Saturday 13 February 2016

மறைப்பது எது?

الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ لَيْلَةً، فَلاَ تَصُومُوا حَتَّى تَرَوْهُ، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَأَكْمِلُوا الْعِدَّةَ ثَلاَثِينَ
மாதத்திற்கு இருபத்தி ஒன்பது நாட்களாகும். எனவே பிறையைக் காணாமல் நோன்பு பிடிக்காதீர்கள். உங்களுக்கு மறைக்கப்பட்டால் எண்ணிக்கையை முப்பதாக முழுமைப்படுத்துங்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1907
இதுவே பிறையை கண்ணால் பார்ப்பதற்கு ஆதாரமாக நாம் வைக்கும் ஹதீஸ். பிறையை எவையெல்லாம் மறைக்கும் என்று பார்ப்போம். பிறையை மறைக்கும் காரணிகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
1. வானிலை சார்ந்தது
2. பிறையின் வயது சார்ந்தது
வானிலை சார்ந்த மறைக்கும் காரணிகளைப் பார்ப்போம்.
1. மேக மூட்டம் & பனி மூட்டம்.:
சென்ற ஜனவரி 2016 இன் தலைப்பிறை அமெரிக்காவை அடைந்த பொது கண்பார்வைக்கு புலப்படும் அளவிற்கு வளர்ந்திருந்தது.
பிறையின் வயது 24மணி ஒரு நிமிடமாக இருந்தது.
சூரியன் மறைந்து 1 மணி 5 நிமிடங்களுக்குப் பிறகே சந்திரன் மறைந்தது
Elongation எனப்படும் விலகல் கோணம் 13.3 டிகிரியாக இருந்தது.
சூரியன் மறையும்போது சந்திரன் அடிவானத்திலிருந்து 12 டிகிரி உயரத்தில் இருந்தது.
1.3% சந்திரன் ஒளியூட்டப்பட்டிருந்தது.
இந்த அளவுகள் பிறை கண்ணுக்கு தெரிய அறிவியல் கூறும் குறைந்தபட்ச அளவுகளை விட அதிகம். பிறை இந்த அளவுக்கு வளர்ந்திருந்தும் அன்று அமெரிக்காவில் பிறை தெரியவில்லை.
ஜனவரி மாதம் அமெரிக்காவில் குளிர் காலம். எப்போதும் அடிவானம் மேக மூட்டமாகவும் பனி மூட்டமாகவும் இருக்கும். அன்றைய தினம் பிறை தெரியவில்லை எனும் தகவலுடன் தெரியாததற்கு காரணமாக வல்லுனர்கள் கூறியது வானிலையைத்தான்.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் எல்லாப் பருவகாலங்களிலும் அடிவானம் மேகத்துடனேயே காணப்படும்.
2. புழுதி மண்டலம்:
அரபு நாடுகளில் புழுதி மண்டலம் என்பது சாதாரண விஷயம். சாதாரண நாளில் சூரியனை நாம் யாரும் நேரடியாகப் பார்க்கமாட்டோம். கண்களைச் சுட்டு பார்வையை பறித்து விடும். பௌர்ணமியை நம்மால் சாதாரணமாகப் பார்க்க இயலும். அதன் ஒளி சூரியனை விடப் பல நூறு மடங்கு ஆற்றல் குறைந்தது. ஆனால் புழுதி மூடிய நாட்களில் பௌர்ணமியை விட சூரியன் ஒளி குன்றி காணப்படும். இது சூரியன்தானா என்று சந்தேகிக்கும் அளவுக்கு அதன் ஒளி குன்றி இருக்கும்.
சூரியனை மறைக்கும் இத்தகைய புழுதி பிறையை மறைக்காதா?
