Friday 28 November 2014

கிப்லா - ஓர் அறிவியல் பார்வை

بِسْــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم
கிப்லாவை நோக்கி தொழுவதன் முக்கியத்துவத்தை நாம் அறிவோம். அந்த கிப்லா மிகத்துல்லியமாக இருக்க வேண்டியதில்லை நம் சக்திக்கு உட்பட்டு கிப்லாவை நோக்கினால் போதுமானது. ஆனால் நாம் அவ்வாறு செய்வதில்லை. பள்ளி வாசல்கள் கட்டப்படும்போது கிப்லாவை கணக்கிடத் தெரிந்த, அதற்கான கருவிகளை வைத்துள்ள அறிஞர்களை வரவழைத்து பள்ளிகளுக்கு கிப்லாவை நிர்ணயிக்கிறோம். இதன் நோக்கம் இறைவனுக்கு செய்யப்படும் வணக்கம் குறையற்றதாக இருக்க வேண்டும் என்பதே. அந்த அடிப்படையில் நாம் கிப்லாவை சரியாக அமைக்கிறோமா என்று மறு ஆய்வு செய்யக் கடமைப்பட்டுள்ளோம். இன்றுவரை தமிழகத்தில் நாம் பின்பற்றி வரும் கிப்லா நிர்ணயிக்கும் முறை துல்லியமற்றதாகும். காந்தமானியை (காம்பஸ்) பயன்படுத்தும் முறை துல்லியமற்றது என்பதை இஸ்லாமிய உலகம் நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டு பிடித்து விட்டது. ஆனால் அது இன்றழவும் தமிழ் கூறும் உலகத்தை வந்தடையவில்லை என்பது வருத்தத்திற்குரியது. பின்வரும் கட்டுரை தற்போது நடைமுறையில் இருக்கும் காம்பசை பயன்படுத்தி கிப்லாவை நிர்ணயிக்கும் முறை தவறானது என்று விளக்குவதுடன் சரியான முறையையும் கற்றுத்தருகிறது.
கட்டுரையில் முழுமையான அறிவியல் விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன. அறிவியலில் ஆர்வம் இல்லாதவர்களுக்கு இக்கட்டுரை சலிப்பை ஏற்படுத்தும். அத்தகையவர்களுக்காக அறிவியல் விளக்கங்களை மட்டும் சிகப்பு நிற எழுத்துக்களால் வேறுபடுத்தியுள்ளோம். அறிவியலுக்குள் செல்ல விரும்பாதவர்கள் சிகப்புநிற எழுத்துக்களை தவிர்த்துவிட்டு நீலநிற எழுத்துக்களை மட்டுமே வாசிக்கவும்
அல் குர்ஆன் 2:144 (முஹம்மதே!) உம்முடைய முகம் வானத்தை நோக்கி அடிக்கடி திரும்புவதைக் காண்கிறோம். எனவே நீர் விரும்புகிற கிப்லாவை நோக்கி உம்மைத் திருப்புகிறோம். எனவே உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராமின் திசையில் திருப்பு வீராக! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்! 'இதுவே தமது இறைவனிடமிருந்து வந்த உண்மை' என்று வேதம் கொடுக்கப்பட்டோர் அறிவார்கள். அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை
அல் குர்ஆன் 2:149 நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் திசையில் திருப்புவீராக!  அதுவே உம் இறைவனிடமிருந்து கிடைத்த உண்மை. நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.
அல் குர்ஆன் 2:150 நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் திசையில் திருப்புவீராக!  எங்கே நீங்கள் இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்! அவர்களில் அநீதி இழைத்தோரைத் தவிர (மற்ற) மக்களிடம் உங்களுக்கு எதிராக எந்தச் சான்றும் இருக்கக் கூடாது என்பதும், எனது அருட் கொடையை உங்களுக்கு நான் முழுமைப் படுத்துவதும், நீங்கள் நேர் வழி பெறுவதுமே இதற்குக் காரணம். எனவே அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்!
உங்களில் எவரேனும் தமக்கு முன்னால் 'தடுப்பு' வைத்துத் தொழும்போது, எவரேனும் குறுக்கே செல்ல முயன்றால் அவரைத் தடுக்க வேண்டும்; அதை அவர் எதிர்த்தால் அவருடன் சண்டையிட வேண்டும். ஏனெனில் அவர் நிச்சயம் ஷைத்தானாவார்
-நபிமொழி; புகாரி 509
தொழுபவருக்குக் குறுக்கே செல்பவர், அதனால் தமக்கு ஏற்படும் பாவத்தைப் பற்றி அறிந்திருந்தால் அவருக்குக் குறுக்கே செல்வதற்குப் பதில் நாற்பது நாள்கள் நின்று கொண்டிருப்பது அவருக்கு நல்லதாகத் தோன்றும்
-நபிமொழி; புகாரி 510
நிச்சயமாக உங்களில் ஒருவர் தொழுகையில் நிற்கும்போது அவர் தம் இறைவனிடம் அந்தரங்கமாக உரையாடுகிறார். அவருக்கும் கிப்லாவுக்கும் இடையே அவரின் இறைவன் இருக்கிறான்.
-நபிமொழி (யின் ஒரு பகுதி); புகாரி 405
'உங்களில் ஒருவர் தொழுது கொண்டிருக்கும்போது தம் முகத்துக்கு எதிராக உமிழலாகாது; ஏனெனில் அவர் தொழும்போது இறைவன் அவருக்கு முன்னிலையில் இருக்கிறான்'
-நபிமொழி;  புகாரி 406
'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுதார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கஅபாவை நோக்கித் தொழ வேண்டுமென ஆசைப்பட்டார்கள். அப்போது ‘(முஹம்மதே!) உம்முடைய முகம் வானத்தை நோக்கி அடிக்கடி திரும்புவதைக் காண்கிறோம்.’ (திருக்குர்ஆன் 02:144) என்ற வசனத்தை அல்லாஹ் அருளினான். உடனே கஅபாவை முன்னோக்கித் தொழ ஆரம்பித்தார்கள். ' "(முஸ்லிம்கள்) ஏற்கனவே இருந்த தமது கிப்லாவை விட்டும் ஏன் திரும்பி விட்டனர்?'' என்று மனிதர்களில் அறிவிலிகள் கேட்பார்கள். "கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன. அவன் நாடியோரை நேரான வழியில் செலுத்துகிறான்'' என்று கூறுவீராக!' (திருக்குர்ஆன் 02:142) என்ற வசனம் அருளப்பட்டதும் ஒருவர் நபி(ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டு வெளியே வந்து அன்ஸாரிக் கூட்டத்தாரிடம் சென்றார். அவர்கள் பைத்துல் முகத்தஸை நோக்கி அஸர் தொழுது கொண்டிருந்தபோது, 'நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் தொழுதேன். அவர்கள் கஅபாவை முன்னோக்கித் தொழுதார்கள் என்று நான் சாட்சி சொல்கிறேன்' என்று அவர் அவர்களிடம் கூறினார். உடனே தொழுது கொண்டிருந்தவர்கள் கஅபாவை முன்னோக்கித் திரும்பினார்கள்' என பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
புகாரி 399
மேலுள்ள இறைவசனங்களுக்கும் நபிமொழிகளுக்கும் விளக்கம் ஏதும் தேவையில்லை.
கிப்லா என்றால் என்னவென்பதை உலகின் எல்லா முஸ்லிம்களும் அறிந்து வைத்துள்ளனர். மேலும் எல்லா முஸ்லிம்களும் அறிந்து வைத்திருக்க வேண்டியதும் ஆகும். அவ்வாறான அடிப்படை காரியத்தை விளக்க வேண்டுமா? ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்து வைத்துள்ளனர் என்றால் இப்படி ஒரு கட்டுரையின் தேவை என்ன?
D:\Articles\~பிறை ஆய்வுகள்\கிப்லா\zero shadow day kaaba\arab news may-28-2015.jpgD:\Articles\hijri committee\qiblah\காபா.png
கிப்லா என்றால் தொழுகையில் கஅபாவை முன்னோக்குவது என்று ஒவ்வொருவரும் தெரிந்து வைத்துள்ளோம். கஅபா எங்கே உள்ளது என்று வினவினால் சிலர் அது நம்மூருக்கு மேற்கே உள்ளது என்றும், சிலர் மேற்கிலிருந்து சிறிது சாய்வாக உள்ளது என்றும் விடை அளிப்பார். சிலர் மேற்கத்திய நாடுகளுக்கு கிப்லா கிழக்கு திசை என்றும் விளங்கி வைத்துள்ளனர். மற்றும் சிலர் உலகில் கிப்லா என்பது கிழக்கு அல்லது மேற்கு திசை தான் வடக்கிலோ தெற்கிலோ கிப்லா அமையாது என்றும் விளங்கி வைத்துள்ளனர். இதில் சில சரியான கூற்றுகளும் சில தவறான கூற்றுகளும் உள்ளன. அவை எப்படி தவறானவை என நாம் தெரிந்து கொள்வோம்.
கிப்லா:
உலகில் முதன்முதலில், உலகின் முதல் மனிதன், உலகின் ஒரே கடவுளை வணங்க கட்டிய ஆலயம் கஅபா. முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் ஐவேளை தொழுகைகளை இந்த ஆலையத்தை நோக்கியே தொழவேண்டும். கஅபாவை முன்னோக்கி தொழுவது அந்த ஆலயத்தில் தொழுபவர்களுக்கோ அதை சுற்றிலும் உள்ள ஊர்வாசிகளுக்கோ எளிதான காரியம். எளிதில் அதனை முன்னோக்கித் தொழுதுவிடுவார்கள். ஆனால் தொலைவில் உள்ளவர்களுக்கு அது எளிதல்ல. திசைகளின் உதவியை நாடவேண்டும். கஅபா எத்திசையில் உள்ளது என்று தெரிந்துகொண்டு அத்திசையை நோக்கவேண்டும். கஅபாவின் கிழக்கே உள்ளவர் மேற்கு நோக்கியும், மேற்கே உள்ளவர் கிழக்கு நோக்கியும் தொழுவர். இதேபோல் வடக்கே உள்ளவர் தெற்கையும் தெற்கே உள்ளவர் வடக்கையும் நோக்குவர். வடகிழக்கே உள்ளவர் தென் மேற்கையும். தென்மேற்கே உள்ளவர் வடகிழக்கையும். வடமேற்கே உள்ளவர் தென்கிழக்கையும், தென்கிழக்கே உள்ளவர் வடமேற்கையும் நோக்குவர். இவற்றின் இடைப்பட்ட திசைகளில் உள்ளவர்கள் அவற்றின் எதிர் திசைகளை நோக்குவர். (இதில் விதிவிலக்கான சில பகுதிகளும் உள்ளன. அலாஸ்கா கஅபாவிற்கு வடக்கே உள்ளது ஆனால் அலாஸ்காவின் கிப்லாவும் வடக்கேதான் அமைந்துள்ளது)
இன்றுள்ள அறிவியல் கருவிகள் எதுவும் இல்லாத பண்டைய காலங்களில் நட்சத்திரங்கள், சூரியன், சந்திரன் போன்றவற்றை பயன்படுத்தி கிப்லாவை கணித்துள்ளனர். இவற்றின் மூலம் அமைக்கப்பட்ட பல பள்ளிவாசல்கள் துல்லியமாக கிப்லாவை முன்னோக்குபவையாக உள்ளன. சில பள்ளி வாசல்கள் தோரயமாகவே கிப்லாவை நோக்குபவையகவும். பல இடங்களில் தவறான திசைகளில் கிப்லா அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு உதாரணமாக இந்தியாவின் முதல் பள்ளிவாசல் என கருதப்படும், சேரமான்பெருமாள் அவர்களின் பெயரில் கட்டப்பட்ட மாலிக் தீனார் பள்ளிவாசலை குறிப்பிடுகின்றனர். இது ஆரம்பத்தில் கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டிருந்தது. பின்னர்தான் சரியான கிப்லாவை நோக்கி மாற்றியமைத்துள்ளனர்.
வட அமெரிக்காவின் கிப்லா வடமேற்கா? தென்மேற்கா? எனும் சர்ச்சை நெடுங்காலமாக இருந்தது. வடஅமெரிக்காவின் இந்த பிரச்சனைக்கு காரணம் தட்டையாக அமைக்கப்பட்ட உலக வரைபடமாகும். உலகம் உருண்டையானது. அதன் மாதிரியை சிறிய உலக உருண்டையாக அமைத்துகொண்டுள்ளோம். ஆனால் உலக உருண்டையில் ஒரே நேரத்தில் எல்லா நாடுகளையும் பார்வையிட இயலாது. உருண்டையின் ஒரு பகுதியை பார்க்கும்போது மறுபகுதி மறைந்திருக்கும். மேலும் உருண்டையை கையில் எடுத்து செல்வதும் எளிதல்ல. இதற்காகவே உலக வரைபடத்தை தட்டையாக (flat map projections) வரைய முற்பட்டார்கள். உருண்டையாக இருக்கும் உலகத்தை தட்டையாக வரையும்போது பல சிக்கல்கள் ஏற்படும். நாடுகளின் வடிவங்கள் உருக்குலையாமல் வரைந்தால் அவற்றின் அளவுகளும் தூரங்களும் திசைகளும் மாறும். நாடுகளின் அளவுகளை மாற்றாமல் வரைந்தால் அவற்றின் வடிவங்கள், தூரங்களும் திசைகளும் அடிபட்டுவிடும். இப்படி எல்லா அளவிகளும் சரியாக உள்ள, குறைகளற்ற ஒரு தட்டையான உலக வரைபடத்தை அமைக்கவே இயலாது. இன்று google maps உட்பட நாம் பயன்படுத்தும் எல்லா வரைபடங்களும் உருளை விதியை பயன்படுத்தி வரையப்பட்ட மர்காட்டர் (Mercator Projection) வரைபடமாகும். இது நாடுகளின் வடிவங்களை மாற்றாமல் வரையப்பட்டதாகும். ஆனால் இதில் அவற்றின் அளவுகளும், தூரங்களும், திசைகளும் தவறானவையாகும். எடுத்துக்காட்டிற்கு ஆஸ்திரேலியாவை விட மும்மடங்கு சிறிய நாடான கிரீன்லாந்து இந்த வரைபடத்தில் அதைவிட மும்மடங்கு பெரிதாக வரையப்பட்டுள்ளது. இது வரைந்தவரின் தவறல்ல. உருளை விதியை பின்பற்றினால் இப்படித்தான் வரைய முடியும். மேலும் வடஅமெரிக்க நகரங்களில் இருந்து வடகிழக்கில் உள்ள கஅபா இந்த வரைபடத்தில் தென்கிழக்கில் இருப்பது போல் தோன்றும். இதுதான் அங்கு நடக்கும் பிரச்சனைக்கு மூலக்காரணம்.


