Thursday 27 May 2021

பிறை தெரியுமா? தெரியாதா?

தலைப்பிறை எப்போது கண்ணுக்கு தெரியும்?


எனும் கேள்வி வரலாற்றில் பழமையான கேள்வியாகும். பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் இந்த கேள்விக்கு முதன் முதலாக விடை கண்டவர்கள் பாபிலோனியர்கள் ஆவார்கள். ஆம்! குர்ஆன் 2:102ல் சொல்லப்பட்டுள்ள அதே பாபிலோனியர்கள்தாம். பல வருடங்கள் பிறை பார்த்த தகவல்களை ஒன்றிணைத்து அவர்கள் பிறை எப்போது தெரியும் என்று கணக்கிட்டிருந்தனர். பிறையின் வயது 24 மணி நேரத்தை கடந்து சூரியன் மறைந்து 48 நிமிடங்களுக்குப் பிறகு நிலவு மறைந்தால் பிறை கண்ணுக்கு தெரியும் என்பது அவர்களின் கணிப்பாகும். [3]


பின்னர் இது முஸ்லிம்கள் மத்தியில் பெரிய கேள்வியானது. இஸ்லாமிய பொற்காலம் என்றறியப்பட்ட காலத்தில் வாழ்ந்த பல முஸ்லிம் கணித மேதைகள் வானியல் ஆய்வாளர்கள் இதனை ஆய்வு செய்தனர். க்வாரிஸ்மி போன்ற கணித மேதைகளும் பிறை எப்போது கண்ணுக்குத் தெரியும் என்று கணக்கிட்டனர். அதில் ஹிஜ்ரி முன்னூறுகளில் வாழ்ந்த அல் பைரூனியின் ஆய்வுகள் மேற்குலகத்தால் கொண்டாடப்படுபவை [1]. இன்றும் பல நூற்றாண்டுகள் முன்னர் இருந்த இஸ்லாமிய பொற்காலம் பற்றித்தான் நாம் பேசுகிறோமே தவிர இன்றைய முஸ்லிம்கள் நாம் எந்த துறையிலும் தனித்துவம் பெறவில்லை. எனவே அதற்குப்பிறகு பிறை எப்போது தெரியும் எனும் தேடல் இல்லாமலே போனது.


பின்னர் இருபதாம் நூற்றாண்டில்தான் இதுபற்றிய ஆய்வுகள் வெளிவருகின்றன. அவையும் முஸ்லிகளால் அல்ல. அதனைப் பற்றி பின்னர் குறிப்பிட்டுள்ளோம்.


பிறை தெரிவதும் தெரியாமல் போவதும் 4 காரணங்களால் நிகழ்கின்றன.


1. வானியல் (பிறையின் வீதி, சூரியன் மறைந்த பிறகு அடிவானில் இருக்கும் வெளிச்சம்)

2. வானிலையியல் (வெப்பநிலை, காற்றழுத்தம், பனி மூட்டம், தூசு, மேகமூட்டம்)

3. உடலியியல் (கண் பார்வை)

4. உளவியல் (பிறையையே நினைத்து நிற்பதால் சில வேளைகளில் சிலருக்கு பிறை தெரிந்ததை போன்ற எண்ணம் ஏற்படும்)


இவற்றுள் முதலில் இருக்கும் காரணியை மட்டும் நம்மால் துல்லியமாக கணக்கிட இயலும். வானிலையை பொருத்தவரை ஓரளவுக்கு கணிக்க இயலுமே தவிர துல்லியமாக கணக்கிட இயலாது. இதனால்தான் பிறை தெரிய வாய்ப்புள்ளது என்று சொல்லும் நாட்களிலும் பிறை தெரியாமல் போய்விடுகிறது. கண் பார்வையுள்ளவர்களையும் அனுபவசாலிகளையும் கொண்டு இறுதி இரண்டு பிரச்சனைகளை சரி கட்டலாம்.


