Thursday 3 November 2022

QSF02. சார்பியல் கோட்பாட்டை இஸ்லாம் போதிக்கிறதா?

இப்படியும் சில தப்ஸீர்கள்- ஜைனுலாபுதீன் தப்ஸீர்

ஜைனுலாபிதீன் அவர்களின் தப்சீரில் அறிவியலின் பெயரால் சொல்லப்பட்டிருக்கும் பிழையான கருத்துக்களை ஆய்வு செய்வதற்காக 2017ம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு சமர்ப்பித்த ஆய்வறிக்கைகள்


QSF ஆய்வுக்குழு


அறிமுகத்தை வாசிப்பது இந்த தொடரை புரிந்துகொள்ள உதவும். அறிமுகத்தை வாசிக்க https://www.piraivasi.com/2022/11/zina-ul-abdeen-intro.html


QSF02 சார்பியல் கோட்பாட்டை இஸ்லாம் போதிக்கிறதா?


*தஃப்ஸீர் குறிப்பு 293. இஸ்லாம் கூறும் சார்பியல் கோட்பாடு*


இவ்வசனத்தில் (70:4) ஒருநாள், ஐம்பதாயிரம் வருடங்கள் அளவுடையது எனக் கூறப்படுகிறது.


ஒருநாள், ஐம்பதாயிரம் வருடங்களுக்கு (1,82,50,000 நாட்களுக்கு) நிகரானது என்று கூறப்படுவதைச் சென்ற நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்தவர்களால் புரிந்து கொண்டிருக்க முடியாது.


நாட்கள் என்பது ஒருவரின் பயண வேகத்தைப் பொருத்து மாறுபடும் என்பதை ஐன்ஸ்டீன் கண்டுபிடித்துக் கூறுவதற்கு முன், நாட்கள் என்பது மாறவே மாறாது என்பதுதான் உலக மக்களின் நம்பிக்கையாக இருந்தது.


உதாரணமாக இந்தப் பூமியிலிருந்து 25 வயதுடைய ஒருவன் ஒளி வேகத்தில் மேல்நோக்கிப் பயணம் செய்து கொண்டே இருக்கிறான். (ஒளியின் வேகம் வினாடிக்கு சுமார் 3,00,000 – மூன்று லட்சம் – கி.மீ). பூமியில் ஐம்பது ஆண்டுகள் கடந்த பிறகு அவன் திரும்பி வந்தால், அவனுடைய வயதுடையவர்கள் பலர் இறந்திருப்பார்கள். எஞ்சியிருப்பவர்கள் 75 வயதுடையவர்களாக இருப்பார்கள்.


ஆனால் ஒளி வேகத்தில் பயணம் செய்து கொண்டே இருந்தவன் 25 வயது வாலிபனாகவே திரும்பி வருவான். இது இன்றைய நவீன உலகில் வாழும் மேதைகளில் பலருக்கே புரிந்து கொள்ளச் சிரமமாக இருந்தாலும் உண்மை இதுதான்.


ரிலேட்டிவிட்டி எனும் சார்பியல் கோட்பாட்டை 1905ஆம் ஆண்டுதான் ஐன்ஸ்டீன் கண்டுபிடித்தார். எழுதப்படிக்கத் தெரியாத முஹம்மது நபி 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு இதைக் கூறி இருக்கிறார்கள் என்றால் அன்றைக்கு இருந்த அறிவைக் கொண்டு இதைக் கூறியிருக்க முடியாது.


இந்த உண்மை அன்று எந்த மனிதனுக்கும் தெரிந்திருக்க முடியாது. அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும்தான் தெரிந்திருந்தது. எனவே அல்லாஹ்வின் புறத்திலிருந்து தான் முஹம்மது நபி இந்தச் செய்தியைப் பெற்றார்கள் என்பது இதன் மூலம் உறுதியாகின்றது.


22:47, 32:5 ஆகிய வசனங்களில் இறைவனின் ஒரு நாள் உங்கள் நாட்களில் ஆயிரம் வருடங்கள் அளவுடையது எனக் கூறப்படுகிறது. ஆனால் 70:4 வசனத்தில் ஐம்பதாயிரம் வருடங்களுக்குச் சமமானது எனக் கூறுவது ஏன்? இரண்டும் முரண்படுகிறதே என்று சிலருக்குச் சந்தேகம் ஏற்படலாம்.


