Thursday 3 November 2022

QSF17. கருவறையில் அன்னியப் பொருட்கள் உள்ளனவா?

 

இப்படியும் சில தப்ஸீர்கள்- ஜைனுலாபுதீன் தப்ஸீர்


ஜைனுலாபிதீன் அவர்களின் தப்சீரில் அறிவியலின் பெயரால் சொல்லப்பட்டிருக்கும் பிழையான கருத்துக்களை ஆய்வு செய்வதற்காக 2017ம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு சமர்ப்பித்த ஆய்வறிக்கைகள்


QSF ஆய்வுக்குழு


அறிமுகத்தை வாசிப்பது இந்த தொடரை புரிந்துகொள்ள உதவும். அறிமுகத்தை வாசிக்க https://www.piraivasi.com/2022/11/zina-ul-abdeen-intro.html


 QSF17 கருவறையில் அன்னியப் பொருட்கள் உள்ளனவா?


144. அன்னியப் பொருளை ஏற்றுக் கொள்ளும் கருவறை


13:8   اَللّٰهُ يَعْلَمُ مَا تَحْمِلُ كُلُّ اُنْثٰى وَمَا تَغِيْضُ الْاَرْحَامُ وَمَا تَزْدَادُ ‌ؕ وَكُلُّ شَىْءٍ عِنْدَهٗ بِمِقْدَارٍ‏ 

13:8. ஒவ்வொரு பெண்ணும் (கருவறையில்) சுமப்பதையும், கருவறைகள் சுருங்குவதையும், விரிவடைவதையும் அல்லாஹ் அறிகிறான். ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் நிர்ணயிக்கப்பட்ட அளவு உள்ளது.


22:5   يٰۤـاَيُّهَا النَّاسُ اِنْ كُنْـتُمْ فِىْ رَيْبٍ مِّنَ الْبَـعْثِ فَاِنَّـا خَلَقْنٰكُمْ مِّنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُّـطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِنْ مُّضْغَةٍ مُّخَلَّقَةٍ وَّغَيْرِ مُخَلَّقَةٍ لِّـنُبَيِّنَ لَـكُمْ‌ ؕ وَنُقِرُّ فِى الْاَرْحَامِ مَا نَشَآءُ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى ثُمَّ نُخْرِجُكُمْ طِفْلًا ثُمَّ لِتَبْلُغُوْۤا اَشُدَّكُمْ ‌ۚ وَمِنْكُمْ مَّنْ يُّتَوَفّٰى وَمِنْكُمْ مَّنْ يُّرَدُّ اِلٰٓى اَرْذَلِ الْعُمُرِ لِكَيْلَا يَعْلَمَ مِنْۢ بَعْدِ عِلْمٍ شَيْــًٔـا‌ ؕ وَتَرَى الْاَرْضَ هَامِدَةً فَاِذَاۤ اَنْزَلْنَا عَلَيْهَا الْمَآءَ اهْتَزَّتْ وَرَبَتْ وَاَنْۢبَـتَتْ مِنْ كُلِّ زَوْجٍۢ بَهِيْجٍ‏ 

22:5. மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் (உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம்.) உங்களை மண்ணாலும், பின்னர் விந்துத் துளியாலும், பின்னர் கருவுற்ற சினைமுட்டையாலும், பின்னர் முழுமைப்படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப்படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலைபெறச் செய்கிறோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்னர் நீங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். உங்களில் கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். அறிந்த பின் எதையும் அறியாமல் போவதற்காக தள்ளாத வயது வரை கொண்டு செல்லப்படுவோரும் உங்களில் உள்ளனர். பூமியை வறண்டதாகக் காண்கிறீர். அதன் மீது நாம் தண்ணீரை இறக்கும்போது, அது செழித்து வளர்ந்து அழகான ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்கிறது.


இந்த வசனங்கள், (13:8, 22:5) மிகப்பெரும் அறிவியல் உண்மையைக் கூறுகின்றன.


பொதுவாக மனித உடலுக்கு என சில தனித் தன்மைகள் உள்ளன. தனக்குள் அன்னியப் பொருள் எதனையும் அது ஏற்றுக் கொள்ளாது என்பது அவற்றுள் ஒன்றாகும். இதற்கு உதாரணமாக கண்களைக் குறிப்பிடலாம். கண்களில் ஏதேனும் தூசுகள் விழுந்து விட்டால் அதை எப்படியாவது வெளியேற்றவே கண்கள் முயற்சிக்கும்.


