Thursday 3 November 2022

QSF18. கை ரேகைகள் அடையாளப்பொருளா?

 

இப்படியும் சில தப்ஸீர்கள்- ஜைனுலாபுதீன் தப்ஸீர்


ஜைனுலாபிதீன் அவர்களின் தப்சீரில் அறிவியலின் பெயரால் சொல்லப்பட்டிருக்கும் பிழையான கருத்துக்களை ஆய்வு செய்வதற்காக 2017ம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு சமர்ப்பித்த ஆய்வறிக்கைகள்


QSF ஆய்வுக்குழு

அறிமுகத்தை வாசிப்பது இந்த தொடரை புரிந்துகொள்ள உதவும். அறிமுகத்தை வாசிக்க https://www.piraivasi.com/2022/11/zina-ul-abdeen-intro.html


QSF18 கை ரேகைகள் அடையாளப்பொருளாக பயன்படும் என்று குர்ஆன் சொல்கிறதா?


தப்சீர் குறிப்பு 208. விரல் நுனிகளையும் சீராக்குதல் 


 اَيَحْسَبُ الْاِنْسَانُ اَلَّنْ نَّجْمَعَ عِظَامَهٗؕ‏ ، بَلٰى قٰدِرِيْنَ عَلٰٓى اَنْ نُّسَوِّىَ بَنَانَهٗ‏ 

75:3. மனிதனின் எலும்புகளை ஒன்று திரட்ட மாட்டோம் என்று அவன் எண்ணுகிறானா?

75:4. அவ்வாறில்லை! அவனது விரல் நுனிகளையும் சீராக்க நாம் ஆற்றலுடையவர்கள்.208

மனிதனை மீண்டும் என்னால் படைக்க முடியும் என்று குறிப்பிடும் இறைவன், விரல் நுனிகளையும் என்னால் சீராக்க முடியும் என்று இவ்வசனத்தில் (75:4) கூறுகிறான். விரல் நுனிகளைக் குறிப்பிட்டுக் கூறக் காரணம் என்ன? இதை விட முக்கியமான பகுதிகளெல்லாம் மனித உடலில் இருக்கும் போது விரல் நுனிகளை மட்டும் குறிப்பிட்டுச் சொல்வதற்குரிய காரணம் என்ன வென்றால், மனிதனின் எந்த அங்கமாக இருந்தாலும் அந்த அங்கம் குறிப்பிட்ட மனிதனுடையது தான் என்று அடித்துச் சொல்ல முடியாது. ஏனென்றால் அது போல் பலரது அங்கங்கள் அமைந்திருக்கும். ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதன் முழுமையாக வேறுபடுவது விரல்களில் அமைந்திருக்கும் ரேகைகளால் தான். ஒருவரது ரேகைகள் போல இன்னொருவரது ரேகைகள் இருக்காது. இந்த ரேகைகளைக் கூட நாம் திரும்பக் கொண்டு வந்து விடுவோம் என்று இந்த அறிவியல் உண்மையை உள்ளடக்கி அல்லாஹ் கூறுகிறான்.

∙∙∙∙∙·▫▫ᵒᴼᵒ▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫ᵒᴼᵒ end of tafseer ᵒᴼᵒ▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫ᵒᴼᵒ▫▫·∙∙∙∙∙

நமது மறுப்பு:-

“284. புவி ஈர்ப்பு விசை பற்றிய முன்னறிவிப்பு" எனும் தஃப்ஸீர் குறிப்பும் “248 பூமிக்கு முளைகளாக மலைகள்" எனும் தஃப்ஸீர்" குறிப்பும் ஒன்றுகொன்று முரண்பட்டு நின்றதை நாம் QSF13ல் பார்த்தோம். அதேபோல இந்த 208ம் தஃப்ஸீர் குறிப்பு இதே தப்சீரின் “371. மூக்கின் மேல் அடையாளம்" எனும் குறிப்புடன் முற்றிலுமாக முரண்பட்டு நிற்கிறது.