ஆயிரமும், ஐம்பதாயிரமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இரண்டும் வேறு வேறு செய்திகளைக் கூறும் வசனங்கள் என்பதை விளங்கிக் கொண்டால் இதில் எந்த முரண்பாடும் இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.


இவ்விரு வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களைக் கவனிக்கும் எவருமே இரண்டும் தனித்தனியான இரண்டு விஷயங்கள் என்பதை விளங்கிக் கொள்வர்.


பூமிக்கு வருகின்ற வானவர்கள், வானுலகத்துக்கு மேலேறிச் செல்லும் வேகம் பற்றி 70:4 வசனம் கூறுகிறது. ஒளியால் படைக்கப்பட்ட வானவர்கள் பூமியிலிருந்து இறைவனிடம் மேலேறிச் செல்லும் வேகம் ஐம்பதாயிரம் வருடங்களுக்கு நிகரான ஒரு நாளின் வேகம் எனக் கூறப்படுகிறது.


அதாவது ஒருநாளில் அவர்கள் சென்றடைந்த தூரத்தை நாம் அடைவது என்றால் ஐம்பதாயிரம் ஆண்டுகள் தேவைப்படும். (அதாவது 1,82,50,000 நாட்கள்).


அவர்கள் ஒரு விநாடியில் சென்றடையும் தூரத்தை நாம் அடைவது என்றால் 211 நாட்கள் தேவைப்படும். அவ்வளவு வேகமாக அவர்களின் பயணம் அமைந்திருக்கும்.


வானவர்களின் பயண வேகத்தை 70:4 வசனம் கூறுகிறது.


இறைவன் பிறப்பிக்கும் கட்டளை பூமியை அடைந்து மீண்டும் திரும்பிச் செல்வதற்கான வேகத்தை 32:5 வசனம் கூறுகிறது. இறைவன் ஒவ்வொரு விநாடியும் கோடிக்கணக்கான கட்டளைகளைப் பிறப்பிக்கின்றான்.


உலகில் நடக்கும் எந்தக் காரியமானாலும் அவனது கட்டளைப்படியே நடக்கின்றன.


இவ்வாறு பிறப்பிக்கப்படும் கட்டளைகள் பூமியை அடைந்து மீண்டும் இறைவனைச் சென்றடையும் வேகம் பற்றி இவ்வசனம் கூறுகிறது.


22:47 வசனமும் கட்டளைகளின் வேகத்தையே குறிப்பிடுகிறது. இறைவன் இருக்கிறான் என்றால் அவனை ஏற்காத எங்கள் மீது வேதனையை இறக்கட்டுமே என்று நபிமார்களின் எதிரிகள் கேட்டனர். இதற்கான கட்டளையை நான் பிறப்பித்து விட்டால் அது ஆயிரம் ஆண்டுக்கு நிகரான ஒரு நாளின் வேகத்தில் விரைவாக வந்து சேர்ந்து விடும் என்று 22:47 வசனம் கூறுகிறது.


இறைவனின் ஒரு கட்டளை ஒரு நாளில் சென்றடையும் தூரத்தை மனிதன் அடைய 1000 ஆண்டுகள் (3,65,000 நாட்கள்) தேவைப்படும்.


இறைவனின் கட்டளை ஒரு விநாடியில் செல்லும் தூரத்தை நாம் அடைய நான்கு நாட்களுக்கு மேல் தேவைப்படும்.


ஒளியின் வேகம் தான் மனிதன் கண்டுபிடித்த வேகங்களிலேயே அதிவேகமுடையது. எனவே தான் ஒளியால் படைக்கப்பட்ட வானவர்களின் வேகம், கட்டளைகளின் வேகத்தை விட 50 மடங்கு அதிகமாகவுள்ளது.


ஆயிரம் ஆண்டுகள் என்பதும், ஐம்பதாயிரம் ஆண்டுகள் என்பதும் வெவ்வேறு விஷயங்களுக்கான கணக்கு என்பதைப் புரிந்து கொண்டால் எந்தக் குழப்பமும் இல்லை.


