Saturday 25 June 2016

பிறை மீரானின் பிறை நிலைப்பாடு!


அஸ்ஸலாமு அலைக்கும்,
கமிட்டி சகோதரர்கள் பிறை நிலைப்பாட்டை அறிவிக்காதவரின் உண்மை எங்களுக்கு தேவையில்லை என்று கூறுவதால் பிறைமீரானின் பிறை நிலைப்பாடு இதோ...
பிறை என்பதை பெருமானார் வரையறுத்து விட்டதாக உறுதியாக நம்புகிறான் பிறை மீரான்.அந்த வரையறையை அடிக்கு "அடி" "வருடி"ச் சென்று பின்பற்ற முயல்கிறான் பிறை மீரான்.
மார்க்கத்தின் அனைத்து விஷயங்களையும் அல்லாஹ் அவனது தூதருக்கு நிறைவு செய்து விட்டான்.
"அல்லாஹ்வும் அவனது தூதரும் முடிவு செய்த விஷயத்தில் மாற்றுக்கருத்தில்லை"
என்பதால் பிறை விஷயத்தில் பிறை மீரானுக்கென்று தனிக்கொள்கை ஏதும் கிடையாது.தனிக்கொள்கை கூடவும் கூடாது.ஒரு தனி நபரை பார்த்து "உன் பிறைக் கொள்கை என்ன" என்று கேட்பதே பெருமானார் வகுத்த கொள்கைக்கு மாறு செய்வதே.இப்படிக் கேட்பவர்களிடம் இந்த கேள்வி சரியானதா என்றால் "அடி" தடியில் இறங்கி கொள்கையின் "வருடி"களாவார்கள்.
பெருமானார் வகுத்தது எது என்பதை
வெளிப்படுத்த வேண்டியும் மேலும் நான் எப்படி நோன்பு பிடித்தேன் என்ற கேள்விக்கு பதிலாகவும் ரமலானை நோக்கி நகர்கிறேன்.
அனைத்து வகையான பருவம் சார்ந்த விஷயங்களையும் நட்சத்திரங்களை வைத்து அறிந்து வந்த அந்த மக்கள் மழைக்காலம்,கோடைக்காலம் முதலான விஷயங்களை சில நட்சத்திரங்களை அடையாளப்படுத்தி அவைகளின் உதிப்பு மறைவு மூலம் காலநிலைகளை கணக்கிட்டே வந்தனர்.அந்த சமுதாயத்திற்கு நட்சத்திர கணக்கு தெரியாது என்கிறது ஒரு புதுக் கூட்டம்.
உண்மையில் அவர்கள்தாம் "கண்" கொண்டு "வான்" பார்த்து"காலம் சொன்னவர்கள்.
பிறை விஷயத்தில் நம்மை விட கூடுதலாகவே அறிவு பெற்றிருந்த சமுதாயம் அது.
وَلَبِثُوا فِي كَهْفِهِمْ ثَلَاثَ مِائَةٍ سِنِينَ وَازْدَادُوا تِسْعًا
அவர்கள் தமது குகையில் முன்னூறு ஆண்டுகள் தங்கினார்கள் (என்றும்) ஒன்பது ஆண்டுகளை அதிகமாக்கிக் கொண்டனர் (என்றும் கூறுகின்றனர்.) ( 18:25 )
(அவர்கள் தங்கிய வருடம் அல்லாஹ் மட்டும்தான் அறிவான்.ஆனால் இது ஒரு வரலாற்று பிண்னனி உள்ள ஒரு வசனம்)
பெருமானாருக்கும் முந்தைய காலத்தில் நடந்த குகை சம்பவத்தில் அந்த இளைஞர்கள் தங்கிய ஆண்டுகள் குறித்து ஏற்பட்ட சர்ச்சையில் அவர்கள் தங்கிய வருடம் 300 சூரிய ஆண்டுகள் என யூதர்கள் கூற,சந்திரக் கணக்கின்படி 309 ஆண்டுகள் என அரபுகள் கூறினர்.100 சூரிய ஆண்டுகள் 103 சந்திர ஆண்டுகளுக்குச் சமம்.ஆக 300 சூரிய ஆண்டுகள் 309 சந்திர ஆண்டுகளுக்குச் சமம்.இந்த வித்தியாசத்தை அறிந்திருந்த அந்த சமுதாயத்தை சந்திர சுழற்சி அறியாதவர்கள் என புதுக் கூட்டம் கூறுகிறது.
