Sunday 15 October 2017

சிவகாசி காலண்டர்

*இவர்கள் பிறை பாப்பதே இல்லை. சிவகாசி காலண்டரை பார்த்து நோன்பையும் பெருநாளையும் அறிவிக்கிறார்கள்!*
இது கணக்கீட்டு சகோதரர்களால் சொல்லப்படும் குற்றச்சாட்டாகும். இதைப் பற்றி நாம் கணக்கீட்டிற்கு நெருக்கமானவரிடம் விசாரித்தபோது *“அரசு அறிவிக்கும் பெருநாள் விடுமுறைகளும், சிவகாசி காலண்டரும், நீங்கள் அறிவிக்கும் பெருநாட்களும் எப்போதும் ஒத்துப்போகிறதே”* என்று கூறினார். நாமும் அதை ஆராய்ந்தபோது, ஆம் பல மாதங்களில் நாம் பிறை பார்த்த நாட்கள் சிவகாசி காலண்டருடன் பொருந்திப்போகிறது. பஞ்சாங்க தகவல்கள் நிறைந்த சிவகாசி காலண்டரில் நம்முடைய பிறை பார்த்தல் எப்படிப் பொருந்திப்போகிறது என்று சிந்தித்தோம். அதற்கான ஆய்வில் இறங்கினோம். சிவகாசி காலண்டரில் வெளியிடப்பட்டிருக்கும் விடுமுறை நாட்கள் இந்திய அரசின் அலுவலக காலண்டரான சாகா காலண்டரில் இருந்து எடுக்கப்பட்டவையாகும். சாகா காலண்டரில் ரமளான்-1, பெருநாட்கள் ஆகியவற்றை எவ்வாறு கணித்து வெளியிடுகிறார்கள் என்று ஆய்வு செய்தோம்.
ஒவ்வொரு நாட்டிலும் அவர்களுக்கென வானியல் ஆய்வகங்களும் அதற்கென ஓர் அரசுத்துறையும் செயல்படும். அதேபோல இந்தியாவின் வானியல் ஆய்வகம் தான் Indian Astronomical ephemerisஐ வெளியிடுகிறது. அமாவாசை நேரங்களை ஹிஜ்ரா கமிட்டி நாசாவின் தளத்திற்கு சென்று எடுக்கத் தேவையில்லை. இந்திய வானியல் ஆய்வகத்தின் தளத்திலேயே அமாவாசை நேரங்கள் வெளியிடப்படுகின்றன. இந்த ஆய்வகம்தான் சிவகாசி காலண்டரில் வெளியிடப்படும் ரமளான்-1, இரு பெருநாட்கள் ஆகியவற்றின் தேதிகளை கணித்துக் கொடுக்கிறது. குறிப்பிட்ட நாளில் பிறை தெரிய வாய்ப்புள்ளதாக Positional Astronomy Centre கணிக்கும் நாளை அடிப்படையாகக்கொண்டே நோன்பு மற்றும் பெருநாள் விடுமுறைகளை அரசு அறிவிக்கிறது.
காலித் ஷௌகத் என்பவர் பிறைக் கணிப்பு வரைபடத்தை வெளியிடுவதை நாம் அறிவோம். அந்த வரைபடத்திலிருந்து குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட பகுதியில் பிறை தெரிய வாய்ப்புள்ளதா இல்லையா என்று நாம் அறிந்துகொள்ளலாம். மேலும் இங்கிலாந்து வானியல் ஆய்வகம் இதுபோன்ற கணிப்பை வெளியிடுகிறது. முஹம்மத் அஉதா என்பவரும் இதுபோன்ற கணிப்பை வெளியிடுகிறார். இவை மூன்றும் பிரபலமான பிறைக் கணிப்பு வரைபடங்கள் ஆகும். ஆனால் நமக்கு தெரியாமல் போன 20க்கும் மேற்ப்பட்ட பிறைக் கணிப்பு முறைகளும் வரைபடங்களும் உள்ளன.
பாபிலோனியர்கள் பிறை தெரியுமா என்பதைக் கணித்தனர். அமாவாசை நிகழ்ந்து 24 மணி நேரம் கடந்து சூரியன் மறைந்து 48 நிமிடங்களுக்குப்பின் நிலவு மறைந்தால் பிறை தெரிய வாய்ப்புள்ளதாக அவர்கள் கணித்தனர்.
பிற்காலத்தில் பல அறிஞர்கள் பிறை தெரியும் வாய்ப்பை கணித்தனர். அதில் அல் கவாரிஸ்மி, அல் சூஃபி , அல் பைரூனி போன்றோர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். நவீன காலத்தில் Schoch என்பவர் பின்வரும் சூத்திரத்தைப் பயன்படுத்தி ஓரிடத்தில் குறிப்பிட்ட நாளில் பிறை தெரியுமா எனக் கணித்தார்.
ARCV 10.3743 - 0.0137DAZ - 0.0097DAZ²
இந்த வரையறையை கடந்துவிட்டால் பிறை கண்ணுக்குத் தெரியுமென்பது Schoch ன் கணிப்பு.
பின்னர் வந்த யல்லோப், காலித் ஷௌகத், முஹம்மத் அஉதா அனைவரும் இந்த சூத்திரத்தை அடிப்படையாக வைத்தே அவர்களின் சூத்திரங்களை உருவாக்கினர். இந்த பார்முலாவைக் கொண்டு காலித் ஷௌகத் வரைபடம் வரைவதைப் போல நாமும் Schoch ன் கணிப்பு பார்முலாவை பயன்படுத்தி வரைபடம் ஒன்றை வரைந்துப் பார்த்தோம்.