மேலுள்ள, தஃப்ஸீர் குறிப்பை ஆய்வுக்கு எடுக்கிறோம். அக்குறிப்பில் உள்ளவற்றை சிவப்பு நிற எழுத்துக்களில் கொடுத்துள்ளோம். நமது விளக்கங்கள் கருப்பு நிறத்தில் உள்ளது. 


*//உதாரணமாக இந்தப் பூமியிலிருந்து 25 வயதுடைய ஒருவன் ஒளி வேகத்தில் மேல்நோக்கிப் பயணம் செய்து கொண்டே இருக்கிறான். (ஒளியின் வேகம் வினாடிக்கு சுமார் 3,00,000 - மூன்று லட்சம் - கி.மீ). பூமியில் ஐம்பது ஆண்டுகள் கடந்த பிறகு அவன் திரும்பி வந்தால், அவனுடைய வயதுடையவர்கள் பலர் இறந்திருப்பார்கள். எஞ்சியிருப்பவர்கள் 75 வயதுடையவர்களாக இருப்பார்கள். ஆனால் ஒளி வேகத்தில் பயணம் செய்து கொண்டே இருந்தவன் 25 வயது வாலிபனாகவே திரும்பி வருவான். இது இன்றைய நவீன உலகில் வாழும் மேதைகளில் பலருக்கே புரிந்து கொள்ளச் சிரமமாக இருந்தாலும் உண்மை இதுதான்.//*


இதில் சில கேள்விகளை எழுப்பி அதற்கான விடையை தேடினால் இந்த விளக்கக் குறிப்பில் இருக்கும் தவறுகளை அறிந்துகொள்ள இயலும்


*1. சார்பியல் கோட்பாடு என்றால் என்ன?*


*2. ஒளியின் வேகத்தில் பயணித்தால் வயது அதிகரிக்காது என்பதுதான் சார்பியல் கோட்பாடா?*


*3 ஒளியின் வேகத்தில் பயணித்தால் வயது அதிகரிக்காது என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்றா?*


*4. ஒளியின் வேகத்தில் பயணம் செய்வது சாத்தியமா?*


*5. ஒளியின் வேகம் என்ன? மி’ராஜ் பயணத்தின் பொது நபி ஸல் அவர்கள் ஒளியின் வேகத்தில் பயணித்தார்களா?*


*6. படுக்கையின் சூடு ஆறும் முன்னரே மி’ராஜ் பயணத்தை முடித்துவிட்டு நபி ஸல் அவர்கள் வந்துவிட்டதாக சொல்கிறார்கள். ஒளியின் வேகத்தில் பயணித்தால் படுக்கையின் சூடு ஆறும் முன்னர் மிஃராஜ் பயணத்தை முடித்துவிட்டு திரும்ப வர இயலுமா?*


சார்பியல் கோட்பாடு என்பது சாதாரண மக்களுக்கு விளங்கும் விதத்தில் எளிமையாக புரியவைக்கும் விஷயமல்ல. அது சாதாரண மனிதனின் வாழ்வில் பயன்படும் அறிவியலும் அல்ல. முழுக்க முழுக்க விண்வெளியின் பௌதீகத்தைப் பற்றிய கல்வி அது. சார்பியல் கோட்பாட்டை சொன்ன ஐன்ஸ்டீன் அதனை நிறுவவே இல்லை [¹] . அதை தியரியாக சொல்லி முடித்துக்கொண்டார். அதை நிறுவியவர் வேறொரு ஆராய்ச்சியாளர்[²]. பொதுவாக சார்பியல் கோட்பாடு என்றாலே நமது நினைவுக்கு வருவது இந்த தப்ஸீரில் கொடுக்கப்பட்டுள்ள கருதுகோள்தான்...