சூரிய ஆண்டிற்கும் சந்திர ஆண்டிற்கும் வேறுபாடு அறிந்த சந்திர ஆண்டின் நாட்களறிந்த அந்த சமுதாயமோ பெருமானாரின் ரமலான் துவக்க அறிவிப்பிற்காக காத்திருந்தது.
தங்களை நிர்வகிப்பவர்களின் பிறை அறிவிப்பிற்காக காத்திருந்தனர்.
ரமலான் துவங்கியதை பெருமானார் அறிவிப்பு செய்ய வைத்தார்கள்.ஆக கமிட்டியின் கூற்றுப்படி காலண்டரை வாரிசாக பெற்றிருந்தால் கமிட்டியின் முன்னோர்கள் பிறை அறிவிப்பை ஏன் ஏற்றார்கள்?காலண்டரின் பிரகாரம் நோன்பை ஏன் துவக்கவில்லை?
ஆக, ரமலான் பிறந்து விட்டது என்பதை அறிவிப்பது ஒரு சுன்னா.
பெருமானார்..,ரமலான் பிறையை கண்ணால் கண்டு நோன்பு நோற்பார்கள் என்ற ஸஹீஹான ஹதீதை நம்பும் பிறை மீரான்
யூதர்கள் வழிமுறையை பின்பற்றி மறையும் பிறையை பார்ப்பதை நம்புகிறானா?
இன்ஷா அல்லாஹ் தொடரும்
பிறை மீரானின் பிறை நிலைப்பாடு
(Part -1 A)
அஸ்ஸலாமு அலைக்கும்...
பிறை நிலைப்பாடு என்ற எனது பதிவில் குகை சம்பவத்தில் இடம்பெற்ற 300 &309 வருடங்களை குறிப்பிட்டு எழுதியிருந்தேன்.
அதில் 300 சூரிய ஆண்டுகள் 309 சந்திர ஆண்டுகளுக்கு சமம் என்று அன்றைய அரபுகள் கூறியதை சுட்டிக் காட்டியிருந்தேன்.
அதைப் பார்த்த கமிட்டியின் ஏதோ ஒரு அறிவுக் கொழுந்து
// " அவர் கொள்கைபடி சந்திரக் காலண்டர்தாம் சாத்திய மில்லையே, பிறகு 309 சந்திர வருடம் எப்படி வந்தது?"// என்ற அதிமேதாவித்தனமான கேள்வி கேட்டிருந்தார்.
அல்லாஹ் குர்ஆனில் 12 சந்திரமாதங்களை ஒரு ஆண்டாக கருத சொல்கிறான்.சந்திர ஆண்டு இல்லையென்று யார் சொன்னது?
ஒரு சந்திர மாதத்தின் நாட்கள் 29 &30 என பெருமானார் வரையறுத்திருக்கிறார்கள்.
சந்திரனின் ஒரு மாத சுழற்சி சராசரியாக 29.53 நாட்கள்.அதாவது 29 முழு நாட்கள் மற்றும் அரை நாள்.29 நாட்கள் முடிந்த பிறகு மீதி இருக்கும் அரை நாளை என்ன செய்வது?
