Monday 10 May 2021

மறைப்பு (கிரகணம்) என்றால் என்ன?

மறைப்பு (கிரகணம்) என்றால் என்ன?

கிரகணம் என்பது சுத்தமான சம்ஸ்கிருத வார்த்தை ஆகும். தமிழில் மறைப்பு என்று சொல்ல வேண்டும்.


சந்திர கிரகண நிகழ்வுக்கும் சூரிய கிரகண நிகழ்வுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.


ஒளி ஊடுருவாத எந்த ஒரு பொருளின் மீது ஒளி விழும்போதும் அதற்கு நிழல் உருவாகும். சுயமாக ஒளியை உருவாக்கும் பொருளாக இருந்தாலும் அதனுடைய ஒளியை மிகைக்கும் ஒளி அதன் மீது விழுந்தால் அதற்கு நிழல் உருவாகும். சூரியனின் ஒளியை மிகைக்கும் ஒளி அதன் மீது விழாததால் சூரியனுக்கு நிழலில்லை. எப்போதும் பூமியின் மீதும் நிலவின் மீதும் சூரிய ஒளி விழுவதால் பூமிக்கும் நிலவுக்கும் எப்போதுமே நிழல் இருந்துகொண்டே இருக்கும்.


வானத்தில் சுழன்றுவரும் ஒரு கோளின் நிழல் மற்றொரு கோளின் மீது விழுவதே கிரகணம் எனப்படும். எந்த கோளின் மீது நிழல் விழுகிறதோ அதற்கு கிரகணம் பிடித்ததாக சொல்லப்படும். பூமியின் நிழல் நிலவின் மீது விழுந்தால் நிலவுக்கு கிரகணம் பிடித்தது என்போம். நிலவின் நிழல் பூமியில் விழுந்தால் பூ..... ??? அதை சூரிய கிரகணம் என்கிறோம். நியாயப்படி பூமிக்கு கிரகணம் பிடித்துள்ளதாக சொல்லவேண்டும். சற்று விரிவாக பார்ப்போம்.


நாம் ஒரு கட்டிடத்தின் நிழலில் இருக்கும்போது அந்த கட்டிடம் சூரியனை மறைத்திருக்கும். அதே போல நிலவின் நிழல் பூமியில் விழும்போது நிழல் விழும் பகுதியில் இருப்பவர்களுக்கு சூரியனை நிலவு மறைத்திருக்கும். பூமியிலிருந்து பார்க்கையில் சூரியனை நிலவு மறைப்பதால் அதை சூரிய கிரகணம் என்கிறோம். இதே போல பூமியின் நிழல் நிலவில் விழும்போது நிலவை எந்த பொருளும் மறைக்காது. ஆனால் பூமியின் நிழலால் நிலவு இருண்டுவிடும். நமது பார்வையிலிருந்து நிலவு மறைக்கப்படும்.


ஆக! ஒரே வரையறையை இரு கிரகணங்களுக்கும் கொடுக்கு இயலாது.


சூரிய கிரகணம்:


சூரியனை நிலவு மறைக்கும். நிலவின் நிழல் பூமியில் விழும். பூமிக்கு கிரகணம் பிடிக்கும். நிழல் விழும் பகுதியில் இருப்பவர்களுக்கு சூரியனை நிலவு மறைப்பதை பார்க்க இயலும். 


சந்திர கிரகணம்:


பூமியின் நிழல் சந்திரனில் விழும். சந்திரனுக்கு சூரியனில் இருந்து கிடைக்கும் ஒளி தடை படும். சந்திரன் இருளும். சந்திரனை எதுவுமே மறைக்காது. முழு சந்திர கிரகணத்தின் போதும் நிலவு சிவப்பு நிறத்தில் கண்களுக்குத் தெரியும்.


சந்திர கிரகணத்தின் போது நிலவில் இருந்து பார்த்தால் சூரியனை பூமி மறைத்திருப்பதைப் பார்க்கலாம். உண்மை என்னவென்றால் நிலவுக்கு நடக்கும் சூரிய கிரகணத்தை பூமியிலிருக்கும் நாம் சந்திர கிரகணமாகப் பார்க்கிறோம்.


