Sunday 21 March 2021

வானூர்தி வானில் மிதந்தவாறு நகராமல் இருப்பது எப்படி?

 

*வானூர்தி வானில் மிதந்தவாறு நகராமல் இருப்பது எப்படி?*

வானூர்தி (aero plane) நிலையத்திற்கு அருகே வாகங்களில் பயணம் செய்பவர்கள் அடிக்கடி காணும் காட்சிதான் நகராமல் ஒரே இடத்தில் வானூர்திகள் வானில் மிதக்கும் காட்சி. பொதுவாக இதுபோன்ற இயற்கை நிகழ்வுக்கான காரணங்களை இணையதளங்களில் தேடும்போது கிடைக்கப்பெறுவோம். ஆனால் இந்த ஒரு நிகழ்வுக்கான காரணத்தை மட்டும் நம்மால் இணையதளங்களில் கண்டுகொள்ள இயலவில்லை. ஆகவே இதன் காரணத்தை நாமே கண்டுபிடிக்க களமிறங்கினோம்.

முதலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று வானூர்திகள் முன்னோக்கி ஓடுவதால் மட்டுமே மேல் நோக்கி பறக்கும் உந்துவிசையும் கிடைக்கிறது. ஹெலிகாப்டர்களைப் போல ஒரே இடத்தில் மிதந்தவாறு வானூர்திகளால் நிற்க இயலாது. இதனை முதலில் மனதில் நிறுத்திக்கொள்ளவேண்டும்.

நம்முடைய ஆய்வில் நாம் குறிப்பெடுத்தவை:-

1. வாகனத்தில் செல்பவர் மட்டுமே வானூர்தி நகராமல் மிதப்பதைக் காண்பார். அதே வேளையில் நிலத்தில் நிற்பவர் வானூர்தி நகர்வதையே காண்பார்

2. வாகனத்தில் செல்பவர் வானூர்தி பறக்கும் திசைக்கு எதிர் திசையில் பயணிக்கும்போது மட்டுமே வானூர்தி நகராமல் மிதப்பதாகக் காண்பார். வானூர்தி பறக்கும் அதே திசையில் நகர்பவர் வானூர்தி நகர்வதையே காண்பார்

3. வானூர்தி இறங்கும்போது, ஏறும்போது அல்லது தாழ்வாக பறக்கும்போது மட்டுமே இந்த காட்சி ஏற்படுகிறது. அதுவும் வானூர்தியை பார்க்கும்போது சுற்றிலும் கட்டிடம், மரங்கள் போன்ற reference frame உடன் சேர்த்து வானூர்தியை பார்க்கும்போது மட்டுமே இந்த காட்சி ஏற்படுகிறது. சுற்றிலும் வேறு காட்சிகளைத் தவிர்த்து reference frame எதுவுமில்லாமல் வானூர்தியை மட்டுமே பார்க்கும்போது அது நிலையாக மிதப்பதைப் போன்ற காட்சி ஏற்படுவதில்லை.

இந்த மூன்று குறிப்புகளையும் நன்றாக கவனித்தால் வானூர்தி நிலையாக மிதப்பது போன்ற காட்சி ஒரு தோற்றப்பிழை (optical illusion) என்பதை அறிந்துகொள்ள இயலும். அதை மேற்கொண்டு விளக்கங்களை வாசிக்காமல் இப்போதே நீங்கள் கண்டுபிடித்துவிட்டால் நீங்கள் ஓர் அறிவியல் ஆர்வலர்தான்.

நமது கண்கள் மற்றும் பார்வை மண்டலத்தைப் பொறுத்தவரை ஒரு பொருளை மட்டுமே பார்த்து ஒரு முடிவுக்கு வராது. அந்த பொருளை சுற்றிலும் இருக்கும் மற்ற பொருட்களை reference frame ஆகக் கொண்டே பல விஷயங்களை நமது பார்வை முடிவு செய்கிறது. உதாரணமாக Eiffel towerஐ கையில் வைத்திருப்பதைப் போன்ற படங்களை பலர் எடுத்திருப்பதை நாம் பார்த்திருப்போம். Eiffel towerஐ சுற்றிலும் இருக்கும் reference frameஐ கைகளால் மறைத்துவிடுவதால் Eiffel towerன் உயரத்தை நம்மால் அந்த படத்தில் உணர இயலாது. இணைக்கப்பட்டுள்ள படத்தைப் பாருங்கள். படகு கடலில்தான் இருக்கிறது. reference frame மறைக்கப்படுவதால் கண்ணாடி குடுவைக்குள் படகு இருப்பதைப் போன்ற தோற்றப்பிழை ஏற்படுகிறது. ஒரு பொருளின் அளவு (எனும் size perception), ஒரு பொருள் தூரமாக இருக்கிறதா அருகில் இருக்கிறதா (எனும் depth perception), போன்ற அனைத்தையும் அதனை சுற்றிலும் இருக்கும் காட்சிகளைக் கொண்டே நமது பார்வை மண்டலம் முடிவு செய்கிறது.