பிறை எந்த அளவுக்கு பெரிதாக வளர்ந்துள்ளதோ அந்த அளவுக்கு அதை பார்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். சூரியன் மறைந்த பிறகு எந்த அளவுக்கு அடிவானின் வெளிச்சம் குறைகிறதோ அந்த அளவுக்கு பிறகு பிறை எளிதில் தெரியும்


பிறையின் வயதை வைத்து பிறை பெரிதாக வளர்ந்திருக்கும் என்று கூறுவது சரியான அளவுகோல் அல்ல. "10 மணி நேர வயது கொண்ட பிறை கண்ணுக்கு தெரியாது . 18 மணி நேர வயதுள்ள பிறை கண்ணுக்கு தெரியும்" என்றெல்லாம் சொல்வதும் தவறாகும்.



ஒரு பொருள் அருகாமையில் இருந்தால் அது பெரிதாக தெரியும் அதுவே தொலைவில் இருந்தால் சிறிதாக தெரியும். நிலவு பூமி சுற்றி வட்டப்பாதையில் சுற்றி வருவதில்லை நீள்வட்டப்பாதையில் சுற்றுகிறது. இதனால் 356,355 கிட்டத்தட்ட மூன்று லட்சத்து ஐம்பத்தாறாயிரம் கிமீ அளவுள்ள தூரத்தில் பூமியை நெருங்கி (perigee) வரும். அப்போது அது பெரிதாக தெரியும். பவுர்ணமியின்போது  நிலவு பூமிக்கு அருகாமையில் வந்தால் அதை சூப்பர் மூன் என்பார்கள். அதே போல நிலவு 406,725 நான்கு லட்சத்து ஆறாயிரம் கிமீ அளவுக்கு விலகியும் செல்லும்(apogee). அப்போது அது சிறிதாக தெரியும். அமாவாசையின்போது நிலவு பூமியை விட்டு வெகுதூரத்தில் இருந்தால் அதனை மைக்ரோ மூன் என்பார்கள். நிலவு தொலைவில் இருக்கும்போது தெரியும் அளவை விட அருகில் இருக்கும்போது 14% பெரிதாக காட்சியளிக்கும்.


Illustrative comparison of a Supermoon and Micromoon.

நன்றி: timeanddate.com


அமாவாசை நடக்கும்போது பூமி - சூரியன் நேர்கோட்டிற்கு அருகாமையில் நிலவு இருக்கும். இந்த நேர்கோட்டிலிருந்து விலக விலக பிறையின் அளவு அதிகரிக்கும். பூமியை சுற்றிவரும் நிலவின் வேகம் எப்போதும் ஒரே சீராக இருப்பதில்லை. பூமிக்கு அருகாமையில் நிலவு வரும்போது நிலவு 3960km/h வேகவேகத்தில் ஓடும். எனவே நேர்கோட்டில் இருந்து வேகமாக விலகும். குறைந்த வயதில் பிறை வளரும். அதே வேளையில் பூமியை விட்டு நிலவு விலகி இருக்கும்போது நிலவு மெதுவாக 3477km/h வேகத்தில் ஓடும். எனவே பிறை மெதுவாகவே வளரும். [4]


இவ்விரண்டையும் இணைத்து சிந்தித்துப் பாருங்கள். பூமியை விட்டு விலகி இருக்கும்போது ஏற்கனவே அது சிறிதாக தெரியும். போதாத குறைக்கு அதன் விலகல் வேகமும் குறைவாக இருக்கும். ஆக இந்த நேரத்தில் தலைப்பிறை கண்ணுக்கு தெரியும் அளவுக்கு வளர வேண்டுமானால் நிறைய நேரம் பிடிக்கும். 24 மணி நேரம் வரை ஆகலாம். அதுவே நிலவு அருகாமையில் இருக்கும்போது பெரிதாக காட்சியளிக்கும் வேகமாகவும் விலகும். இந்த தருணத்தில் மிக விரைவிலேயே கண்ணுக்கு தெரியும் அளவுக்கு வளர்ந்துவிடும். 18 மணி நேரம் போதுமானதாக இருக்கும்.


