமாக குர்ஆன் வசனங்களை மக்களிடம் காட்டினார். அதாவது, எந்த ஒரு விஞ்ஞான விஷயத்தையும் மார்க்கத்தின் வழிபாட்டு முறைகளில் அனுமதிப்பதற்காக அதுநாள் வரையில் எந்த ஒரு வசனத்தையும் ஆதாரமாக இதுவரை எவரும் காட்டியதில்லை என்ற கருத்தை உடைத்தார். (கடிகாரத்தை, ஒலிபெருக்கியை பயன்படுத்த இந்த குர்ஆன் வசனம் ஆதாரமாக இருக்கிறது என்று ஒரு வசனத்தை கூட யாரும் காட்டியதில்லை). விஞ்ஞான சந்திர காலண்டருக்கான ஆதாரத்தை குர்ஆன் மற்றும் ஹதீஃதுகளிலிருந்து அடுக்கடுக்காக எடுத்து வைத்தார்.
**சந்திரக்காலண்டருக்கு ஆதாரமாக வசனம் 55:5 ஐ முன்வைத்தார். சூரியனும் சந்திரனும் கணக்கில் இருப்பதால் சந்திரனை கணக்கிட முடியும் என்றார்.
**சங்கம நிகழ்விற்கு வசனம் 75:10 ல் ஆதாரம் இருக்கிறது என்றார்.
**சங்கம நாள் என்ற அவருடைய கண்டுபிடிப்பிற்கு ஆதாரமாக ஹதீஃதுகளில் "கும்ம நாள்" இருக்கிறது என்றார்.
**தேதிக்கோட்டை (IDL) "மீக்காத்துல் கிப்லா" என்று பெயர் மாற்றினார். வசனம் 55:17 ல் ஆதாரம் இருக்கிறது என்றார்.
**வசனம் 36:39 ல் சந்திரனின் இறுதி வடிவம் சொல்லப்பட்டிருக்கிறது என்றார். அந்த வடிவத்தின் பெயர் "உர்ஜுனில் கதீம்" என்றார்.
**விஞ்ஞான சந்திர காலண்டரை நடைமுறைப்படுத்த தடையாக இருக்கும் பிறை பார்த்தல் ஹதீஃதுகளை பலவீனமானவையாக பார்த்தார்.
**2:189 ல் உள்ள "அல்-அஹில்லா" எனும் வார்த்தை சந்திரனின் வளர்ந்து தேயும் "படித்தரங்களைக்" குறிக்கிறது என்றார்.
**10:5, 36:39 வசனங்களில் இருக்கும் "மனாசில்" என்ற வார்த்தையையும் சந்திரன் வளர்ந்து தேயும் "படித்தரங்கள்" என்று புதுமையாக மொழிபெயர்த்தார்.
**இந்த படித்தரங்களை வைத்து போடப்பட்ட காலண்டர்தான் அந்த "விஞ்ஞான சந்திர காலண்டர்" என்று முத்தாய்ப்பாக முடித்தார்.
இவ்வாறாக, அந்த சர்வதேச சந்திர காலண்டரை குர்ஆன் மற்றும் ஹதீஃதுகளின் வழியில் வந்த ஒளியாக மக்களிடம் பிரச்சாரம் செய்தார். இறுதியில் அந்த சர்வதேச காலண்டரை "அல்லாஹ்வின் காலண்டர்" என்று அருள்வாக்கு தந்தார். அவருடைய நல்ல நோக்கத்திற்கு பலன் கிடைத்தது.
தர்ஹா, தாயத்து ,தொப்பி, விரல் அசைத்தல் என்ற அளவில் ஏகத்துவம் பேசிக்கொண்டிருந்த ஆரம்பகால தவ்ஹீத்வாதிகள் அலியாரின் அன்பர்களாக மாறினர். குர்ஆன் சுன்னாவின் ஒளியில் தோன்றிய இந்த சந்திர காலண்டரை பேசுவதும் ஏகத்துவத்தின் ஒரு பகுதிதான் என நினைத்தனர். புரிந்தும் புரியாமலும் "அல்லாஹ்வின் காலண்டர்" பிரச்சாரத்தை தொடங்கினர். அலியார் சுட்டிக்காட்டிய வசனங்களை வைத்து கிளிப்பிள்ளைகளாக மாறி அவைகளை மட்டும் பேசும் செல்லக்கிளிகளாக மாறினர். அந்த காலகட்டத்தில் அந்த காலண்டர்படியே சவுதி அரசாங்கம் அவ்வப்போது பெருநாள் அறிவித்ததும் அலியாரையும் அவரது அன்பர்களையும் குஷிப்படுத்தியது. காலண்டர் பிரச்சாரம் மெல்ல வீறுகொள்ளத் தொடங்கியது.