C:\Documents and Settings\Admin\Desktop\qiblah\marcator.gif
C:\Documents and Settings\Admin\Desktop\qiblah\sinusoid.gif
Mercator Projection: நாடுகளின் வடிவங்கள் மட்டும் சிதையாமல் வரையப்பட்டது.
Sinusoidal equal area Projection: நாடுகளின் பரப்பளவுகள் மட்டும் மாறாமல் வரையப்பட்டது.


C:\Documents and Settings\Admin\Desktop\qiblah\MeccaEquidistantMapSKA.gif
C:\Documents and Settings\Admin\Desktop\qiblah\Qiblah Direction on mercator-small.jpg
Equidistant azimuthal projection with ka’aba at the centre: இது இடங்களின் தூரங்கள் மற்றும் திசைகள் மாறாமல் வரையப்பட்டது. இதன் சிறப்பம்சம் கஅபா இதன் மையத்தில் உள்ளது. எந்த இடத்திலிருந்தும் கஅபாவிற்கு வரையப்படும் நேர்கோடு அந்த இடத்தின் கிப்லாவை குறிக்கும். இரண்டு கருப்பு கோடுகளும் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் வாஷிங்டன் நகரங்களின் கிப்லா ஆகும். இந்த வரைபடம் அலாஸ்கா கஅபாவிற்கு வடக்கே உள்ளதை தெளிவாக கட்டுகிறது. மேலும் அலாஸ்காவிலிருந்தும் கஅபா வடக்கேதான் உள்ளது. சிந்திப்பவர்களுக்கு விளங்கும்.
Qibla direction on Mercator map.
கிப்லா திசைகள் குறிக்கப்பட்ட மர்காட்டார் வரைபடம்.