நன்றி: http://moongazer.x10.mx/website/astronomy/moon-phases/

இத்துடன் முடிந்துவிடுவதில்லை. பூமியை சுற்றிவரும் நிலவின் வட்டப்பாதை பூமியின் ஓடுதளத்தில் இருந்து 5.1 டிகிரி சாய்வாக உள்ளது. இந்த சாய்வின் காரணமாக பூமி-சூரியன் நேர்கோட்டை எல்லா அமாவாசைகளிலும் நிலவு தொடுவதில்லை. பூமி-சூரியன் நேர்கோட்டை நிலவு தொடுவதே சூரிய கிரகணமாகும். கிரகணம் நடக்கும் மாதங்களில் பூமி-சூரியன் நேர்கோட்டிற்கு நிலவு மிக அருகில் இருக்கும். அதுவே கிரகணம் நடந்து 3 மாதங்களுக்குப் பிறகு அமாவாசை நடக்கும் அந்த வினாடியிலேயே பூமி-சூரிய நேர்கோட்டில் இருந்து 5.1 டிகிரி நிலவு விலகி (elongation) இருக்கும். எனவே கிரகணம் நடந்து மூன்று மாதத்திற்கு பிறகு வரும் மாதத்தில் மற்ற மாதங்களவிட குறைந்த வயதிலேயே பிறை கண்ணுக்கு தெரியும் அளவுக்கு வளர்ந்துவிடும். கிரகணம் நடக்கும் மாதத்தில் 10 மணி நேர வயது கொண்ட பிறையும். கிரகணம் நடந்து 3 மாதத்திற்கு பிறகு வரும் மாதத்தில் ஒரே ஒரு வினாடி வயதுள்ள பிறையும் ஒரே அளவில் இருக்கும்.


இந்த இரு காரணிகளும் ஒரு சேர நடந்தால் சொல்லவே வேண்டாம். அதாவது கிரகணம் நடக்கும் மாதத்தில் நிலவு (apogee) தொலைவில் இருந்தால் அது கண்ணுக்கு தெரிவதற்கு 24 மணி நேரத்தையும் தாண்டி காத்திருக்க வேண்டும். அதுவே கிரகணம் நடந்து 3 மாதத்திற்குப் பிறகு பூமிக்கு அருகாமையிலும் (perigee) நிலவு இருந்தால் 18 மணி நேரத்திலேயே தெரிந்துவிடும். ஆக வயதைக் கொண்டு பிறை தெரியும் அல்லது தெரியாது என்பது தவறான கணிப்பாகும். பிறையின் வயதைக் கொண்டு அது தெரியுமா தெரியாதா என்பதைக் கணிக்க இயலாததைப் போல பிறையின் ஒளியூட்டத்தைக் (illumination in %) கொண்டும் கணிக்க இயலாது. ஏனெனில் 1% ஒளி கொண்ட பிறை (apogee) தொலைவில் இருக்கும்போது என்ன அளவில் கண்ணுக்கு தெரியுமோ அதைவிட 14% பெரிதாக அருகாமையிலும் (perigee) இருக்கும்போது தெரியும். மேலும் சூரிய மறைவுக்கும் நிலவு மறைவுக்கும் இடையேயான நேர வித்தியாசமும் பிறைக் கணிப்பு துல்லியமான அளவீடல்ல.


பிறையின் அளவு & அடிவானத்தின் வெளிச்சம் ஆகிய இரு காரணிகளைக் கொண்டே பிறை தெரியுமா தெரியாதா என்று கணக்கிட வேண்டும். வேறு எந்த அளவுகளைக் கொண்டு கணக்கிடுவதும் துல்லியமாக அமையாது. பிறையின் அளவை அதன் வீதியைக் கொண்டே கணக்கிட இயலும். அதை டிகிரி கணக்கில் சொல்வார்கள். 0.0005 டிகிரி அளவுக்கு பிறை வளர்ந்திருந்தால் மட்டுமே கண்ணுக்கு தெரியும். அதேபோல அடிவானத்தின் வெளிச்சம் குறைந்த பிறகு பிறை தெரியவேண்டும் என்றால் சூரியன் மறையும்போது 10 டிகிரி குத்துயரத்தில் (altitude) நிலவு இருக்க வேண்டும்.