நாம் சற்றும் எதிர்பாராத வகையில் Schoch ன் முறையில் வரையப்பட்ட கணிப்பு வரைபடம் காலித் ஷௌகத் அவர்களின் வரைபடத்தின் பச்சை வளையத்துடன் நெருக்கமாக பொருந்துகிறது.
D:\Articles\~softwares\visibility curves KHALID\1438-09_rmd_5-26-2017.gif
நாம் எடுத்துக்கொண்ட இந்த மாதத்திற்கு மட்டுமல்ல. மற்ற மாதங்களிலும் Schoch இன் கணிப்பும் காலித் ஷௌகத்தின் கணிப்பும் பெருவாரியாக பொருந்துகிறது. ஆக புதிதாக Schoch இன் முறையைப் பயன்படுத்தி ஒவ்வொரு மாதமும் வரைபடம் வரையத் தேவையில்லை. காலித் ஷௌகத்தின் பச்சை வளையத்தையே நாம் Schoch இன் கணிப்பு வரைபடமாகக் கருதலாம்.
ஒரு வருட காலத்திற்கு சிவகாசி காலண்டருடன் காலித் ஷௌகத்தின் கணிப்பு வரைபடத்தின் பச்சை வளையத்தை ஒப்பிட்டுப் பார்த்தோம். மிகச்சரியாக உள்ளது.
Schoch இன் கணிப்பு முறை என்ற பெயரை பலரும் அறியமாட்டோம். ஏனென்றால் இந்த முறை Indian Method என்ற பெயரில் அறியப்படுகிறது. Schoch இன் முறையைப் பயன்படுத்தி இந்திய வானியல் ஆய்வகம் பிறையைக் கணிப்பதால் இது பிற்காலத்தில் இந்திய முறை என்றே பிரபலம் அடைந்தது. இந்திய முறை தான் காலித் ஷௌகத், யல்லப், முஹம்மத் அஉதா ஆகிய அனைவருக்கும் முன்னோடியாக விளங்கியது
காலித் ஷௌகத்தின் கணிப்புப்படி பச்சை வளையத்தில் இருக்கும் பகுதிகளில் மேகமூட்டம் இல்லாத காலத்தில் பிறை பார்க்கப்பட்டுள்ளதை நாமறிவோம். Schoch இன் வரைபடமும் காலித் ஷௌகத்தின் பச்சை வளையமும் ஒன்றுதான் என்று பார்த்தோம். இதனால்தான் தமிழகத்தில் பிறை பார்க்கும் நாட்களும் சிவகாசி காலண்டரும் பொருந்திப்போகிறது. காலித் ஷௌகத்தின் கணிப்பின் பச்சை வளையம் மேகம் இல்லாத நாட்களில் உண்மையாகும்போது அதைவிட கண்டிப்பான (Strict) கணிப்பு பிறை பார்த்தலுடன் போருந்திப்போவதில் ஆச்சரியம் இல்லை.
சிவகாசி காலண்டரும் தமிழகத்தின் நபி வழிப்பிறை அறிவிப்புகளும் பெருவாரி ஒதுப்போவதற்கு இந்திய வானியல் ஆய்வகம் பயன்படுத்தும் கணிப்பு முறையே காரணம்.

ஆதாரங்கள்: