Wednesday 3 May 2023

சவுதிப் பிறை - பொய்யா?

சவுதிப் பிறை - பொய்யா?

பிறை!

முஸ்லிம்கள் இஸ்லாமிய மாதங்களை துவக்குவதற்கான அடையாளம்தான் பிறை.

பிறை கண்டு நோன்பிருங்கள், பிறை கண்டு நோன்பை நிறைவுசெய்யுங்கள் என்ற நபிமொழிக்கேற்ப உலகம் முழுவதும் பிறை பார்த்து பிறை அறிவிப்பு செய்வது முஸ்லிம்களுடைய வழமை.

உலகில் எல்லோருமே பிறை பார்க்கப்பட்டதாகவே பிறை அறிவிக்கிறார்கள். சவுதியும் அப்படித்தான் அறிவிக்கிறது. ஆனால், சவுதியின் பிறை அறிவிப்பு மட்டும் பொய்யான பிறை அறிவிப்பு என்ற விமர்சனத்திற்குள் விழுகிறது.

அது ஏன்?

சவுதி அறிவிப்பது பொய்ப்பிறை என்பதே அந்த விமர்சனம்.

சவுதியின் பிறை அறிவிப்பு இத்தகைய விமர்சனத்தில் சிக்குவது ஏன்?

பிறை பார்க்க முடியாத நாளில் அது பார்க்கப்படுவதாக சவுதி அறிவிப்பதுதான் இத்தகைய விமர்சனத்திற்கு காரணம்.

இதை தெரிந்துகொள்ள வேண்டுமானால் பிறை அறிவிக்கும் முறை தற்போது என்னென்ன விதங்களில் இருக்கிறது என்பதைப் பற்றின ஒரு புரிதல் நமக்கு இருக்க வேண்டும்.

முதலில் அதில் புரிதலைப் பெறுவோம்...

பிறை அறிவித்தல் இரண்டு விதத்தில் இருக்கிறது.

(1) பிறை பார்த்தல் - ருஃயத்

(2) பிறை கணக்கீடு - ஹிஸாப்

இஸ்லாமிய மாதத்தின் 29 வது நாளில் வானில் பிறையைப் பார்க்க முயற்சித்து பிறையைக் கண்டால் உடனேயே மாதத்தை துவக்குவதும், பிறையைக் காணமுடியாவிட்டால் 30 நாட்களாக நிறைவு செய்து அதன்பிறகு புது மாதத்தை தொடங்குவது "பிறை பார்த்தல்" (ருஃயத்) எனப்படுகிறது.

விஞ்ஞான ரீதியிலான தகவல்களை எடுத்து அவரவர் புரிதலுக்கேற்ப ஓர் அளவீட்டை நிர்ணயம் செய்து, அந்த அளவீட்டை 29 வது நாளில் அவரவர் பகுதியில் சந்திரன் அடைந்தால் புதுமாதத்தை தொடங்குவதும், அந்த அளவீட்டை அடையவில்லையென்றால் 30 நாட்களாக நிறைவு செய்து அதன்பிறகு புது மாதத்தை தொடங்குவது "பிறை கணக்கீடு" (ஹிஸாப்) எனப்படுகிறது.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான கற்பனையான நேர்க்கோட்டை நிலவு அடைந்தால் பழைய சுற்று முடிந்து புதிய சுற்று தொடங்கிவிடுகிறது என்பது வானியல் கணக்கு. அந்த விநாடி நேரத்தில் புதிய சுற்று (New Cycle) தொடங்குவதாக விஞ்ஞானம் கூறுவதை புது பிறை (New Moon) பிறப்பதாக தவறாக புரியப்பட்டு இந்த விஞ்ஞான கணக்கு இஸ்லாமிய மாதத்திற்குள் புகுத்தப்பட்டிருக்கிறது.