அறிவியலின் பார்வையில் கிப்லா:
கிப்லாவை கண்டறிய நாம் இவ்வளவு சிரமப்பட காரணம் கஅபா நம் கண்களுக்கு தெரியாததுதான். கஅபா உலகத்தில் உள்ள எல்லோரின் கண்களுக்கும் தெரிவதாக வைத்துகொள்வோம் எல்லோரும் அதை நோக்கி எளிதாக கிப்லாவை அமைத்து கொள்ளலாம். கஅபாவை உலகத்தில் எல்லா பகுதியிலிருந்தும் பார்க்க இயலாது. ஆனால் கஅபாவின் மேல் வானை முட்டும் அளவிற்கு ஒரு கோபுரத்தை (மினார்) எழுப்பினால் அந்த கோபுரம் உலகின் எல்லா பகுதிக்கும் புலப்படும். அந்த கோபுரத்தை நோக்கி நம் கிப்லாவை அமைத்துகொள்ளலாம். அவ்வாறு ஒரு கோபுரம் ஒரே ஒரு முறை அமைக்கப்பெற்றாலும் அதை நோக்கி நம் கிப்லாவை அமைத்து கொள்ளலாம்.
இப்போது இப்படி கோபுரத்தை பார்த்து கிப்லாவை கண்டு பிடிப்பதை கணிதமாக மாற்ற முயல்வோம். நமது வீட்டிலிருந்து பார்க்கும்போது தூரமாக தெரியும் ஒரு பள்ளிவாசல் மினாரத்தையோ அல்லது ஒரு செல்போண் கோபுரத்தையோ அடைய அது நமது கண்களுக்கு தெரியும் அதே திசையில் நம்மால் பயணிக்க இயலாது. அதை சென்றடையும் வழி பல முறை வளைந்ததாக இருக்கலாம். நம் வீட்டிலிருந்து கிழக்கில் தெரியும் அந்த கோபுரத்தை அடையச் செல்லும் வழி ஒருவேளை வடக்கிலிருந்து தொடங்கலாம். நாம் வடக்கு நோக்கி புறப்பட்டு அந்த கோபுரத்தை அடைவதால் அது வடக்கு திசையில் இருப்பதாக கூற மாட்டோம். மாறாக அது நம் கண்பார்வைக்கு எத்திசையில் இருக்கிறதோ அதையே அது இருக்கும் திசையாக கூறுவோம். கண்பார்வை என்பது நேர்கோட்டில் செல்லும். நேர்கோட்டில் ஒரு இடத்தை அடையும் வழி அதன் வழிகளிலேயே மிகவும் தூரம் குறைந்ததாக இருக்கும். எனவே நம் இடத்தில் இருந்து வேறொரு கட்டிடம் இருக்கும் திசை என்பது அந்த கட்டிடத்தை மிக குறைந்த தூரத்தில் அடைய எந்த திசையில் பயணிக்க வேண்டுமோ அதுவே ஆகும்.
கிப்லா என்பது கஅபாவை மிக குறைந்த தூரத்தில் அடையும் திசையை நோக்குவதாகும்
மேலே உள்ள கூற்று சிறியதாக தோன்றினாலும் அது விளங்குவதற்கு எளிதானதல்ல. தட்டையாக அமையப்பெற்ற வரைபடத்தில் ஓர் ஊருக்கும் கஅபாவிற்கும் உள்ள மிக குறைந்த தூரத்திலான திசையை அறிய அந்த ஊருக்கும் கஅபாவிற்கும் ஒரு நேர்கோடு வரைந்தால் போதும். நேர்கோட்டில் அமையும் வழிதான் மிகவும் தூரம் குறைந்த வழி என்பது எல்லாருக்கும் தெரிந்ததே. ஆனால் உலகம் தட்டையாக இல்லை. உருண்டையாக உள்ளது.
எனில் உருண்டையாக உள்ள உலகத்தில் கிப்லாவை எவ்வாறு நிர்ணயிப்பது. ஒரு பறவை அல்லது ஒரு விமானம் ஓர் ஊரிலிருந்து கிப்லாவை நோக்கி பறக்கிறது. இப்படி பறக்கும் அந்த விமானம் கிப்லாவை சீக்கிரம் அடைய நேராக பறக்கவேண்டும். எந்த வளைவும் இல்லாமல் பறக்கவேண்டும். இவ்வாறு ஒரு விமானம் கஅபாவை அடைய மேற்கொள்ளும் தூரம் குறைந்த திசைதான் கிப்லா ஆகும். (விமானம் பறப்பதை பார்க்க உங்கள் ios device (iphone/ipad) இல் “Qibla 3D” எனும் softwareஐ நிறுவி பார்த்துக்கொள்ளலாம். https://itunes.apple.com/en/app/qibla-3d/id457283391)
நம்மால் ஒரு விமானத்தை பறக்கவிட்டு கிப்லாவை நிர்ணயிக்க இயலாது. இதற்கு நாம் கணிதத்தின் உதவியை நாடவேண்டும். கோளத்தின் இரண்டு புள்ளிகளுக்கு இடையிலான மிகக்குறைந்த தூரத்தை குறிக்கும் திசையை கண்டுபிடிக்க பின்வரும் (formula) பார்முலாவை பயன்படுத்தலாம்.
α = tan¹ {sin (21.42251 – λ) ÷ [cos φ × tan 39.8261382 sin φ × cos (21.4225 – λ) ] }
இதில் φ என்பது நமது ஊரின் குறுக்கை (latitude) மற்றும் λ என்பது நமது ஊரின் நெடுக்கை (longitude); இதன் விடை α என்பது நமது ஊரில் இருந்து கஅபாவின் அமைந்துள்ள கோணம் ஆகும். இதை நேர் வடக்கிலிருந்து கடிகாரதிசையில் குறிக்க வேண்டும்.
உங்கள் பள்ளிவாசலின் latitude மற்றும் longitude ஐ www.latlong.net § http://itouchmap.com/latlong.html § www.findlatitudeandlongitude.com இணைய தளங்களிலிருந்தும் எடுத்துக்கொள்ளலாம். iphone& android ஸ்மார்ட் போன்களில் மிகச்சரியாக நாமிருக்கும் இடத்தின் latitude மற்றும் longitude காட்டும் வசதி உள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கு பள்ளிவாசலின் lat&long ஐ (13.055097, 80.255090) www.latlong.net இல் இருந்து கிடைக்கபெற்றோம்.
இந்த பார்முலா பூமியை மிகச்சரியான கோளம் எனும் தோராயத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். ஆனால் பூமி அதன் மதிய ரேகை பகுதியில் புறம் தள்ளி துருவப்பகுதியில் தட்டையாகி நீள் கோள வடிவில் உள்ளது. கிட்டத்தட்ட வெங்காயத்தின் வடிவம். இதனால் நாம் பூமியை கோளம் என தோராயமாக்கி செய்யும் கணக்கில் மிகச்சிறிய அளவிலான பிழை இருக்கிறது. இந்த பிழையையும் தவிர்க்க நினைப்பவர்கள் wgs-84 (World Geodetic System) எனும் முறையயை பயன்படுத்லாம். WGS-84 எனும் முறையை பயன்படுத்த இது போன்ற எளிய பார்முலாக்கள் இல்லை. சில சிக்கலான கணினி வழிமுறைகளை (ALGORITHM) பின்பற்ற வேண்டும். இதை மிக எளிதாக http://wvaughan.org/qibla.html எனும் இணைய தளத்தின் உதவியுடன் செய்யலாம்.
கிப்லா மாறும் புவியல் புள்ளிகள்,