நன்றி: david blanchard

இது உண்மையான புகைப்படமாகும். சூரியன் மறைந்து அடிவானுக்கு கீழே சென்றுவிட்டது. அதை உங்களுக்கு புரிய வைப்பதற்காக புகைப்படத்தில் மஞ்சள் வட்டத்தில் சூரியனை வரைந்து காட்டியுள்ளோம். பிறையின் வீதியை புரிந்துகொள்வதற்காக அதையும் வரைந்து காட்டியுள்ளோம். Elongation என்பது நிலவுக்கும் சூரியனுக்கும் இடையேயுள்ள விலகல் கோணமாகும். இந்த கோணம் அதிகரிக்க அதிகரிக்க பிறையின் வீதியும் அதிகரிக்கும், எனினும் அது மட்டுமே பிறையின் வீதியை முடிவு செய்யாது. பூமியிலிருந்து நிலவு இருக்கும் தூரமும் சேர்ந்தே பிறையின் வீதியை முடிவு செய்யும். அடுத்ததாக அடிவானின் சூரிய வெளிச்சத்தை கணிதத்தில் குறிப்பது ARCV என்று காட்டப்பட்டுள்ள அளவு ஆகும். அதாவது அடிவானுக்கு கீழே சூரியன் சென்றுள்ள அளவு மற்றும் அடிவானத்திற்கு மேலே நிலவு இருக்கும் உயரம் ஆகியவற்றின் குத்துயர வேற்றுமையே Arc of Vision (ARCV) என்ழைக்கப்படுகிறது. இந்த அளவு அதிகரிக்க அதிகரிக்க அடிவானத்தின் வெளிச்சத்திலிருந்து பிறை விலகி இருக்கும்; பிறை தெரியும் வாய்ப்பும் அதிகரிக்கும்.


பிறை கண்ணுக்கு தெரிவதையும் தெரியாமல் போவதையும் முடிவு செய்வது இவ்விரு அளவுகள் மட்டுமே. எனினும் மேலுள்ள முக்கோணம் பிறை ஆய்வில் பிரபலமானது. பிறையின் வீதியான W’ வை எடுக்காமல் முற்கால அறிஞர்கள் சந்திர-சூரியனின் திசைக்கோண வேற்றுமையை DAZ எடுத்து கணக்கிட்டனர்.


பல ஆயிரக்கணக்கான பிறை பார்த்த தரவுகளை தொகுத்தனர். வெறும் கண்ணுக்கு பிறை தெரிந்ததாக சொல்லப்பட்ட நாட்களின்போது ARCV, ARCL, W’ & DAZ ஆகிய அளவுகள் என்னவாக இருந்தன என்று பட்டியலிட்டனர். தொலைநோக்கியில் மட்டுமே பிறை தெரிந்ததாக சொல்லப்பட்ட நாட்களிலும் பிறை தெரியாமல் போன நாட்களிலும் இந்த அளவுகள் எவ்வாறிருந்தன என்றும் பட்டியல் இட்டனர். இவற்றைக் கொண்டு வரைபடம் வரைந்தனர் அவ்வரைபடத்தை சமன்பாடுகளாக மாற்றினர். இவ்வாறே பிறை கணிப்புகள் உருவாகின.


1912 ல் Fotheringham என்பவர் உருவாக்கி Maunder என்பவர் மேம்படுத்திய ஆய்வின்படி, 11 – DAZ/20 − DAZ²/100 இந்த கணக்கின் விடையை விட ARCV அதிகமாக இருந்தால் பிறை கண்ணுக்குத் தெரியும் வாய்ப்புகள் அதிகம். இதே அளவைத்தான் அல் பைரூனி அவர்களும் சொல்லி இருக்கிறார்கள் என்று வாதிடும் அறிஞர்களும் உள்ளனர்.


பின்னர் 1966 ல் Schoch எனும் ஆய்வாளர் ஒரு கணக்கை உருவாக்கிறார் 10.3743 − 0.0137DAZ − 0.0097DAZ² இந்த அளவை விட ARCV அதிகமாக இருந்தால் பிறை கண்ணுக்குத் தெரியும் வாய்ப்புள்ளதாக சொன்னார். இதைதான் இந்திய அரசு எடுத்துள்ளது. இதன்படியே முஸ்லிம்களின் அரசு விடுமுறைகள் இந்தியாவில் முடிவு செய்யப்படுகிறது. இந்த கணிப்பின்படியே சிவகாசி காலண்டரில் முஸ்லிம் பண்டிகை தேதிக்கள் குறிப்பிடப்படுகின்றன. இந்திய அரசு இதனை பயன்படுத்த துவங்கிய பிறகு இது இந்திய அரசின் பிறைக் கணிப்பு முறை என்று பிரபலமாகிவிட்டது.