கண்ணால் பார்த்து மாதத்தை முடிவு செய்தால், 29 நாட்களுக்கு பிறகு பிறை தெரிந்தால் அந்த அரை நாள் அடுத்த மாதத்தில் சேர்ந்து விடும்.பிறை தெரியாவிட்டால் அந்த அரை நாள் நடப்பு மாதத்திலேயே சேர்க்கப்பட்டு 30 ஆக பூர்த்தி செய்யப்படும்.இதுதான் பெருமானாரின் வழிமுறையில் இயற்கையாக மாதம் அமையும் முறை.
ஒரு விஞ்ஞானக் கூட்டம் இந்த 29.53 நாட்களை லண்டன் மாநகரில் கீரீன்விச் கிராமத்தில் GMT போர்வையில் நள்ளிரவு 12.00 மணிக்கு தன் மனோ இச்சைப்படி அந்த அரை நாளை தான் விரும்பியபடி விரும்பிய மாதத்தில் சேர்த்து மாதங்களை முன் பின் ஆக்கி ஆடிய ஆட்டத்தின் அந்த "இருட்டுக் காலண்டர்" தான் சாத்தியமில்லை என்றேன்.சந்திர ஆண்டை அல்ல.
மேலும், கடைந்தெடுத்து ஒரு கணக்கை போட்டிருக்கிறார்கள்.
//// 300*365.25 = 109575 Days
309*355 = 109695 Days
Or
309*354= 109386 Days
300 Solar years என்பதும் 309 Lunar years என்பதும் சமமா? /////
அது அன்றைய யூதர்களின் கணக்கிற்கும் அரபுகளின் கணக்கிற்கும் ஒத்திருந்தது.அவ்வளவுதான்.
குர்ஆனில் உள்ள வசனம் அவர்களின் கணக்குப்படி 300 சூரிய ஆண்டுகள் என்பது 309 சந்திர ஆண்டிற்கு சமம் என்கிறது.கணக்கு போட்ட "கடவுள் துகள் விஞ்ஞானி" அன்றைய காலகட்டத்தில் அவர்களின் கணக்கின் நாட்களுக்கு கணக்கிட்டுருக்க வேண்டும்.தற்கால விஞ்ஞானக் கணக்கின் நாட்களை மோதிப்பார்க்கும் முரட்டு விஞ்ஞானியோ!!!
சரி பரவாயில்லை நானும் விஞ்ஞானக் கணக்கிடுகிறேன்.
சூரியக் கணக்கு
365.2421897×300 =1,09,572
நாட்கள்
சந்திரக் கணக்கு
29.530587981 ×12×309 =1,09,499 நாட்கள்
இரண்டிற்குமிடையே வித்தியாசம் 73 நாட்கள்.
இதை சதவீதத்தில் பார்த்தால் 0.06%
இந்த வித்தியாசத்தை விஞ்ஞானம் கூட கண்டுகொள்வதில்லை.ஆக, நவீன விஞ்ஞானத்தின் பிரகாரமும்
300 சூரிய ஆண்டுகள் 309 சந்திர ஆண்டுகளுக்குச் சமமானதே.
இந்த மாதிரிலாம் "கூமுட்டை கணக்கு" போட்டு சொல்ற கமிட்டி விஞ்ஞானி யாருப்பா?
பிறை விஷயத்தில் தனிநபர்க் கொள்கை கூடாது என்றேன்.உன் பிறைக் கொள்கை என்ன என்று தனிநபரைக் கேட்கக் கூடாது என்றேன்.கூடும் என்று கூறுபவர்கள் ஆதாரங்களை காட்டியிருக்கலாம்.
ரமலான் துவங்கி விட்டதை அறிவிப்பு செய்வது சுன்னா என்றேன்.இல்லை என்பவர்கள் மறுத்திருக்க வேண்டும்.அதை விடுத்து பிறை மீரானின் கணக்கில் பிழை என்ற கூப்பாடு.இந்த மாதிரி கணக்கு போடுறதுக்கு கமிட்டிக்குள்ள தனி ஏற்பாடு இருக்கிறதோ!!!!