ஹரமில் தொழுபவர்கள் காஅபாவை சுற்றி நின்று தொழுவது போன்று கஅபா எதிர் முனையில் உள்ளவர் எந்த திசையை நோக்கி தொழுதாலும் அது கஅபா திசையே. கஅபாவின் புவியியல் புள்ளி: (21.4225,39.8262). கஅபாவின் எதிர்முனையின் புவியியல் புள்ளி: (-21.4225,-140.1738). கஅபாவின் எதிர் முனை என்பது “கஅபாவிலிருந்து பூமியை துளைத்து சரியாக பூமியின் மையம் வழியாக பூமியின் மறுபகுதிக்கு வந்தால் நாம் வெளியேறும் இடம் அதன் எதிர் முனை” ஆகும். இங்கே இருந்து கிப்லாவை கணக்கிட்டால் அது பூஜ்ஜியம் எனும் விடையை தரும். அதாவது இந்த பகுதியிலிருந்து எங்கு நோக்கி தொழுதாலும் அது கிப்லாதான். இதை மேலுள்ள கிப்லா வரைபடம் தெளிவாக காட்டுகிறது.
புவியியல் புள்ளிகள், அட்ச ரேகை, தீர்க்க ரேகை, நேரமண்டலங்கள் பற்றி தெரிந்துகொள்ள விஞ்ஞானம் பாகம்-1&2 கட்டுரைகளை வாசிக்கவும்
மேலே உள்ள formula மூலம் நம் பகுதியில் வடக்கிலிருந்து கஅபா எத்தனை டிகிரியில் உள்ளது என அறிய இயலும். இப்போது வடக்கு திசையை துல்லியமாக கண்டுபிடித்தால் அதிலிருந்து நாம் கிப்லாவை நிர்ணயித்து விடலாம். அது மிகவும் எளிமையானதுதானே, சூரியன் உதிப்பது கிழக்கு திசை, காலையில் சூரியனை நோக்கி நின்றால் நமக்கு இடப்புறம் வடக்கு இருக்கும், என்றால் இல்லை. வருடத்திற்கு இரண்டு நாட்களில் தான் சூரியன் சரியாக கிழக்கில் இருந்து உதிக்கும். மற்ற நாட்களில் வடகிழக்ககவோ தென்கிழகாகவோதான் உதிக்கிறது. பூமி 23.45டிகிரி சாய்வாக சுழலுவதே இதற்கு காரணம். இதுதான் பூமியில் காலநிலை மாற்றங்கள் ஏற்படுவதற்கும் காரணம். இதை பற்றி கூடுதலான அறிவியல் விளக்கங்களுக்கு எனது இரண்டு உதயம் இரண்டு மறைவு எனும் கட்டுரையை வாசிக்கவும். இதன் மூலம் சூரியன் உதிக்கும் திசையை வைத்து வடக்கை துல்லியமாக கணிக்க முடியாது என்பது தெளிவாகிறது.
வடக்கை கணிக்க மற்றொருமுறை காந்தமானியை பயன்படுத்துவதாகவும். ஒரு காந்தத்தை நூலில் கட்டி தொங்கவிட்டால் அது வடக்கு தெற்காகவே நிற்கும். அதை நாம் சுற்றிவிட்டலும் சுழற்சியின் முடிவில் வடக்கு தெற்காகவே நிற்கும். இதற்கு காரணம் பூமி ஒரு மிகப்பெரும் காந்தமாகும். பூமியின் காந்த புலம் வடக்கு தெற்காக அமைந்துள்ளது. பூமியின் காந்த புலத்தால் ஈர்க்கப்பட்டு காந்தமானது வடக்கு தெற்காக நிற்கும். இப்போது இதைவைத்து நாம் வடக்கை நிர்ணயித்து விடலாம் என்றால், இல்லை. இந்த காந்தமானி கட்டுவது உண்மையான வடக்கு திசை அல்ல. அது கட்டுவது “காந்த வடக்காகும்”. வடக்கிலும் ஒன்றிற்கு மேற்பட்ட வடக்குகள் உள்ளனவா? ஆம்!
1. நேர் வடக்கு (True North)
எந்த ஒரு உருண்டையும் சுழல்வதெனில் அதற்கு ஒரு அச்சு வேண்டும். எடுத்துக்காட்டிற்கு ஒரு ஆரஞ்சு பழத்தை சுழல வைக்க வேண்டும் எனில் அதன் இரண்டு காம்புகளையும் இரண்டு விரல்களுக்கு இடையில் வைத்து சுற்ற வேண்டும். இது போன்றுதான் பூமியும் அதன் வட தென் துருவங்களை அச்சாக கொண்டு சுழல்கிறது. இந்த இரண்டு துருவ பகுதிகளும்தான் நேர்வடக்கு மற்றும் நேர்தெற்கு திசைகள் ஆகும்.
2. காந்த வடக்கு (magnetic north)
பூமியின் காந்த சக்திக்கு காரணம் அதன் மையப்பகுதியில் ஓடிக்கொண்டிருக்கும் தனிமக்குழம்பாகும். எந்த ஒரு காந்ததிற்கும் இரண்டு துருவங்கள் இருப்பது போன்று பூமி காந்ததிற்கும் இரண்டு துருவங்கள் உள்ளன. இந்த இரண்டு துருவங்களும் சரியாக பூமியின் நேர்வடக்கு மற்றும் நேர்தெற்குகளில் பொருந்தி இருக்குமெனில் எந்த பிரச்சனையும் இல்லை. காந்தமானிகள் காட்டும் வட தென் திசைகளை நாம் அப்படியே எடுத்துக்கொள்ளலாம். ஆனால் காந்த வடக்கு நேர்வடக்கிலிருந்து 1000கிலோமீட்டர்களுக்கு மேல் விலகி உள்ளது. இதன் காரணம் காந்தமானி காட்டும் வடக்கு உண்மையான வடக்கிலிருந்து ஆயிரம் கிலோமீட்டர்கள் தொலைவிலுள்ள ஒரு பகுதியை கட்டுகிறது.
இதை விட ஒருபடி மேலாக காந்த தெற்கு தென் துருவத்திலிருந்து கிட்டத்தட்ட 3000km விலகி உள்ளது. சரி இவைகள் எவ்வளவு தூரம் விலகி உள்ளது என்பது தெரிகிறதல்லவா அந்த விலகல் கோணத்தை காந்தமானி காட்டும் திசையிலிருந்து கழித்தால் உண்மையான வடக்கு திசை கிட்டுமல்லவா என சிந்தித்தால் அதுவும் இயலாது. இந்த காந்த வடக்கானது ஒரு இடத்தில் மையம் கொள்ளாமல் நகர்ந்து கொண்டே செல்கிறது. இதற்கு காரணம் பூமிக்கடியிலுள்ள எரிமலை குழம்புகளின் ஓட்டமாகும். இவற்றின் ஓட்டத்தின் திசையையோ வேகத்தையோ துல்லியமாக கணிக்கவும் இயலாது. தற்போது காந்த வடக்கானது கனடாவின் கடல் பகுதியிலிருந்து வருடத்திற்கு சராசரி 60km வேகத்தில் ரஷ்யாவை நோக்கி நகர்கிறது. இதே போல் காந்த தெற்கும் வருடத்திற்கு 15km வேகத்தில் நகர்கிறது.
C:\Documents and Settings\Admin\Desktop\qiblah\mayans5.jpg
காந்த வடக்கு (magnetic north) மற்றும் நேர்வடக்கு (true north) களின் வித்தியாசத்தை Magnetic declination (காந்தப்புலச் சாய்வு) என்பார்கள். இதை துல்லியமாக கணிப்பது இயலாதது. இப்போது காந்தப் புலம் நகரும் கோணத்தை வைத்து எதிர்காலத்தில் இவ்வாறு மாறலாம் என்று கணிக்கிறார்கள். அதுவும் மிகக்குறிய காலத்திற்கே கணிக்கிறார்கள். இந்த கணிப்பு உண்மையாக இருக்கவேண்டுமென்றில்லை. 1950 இல் இருந்து 2010வரை உள்ள magnetic declination மாற்றம் இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.
காந்தப்புல சாய்வை கணிக்கும் இணையதளம்
மேலும் ஒவ்வோர் ஊரின் காந்தபுலமும் அந்தந்த இடத்தின் புவியியல்படி மாறியிருக்கும். ஓர் ஊரின் தரை பகுதி இரும்பு தாதுக்கள் நிறைந்த மணலையோ பாறைகளையோ கொண்டிருந்தால் இதன் மூலமும் காந்தமனியின் இயக்கம் பாதிக்கப்படும். மேலும் காந்தமானிக்கருகில் இரும்பு சாதனங்களோ மின் சாதனங்களோ இருப்பின் அவைகளும் காந்தமானியின் இயக்கத்தை பாதிக்கும்.