இஸ்லாமிய மாதம் 29 நாட்களில் நிறைவுபெறுமா அல்லது 30 நாட்களில் நிறைவுபெறுமா என்பதை  முன்கூட்டியே முடிவு செய்வது மார்க்க ரீதியில் வாய்ப்பில்லை. இதை மீறி எதிர்கால மாதங்களின் நாட்களை விஞ்ஞானத்தின் கணக்கை பயன்படுத்தி காலண்டர் போடப்பட்டது. விஞ்ஞான கணக்கை பயன்படுத்தி இஸ்லாமிய காலண்டர் போடும் வேலையை ஆரம்பகாலத்தில் (1935 வாக்கில்) துருக்கியும் சவுதி அரேபியாவும் செய்தன. 

சவுதியின் உம்முல் குரா காலண்டர் மார்க்க ரீதியிலான காலண்டர் அல்ல. ஆங்கில காலண்டருக்கு இணையான இஸ்லாமிய நாட்களை குத்துமதிப்பாக மாற்றித்தரும் (Gregorian to Hijri conversion) காலண்டராக மட்டுமே பார்க்கப்பட்டது.

ஹிஸாப் எனும் பிறை கணக்கீட்டை பயன்படுத்தி உலகத் தேவைக்காக உம்முல் குரா காலண்டர் போடப்பட்டிருந்தாலும் மார்க்க தேவைக்காக ருஃயத் எனும் பிறை பார்த்தலின் அடிப்படையிலேயே பிறை அறிவிக்கப்பட்டது.  இருந்தநிலையில்தான், அந்த காலண்டரின் பிரகாரமே பிறை அறிவிக்கும் வேலையை 1970 ஆம் வாக்கில் ஆரம்பித்தது சவுதி.

இதன் மூலம், சவுதியின் பெருநாளுக்கும் உலகின் பிற நாடுகளின் பெருநாளுக்கும் இடையே இரண்டு நாட்கள் அளவில் வித்தியாசம் வரத்தொடங்கியது.

1990 களில் தகவல் தொடர்பு வளர்ச்சியால் இது உலகம் முழுவதும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. பிற நாடுகளில் இருக்கும் சவுதியின் உதவி பெறும் நிறுவனங்கள் அந்தந்த நாடுகளில் சவுதியின் பிறை அறிவிப்பை செயல்படுத்தத் தொடங்கியதன் மூலம் ஒரு ஊருக்குள்ளேயே இரண்டு நாட்கள் பெருநாள் கொண்டாடும் நிலை ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாகத்தான் சவுதியின் பிறை அறிவிப்பு விமர்சன வட்டத்திற்குள் வந்தது.

** சவுதியின் பிறை அறிவிப்பு பொய்யானது (Lie) என்று சவுதி எதிர்ப்பாளர்களால் சொல்லப்பட்டது.

** சவுதியின் பிறை அறிவிப்பு தவறானது (Wrong) என்று நடுநிலையாளர்களால் சொல்லப்பட்டது.

பொய் என்பது தவறானதை தெரிந்தே சொல்வது. தவறு என்பது பொய்யை தெரியாமல் சொல்வது. எப்படிப் பார்த்தாலும் சவுதியின் பிறை அறிவிப்பில் பொய் இருக்கிறது என்பதுதான் சவுதியின் மீதான விமர்சனம்.

ஓகே.

சவுதியின் பிறை அறிவிப்பில் பொய் இருக்கிறது என்பதை எப்படி சொல்கிறார்கள்?

இதுதான் முதலில் நமக்குத் தெரிய வேண்டியது.

ஹிஸாப் எனும் பிறை கணக்கீட்டிற்கு சவுதி பயன்படுத்திக்கொண்ட அதே விஞ்ஞானத்தை வைத்துதான் சவுதியின் பிறை பொய்ப்பிறை என்கிறார்கள்.

உம்முல் குரா காலண்டரில் 29 வது நாள் என்று குறிப்பிடப்பட்டிருக்கும் நாளில் பிறை பார்க்கிறது சவுதி. ஆனால், உம்முல் காலண்டரின் அன்றைய தினத்தில் பிறையை கண்ணால் பார்ப்பதற்கான வாய்ப்பு இல்லை என்பதுதான் விஞ்ஞான ரீதியிலான முடிவு.