பின்னர் 1977 ல் Bruin என்பவர் முதன் முதலாக பிறையின் வீதியை எடுப்பதுதான் துல்லியமானது என்று அறிகிறார். அவர் பிறையின் வீதியைக் கொண்டு ஒரு புதிய சமன்பாட்டை அறிமுகம் செய்கிறார்.  12.4023 - 9.4878 W + 3.9512 W² – 0.5632 W² இந்த சமன்பாட்டை விட சூரிய சந்திர குத்துயர வேற்றுமை ARCV அதிகமாக இருந்தால் பிறை கண்ணுக்கு தெரியும் என்றார். இவ்வாறு ஒவ்வொரு காலகட்டத்திலும் பிறை தெரியுமா எனும் கேள்விக்கான விடையை அறிஞர்கள் துல்லியப்படுத்திக்கொண்டே வந்தனர்.


இதன் பிறகு 1993ல் தான் இல்யாஸ் எனும் முஸ்லிம் அறிஞர் இந்த ஆய்வுகளின் தனது அறிக்கையை வெளியிடுகிறார். எனினும் அவை எதுவும் பிரபலமாகவில்லை. 1998ல் இங்கிலாந்து கடலியல் ஆய்வகம் சார்பாக Dr. யல்லப் என்பவர் செய்த ஆய்வே மிகவும் பிரபலமானது [2]. Moonsighting.com நடத்தும் காலித் ஷவுகத் இவரது பார்முலாவையே பயன்படுத்துகிறார்.


 q = (ARCV − (11.8371 – 6.3226 W’ + 0.7319 W’² − 0.1018 W’³))/10


மற்ற அனைத்து ஆய்வாளர்களை விடவும் யல்லப் சில சிறப்பான காரியங்களை செய்தார்.. மற்ற ஆய்வாளர்கள் அனைவரும் பூமியின் மையப்புள்ளியை ஆதாரமாக வைத்தே வானியல் கணக்கை செயல்படுத்தினர். ஆனால் நாம் பூமியின் மேற்பரப்பில் வாழ்கிறோம். நமக்கும் கீழே ஆறாயிரம் மீட்டர் ஆழத்தில் இருக்கும் மையப்புள்ளியை கணக்கெடுப்பதை விட பூமியின் மேற்பரப்பை அடிப்படையாக கொண்டு நிலவின் அளவுகளை அளவிட வேண்டும் என்பதே இதன் சிறப்பு. எனவே அவர் நிலவின் வீதியை W’ என்று குறிப்பிட்டார். அடுத்ததாக மற்ற அனைவரும் சூரியன் மறையும் நேரத்தில் நிலவின் அளவீடுகளை எடுத்து கணக்கிட்டனர். ஆனால் மெல்லிய பிறைகள் சூரியன் மறைந்து 20 நிமிடங்களுக்குப் பிறகே தெரியும். இதனை அடிப்படையாக கொண்டு சூரிய சந்திர மறைவு நேரங்களுக்கு மத்தியிலான நேரத்தில் நிலவின் அளவுகளைக் கணக்கிட்டு அதனடிப்படையில் பிறை தெரிவதை கணக்கிட வேண்டும் என்றார். மேலும் ஒரே சமன்பாட்டைக் கொண்டு பிறை கண்ணுக்கு தெரியும் அளவையும் தொலைநோக்கிக்கு தெரியும் அளவையும் அதி நவீன கருவிகளுக்கு தெரியும் அளவையும் அவர் வரையறுத்தார். q வின் அளவு 0.216 ஐ விட அதிகமாக இருந்தால் எளிதில் பிறை கண்ணுக்கு தெரியும் என்றார். 0.014 ஐ விட அதிகமாக இருந்தால் வானிலை மிகவும் சாதகமாக இருந்தால் பிறை கண்ணுக்கு தெரியலாம் என்றார். -0.160 விடை அதிகமாக இருந்தால் பிறையை தேடுவதற்கு பைனாகுலர் டெலஸ்கோப் போன்ற கருவிகள் வேண்டும் என்றார். -0.232 ஐ விட அதிகமாக இருந்தால் பைனாகுலர்/டெலஸ்கோப் போன்ற கருவிகளுக்கு மட்டுமே தெரியும் என்றார். -0.232 ஐ விட குறைவாக இருந்தால் டெலஸ்கோப் போன்ற கருவிகளுக்குக்கூட தெரியாது என்றார். இவருக்குப்பிறகு முஹம்மத் அவுதா (http://www.icoproject.org/) எனும் சகோதரர் இதை இன்னமும் மேம்படுத்தினார் [3].