பிறை மீரானின் பிறை நிலைப்பாடு
(Part 2)
அஸ்ஸலாமு அலைக்கும்...
ரமலான் பிறந்து விட்டதை அறிவிப்பு செய்வது சுன்னா என்று பார்த்தோம்.
எதைப் பார்த்து,எங்கே பார்த்து,எப்போது பார்த்து ரமலான் பிறந்ததை அறிவித்தார்கள்?
ஒரு புதுக்கூட்டம் தான்தோன்றித்தனமாக ஏதேதோ சொல்கிறது.அவைகளை பார்ப்பதற்கு முன்னர் பிறை விஷயத்தில் அவர்களின் முக்கிய வாதமான "யூத,நஸரானிகளுக்கு மாறு செய்தல்" என்பதை பார்ப்போம்.
யூதர்கள் "மறையும்" "பிறை"யை "மேற்கில்" பார்க்கிறார்களாம்.
அதனால் அவர்களுக்கு மாறு செய்வதாக நினைத்து "உதிக்கும்" "சந்திரனை" "கிழக்கில்" பார்க்கிறார்களாம் கமிட்டியினர்.
யப்பா,நல்லா மாறு செய்றாங்க.
யூதர்களின் "ஆஷுரா" நோன்பை அறிந்த பெருமானார் அதை எப்படி மாறு செய்ய சொன்னார்கள்.அவர்கள் நோன்பு வைக்கும் அன்று நாம் நன்றாக சாப்பிட வேண்டும் என்றா சொன்னாகள்.
அந்த நோன்பிற்கு யூதர்களை விட நாமே தகுதியானவர்கள் என்று நோன்பை இரட்டிப்பாக்கி மாறு செய்தார்கள்.ஏனெனில் நோன்பு என்பது முன்னோர்கள் பின்பற்றிய ஒன்று.யூதர்களுக்கானது மட்டுமல்ல.
அல்லாஹ் குர் ஆனில்.. முன்னோர்களுக்கு நோன்பு விதிக்கப்பட்டது போல் நமக்கும் விதிக்கப்பட்டிருப்பதாக கூறுகிறான்
(2:183)
முன்னோர்கள் எப்படி நோன்பு வைத்தார்கள்?
பெருமானார் கூறினார்கள் "நமது நோன்புக்கும், வேதம் கொடுக்கப்பட்டோரின் நோன்புக்கும் இடையே உள்ள வேறுபாடு ஸஹர் உணவே" என்று.
"சானுக்கு சான் முழத்திற்கு முழம்" முன்னோர்களை பின்பற்றுவீர்கள் என்று உரைத்த பெருமானார் தெளிவாகவே அறிவித்திருக்கிறார்கள் நோன்பில் யூதர்களுக்கு "மாறு செய்தல்" என்பது ஸகர் உணவைக் கொண்டே என்று.
யூதர்கள் சூரிய மறைவின் போது நோன்பு விடுகிறார்கள்.கமிட்டி எப்போது நோன்பு விடுகிறது?எப்படி மாறு செய்கிறார்கள்?
கேட்டால் பதில் கிடைக்காது.
உலகம் முழுவதும் வாரத்தின் நாட்கள் ஏழு என்று எப்படி ஏற்றுக் கொண்டார்கள்?
நட்சத்திரங்களை வைத்து காலநிலை அறிவது,மாதங்களின் எண்ணிக்கை 12,வாரத்தின் நாட்கள் 7 போன்ற காலம் சார்ந்த செயல்கள் அனைத்தும் அல்லாஹ்வின் ஏற்பாட்டின்படி முன்னோர்கள் வழியாக நாம் தொடர்ந்து அடைந்து வருவது.நமக்கு முந்தைய சமுதாயமாக யூதர்கள் இருப்பதால் அவர்களின் வழிமுறையை பின்பற்றுவதாக கமிட்டி நினைக்கிறது போலும்.