புவியின் காந்தப்புலம் நிலையற்று நகர்வதாலும், அதன் நகர்வையும் திசையையும் துல்லியமாக கணக்கிட இயலாததாலும், ஒவ்வோர் ஊரின் புவியியல் காரணங்களால் காந்தமானியின் இயக்கம் பாதிக்கப்படுவதாலும் கிப்லாவை நிர்ணயிக்க காந்தமானி தகுதியற்றதாக ஆகிறது. காந்தமானி காட்டும் திசையை ஒருக்காலும் கிப்லாவை நிர்ணயியிக்க பயன்படுத்த கூடாது
இன்று பல பள்ளிவாசல்களுக்கு கிப்லாவை நிர்ணயிப்பது காந்தமானியை வைத்துதான். எல்லா Android & iphone கிப்லா softwareகளும் இதன் அடிப்படியில்தான் செயல்படுகின்றன. அவைகள் phone இன் GPSவியைப் பயன்படுத்தி அந்த இடத்தின் latitude & longitude களை கண்டுபிடித்து மேலே குறிப்பிட்ட formula வை பயன்படுத்தி கிப்லா கோணத்தைக் கண்டுபிடிக்கின்றன. பின்னர் phone இல் உள்ள (magnetic compass) காந்தமானியை பயன்படுத்தி காந்த வடக்கை கண்டுபிடித்து அதனுடன் இந்த கோணத்தை கூட்டி கிப்லாவை காட்டுகின்றன. இத்தகைய softwareகளே ஒரு எச்சரிக்கையையும் தெரிவிக்க தவறுவதில்லை. “இது magnetic north ஐ பயன்படுத்தி இயங்குவதாகவும். magnetic north ம் true northம் வேறு வேறு. எச்சரிக்கையாக பயன்படுத்தவும்” . மிக்க softwareகளிலும் இப்படி ஒரு எச்சரிக்கையை காணலாம். சில softwareகள் true northஐ பயன்படுத்தி இயங்குவதாக தெரிவித்தாலும் அவைகள் magnetic north மற்றும் true northகளின் வித்தியாசத்தை (magnetic declination) கணித்து, true northஐ கணிக்கிறது. Magnetic declinationஐ துல்லியமாக கணிப்பது இயலாதது. மேலும் இந்த சாப்ட்வேர்கள் சரியான Magnetic declinationஐ கணிக்கின்றனவா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.
இத்தனைக் கோளாறுகள் உள்ள முறைகளை பின்பற்றி கிப்லாவை நிர்ணயிப்பதை விட்டுவிட்டு கிப்லாவை நிர்ணயிக்க அல்லாஹ் இயற்கையாக அமைத்த ஏற்பாடுகளைப் பார்ப்போம்.
Sundial (நிழற்கடிகாரம்):
கிப்லாவை துல்லியமாக அமைப்பதற்கு நமக்கு நிழற்கடிகாரம் தேவைப்படுகிறது. இதை எப்படி அமைப்பது என பார்ப்போம். “நிழற்கடிகாரம் என்பது செங்குத்தாக நடப்பட்ட ஒரு குச்சியின் நிழல் ஆகும்.” இதற்கு பூமியில் நிழல் விழும் அளவிற்கு தடிமனான ஒரு குச்சியையோ, கம்பியையோ நாம் கிப்லா குறிக்கப்போகும் இடத்தில் மிகச்சரியாக செங்குத்தாக நடவேண்டும். இது செங்குத்தாக இருப்பதா என்பதை அறிய கொத்தனார் சுவர் செங்குத்தாக இருப்பதை அறிய உதவும் கருவியை பயன்படுத்தலாம். பள்ளியைக் கட்டும் கொத்தனாரே இதை அமைத்து தருவார். அல்லது அதையும் நாமே செய்து கொள்ளலாம். ஒரு சிறிய கனமான கல்லையோ கம்பியையோ ஒரு நூலில் கட்டி தொங்க விடவேண்டும். இது புவியீர்ப்பு சக்தியின் காரணமாக சரியாக செங்குத்தாக தொங்கும். இதை வைத்து நாம் நட்ட குச்சியை சரிபார்த்துக்கொள்ளலாம்
இதுதான் நிழற்கடிகாரம். இதன் நிழல் காட்டும் திசை நிழற்கடிகாரத்திசை (SD shadow) எனவும். இதன் நிழலின் எதிர்திசை எதிர்-நிழற்கடிகாரத்திசை (Opposite SD shadow) எனவும் அழைக்கப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்தில் இந்த நிழலின் மேல் சரியாக நாம் ஒரு கோட்டை வரைந்து பயன்படுத்தி கொள்ளவேண்டும். இது கீழே உள்ள படத்தில் தெளிவாக்கப்பட்டுள்ளது. இதன் முக்கியத்துவம் என்னவெனில் சூரியன் வானிலிருக்கும் இடத்தை பொறுத்து நிழற்கடிகாரம் திசைகளை துல்லியமாக காட்டும்.
நிழற்கடிகாரம் துல்லியமாக திசைகளை காட்டவேண்டும் எனில் நமது கடிகாரமும் துல்லியமாக நேரத்தை காட்டவேண்டும். இதற்கு ஒரு atomic time serverஐ வைத்து நமது கடிகாரங்களை சரி செய்து கொள்ளவேண்டும். இதற்காக பல softwareகள் உள்ளன.
http://www.timeanddate.com/worldclock/india/new-delhi இந்த இணையத்தளத்தில் சென்றும் கடிகார நேரத்தை சரிசெய்து கொள்ளலாம்.
முறை 1 (மிகத்துல்லியமானது):
கிப்லாவை கண்டறிய நாம் இவ்வளவு சிரமப்பட காரணம் கஅபா நம் கண்களுக்கு தெரியாததுதான். கஅபா உலகத்தில் உள்ள எல்லோரின் கண்களுக்கும் தெரிவதாக வைத்துகொள்வோம் எல்லோரும் அதை நோக்கி எளிதாக கிப்லாவை அமைத்து கொள்ளலாம். கஅபாவை உலகத்தில் எல்லா பகுதியிலிருந்தும் பார்க்க இயலாது. ஆனால் கஅபாவின் மேல் வானை முட்டும் அளவிற்கு ஒரு கோபுரத்தை (மினார்) எழுப்பினால் அந்த கோபுரம் உலகின் எல்லா பகுதிக்கும் புலப்படும். அந்த கோபுரத்தை நோக்கி நம் கிப்லாவை அமைத்துகொள்ளலாம். அவ்வாறான ஒரு கோபுரம் ஒரே ஒரு முறை அமைக்கப்பெற்றாலும் அதை நோக்கி நம் கிப்லாவை அமைத்து கொள்ளலாம்.
இதற்கு ஒரு வழிமுறையை அல்லாஹ் ஏற்படுத்தி உள்ளான். வருடத்தில் இரண்டு முறை சூரியன் சரியாக கஅபாவிற்கு மேலே வரும். அப்போது சூரியனை பார்ப்பதும் கஅபாவிற்கு மேலே எழுப்பப்பட்ட கோபுரத்தை பார்ப்பதும் ஒன்றே.
மே 27/28 சவுதி நேரப்படி மதியம் 12:18க்கும் ஜூலை 15/16, 12:27க்கும் எல்லா ஆண்டும் சூரியன் சரியாக கஅபாவிற்கு மேலே இருக்கும். இது இதே நாட்களில் இந்திய நேரப்படி 2:48 மற்றும் 2:57 இல் அமையும். இந்த நேரங்களில் எதிர் நிழற்கடிகாரத்திசை கிப்லாவை அடையாளப்படுத்தும். பின்வரும் வருடங்களின் கிப்லா நாள் எவை என பின்வரும் அட்டவணை காட்டுகிறது
(இம்முறைக்கு ஒரு குச்சியை தவிர வேறெந்த கருவியும் தேவையில்லை)


