Tuesday 27 June 2017

ருஃயத் - காட்சியா? பார்த்தலா?

ருஃயத் -  காட்சியா? பார்த்தலா?
அன்புச் சகோதரர்களே, விஞ்ஞான ரீதியினாலான ஒரு சந்திர காலண்டரை மார்க்கமாக மாற்றுவதற்காக குர்ஆன் வசனங்களை திரித்தும், ஹதீஸ்களை வளைத்தும் மற்றும் மறுத்தும் பல வேலைகளை செய்யும் ஒரு குழுவினரின் பிரபலமான வாதமான "ருஃயத் என்றால் காட்சிதான்" என்ற வாதத்தைப் பார்க்கப் போகிறோம். இன் ஷா அல்லாஹ்.
அரபு வார்த்தையின் இலக்கணத்தைப் பார்க்குமுன் முதலில் தமிழ் இலக்கணத்தை கொஞ்சம் பார்ப்போம்.
தமிழ் மொழியில் பெயர்ச்சொல் மற்றும் வினைச்சொல் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். தொழிற்பெயர் என்ற ஒன்றும் உண்டு.
தொழிற்பெயர் : ஒரு செயல் செய்வதை மட்டும் குறிக்கும் சொல்தான் தொழிற்பெயர்.  இது வெறும் செயலை மட்டும் குறிக்கும். இதில் இறந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் என்ற மூன்று காலங்களுடனும் தொடர்பு கிடையாது.
(உதாரணம் : தடுத்தல், சாப்பிடுதல்)
வினைச்சொல்: இறந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் என்ற மூன்று காலங்களுடனும் தொடர்பு உடையது.
(உதாரணம் : தடுத்தான், தடுக்கிறான், தடுப்பான். சாப்பிட்டான், சாப்பிடுகிறான், சாப்பிடுவான்)
சாப்பிடுதல் என்ற தொழிற்பெயர் "வாயால் சாப்பிடுவது" என்ற அர்த்தத்தை தவிர வேறில்லை.
(உதாரணம்  : பல் துலக்கியபிறகு சாப்பிடுதல் நன்று,
இரவில் அதிகம் சாப்பிடுதல் ஊறு விளைவிக்கும்)
ஆனால், இதன் வினைச் சொல் சாப்பாடு சாப்பிடுவதையும் மற்ற சில அர்த்தங்களையும் கொடுக்கும்.
(உதாரணம் : அவன் மக்கள் பணத்தை சாப்பிட்டான்)
இதில் "சாப்பிட்டான்" என்ற வினைச்சொல் வாயால் சாப்பிட்டதை குறிக்கவில்லை. மாறாக மக்கள் பணத்தை "ஊழல் செய்துவிட்டான்" என்று அர்த்தத்தில் சொல்லப்படுகிறது.
"சாப்பிட்டான்" என்ற வினைச்சொல்லிற்கு "ஊழல் செய்தான்" என்ற பொருளை இந்த இடத்தில் கொடுப்பதால், "சாப்பிடுதல்" என்ற தொழிற்பெயருக்கு "ஊழல் செய்தல்" என்ற அர்த்தமும் உண்டு என்று வாதிட்டால் அது ஒரு நல்ல வாதமா?
ஆக, தொழிற்பெயர் தன்னுடைய அர்த்தத்தை மாற்றிக்கொள்ளாது. ஆனால் அதன் வினைச்சொல் இடத்திற்கு தகுந்தார் போல் வேறு சில அர்த்தங்களையும் கொடுக்கும்.
அரபு இலக்கணத்தைப் பார்ப்போம்.
தமிழ் மொழியின் "தொழிற்பெயர்" அரபு மொழியில் "மஸ்தர்" என்பதாகும்.
தமிழ் மொழியின் "வினைச்சொல்" அரபு மொழியில் "ஃபியல்" என்பதாகும்.
ருஃயத் (رؤية)
என்ற அரபு வார்த்தை ஒரு "மஸ்தர்" (தொழிற்பெயர்) ஆகும். தமிழில் இதன் அர்த்தம் "பார்த்தல்" என்பதாகும். இந்த வார்த்தை எந்த இடத்தில் இடம்பெற்றாலும் இதன் மூல அர்த்தமான "பார்த்தல்" என்ற அர்த்தம் மாறாது.