1. https://www.space.com/37018-solar-eclipse-proved-einstein-relativity-right.html 

2. https://en.wikipedia.org/wiki/Arthur_Eddington



இது சார்பியல் கோட்பாட்டை தழுவிய ஒரு கருதுகோள் ஆகும். கருதுகோள் என்பது நிரூபிக்கப்படாத ஒரு தத்துவம் ஆகும். ‘கற்பனை’ என்பதை போன்றது. கற்பனைக்கு எல்லை இல்லை. ஆனால் கருதுகோள் என்பது ஒரு இயற்கை நிகழ்வை ஒரு காரணத்தைக் கொண்டு விளக்குவதாகும். அது நிரூபிக்கப்பட்டால் அதன் பின்னர் அது கருதுகோள் என்று அழைக்கப்படாது. இந்த கருதுகோளை யாராலும் நிரூபிக்கவே இயலாது. ஏன்?


“ஒளியின் வேகத்தை விட அதிகமான வேகத்தில் பயணிக்கும் ஒருவருக்கு வயது அதிகரிக்காது.” என்பது சார்பியல் கோட்பாட்டை தழுவிய ஒரு கருதுகோள். ஒளியின் வேகத்தில் பயணிக்க இயலுமா? ஒளியின் வேகத்தில் பயணிக்க என்னென்ன தேவை? 0 கிராம் எடை கொண்ட பொருளால் மட்டுமே ஒளியின் வேகத்தில் பயணிக்க இயலும்.[³⁴] ஒளியின் மூலக்கூறுக்கு ஃபோட்டான் என்று பெயர் இதன் எடை 0 கிராம். அதாவது எடையே இல்லாத ஒன்றுதான் ஒளி. அதனால்தான் அத்தகைய அதிவேகத்தில் அது பயணிக்கிறது. இது வேறெந்த பொருளுக்கும் சாத்தியமே இல்லை. ஆக! மேலே சொல்லப்பட்டதை உதாரணத்திற்கு கூட சொல்லக் கூடாது. நிரூபிக்கப்படாத ஒன்றை உண்மை என்று சொல்வதும் பெரிய பிழையாகும். இதை சொல்வதாக இருந்தால், இதே போன்ற மற்றொரு கருதுகோளான “டைம் மெஷின்” என்பதையும் உதாரணமாக சொல்லலாம் []. ஒளியின் வேகத்தை விட அதிவேகத்தில் பயணித்து இறந்த காலத்திற்கு செல்லலாம் என்பதே டைம் மஷினின் தத்துவமாகும். இது சாத்தியமா? இறந்த காலத்திற்கு செல்வதை அல்லாஹ் அனுமதிப்பானா?


3. https://www.scienceabc.com/pure-sciences/what-would-happen-if-you-traveled-at-the-speed-of-light.html

4. https://science.howstuffworks.com/science-vs-myth/what-if/what-if-faster-than-speed-of-light.htm

5. http://earthsky.org/space/faster-than-light-travel-are-we-there-yet

6. https://en.wikipedia.org/wiki/Time_travel


சார்பியல் கோட்பாடு என்பது நிறுவப்பட்ட உண்மை. சார்பியல் கோட்பாட்டின் பல்வேறு பரிமாணங்களில் ஒன்று time dilation []. காலம் எனும் அளவு ஈர்ப்பு விசையை பொறுத்து மாறுபடுகிறது. பூமியில்  இருக்கும் நமக்கு காலம் என்ற அளவும் பூமியை தவிர அதிக ஈர்ப்பு விசை உள்ள வேறொரு கிரகத்தின் காலத்தின் அளவும் ஒன்றல்ல. உதாரணம் பூமியின் ஒரு மணி நேரம் எனும் கால அளவு இதை விட பன்மடங்கு ஈர்ப்பு விசை கொண்ட ஒரு கிரகத்தில் அரை மணி நேரமாக இருக்கும். அதாவது அந்த கிரகத்தின் அரை மணி நேரம் நமக்கு ஒரு மணி நேரம். இதே போல கால அளவு என்பது பூமியை போலவே மற்ற வானங்களிலும் இருப்பதில்லை. அல்லாஹ்விடத்தில் கால அளவு வேறு. இந்த விஷயம் சரிதான். ஆனால் இதை விளக்குவதற்காக சொல்லப்பட்ட உதாரணம் தவறு.