Year

Qibla Day
(9:18 UTC)
Qibla Day
(9:27 UTC)
2015

28 May
16 July
2016

27 May
15 July
2017

27 May
15 July
2018

28 May
15 July
2019

28 May
16 July
2020

27 May
15 July


இதே போன்று வருடத்தில் இரண்டு முறை சூரியன் சரியாக கஅபாவின் எதிர் முனைக்கு மேலே இருக்கும். கஅபாவிற்கு மேலே சூரியன் ஒளிரும் நேரத்தில் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய கண்டங்கள் இரவாக இருக்கும். அவர்களால் அந்த நேரத்தில் கிப்லாவை அமைக்க இயலாது. அத்தகைய பகுதியினருக்கு வருடத்தில் இரண்டு முறை கஅபாவின் எதிர்முனையில் சூரியன் ஒளிரும்படி அல்லாஹ் ஏற்பாடு செய்துள்ளான். இந்த நேரத்தில் நிழற்கடிகாரத்திசை கிப்லாவை அடையாளப்படுத்தும். வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய கண்டங்களுக்கு பின்வரும் வருடங்களின் கிப்லா நாள்.
Year
Qibla Day
(21:29 UTC)
Qibla Day
(21:09 UTC)
2015
13 January
28 November
2016
13 January
28 November
2017
12 January
28 November
2018
13 January
28 November
2019
13 January
28 November
2020
13 January
28 November


