Thursday 3 November 2022

17:37 ம் வசனத்தின் மொழிபெயர்ப்பில் இலக்கண பிழைகள்

பீஜேவின் 17:37 ம் வசனத்தின் மொழிபெயர்ப்பில் இலக்கண பிழைகள்


அரபு மொழியில் لن ,لم ,لا ,ما என நான்கு வார்த்தைகள் எதிர்மறை (Negation) வார்த்தைகளாக உள்ளன. (ٱلنَّفْي) அரபு மொழியில் இது நஃபி என்று சொல்லப்படும். இவற்றுள், மா (ما) மற்றும் லா (لا) என்பவை பற்றி நமக்கு ஓரளவுக்குத் தெரியும். நாம் விரிவாக தெரிந்துகொள்ள வேண்டியது லம்(لم) மற்றும் லன்(لن) என்பவை பற்றித்தான்.

இவற்றில் லம் (لم) எனும் வார்த்தை இறந்தகால வினைச்சொல்லை மறுப்பதற்காக பயன்படுத்தப்படும்.

எடு:

அவன் போனான் (தஹப - ذهب) என்பது இறந்தகால வாக்கியம். 'அவன் போகவில்லை' என்று சொல்ல வேண்டுமானால் இந்த வார்த்தைக்கு முன்பாக லம்(لم) என்ற வார்த்தையை வைத்தால் போதும். லம் யத்ஹப் (لم يذهب) என்றால் 'அவன் போகவில்லை' என்று பொருளாகிவிடும்.

அடுத்ததாக, லன்(لن) எனும் வார்த்தை எதிர்கால வினைச்சொல்லை மறுப்பதற்காக பயன்படுத்தப்படும்.

எடு:

அவன் போவான் (ஸயத்ஹப் - سيذهب) என்பது எதிர்கால வாக்கியம். 'அவன் போகமாட்டான்' என்று சொல்ல வேண்டுமானால் இந்த வார்த்தைக்கு முன்பாக லன் (لن) என்ற வார்த்தையை வைத்தால் போதும். லன் யத்ஹப் (لن يذهب) என்றால் 'அவன் போகமாட்டான்' என்று பொருளாகிவிடும்.

வினைச்சொல்லுக்கு முன்பாக லன் (لن) எனும் வார்த்தை இருந்தால் அதை எதிர்மறை சொல்லாக எடுக்க வேண்டும். இது அரபு மொழியில் பாலர் பாடம். (لن) எனும் வார்த்தை இருந்து எதிர்மறையாக எடுக்க ஒருவர் மறுத்தால் அவருக்கு அரபு இலக்கணத்தில் அடிப்படை அறிவு இல்லையென்று பொருள்.

இதுபோன்று, அடிப்படை அறிவு இல்லாமல் பீஜே மொழிபெயர்த்த குர்ஆனின் ஒரு வசனம்தான் பதினேழாவது அத்தியாயத்தின் முப்பத்தி ஏழாவது வசனம் (17:37).

وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا ۖ إِنَّكَ لَن تَخْرِقَ الْأَرْضَ وَلَن تَبْلُغَ الْجِبَالَ طُولًا

17:37. பூமியில் கர்வத்துடன் நடக்காதீர்! நீர் பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டீர்!

(மொழிபெயர்ப்பு : பீஜே )

இந்த வசனத்தில் லன்(لَن) என்ற சொல் இரண்டு தடவை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

(1) லன் தஃஹ்ரிக் (لَن تَخْرِقَ)
(2) லன் தப்லு'க் (لَن تَبْلُغَ)

இந்த இரண்டுமே எதிர்கால வினைச்சொல்லை எதிர்மறையாக ஆக்குபவைதான்.

** தஃஹ்ரிக் (تَخْرِقَ) என்றால் துளையிடுவது அல்லது பிளப்பது என்ற பொருள்.

¶¶ லன் தஃஹ்ரிக் (لَن تَخْرِقَ) என்றால் 'நீ பிளக்க மாட்டாய்' என்று பொருள்.

** தப்லு'க் (تَبْلُغَ) என்றால் 'அடைதல்' என்று பொருள்.

¶¶ லன் தப்லு'க் (لَن تَبْلُغَ) என்றால் 'நீ அடைய மாட்டாய்' என்று பொருள்.

17:37 வது வசனத்தை மொழிபெயர்த்திருக்கும் எல்லோருமே இதை சரியாகவே மொழிபெயர்த்துள்ளனர். ஆனால், பீஜே  மட்டும் உலகத்தில் எவரும் செய்யாத விதத்தில் புது இலக்கணம் படைத்து மொழிபெயர்த்துள்ளார்.

லன்(لَن) என்ற சொல் இரண்டு தடவை இடம்பெற்றிருப்பதில் இரண்டாவது லன்(لَن) என்பதை எதிர்மறையாக எடுக்கும் பீஜே , முதலாவது லன்(لَن) என்பதை எதிர்மறையாக எடுக்காமல் புது இலக்கணம் படைத்துள்ளார்.

அதைப் பார்ப்போம்...

