Tuesday 27 June 2017

ஹிஜ்ராவின் மோசடியும்! பிறை பார்க்கும் ஆதாரமும்

*ஹிஜ்ராவின் மோசடியும்! பிறை பார்க்கும் ஆதாரமும்*

*حدثنا أحمد بن حنبل* ، حدثني عبد الرحمن بن مهدي ، حدثني معاوية بن صالح ، عن عبد الله بن أبي قيس ، قال : سمعت عائشة رضي الله عنها تقول :" كان رسول الله صلى الله عليه وسلم يتحفظ من شعبان ما لا يتحفظ من غيره ، ثم يصوم لرؤية رمضان ، فإن غم عليه عد ثلاثين يوما ثم صام " * سنن أبي داود - كتاب الصوم باب إذا أغمي الشهر - حديث : ‏1993 ‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஷஃஅபானை மனப்பாடம் செய்து கொண்டே வருவார்கள். அது அல்லாத மாதங்களை மனப்பாடம் செய்வதை விட. பிறகு ரமழானுடைய காட்சியின் அடிப்படையில் நோன்பு வைப்பார்கள். அது அவர் மீது மறைக்கப்படும் போது அவர் அதை முப்பதாவது நாள் என்று எண்ணிக் (Count) கொள்வார்கள் பிறகு நோன்பு வைப்பார்கள்.
அறிவித்தவர் : ஆயிஷா (ரழி), நூல் : அபூதாவூத் (1993)
நபிகளார் தினமும் பிறையை பார்த்து, அதைக் கணக்கிட்டு முன்கூட்டியே மாதத்தின் முடிவையும் அடுத்த மாதத்தின் தொடக்கத்தையும் அறிந்ததற்கு மேலிருக்கும் ஹதீசை ஹிஜ்ராவினர் ஆதாரமாக வைக்கிறார்கள். அவர்கள் மொழிப்பெயர்த்ததை நாம் எந்த மாற்றமும் செய்யாமல் இங்கே தந்துள்ளோம். இந்த ஹதீஸில் ஹிஜ்ரா அறிஞர்கள் செய்த மோசடிகள் பித்தலாட்டங்களை பார்க்கும் முன், இதில் இருக்கும் முக்கியமான விஷயத்தை பார்ப்போம்.
*மாதத்தின் இறுதியில் மாலையில் மேற்கே மறையும் பிறையை நபிகளார் பார்த்தாக ஒரு ஆதாரம் உள்ளதா?*
ஹிஜ்ராவினரின் ப்ராண்டட் (Branded) கேள்வி இது. ஹிலால் என்றால் மாதத்தில் தெரியும் முதல் பிறை. அதைதான் நபிகளார் பார்த்தார்கள். அது மாலையில் மேற்கில்தான் தெரியும். காலையில் கிழக்கில் தெரியாது. என்று நாம் விளக்கினாலும் இவர்களுக்கு விளங்கவில்லை. ஆனால் இவர்கள் மேலேப் பதிந்துள்ள ஹதீஸ் மாதத்தின் இறுதியில் மாலையில் மேற்கே மறையும் பிறையைப் பார்ப்பதற்கான நேரடி ஆதாரமாகும். மேலேயுள்ள ஹதீஸில் பல பித்தலாட்டங்களை செய்துள்ளனர். அவற்றை விளக்கிய பின் நமது ஆதாரத்தை விளக்கினால் சுவாரஸ்யம் இருக்காது. அவர்களின் மொழிப்பெயர்ப்பை வைத்தே விளக்குவோம்.
நபி ஷஅபானை மனப்பாடம் செய்வார்களாம். மனப்பாடம் செய்வதற்கு அது என்ன பேச்சுபோட்டிக்கான கட்டுரையா? ஷஅபானை நினைவில் வைப்பார்கள் என்று விளங்குவோம். பிறகு ரலமளானுடைய காட்சியின் அடிப்படையில் நோன்பு நோற்பார்களாம். அந்த காட்சி அவர்களுக்கு மறைக்கப்பட்டால் அதை 30ம் நாள் என்று எண்ணிக்கொள்வார்களாம். பிறகு நோன்பு வைப்பார்களாம். இங்கே கவனமாக பாருங்கள். ரமளானின் காட்சியின் அடிப்படையில்தான் நபிகளார் நோன்பு நோற்பார்கள் என்று அவர்களே மொழிப்பெயர்த்துள்ளனர். ரமளானின் காட்சி எப்போது தெரியும்? ரமலானின் காட்சி ரமளானில்தான் தெரியும்! இவர்களின் கணக்குப்படி நோன்பு பிடித்தால் ரமலானின் காட்சியை பார்த்து நோன்பு பிடிக்கவே இயலாது. ஏனென்றால் இவர்கள் காலண்டரில் இரண்டாம் நோன்பு முடிந்த பிறகுதான் ரமலானின் காட்சி முதன் முதலாக தெரியும். இவர்களின் அறியாமை மீது அல்லாஹ் வைத்த முதல் முத்திரை இது.