3. மாசு மண்டலம்
நம் நகரங்கள் அனைத்தும் மாசடைந்து விட்டன. தலைக்கு மேலே வானம் தெளிவாகத் தெரியும். எந்த மாசும் காற்றில் இருப்பதாக நம் கண்களுக்குத் தெரியாது. ஆனால் அடிவானத்தின் கோண விகுதியாலும், ஒளிச்சிதறலாலும் அடிவானம் இருண்டே காணப்படும். அரபு நாடுகளில் புழுதிக்காற்று இல்லாத நாட்களிலும் சூரிய மறைவை பார்க்கவே முடியாது. காற்றில் இருக்கும் மாசு சூரியனையே மறைத்துவிடும். அது பிறையை மறைக்காதா?
பிறையின் வயது சார்ந்த மறைத்தல்.
பிறை புறக்கண்ணுக்கு தெரிய வேண்டும் எனில்
§. சூரியன் மறையும்போது, சூரியனிலிருந்து சந்திரன் இருக்கும் கோணம் 12 டிகிரிக்கு மேல் இருக்க வேண்டும். (விலகல் கோணம்) (Elongation)
§. சூரியன் மறையும்போது, பார்ப்பவரின் தொடுவானத்திலிருந்து சந்திரன் 10டிகிரிக்கு மேல் இருக்க வேண்டும். (எழுச்சிக்கோணம்) (Moon Altitude)
§. குறைந்த பட்சம் சந்திரன் 1% ஒளியூட்டப்பட்டு இருக்க வேண்டும். (Illumination)
மேலிருப்பவைகளில் ஒரு காரணி இருந்து மற்றொரு காரணி இல்லாவிடிலும் பிறை கண்ணுக்குத் தெரியாமல் மறைக்கப்படும்.
1. சூரிய வெளிச்சம் (அந்தி வெளிச்சம்).
பிறை 1% வரை வளர்ந்துவிட்டது. ஆனால் சூரியன் மறையும்போது சந்திரன் 5 டிகிரிதான் இருக்கிறதென்று வைத்துகொள்வோம். பிறையின் ஒளியை சூரியனின் அந்தி வெளிச்சம் மங்கச்செய்து விடும். பிறை கண்ணுக்குத் தெரியாது.
2. பிறையின் வயது.
சூரியன் மறைந்து 1 மணி நேரத்திற்கு பின் சந்திரன் மறைவதாக வைத்துக்கொள்வோம். இந்நிலையில் சூரியன் மறையும்போது சந்திரன் இருக்கும் உயரமும் 1௦டிகிரிக்கு மேல் இருக்கும். ஆனால் பிறை 1% வளரவில்லை என்றால் பிறை கண்ணுக்குத் தெரியாது.
சற்று சிந்திப்பவருக்கு இதில் இருக்கும் அல்லாஹ்வின் சான்று விளங்கும். பிறையை மறைப்பதே வளிமண்டலம்தான். வளிமண்டலம் இல்லாதிருந்தால் ஒளிச்சிதறல் இருக்காது. அம்மாவாசை நடந்த சில நிமிடங்களில் நம்மால் பிறையை பார்க்க இயன்றிருக்கும். காற்று இல்லாவிடில் தூசு எது? புகை எது? மேகம் எது? பிறையை மறைப்பதே அல்லாஹ் பூமியை பாதுகாக்க வைத்திருக்கும் வளிமண்டலம்தான்.
பிறையை மறைக்கும் காரணிகளில் அதிக சக்தி வாய்ந்தது மேகமே. மற்ற காரணிகள் குறிப்பட்ட வரையறைகளுக்கும் வரம்புகளுக்கும் உட்பட்டவை. மேகம் மட்டுமே எந்த வரம்புக்கும் வரையறைக்கும் உட்படாதது. மேகத்தால் பௌர்ணமி நிலவையும் மறைக்க இயலும் சுட்டெரிக்கும் நண்பகல் சூரியனையும் மறைக்க இயலும். அதனால் தான் நபிகளார் மற்ற காரணிகளைச் சொன்னதை விட மேகத்தைப் பற்றிதான் அதிகமாகச் சொன்னார்களோ. அல்லாஹ் அறிந்தவன். ஆனால் ஹிஜ்ராவினர், மேகம் பிறையை மறைக்குமா என்று ஏளனம் செய்கின்றனர்.