** சூரியன்-பூமி நேர்கோட்டை கடந்தால் மட்டும் போதாது. கண்ணால் பார்க்கும் அளவுக்கு பிறை வளர்ந்திருக்க வேண்டும்.

** சூரியன் மறைந்தாலும் பிறையை பார்ப்பதற்கு ஏதுவாக அடிவானில் இருக்கும் அந்தி வெளிச்சம் சற்று குறைய வேண்டும்.

இவையெல்லாம் பிறையைப் பார்ப்பதற்கான குறைந்தபட்ச விஞ்ஞான வரையறைகள். இந்த வரையறைகளுக்கு உட்படாத நாளில் பிறையைப் பார்க்க முடியாது என்பதுதான் விஞ்ஞானத்தின் கணக்கு. இந்த கணக்கிற்கு ஒத்துவராத நாட்களில் பிறை பார்ப்பதாக சவுதி அறிவிப்பதுதான் அதன் அறிவிப்பை பொய்ப் பிறை என்று சொல்ல வைக்கிறது.

சவுதியின் மீதான இந்த பொய்ப்பிறை விமர்சனத்தை சவுதி மார்க்க அறிஞர்கள் மற்றும் சவுதி ஆதரவுநிலை கொண்டவர்கள் எப்படி பார்க்கிறார்கள்?

இஸ்லாமிய மாதத்தின் 29 வது நாளில் பிறை பார்க்கப்பட்டதாக சாட்சியம் கிடைத்தால் அதை எப்படி மறுக்க முடியும் என்பதுதான் அவர்களின் கேள்வி.

சவுதி பொய் சொல்வதாக உறுதியாகத் தெரிந்தால் மார்க்க அறிஞர்கள் நிச்சயமாக எதிர்ப்பு தெரிவித்திருப்பார்கள். ஆனால், சவுதி பொய் சொல்லவில்லை என்பதே மார்க்க அறிஞர்களின் கருத்தாக இருக்கிறது.

ஒருவேளை, மக்கள் பிறை பார்த்து அதை சாட்சியம் அளித்து அந்த சாட்சியத்தை சவுதி ஏற்காமலிருந்தால் நிச்சயமாக சவுதி பொய்சொல்கிறது என்று மார்க்க அறிஞர்கள் அறிவித்திருப்பார்கள். ஆனால், நடப்பதோ வேறு!

வெறும் கண்களால் பிறை பார்க்க முடியாத நாளில்தான் உம்முல் குரா காலண்டரில் 29 வது நாள் அமைகிறது. அன்றைய தினத்தில் பிறை பார்க்கப்பட்டதாக சாட்சியம் கிடைத்ததன் அடிப்படையில் புது மாதத்தை தொடங்குவதாக சவுதி அறிவிக்கிறது. பிறை பார்க்கப்பட்டதாக சவுதி அறிவிக்கும் நிலையில் அதை எப்படி பொய் என்று சொல்ல முடியும் என்பதுதான் தமிழ் சலபு மார்க்க அறிஞர்களின் கேள்வி.

அதெல்லாம் இருக்கட்டும்...

யாருக்குமே பிறை தெரியாத நாளில் சவுதிக்கு மட்டும் பிறை தெரிவது எப்படி நடக்கிறது?

இதற்கான பதில் விஞ்ஞான கருவிகள்.

ஆம். பொய்ப்பிறை விமர்சனத்தை முறியடிப்பதற்காக விஞ்ஞானத்தை துணைக்கழைத்துக் கொண்டது சவுதி.

ஹிஸாப் எனும் பிறை கணக்கீடும் வேண்டும், அதேநேரத்தில் அந்த கணக்கின் அடிப்படையில் ருஃயத் எனும் பிறை பார்க்கப்படுதலும் வேண்டும். மீசை நனையாமல் கூழ் குடிக்கும் வித்தையை செய்தது சவுதி.

கணக்கீட்டின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட காணமுடியாத முதல் பிறையை காண்பதற்காக கருவிகளின் உதவியை நாடியது சவுதி.