அடுத்ததாக, ரமளானின் காட்சி அவர்கள் மீது மறைக்கப்படும்போது அவர்கள் அந்த நாளை முப்பதாவது நாளாக எண்ணிக் (count எண்ணிக்கை) கொள்வார்களாம். பிறகு நோன்பு பிடிப்பார்களாம். ரமலானின் காட்சி மறைக்கப்பட்டால் எதை 30ஆக எண்ணுவார்கள்? நிச்சயமாக அது ஷஅபானைதான் 30ஆக எண்ணுவார்கள். அது ரமலானாகவோ ரஜபாகவோ இருக்கவே முடியாது. அந்த நாளை ஷஅபானின் 30ஆம் நாள் என்றுதான் எண்ண முடியும். பிறகு நோன்பு நோற்பார்கள் என்றால், காட்சி மறைக்கப்பட்ட நாளை 30 ஆம் நாளாக எண்ணிக்கை கொண்டு, அடுத்த நாள் நோன்பு பிடிப்பார்கள் என்றே பொருள்.
அவர்களின் மொழிப்பெயர்ப்பில் கூட ரமளானின் காட்சியைக் கொண்டுதான் நபிகளார் நோன்பு பிடிப்பார்கள் என்றும் அந்தக் காட்சி மறைக்கப்பட்டால் ஷஅபானை 30 ஆக்குவார்கள் என்றுதான் உள்ளது. ரமலானின் காட்சி எந்த திசையில், எந்த நாளில் எந்த நேரத்தில் தெரியும்?
ரமளானின் காட்சியை பார்த்து நோன்பு பிடித்தால், அது மறைக்கப்படும்போது அந்த நாளை ஷஅபானின் 30ம் நாளாக எண்ணினால், நபிகளார் பார்த்த ரமளானின் காட்சி நிச்சயமாக ஷஅபானின் இறுதி நாளில், மேற்கு திசையில், மக்ரிப் வேளையில்தான் தெரிந்தது. கிழக்குத் திசையில், பஜ்ர் வேளையில் ரமளானின் காட்சியை பார்த்து நோன்பு வைக்க இயலாது. அப்படி ஒரு காட்சி படைக்கப்பட்ட நாள் முதல் அழிக்கப்படும் நாள் வரையில் இருக்கவே இருக்காது.
இவர்களின் தப்பான பித்தலாட்ட மொழிப்பெயர்ப்பில் கூட, ஹிலால் எனும் கண்ணுக்கு தெரியும் முதல் பிறையை மாத இறுதியில் மக்ரிப் திசையில் மக்ரிப் வேளையில்தான் நபிகளார் தேடினார்கள் என்று தீர்க்கமாக விளங்குகிறது.

*இந்த ஹதீஸில் செய்யப்பட பித்தலாட்டங்கள் என்னென்ன?*

ஹிஜ்ராவினர் தங்களுக்கு எதிராக இருக்கும் ஆதாரப்பூர்வ ஹதீஸ்களை நிராகரிப்பார்கள், தங்களுக்கு சாதகமாக இருப்பதாக தோன்றினால் ஹதீஸ் அல்லாத தஃப்சீர் செய்திகளை ஹதீஸ்களைப் போல ஜோடிப்பார்கள், தப்பு தப்பாக மொழிப்பெயர்ப்பார்கள் என்பதை நாம் ஏற்கனவே அறிவோம். அதே போல இந்த ஹதீஸ் விஷயத்திலும் பல மோசடிகளைச் செய்துள்ளனர்.