பூமியை விட நிலவு சிறிதாக இருப்பதால் பூமியில் விழும் நிலவின் நிழலும் சிறிதாக இருக்கும். எனவே பூமியின் சில பகுதிகளுக்கு மட்டுமே சூரிய கிரகணம் தெரியும். மற்றவர்கள் முழு சூரியனைப் பார்ப்பார்கள். நிலவை விட பூமி மிகப்பெரிதாக இருப்பதாலும், நிலவில் விழும் பூமியின் நிழலை நாம் பூமியிலிருந்து பார்ப்பதாலும், சந்திர கிரகணம் நிகழும் இரவில் பூமியில் இரவாக இருக்கும் அனைத்து பகுதிக்கும் சந்திர கிரகணம் தெரியும்.


கிரகணத்தின் வகைகள்:


கிரகணத்தின் வகைகளை பார்க்கும் முன்னர் நிழலின் வகைகளைப் பார்க்க வேண்டும். லேசர் லைட் போன்று ஒரு புள்ளியில் (point source) இருந்து வெளிப்படும் நேர் கற்றைகளைத் (collimated rays) தவிர வேறு எந்த ஒளி மூலத்திலிருந்து வெளிப்படும் ஒளியும் இரு வித நிழல்களை உருவாக்கும். குறிப்பாக சூரியனைப் போன்ற பெரிய ஒளி மூலங்கள் (light source) பூமியின் வளிமண்டலத்தைத் தாண்டி வெளியேறும்போது இரு வித நிழல்களை உருவாக்குகிறது.


1. அடர்ந்த நிழல் umbra


ஒளி மூலத்தை முழுமையாக ஒரு பொருள் மறைத்திருக்கும் இடங்களில் அடர்ந்த நிழல் விழும். இது அம்ப்ரா எனப்படும். பூமியில் நிலவின் அம்ப்ரா நிழல் விழும் பகுதியில் இருப்பவர்கள் முழு சூரிய கிரகணத்தை பார்ப்பார்கள்.


2. மெல்லிய நிழல் penumbra


ஒளி மூலத்தை முழுமையாக மறைக்காமல் அதன் ஒரு பகுதியை மட்டுமே ஒரு பொருள் மறைக்கும் இடங்களில் மெல்லிய நிழல் விழும். எந்த அளவுக்கு ஒளி மூலத்தை அந்த பொருள் மறைக்கிறதோ அந்த அளவுக்கு நிழலில் அடர்த்தி இருக்கும். இந்த நிழல் பெனம்ப்ரா எனப்படும். பூமியில் நிலவின் பெனம்ப்ரா நிழல் விழும் பகுதியில் இருப்பவர்கள் பகுதி சூரிய கிரகணத்தை பார்ப்பார்கள்.


3. ஆன்றம்ப்ரா


ஒளி மூலத்தை விட பார்வைக்கு சிறிய பொருள் அதனை மறைக்கும்போது மறைக்கும் பொருளை சுற்றிலும் ஒளி மூலம் ஒளி வீசிக்கொண்டிருக்கும். இதனால் ஏற்படும் மெல்லிய நிழல் ஆன்றம்ப்ரா எனப்படும். சூரியனுக்கு நெருக்கமாக பூமி இருந்து பூமியை விட்டு விலகிய நிலையில் நிலவு இருக்கும்போது பார்வைக்கு சூரியன் பெரிதாகவும் நிலவு சிறிதாகவும் இருக்கும். இந்நிலையில் கிரகணம் ஏற்பட்டால் சூரியனை முழுமையாக நிலவால் மறைக்க இயலாது. அப்போது ஏற்படும் கிரகணம் வளைய கிரகணம் எனப்படும். நிலவை சுற்றிலும் வளைய வடிவில் சூரியன் தெரிவதால் இந்த பெயர் ஏற்பட்டது.


படம்-1


நிலவில் ஏற்படும் சூரிய கிரகணத்தை நாம் பூமியில் இருந்து சந்திர கிரகணமாக பார்க்கிறோம் என்று ஏற்கனவே பார்த்தோம். மேலே வெவ்வேறு நிழலில் இருப்பவர்கள் கிரகணத்தின் வெவ்வேறு வகைகளை பார்ப்பார்கள் என்று பார்த்தோம். இந்த விதி சூரிய கிரகணத்திற்கு மட்டுமே பொருந்தும். சந்திர கிரகணத்திற்குப் பொருந்தாது.