ருஃயத்- ல் இருந்து பிறந்த வினைச்சொற்கள் (ஃபியல்) ரஅ, யரா, தரா, நரா போன்ற வார்த்தைகள் சில இடங்களில் வேறு சில அர்த்தங்களிலும் வருகிறது. (இதை விரிவாக தனியாக பார்ப்போம்)
மஸ்தர் (தொழிற்பெயர்) அர்த்தம் மாறாது.  அதன் வினைச்சொல் (ஃபியல்) சில இடங்களில் வேறு அர்த்தம் கொடுக்கும். இது நாம் தற்போது அறிந்து கொண்டது.
ருஃயத் (رؤية ) என்ற மூல வார்த்தை குர்ஆனில் இடம்பெறவில்லை. அதாவது மாறாத அர்த்தம் தரக்கூடிய மூல வார்த்தையான ருஃயத் (رؤية) குர்ஆனில் இடம்பெறவில்லை.
ஆனால், இடத்திற்கு தகுந்தாற்போல் அர்த்தத்தை மாற்றிக்கொள்ளக் கூடிய  வினைச்சொற்கள் (ஃபியல்) குர்ஆனில் இடம்பெற்றிருக்கின்றன.
விஞ்ஞான காலண்டரின் விஞ்ஞானிகள் தங்களுடைய கருத்தை நிலைநாட்ட, மாறக்கூடிய அர்த்தம் கொண்ட வினைச்சொற்களை வைத்து வித்தை காட்டுகின்றனர்.
ருஃயத் (رؤية) என்ற மூல வார்த்தை குர்ஆனில் இடம் பெறாத நிலையில் அந்த வார்த்தையில் இருந்து பிறந்த வினைச் சொற்களை வைத்து ருஃயத் (رؤية) ற்கு  "காட்சி" என்று அர்த்தம் கொடுப்பது அவர்களின் மனம் போன போக்கில அர்த்தம் கற்பிப்பதேயாகும்.
ருஃயத் (رؤية) என்ற மூல வார்த்தை குர்ஆனில் இடம்பெறாத நிலையில் இந்த வார்த்தைக்கு குர்ஆனில் இருந்து விளக்கமளிக்க முயற்சிப்பது தேவையற்ற வேலை. ஆயினும், குர்ஆன் வசனங்களை வைத்து "காட்சி" என்ற கருத்தை நிலைநாட்ட ஒரு கூட்டம் முயல்வதால் அதை பற்றியும் நாம் விளக்கமாகவே பார்ப்போம்.
ருஃயத் (رؤية) என்ற வார்த்தை ஒரு மஸ்தர் (தொழிற்பெயர்) என்பதை முன்னர் பார்த்தோம். இந்த மஸ்தரில் இருந்து பிறந்த வினைச்சொற்கள்(ஃபியல்) மூன்று எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டவை.  
அவை, ரே - ر , அலிஃப் - أ , யே - ي
இந்த மூன்று எழுத்துக்களில் இருந்துதான் அதன் வினைச்சொற்கள் பிறக்கும்.
அவன் பார்த்தான் - رأي - ரஆ
அவன் பார்க்கிறான் - يَرى - யரா
நீ பார்த்தாய் - رَأَيْتَ - ரஅய்த்த
நீ பார்க்கிறாய் - تَرَىٰ - தரா
இதுபோல இறந்தகாலம்,
நிகழ்காலம்/எதிர்காலம் என 28 வடிவங்களில் அந்த மூன்று எழுத்துக்களும் மாறும். (ஒவ்வொரு மஸ்தரிலும் 28 வினைச்சொல் வடிவங்கள் பிறக்கும்)
ஒரு மஸ்தர்(தொழிற்பெயர்) ல் இருந்து பிறக்கும் வினைச்சொற்களை (ஃபியல்) பார்த்தோம்.
மேலும் சில மஸ்தர்களை பார்ப்போம்.
ருஃயா (رُّؤْيَا) - கனவை குறிக்கும் மஸ்தர்
ரஃயுன் (رأْيٌ) - கருதுதல்/அறிதல் என்று பொருள்படும் மஸ்தர்
(இவைகளுக்கான குர்ஆன் வசனங்கள் கீழே தனியாக தரப்பட்டுள்ளன)
இந்த இரண்டு மஸ்தர்களும் எந்த இடத்தில் இடம்பெற்றாலும் அதன் பொருள் மாறாது.
இதை இங்கே ஏன் சொல்ல வேண்டும் என கேள்வி எழலாம்.
