Wednesday 2 August 2017

லைலத்துல் கத்ர் ஒரு நாளா?

லைலத்துல் கத்ர் என்பது 24 மணி நேரம் கொண்ட ஒரு நாள் என்றும், அதில் இரவும் பகலும் இருக்கும் என்றும், அந்த முழு நாளிலும் "கத்ர்" இறங்குகிறது என்றும் பிரச்சாரம் செய்து கொண்டு ஒரு புதுக்கூட்டம் கிளம்பியிருக்கிறது.
லைலத் என்ற வார்த்தைக்கு புது விளக்கமும் கொடுக்கிறது. இனிமேல் பழைய விளக்கங்களை நீக்கி விட்டு அந்த புது விளக்கத்தைதான் அரபு அகராதிகளில் மாற்றம் செய்யப்போகிறார்களாம்.
ஹிஜிரா கமிட்டியினருக்கு அரபு மொழியில் அடிப்படைகூட தெரியாது என்பதை நாம் முன்னரே நிரூபித்திருக்கிறோம். ஆனாலும் லைலத் விஷயத்தில் கமிட்டியின் உளறலை சிலர் அப்படியே நம்புகின்ற காரணத்தால் நாம் அதை கொஞ்சம் ஆழமாகவே பார்ப்போம். இன்ஷா அல்லாஹ்.
அரபு மொழியில் லைலத் தைப் பார்ப்பதற்கு முன்பாக தமிழின் இரவை முதலில் பார்ப்போம்.
"இரவு"என்ற வார்த்தையை நாம் எதற்கெல்லாம் பயன்படுத்துகிறோம்?
சூரியன் மறைந்த பிறகு வரக்கூடிய இருட்டை "இரவு" என்று கூறுகிறோம்.
ஒரு கிழமையின் இருட்டையும் இரவு என்கிறோம் - அதாவது ஞாயிறு இரவு, திங்கள் இரவு, செவ்வாய் இரவு, புதன் இரவு, வியாழன் இரவு, வெள்ளி இரவு.
எண்ணிக்கையில் சொல்லும்போதும் இரவு என்கிறோம் (உதா: ஐந்து இரவுகள், பத்து இரவுகள்)
அரபு மொழியில்இரவுவிதியைப் பார்ப்போம்.
இதில்தான் முதல் சிக்கல் ஆரம்பமாகிறது. இரவின் விதியை மட்டும் பார்க்க முடியாது. பகலின் விதியையும் சேர்த்துப் பார்க்கவேண்டும்.
அரபு மொழியில் சூரியன் இருக்கும்போது இருக்கும் வெளிச்சத்தை நஹார் (نهَار) என்றும், சூரியன் மறைந்த பிறகு ஆகும் இருட்டை லைல் (لَيْل) என்றும் கூறுவர்.
நஹார் (نهار) மற்றும் லைல் (لَيْل) ஆகிய
இந்த இரண்டும் வெறும் "பொழுதுகள்" மட்டுமே.
நஹார் (نهَار) - காலைப் பொழுது
லைல் (لَيْل)  - இரவுப் பொழுது
இந்த இரண்டும் தனித்த சொற்கள். இவைகளுக்கு இருமை மற்றும் பன்மைகள் கிடையாது. (நஹார் என்ற வார்த்தைக்கு பன்மை வார்த்தை மட்டும் இருக்கிறது. ஆனால் அதை எண்ணிக்கைக்கு பயன்படுத்துவதில்லை)
அரபு மொழியில் Countable Words (எண்ண முடிந்த வார்த்தைகள்) மற்றும் Uncountable Words (எண்ண முடியாத வார்த்தைகள்) என்ற இரண்டு வகை உண்டு.
நஹார் (نهار) மற்றும் லைல் (لَيْل) ஆகிய இரண்டும் எண்ண இயலா (Uncountable Words) வார்த்தைகள் ஆகும். அதனால், இந்த இரண்டு வார்த்தைகளை பயன்படுத்தி எண்ணுவதில்லை,
உதாரணமாக,
ஐந்து இரவுகள் - خمسة لَيْل
ஐந்து பகல்கள்   -خمسة نهَار
-என்று எண்ணுவதில்லை
இரவை எண்ணுவதற்கும், பகலை எண்ணுவதற்கும் தனி வழிமுறை வைத்திருக்கின்றனர். அதுதான் லைலத் (لَيْلَة) மற்றும் யவ்ம் (يَوْمَ)
இரவை எண்ணுவதாக இருந்தால், அதாவது லைல் (لَيْل) என்பதை எண்ணிக்கையில் சொல்வதாக இருந்தால அதை லைலத் (لَيْلَة) என்றே எண்ணுவர்.
பகலை எண்ணுவதாக இருந்தால், அதாவது நஹார் (نهَار) என்பதை எண்ணிக்கையில் சொல்வதாக இருந்தால அதை யவ்ம் (يَوْمَ) என்றே எண்ணுவர்.
இந்த இரண்டிற்கும்தான் ஒருமை, இருமை மற்றும் பன்மை உண்டு.
ஒருமை  - لَيْلَة   - லைலத்
இருமை - ليلتين - லைலதய்னி
பன்மை - ليال    - லயால்
ஒருமை  - يَوْم  - யவ்ம்
இருமை - يومان - யவ்மானி
பன்மை   - أَيَّامُ  - அய்யாம்
இரவு பகலை எண்ணுவதாக இருந்தால்..
இப்படித்தான் எண்ணுவார்கள் உதாரணமாக:-
ஒர் இரவு - لَيْلَة
இரண்டு இரவு - ليلتين
ஐந்து இரவுகள்  - خمس ليال
பன்னிரண்டு இரவுகள் - اثنا عشر ليلة
ஓரு பகல் - يَوْم
இரண்டு பகல் - يومان
ஐந்து பகல்கள் - خمسة أيام
இதுதான் இரவையும் பகலையும் எண்ணும் முறை.
கிழமைகள் :
வாரத்தின் ஏழு நாட்களுக்கும் பெயர் இருக்கிறது. அந்த நாட்களின் இரவையும் பகலையும் அந்த கிழமையின் பெயரிலேயே அழைக்கின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை : அல் அஹத் - الأَحَد
திங்கள்கிழமை : அல் இஃத்னைன் - الاِثْنَيْن
செவ்வாய்கிழமை : அஃத்துலாஃதாஅ் - الثُّلاَثَاء
புதன்கிழமை : அல் அர்பிஆஅ் - الأَرْبِعَاء
வியாழக்கிழமை : அல் ஃஹமீ்ஸ் - الخميس
வெள்ளிக் கிழமை :  அல் ஜுமுஆ - الْجُمُعَة
சனிக்கிழமை : அஸ்ஸப்த் - السَّبْت