இது போலவே பெண்களின் கருவறைகளும் அமைந்துள்ளன. ஆயினும் கருவறை அன்னிய உயிரைத் தனக்குள் ஏற்றுக் கொள்கிறது. பல மாதங்கள் அதை வளர்த்து திடீரென அதை வெளியேற்ற முயற்சிக்கிறது. இவ்வாறு முயற்சிக்கும்போது கருவறை சுருங்கி விரிகின்றது. இதன் காரணமாகவே பிரசவ வேதனை ஏற்படுகிறது. இதனைத்தான் இவ்வசனம் கூறுகிறது.


"ஒவ்வொரு பொருளும் குறிப்பிட்ட கால நிர்ணயப்படியே அவனிடத்தில் உள்ளன'' என்ற சொற்றொடர் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதாகும். இயற்கைக்கு மாறாக அன்னியப் பொருளை ஏற்றுக் கொண்டிருந்த கருவறை ஒரு குறிப்பிட்ட நேரம் வந்ததும் ஏன் வெளியேற்றுகிறது என்பதற்கு இன்றுவரை காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை.


அன்னியப் பொருளைக் கருவறை பல மாதங்களாக ஏற்றுக் கொண்டது எப்படி? என்ற கேள்விக்கும் இது வரை விடையில்லை.


இயற்கைக்கு மாறாக இறைவன் தனது வல்லமையைப் பயன்படுத்தி ஒரு காலக்கெடுவை நிர்ணயிக்கிறான். அந்த நிர்ணயத்தின்படியே நீண்டகாலம் அன்னியப் பொருளை கருவறை சுமந்து கொண்டிருக்கிறது என இந்தச் சொற்றொடர் விளக்குகிறது.


எலும்புகள் முறிந்து விட்டால் ஸ்டீல் தகடுகளை வைக்கிறார்கள். அது வெளியே வருவதில்லை. அன்னியப் பொருளை உடல் ஏற்றுக் கொள்ளும் என்பதற்கு இது ஆதாரமாக உள்ளதே? இது எப்படி என்று கேள்வி எழலாம். இதற்குக் காரணம் வெளியே வராத வகையில் உள்ளே வைத்து தோலைத் தைத்து விடுவதுதான். அவ்வாறு இல்லாவிட்டால் உள்ளே வைக்கப்பட்டவைகளை உடல் வெளியே தள்ளிவிடும்.


திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கான சான்றுகளில் இவ்வசனமும் ஒன்றாக அமைந்துள்ளது.


∙∙∙∙∙·▫▫ᵒᴼᵒ▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫ᵒᴼᵒ end of tafseer ᵒᴼᵒ▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫ᵒᴼᵒ▫▫·∙∙∙∙∙


விளக்கங்கள் கொடுத்து நேரத்தை வீணடிக்காமல் நேரடியாக நிராகரிக்கப்படவேண்டிய கற்பனை கதை இந்த தஃப்சீர் குறிப்பு. எனினும் ஒவ்வொரு தகவல்களையும் விரிவாகப் பார்ப்போம்.


கண்களில் ஏதேனும் தூசுகள் விழுந்து விட்டால் அதை எப்படியாவது வெளியேற்றவே கண்கள் முயற்சிக்கும் எனும் கற்பனை மட்டுமே இதற்கு அடித்தளமாக இருக்கிறது. கண்களில் விழும் தூசு கண்களை உறுத்துவதால் கண்கள் நீரை சுரக்கின்றன. எந்த காலத்திலும் தூசுக்களை கண்கள் வெளியேற்றியதாக சரித்திரம் இல்லை. கண்கள் உறுத்துவதால் மனிதன்தான் அதனை வெளியேற்றத் துடிப்பான். மனிதன்தான் கண்களில் விழுந்த தூசுக்களை வெளியேற்றுவான். கண்களே சுயமாக வெளியேற்றுவதில்லை.