V = ARCV − (−0.1018 W’³ + 0.7319 W’²  − 6.3226 W’ + 7.1651)


இவரும் ஒவ்வொரு V அளவுக்கும் “கண்ணுக்கு தெரியும்”, “தொலைநோக்கிக்கு தெரியும்” என்று வகைப்படுத்தினார். இவ்விரு பிறைக் கணிப்பு வரைபடங்களுமே இன்று புழக்கத்தில் இருக்கின்றன. ARCV மற்றும் W’ ஆகியவற்றை நாமே கணக்கிட்ட இயன்றால் மேலுள்ள சமன்பாடுகளில் இட்டு பிறை தெரியுமா தெரியாதா என்று அறிந்துகொள்ள இயலும். இக்கட்டுரையின் அடுத்தபாகமாக இவற்றை சாதரணமாக Excel சாப்ட்வேரில் கணக்கிடுவது எப்படி என்று விரிவாக வெளியிடுவோம் இன்ஷா அல்லாஹ்.


[update: அந்த எக்சல் ஷீட் வெளியிடப்பட்டுள்ளது பார்க்க https://docs.google.com/spreadsheets/d/1eybFbXI1qWP27AKFagVFqyyILWDxTmdD/edit?usp=sharing&ouid=101680049878552097282&rtpof=true&sd=true. 20ம் நூற்றாண்டில் 10ம் வகுப்பு படித்த ஒருவரால் இதனை கணக்கிட முடியும்]


பிறை தெரியுமா தெரியாதா எனும் ஆய்வை உலகில் பலர் மேற்கொண்டுள்ளனர் எனும் வரலாற்றைப் பார்த்தோம். இதில் பிறையின் வயதில் கொண்டு அது தெரியுமா தெரியாதா என்று கணித்தவர்கள் சூனியத்தை வைத்து ஏமாற்றுப் பிழைப்பு நடத்திய பாபிலோனியர்கள் மட்டுமே. அதன் பிறகு உலகில் யாருமே பிறையின் வயதைக் கொண்டு பிறை தெரியும்/தெரியாது என்று சொல்லவே இல்லை.


இப்போது யல்லப்பின் வரைபடங்களை வாசித்து குறிப்பிட இடத்தில் பிறை தெரியுமா தெரியாதா என்று எப்படி அறிந்துகொள்வது என்று பார்ப்போம். பின்வரும் இங்கிலாந்து அரசின் கடலியல் துறையின் இணையத்தளத்திலிருந்து யல்லப்பின் வரைபடத்தை எளிதில் எடுக்க இயலும்.


https://astro.ukho.gov.uk/moonwatch/nextnewmoon.html


இந்த தளத்தில் நாம் பிறை தேடும் தேதியை சொடுக்கினால் கீழ்கண்டவாறு ஒரு வரைபடம் கிடைக்கும்.



இது இவ்வருட (2021) ஷவ்வால் மாதத்திற்கான வரைபடமாகும்


இதில் சிவப்பு நிறத்தில் இருப்பது எளிதில் புறக்கண்களுக்கு பிறை தெரிய வாய்ப்புள்ள பகுதிகள் ஆகும். சிவப்புக்கு வெளியே ஆரஞ்சு நிறத்தில் இருப்பது வானிலை மிகவும் சாதகமாக இருந்தால் புறக்கண்களுக்கு பிறை தெரிய வாய்ப்புள்ள பகுதிகள் ஆகும். அதற்கு வெளியே வெளிர் மஞ்சள் நிறத்தில் இருப்பது தொலை நோக்கியின் உதவியுடன் பிறை தேடும் பகுதிகள் ஆகும். அதற்கும் வெளியே வெளிர் நீல நிறத்தில் இருக்கும் பகுதிகள் தொலை நோக்கியால் மட்டுமே பிறை பார்க்க இயன்ற பகுதிகள் ஆகும். அதற்கும் வெளியே கருநீல நிறத்தில் இருக்கும் பகுதிகளில் சாதாரண ஒளியியல் தொலைநோக்கியால் கூட பிறை பார்க்க இயலாத பகுதிகள் ஆகும். இப்பகுதிகளில் CCD கருவிகளைக் கொண்டு பிறை தேட இயலும்.