நானூறு வருடங்களுக்கு முன்பு நிலவின் மேடுபள்ளங்களை கண்டுகொண்ட கலிலியோ காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட  டெலஸ்கோப்பின் உதவியை நாடியது சவுதி. நானூறு வருடங்களாக இருக்கும் டெலஸ்கோப்பைக் கொண்டு பிறையைக் காணும் முயற்சியை இஸ்லாமிய உலகம் செய்யாத நிலையில் இதை தொடங்கி வைத்தது சவுதி. டெலஸ்கோப்பைக் கொண்டாவது பிறையைக் காண வேண்டும் என்ற தேவை சவுதிக்கு ஏற்படக் காரணம் அது தன்னிடம் வைத்திருக்கும் காலண்டரின்படி  பிறையை அறிவித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தை தவிர வேறு எதையும் நோக்கமாக கற்பிக்க முடியாது.

பைனாகுலர் மற்றும் டெலஸ்கோப்பைக் கொண்டு பிறையைப் பார்ப்பதற்கு தோதாக சவுதி மார்க்க அறிஞர்களிடமிருந்து ஃபத்வாவும் வெளிவரத் தொடங்கியது.

மூக்கு கண்ணாடி அணிவதைப் போன்றதுதான் பைனாகுலர் மற்றும் டெலஸ்கோப் மூலம் பார்ப்பது என்ற கருத்தை விதைத்தனர்.

மூக்குக் கண்ணாடி என்பது பார்வை குறைபாடு உள்ளவர்கள் சராசரி பார்வையை அடைவதற்காக அணிவது. இதை அணிபவர் நல்ல பார்வையுள்ளவர்களுக்கு இணையாக பார்வைத்திறன் பெறுகிறார் என்பதைத் தவிர்த்து இதில் சிறப்பு ஏதுமில்லை.

பைனாகுலர் மற்றும் டெலஸ்கோப் பிறையை நியாயப்படுத்துவதற்காக சில லாஜிக் வாதங்களும் முன்வைக்கப்பட்டன.

பள்ளிவாசலில் இருக்கும் உயரமான மினாராவில் ஏறி பிறை தேடுகிறோம். நகரத்தின் ஒதுக்குப்புறமான இடத்திற்கு சென்று பிறை தேடுகிறோம். இதெல்லாம் தேவையா என்றால் தேவையில்லை என்பதுதான் பதில். ஆனாலும் செய்கிறோம். அதுபோலவே டெலஸ்கோப் பயன்படுத்தி பிறையை பார்க்க வேண்டும் என்ற தேவையில்லாவிட்டாலும் அதை பயன்படுத்தி பிறையைப் பார்ப்பதில் தவறில்லை என்பதுதான் அந்த வாதத்தின் லாஜிக்.

டெலஸ்கோப் பயன்படுத்தி பிறையைக் காண்பது தொடர்பாக இன்றளவும் தெளிவில்லாத நிலைதான் நீடிக்கிறது.

¶¶ ஹிஸாப் எனும் பிறை கணக்கீட்டின்படி மாதத்தை தொடங்குவதை தவறாகக் கருதாதவர்கள் டெலஸ்கோப்பினால் பிறையைப் பார்ப்பதையும் தவறாகக் கருதுவதில்லை.

¶¶ ஹிஸாப் எனும் பிறை கணக்கீட்டின்படி மாதத்தை தொடங்குவதை தவறாகக் கருதுபவர்கள் டெலஸ்கோப்பினால் பிறையைப் பார்ப்பதை தவறாகவே கருதுகின்றனர்.

ஆக, டெலஸ்கோப்பினால் பிறையை பார்ப்பது கூடுமா அல்லது கூடாதா என்பதை முடிவு செய்வது ஹிஸாப் எனும் பிறை கணக்கை எடுப்பது கூடுமா அல்லது கூடாதா என்ற கொள்கைதான் முடிவு செய்கிறது.

பிறையானது கண்ணால் பார்க்கப்படுவதை வைத்து இஸ்லாமிய மாதங்களை துவக்கும் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் டெலஸ்கோப்பினால் பிறை பார்க்கப்படுவது மார்க்கம் அனுமதிக்காத ஒன்றாக கருதப்பட்டு டெலஸ்கோப் மூலம் பிறை பார்ப்பது அனுமதிக்கப்படுவதில்லை.