கஅபாவிற்கு மேல் சூரியன் ஒளிரும் காட்சி
C:\Users\Peer Mohamed\AppData\Local\Microsoft\Windows\INetCache\Content.Word\daylightmap2.png
கஅபாவின் எதிர் முனைக்கு மேல் சூரியன் ஒளிரும் காட்சி
முறை 2:
வருடத்தின் மிக்க நாட்களிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வானில் சூரியன் இருக்கும் திசை கிப்லாவை நோக்கி இருக்கும். இது முறை 1ஐ போல் கஅபாவிற்கு நேரே சூரியன் வருவதல்ல. மாறாக சூரியன், கஅபா, நமது ஊர் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும். குறிப்பிட்ட அந்த நேரத்தில் நிழற்கடிகாரம் கிப்லாவை காட்டும்.
http://www.islamicfinder.org/sunQiblah.php இந்த இணையதளத்திற்கு சென்று நமது latitude, longitude, time zone (GMT+5.5 for India), வருடம் மற்றும் மாதத்தை உள்ளீடு செய்தால். நமது பகுதியில் சரியாக எப்போது சூரியன் கிப்லாவின் திசையில் இருக்கும் எனும் அட்டவணை கிடைக்கும். இந்த அட்டவணையில் உள்ள நேரத்தில் நிழற்கடிகாரம் திசை கிப்லாவை அடையாளப்படுத்தும்.
இதே வேலையை இன்டர்நெட் இல்லாமல் செய்யும் மென்பொருட்களும் உள்ளன. இவற்றில் LATTITUDE, LONGITUDE, TIME ZONE & DATEஆகியவற்றை உள்ளீடு செய்தால் போதுமானது.
1. Minaret by Dr. Kamal Abdali http://patriot.net/~abdali/ftp/minar40.zip
2. Accurate times by Engr. Odeh http://www.icoproject.org/accu_setup.exe
ஆண்ட்ராய்ட் ஆப்-கள்
https://play.google.com/store/apps/details?id=com.cepmuvakkit.compass&hl=en


(இம்முறைக்கு ஒரு கணினி அல்லது ஆண்ட்ராய்ட் போன் மற்றும் ஒரு குச்சி ஆகியவை தவிர வேறெந்த கருவியும் தேவையில்லை)
முறை 3 (நேர்வடக்கை நிர்ணயித்து அதிலிருந்து கிப்லாவை வரைந்து கொள்வது)
முறை 2 ஐ பயன்படுத்தி தமிழ்நாட்டில் மே முதல் ஜூலை மாதங்கள் வரை கிப்லாவை நேரடியாக நிர்ணயிக்க இயலாது. இதற்கும் இறைவன் ஒரு வழியை ஏற்படுத்தியுள்ளான். சூரியன் சரியாக உச்சத்தில் இருக்குபோது நிழற்கடிகாரம் மிகச்சரியாக வடக்கு தெற்காக இருக்கும். அப்போது நிழலின் மீது ஒரு கோட்டை வரைந்து கொண்டு அதிலிருந்து கிப்லா கோணத்தை ஒரு பாகைமானியைக் (protractor) கொண்டு வரைவதன் மூலம் கிப்லாவை நிர்ணயிக்கலாம். நிழல் மிகவும் சிறிதாக இருந்தால் இம்முறையின் பிழை அதிகரிக்கும்.
சூரியன் உச்சத்தில் இருக்கும் நேரத்தை www.islamicfinder.org இணையதளம் காட்டுகிறது. மேலும் www.esrl.noaa.gov/gmd/grad/solcalc § http://www.ga.gov.au/geodesy/astro/sunrise.jsp மற்றும் https://www.timeanddate.com/worldclock/sunrise.html ஆகியவை காட்டுகின்றன. மேலும் பல இணைய தளங்கள் இருக்கலாம்.
(இம்முறைக்கும் ஒரு கணினி அல்லது ஆண்ட்ராய்ட் போன் மற்றும் ஒரு குச்சி ஆகியவை தவிர வேறெந்த கருவியும் தேவையில்லை)
முறை 4 (சூரியன் வானில் இருக்கும் திசையை கண்டறிந்து அதிலிருந்து கிப்லா கோணத்தை நிர்ணயிப்பது).
முறை 1 வருடத்திற்கு இருமுறை மட்டுமே உதவும், 2 வது முறை வருடத்தின் சில மாதங்களில் கிப்லாவை காட்டாது. சில மாதங்களில் நண்பகலில் கடிகார நிழல் மிகவும் சிறியதாக இருக்கும் சில நாட்களில் அறவே இருக்காது. இதனால் 3ம் முறை வருடத்தில் எல்லா நாட்களிலும் பயன்படாது. மேலே முறை எண் 2 இல் இருக்கும் இணையதளமும் மென்பொருட்களும் எவ்வாறு செயல்படுகின்றன என அறிந்து கொண்டால் அந்த மென்பொருட்களின் உதவி இல்லாமலே நம்மால் கிப்லாவை நிர்ணயிக்க இயலும்.
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f7/Azimuth-Altitude_schematic.svg/350px-Azimuth-Altitude_schematic.svg.png
சூரியன் உதிப்பதிலிருந்து மறைவது வரை நிழல்கள் எதாவது ஒரு திசையை காட்டிக்கொண்டுதான் இருக்கிறது. அது என்ன திசை என்று தெரிந்தால் அதிலிருந்து கிப்லாவை கண்டுபிடித்து விடலாம். சூரியன் ஒவ்வொரு நிமிடமும் வடக்கு திசையிலிருந்து எத்தனை டிகிரி கோணத்தில் உள்ளது என்பதை இன்றைய விஞ்ஞானத்தின் உதவியால் மிக எளிதாக கண்டு பிடித்து விடலாம். வானில் சூரியன் நேர்வடக்கிலிருந்து இருக்கும் கோணத்தை கணக்கிடும் பல முறைகள் உள்ளன். இதை செய்யும் சில இணைய தளங்களும் சாப்ட்வேர்களும் உள்ளன. வானில் சூரியன் இருக்கும் திசையை azimuth என்று அழைக்கிறோம். இதை நேர்வடக்கிலிருந்து கடிகார திசையில் டிகிரியில் அளக்கிறோம். (மேலே முறை எண் 2 இல் இருக்கும் இணைய தளமும் மென்பொருட்களும் இந்த முறையையே பயன்படுத்துகின்றன. நமது வானில் சூரியன் இருக்கும் கோணமும் நமது கிப்லா கோணமும் சமாமாக இருப்பின் நமது நிழல் (எதிர் திசையில்) சரியாக கிப்லாவை நோக்கி இருக்கும்)
சூரியன் பிரகாசமாகவும் நிழற்கடிகாரத்தின் நிழல் நீழமாகவும் இருக்கும் ஒரு தருணத்தில் சரியாக நிழலின் மீது கொடு வரைந்து கொள்ள வேண்டும். இப்போது நாம் கோடுகிழித்த அந்த நேரத்தை www.esrl.noaa.gov/gmd/grad/solcalc எனும் இணைய தளத்தில் நமது ஊரின் LATTITUDE, LONGITUDE, TIME ZONE & DATE ஆகியவற்றுடன் உள்ளீடு செய்தால் சூரியனின் azimuth கிடைத்து விடும். ஏற்கனவே வரைந்த கோட்டிலிருந்து எதிர் கடிகார திசையில் அசிமுத் கோணத்தை வரைந்தால் நேர் வடக்கு திசை கிடைக்கும் பின்னர் அதிலிருந்து கிப்லா கோணத்தை வரைவதை மூலம் கிப்லா குறிக்கப்பட்டுவிடும்.
உதாரணமாக:- திருவிதாங்கோடு தவ்ஹீத் பள்ளியின் கிப்லாவை குறிக்கவேண்டுமெனில் அதன் புவியியல் அளக்கூறுகளை நான் முதலில் கூகுள் மேப்பிலிருந்து எடுத்துக்கொள்வேன்
இங்கே https://goo.gl/maps/XKWY9jedcnv >> 8.2510538 & 77.2990231
பின்னர் அவற்றை மேற்சொன்ன பார்முலாவில் இட்டு கிப்லா கோணத்தை கண்டுபிடிப்பேன். >> கிப்லா கோணம் வடக்கிலிருந்து 294.28
ஜனவரி 7, 2017ம் நாள் காலை 10மணிக்கு நான் கிப்லாவை குறிக்க திட்டமிட்டுளேன் என்றால் அந்நேரத்தில் சூரியன் எத்திசை நோக்கி இருக்குமே என்பதை நான் முன்னரே https://www.esrl.noaa.gov/gmd/grad/solcalc/azel.html இந்த இணையதளத்திலிருந்து எடுத்து வைத்துக்கொள்வேன். இவ்விணையதளத்தில் பள்ளியின் புவியியல் அளக்கூறுகள் மற்றும் நேரத்தை இட்டால் சூரியன் அந்நேரத்தில் இருக்கும் திசையை அது காட்டிவிடும்.
சூரியன் ஜனவரி 7, 2017ம் நாள் காலை 10மணிக்கு சூரியன் இருக்கும் அசிமத் கோணம் >> 131.08
இப்போது நான் ஏற்கனவே துல்லியமாக சரி செய்து வைத்திருந்த கடிகாரத்தில் 10 மணியாகும்போது செங்குத்தாக நடப்பட்டிருக்கும் குச்சியின் நிழலின் மீது கோடு வரைவேன். பின்னர் அக்கோட்டிலிருந்து 163.2 டிகிரிக்கு (294.28 – 131.08 = 163.2) ஒரு கோடுவரைந்தால் அது துல்லியமாக கிப்லாவைக் காட்டும்.
(இம்முறைக்கு ஒரு கணினி அல்லது ஆண்ட்ராய்ட் போன், ஒரு குச்சி, ஒரு பாகைமானி ஆகியவை தேவை)
அல்ஹம்துலில்லாஹ்!!! முறை 2, 3 & 4 மூன்றையும் பயன்படுத்தும் விதாமாக ஒரு excel sheet ஐ வடிவமைத்துள்ளோம். தொழுகை நேரங்களை கணக்கிடுவதையும் சேர்த்துள்ளோம். மேலும் இவைகள் எப்படி கணக்கிடப்படுகின்றன எனும் விளக்கங்களையும் இடம்பெறச்செய்துள்ளோம். இணையதள வசதி இல்லாமலேயே தொழுகை நேரங்களையும் கிப்லாவையும் கணக்கிட்டுவிடலாம். அனைவருக்கும் இது குறித்த கல்வி சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் அதை இங்கே வெளியிடுகிறோம்.
இங்கே க்ளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்