7. https://en.wikipedia.org/wiki/Time_dilation


அதே போல மிஃராஜ் பயணத்திற்கு ஒளி-வேக பயணத்தை உதாரணமாக சொல்வதும் தவறு. ஏனென்றால் சூரிய ஒளி பூமியை அடைய 8 நிமிடம் எடுத்துக்கொள்கிறது. ஆனால் படுக்கையின் சூடு தணியும் முன்னர் பல வானங்களைக் கடந்து பயணத்தை முடித்துவிட்டு வந்திருந்தார்கள் நபி ஸல் அவர்கள். 8 நிமிடத்தில் படுக்கையின் சூடு தணியாமல் இருக்குமா? இருக்காது! எனவே ஒளியின் வேகத்தை விட பல கோடி மடங்கு வேகத்தில் பயணித்திருக்க வேண்டும். அப்படி பயணித்திருந்தால் மட்டுமே படுக்கையின் சூடு தணிவதற்குள் திரும்பி வந்திருக்க இயலும். அதனால் அதை உதாரணமாக சொல்லக்கூடாது. மேலும் மனித அறிவைக் கொண்டு மிஃராஜ் பயணத்தை விளக்கவும் தேவை இல்லை.


அல்லாஹ்வின் செய்திகளை ஈமான் கொள்வதற்கோ மிஃராஜ் பயணத்தை ஈமான் கொள்வதற்கோ அறிவியலின் உதவி தேவை இல்லை. ஈமானிய உள்ளம் போதுமானது. மேலும் நிரூபிக்கப்படாதவற்றை உண்மை என்று சொல்லித்தான் அல்லாஹ்வின் வேதத்தை உண்மை என்று நிறுவதற்கான தேவையுமில்லை. அல்லாஹ் தூயவன்.


அதாவது ஒருநாளில் அவர்கள் சென்றடைந்த தூரத்தை நாம் அடைவது என்றால் ஐம்பதாயிரம் ஆண்டுகள் தேவைப்படும். (அதாவது 1,82,50,000 நாட்கள்).


அவர்கள் ஒரு விநாடியில் சென்றடையும் தூரத்தை நாம் அடைவது என்றால் 211 நாட்கள் தேவைப்படும். அவ்வளவு வேகமாக அவர்களின் பயணம் அமைந்திருக்கும்.


இறைவனின் ஒரு கட்டளை ஒரு நாளில் சென்றடையும் தூரத்தை மனிதன் அடைய 1000 ஆண்டுகள் (3,65,000 நாட்கள்) தேவைப்படும்.


இறைவனின் கட்டளை ஒரு விநாடியில் செல்லும் தூரத்தை நாம் அடைய நான்கு நாட்களுக்கு மேல் தேவைப்படும்.


வருடத்திற்கு 365 நாட்கள் என்று கணக்கு வைத்துக்கொண்டு மலக்குமார்களின் வேகத்தையும் அல்லாஹ்வின் கட்டளையின் வேகத்தையும் kmph கிமீ வேகத்திற்கு மாற்றி இந்த தஃப்சீரில் கொடுக்கப்பட்டுள்ளது. இதே போல கணக்கிட்டால் பூமியில் இருந்து அல்லாஹ்வின் அர்ஷ் இருக்கும் தூரத்தையும் கணக்கிட்டுவிடலாம். நவூதுபில்லாஹ். தஃப்சீரின் அதீத அறிவியல் மோகம் இத்தகைய விபரீதங்களில் கொண்டு சென்று சேர்த்துவிடும்.


மேலும் இதே தர்ஜமாவில் 10:5ம் வசனம் ஓர் ஆண்டு என்பது சந்திர கணக்கு என்று சொல்லப்பட்டுள்ளது. எனில் 354 நாட்களை ஒரு வருடம் என்று கணக்கிட்டிருக்க வேண்டும். ஓர் ஆண்டு என்றால் என்னவென்று முடிவு செய்யாமலேயே தொடங்கிய தவறு மறைவான ஞானத்தில் கைவைக்கும் நிலையில் முடிந்துள்ளது.

மற்ற தலைப்புகளை வாசிக்க https://www.piraivasi.com/p/zina-ul-abdeen.html