பிறைக்கான அளவீட்டை கணக்கிட்டு முன்கூட்டியே பிறைத்தேதியை குறித்துவைத்துக்கொண்டு அன்றைய தினத்தில் பிறை பார்க்கப்படுவதாக அறிவிப்பு செய்யும் துருக்கி, சவுதி, இந்தோனேஷியா, மலேசியா போன்ற நாடுகளில் டெலஸ்கோப் பிறை சாட்சியம் ஏற்கப்படுகிறது. பிறை கணக்கீடு (ஹிஸாப்) செய்து மாதத்தை துவங்கும் நாடுகள் பிறை பார்த்தல் (ருஃயத்) எனும் மார்க்க கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக மட்டுமே டெலஸ்கோப்பினால் பிறை பார்ப்பதை நியாயப்படுத்துகின்றன.

டெலஸ்கோப்பின் மூலம் மறைமுகமாக பிறை பார்த்துவந்த சவுதி, 2009 ஆம் ஆண்டு பொதுமக்களும்கூட டெலஸ்கோப்பின் மூலம் பிறை பார்த்து சாட்சியம் அளிக்கலாம் என்று பகிரங்கமாக அறிவித்தது. இதன் மூலம் பிறை காண முடியாத நாட்களில் சவுதிக்கு மட்டும் பிறை தெரிந்த இரகசியம் பகிரங்கமானது.

பிறை சாட்சியத்தை முடிவுசெய்யும் சவுதி உச்சநீதி மன்றத்தின் (Royal court) நீதிபதி Sheikh Abdullah Bin Suleiman Al-Manea என்பவரிடம், 'சவுதியின் பல பிறை அறிவிப்புகள் பிறை காண சாத்தியம் இல்லாத நாட்களில் அமைகிறதே!' என்று கேட்கப்பட்டதற்கு, 'சூரியன் மறைவதற்கு முன்னால் நிலவு மறைந்தால் பிறையைப் பார்க்க முடியாதுதான், ஆனால் சூரியன் மறைந்த பிறகு நிலவு மறையும் மாதங்களில் பிறையை பார்த்ததாக யாராவது சாட்சி சொன்னால் அந்த சாட்சியை நம்மால் நிராகரிக்க முடியாது.' என்று பதிலளித்திருக்கிறார். (பார்க்க : https://youtu.be/IlTxoFll8RI )


சூரியன் மறைந்து சில நிமிடங்களில் சந்திரன் மறையும் தினத்தில்

உம்முல்குரா காலண்டரின் 29 வது தினமாக இருந்தால் அன்றைய தினத்தில் பைனாகுலர், டெலஸ்கோப் என எதன்மூலமாகவும் பிறை பார்த்ததாக சாட்சியம் கிடைத்தாலும் சவுதி ஏற்றுக்கொள்ளும்.

இஸ்லாம் கூறும் தலைப்பிறை என்பது இயற்கையாக பிறக்கும் குழந்தையைப் போன்றது. டெலஸ்கோப்பினால் பார்க்கும் பிறை என்பது ஐந்து மாதத்திலேயே வயிற்றை அறுத்து சிசுவை வெளியில் எடுத்து அதுதான் குழந்தை என்று கூறுவதைப் போன்றது. தன்னுடைய காலண்டருடைய நாட்களின் பிரகாரம் பண்டிகைகளை வரவைப்பதற்காக டெலஸ்கோப் மூலம் பிறையை அறுத்தெடுக்கும் வேலையைச் செய்தது சவுதி.

இப்போது, அதையும் விட மோசமாகி தாயின் வயிற்றில் சிசுவை ஸ்கேன் செய்து அந்த ஸ்கேன் படத்தைக் காட்டி அதுதான் குழந்தை என்று கூறும் மோசடியைச் செய்யத் தொடங்கிவிட்டது சவுதி என்பது அதன் மீதான தற்போதைய விமர்சனம்.

இப்படி ஒரு விமர்சனம் வருவதற்கு டெலஸ்கோப் மூலம்கூட பார்க்க முடியாத பிறையை பார்த்ததாக சவுதி அறிவித்ததுதான் காரணம்.