பூமியின் நிழலைத்தான் நாம் சந்திர கிரகணமாக பார்க்கிறோம். 


பூமியின் அடர்ந்த அம்ப்ரா நிழல் முழு நிலவின் மீதும் விழுந்தால் முழு சந்திர கிரகணம் ஏற்படும்.


பூமியின் அடர்ந்த அம்ப்ரா நிழல் நிலவின் ஒரு பகுதியில் மட்டுமே விழுந்தால் பகுதி சந்திர கிரகணம் ஏற்படும்.


பூமியின் பெனம்ப்ரா நிழல் நிலவில் விழும்போது நிலவில் இருந்து பார்க்கையில் பகுதி சூரிய கிரகணத்தை பார்க்கலாம். ஆனால் மிகவும் லேசான நிழல் நிலவில் விழுவதை பூமியில் இருந்து பார்ப்பவர்களுக்கு பிரித்தறிய இயலாது.


எனவே பெனம்ப்ரல் சந்திர கிரகணம் கண்ணுக்கு தெரியாது. தொலைநோக்கிக்குக் கூட தெரியாது.


படம்-2 (நன்றி mathworks.com)


அடர்ந்த அம்ப்ரல் நிழல் தனியாகவும் மெல்லிய பெனம்ப்ரல் நிழல் வேறு எங்கோ விழும் என்றும் நினைத்துவிடக்கூடாது. வட்ட வடிவ (பூமி அல்லது சந்திரன்) கோள்களின் நிழல்களும் வட்ட வடிவிலேயே இருக்கும். அடர்ந்த அம்ப்ரல் நிழல் வட்ட வடிவமாக அடர்த்தியாக இருக்கும். அதனை சுற்றிலும் மெல்லிய பெனம்ப்ரல் நிழல் அதை விட பன்மடங்கு அளவுக்கு நிலத்தை ஆக்கிரமித்து இருக்கும். இதனை மேலுள்ள படம்-2ல் பார்க்கிறீர்கள்.


அடர்ந்த அம்ப்ரல் நிழலை சுற்றிலும் பெரிய அளவில் மெல்லிய பெனம்ப்ரல் நிழல் இருக்கும்.


நிழல்

சூரிய கிரகணம் 

சந்திர கிரகணம்

அடர்ந்த நிழல் umbra

அடர்ந்த நிழல் பூமியில் விழும் பகுதிக்கு முழு சூரிய கிரகணம்

அடர்ந்த நிழல் நிலவு முழுவதும் விழுந்தால் முழு சந்திர கிரகணம்

அடர்ந்த நிழல் நிலவின் ஒரு பகுதியில் மட்டும் விழுந்தால் பகுதி சந்திர கிரகணம்

மெல்லிய நிழல் penumbra

மெல்லிய நிழல் பூமியில் விழும் இடங்களுக்கு “பகுதி சூரிய கிரகணம்”

மெல்லிய நிழல் நிலவில் விழுவதை பூமியிலிருந்து பார்ப்பவர்களால் பிரித்தறிய இயலாது. இதனை penumbral பெனம்ப்ரல் சந்திர கிரகணம் என்று விஞ்ஞானம் அழைத்தாலும் இது கண்ணுக்குத் தெரியாது

ஆன்றம்ப்ரா

வளைய கிரகணம்

பூமியின் நிழல் மிகவும் பெரிது. நிலவு பூமிக்கு அருகாமையில் உள்ளதை. பூமியின் ஆன்றம்ப்ரா நிழல் பகுதியில் ஒருக்காலமும் நிலவு செல்லாது



படம்-3 சந்திர கிரகணம்



படம்-4 சூரிய கிரகணத்தின்போது நிலவின் நிழல் பூமியில் விழும் காட்சியை விண்வெளியில் இருந்து எடுத்த புகைப்படம். இதில் இருக்கும் அடர்ந்த இருள் நிழலுக்குள் இருப்பவர்கள் முழு சூரிய கிரகணத்தைப் பார்ப்பார்கள்.