யூதர்களுக்கு மாறு செய்கிறோம் என்று வார நாட்களை 8 ஆக மாறு செய்யுமா கமிட்டி?
இரவு- பகலில் இரவை துவக்கமாக நேரமாக கொள்வதும் முன்னோர்களின் வழிதான்.யூதர்கள் வழிமுறை என்று கூறி யூதர்களை பின்பற்றுவதில் அவர்களையே விஞ்சும் கமிட்டியின் டகால்டி இதோ.
உலகம் முழுவதும் யூத பண்டிகை "ஸபாத்"ஒரே கிழமையில் கொண்டாட வேண்டும் என்பது யூதர்களின் சிந்தனை.
உலகம் முழுவதும் ஒரே நாளில் பெருநாள் கொண்டாட வேண்டும் என்பது கமிட்டியின் சிந்தனை.
யூதர்கள் தங்களுக்கு நாள் மாறும் இடமாக ஜெரூஸலத்தில் வைத்து நாட்களை மாற்றுகிறார்கள்.
கமிட்டி இன்னும் கிழக்கிந்திய காலத்திலியே இருந்து இந்தியாவை ஆட்சி செய்த இங்கிலாந்து நாட்டை நாள் மாறும் இடமாக்கியிருக்கிறது.
"மூஸாவே! இவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பது போல் எங்களுக்கும் பல கடவுள்களை ஏற்படுத்துவீராக'' என்று கேட்டனர். (7:138 )
மூஸா(அலை) அவர்களிடம், எங்களுக்கும் பல கடவுள்கள் வேண்டும் என்று கேட்ட இஸ்ரவேலர்கள் போல் கமிட்டியும் யூதர்களின் காலண்டர்க்கு ஆசைப்படுகிறதோ!
அந்த கேடு கெட்ட கொள்கையை எதிர்க்கும் என்னை "கொள்கையை கூறு" எனும் கமிட்டியே....
முன்னோர்களின் வழிமுறைப்படி மஃரிபில் பிறை பார்த்தலை தடை செய்யாத பெருமானாரின் வழிகாட்டுதலை மீறி முதல் பிறையை கியாமத்நாள் வரை பார்க்க முடியாத பஜ்ர் நேர கிழக்குப் பகுதிக்கு மாற்றிய கமிட்டியே உன் கொள்கைதான் என்ன?
பிறை மீரான்
பிறை மீரானின் பிறை நிலைப்பாடு
(PART -3)
**பிறையில் தனிநபர்க் கொள்கை கூடாது.
**மக்களை நிர்வகிப்பவர்கள் பிறை அறிவிப்பை செய்ய வேண்டும்.
**மேற்கில்தான் பிறையை பார்க்க வேண்டும்.
இந்த உண்மையை மறுப்பவர்கள் அவர்களின் உண்மையோடு உரசவேண்டும்.யாருடைய கருத்திற்காவது பிறை மீரானை பலிகடா ஆக்கலாம் என்று நினைத்தால்,கமிட்டியின் மேடைப் பேச்சாளர் கூறியதை நினைவுறுத்திகிறேன்.
காலண்டரை பின்பற்றும் ஒருவர் "மறையும் பிறையை பார்க்கும் மடையர்கள்" என்று என்னை திட்டினார் என்று கமிட்டியிடம் கூறினேன்.அதற்கு கமிட்டியின் மேடைப் பேச்சாளர் "யாரோ கூறியதற்கு கமிட்டி பொறுப்பாகாது"என்றார்.என் விஷயத்திலும் அதை நினைவுபடுத்திக் கொள்ளவும்.
சரி,இப்போது பிறை பார்க்க வேண்டும்.பெருமானார் தடை செய்யாத முன்னோர்களின் வழி முறையான மஃரிபில் பிறை பார்க்க வேண்டும்.யார் பார்ப்பது?
பிறை பார்த்தல் ஒவ்வொரு தனி நபரின் மீது கடமையா?