அலிமானிக் பான் அவர்களின் நல்ல நோக்கம் சிறப்பாக வேலை செய்யத்தொடங்கியது. இரண்டு கிழமைகளில் பெருநாள் கொண்டாடி அநியாயம் செய்த தமிழக மக்களை காலண்டரின்பால் அழைத்தார். உலகத்திற்கே முந்திக்கொண்டு வரக்கூடிய காலண்டரின்படி பெருநாள் கொண்டாட சொன்னார். உதாரணமாக, திங்கள்,செவ்வாய் என இரண்டு கிழமையில் பெருநாள் கொண்டாடிய மக்களை ஞாயிற்றுக்கிழமையிலேயே பெருநாள் கொண்டாட சொன்னார். இரண்டு கோடுகளை அழிப்பதற்காக மூன்றாவது கோடு போட்டு "இரண்டு நாள் பெருநாளை மூன்று நாள் பெருநாள்" ஆக மாற்றினார். வெற்றிகரமாக மக்கள் காலண்டரின்பால் மீளத் தொடங்கினர். இதை பயன்படுத்தி காலண்டருக்காக கமிட்டி அமைக்கும் முனைப்பில் அவரது அன்பர்கள் முனைந்தனர்.
தன்னை கழற்றிவிட்டுவிட்டு தனி இயக்கம் கண்ட ஆலிம்களை பழிவாங்க காத்திருந்த திருச்சி மலைக்கோட்டை நாயகரும் காலண்டர் பிரச்சாரத்தை கையில் எடுத்தார். பிறகுதான் காலண்டர் பிரச்சாரம் வீறுகொண்டது.
தலையில் இறங்கிய இடி:
இந்நிலையில்தான் அலியாரின் தலையில் இடி இறங்கியது. சவுதி அரசாங்கம் சதி செய்தது. சவுதி அரசாங்கம் எந்த காலண்டரை கியாமத் நாள் வரைக்கும் மாற்றாது என்று அலியார் நினைத்தாரோ அந்த காலண்டரை சவுதி அரசாங்கம் மாற்றிவிட்டது. அல்லாஹ்வின் காலண்டரை அழித்து விட்டது. சர்வதேச காலண்டரை சகதியில் எறிந்துவிட்டது.
1972 ம் வருடத்திலிருந்து 1999 ம் வருடத்திற்கு இடைப்பட்ட 27 வருடங்கள் நடைமுறைப் படுத்திய சர்வதேச காலண்டர் தன்னுடைய நாட்டிற்கு உகந்தது அல்ல என்பதை அறிந்து கொண்ட சவுதி அரசாங்கம் சர்வதேச காலண்டருக்கு சங்கு ஊதியது. Y2k பிரச்சினையை சரி செய்யும் சாக்கில் சத்தமில்லாமல் பழைய காலண்டரை நீக்கிவிட்டு புது காலண்டரை கம்ப்யூட்டரில் புகுத்திவிட்டது. அதாவது, உம்முல் குரா காலண்டர் முதலாம் பதிப்பை கைவிட்டது. "உம்முல் குரா 2ம் பதிப்பை" ஐ சவுதி அரங்கேற்றியது.
சவுதி பயன்படுத்திய அந்த "உம்முல் குரா ஒன்றாம் பதிப்பு" காலண்டருக்காக குர்ஆன் வசனங்களை சரி செய்து தனது அன்பர்களை மக்களிடம் பிரச்சாரம் செய்யவைத்த அலியார் ஆடிப்போனார். காலண்டரை மட்டும் மாற்றாமல் காலண்டரின் கொள்கைகளையும் சவுதி மாற்றிக்கொண்டது.
சங்கம நிகழ்வு + தேதிக்கோடு (IDL) தத்துவதத்தை மூட்டை கட்டிவிட்டு, தனது நிலைப்பாட்டை சங்கமம் + மக்கா என்று மாற்றிக் கொண்டது. அதாவது அலியாரின் கண்டுபிடிப்பான "மீக்காத்துல் கிப்லா" ஆட்டம் கண்டது. அது மட்டுமல்லாமல் அவருடைய பல கண்டுபிடிப்புகளும் காலாவதியாகிவிடும் நிலைக்கு ஆனது.
தேதிக்கோட்டிற்காக 55:17 வது வசனத்தை சரி செய்து மக்களிடம் பிரச்சாரம் செய்த நிலையில் இனி மக்கா தேதிக் கோட்டிற்காக ஏதாவது வசனத்தை சரிசெய்து காட்டினால் தவ்ஹீத் பேசும் மக்கள் "அல்லாஹ்வின் காலண்டரை" அழித்துவிடுவார்களே என்று எண்ணிய அலியார் சவுதிக்கு ஒரு கடிதம் எழுதினார்.
"முன்னர் இருந்த காலண்டர் சரியாகத்தானே இருந்தது அதை ஏன் மாற்றினீர்கள்" என்ற பாணியில் ஒரு கடிதத்தை சவுதி அரசாங்கத்திற்கு அனுப்பினார். அதை நகல் எடுத்து தன்னுடைய அன்பர்களிடம் காட்டி குதூகலித்தார். பார்த்தீர்களா! சவுதியின் தவறான நிலையை சுட்டிக்காட்டி விட்டேன். இனி நமது காலண்டரை தொடர்வதில் தடையேதுமில்லை. தொடரட்டும் நமது காலண்டர் பிரச்சாரம் என்று தனது அன்பர்களை உற்சாகப்படுத்தினார். பின்னர்தான் அலியாரின் ஆட்டம் ஆரம்பமானது.