விஷயம் என்னவென்றால், இந்த இரண்டு மஸ்தர்களில் இருந்தும் வினைச் சொற்கள் பிறக்க வேண்டுமல்லவா? அதாவது,
உதாரணம் :
கனவு கண்டான், கருதினான்
என்பதுபோல ஒவ்வொரு மஸ்தரில் இருந்தும் வினைச்சொற்கள் 28 வடிவங்களில் பிறக்க வேண்டுமல்லவா?
அந்த வடிவங்கள் எப்படி இருக்கும்?
கேள்வி : ருஃயத் (رؤية) ன் "மூல எழுத்துக்கள்" எவை?
பதில் : ரே - ر , அலிஃப் - أ , யே - ي
அவைகளேதான் ருஃயா (رُّؤْيَا) மற்றும் ரஃயுன் (رأْيٌ) என்பவைகளின் மூல எழுத்துக்கள் ஆகும்.
கேள்வி : ருஃயத் (رؤية) ல் இருந்து பிறந்த "வினைச்சொற்கள்" எவை?
பதில் : ரஅ- رأي , யரா- يَرى , ரஅய்த்த - رَأَيْتَ, தரா- تَرَىٰ
அவைகளேதான் ருஃயா (رُّؤْيَا) மற்றும் ரஃயுன் (رأْيٌ) என்பவைகளின் வினைச்சொற்கள் ஆகும்.
அப்படியென்றால்,
ருஃயத் (رؤية) - பார்த்தல்
ருஃயா (رُّؤْيَا)  - கனவு காணுதல்
ரஃயுன் (رأْيٌ) - கருதுதல்/அறிதல்
ஆகிய முன்று மஸ்தர்களின் வினைச்சொற்களும் ஒரே வடிவத்தில் இருந்தால் அவை சொல்லும் செய்தியை எப்படி கண்டுபிடிக்க முடியும்?
ஏனெனில், மூன்று மஸ்தர்களுக்கும் ஒரே வினைச்சொற்கள் என்பதால்தான். மூன்று மஸ்தர்களின் வினைச்சொற்களும் ஒரே மாதிரி இருந்தால் ஒரு வினைச்சொல்லிற்கு மூன்று நேரிடையான அர்த்தங்கள் வரும்தானே!
ஆதாவது உதாணமாக, தரா- تَرَىٰ  என்ற வார்த்தை இடம்பெற்றால் அந்த வார்த்தை சொல்லும் செய்தியை எப்படி அறிவது?
தரா- تَرَىٰ - பார்க்கிறான்
தரா- تَرَىٰ - கனவு காண்கிறான்
தரா- تَرَىٰ - கருதுகிறான்
இப்படி, ஒரே வினைச்சொல் மூன்று மஸ்தர்களின் வினையையும் குறித்தால் எப்படி சரியான அர்த்தத்தை கண்டுபிடிப்பது?
இதற்குத்தான் அரபு இலக்கணத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். இல்லையென்றால் தான்தோன்றித் தனமாக நினைப்பதையெல்லாம் அர்த்தமாக்கிக்கொள்ள வேண்டியதுதான்.
ஒரு வாக்கியத்தில் வினைச்சொல்லுக்கு அருகில் இருக்கும் மற்ற வார்த்தைகளை கருத்தில் கொண்டே அந்த வினைச்சொல்லின் அர்த்தத்தை குறிப்பிடுவர்.
وَيَوْمَ الْقِيَامَةِ *تَرَى* الَّذِينَ كَذَبُوا عَلَى اللَّهِ وُجُوهُهُم مُّسْوَدَّةٌ
அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோரின் முகங்களைக் கருப்பாக கியாமத் நாளில நீர் பார்ப்பீர்! ...(39:60)
قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَىٰ فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا *تَرَىٰ*
"என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு'' என்று (இப்ராஹீம்) கேட்டார்... (37:102)
فَهَلْ *تَرَىٰ* لَهُم مِّن بَاقِيَةٍ
அவர்களில் எஞ்சியோரை நீர் அறிவீரா? (69:8)
தரா- تَرَىٰ என்ற வினைச்சொல் வார்த்தை மேலே உள்ள வசனங்களில் மூன்று அர்த்தங்களில் கையாளப்பட்டிருக்கிறது.
அருகில் இருக்கும் வாசகங்கள்தான் இந்த
"தரா" என்ற வினைச்சொல்லின் அர்த்தத்தை முடிவு செய்கிறது.
இதை புரிந்துகொள்வதற்கு தமிழில்...
வெடித்தான் என்பது வினைச்சொல்.
"அவன் வெடித்தான்" என்று ஒரு வாக்கியத்தை படித்தால் எப்படி புரிந்து கொள்வது?