இல்லை.பெருமானார் அப்படி சொல்லியதாக எந்த அறிவிப்பும் இல்லை.
தொழுகை,நோன்பு,ஜகாத்,ஹஜ் ஆகிவை தனிநபர்க் கடமை.பிறை பார்த்தல் தனிநபர்க் கடமை அல்ல.
சரி,நான் எப்படி நோன்பு வைப்பது?
 الصَّوْمُ يَوْمَ تَصُومُونَ
"நீங்கள் நோன்பிருக்கும் நாளே நோன்பு"
நீ நோன்பிருக்கும் நாள் நோன்பு என்று ஒருமையில் வரவில்லை."நீங்கள்" என பன்மையில் இருக்கிறது.
ஆக,நான் மட்டும் நோன்பு வைப்பது எப்படி "நீங்கள்" என்பதாகும்.
"நீங்கள்" என குறிப்பிடப்பட்ட பலரின் நோன்பில் யாருடைய நோன்பை எல்லையாக பின்பற்றுவது.
மக்காவை எல்லையாக கொண்டு சவுதியின் பிறையை எடுப்பதா?
சர்வதேசமும் எங்களது என்று கூறி எங்கு கண்டாலும் நோன்பு வைக்கும் சர்வதேச எல்லையை எடுப்பதா?
தமிழ்நாட்டின் வட்ட மாவட்டங்களை  ஒரே வட்டமாக்கி அதில் பிறையை  எங்கு கண்டாலும் ஏற்கும் ஒரு அமைப்பின் எல்லையை எடுப்பதா?
குறுகிய எல்லையின் குறுநில மன்னர்களாக செயல்படும் காஜிக்களின் எல்லையை எடுப்பதா?
எல்லையற்ற வானங்களையும் எல்லை யுடைய பூமியையும் UTC ஆல் இணைத்து அண்டசராசரங்களுக்கும் அற்புதகாண்டரை அல்லாஹ்வின் பெயரில் 3000 வருடங்களுக்கு பிறை பொறித்த "அல்லாஹ்வின் நாட்காட்டி"யை ஏற்பதா?
இங்கு பிரச்சினையாக்கப்படுவது எல்லை".
 "எல்லை" என்றவுடன் எனது பாட்டி சொன்ன விஷயம் நினைவுக்கு வந்தது.
எனது பாட்டியின் சிறு வயதில் நோன்பு பிறை பிறந்ததை மஃரிப் தொழுகை முடிந்தவுடன் நகரா அடித்து பள்ளிவாசலில் அறிவிப்பார்களாம்.
பின்னர் கொஞ்ச ஆண்டுகளில் அருகில் இருக்கும் ஊர்களிலிருந்து பிறை செய்திக்காக காத்திருந்து இஷாவுக்கு பிறகு பள்ளி நிர்வாகம் அறிவிக்குமாம்.
எந்த எல்லைவரை பிறைச் செய்தியை எடுப்பது என நிர்வாகம் தான் முடிவு செய்திருக்கிறது.
வாகன வசதிகள் சற்று அதிகரித்தவுடன் பஜ்ர் தொழுகைக்கு முன்பு வரை பிறைச் செய்தியை எதிர்பார்ப்பார்களாம்.    சில சமயங்களில் ஸகர் உணவு உண்ட பிறகும் கூட பிறைச் செய்தி வந்ததன் அடிப்படையில் பெருநாள் அறிவிப்பார்களாம்.
ஆக,மார்க்கம் காட்டித்தந்ததன் அடிப்படையில் எல்லையை விரிவுபடுத்திய பள்ளி நிர்வாகங்கள் சர்வதேச பிறையையோ அல்லது 3000 வருட விஞ்ஞானக் காலண்டரையோ எல்லையாக அதாவது பெரிய எல்லையாக ஏற்க மறுப்பதேன்?
அதுவும் மார்க்கம் வழிகாட்டிய முறையில்தான்.