படம்-5

படம்-6


முதலில் காட்டியுள்ள சந்திர கிரகண படத்தை (படம்-3) கவனித்துப்பாருங்கள். அதில் கருப்பாக இருக்கும் பகுதி பூமியின் அடர்ந்த அம்ப்ரல் நிழல் விழுந்த பகுதியாகும். வெளிச்சமாக இருக்கும் பகுதி நிழல் ஏதும் விழாத சூரிய ஒளி விழும் பகுதி என்று நினைத்து விடக்கூடாது. வெளிச்சமாக இருக்கும் பகுதி முழுவதுமே மெல்லிய பெனம்ப்ரல் நிழல் விழுந்துள்ள பகுதியாகும். நிழல் விழுந்துள்ளதா இல்லையா என்று பிரித்தறிய இயலாத அளவுக்கு வெளிச்சமாக இருப்பதே பெனம்ப்ரல் நிழலாகும். இதை புரிந்துகொள்வதற்காக சூரிய கிரகண படத்தையும் காட்டியுள்ளோம்.


கடந்த 2006 மார்ச்சில் நடந்த சூரிய கிரகணத்தை சர்வதேச விண்வெளி மையம் புகைப்படம் எடுத்ததையே நீங்கள் மேலே படம்-4ல் காண்கிறீர்கள். புகைப்படத்தின் நடுவே கருப்பாக இருப்பது நிலவின் அடர்ந்த அம்ப்ரல் நிழலாகும். அந்த கருப்பு நிழலுக்கு கீழே நீங்கள் பார்க்கும் தீவு சைப்ரஸ் நாடாகும். சைப்ரஸ் நாட்டில் நிலவின் மெல்லிய பெனம்ப்ரல் நிழல் விழுந்துள்ளது. ஆனால் நாம் சைப்ரஸ் தீவை தெளிவாக பார்க்கிறோம். அதேபோல அந்த கருப்பு நிழலை சுற்றிலும் உள்ள பகுதிகள் அனைத்தையுமே நாம் தெளிவாக காண்கிறோம். அவை அனைத்துமே மெல்லிய பெனம்ப்ரல் நிழலில் உள்ளன. படம்-3ல் நிலவின் அடர்ந்த அம்ப்ரல் நிழல் பெரிதாக தெரிந்தாலும் உலக அளவில் ஒப்பிடும்போது அது ஒரு புள்ளியாகவே இருக்கிறது. இதனை மேலும் விளங்குவதற்காக படம்-4ல் உள்ள புகைப்படம் எடுக்கப்பட்டபோது அடர்ந்த அம்ப்ரல் நிழல் மற்றும் மெல்லிய பெனம்ப்ரல் நிழல் பூமியின் எந்தெந்த பகுதியில் விழுந்திருந்தன என்பதை படம்-5ல் காட்டியுள்ளோம். அந்த இடத்தை மட்டும் zoom செய்து படம்-6ல் காட்டியுள்ளோம். படம் 6ல் நடுவே இருக்கும் இருக்கும் கருமையான ஆரஞ்சுப் புள்ளியைப் பாருங்கள். அதுவே அடர்ந்த அம்ப்ரல் நிழலாகும். அதனை சுற்றிலும் நிழலின் அடர்த்தி குறைந்து கொண்டே வருகிறது. எனினும் ஒட்டுமொத்த ஐரோப்பாவும் ஆசிய கண்டத்தின் பாதியும் ஐரோப்பா கண்டத்தின் பாதியும் மெல்லிய பெனம்ப்றல் நிழலிலேயே உள்ளன. இவற்றை விண்வெளியில் இருந்து பார்க்கையில் நிழல் விழுந்துள்ளதாக எந்த வித்தியாசத்தையும் அறியவேமட்டோம்.


இப்போது இந்த லிங்கில் இருக்கும் வீடியோவைப் பாருங்கள் https://en.wikipedia.org/wiki/Solar_eclipse#/media/File:An_EPIC_Eclipse.gif பூமியின் மீது நிலவின் நிழல் விழுவதைக் விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ. அடர்ந்த அம்ப்ரல் நிழலை சுற்றிலும் இருக்கும் மெல்லிய பெனம்பரல் நிழலுக்கும் நிழல் விழாத பிரகாசமான பகுதிக்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை.