208ம் தஃப்ஸீர் குறிப்பில் 

//மனிதனின் எந்த அங்கமாக இருந்தாலும் அந்த அங்கம் குறிப்பிட்ட மனிதனுடையது தான் என்று அடித்துச் சொல்ல முடியாது. ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதன் முழுமையாக வேறுபடுவது விரல்களில் அமைந்திருக்கும் ரேகைகளால் தான்.// என்றும் 

371ம் தஃப்ஸீர் குறிப்பில் 

//கைரேகை மூலம் ஒருவரைக் கண்டுபிடிப்பதை விட மூக்கைப் பல கோணங்களில் ஸ்கேன் செய்வதன் மூலம் எந்த மனிதரையும் துல்லியமாகக் கண்டறியும் போட்டோ பேஸ் என்ற தொழில் நுட்பம் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.// என்றும் முரட்டு முரண்பாடாக தஃப்ஸீர் செய்யப்பட்டுள்ளது.

371ம் தஃப்ஸீர் குறிப்பை ஏற்கனவே QSF10ல் முழுமையாக ஆய்வு செய்துவிட்டோம். மூக்கைக் கொண்டு அடையாளம் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் வெற்றிகரமாக மாறவில்லை. மேலும் குர்ஆன் வசனத்தில் இல்லாத கருத்தை வரிந்து கட்டிக்கொண்டு சொல்லப்பட்ட விளக்கம் அது. அதே போல இங்கே கை ரேகை பற்றி எதுவுமே குர்ஆன் வசனத்தில் இல்லை. மீண்டும் மனிதனை உயிர்த்தெழுப்புவது பற்றி மனிதன் சந்தேகம் கொள்ளவேண்டாம். அவ்வாறு உயிர்த்தெழுப்பும்போது ஏனோதானோவென அவன் இருப்பான் என்றோ அல்லது அவன் மரணிக்கும் முன்னிருந்ததைப்போல முழுமையாக இல்லாமல் தோராயமாக இருப்பான் என்றோ எண்ணிவிடவேண்டாம். அவன் எப்படி இருந்தானோ அதைப் போல முற்றிலுமாக உயிர்த்தெழுப்பப்படுவான். எந்த அளவுக்கென்றால் மிக சிறியதாக அல்லது அற்பமான உறுப்பைக் கூட அல்லாஹ் பழையபடி படைத்துவிடுவான் என்பதையே இவ்வசனம் சொல்கிறது. அற்பத்திற்கு உதாரணமாக விரல் நுனியை அல்லாஹ் சொல்கிறான். கை ரேகை என்பது குர்ஆன் வசனத்தில் இல்லாத ஒன்றை கற்பனையாக இங்கே சேர்த்ததாகும்.

கை ரேகை என்பது விரல் நுனியில் மட்டுமே இருப்பதா? கை முழுவதும் கை ரேகைகள் இருக்கிறது. கை ரேகை தடையத்திற்காக கையின் ஒவ்வொரு பகுதியையும் பதிவு செய்வார்கள். கை ரேகை எடுக்கப்பட்டவர்கள் இதை அறிவார்கள். தஃப்ஸீர் சொல்வதைப் போல விரல் நுனியை மட்டுமே அல்லாஹ் குறிப்பிடுவதாக விளங்கிக்கொண்டால் அல்லாஹ்வை கேலி செய்வதைப் போலாகும்.

மனிதனை அடையாளம் காண்பதற்கு கை ரேகை மட்டுமே தகுதி வாய்ந்தது அல்ல. மிக வேகமாகவும் துல்லியமாகவும் மனிதனை அடையாளம் காண்பதற்கு அதிக அளவில் பயன்படுத்தப்படுவது கண்கள்தாம். 

கை ரேகை, கண்கள் ஆகியவற்றைக் கொண்டு அடையாளம் காண்பதற்கு அதற்கான மின்னணு கருவிகளும் தொழில்நுட்பமும் வேண்டும். ஆனால் மனிதனை விட அறிவில் குறைந்த நாய் எனும் உயிரினம் மனிதனின் வியர்வை நாற்றத்தைக் கொண்டு அவனை கண்டுபிடிக்கிறது.