பல விலங்குகளிலும் உயிரினங்களிலும் "நோய் எதிர்ப்பு ஆற்றல்" எனும் ஏற்பாடு இருப்பதை நாம் அறிந்துவைத்துள்ளோம். immune system எனும் இந்த ஏற்பாடு மனிதனுக்கு ஊறு விளைவிக்கும் உயிரினங்கள் மனிதனுக்கு உள்ளே வருவதை அனுமதிக்காது. நோய் எதிர்ப்பாற்றல் அவ்வுயிரினங்களுடன் போராடி மனிதனை நோயிலிருந்து காப்பற்றும். இது உண்மை.


ஆனால் எந்த அந்நிய பொருள் உடலுக்குள் சென்றாலும் அதனை உடல் வெளியேற்றும் என்பது அறியாமையாகும்.


- தண்ணீர் உயிரற்ற அன்னியப் பொருளே. அதனை உடல் கிரகித்துக்கொண்டு தேவைக்கதிகமான தண்ணீரை உடலின் கழிவுகளுடன் சேர்த்து வெளியேற்றுகிறது.


- உணவு அன்னியப்பொருளே. அனைத்து உணவுகளையும் அரைத்து அவற்றிலுள்ள சத்துக்களை உடல் எடுத்துக்கொள்கிறது.


- காற்று அன்னியப்பொருளே.


இவற்றை எல்லாம் விட ஆச்சரியமானது மனிதக் குடலில் வசிக்கும் லட்சக் கணக்கிலான பாக்டீரியாக்கள். இந்த பாக்டீரியாக்கள் மனிதனுக்கு நன்மை செய்கின்றன. உணவை செரிமானம் செய்வதோடு மட்டுமல்லாமல் பல நன்மைகளை மனிதனுக்கு இவை செய்கின்றன. இந்த அந்நிய உயிரினத்தை மனித உடல் அனுமதித்துள்ளது. வெளியேற்றவில்லை. அவற்றை வெளியேற்றினால் வயிற்றுப்போக்கு ஏற்படும்.


ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருட்களை உடல் அனுமதிக்காது. மூக்கில் பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றிகொண்டால் அவற்றை அப்புறப்படுத்தி நம்மை பாதுகாப்பதற்காக உடல் சுரக்கும் திரவமே சளி. ஒவ்வாமை ஏற்படுத்தும் ஒரு பொருளை உடலுக்குள் தைத்து வைத்தாலும் அந்த பொருளில் இருந்து உடலைக் காப்பாற்றுவதற்காக அதனை சுற்றிலும் சீழை சுரக்கும் நமது உடல். பின்னர் அந்த சீழில் நோய்க் கிருமிகள் தோற்றி அந்த பாகமே அழுகி விடும். இதனால்தான் மனித உடலுக்கு எது ஒவ்வாமை ஏற்படுத்தாதோ அத்தகைய பொருட்களை மட்டுமே எலும்புகளை இணைக்க பயன்படுத்துவார்கள். ஆணிகளைக் கொண்டு பிணைப்பதாலோ தையலிட்டு தோலை மூடுவதாலோ இரும்புத் தகடுகள் வெளியே வராமல் இருப்பதில்லை. ஒவ்வாமை ஏற்படுமானால் எதைக் கொண்டு பிணைத்திருந்தாலும் அந்த தகட்டை சுற்றிலும் சீழ் பிடித்துவிடும்.


மேலுள்ளவை அனைத்தும் அதிகப்படியான விளக்கங்களே. தஃப்சீர் குறிப்பில் இருக்கும் நேரடி அறியாமையை சுட்டிக்கட்டினாலே இவ்வாதத்தின் அறியாமை வெளிச்சத்திற்கு வந்துவிடும். அது என்ன அறியாமை?


அன்னியப் பொருள்! அன்னியப் பொருள்!! என்று தஃப்ஸீர் எதனை சொல்கிறது என்றால் கருவில் உருவாகும் குழந்தையைத்தான். அது எப்படி அன்னியப் பொருள் ஆனது? வெளியே இருந்து உடலுக்குள்ளே செல்வதுதான் அன்னியப்பொருள். உடலுக்குள்ளேயே உருவாவது அன்னியப்பொருள் அல்லவே. ஒருவேளை வெளியே இருந்து சென்ற அன்னியப் பொருளான விந்தணுதான்  குழந்தையாக மாறுவதாக எண்ணினால் அது தவறு. பெண்ணின் முட்டையைக் கருவுறச் செய்வதுதான் விந்தணுவின் வேலை. விந்தணுவில் இருக்கும் DNA மட்டுமே முட்டையை துளைத்து அதனை கருவுறச் செய்யும். விந்தணுவின் மற்ற அனைத்து பாகங்களும் அங்கேயே அழிந்து விடும். பின்னர் குழந்தையாக மாறுவது அனைத்துமே அந்த பெண்ணின் உடலில் உருவாகும் திசுக்கள்தாம். இதில் அன்னியப்பொருள் எங்கிருந்து வந்தது.