ஒரு ஹதீஸை ஆராயும்போது அதே கருத்தில் இருக்கும் எல்லா ஹதீஸ்களையும் நாம் ஆராய்வோம். ஆராய்ந்துதான் ஒரு முடிவுக்கு வருவோம். இன்றைய காலத்தில் சில பல விசைப்பலகை தட்டல்களிலேயே நாம் தேடும் ஹதீஸ்கள் கண்முன்னே வரிசையாக குவிகின்றன. அவற்றை மேலாட்டமாக வாசித்தாலே பல உண்மைகள் விளங்கும். தங்களுக்கு ஆதாரம் இருக்குமா என்று குப்பைகளை கிளறிய இவர்கள், ஹதீஸ் புத்தகங்களிலும் இந்த ஹதீஸை தேடியிருப்பார்கள். இவர்களுக்கு அவ்வுண்மைகள் நிச்சயம் கிடைத்திருக்கும். ஆனால் மறைத்துவிட்டார்கள். என்ன உண்மைகள் அவை?
இதே ஹதீஸ் இப்னு ஹிப்பான் (3444), இப்னு ஃகுைZமா (1910) தாரகுத்னி (2149) போன்ற பல புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக முஸ்னத் அஹ்மத் (25161) ஹதீஸ் தொகுப்பிலும் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த ஹதீஸில் ஷஅபானை மனப்பாடம் செய்வார்கள் என்று வந்துள்ள இடத்தில் ஷஅபானுடன் சேர்த்து ஹிலால் எனும் வார்த்தை வந்துள்ளது. ஹிலால் என்றால் ஒருமையில் ஒரே ஒரு பிறை என்று அர்த்தம். ஹிலால் என்ற வார்த்தை நபிகளாரால் தலைப்பிறையை குறிக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஹிலால ஷஅபான் என்பதை மொழிப்பெயர்த்தால் ஷபானின் தலைப்பிறையை நினைவில் வைப்பார்கள் என்று பொருள் செய்யவேண்டி இருக்கும். எனவே வஞ்சகமாக அதை தவிர்த்துவிட்டனர்.
ஒருவேளை அபூதாவூத் அறிவிப்பு சஹீஹாகவும் அஹமது அறிவிப்பு லயீபாகவும் இருக்குமோ என்று சிந்தித்தால். அப்படி ஒரு வாய்ப்பே வாராதவாறு இவர்களின் வஞ்சத்தின் மீது முத்திரையை அல்லாஹ் வைத்துவிட்டான். அபு தாவூதில் இடம்பெறும் ஹதீஸை அபு தாவூத் இமாமுக்கு அறிவிப்பவரே அஹ்மத் இப்னு ஹன்பல் இமாம்தான். அவர்கள் பதிந்துள்ள அரபு மூலத்தில் முதல் நான்கு வார்த்தைகளை கவனிக்க. எனவே அஹ்மத் ஹதீஸ் பலவீனம் என்றால் அபு தாவூத் ஹதீசும் பலவீனம்தான். அவ்வாறில்லை அஹ்மது ஹதீஸ் சஹீஹானது.
ஹிலால் எனும் வார்த்தை விடுபட்ட அறிவிப்பு அபு தாவூதில் மட்டுமே இடம்பெற்றுள்ளது. மற்ற அனைத்து புத்தகங்களிலும் ஹிலால் எனும் வார்த்தையுடன்தான் இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது. திட்டமிட்டே மற்ற ஹதீஸ்களை இருட்டடிப்பு செய்துள்ளனர் ஹிஜ்ரா அறிஞர்கள்.
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ مُعَاوِيَةَ، عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي قَيْسٍ، قَالَ: سَمِعْتُ عَائِشَةَ، تَقُولُ:
كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَفَّظُ مِنْ *هِلَالِ شَعْبَانَ* مَا لَا يَتَحَفَّظُ  مِنْ غَيْرِهِ، ثُمَّ يَصُومُ لِرُؤْيَةِ  رَمَضَانَ، فَإِنْ غُمَّ عَلَيْهِ، عَدَّ ثَلَاثِينَ يَوْمًا، ثُمَّ صَامَ
مسند أحمد
மொழிப்பெயர்ப்பு விஷயத்தில் ஹிஜ்ரா அறிஞர்களை குறை சொல்ல இயலாது. அவர்களுக்கு அரபு மொழி தெரியாது என்பதை நாம் பல முறைக் கண்டுள்ளோம். ஒரு மாதத்தை அல்லது ஒரு பிறையை மனப்பாடம் செய்ய முடியுமா? 5 அறிவுள்ளவன் இப்படி சொல்வானா? நினைவில் வைப்பார்கள் என்று மொழிப்பெயர்க்கலாம் அல்லது அதற்கு இருக்கும் முதன்மை அர்த்தமான முக்கியத்துவம் கொடுத்தல், தவற விடாதிருத்தல், எச்சரிக்கையாக கவனித்தல், காத்திருத்தல் போன்ற பொருள்களை கொடுத்திருக்கலாம். ஆனால் ஹிஜ்ரா அறிஞர்கள் மனப்பாடம் என்று மொழிப்பெயர்க்கக் காரணம் தெரியுமா? *”யதஹஃப்பளு”* எனும் வார்த்தையின் மூல வார்த்தை *”ஹிஃப்ள்.”* ஆம்!. மதரசாக்களில் நாம் மனப்பாடம் செய்வதை ஹிஃப்ள் என்போமே அதே வார்த்தைதான். அதைதான் பொருளாகக் கொடுத்துள்ளனர். இந்த இடத்திற்கு எந்த பொருள் பொருத்தமாக இருக்கும், இலக்கண விதிப்படி என்ன பொருள் செய்யவேண்டும் என்ற எந்த அறிவும் இல்லாமல், தங்களுக்கு தெரிந்ததை பொருள் செய்துள்ளனர்.