ஒரு கிழமையின் பெயரை சொன்னால் அது அந்த முழு நாளையும் குறிக்கும்.
உதாரணம் :
ஜுமுஆ என்று சொன்னால் பொதுவாக வெள்ளிக்கிழமை என்று அர்த்தம்.
வெள்ளிக்கிழமையின் பகல் மற்றும், வெள்ளிக்கிழமையின் இரவு என்று தனித்தனியாக சொல்ல வேண்டுமானால் நஹார் (نهار) மற்றும் லைல் (لَيْل) என்பதை பயன்படுத்த மாட்டார்கள்.
உதாரணமாக :
வெள்ளி இரவு - لَيْل الجمعة
வெள்ளி பகல் -  نهَار الجمعة
- என்று அழைப்பதில்லை.
கிழமையின் பெயரிலேயே அந்த நாளின் இரவையும் பகலையும் அழைக்கின்றனர்.
கிழமையின் பகல் :
ஞாயிறு பகல் : யவ்முல் அஹத் - يَوْم الأَحَد
திங்கள் பகல் :  யவ்முல் இஃத்னைன் - يَوْم الاِثْنَيْن
செவ்வாய் பகல் : யவ்முத் துலாஃதாஅ் - يَوْم الثُّلاَثَاء
புதன் பகல் : யவ்முல் அர்பிஆஅ் - يَوْم الأَرْبِعَاء
வியாழன் பகல் : யவ்முல் ஃஹமீஸ் - يَوْم الخميس
வெள்ளி பகல் :  யவ்முல் ஜுமுஆ - يَوْم الْجُمُعَة
சனி பகல் : யவ்முஸ் ஸப்த் - சனி பகல் - يَوْم السَّبْت
கிழமையின் இரவு :
ஞாயிறு இரவு : லைலத்துல் அஹத் - لَيْلَة الأَحَد
திங்கள் இரவு : லைலத்துல் இஃத்னைன் - لَيْلَة الاِثْنَيْن
செவ்வாய் இரவு :லைலத்து துலாஃதாஅ் -لَيْلَة الثُّلاَثَاء
புதன் இரவு : லைலத்துல் அர்பிஆஅ் - لَيْلَة الأَرْبِعَاء
வியாழன் இரவு : லைலத்து ஃஹமீஸ் - لَيْلَة الخميس
வெள்ளி இரவு : லைலத்து ஜுமுஆ - لَيْلَة الْجُمُعَة