சில சமயங்களில் சூரியன் மறைந்த சில நிமிடங்களில் மறையக்கூடிய சந்திரனிலும் பிறை பார்க்கப்பட்டதாக சவுதி அறிவித்திருக்கிறது. டெலஸ்கோப் மூலம்கூட பார்க்க முடியாத பிறை அறிவிப்பு நிச்சயம் பொய்யான பிறை அறிவிப்புதான் என்று கூறப்பட்ட நிலையில் CCD எனும் கருவியை கையிலெடுத்தது சவுதி.

அது என்ன CCD கருவி? நாம் ஒரு பொருளை பார்க்கிறோம். எப்படி பார்க்கிறோம்?

அந்த பொருளில் இருந்து வரும் ஒளி நம்முடைய கண்களை அடைவதால் அந்த பொருளை நாம் பார்க்கிறோம். அதே பொருள் இருட்டுக்குள் இருந்தால் நாம் அதை பார்க்க முடியாது. ஏனென்றால் அந்த  பொருளின் ஒளி நம்முடைய பார்வையை அடைவதில்லை. அதனால் நம்மால் அதை பார்க்க முடிவதில்லை.

பகல் நேரத்தில் ஒரு தெருவிற்குள் நுழைந்து செல்லும்போது அங்கு உலவும் ஆடு மாடு நாய் போன்றவைகளையும் இடர் தரும் பொருள்களையும் பார்த்து இடித்துவிடாமல் சென்றுவிடுவோம். ஆனால், அதே தெருவில் மின்சாரம் இல்லாத இரவு நேரத்தில் போவது என்பது சிரமம். ஏனென்றால் எது எங்கேயிருந்து வரும் எதில் இடித்துக்கொள்வோம் என்பதை சொல்ல முடியாது.  இருட்டுக்குள் இருக்கும் பொருட்களை அடையாளம் காட்டும் கருவி ஏதாவது இருந்தால் அந்த கருவியின் உதவியுடன் நாம் எளிதாக அந்த தெருவில் நடக்கலாம். கண்ணால் பார்க்க முடியாதநிலையில் அங்கு பொருட்கள் இருப்பதை அடையாளம் காட்டுவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட கருவிதான் CCD கருவி.

இது எப்படி வேலை செய்கிறது?

பொருட்கள் ஒளியை வெளியிடுவதுபோல் வெப்பத்தையும் வெளியிடுகின்றன. மனிதன் விலங்கு மரம் செடி கொடு தாவம் முதற்கொண்டு அனைத்தும் வெப்பத்தை வெளியிடுகின்றன. இந்த வெப்பத்தை கண்ணால் காண முடியாது. ஆனால் தொடுவதன் மூலம் உணர முடியும்.

உதாரணமாக, ஒருவருக்கு ஜுரம் அடிக்கும்போது தொட்டுப்பார்த்தால் இயல்பான வெப்பநிலையை விட கூடுதலான வெப்பம் அவரிடம் இருப்பதை உணரமுடியும். இதை தெர்மாமீட்டரை அவரிடம் வைத்து அளவிடவும் முடியும். தற்போது, நோயாளியை தொடாமலேயே வெப்பத்தை அளவிடும் கருவி (Infrared Thermo Meter) பயன்பாட்டில் இருக்கிறது. (கொரோனா நோய்ப் பரவல் காலத்தில் இதன் மூலம்தான் நோயாளியின் வெப்பநிலையை கணக்கிட்டனர்)

இந்த வெப்பத்தை நம்மால் கண்ணால் காண முடியுமா?

முடியாது.

இதுபோன்று, வெப்பத்தை வெளியிடும் அனைத்தையும் அடையாளம் (Thermal detection) காண்பதற்காக கண்டுபிடிக்கப்பட்டதுதான் CCD கருவி. இந்த கருவியினால் அடையாளம் காணப்படுவது CCD Image எனப்படுகிறது. ஒரு பொருள் எந்த அளவு வெப்பமாக இருக்கிறது அந்த அளவு அதிலிருந்து infrared கதிர்வீச்சு வெளிப்படும். அதிக வெப்பம் இருந்தால் அதிக கதிர்வீச்சு. குறைவான வெப்பம் இருந்தால் குறைவான கதிர்வீச்சு.