"அவன் வெடி வெடித்தான்"
"அவன் கோபத்தில் வெடித்தான்"
ஆக வெடித்தான் என்ற வினைச்சொல் வெடியுடன் சேர்ந்து வரும்போது "அவன் வெடியை வெடித்தான்" என்றும்,  கோபத்துடன் சேர்ந்து வரும்போது " அவன் கோபத்தில் கத்தினான்" என்றும் பொருள் தருகிறது. ஒரு வினைச்சொல்லின் அர்த்தம் இறுதி செய்யப்படுவது அது சார்ந்திருக்கும் வார்த்தைகளைப் பொறுத்து என்பது தெளிவாகிறது.
அரபு மொழியறிவு இல்லாதவர்களின் இயலாமைதான் ருஃயத் (رؤية) என்ற வார்த்தை "காட்சி" யைக் குறிக்கிறது என்பதும், அதற்கு ஆதாரமாக வினைச்சொற்களில் விளையாடுவதும். அல்லாஹ் நம்மை இந்த அரபு அறிவிலிகளிடமிருந்து பாதுகாப்பானாக.
ருஃயா மற்றும் ரஃயுன் ஆகியவற்றிற்கான குர்ஆன் வசனங்கள்...
ருஃயா
فَلَمَّا أَسْلَمَا وَتَلَّهُ لِلْجَبِينِ وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ قَدْ صَدَّقْتَ *الرُّؤْيَا*
இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, "இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர் (37:105)
لَّقَدْ صَدَقَ اللَّهُ رَسُولَهُ *الرُّؤْيَا* بِالْحَق
அல்லாஹ் தனது தூதருக்கு (அவர் கண்ட) கனவை உண்மையாக்கி விட்டான்...(48:27)
قَالَ يَا بُنَيَّ لَا تَقْصُصْ *رُؤْيَاكَ* عَلَىٰ إِخْوَتِكَ
"என் அருமை மகனே! உனது கனவை உனது சகோதரர்களிடம் கூறாதே!...(12:5)
وَقَالَ الْمَلِكُ إِنِّي أَرَىٰ سَبْعَ بَقَرَاتٍ سِمَانٍ يَأْكُلُهُنَّ سَبْعٌ عِجَافٌ وَسَبْعَ سُنبُلَاتٍ خُضْرٍ وَأُخَرَ يَابِسَاتٍ ، يَا أَيُّهَا الْمَلَأُ أَفْتُونِي فِي رُؤْيَايَ إِن كُنتُمْ *لِلرُّؤْيَا* تَعْبُرُونَ
"கொழுத்த ஏழு மாடுகளை, மெலிந்த ஏழு மாடுகள் தின்பதாகவும், பசுமையான ஏழு கதிர்களையும், காய்ந்த வேறு கதிர்களையும் நான் (கனவில்) கண்டேன். பிரமுகர்களே! நீங்கள் கனவுக்கு விளக்கம் கூறுவோராக இருந்தால் எனது கனவுக்கு விளக்கம் தாருங்கள்!'' என்று மன்னர் கூறினார்.
திருக்குர்ஆன்  12:43
وَرَفَعَ أَبَوَيْهِ عَلَى الْعَرْشِ وَخَرُّوا لَهُ سُجَّدًا ، وَقَالَ يَا أَبَتِ هَٰذَا تَأْوِيلُ *رُؤْيَايَ* مِن قَبْلُ قَدْ جَعَلَهَا رَبِّي حَقًّا
தமது பெற்றோரைச் சிம்மாசனத்தின் மீது அமரச் செய்தார். அவர்கள் அனைவரும் அவருக்குப் பணிந்தனர்."என் தந்தையே! முன்னர் நான் கண்ட கனவுக்கு விளக்கம் இதுவே...  (12:100)
ரஃயுன்
فَقَالَ الْمَلَأُ الَّذِينَ كَفَرُوا مِن قَوْمِهِ مَا نَرَاكَ إِلَّا بَشَرًا مِّثْلَنَا وَمَا نَرَاكَ اتَّبَعَكَ إِلَّا الَّذِينَ هُمْ أَرَاذِلُنَا بَادِيَ *الرَّأْيِ*
"எங்களைப் போன்ற ஒரு மனிதராகவே உம்மைக் காண்கிறோம். எங்களில் கருத்துக் குறைவுடைய தாழ்ந்தவர்களே உம்மைப் பின்பற்றுவதைக் காண்கிறோம்.
திருக்குர்ஆன் ...(11:27)