*நபி வேறெதற்கும் (வேறெந்த மாத ஹிலாலுக்கும்) கொடுக்காத முக்கியத்துவத்தை ஷஅபான் ஹிலாலுக்கு கொடுப்பார்கள். பிறகு ரமளானுடைய அதை (ஹிலாலைக்) கண்டு நோன்பு நோற்பார்கள். அவர்களுக்கு அது மறைக்கப்பட்டால், (ஷஅபானை) 30 நாட்களாக கணக்கிடுவார்கள், பிறகு நோன்பு நோற்பார்கள்.*
இதுவே சரியான மொழிப்பெயர்ப்பு. அல்லது நான் ஹிஃப்ள் எனும் அர்த்தத்தைத்தான் கொடுப்பேன் என அடம்பிடித்தால் குறைந்தபட்சம் பின்வருமாறு மொழிப்பெயர்த்திருக்கவேண்டும். மனப்பாடம் என்றா மொழிப்பெயர்ப்பது?
*நபி வேறெதையும் (வேறெந்த மாத ஹிலாலையும்) நினைவில் வைக்காத அளவுக்கு ஷஅபான் ஹிலாலை நினைவில் வைத்துக்கொள்வார்கள். பிறகு ரமளானுடைய அதை (ஹிலாலைக்) கண்டு நோன்பு நோற்பார்கள். அவர்களுக்கு அது மறைக்கப்பட்டால், (ஷஅபானை) 30நாட்களாக கணக்கிடுவார்கள், பிறகு நோன்பு நோற்பார்கள்.*
நபிகளார் மற்ற மாதங்களை விட ஷஅபானின் ஹிலாலை மிக உன்னிப்பாக, எச்சரிக்கையாக, தவறவிடாமல், முக்கியத்துவம் கொடுத்து பார்ப்பார்கள். ஏன்? எதற்கு? ஷஅபானை சரியாக துவங்கினால்தான் ரமலானை சரியாக துவங்க இயலும். பின்னர் ஷஅபானின் 29ம் நாள் முடிந்து வரும் இரவில் ரமலானின் ஹிலாலை மக்ரிப் வேளையில் மக்ரிப் திசையில் தேடுவார்கள். மக்ரிப் நேரம்/திசை எனும் வார்த்தை இருக்கிறதா? என்று மூடன்தான் கேட்பான். மாதத்தில் முதலில் தெரியும் பிறை மக்ரிப் வேளையில் மக்ரிப் திசையில்தான் தெரியும். அந்த ரமளானின் ஹிலால் மறைக்கப்பட்டால் அவர்கள் அந்த நாளை ஷஅபானின் முப்பதாம் நாளாக கணக்கில் வைப்பார்கள். பின்னர் மறுநாள் நோன்பு நோற்பார்கள்.