பூமியில் மெல்லிய பெனம்ப்ரல் நிழலில் இருப்பவர்களுக்கு பகுதி சூரிய கிரகணம் தெரியுமே விண்வெளியில் இருந்து பார்க்கையில் பூமியில் மெல்லிய பெனம்ப்ரல் நிழல் விழும் பகுதியை அடையாளம் காண இயலாது. அதே போல நிலவில் மெல்லிய மெல்லிய பெனம்ப்ரல் நிழல் விழும் பகுதிக்கு சென்று நாம் சூரியனை பார்த்தால் சூரியனை ஒரு பகுதியாக பூமி மறைத்திருப்பதைப் பார்க்கலாம். ஆனால் மெல்லிய பெனம்ப்ரல் நிழல் விழும் பகுதியை பூமியில் இருந்து அல்லது விண்வெளியில் இருந்து பார்க்கையில் எந்த வித்தியாசமும் தெரியாது.


அடர்ந்த அம்ப்ரல் நிழலை சுற்றிலும் மெல்லிய பெனம்ப்ரல் நிழல் இருப்பதால். பூமியின் எந்த பகுதியாக இருந்தாலும் முதலில் மெல்லிய பெனம்ப்றல் நிழல் விழுந்த பிறகு அடர்ந்த அம்ப்ரல் நிழல் விழும். ஆகவே, முழு சூரிய கிரகணமாக இருந்தாலும் அது பகுதி கிரகணமாக தொடங்கியே முழு சூரிய கிரகணமாக ஏற்படும்.


அதே போல முழு சந்திர கிரகணமாக இருந்தாலும், நிலவும் முதலில் பூமியின் மெல்லிய பெனம்ப்ரல் நிழலுக்குள் நுழையும். அப்போது நிலவில் எந்த மாற்றத்தையும் நம் கண்கள் பிரித்தறியாது. பின்னர் பூமியின் அடர்ந்த அம்ப்ரல் நிழலுக்கும் நிலவு நுழையத் துவங்கும்போது பகுதி சந்திர கிரகணத்தை நாம் பார்ப்போம். பகுதி சந்திர கிரகணத்தை நாம் பார்க்கும்போது பிரகாசமாக இருக்கும் நிலவின் பகுதி பெனம்ப்ரல் கிரகணத்தில் இருப்பதை நாம் சிந்திக்க வேண்டும். படம்-1 ஐ மீண்டும் சிந்தனைக்கு எடுங்கள். கருப்பாக இருப்பது பூமியின் அடர்ந்த அம்ப்ரல் நிழல் பிரகாசமாக இருப்பது மெல்லிய பெனம்ப்ரல் நிழல். பெனம்ப்ரல் கிரகணம் கண்ணுக்கு தெரியாது என்பதற்கு இதுவே போதிய சான்றாகும்.



எனினும் அடர்ந்த அம்ப்ரல் நிழலுக்கு அருகே இருக்கும் மெல்லிய பெனம்ப்ரல் நிழல் நிலவின் மீது விழும்போது நிலவை முழுமையான இருட்டாக அது மாற்றாவிட்டாலும். நிலவில் ஒரு வித மங்கலை ஏற்படுவத்துவதை நாம் உணர முடியும். கிரகணம் ஏற்படுவதற்கு முன்பே முழுநிலவை கவனித்த பிறகு கிரகணம் ஏற்பட்ட பின்னர் கவனிப்பவருக்குமே இந்த வித்தியாசத்தை உணர இயலும். நிலவின் ஒரு பகுதி பிரகாசமாகவும் ஒரு சிறு பகுதி மங்கலாகவும் இருக்கும். இதனை மேலே படத்தில் பார்த்து அறிந்துகொள்ளலாம். இடதுபுறம் இருப்பது பெனம்ப்ரல் கிரகணம் ஏற்படுவதற்கு முன்னுள்ள முழு நிலவு. வலதுபுறம் இருப்பது பெனம்ப்ரல் கிரகணம் ஏற்பட்ட பிறகு எடுத்தது. 


எப்போது கிரகணம் நடக்கும்?


நிலவுக்கும் பூமிக்கும் எப்போதுமே நிழல் இருக்குமென்றால் ஏன் எப்போதும் அந்த நிழல் விழுவதில்லை. ஏன் மிக அரிதாக கிரகணங்கள் ஏற்படுகின்றன.