அடுத்து சில சுவாரஸ்ய நிகழ்வுகளைப் பார்ப்போம்.


காப்பர்-T:


குறிப்பிட்ட கால அளவு குழந்தையை சுமந்து அதனை கருவறை வெளியே தள்ளுவது உண்மைதான். ஆனால் ஒவ்வொரு மாதமும் இறந்துபோன முட்டையை மாதவிலக்காக கருவறை வெளியேற்றுகிறது. ஆக, உடலுக்கு தேவையில்லாத ஒன்றை வெளியேற்றுவதில் சிறந்த உறுப்பாக ஒன்றை சொல்ல வேண்டும் என்றால் அது கருவறைதான். அத்தகைய கருவறைக்குள் காப்பர்-T (Copper-T) எனும் அன்னியப் பொருளை கருத்தடை சாதனமாக செலுத்தி வைக்கிறார்கள். பெண் இனப்பெருக்க உறுப்பின் அடிப்பாகத்தில் கருவறையின் வாய் எனப்படும் cervix இருக்கிறது. இதன் வழியாகவே விந்தணு கருப்பைக்குள் சென்று முட்டையை கருத்தரிக்க செய்கிறது. செர்விக்ஸ் வழியாகவே இறந்துபோனே முட்டைகள் மாதவிலக்காக வெளியேறுகின்றன. எவ்வித அறுவை சிகிச்சையும் இல்லாமல் இயல்பான முறையில் பெண்ணுறுப்பின் வழியாக காப்பர்-t எனும் கருத்தடை சாதனத்தை கருப்பைக்குள் செலுத்துகிறார்கள். பின்னர் அதனை கருப்பையுடன் சேர்த்து தைப்பதும் இல்லை. பெண்ணுறுப்புடனும் பிணைப்பதில்லை. காப்பர்-t சுந்தந்திரமாக கருவறைக்குள் இருக்கும். பெரிதாக இருக்கும் குழந்தை முதல் திரவமாக இருக்கும் மாதவிலக்கு வரையில் எளிதாக  வெளியே தள்ளும் கருப்பை இந்த காப்பர்-டீயை வெளியே தள்ளுவதில்லை. அந்த அன்னியப்பொருளை மருத்துவர்களே அகற்றும் வரையில் கருவறை வெளியே தள்ளுவதில்லை. ஸ்டீல் தகடுகளுக்கு வியாக்கியானம் சொன்னதைப் போல காப்பர்-tக்கு வியாக்கியானம் சொல்லி தப்பிக்க இயலாது. ஏனென்றால் அதனை உடலுடன் சேர்த்து தைத்துவைப்பதில்லை. அன்னியப்பொருளை கருப்பை அனுமதிக்காது என்றால் அது முதலில்  காப்பர்-tயைத்தான் வெளியே தள்ளவேண்டும்.


கல்லாகிய குழந்தை:


ஆணின் விந்தணுவும் பெண்ணின் முட்டையும் இணைந்து உருவாகும் கரு ஒரு பெண்ணின் கருவறையில் சராசரியாக 38வாரங்கள் வளர்கிறது. இந்த காலகட்டத்தில் ஏதோ ஒரு காரணத்தால் அந்த கரு கலைந்துவிட்டால் அதன் நிலையை பொறுத்து ஒன்றில் அதனை கருவறை வெளியேற்றுகிறது அல்லது உடலே கிரகித்துக்கொள்கிறது. கருவுற்ற ஆரம்ப நாட்களில் கருவை வெளியேற்றுவதே எளிது. எனவே வெளியேற்றும் முடிவுக்கு உடல் வந்துவிடும். அதன் பின்னர் இறக்கும் கருவை வெளியேற்றாமல் உடலே கிரகித்துக்கொள்ளும். ஆனால் 14 வாரங்கள் ஆகிவிட்டால் வெளியேற்றும் அளவை விட கரு பெரிதாக வளர்ந்திருக்கும். அதே வேளையில் அந்த குழந்தையை கிரகித்துக்கொள்ளவும் இயலாது. இந்நிலையில் தொடர்ந்தால் அது தாய்க்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் கால்சிபிகேசன் எனும் முறையில் தாயின் உடலே அந்தக் குழந்தையை கல்லாக மாற்றிவிடும்.