*இந்த ஒரே ஒரு ஹதீஸ் மட்டும்தான் மக்ரிப் திசையில் மக்ரிப் வேளையில் பிறை பார்க்க உங்களுக்கு ஆதாரமா என்று வினவினால்? இல்லை! பிறை தொடர்பாக வரும் எல்லா ஹதீஸ்களும் இவ்வாறுதான் பேசுகின்றன. குறிப்பாக:*

*அதை (பிறையை)க் கண்டு நீங்கள் நோன்பு பிடியுங்கள். அதை (மறு பிறையைக்) கண்டு நோன்பை விடுங்கள். அது உங்களுக்கு மறைக்கப்பட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி); நூல்: புகாரி 1909
இது நாம் மேலே சொன்ன அதே ஹதீஸின் சாராம்சத்தில் அமைந்தது. நாம் நோன்பு பிடிப்பது ரமளானில்தான். ரமளானின் பிறையை பார்த்து நோன்பு பிடிக்க சொல்கிறார்கள். அது மறைக்கப்பட்டால் ஷஅபானை 30ஆக முழுமைப்படுத்த சொல்கிறார்கள். இது நபிகளார் வாழ்ந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சியல்ல. அவ்வாறு ஹிஜ்ரா கமிட்டியினர் பொது அறிவில்லாமல் சித்தரிக்கிறார்கள். அவ்வாறு நடந்திருந்தால் அது பொதுவாக அறிவிக்கப்பட்டிருக்காது. நபிகளார் ஒரு ரமலான் மாதத்தில் எங்களுக்கு கட்டளையிட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கும்.
ரமலானின் ஹிலால் மறைக்கப்பட்டால் ஷஅபானை 30ஆக முழுமைப்படுத்துங்கள் என்பதை தவிர வேறொரு பொருள் இந்த ஹதீஸுக்கு கொடுக்கவே முடியாது. ரமளானின் ஹிலால் ரமலான் மாதத்தில் தான் தெரியும். ரமலான் மாதத்தின் ஹிலாலை பார்த்து நோன்பு பிடிக்க வேண்டுமென்றால் அந்த ஹிலால் மக்ரிப் வேளையில் மக்ரிப் திசையில்தான் தெரியும்.
*“நீங்கள் பிறையைக் காணும் போது நோன்பு பிடியுங்கள். அதை (மறு பிறையைக்)காணும் போது நோன்பை விடுங்கள். உங்களுக்கு மறைக்கப்பட்டால் முப்பது நாட்கள் நோன்பு பிடியுங்கள்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி); நூல்: முஸ்லிம் 1081
இந்த ஹதீஸ் ஷவ்வாலின் பிறை மறைக்கப்பட்டால் என்ன செய்யவேண்டுமென சொல்கிறது. இதுவும் நபிகளார் காலத்தில் நடந்த ஒரு சம்பவமல்ல. எல்லா காலத்திற்கும் இடப்பட்ட கட்டளை. (இதை நிறுவ வேண்டியதில்லை. 5 அறிவும் பொது அறிவும் இருந்தால் போதுமானது)
ஷவ்வாலின் ஹிலால் மறைக்கப்பட்டால் ரமலானை 30ஆக முழுமைப்படுத்துங்கள் என்பதை தவிர வேறொரு பொருள் இந்த ஹதீஸுக்கு கொடுக்கவே முடியாது.
*ஒரு நாளோ இருநாட்களோ முந்திக்கொண்டு (ரமலான்) மாதத்தை துவங்கி விடாதீர்கள், நீங்கள் வழமையாக நோற்கும் நோன்புகள் அந்நாட்களில் அமைந்தாலே தவிர. அதை (பிறையை) கண்டு நீங்கள் நோன்பு பிடியுங்கள். அதை (மறு பிறையைக்) கண்டு நோன்பை விடுங்கள். உங்களுக்கு மறைக்கப்பட்டால் முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள், பின்னர் நோன்பை விட்டு பெருநாள் கொண்டாடுங்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி); திர்மிதி 684 அஹ்மத் 9654
இது ஷஅபான், ரமலான், ஷவ்வால் ஆகிய மூன்று மாதங்களும் எப்படி துவங்கப்படவேண்டும் எப்படி முடிக்கப்படவேண்டும் என்று தெளிவாக சொல்கிறது. 5 அறிவும் பொது அறிவும் இருந்தால், மக்ரிப் வேளையில் மக்ரிப் திசையில்தான் பிறை பார்க்கவேண்டும் என இந்த ஹதீஸ்கள் தெளிவாகவே விளக்கும்.