ஒரு மரத்தின் நிழல் நம் மீது விழவேண்டுமென்றால் நாம் என்ன செய்யவேண்டும்? மரத்தின் நிழலில் சென்று நிற்க வேண்டும் என்பீர்கள். சரியே. அப்போது என்ன நடக்கிறது? சூரியனை அந்த மரம் மறைக்குமாறு நாம் நிற்கும்போது மரத்தின் மீது நம் மீது விழுகிறது. அதாவது சூரியனுக்கும் நமக்கும் இடையே மரம் வரும்படி நாம் நிற்க வேண்டும். அப்போதுதான் மரத்தின் நிழல் நம் மீது நிற்கவேண்டும். இதையே கணித அடிப்படையில் சொல்ல வேண்டுமென்றால், சூரியன்-மரம்-நான் இம்மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும். இந்த நேர்கோட்டை விட்டு எது விலகினாலும் நிழல் நம் மீது விழாது.


சூரியன்-நிலவு-பூமி இவை ஒரே நேர்கோட்டில் வரும்போது மட்டுமே நிலவின் நிழல் பூமியின் மீது விழும்.


பூமியை நிலவு சுற்றி வருவதை நாம் அறிவோம். பூமி சூரியனை சுற்றி வரும் தளமும் நிலவு பூமியை சுற்றும் தளமும் கிட்டத்தட்ட ஒன்றுதான். இதனால் பூமியை நிலவு சுற்றும்போது ஒவ்வொரு சுற்றிலும் அது பூமிக்கும் சூரியனுக்கும் இடையே கடந்து செல்லும். கடந்து செல்லும் இந்த நிகழ்வு வானியல் அமாவாசை எனப்படுகிறது. அவ்வாறு கடந்து செல்லும்போது மிகச் சரியாக நேர்கோட்டில் கடந்து சென்றால் நிலவின் நிழல் பூமியின் மீது விழும். ஆனால் ஒவ்வொரு முறையும் மிக சரியாக நேர்கோட்டில் அது கடப்பதில்லை. இதற்கு காரணம் சூரியனை பூமி சுற்றும் தளமும் பூமியை நிலவு சுற்றும் தளமும் சற்றே (5.1 டிகிரி) சாய்ந்துள்ளது. இந்த சாய்வின் காரணமாக சூரியன் பூமிக்கு இடையே கடக்கும் நிலவு ஒன்றில் இவ்விரண்டுக்கும் இடையே இருக்கும் நேர்கோட்டிற்கு சற்று மேலாக கடக்கும் அல்லது கீழாக கடக்கும். இதனால் நிலவின் நிழல் பூமியில் விழுவது தவிர்ந்துவிடும்.


இதே போல நிலவு பூமியை சுற்றும்போது சூரியனுக்கும் நிலவுக்கும் இடையே பூமி வரும். மிக சரியான நேர்கோட்டில் இவை வந்தால் சந்திர கிரகணம் ஏற்படும். மேலே சொன்னதைப் போல நேர்கோட்டில் கடக்காமல் சற்று மேலாகவோ கீழாகவோ கடக்கும்போது முழு நிலவை நாம் பார்ப்போம்.


மேலே சொன்ன விளக்கத்தில் இருந்து சூரிய கிரகணம் நடந்தால் அது அமாவாசையில் நடக்குமென்றும் சந்திர கிரகணம் நடந்தால் அது பவுர்ணமியில் நடக்கும் என்றும் விளங்கி இருப்பீர்கள்.


கிரகணம் அரிதான நிகழ்வா?


மேலே சொன்ன 5.1 டிகிரி சாய்வின் காரணமாக வருடத்திற்கு இரு முறை மட்டுமே இம்மூன்று வான்கோள்களும் நேர்கோட்டில் வரும் வாய்ப்புள்ளது. இதனை கிரகண சீசன் என்பார்கள். ஒரு கிரகண சீசனில் ஒரு சூரிய கிரகணம்  ஒரு சந்திர கிரகணம்  என குறைந்தது இரண்டு கிரகணங்களும் அதிகபட்சம் மூன்று கிரகணங்கள் ஏற்படும். மூன்று கிரகணம் ஏற்படும்போது மூன்றுமே ஒரே கிரகணமாக இருக்காது. மூன்றில் ஒன்று எதிர் கிரகணமாக இருக்கும்.


இவ்வாறு குறைந்தது ஒவ்வொரு 18 மாதங்களுக்கும் ஒருமுறை பூமியில் எங்காவது ஒரு முழு கிரகணம் ஏற்பட்டுவிடும். 6 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு பகுதி கிரகணம் ஏற்பட்டுவிடும்.