இதனால்தான் ஆய்வுகள் தொடர்பாக கிடைக்கப்பட விஷயங்களை படம் எடுத்து அனுப்பும்போது reference க்காக ஏற்கனவே நமக்கு நன்கு பழக்கமுள்ள ஒரு பொருளை அருகில் வைத்து படமெடுப்பார்கள். எடுத்துக்காட்டிற்காக https://www.priestsforlife.org/resources/photosbyage/weeks31.jpg இந்த படத்தைப் பாருங்கள். கொல்லப்பட்ட குழந்தையின் கை கால்களின் அளவுகளை நாம் விளங்கிக்கொள்ள ஏதுவாக நமக்கு பழக்கமுள்ள பொருளை அருகில் வைத்துள்ளார்கள். இல்லையேல் நமது பார்வையால் அதன் உண்மையான அளவை புரிந்துகொள்ள இயலாது. ஆக நமது பார்வைத் திறனை பொறுத்தவரை சுற்றிலிருக்கும் காட்சிகள் (reference frame) மிகவும் முக்கியம்.

இனி வானூர்திக்கு வருவோம். வானூர்தி பறக்கும் திசைக்கு எதிர் திசையில் வாகனத்தில் பயணிப்பவருக்கு மட்டுமே இந்த தோற்றப்பிழை ஏற்படுகிறது. அதற்குக் காரணம் நாம் வாகனத்தில் பயணிக்கும்போது வாகனத்திற்கு வெளியே கட்டிடங்களும் மரங்களும் பின்னோக்கி ஓடுவதைக் காண்போம். இப்போது வானூர்தியும் நாம் பயணிக்கும் திசைக்கு எதிர் திசையில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது reference frame ஆன மரங்களும் கட்டிடங்களும் நம் பார்வையை பொறுத்தவரை பின்னோக்கி ஓடுகின்றன. நாம் பார்க்கும் வானூர்தியும் பின்னோக்கி பறக்கிறது. என்னதான் கண்களுக்கு மரங்களும் கட்டிடங்களும் பின்னோக்கி ஓடுவதாக தெரிந்தாலும் நமது மூளையைப் பொறுத்தவரை reference frame ஆன மரங்களும் கட்டிடங்களும் நிலையானவை. ஆக reference frame ஐ நிலையானதாக கருதும் மூளை வானூர்தியையும் நிலையானதாக கருதிவிடுகிறது. இதனை சோதித்துப்பார்க்க அடுத்த முறை வானூர்தி நிலையான மிதப்பதைப் போன்ற தோற்றம் ஏற்படும்போது உடனடியாக reference frame ஐ மறைத்துவிட்டுப்பாருங்கள். உங்கள் கைகளாலோ அல்லது தலையை தாழ்த்துவதன் மூலம் காட்சியில் இருக்கும் மரங்கள், கட்டிடங்கள் ஆகியவை வாகனத்தின் ஜன்னலால் மறைக்கப்படும்படி செய்வதாலோ reference frame ஐ மறைத்துவிட்டுப்பாருங்கள், வானூர்தி நகர்வதைக் காண இயலும். உடனடியாக வாகனத்தை நிறுத்திப் பார்த்தாலும் வானூர்தி நகர்வது தெரியும்.

மேலும் நாம் கவனிக்காத மற்றொரு காட்சிப்பிழை. வானூர்தியின் எதிர்திசையில் நாம் பயணிக்கும்போது அது நிலையாக மிதப்பதைப் போன்ற காட்சிப் பிழை ஏற்படுவதைப் போல வானூர்தியின் திசையில் நாம் பயணிக்கும்போது வானூர்தியின் இயல்பான வேகத்தை விட இருமடங்கு வேகத்தில் அது பறப்பதைப் போன்ற தோற்றப்பிழை ஏற்படும். அடுத்த முறை இதையும் கவனியுங்கள்

முஹம்மத் பீர்

www.piraivasi.com

21/03/2021