முதல் படத்தில் நீங்கள் பார்ப்பது 55 வருடங்களாக ஒரு பெண்ணின் வயிற்றில் இருந்த கல் குழந்தை ஆகும். இந்த கால கட்டத்தில் அந்த பெண் 5 குழந்தைகளை எந்த சிக்கலும் இல்லாமல் ஈன்றுள்ளார். இந்த கல்லும் அந்த குழந்தைகளுடனே இருந்துள்ளது. இரண்டாம் படத்தில் நீங்கள் பார்ப்பது கருவறையில் கல்லாக மாற்றப்பட்ட குழந்தையின் எலும்புகள். இது CT ஸ்கேன் மூலம் எடுக்கப்பட்டது.


எத்தனை வருடங்கள் ஆனாலும் கல்லாக மாறிய குழந்தையை கருப்பை வெளியேற்றுவதில்லை. பல பெண்கள் இந்த கல் குழந்தை வயிற்றில் இருக்கும்போதே கருத்தரிதுள்ளனர். குழந்தையை வெளியேற்றிய கருப்பை இந்த கல்லை வெளியேற்றவில்லை. பார்க்க : https://en.wikipedia.org/wiki/Lithopedion 


Conclusion:


1. ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் நிர்ணயிக்கப்பட்ட அளவு உள்ளது. (13:8) நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலைபெறச் செய்கிறோம். (22:5) ஆகிய வசனங்களில் "இயற்கைக்கு மாறாக அன்னியப் பொருளை கருவறை ஏற்றுக் கொண்டிருக்கிறது" என்றோ "கரு ஓர் அன்னியப்பொருள்" என்றோ எந்த வாசகமும் இல்லை. இது முழுக்க முழுக்க கற்பனையே.


2. அன்னியப்பொருளை உடல் அனுமதிக்காது என்பதும் அன்னியப்பொருளை உடல் வெளியேற்றும் என்பதும் அதீத கற்பனையாகும். அதுவும் குறிப்பாகக் கருவறையை பற்றி பேசும்போது அது ஒரு நிமிடம் கூட காப்பர்-tயை அனுமதிக்கக் கூடாது. ஆனால் சுதந்திரமாக விடப்பட்ட அந்த சின்னஞ்சிறிய பொருளை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நாமாக வெளியே எடுக்கும்வரையில் கருவறை வெளியே தள்ளுவதில்லை. இறந்த கருவின் நிலையை பொறுத்து சில வேளைகளில் அதை வெளியேற்றாமல், உடலே கிரகித்துக்கொள்கிறது. கல்லாக மாற்றிய பிறகும் வெளியேற்றுவதில்லை.


3. மேற்படி வசனங்களில் கருவறையில் கருவை வளர்ப்பதைப் பற்றி அல்லாஹ் பேசுகிறான். சில பெண்கள் 38 வாரங்களில் இயற்கையாக பெறுகிறார்கள், சிலர் 39 வாரங்களிலும், சிலர் 40 வாரங்களிலும் இயற்கையாக பெறுகிறார்கள். இவ்வாறு ஒவ்வொரு கருவுக்கும் அல்லாஹ் ஒவ்வொரு கால அளவை நிர்ணயம் செய்துள்ளான். எனினும் அனைத்து குழந்தைகளும் முழுமையாக பிறப்பதைப் பார்க்கிறோம். சிந்தித்துப்பார்த்தால் இதுவே ஓர் அற்புதம்தான். 


4. தேவையற்ற கற்பனைகள் மூலம் புகழ் சேர்க்க வேண்டிய தேவை அல்லாஹ்வுக்கோ அவனது வேதத்திற்கோ இல்லை.


காப்பர்-t பற்றிய அனிமேசன் https://youtu.be/TAmL4WN3P54


இதுதான் காப்பர்-t 


ஒரு மனிதனின் கையிலிருக்கும்போது; இவ்வளவு சிறிய பொருள்தான் காப்பர்-t 


மற்ற தலைப்புகளை வாசிக்க https://www.piraivasi.com/p/zina-ul-abdeen.html