கிமு 2000 முதல் கிபி 4000 வரையுள்ள 6000 வருடங்களுக்கான அமாவாசை மற்றும் கிரகண நேரங்களை கிரிகோரியன் காலண்டரின் கணக்கில் நாஸா வெளியிட்டிருக்கிறது. அந்த தரவுகளை (Data) அடிப்படையாக வைத்தும், உம்முல் குரா காலண்டர் முதல் பதிப்பின் விதிகளையும் வைத்து ஒரு நபரின் உதவியுடன் 5000 வருடங்களுக்கு சந்திர காலண்டரை புரோகிராம் செய்தார். அதாவது கிரிகோரியன் தேதிகளின் மீது சந்திர மாதங்களின் தேதிகளை பொருத்தினார்.
அந்த காலண்டரை "மனித குல நாட்காட்டி" Calendar for Mankind ("மவாக்கீத்து லின்னாஸ்") என்று பெயர் மாற்றம் செய்தார். ஏற்கனவே வளைத்து வைத்திருந்த குர்ஆன் வசனங்களுக்கு இந்த காலண்டர் பொருத்தமாக இருந்தது.
கிரிகோரியன் காலண்டரை அடிப்படையாகக் கொண்டு "மனித குல காலண்டர்" இயங்குவதை யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்பதற்காக கிரிகோரியன் காலண்டர் ஒரு கிறிஸ்தவக் காலண்டர் என்றும் ஆகவே, அதற்கு மாறு செய்ய வேண்டும் என்றார். "மாறு செய்ய சொல்லும் ஒருவர் அதை பின்பற்ற மாட்டார்" என்ற நம்பிக்கையில் மனித குல காலண்டரின் கிரிகோரியன் இயக்கத்தை மக்கள் அறிந்து கொள்ள முயலவேயில்லை. இவ்வாறாக "மனித குல காலண்டரின்" குலப் பெருமையை பாதுகாத்தார்.
அதாவது, சவுதி அரசாங்கம் குப்பையில் வீசிய "உம்முல் குரா முதல் பதிப்பு" தான் அலிமானிக் பான் அவர்களால் புணரமைக்கப்பட்ட தற்போதைய ஹிஜிரா கமிட்டி காலண்டர் ஆகும்.
27 வருடங்கள் சவுதி அரசாங்கம் அந்த காலண்டருக்காக குர்ஆனின் எந்த ஒரு வசனத்தையும் உதாரணமாக காட்டவில்லை. ஆனால், அலியாரின் அன்பர்கள் குர்ஆனைப் பார்த்து பார்த்து அந்த காலண்டரை அலிமாணிக் பான் அவர்கள் உருவாக்கியதாக நம்புகிறார்கள்.
அதனால்தான் அவரை மனித குல நாட்காட்டியை உலகிற்கு ஈந்த மாமேதை என்று அவரை ஹிஜிரா கமிட்டியினர் புகழ்கின்றனர்.
காதியானிகளின் மிர்சாகுலாம் போல, 19 களின் ரசாது கலீபா போல ஹிஜிரா காலண்டரை மார்க்கமாகப் பார்க்கும் ஹிஜிராணிகளுக்கு அலிமாணிக் பான் அவர்கள்தான் வழிகாட்டி.
**சூரியனும் சந்திரனும் கணக்கில் இருப்பதால்தான் 6000 வருடங்களுக்கு கிரகண நிகழ்வுகளை நாஸாவால் சொல்ல முடிகிறது.
**மாதங்களை கணக்கிடுவதற்கு நமக்கு உள்ள கட்டளை சூரிய சந்திர ஓட்டங்கள் அல்ல. சந்திரனின் முதல் தோற்றம்தான் நாம் கணக்கிட வேண்டியது. (அல் ஹிலால்- தலைப்பிறை)
**கணக்கு போட்டு முடிவு செய்ய முடியாத தலைப்பிறையைப் பற்றி நாஸா வாயே திறக்கவில்லை.
**அல்லாஹ் 2:189 ல் "அல் ஹிலால்" (தலைப்பிறை) களை கணக்கிட சொல்கிறான். அவைகள்தான் மனிதர்களுக்கும் ஹஜ்ஜிற்குமான கால எல்லைகள் என்கிறான்.
**அந்த "அல் ஹிலால்"களை எப்படி கணக்கிட வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் வழிகாட்டியிருக்கிறார்கள்.
**நாஸாவால் கணக்கிட முடியாத தலைப்பிறையை எப்படி கணக்கிட வேண்டும் என்று உலகப்படிப்பு இல்லாத ஒரு முஸ்லிம் கூட சொல்வார்.

**உலகக் கல்வியில் தேறிய கமிட்டி அறிவாளிகள், நாஸாவால் கூட கணக்கிட இயலாத "அல் ஹிலால்" களை அலிமாணிக் பான் கணக்கிட்டுவிட்டார் என்று நம்புவது வேதனையே!
அலிமானிக் பானை பற்றி தெரிந்துகொள்ள https://en.wikipedia.org/wiki/Ali_Manikfan