إِنَّكَ لَن تَخْرِقَ الْأَرْضَ وَ لَن تَبْلُغَ الْجِبَالَ طُولًا

இதுதான் அந்த வசனத்தில் நாம் பார்க்க வேண்டிய பகுதி. இதில் இரண்டு தடவை லன்(لَن) என்ற சொல் இடம்பெற்றுள்ளது. இரண்டுமே எதிர்மறையாக மொழிபெயர்க்கப்பட வேண்டும்.

"பூமியில் கர்வத்துடன் நடக்காதீர்! நிச்சயமாக, நீ பூமியைப் பிளக்கப் போவதில்லை, மலைகளை உயரத்தால் அடையப்போவதுமில்லை"

இது நெருக்கமான மொழிபெயர்ப்பு. அதாவது, அரபு இலக்கண விதிப்படி லன்(لَن) என்ற சொல் இடம்பெற்றிருக்கும் இடங்களை எதிர்மறையாக எடுத்து செய்யப்படும் மொழிபெயர்ப்பு.

இதில்தான், புது இலக்கண விதி படைத்திருக்கும் பீஜே முதலில் இடம்பெறும் லன்(لَن) என்ற சொல்லை கண்தெரியாத குருடன் போல கடக்கச் சொல்கிறார்.

إِنَّكَ لَن تَخْرِقَ الْأَرْضَ
என்ற எதிர்மறை வாக்கியத்தில் உள்ள லன்(لَن) என்ற சொல்லைக் காணாத குருடன் போல கடந்து 'நீர் பூமியைப் பிளந்து' என்று மொழிபெயர்க்கிறார். ('நீ பூமியைப் பிளக்கப்போவதில்லை' என்பதுதான் நேரிடையான மொழிபெயர்ப்பு)

இந்த குருட்டு விதியை இதே போன்ற வாசகம் இடம்பெற்றிருக்கும் குர்ஆன் வசனங்களில் பொருத்திப்பார்த்து இதன் விபரீதத்தை புரிய முயல்வோம்...

وَأَنَّا ظَنَنَّا أَن لَّن نُّعْجِزَ اللَّهَ فِي الْأَرْضِ وَلَن نُّعْجِزَهُ هَرَبًا

"பூமியில் அல்லாஹ்வை நம்மால் வெல்ல முடியாது எனவும், (தப்பித்து) ஓடியும் அவனை வெல்ல முடியாது எனவும் உணர்ந்து கொண்டோம்."
(திருக்குர்ஆன் 72:12) (பீஜே )

மேற்கண்ட வசனத்தை அரபு இலக்கணத்தின்படி மொழிபெயர்த்துள்ளார் பீஜே. இதையே பீஜேவின் குருட்டு இலக்கண விதிப்படி மொழிபெயர்த்துப் பார்ப்போம்.

لَّن نُّعْجِزَ اللَّهَ فِي الْأَرْضِ وَلَن نُّعْجِزَهُ هَرَبًا

இரண்டு தடவை லன்(لَّن) என்ற சொல் இடம்பெற்றுள்ளது. முதலாவது லன்(لَّن) எனும் சொல்லை குருடன் போல கடந்து செல்ல வேண்டும் என்பதுதான் பீஜேவின் விதி.

لَّن نُّعْجِزَ اللَّهَ فِي الْأَرْضِ وَلَن نُّعْجِزَهُ هَرَبًا

"பூமியில் அல்லாஹ்வை நாம் வென்று, (தப்பித்து) ஓடி அவனை வெல்ல முடியாது"

இதுதான் பீஜேவின் குருட்டு இலக்கண விதியின்படி கிடைப்பது.

அதாவது, பூமியில் அல்லாஹ்வை வெல்ல முடியும் என்ற பொருளை பீஜேவின் குருட்டு விதி கொடுத்துவிடும்.

இன்னொரு வசனத்தைப் பார்ப்போம்...

قُلْ إِنِّي لَن يُجِيرَنِي مِنَ اللَّهِ أَحَدٌ وَلَنْ أَجِدَ مِن دُونِهِ مُلْتَحَدًا

"அல்லாஹ்விடமிருந்து என்னை எவரும் காப்பாற்ற மாட்டார். அவனன்றி ஒதுங்குமிடத்தையும் காணமாட்டேன்'' என்றும் கூறுவீராக!
(திருக்குர்ஆன் 72:22) (பீஜே)

மேற்கண்ட வசனத்தை அரபு இலக்கணத்தின்படி மொழிபெயர்த்துள்ளார் பீஜே. இதையே பீஜேவின் குருட்டு இலக்கண விதிப்படி மொழிபெயர்த்துப் பார்ப்போம்.

لَن يُجِيرَنِي مِنَ اللَّهِ أَحَدٌ وَلَنْ أَجِدَ مِن دُونِهِ مُلْتَحَدًا

இரண்டு தடவை லன்(لَّن) என்ற சொல் இடம்பெற்றுள்ளது. முதலாவது லன்(لَّن) எனும் சொல்லை குருடன் போல கடந்து செல்ல வேண்டும் என்பதுதான் பீஜேவின் விதி.