இதில் முக்கியமாக நாம் கவனிக்கவேண்டியது என்னவென்றால் விரல் நுனியில் இருக்கும் ரேகை எதற்கும் பயன்படாது. குற்றவியல் மற்றும் தடயவியல் துறைகளில் கை ரேகை பதிவு செய்யப்படும்போதும் ஆய்வு செய்யப்படும்போதும் விரல் நுனியில் இருக்கும் ரேகைகளை எடுக்கவே மாட்டார்கள். இந்தியாவில் காவல்துறையில் விரல் ரேகை பதியும்போதோ அல்லது ஆதார் அட்டைக்காக விரல் ரேகை பதிவு செய்யும்போதோ இதை நீங்கள் பார்த்திருக்கலாம். வெளிநாடுகளில் வேலைக்கு செல்லும்போது அங்கேயும் எந்த நாடுகளிலும் விரல் நுனியில் இருக்கும் ரேகைகளை பதிவு செய்யவேமாட்டார்கள்.

இல்லாத பொருளை திணித்து தவறான விளக்கம் கொடுப்பது அல்லாஹ்வை கேலி செய்வதாக ஆகிறது. இஸ்லாத்தின் எதிரிகளுக்கு நாமே குறிப்பு எடுத்துக் கொடுப்பதைப் போல அமைகிறது.

பிற்சேர்க்கை:

நம்முடைய இந்த ஆக்கத்தைப் பார்த்துவிட்டு விரல் நுனியில் இருக்கும் ரேகைதான் முக்கியமாக தடவியல் துறையில் பார்க்கப்படுகிறது என்று சில சகோதரர்கள் வாதம் வைத்தனர். அவர்களின் அறியாமையை விளக்கவே இந்த பிற்சேர்க்கை

கைரேகை என்பது மனிதன் படைக்கப்பட்ட காலத்திலேயே உள்ளது. குறிப்பாக குர்ஆன் இறங்கிய காலத்திலும் மனிதனின் கைகளில் ரேகைகள் இருந்தன. அல்லாஹ் கைரேகையை பற்றித்தான் சொல்கிறான் என்றால் கைரேகை என்றே சொல்லி இருக்கலாம். விரல் நுனி என்கிற பொருத்தமற்ற வார்த்தையை பயன்படுத்துவதை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன். இதிலேயே அறிவியல் பெயரால் சொல்லப்படும் வாதங்கள் அடிபட்டுவிடும்.

அடுத்தாக விரல் நுனி என்றால் என்னவென்றும் பார்க்க வேண்டும். விரலில் மூன்றில் ஒரு பங்கைதான் நீங்கள் அனைவரும் விரல் நுனி என்று வாதிடுகிறீர்கள். ஆனால் அதுவல்ல விரல் நுனி

இவர்கள் விரல் நுனி என்று விளங்கி வைத்திருப்பது இந்தபாகத்தை தான்.


இது விரல் நுனி அல்ல. இது விரலின் முன் பகுதி. இதில் ரேகை இருப்பதையோ அது மனிதனை அடையாளம் காணப்பயன்படுவதையோ யாரும் மறுக்க வில்லை. ஆனால் இது விரல் நுனி அல்ல. 



இதுதான் விரல் நுனி. உலகின் எந்த நாடுகளிலும் எந்த துறையிலும் ரேகை பதிவு செய்யும்போது இந்தப் பகுதியை பதிவு செய்யவே மாட்டார்கள்.

பனான் என்கிற அரபு வார்த்தைக்கு மேலே நாம் படத்தில் காட்டி இருக்கும் பகுதி என்றுதான் பொருளே தவிர.  இவர்கள் சொல்லும் கை நாட்டு வைக்கும் பகுதி அல்ல.


ஒரு வாதத்திற்கு பனானா என்றால் ரேகை என்றே வைப்போம். அல்லாஹ் ரேகையத்தான் சொல்கிறான் என்றும் வைப்போம். மனிதனை அடையாளம் காண பனானாவை ஏற்படுத்தியுள்ளோம் என்று அந்த குரான் வசனத்தில் இருக்கிறதா?

கைரேகை எனும் வார்த்தையும் இல்லை.

அடையாளம் காண்போம் என்றும் இல்லை.

இருப்பது பனான் எனும் வார்த்தை . அதற்கு கைரேகை எனும் பொருளை திணித்து. அதை மனிதனுக்கு மனிதன் மாறுபடும். அதை வைத்து மனிதனை அடையாளம் காணலாம் என்று இல்லாத அனைத்தையும் அந்த குர் ஆன் வசனத்தில் திணிக்கலாமா
 

மற்ற தலைப்புகளை வாசிக்க https://www.piraivasi.com/p/zina-ul-abdeen.html