கடந்த மே 12 ம் தேதி இந்தியா கருநீல நிறப்பகுதியில் இருக்கிறது. நிச்சயமாக புறக்கண்களால் பிறை பார்க்கவே இயலாது.


அதே இணயதளம் இன்னும் துல்லியமாக ஒரு குறிப்பிட்ட இடத்தின் நிலவரங்களைத் தருகிறது.


http://astro.ukho.gov.uk/surfbin/first_beta.cgi


இந்த லிங்கில் சென்று பிறை பார்த்ததாக சொல்லப்பட்ட இடத்தின் புவியியல் அளவுகளைக் (longitude, latitude) கொடுத்தால் பின்வருமாறு அந்த தேதியின் நிலவரத்தைக் கொடுத்துவிடும்.


                                Visibility Predictions for the New Crescent Moon

 Chennai         

 Longitude   E080 15

 Latitude     N13 02

 Time Zone  - 05h 30m

                                  Times are in Standard Time = GMT + 05h 30m

 

   New Moon Birth Date                  Sun           Moon at Sunset        Moon  Lag   BEST Code

                    +                Set    Az    Age  Alt  Az DAZ  Mag El   Set  Time  TIME

 year mth day  h  m d      mth day   h  m    o    h  m   o   o   o       o   h  m   m   h  m

 2021 May  12 00 30   Wed 

                    0 Wed  May  12  18 26  289   17 56   6 288   1 -4.3  8  18 59  32  18 41  E

                    1 Thur May  13  18 27  289   41 57  17 290   0 -5.5 19  19 49  82  19 03  A

 

 A  Easily visible

 B  Visible under perfect conditions

 C  May need optical aid to find the crescent Moon

 D  Will need optical aid to find the crescent Moon

 E  Not visible with a telescope

 F  Not visible, below the Danjon limit

 

 © Crown Copyright.  This information is protected by international copyright law. No part of

 this information may be reproduced, stored in a retrieval system or transmitted in any form

 or by any means, electronic, mechanical, photocopying, recording or otherwise without prior

 permission from The UK Hydrographic Office, Admiralty Way, Taunton, TA1 2DN, United Kingdom

 (www.ukho.gov.uk). Data generated using algorithms developed by HM Nautical Almanac Office.

 

 Computed on 19-May-2021


மே 12 ம் தேதி சென்னையில் தொலைநோக்கிகளால்கூட பிறை பார்க்க இயலாது என்கிறது  இங்கிலாந்து கடலியல் துறை.


இவற்றை Sun & Moon Calendar - Apps on Google Play இந்த app மூலமாகவும் தெரிந்துகொள்ள இயலும்.


மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் மே 12 மைக்ரோ மூன் ஆகும். மேலும் மே 26ஆம் தேதி கிரகணமும் நடந்தது., ஆக இந்த சீசனில் 18 மணி நேரத்தில் எல்லாம் பிறை தெரியாது. அன்றைய தினம் பிறை தெரிய வாய்ப்பிருந்த பகுதிகளில் பிறையின் வயது 24 ½ மணி நேரத்தைக் கடந்திருந்தது,.


  1. Al Biruni Criteria. S. Kamal Abdali, Ph.D. https://dosya.diyanet.gov.tr/EAPDosya/EAPYayinDosya/M56.pdf

  2. Yallop Criterion https://dosya.diyanet.gov.tr/EAPDosya/EAPYayinDosya/M38.pdf 

  3. Odeh Criterion https://dosya.diyanet.gov.tr/EAPDosya/EAPYayinDosya/M12.pdf 

  4. Nasa's moon factsheet Moon Fact Sheet (nasa.gov)