பிறையை மெல்லிய மேகமும் மறைக்கும், சூரிய வெளிச்சம் பிறையின் வெளிச்சத்தை மங்கச்செய்யும், தூசுமண்டலம் பிறையை மறைக்கும், பனிமூட்டம் பிறையை மறைக்கும், பிறையின் வயது அதை மறைக்கும், போதிய அளவுக்கு வளராத பிறை வானத்தில் இருந்தாலும் அது நமது கண்களுக்குப் புலப்படுவதில்லை. இவ்வாறு பிறையை கண்கள் காண்பதிலிருந்து தடை செய்யும் காரணி எதுவாக இருந்தாலும் அது பிறையை மறைக்கும். அத்தகைய மாதங்களில் மட்டுமே 3௦ ஆக எண்ணிக்கையை முழுமைப்படுத்த நமக்குக் கட்டளை. ஆனால் ஹிஜ்ராவினர் மாதத்தின் கடைசி நாளில் சந்திரன் புறக்கண்ணுக்கு மறைக்கப்படும் இதைத்தான் நபி ஸல் ஃப இன்ன கும்ம உங்களுக்கு மறைக்கப்படும்போது கணக்கிடுங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள். எனவே நாங்கள் மறைக்கபடும் நாளைக் கணக்கிடுகிறோம்என்று கூறிக்கொண்டு அமாவாசையை கணக்கிட்டு அதன் மறுநாளில் மாதத்தைத் துவங்குகின்றனர். கும்ம என்றால் அமாவாசை என்கிறார்கள்.
மறைக்கப்படுதல் என்றால் கஞ்ஜங்ஷன் என்கிறார்கள். இருக்கும் ஒரு பொருளைத்தான் மறைக்க முடியும். மேலும் பார்வைக்கு தெரியும் ஒரு பொருளைத்தான் மறைக்க முடியும். இரவில் சூரியனை மறைக்கப்பட்டதாக யாரும் சொல்லமாட்டோம். காரணம் இரவில் வானில் சூரியன் இருக்காது. இல்லாத ஒன்றை மறைக்க இயலாது. காற்றை மறைத்தல் என்பது அறிவுக்கு எட்டாதது. காற்றை மறைக்க இயலாது. ஆக, இருக்கும் ஒன்றை கண்ணுக்கு தெரியும் ஒன்றைத்தான் மறைக்க இயலும். இவர்கள் சொல்லும் கஞ்ஜங்ஷன் எனும் நிகழ்வின்போது பிறையே இருக்காது. இல்லாத ஒன்றை எது மறைக்கும். நிலவு இருக்கும் என்று வாதிடுவார்களேயானால் அது கண்ணுக்கு தெரியாது. தெரியாத ஒன்றை மறைப்பதாக சொல்வது அறிவுடைமையா? நபிகளார் இவ்வாறு அறிவுக்கு எட்டாத பொருளில் பேசவே மாட்டார்கள். நபிகளார் பிறை பார்வையிலிருந்து மறைக்கப்பட்டால் மட்டுமே மாதத்தை முழுமையாக்க கட்டளையிட்டார்கள்.
இவர்கள் உண்மையாளர்கள் எனில் நபி ஸல் மறைக்கப்படும் நாளில் கணக்கிடுங்கள்” என்று சொன்னதாக ஒரு ஹதீஸைக் காட்ட வேண்டும். அதில் யவ்ம கும்ம எனும் வார்த்தை இருக்க வேண்டும். மாறாக நபி ஸல் உங்களுக்கு மறைக்கப்பட்டால் மட்டுமே மாதத்தை முப்பதாகப் பூர்த்தி செய்யச் சொன்னார்கள்..