தவறான முறை:
இணையத்தளங்களில் உள்ள கைக்கடிகாரத்தை பயன்படுத்தி வடக்கை அறிந்துகொள்ளும் முறையும் தோராயமான முறையாகும். இது பயணங்களில் தொலைந்து போனவர்கள் எந்த ஒரு கருவியும் இல்லாத நிலையில் கைக்கடிகாரத்தை மட்டும் பயன்படுத்தி வடக்கை கண்டுபிடிக்கும் உயிர்காக்கும் வித்தை ஆகும் (survival technique). இதை பயன்படுத்தி கிப்லாவை அமைப்பது சரியல்ல.
முடிவுரை
கிப்லாவை அமைக்க இத்தனை சிரமம் தேவையா? காம்பஸை பயன்படுத்தினால் என்ன? கிப்லாவில் எத்தனை டிகிரிதான் மாற்றம் ஏற்பட்டுவிடும்? என்று கேள்விகள் எழும்பினால், தெரிந்துகொள்ளுங்கள் சென்னையிலிருந்து 6டிகிரி தவறாக கிப்லாவை அமைத்தால் கஅபாவிற்கு பதிலாக மஸ்ஜிதுன் நபவியை நோக்கி தொழுகொண்டிருப்போம்.
கிப்லாவை மிக துல்லியமாக அமைத்துகொள்ளவேண்டும் என மார்க்கம் கூறவில்லை, என்றாலும் நாம் அதை செய்து கொண்டுதான் இருக்கிறோம். பள்ளிகள் கட்டும்போது துல்லியமாக கிப்லா இருக்கவேண்டும் என்றுதான் காம்பசை பயன்படுத்தி கிப்லாவை நாம் அமைக்கிறோம். மேலும் நாம் கூறிய இந்த முறைகள் காம்பஸ் முறையை விட எளிமையானவையும் கூட. காம்பசை வைத்து தரையில் வரைந்து செய்யப்படும் வேலைகளை விட எளிமையானவையும் ஆகும். துல்லியமானவையும் கூட. இவற்றை கொண்டு குறைந்த பட்சம் நமது பள்ளிவாசல்களில் சரியான முறைப்படி கிப்லாவை அமைத்துக்கொள்ளவேண்டும். ஏற்கனவே கட்டப்பட்ட பள்ளிகளின் கிப்லாக்களையும் சரிசெய்ய வேண்டும். அல்லாஹ் மிக அறிந்தவன்.
கிப்லாவை பற்றி மேலும் அதிக தகவல்களுக்கு piraivasi.com/2015/03/committeeqibla.html
தொழுகை நேரங்களை எப்படி கணக்கிடுகிறார்கள் என்பதை அறிய piriavasi.com/2015/04/prayertimes.html
நன்றிக்குரிய இணையதளங்கள்: