Sunday 1 May 2022

கணிப்பை ஏற்று சாட்சிகளை நிராகரிப்பது ஏன்?

 *பிறை விஷயத்தில் கணிப்பை ஏற்றுக்கொள்ளாத நீங்கள் பிறை சாட்சி விஷயத்தில் கணிப்பை ஏற்றுக்கொண்டு சாட்சிகளை நிராகரிப்பது ஏன்?*

 

இன்று இலங்கையில் பிறை தெரிவதற்கு அறவே வாய்ப்பில்லை. எனவே இன்று பிறை பார்த்ததாக யாராவது சொன்னால் அது உண்மையல்ல அந்த சாட்சியத்தை ஏற்றுகொள்ளக் கூடாது என்கிறீர்கள். விஞ்ஞானத்தை ஏற்றுக்கொண்டு முஸ்லிம்களின் சாட்சியை நிராகரிக்கிறீர்கள். இதே போல பிறை தெரிய வாய்ப்புள்ளது என்று விஞ்ஞானம் சொல்லும் நாளில் பிறை தெரியாமல் போனாலும் விஞ்ஞானத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே. ஒன்றில் விஞ்ஞானத்தை ஏற்றுக்கொள்கிறீர்கள் மற்றொன்றில் விஞ்ஞானத்தை நிராகரிக்கிறீர்கள். இதுவே முழுமையான கேள்வி. இதில் இரண்டு கேள்விகள் உள்ளன. இவற்றை இரண்டாக பிரித்துப் பார்க்க வேண்டும்.

 

பிறை விஷயத்தில் கணிப்பை ஏன் எடுக்கக்கூடாது?

 

பிறை என்பதே கண்களுக்கு தெரியும் ஒரு காட்சி. கண்களால் பார்க்கும் அந்த காட்சிக்குப் பெயர்தான் பிறை. உதாரணாமாக சூரிய உதயம் என்ற சொல் சூரியன் அடிவானில் எழுந்து வருவதை குறிப்பதாகும். ஆனால் சூரியன் உதிப்பதில்லை என்று விஞ்ஞானம் கண்டுபிடித்துவிட்டது. பூமி சுழல்வதால் சூரியன் உதிப்பதைப் போன்ற தோற்றம் ஏற்படுகிறது. விஞ்ஞானம் இவ்வாறு தெளிவுபடுத்திவிட்ட காரணத்தால் நாம் சூரிய உதயம் என்ற வார்த்தையை மாற்றிவிடவில்லை. சூரிய உதயம் என்று சொல்பவரை முட்டாள் என்றும் சொல்வதில்லை. சூரிய உதயம் எனும் வார்த்தயை அதற்குரிய இடத்தில் அதற்குரிய பொருளில் பார்க்கிறோம். அதே போல ஹிலால் (பிறை) எனும் வார்த்தைக்கு மாதத்தில் முதன் முதலில் கண்ணுக்கு தெரியும் நிலவின் ஒளி என்று பொருளாகும். பிற்கால விஞ்ஞானிகள் பிறை என்கிற வார்த்தைக்கு அமாவாசைக்கு மறு வினாடி என்ற பொருளை கொடுத்துவிட்டனர். அதன் தவறை உணர்ந்து அவர்களே பிற்காலத்தில் Astronomical New moon என்று அதற்கு பெயர் மாற்றமும் செய்தனர். இருந்த போதிலும் கண்ணுக்கு தெரியாத அந்த ஒளியை மக்கள் பிறை என்று அழைகின்றனர்.

 

பிறை என்பதே கண்ணுக்கு தெரிவதுதான்.

 

அடுத்ததாக... கண்ணுக்கு தெரியும் நிலவின் முதல் ஒளியான ஹிலாலை பார்த்தே மாதத்தை துவங்குமாறு நபி ஸல் அவர்கள் நமக்கு கட்டளை இட்டுள்ளார்கள். அதை கண்ணால் பார்க்காமல் மாதத்தைத் துவங்காதீர்கள் என்றும் கட்டளை இட்டார்கள். இந்த அடிப்படையிலும்  பிறை என்ற வார்த்தையின் வரைவிலக்கணத்தின் அடிப்படையிலும் பிறையை கண்களால் பார்த்தே மாதத்தை துவங்கவேண்டும்.

 

சாட்சிகளின் விஷயத்தில் மட்டும் ஏன் கணிப்பை ஏற்கிறீர்கள்?

 

அல் ஹாரிஃத் இப்ன் ஹாதிப் (ரலி) கூறியதாவது:-

 

*(பிறை) பார்த்தலைக் கொண்டு நாங்கள் வணக்கங்களை மேற்கொள்ளவேண்டும் என்றும், அது எங்களுக்கு தெரியவில்லை என்றால் நீதமான இருவர் சாட்சி கூறினால் அந்த இருவரின் சாட்சியின் அடிப்படையில் நாங்கள் வணக்கங்களை மேற்கொள்ளவேண்டும் என்றும் என நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் உறுதி மொழி எடுத்தார்கள்.*

 

(இதனைக் கேட்டுகொண்டிருந்த) அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) *"இதைத்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு கட்டளையிட்டார்கள்”* என்று கூறினார்.

 

நூல் : அபூதாவூத் (2338)

 

இதுதான் சாட்சிகள் தொடர்பான ஸஹீஹ் ஹதீஸ். (சாட்சி கலிமா சொன்னால் போதும் அல்லது முஸ்லிமாக இருந்தால் போதும் என்று வரும் அறிவிப்புகள் அனைத்தும் வலுவற்றவை) இரண்டு மனிதர்கள் சாட்சி சொல்லவேண்டும் என்று இங்கே தெளிவாக இருக்கிறது. இதன் மூலம் நான்கு கண்கள் பிறையைப் பார்த்திருக்க வேண்டும் என்று மீண்டும் ஒரு முறை உறுதி செய்யப்படுகிறது. இங்கே சாட்சிகள் விஷயத்தில் அவர்கள் முஸ்லிம்களாக இருந்தால் போதும் என்று கலிமா சொன்னால் சாட்சிகளை ஏற்க வேண்டுமென்றோ இல்லை. மாறாக அந்த இருவரும் நீதமான சாட்சிகளாக இருக்க வேண்டும் என்று உள்ளது.

 

நம்மவர்களோ பிறை பார்த்துவிட்டேன் என்று ஒருவர் சொன்னால் போதுமானது அவர் முஸ்லிமாக இருக்கும்பட்சத்தில் அவரிடம் எந்த கேள்வியும் கேட்கக்கூடாது அவரின் சாட்சியத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிறார்கள். இவர்களின் தவறான வாதத்திற்கு மேலுள்ள ஹதீஸ் தக்க மறுப்பாக இருக்கிறது. பொதுவாகவே சாட்சிகள் என்றாலே விசாரணைக்குரியவர்கள் ஆகிவிடுகிறார்கள். அவர்களை விசாரித்தே  ஆகவேண்டும். அனால் இங்கே அவர்கள் நீதமானவர்களாக இருக்க வேண்டும் எனும் கூடுதல் சட்டமும் சொல்லப்படுகிறது. எனில் அந்த சாட்சிகளை தீர விசாரித்த பிறகே ஏற்றுக்கொள்ளவேண்டும்.

 

சாட்சிகளை நிராகரிக்க நாம் விஞ்ஞானத்தை பயன்படுத்துகிறோமா?

 

இது தவறான சிந்தனையாகும். எல்லா மாதமும் பிறை பார்ப்பவர் சில அடிப்படை விஷயங்களை அறிந்திருப்பார். மேடையில் பேசும் மௌலவிகளோ, சாட்சிகளை ஏற்று பெருநாளை அறிவிக்கும் அதிகாரிகளோ பிறை பார்க்க சென்றிருக்கவே மாட்டார்கள். தங்களது மொபைல் ஃபோன்களிலும் லேப்டாப்புகளிலும் தாங்கள் வாசிப்பதைக் கொண்டு மேடையில் வரிந்து கட்டுகிறார்கள்.


சூரியன் சுட்டெரிக்கும் நடுப்பகலில் பவுர்ணமியை பார்த்தேன் என்று ஒருவர் சொன்னால் அவருக்கு புத்தி பேதலித்துவிட்டது என்று சொல்லிவிடுவோம். ஒரு முஸ்லிம் பார்த்ததாக சொன்னதை விஞ்ஞானத்தைக் கொண்டு நிராகரிக்கிறீர்களா என்று யாருமே உணர்ச்சி வசப்படமட்டோம்.

 

அதே போல நள்ளிரவில் ஒருவர் சூரிய கிரகணத்தை பார்த்ததாக சொல்லி உங்களை எழுப்பி கிரணக தொழுகைக்கு அழைக்கிறார். அவரை நீங்கள் என்னவென்று சொல்வீர்கள்? அவர் முஸ்லிம் என்பதால் அவர் சொன்னதை ஏற்றுகொள்வீர்களா? நீங்கள் அதனை மறுக்கும்போது ஒரு முஸ்லிம் சொன்ன விஷயத்தை எப்படி மறுப்பீர்கள் என்று யாராவது கேட்டால் என்ன சொல்வீர்கள்?

 

நண்பகலில் சந்திர கிரகணம் தெரியாது. இந்த அறிவை விஞ்ஞானம் என்று யாரும் சொல்ல மாட்டோம். நள்ளிரவில் சூரிய கிரகணம் தெரியாது இதையும் விஞ்ஞானம் என்று யாரும் சொல்ல மாட்டோம். இதே போல சில அறிவு சார்ந்த அனுபவம் சார்ந்த விஷயங்கள் உள்ளன. குர்ஆன் நெடுகிலும் வானத்தில் உள்ள அல்லாஹ்வின் சான்றுகளைப் பற்றி அல்லாஹ் சிந்திக்க சொல்கிறான்(அ.கு-1). அவ்வாறு சிந்திப்பவர் நாம் மேலே சொன்ன உதாரணங்களை போல சில உண்மைகளை விளங்கிகொள்வார்.

 

- சூரியன் மறைவதற்கு முன்னர் பிறை தெரியாது

- நிலவு மறைந்த பின்னர் பிறை தெரியாது

 

இந்த இரண்டு அடிப்படையும் எல்லோருக்கும் விளங்கும் சாதாரணமானவை. இவற்றை பெரிய விஞ்ஞானம் என்று யாரும் சொல்ல மாட்டோம். ஆக! மக்ரிபுக்கு முன்னதாக பிறை பார்த்ததாக ஒருவர் சொன்னால் அவரின் சாட்சியத்தை நிகாரகரித்தே ஆகவேண்டும். அவர் பிறையை பார்க்கவில்லை. அவர் நீதமான சாட்சியல்லர். நிலவு மறையும் நேரத்தை அறிவதில் இன்று எந்த சிரமும் இல்லை. ஒருவர் பிறை பார்த்தாக சொன்ன நேரம் நிலவு மறைந்த நேரத்திற்கு பின்னுள்ள நேரமெனில் அவரின் சாட்சியத்தையும் நிகாரகரித்தே ஆகவேண்டும். அவரும் பிறையை பார்க்கவில்லை. அவரும் நீதமான சாட்சியல்லர். இவ்வாறு நாம் சாட்சியத்தை நிராகரிக்கும்போது விஞ்ஞானத்தை பயன்படுத்திவிட்டான் என்று அழுபவர்களை உலகம் அறியாதாவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

 

அடுத்ததாக... மொபைல் ஃபோன்களிலும் லேப்டாப்புகளிலும் இருந்துகொண்டு பிறையை பார்க்காமல் நேரடியாக மாதந்தோறும் பிறை பார்ப்பவர்கள் பின்வரும் தகவல்களை அறிந்திருப்பார்கள்...

 

- சூரியன் மறைந்த முதல் 20 நிமிடங்களுக்கு பிறை கண்களுக்கு தெரியாது

- சூரியன் மறைந்து 45 நிமிடத்திற்குள் நிலவு மறையும் நாளில் பிறை கண்களுக்கு தெரியாது.

 

சூரியன் மறைந்த பிறகும் அடிவானம் வெளிச்சமாகவே இருக்கும். அப்போது அடிவானில் நிலவு இருந்தால் கூட கண்களுக்கு தெரியாது. சூரியன் மறைந்து மெல்லமெல்ல அதன் ஒளி அடிவானிலிருந்து குன்றி சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகே பிறையை பார்க்க இயலும். இதை மாதாமாதம் பிறை பார்ப்பவர் அறிவர். ஆக இந்த 20 நிமிடத்திற்கும் நிலவு மறையாமல் இருக்க வேண்டும். இந்த 20 நிமிடத்திற்குள் நிலவு மறைந்துவிட்டால் நிச்சயமாக பிறை தெரியாது. தொடர்ந்து பிறை பார்ப்பவர் இதை அறிவர். குளிரூட்டப்பட்ட அறையில் கணினி முன்னர் அமர்ந்திருப்பவருக்கு இது தெரியாது.


சூரியன் மறைந்ததில் இருந்து சுமார் 20 நிமிடங்களுக்கு மேற்கு அடிவானத்தில் எதையும் பார்க்க முடியாது. சூரியன் மறைந்து 20 நிமிடத்திற்குள் சந்திரன் மறைவதாக இருந்தால் நிச்சயமாக பிறை பார்க்க முடியாது என்று அடித்துக்கூறலாம்.

 

20 நிமிடங்களுக்குப் பிறகு ஒளிச் சிதறல் குறையும்போது அடிவானத்தை ஓரளவுக்கு தெளிவாக பார்க்க முடியும்.

 

உதாரணமாக, சூரியன் மறைந்ததில் இருந்து 45 நிமிங்கள் கடந்த பிறகு சந்திரன் மறைவதாக வைத்துக்கொண்டால், சூரியன் மறைந்ததில் இருந்து 20 நிமிடங்கள் கடந்த பிறகு அதிகபட்சம் 15 நிமிடத்திற்குள் பிறை தெரிய வாய்ப்பு உண்டு.


மேலே நாம் சொன்ன தரவுகள் அனைத்தும் 30ம் இரவில் தெரியும் மெல்லிய பிறைக்கு உரியதாகும். மேலும் வானிலை மிகவும் சாதகமாக இருக்கும் பட்சத்தில் பிறை தெரியும் சாத்தியக்கூறுகள் இவை. வெப்பான ஈரப்பதம் மிக்க ஒருநாளில் 45 நிமிடம் வானில் நிலவு இருந்தால்கூட ஒளிச்சிதறல் காரணமாக கண்களுக்கு மறைக்கப்படும் வாய்ப்புள்ளது.

 

ஆக, 35 நிமிடத்திற்குள்ளாக மறையும் நிலவை பார்த்தேன் என்று ஒருவர் சொன்னால் அதை நம்ப முடியாது. நிச்சயமாக 20 நிமிடத்திற்குள் மறையும் நிலவை பார்க்கவே இயலாது. அதே போல 40 நிமிடத்தில் மறையும் நிலவை முதல் 10 நிமிடத்தில் பார்த்தேன் என்று சொன்னாலும் நம்ப இயலாது. அவ்வாறு ஒருவர் பார்த்ததாக சொன்னால் அது உண்மையல்ல. அவர் நீதமான சாட்சியல்லர்.

 

ஆக பிறை தெரிய வாய்ப்பில்லை என்று நாம் சொல்வது விஞ்ஞானமல்ல சாதாரண உலக அறிவு. நள்ளிரவில் சூரியனைப் பார்த்ததாக ஒருவர் சொன்னால் அவரை பொய்யர் என்போம் அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவர் என்போம். அதே போன்ற சாதாரண நடைமுறை அறிவுதான் சில காரணிகளைக் கொண்டு பிறை தெரிய வாய்ப்பில்லை என்று சொல்வது. இதை விஞ்ஞானம் என்று பூதாகரமாக பார்ப்பது அறிவுடைமையல்ல.


அல்லாஹ் நாடினால் பிறையைக் காட்டுவான் உங்க விஞ்ஞானம் எல்லாம் பொய் என்றொரு கூட்டம் சொல்கிறது. அல்லாஹ் நாடினால் நள்ளிரவில் சூரியனைக் காட்டுவன் என்று இக்கூட்டம் சொல்லுமா? அல்லாஹ் நாடினால் நண்பகலில் முழுநிலவைக் காட்டுவன் என்று இந்தக் கூட்டம் சொல்லுமா? இவர்கள் சொன்னாலும் சொல்வார்கள். ஆனால் வஹி அவ்வாறு சொல்லவில்லை. சூரியனையும் சந்திரனையும் ஏற்கனவே அல்லாஹ் திட்டமிட்டு வைத்துவிட்டான் (அ.கு-2). அவை முடிவு நேரம் நேரங்கும்போதுதான் மாறும் என்றும் சொல்லிவிட்டான் (அ.கு-3). இந்த அடிப்படையில் நிலவு & சூரியனின் இயக்கத்தை அல்லாஹ் மாற்றாதபோது பிறை தெரியாத நாட்களில் அல்லாஹ் நாடினால் பிறையைக் காட்டுவான் என்று சொல்வது அறிவுடைமையல்ல.

 

5 நிமிடம் 10 நிமிடங்கள் வானில் பிறை இருந்தது எனும் வாதம்...

 

குளிரூட்டப்பட்ட அறைகளில் லேப்டப்புகளின் முன்னே அமர்ந்திருக்கும் அறிஞர்கள் 5 நிமிடம் வானில் நிலவு இருந்தது 10 நிமிடம் வானில் நிலவு இருந்தது அதை பார்க்க இயலாது என்று வாதிடுகின்றனர். சில அறிஞர்கள் 1 நிமிடம் வானில் நிலவு இருந்தாலே அதன் ஒளிக்கீற்று வானைக் கிழித்துக்கொண்டு பூமியை அடையும் என்றும் வாதிடுகின்றனர்.இவை அறியாமை வாதங்களாகும். இந்த அறிஞர்கள் லேப்டாப்பை மூடி வைத்துவிட்டு ஒவ்வொரு மாதமும் 30 இரவில் பிறை தேடச்சென்றாலொழிய பிறையைப் பற்றி அறிந்துகொள்ளமாட்டார்கள்.

 

சூரியன் மறைந்து 5-10 நிமிடத்தில் நிலவு மறைந்தால் நிச்சயமாக பிறை கண்களுக்கு தெரியாது. ஆனால் இந்த அறிஞர்கள் “5 நிமிடம் பிறை காட்சியளித்தது, 10 நிமிடம் பிறை காட்சியளித்தது” என்று வாதிடுகின்றனர். இவர்களுக்கு நாம் சொல்லிக்கொள்ளும் பதில் இது மட்டுமே “தயவு செய்து மாதாமாதம் பிறை பார்க்க செல்லுங்கள்”.

 

பிறை பார்க்கும் விஷயத்தைப் பொறுத்தவரை, பிறை என்பதே கண்ணுக்கு தெரிவதுதான் அதை கண்ணால்தான் பார்க்க வேண்டும். அவ்வாறே நபி ஸல் அவர்கள் கட்டளை இட்டுள்ளார்கள்.

 

ஆனால் சாட்சியத்தை விசாரிக்கும் விஷயம் முற்றிலும் வேறுபட்டது. இங்கே சாட்சியை விசாரித்ததில் எனும் நிர்வாகவியல் அமுல்படுதப்படுமே தவிர இது பிறை தொடர்பானதல்ல. பிறை பார்த்ததாக இருவர் சாட்சி சொல்கிறார்கள் என்று வைப்போம். இங்கே இருவரும் உண்மை சொல்கிறார்களா இருவரும் நீதமான சாட்சியா என்ற விசாரணை சாட்சியை விசாரித்ததில் என்ற அடிப்படையில் பார்க்கப்பட வேண்டும். எந்த இடத்தில் பிறை பார்த்தார் எந்த நேரத்தில் பிறை பார்த்தார்கள், சூரியன் மறைந்த இடத்திற்கு வலப்புறமாக பிறை தெரிந்ததா அல்லது இடப்புறமாக பிறை தெரிந்ததா என்பன போன்ற கேள்விகள் மூலம் அவர்களின் நீததன்மையை உறுதிப்படுத்துவதில் எந்த தவறும் இல்லை. இதை பூதாகரமாக்கி எதிர்ப்பவர்கள் லேப்டாப் அறிஞர்களே.

 

பிறை பார்த்தலுக்கு நாம் கணிப்பை ஏற்கவில்லை. பிறையை நிராகரிப்பதற்கும் நாம் கணிப்பை ஏற்கவில்லை. சாட்சி நீதமானதா என்ற விசாரணைக்காக நாம் ஏற்கனவே பிறை பார்த்து பெற்ற அனுபவத்தை பயன்படுத்துகிறோம். பிறை பார்த்தல் விஷயத்தை பிறை பார்க்கும் சுன்னத்தாகவும், சாட்சியை விசாரிக்கும் விஷயத்தை நிர்வாகவியலாகவும் பிரித்துப் பார்க்க வேண்டும். அவ்வாறு பிரித்துப் பார்த்தால் கேள்விக்கான விடை கிடைத்துவிடும்.

 

10 பேர் பார்த்தார்களே ஊரே பார்த்ததே...

 

நாம் மேலே சொன்ன காரணிகளின் அடிப்படையில் பிறை தெரிய அறவே வாய்ப்பில்லாத நாட்களில் பிறையை 10 பேர் பார்த்தார்கள் என்றும் ஊரே பார்த்தது என்றும் தகவல்கள் வரும். “10 பேரும் பொய் சொல்வார்களா? ஊரே பொய் சொல்லுமா?” என்றெல்லாம் கேட்பார்கள். இது போன்றுதான் ஒவ்வொரு வருடமும் காப்பாட்டில் பலர் பிறை பார்த்தார்கள் என்று செய்தி வரும். நெருங்கிச்சென்று பார்த்தபோது ஒருவரின் பொய்யை உண்மை என்று நம்பி பலர் பரப்பியதால் பலர் பார்த்தது போலவும் ஊரே பார்த்தது போலவும் மாயை ஏற்பட்டது.


எதைச் சொன்னாலும் வஹி ஆதாரம் கேட்கும் கூட்டத்திற்கு இதோ வஹி ஆதாரம்:-

 

அடிக்குறிப்பு-1

45:3. நம்பிக்கை கொள்வோருக்கு வானங்களிலும், பூமியிலும் பல சான்றுகள் உள்ளன.

12:105. வானங்களிலும், பூமியிலும் எத்தனையோ சான்றுகள் உள்ளன. அவற்றைப் புறக்கணித்தே அவர்கள் கடந்து செல்கின்றனர்.

 

அடிக்குறிப்பு-2

சூரியனும், சந்திரனும் கணக்கின்படி இருக்கின்றன. (அல் குர்ஆன்-55:5)

சூரியனையும் சந்திரனையும் கணக்காக அமைத்தான். (அல் குர்ஆன்-6:69)

இரவு, பகல், சூரியன், சந்திரன் ஆகியவற்றை உங்களுக்காக அவன் பயன்படச் செய்தான். (ஏனைய) நட்சத்திரங்களும் அவனது கட்டளைப்படி வசப்படுத்தப்பட்டுள்ளன. விளங்கும் சமுதாயத்துக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல் குர்ஆன்-16:12)

 

அடிக்குறிப்பு-3

36:40. சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது; இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.

75:6. “கியாம நாள் எப்போழுது வரும்?” என்று (ஏளனமாகக்) கேட்கிறான்.

75:9. சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்படும்போது.


பிறை தெரியாது என்பதை கணிக்க இயலும் பிறை தெரியும் என்பதை கணிக்க இயலாதா? இதென்ன அநியாயம்? >> https://www.piraivasi.com/2022/05/01-01.html


*******************

நன்றி: david blanchard