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَيَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَابْنُ، حُجْرٍ قَالَ يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ الآخَرُونَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، - وَهُوَ ابْنُ جَعْفَرٍ - عَنْ عَبْدِ اللَّهِ بْنِ، دِينَارٍ أَنَّهُ سَمِعَ ابْنَ عُمَرَ، - رضى الله عنهما - قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ لَيْلَةً لاَ تَصُومُوا حَتَّى تَرَوْهُ وَلاَ تُفْطِرُوا حَتَّى تَرَوْهُ إِلاَّ أَنْ يُغَمَّ عَلَيْكُمْ فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَاقْدِرُوا لَهُ ‏"‏‏.‏
முஸ்லிம் 1964. இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மாதத்திற்கு இருபத்தி ஒன்பது இரவுகளாகும். எனவே, அதைப் (பிறையைப்) பார்க்காமல் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள். உங்களுக்கு மறைக்கப்பட்டாலே தவிர, அதைப் (பிறையைப்) பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். அவ்வாறு உங்களுக்கு (பிறை) மறைக்கப்படுமானால், அந்த மாதத்தை (முப்பது நாட்களாக)க் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
(29ஆம் பகல் முடிந்து வரும்) 30  ஆம் இரவில் பிறை மறைக்கப்பட்டால் மாதத்தை 3 ஆக பூர்த்தி செய்யவேண்டும் என்று இந்த ஹதீஸில் மிகத்தெளிவாக வந்துள்ளது. பிறை தெரிந்தால் மாதம் 29 நாட்களுடன் முடியும். பிறை கண்களுக்குத் தெரிவதில் இருந்தும் மறைக்கப்பட்டால் மாதம் 3 நாட்கள் கொண்டதாக நீளும். இதுவே பிறை தொடர்பான அனைத்து ஹதீஸ்களின் சாராம்சம். “மாதத்தின் கடைசி நாள் அமாவாசை, அதை கணக்கிட்டு அடுத்த நாள் மாதத்தை துவங்குங்கள்என்று ஹதீஸில் எங்காவது வந்துள்ளதா? இவர்கள் ஏன் பிறையை கணக்கிடாமல் அமாவாசையை கணக்கிடுகிறார்கள் எனும் சுவாரஸ்யமான பின்னணிகளைப் பார்ப்போம்.
இந்துக்கள் அமாவாசையை கணக்கிட்டு அவர்கள் கருமங்கள் செய்வர். அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பிறை என்பது அவர்களது கணக்கு. ஆனால் முஸ்லிம்கள் மேற்கில் மறையும் தலைப்பிறையை மக்ரிப் வேளையில் புறக்கண்ணால் பார்த்து மாதத்தைத் துவங்குவர். தலைப்பிறை என்பது அமாவாசைக்கு அடுத்த நாளும் கண்ணுக்குத் தெரியலாம், அல்லது இரண்டாம் நாள்வரை தள்ளிப்போகலாம். முதல் பிறையை இரண்டு நாள் மூன்று நாள் தள்ளிப்போடுகிறீர்களே என்று இந்துக்கள் முஸ்லிம்களைக் கேலி செய்தனர். அதன் வெளிப்பாடாக முஸ்லிம்கள் சொன்னதுதான்
அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன தொடர்பு
புகாரி 7319. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள், 'என் சமுதாயத்தார் தமக்கு முந்தைய சமுதாயங்களின் நடைமுறைகளை சாண் சாணாக, முழம் முழமாக பின்பற்றி நடக்காத வரை மறுமைநாள் வராது' என்று கூறினார்கள். உடனே, 'இறைத்தூதர் அவர்களே! பாரசீகர்கள் (நெருப்பு வணங்கி) மற்றும் ரோமர்கள் (பல கடவுள் மற்றும் சிலை வணங்கி) போன்றவர்களையா?' என வினவப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அவர்களைத் தவிர (இன்று) மக்களில் வேறு யார் உள்ளனர்?' என்று கேட்டார்கள்.