"அல்லாஹ்விடமிருந்து என்னை எவராவது காப்பாற்றினாலும் அவனன்றி ஒதுங்குமிடத்தையும் காணமாட்டேன்"

அதாவது, அல்லாஹ்விடமிருந்து ஒருவனைக் காப்பாற்ற முடியும் என்ற பொருளை பீஜேவின் குருட்டு விதி கொடுத்துவிடும்.

மேலும் ஒரு வசனத்தைப் பார்ப்போம்...

"...فَلَن تَجِدَ لِسُنَّتِ اللَّهِ تَبْدِيلًا ۖ وَلَن تَجِدَ لِسُنَّتِ اللَّهِ تَحْوِيلًا" (35:43)

"...அல்லாஹ்வின் நடைமுறையில் எந்த மாற்றத்தையும் காண மாட்டீர்! அல்லாஹ்வின் நடைமுறையில் எந்தத் திருப்பத்தையும் காண மாட்டீர்" (திருக்குர்ஆன் 35:43) (பீஜே)

மேற்கண்ட வசனத்தை அரபு இலக்கணத்தின்படி மொழிபெயர்த்துள்ளார் பீஜே. இதையே பீஜேவின் குருட்டு இலக்கண விதிப்படி மொழிபெயர்த்துப் பார்ப்போம்.

இரண்டு தடவை லன்(لَّن) என்ற சொல் இடம்பெற்றுள்ளது. முதலாவது லன்(لَّن) எனும் சொல்லை குருடன் போல கடந்து செல்ல வேண்டும் என்பதுதான் பீஜேவின் விதி.

"அல்லாஹ்வின் நடைமுறையில் ஏதாவது மாற்றத்தை கண்டாலும் அல்லாஹ்வின் நடைமுறையில் எந்தத் திருப்பத்தையும் காண மாட்டீர்"

அதாவது, அல்லாஹ்வின் நடைமுறையில் மாற்றத்தை காணமுடியும் என்ற பொருளை பீஜேவின் குருட்டு விதி கொடுத்துவிடும்.

மற்ற வசனங்களில் இரண்டு முறையும் லன் என்பதற்கு எதிர்மறை பொருள் கொண்டவர் ஏன் இந்த இடத்தில் மட்டும் அதனை விட்டார்? இலக்கணம் தெரியவில்லையா? அல்லது கவனக்குறைவா? இரண்டும் இல்லை. நாத்திகர் மீதான அச்சம். தான் அறிவியல் என்று தவறாக விளங்கியவற்றுக்கு இணையாக குர்ஆன் இருக்க வேண்டும் என்கிற எண்ணம். எனவேதான் தன்னுடைய போலி அறிவியலுக்காக குர்ஆனில் கையாடல் செய்துள்ளார்.

இதே வசனத்தில் இவர் செய்த மற்ற பிழைகளை இதில் விளக்கியுள்ளோம். https://www.piraivasi.com/2022/11/qsf03.html

எந்த அறிவியலுக்காக இந்த வசனத்தை கொலை செய்தாரோ அவர் அறிவியல் என்று சொல்லும் தகவல்களும் பொய்யாவை என்பதைக் காண 
https://www.piraivasi.com/2022/11/gravity.html

இவ்வாறு இவர்கள் அறிவியல் எனும் பெயரில் குர்ஆனில் இல்லாதவற்றை திணிக்கும்போது ஒன்றை கவனிக்க மறந்துவிடுவார்கள். இவர்கள் விளக்கம் என்று எதை சொல்கிறார்களோ பெரும்பாலும் அந்த விளக்கத்திற்கு எதிராக அல்லது ஒவ்வாத கருத்தாக தொடர்ந்து வரும் வசனம் அமைந்திருக்கும். அந்த வகையில் இதன் அடுத்த வசனமான 17:38ம் வசனத்தை பாருங்கள்.

كُلُّ ذَٰلِكَ كَانَ سَيِّئُهُ عِندَ رَبِّكَ مَكْرُوهًا

17:38. இவை அனைத்தின் கேடும் உமது இறைவனிடம் வெறுக்கப்பட்டதாகும்.

இவ்வசனத்தை நன்றாக கவனியுங்கள். முந்தய வசனத்தை “பூமியில் கர்வத்துடன் நடக்காதீர்! நிச்சயமாக, நீ பூமியைப் பிளக்கப் போவதில்லை, மலைகளை உயரத்தால் அடையப்போவதுமில்லை” என்று பொருள் கொள்பவருக்கு எந்த பிரச்னையும் இல்லை. பூமியை பிளப்பதும் மலைகளின் அளவுக்கும் உயர்வதும் கர்வத்துடனே நாம் தொடர்பு படுத்துவதால் அனைத்தின் கேடு என்பது கர்வத்தை நோக்கியே மீளும்.

ஆனால்… மலையின் அளவுக்கு பூமியை துளைக்க முடியாது எனும் அறிவியலைத்தான் இந்த வசனம் சொல்வதாக சொன்னால், மனிதனால் மலை அளவுக்கு பூமியை துளைக்க முடியாமல் இருப்பது அவனுக்கு கேடு என்று பொருள் வரும். எத்தகைய வேடிக்கை பாருங்கள்.