சனி இரவு : லைலத்துஸ் ஸப்த் - لَيْلَة السَّبْت
இவைகளிலிருந்து நாம் அறிவது என்னவென்றால்...
*இரவை எண்ணுவதற்கு "லைலத்", பகலை எண்ணுவதற்கு "யவ்ம்" *
*ஒரு கிழமையின் இரவை பெயரால் அழைப்பதற்கு "லைலத்" , ஒரு கிழமையின் பகலை பெயரால் அழைப்பதற்கு "யவ்ம்" *
இது இல்லாமல், குறிப்பிட்ட இரவின் சிறப்புகளைக் கொண்டு அந்த இரவை பெயரிட்டு அழைக்கும் முறையும் உண்டு.
உதாரணமாக, பௌர்ணமி நிலவு இருக்கும் ஒரு முழு இரயையும் அதன் சிறப்பின் பெயராலேயே அழைக்கின்றனர்.
பௌர்ணமி இரவு - لَيْلَةَ الْبَدْر (லைலத்துல் பத்ர்)
[இதற்கு எதிர்ப்பதமாக 'பௌர்ணமி பகல்' (يَوْم الْبَدْر ) என்ற ஒன்று கிடையாது]
ஹஜ் கிரியைகளின் போது ஒரு இரவில் "முஸ்(Z)தலிபா" என்ற இடத்தில் தங்க வேண்டும். இங்கு தங்கும் இரவுக்கும் பெயர் வைத்துள்ளனர். அதுதான் "லைலத்துல் முஸ் (ஜ்)தலிபா" (لَيْلَة الْمُزْدَلِفَة).
[இதற்கு எதிர்ப்பதமாக 'முஸ்(Z)தலிபா பகல்' (يَوْم الْمُزْدَلِفَة ) என்ற ஒன்று கிடையாது]
நபி (ஸல்) அவர்கள் விண்ணுலகப் பயணம் மேற்கொன்ட இரவை  லைலத் இஸ்ரா ( لَيْلَة أُسْرِي ) என்று அழைக்கின்றனர். இது, ஒரு இரவில் நடந்த சிறப்பான சம்பவத்தின் பெயராலேயே அந்த இரவு அழைக்கப்படுகிறது.
[இதற்கு எதிர்ப்பதமாக 'விண்பயண பகல்'  (يَوْم أُسْرِي ) என்ற ஒன்று கிடையாது]
குர்ஆன் வசனங்கள் முதன் முறையாக இறங்கிய ஒரு இரவை "மகத்துவமிக்க இரவு" என அல்லாஹ் சொல்கிறான். அந்த இரவின் சிறப்பு போன்றதை ரமலானின் கடைசி பத்தின் ஒற்றைப் படை இரவுகளில் அடைய முடியும் என நபி (ஸல்) அவர்கள் கூறியும் இருக்கிறார்கள்.
அந்த இரவின் பெயர்தான் "லைலத்துல் கத்ர்" (لَيْلَة الْقَدْر).
[இதற்கு எதிர்ப்பதமாக 'மகத்துவமிக்க பகல்'  (يَوْم الْقَدْر ) என்ற ஒன்று கிடையாது]
லைலத்துல் கத்ர் என்பது இரவும் பகலும் இருக்கக்கூடியது என்றும், 24 மணி நேரம் நீடிக்கும் என்றும் சொல்பவர்களுக்கு,
பௌர்ணமி நிலவும் 24 மணி நேரம் காட்சிதருகிறதோ!
அவர்கள் ஹஜ் செய்யும்போது, முஸ்(Z)தலிபாவில் தங்குவதும் 24 மணி நேரமோ!!
நபி (ஸல்) அவர்களின் விண்ணுலகப் பயணமும் 24 மணி நேரமோ!!!
அரபு மொழியின் அடிப்படை எதுவும் தெரியாமல் "லைலத்= 24 மணி நேரம் உள்ள நாள்" என்று உளறும் அந்த ஏர்வாடி நாயகர்கள் சிந்திக்க மறுக்கிறார்கள்.
அவர்களை பின்பற்றும் அறியாத மக்களாவது சிந்திக்க வேண்டியத் தருணமிது. அவர்களை கேள்வி கேட்க வேண்டிய நேரமிது.

நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்த அல்லாஹ் போதுமானவன்.