புகாரி 3456. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்

"உங்களுக்கு முன்னிருந்தவர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்கள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், 'இறைத்தூதர் அவர்களே! யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'வேறெவரை?' என்று பதிலளித்தார்கள்.
நபி ஸல் முன்னறிவித்தது நடக்காமல் போகுமா? இவர்கள் நெருப்பு வணங்கிகள், சிலை வணங்கிகள், ஈசா நபியை வணங்கியவர்கள், மூஸா நபியின் கட்டளையை மறுத்தவர்கள் என எவரையும் பாரபட்சம் பார்க்காமல் முழத்துக்கு முழம், ஜானுக்கு ஜான், இஞ்சுக்கு இஞ்ச், மில்லி மீட்டருக்கு மில்லி மீட்டர் பின்பற்றுகின்றனர்.
இந்துக்கள் செய்வதைப் போல் நாமும் அமாவாசையைக் கணக்கிட்டு நமது கருமங்களைச் செய்ய வேண்டும் என்பதே இவர்களது கொள்கை. இதை இவர்களின் பிரச்சாரகர் (இவரின் குறைகளை அல்லாஹ் மன்னிப்பானாக, இவரின் கப்ரை விசாலப்படுத்துவானாக) தனது வாயால் சொல்வதைக் கேளுங்கள்
ஆனால் இவர்கள் அமாவாசை எனும் வார்த்தையைப் பயன்படுத்தமாட்டார்கள். பயன்படுத்தினால்அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன தொடர்புஎன்று மீண்டும் முஸ்லிம்கள் இவர்களிடம் கேள்வி கேட்கத் துவங்கி விடுவார்கள். இதை எதிர்கொள்ள இவர்கள் திட்டமிட்டு கண்டு பிடித்த வார்த்தைதான்சங்கமம்”. இதற்கு விளக்கம் கேட்டால்வானியல் அமாவசையானஜியோ சென்ட்றிக் கஞ்ஜங்ஷன்எனும் ஆங்கில வார்த்தையை நாங்கள் தமிழில் புவிமைய சங்கமம் என்று மொழிப்பெயர்த்தோம். அதைச் சுருக்கமாகச் சங்கமம் என்று சொல்கிறோம்என்பர். இவர்களுக்கு அரபியும் தெரியாது, ஆங்கிலமும் தெரியாது. [ஏற்கனவே ஆங்கிலம் தெரியாமல் பைரூணியின் புத்தகத்தை தவறாக விளங்கி மூக்குடைந்த கதையை இங்கே வாசியுங்கள் >>> http://hafsa13.blogspot.com/2015/11/29.html.] எந்த மொழியாக இருந்தாலும் அதை வார்த்தைக்கு வார்த்தை மொழிப்பெயர்க்கக் கூடாது. அந்த வார்த்தைக்கு இணையாக மாற்று மொழியில் என்ன வார்த்தை உள்ளதோ அதைப் பயன்படுத்த வேண்டும். கஞ்ஜங்ஷன் என்பதற்கு சங்கமம் என்ற பொருளும் இல்லை. சங்கமம் என்பது பொருத்தமான வார்த்தையும் இல்லை. சூரிய-சந்திர-புவி மைய சந்திப்பு என்பதே ஜியோசென்றிக் கஞ்ஜங்ஷன் என்பதன் சரியான மொழியாக்கம்.

சரி சங்கமம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினால் மட்டும் அது அமாவாசையாக இல்லாமல் ஆகிவிடுமா. சங்கமம் என்பது அமாவாசை என்பதன் மாற்றுச்சொல்லே. இவர்கள் அமாவாசையை கணக்கிட்டு பின்பற்றும் முன் சென்றவர்களின் வழியை ஜானுக்கு ஜான் முழத்திற்கு முழம் பின்பற்றுபவர்களே. இவர்களும் மறுமை நாளின் அடையாளம் ஆவார்கள்.