எனவே கிரகணங்கள் அரிதான நிகழ்வுகள் அல்ல. குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் நிகழ்பவையே. ஆனால் ஒரே ஊரில் இருந்துகொண்டு ஒவ்வொரு 6 மாதமும் கிரகணத்தை பார்க்க இயலாது. நமது ஊரில் சூரிய கிரகணம் அடிக்கடி ஏற்படாததால் அது அரிதான நிகழ்வென்று நாம் கருதுவிடுகிறோம். எனினும் குறைந்தது இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை பூமியின் ஒரே பகுதியில் இருந்துகொண்டு சந்திர கிரகணங்களை பார்க்க இயலும். சந்திர கிரகணங்கள் ஏற்படப்போவதை நாம் அறியாமல் இருப்பதால் அல்லது இரவில் நாம் தூங்கும் நேரத்தில் அவை ஏற்பட்டு நாம் பார்க்காமல் போய்விடுவதால் சந்திர கிரகணங்களும் அரிதானவை என்று நாம் கருதிவிடுகிறோம்.


கிரகணம் ஏற்படுவதை முன்கூட்டியே அறிய இயலாதா?


கிரகணங்கள் எல்லா காலத்திலும் ஒரு கண்கவர் காட்சியாகவும், அதிசயத்தக்க நிகழ்வாகவும், அச்சத்தை ஏற்படுத்தும் நிகழ்வாகவும் இருந்துள்ளது. எனவே இதன் காரணத்தையும் அடுத்த முறை இது எப்போது ஏற்படும் என்பதை கணிப்பதிலும் பல அறிவாளிகள் பல காலம் முயன்றார்கள். அவர்கள் விட்டு சென்ற பணியை பின் வந்தவர்கள் தொடர்ந்தார்கள். இதன் காரணமாக சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிரகண கணிப்புகள் வந்துவிட்டன. இவற்றில் துல்லியமான கணிப்பாக 1715 மே மாதத்தில் நடந்த கிரகணத்திற்கான கணிப்பு அமைந்துள்ளது. வெறும் 4 நிமிட துல்லியத்தில் Edmond Halley எனும் வானியல் ஆய்வாளர் இதனை கணித்து நிலவின் நிழல் இங்கிலாந்து மீதும் ஏற்படுத்தும் பாதையையும் வரைபடமாக வரைந்துள்ளார். இத்தகைய துல்லியமான கணக்கீடு நடந்து 300 வருடங்களுக்குப்பிறகும் கிரகணத்தை துல்லியமாக கணக்கிட இயலாது என்பது அறியாமையாகும்.


Edmond Halley யின் வரைபடம் https://en.wikipedia.org/wiki/Solar_eclipse_of_May_3,_1715


கிரகணத்தின்போது உலக்கை ஏர்கலப்பை முட்டை ஆகியவை கிரகணம் விலகும் வரை செங்குத்தாக நிற்பது எப்படி? 


கிரகணம் ஏற்படும்போது உலக்கை முட்டை போன்றவற்றை செங்குத்தாக நிறுத்துகிறார்கள். கிரகணம் விலகும் வரை அவை செங்குத்தாக நிற்பதாகவும் கிரகணம் விலகிய உடனே அவை விழுவதாகும் செய்திகளும் வீடியோக்களையும் நாம் டிசம்பர் 26, 2019ம் அன்று பார்த்தோம். இதை பெரிய அற்புதமாகவும் முன்னோர்களின் விஞ்ஞானம் என்றும் செய்தித்தாள்களில் வேலை செய்யும் சிலர் தங்கள் இனப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக எழுதினார்களே தவிர இதில் விஞ்ஞானம் ஏதுமில்லை. நிலவும் சூரியனும் நேர்கோட்டில் இருப்பதால் ஈர்ப்பு விசை அதிகரித்து அதனால் உலக்கை விழவில்லை என்றும் மற்றொரு பத்திரிக்கையில் வேலை செய்யும் ஒரு இனப்பற்றாளர் எழுதினார். அதே தமிழினத்தை சேர்ந்த நமக்கு பொய் சொல்லி இனத்தை பெருமைப்படுத்தும் தேவை இல்லை என்பதல் உண்மையை சொல்கிறோம்.