எல்லைக்கு பெருமானாரின் தீர்வு என்ன?
பல தரப்பினராலும் சோதனக்குள்ளாக்கப்பட்ட "குறைப்" சம்பவத்தை எடுக்கிறேன்.
குறைப்(ரஹ்) என்பவர் ஒரு வேலையாக சிரியா நாட்டிற்குச் சென்றுவிட்டு பிறகு மீண்டும் தனது ஊருக்கு திரும்புகிறார்.அந்த ஊரின் நிர்வாகியிடம் சிரியாவில் வெள்ளிக்கிழமை பிறை பார்த்து நோன்பு நோற்றதாக சொல்கிறார்.நிர்வாகியோ தங்கள் பகுதியில் சனிக்கிழமை பார்த்ததாகவும் அதன் பிரகாரமே செயல்படப்போவதாகவும் கூறுகிறார்.நிர்வாகி பெருமானாருடன் வாழ்ந்தவர்.குறைப் பின்னாளில் வந்தவர்.இங்கு பெருமானாருடன் வாழ்ந்த நிர்வாகியின் வார்த்தையே முக்கியத்துவம் பெருகிறது.
"கிராம வாசிகளின்" பிறை சாட்சியத்தை ஏற்ற பெருமானாரின் நடைமுறையறிந்திருக்கக்கூடிய நிர்வாகி தூரத்து பிறைச் செய்தியை தவிர்த்து பிராந்தியம் பேசுவது "எல்லை"தானே.
பெருமானாருடன் வாழ்ந்த நிர்வாகி பெருமானாரின் வழி அப்படித்தான் என்று கூறுவது நிர்வாகியின் சொந்த கூற்று என நினைக்கிறார்களோ.
இதிலிருந்து நான் விளங்குவது என்னவென்றால் "எல்லை" என்ற ஒன்றை பெருமானார் வகுத்துக் கொடுத்த முறைப்படி "எல்லை"யை தீர்மாணிப்பது நிர்வகிப்பவர்களே.எந்த "எல்லை"யிலிருந்து வரும் பிறை செய்தியை ஏற்பது,எந்த எல்லையிலிருந்து வரும் பிறை செய்தியை ஏற்க மறுப்பது என்பதை முடிவு செய்வது மக்களை நிர்வகிப்பவர்களே.
இஸ்லாமிய ஆட்சியின் நிர்வாகத்தில் இருந்தால் சரி.வேறு நிர்வாகத்தின் கீழ் இருந்தால் என்ன செய்வது.
மார்க்க ரீதியாக நிர்வகிப்பவர்களின் அறிவிப்பை ஏற்க வேண்டியதுதான்.மார்க்க ரீதியாக மக்களை நிர்வகிக்க பல அமைப்புகள் இருக்க எதை ஏற்பது.
தூர எல்லைகளின் செய்தியையும்,3000 வருட காலண்டர் செய்தியையும் புறந்தள்ளிவிட்டு,பார்த்தலுக்கும் பார்த்ததை அறிதலுக்கும் எல்லை நிர்ணயித்து மக்களை மார்க்க ரீதியாக நிர்வகிக்கும் பள்ளிவாசலின் அறிவிப்பை ஏற்கிறேன்.அந்த பள்ளிவாசல் நிலையான சந்திரக் காலண்டர் என்ற மாயையில் சிக்காத வரை.காலண்டர் வலையில் சிக்கினால் பிறை மீரான் களம் காண்பான்.இன்ஷா அல்லாஹ்.
பள்ளிவாசலில் நோன்பை விடச் சொல்லும் பெருநாள் அறிவிப்பு கேட்கிறது.நானும் நோன்பை விடப்போகிறேன்.ஏனெனில் எனக்குத் தெரியும்
 وَالْفِطْرُ يَوْمَ تُفْطِرُونَ
நீங்கள் நோன்பை விடும் நாளே பெருநாள்.
பிறை மீரான்...