அல்ஹகம் பின் அல்அஃரஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
*இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "ஸம்ஸம்" கிணற்றுக்கருகில் தமது மேல்துண்டைத் தலையணையாக வைத்துச் சாய்ந்திருந்தபோது அவர்களிடம் நான் சென்றேன். "ஆஷூரா நோன்பு பற்றி எனக்குச் சொல்லுங்கள்!" என அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், "முஹர்ரம் மாதத்தின்  ஹிலாலை நீர் கண்டதும் (அன்றிலிருந்து நாட்களை) எண்ணிக்கொள்வீராக! ஒன்பதாவது நாளில் நீர் நோன்பாளியாக இருப்பீராக!" என்று சொன்னார்கள். "இவ்வாறுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த (ஆஷூரா) நோன்பை நோற்றார்களா?" என்று நான் கேட்டேன். அதற்கு, "ஆம்" என்று அவர்கள் விடையளித்தார்கள்.*
முஸ்லிம் 2087(1133); அபூ தாவூத்2446; திர்மிதி 754
முஹர்ரம் பிறையை கண்டு 9ம் நாள் நோன்பு நோற்றால், அது முஹர்ரம் மாதத்தின் எந்த பிறை? மக்ரிப் திசையில் மக்ரிப் வேளையில் தெரியும் பிறையா? அல்லது பஜ்ர் வேளையில் மஷ்ரிகில் தெரியும் பிறையா?
*நீங்கள் துல்ஹஜ் பிறையைக் கண்டு, உங்களில் ஒருவர் குர்பானி கொடுக்க எண்ணினால், அவர் தமது முடியையும் நகங்களையும் அகற்றாமல் இருக்கட்டும்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*
அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி); நூற்கள்: முஸ்லிம் (3999), நஸாஈ (4285), (4361), திர்மிதி 1523
துல் ஹஜ் பிறையை கண்டபிறகு முடி நகம் வெட்டாமல் இருக்க வேண்டுமென்றால் அது எந்த திசையில் தெரியும் பிறை? எந்த வேளையில் தெரியும் பிறை?

*ஹிஜ்ரா சமுதாயம் குழம்பிக்கொள்வதற்கான காரணங்கள்:*

ஹிஜ்ராவினர் மாத இறுதியையும் மாதத்துவக்கத்தையும் வெவ்வேறாக பார்ப்பது காரணம். *”மாதத்தின் இறுதியில் பிறை கிழக்கில் பஜ்ர் வேளையில் தெரியும். அத்துடன் அந்த மாதம் முடிவடைந்து விடுகிறது. மறுநாள் பிறை கண்ணுக்கு தெரியாது. பிறை இல்லாததால் அந்த நாள் ZERO நாள் (ஸீரோ நாள்) அது பழைய மாதத்திற்கும் புது மாதத்திற்கும் இடைப்பட்ட நாள். அதற்கு மறுநாள் மக்ரிப் வேளையில் மக்ரிப் திசையில் பிறை தெரியும். அதுவே முதல் பிறை”* என்கிறார்கள் ஹிஜ்ராவினர். இங்கே தான் ஹிஜ்ராவினரின் அறியாமை அல்லது மூடத்தனம் வெளிப்படுகிறது. இறுதியும் தொடக்கமும் ஒன்றாகவே இருக்கும். இறுதி என்பது வந்த அடுத்த கணம் துவக்கம் வந்துவிடும். இடையே எதுவுமே இல்லாத ஒரு நிலை இல்லை. 29 ஆம் நாள் முடிந்த நிலையில் பிறை தெரிந்தால் மறு மாதத்தின் முதல் நாள் துவங்கிவிடும். இடையே 0 நாள் இல்லை. 29 ஆம் நாள் முடிந்த நிலையில் பிறை தெரியாவிட்டால் அது மாதத்தின் 30 ஆம் நாள். இடையே 0 நாள் இல்லை. பிறை தெரியும் இரவு முதல் இரவே தவிர பழைய மாதத்தின் இரவல்ல. பிறை இல்லாத இரவு பழைய மாதத்தின் இரவு.
நாம் புது மாதத்திற்குத்தான் பிறையை தேடுகிறோம். பிறை தெரிந்தால் அது மாதத்தின் இறுதி அல்ல, புது மாதத்தின் துவக்கம். பழைய மாதத்திற்கும் புது மாதத்திற்கும் இடையே இருப்பது பிறை தெரியும் அந்த கணம்தான். பிறை தெரிந்துவிட்ட பிறகு அது புது மாதத்தின் முதல் இரவு. பழைய மாதத்தின் கடைசி நாளில் பிறை தேடுவதாக ஹிஜ்ராவினர் நினைக்கிறார்கள். மேலும் பழைய மாதத்திற்கும் புது மாதத்திற்கும் இடையே ஒரு 0 நாள் இருப்பதாக அவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டதால் பழைய மாதத்தின் இறுதி நாளில் மக்ரிப் வேளையில் பிறை தெரியுமா என்று ஐயப்படுகிறார்கள்.