இந்த கருவியின் மூலம் வான்பொருட்கள் (Celestial objects) வெளியிடும் infrared கதிர்வீச்சை படம் பிடிக்கிறார்கள். சந்திரனின் வெளியிடும் infrared கதிர்வீச்சையும் படம்பிடிக்கிறார்கள். சந்திரனில் சூரிய வெளிச்சம் படும் பகுதியின் வெப்பம் வெளிச்சம் படாத பகுதியை விட பல மடங்கு அதிகமாக இருக்கும். சூரிய வெளிச்சம் படும் பகுதியில் இருந்து அதிக அளவில் infrared கதிர்வீச்சு வரும். அந்த infrared கதிர்வீச்சை படம் பிடித்து திரையில் காட்டுவதே CCD கருவி.

கண்ணால் பார்க்க முடியாத சந்திரனின் infrared கதிர்வீச்சை படம் வரைந்து இதுதான் இஸ்லாம் கூறும் பிறை என்கிறது சவுதி.

டெலஸ்கோப்பினால் கூட பார்க்க முடியாத தினத்தில் CCD மூலம் சந்திரனின் infrared கதிர்வீச்சை படம்பிடித்து அதுதான் பிறை என்று கூறும் இழிநிலைக்கு சவுதி சென்றதற்குக் காரணம் அதனுடைய காலண்டர்தினத்தில் இஸ்லாமிய மாதத்தை துவக்கும் மார்க்க மீறல்தான். மார்க்க மீறல் நிகழ்த்தும் இந்த CCD கருவியில் மார்க்க அறிஞர்கள் தெளிவு பெறாமல் இருப்பதே சவுதியின் மீதான விமர்சனத்தை வழக்கம்போல் கடப்பதற்கு காரணமாக இருக்கிறது.

உண்மையில், பைனாகுலர் மற்றும் டெலஸ்கோப் பிறையை விட மோசனமான பிறை இந்த CCD பிறை. ஏனென்றால், பைனாகுலர் மற்றும் டெலஸ்கோப் கருவிகளைக் கொண்டு சூரியன் மறைந்த பிறகுதான் பிறையை பார்க்க முடியும். ஆனால், இந்த CCD கருவியோ சூரியன் இருக்கக்கூடிய பட்டப்பகலிலேயே சந்திரனின் வெப்பஅலைகளை கண்டுபிடித்து அதை பிறை படமாக வரைந்து காண்பித்துவிடும்.

“ஹலாலா ஹராமா என பொருட்படுத்தாத காலம் வரும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். அதுபோன்ற ஒரு நிலைதான் இப்போது CCD கருவியினால் ஏற்பட்டிருக்கிறது.  சூரியன் உச்சியில் இருக்கும்போதுகூட சந்திரப் பிறையை படம்பிடிக்க முடியுமான CCD கருவியினால் பிறை பார்த்ததாக அறிவிப்பது ஹலாலா அல்லது ஹராமா என்று பொருட்படுத்தாத நிலை ஏற்பட்டுவிட்டது. இதனால்தான், இந்த CCD கருவி பிறை மீதான விமர்சனத்தை வேறு வகையில் கையாளுகின்றனர் தமிழ் பேசும் ஸலபு அறிஞர்கள்.

அதாவது, சவுதியில் பட்டப்பகலில் CCD இமேஜ் எடுத்துதான் பிறையை அறிவிக்கிறார்கள் என்றால், சில நேரங்களில் பிறை தெரியவில்லை என்று கூறி சவுதி மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்வது ஏன்? என்ற கேள்வியை எழுப்பி சவுதியை காப்பாற்ற முனைகின்றனர்.

இந்த ஸலபு ஆலிம்கள் முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.  டெலஸ்கோப் மற்றும் CCD கருவி போன்றவற்றால் பிறையை பார்த்ததாக சவுதி அறிவிப்பதற்கான தேவையே அதனுடைய காலண்டர்படி மாதத்தை கொண்டுவருவதற்காகத்தான்.