பூமியின் மீது நிலவு மற்றும் சூரியனின் ஈர்ப்பு விசை வேலை செய்வது உண்மைதான். இத்தகைய ஈர்ப்பு விசையால்தான் கடல் ஓதம் என்று நாம் அழைக்கும் தினசரி கடல் நீர்மட்ட மாறுபாடுகள் ஏற்படுகின்றன. ஓதத்திற்கு முக்கிய காரணம் நிலவு மற்றும் சூரியன் ஆகியவற்றின் ஈர்ப்பு விசை கடல்நீரை இழுத்து அதனை மேலெழும்பச் செய்வதேயாகும். அமாவாசையின்போது நிலவும் சூரியனும் கிட்டத்தட்ட நேர்கோட்டுக்கு அருகே இருக்கும் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அந்த நாளில் மதிய வேளையில் கடலுக்கு சென்றால் நீர் மட்டம் அதிகரித்து கடல் முன்னேறி இருப்பதைக் காண இயலும்.


அதே நிலவும் சூரியனும் தான் சூரிய கிரகணத்தின் போதும் நேர்கோட்டில் இருக்கின்றன. அதே அளவிலான ஈர்ப்பு விசையே கிரணத்தின்போதும் இருக்கும். ஈர்ப்பு விசை அதிகமாக இருப்பதால் உலக்கை சற்று மேலே எழும்பி அதனால் நிலை குலைந்து கீழே விழவேண்டுமே தவிர நிலையாக நிற்காது.


மேலும் மேலிருந்து சூரியனும் சந்திரனும் ஈர்த்து வைத்துள்ளதால் உலக்கை நின்றதாக வாதிட்டாலும் உலக்கைக்கு நேராக 90டிகிரியில் செங்குத்தாக சூரியன் இருந்தால் மட்டுமே நேராக ஈர்த்துப்பிடித்திருப்பது சாத்தியமாகும். சூரியன் உலக்கைக்கு நேராக இல்லாமல் சாய்ந்திருந்தால் நிச்சயமாக  உலக்கை நிற்காது. மாறாக இவர்களின் விளக்கப்படியே சாய்வாக இருக்கும் சூரியனின் ஈர்ப்புவிசை உலக்கையை செங்குத்தாக நிற்கவிடாமல் சாய்த்துவிடும். தமிழ்நாட்டில் சூரிய கிரகணம் ஏற்படும்போது சூரியன் 37 டிகிரிக்கு மேலாக செல்லவே இல்லை. பார்க்க https://eclipse.gsfc.nasa.gov/SEgoogle/SEgoogle2001/SE2019Dec26Agoogle.html. 37 டிகிரியில் இருந்து சூரியன் ஈர்த்தால் உலக்கை எப்படி நேராக நிற்கும்.


உலக்கை நின்றது எப்படி....?


நிலவு மற்றும் சூரியனின் ஈர்ப்புவிசையால் கடல் ஓதங்கள் ஏற்படுகிறதே தவிர பூமியில் வேறு எந்த பொருளின் மீதும் இவற்றின் ஈர்ப்பு விசை எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.


அந்த உலக்கையை எப்போது நிறுத்தினாலும் நிற்கும் அதற்கும் கிரகணத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. அதுபோலவே தானாக விழும் அந்த உலக்கைக்கும் கிரகணத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. சில இடங்களில் உலக்கையை குச்சியால் தட்டிவிட்டும் மக்களை ஏமாற்றியுள்ளனர். பார்க்க https://www.youtube.com/watch?v=xnH2cwpI8sc 


இந்த ஏமாற்றுவேலை இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டுமே நடக்கும் நிகழ்வல்ல. சீனாவில் தொடங்கி அமெரிக்கா வரையில் முட்டையை நிறுத்தி வைத்து இந்த சித்து விளையாட்டை விளையாண்டுள்ளனர். 


https://www.reuters.com/article/us-solar-eclipse-egg-standing/egg-standing-test-goes-viral-as-ring-of-fire-eclipse-crosses-asia-idUSKBN1YU0MZ


https://en.wikipedia.org/wiki/Egg_balancing


நன்றி: விக்கிபீடியா , time and date & நாஸா


ஆக்கம்:

பிறைவாசி.காம்