அந்த காலண்டரில் மாதங்களை 29 லும் 30 லும் எப்படி முடிக்கிறார்கள் என்பது முதலில் நமக்குத் தெரியவேண்டும்.

** சந்திரனின் விஞ்ஞானச் சுற்று முடிந்திருக்க வேண்டும். (Conjunction with sun)

** மக்காவில் சூரியன் மறைந்த பிறகு சந்திரன் மறைய வேண்டும்.

இது நிகழ்ந்தால் அந்த மாதம் 29 நாட்களில் முடிக்கப்படும். இதில் ஏதாவது ஒன்று நிகழாவிட்டால் அந்த மாதம் 30 நாட்களில் முடிக்கப்படும்.

ஆக. 29 நாட்களில் முடியும் மாதங்களில் மட்டும்தான் பிறை பார்க்கப்பட வேண்டும். 30 நாட்களில் முடியும் மாதங்களுக்கு பிறை பார்க்கப்படக்கூடாது.

சவுதியின் காலண்டரில் 30 நாட்களில் முடியும் மாதத்திற்கு 29 வது நாளில் பிறை பார்க்கப்படாமல் இருந்தால்தான் பொருத்தமாக இருக்கும். கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் அந்த பிறையானது பார்க்கப்படவில்லை என்று சொன்னால்தான் அதனுடைய காலண்டர் பிரகாரம் மாதங்கள் அமையும். அதனால்தான், உம்முல்குரா காலண்டரில் 30 நாட்கள் கொண்ட மாதங்களில் பிறை பார்க்கப்படவில்லையென்று சவுதியால் அறிவிக்கப்படுகிறது.

உதாரணமாக, கடந்த ஷஅபான் ( 21 March 2023 ) மாதத்தை கூறலாம். உம்முல்குரா காலண்டரில் ஷஅபான் மாதம் 30 நாட்களில் முடிவதாக அமைக்கப்பட்டிருந்தது. இப்போது என்ன செய்ய வேண்டும்ஷஅபான் 29 ல் பிறை பார்க்கப்படக்கூடாது. ஆனால், ஷரியத் ரீதியில் பிறை பார்க்க முயற்சிக்க வேண்டும். அதனால், ஷஅபான் 29 அன்று பிறை பார்ப்பதற்கான சடங்கு செய்யப்பட்டது.

சவுதியின் சுதைர் மற்றும் துமைர் பகுதிகளில் டெலஸ்கோப் மற்றும் CCD கருவிகளுடன் சவுதி பிறை விஞ்ஞானிகள் குவிந்தனர். சூரியன் மறைவதற்கு முன்னரே CCD கருவிகள் மூலம் நிலவின் Infrared படத்தை பார்த்துக்கொண்டிருந்தனர். அதாவது, பட்டப்பகலிலேயே பிறை பார்த்தனர். இஸ்லாமிய நாளின் தொடக்கம் இரவு எனும் சவுதியின் கருத்திற்கேற்ப அந்த பிறையை முந்தைய மாதத்தின் தேய்பிறையாக கருதினர். ஏனென்றால், அன்றையதினம் சூரியன் மறைவதற்கு முன்பாகவே சந்திரன் மறைவதாலும் சூரியனுடன் சந்திரன் பழைய சுற்றை முடிக்காததாலும் பிறை பார்க்கப்படவில்லை என்று சவுதி அறிவித்தது.

ஹிஸாப் எனும் பிறை கணக்கீட்டின்படி அமைக்கப்பட்டுள்ள உம்முல் குரா காலண்டருக்காகத்தான் சவுதி பிறை அறிவிக்கிறது என்ற அந்த விமர்சனத்தை உண்மைப்படுத்தும் விதமாகத்தான் டெலஸ்கோப் மற்றும் CCD கருவியை கையிலெடுத்திருக்கிறது சவுதி.

சவுதியின் பிறை அறிவிப்பு பொய்யா! என்பது அப்பாவித்தனமான கேள்வி.

சவுதி அறிவிப்பது பிறையா? என்பதே அறிவார்ந்த கேள்வி