Sunday 19 July 2015

விஞ்ஞானம் வளர்ந்த பின்னும் பிறையை ஏன் கணக்கிடக்கூடாது?



https://upload.wikimedia.org/wikipedia/commons/6/62/Lunar_eclipse_al-Biruni.jpg
கேள்வி: நாம் பாமரராக இருக்கிறோம் நமக்கு எழுதி வைக்கவும் தெரியாது விண்கலையும் தெரியாது என ரசூல்லுல்லாஹ் சொல்லி இருக்கிறார்களே. நமக்குதான் விண்கலை தெரியும் அதை எழுதிப் பாதுக்காக்கவும் தெரியுமே. நாம் பிறையை கணக்கிட்டுக்கொள்ளலாமே?
உம்மி சமூகத்திற்கு விளங்காதென்றால் இன்றைய காலத்திலும் அறிஞர்களால் மட்டுமே விளக்க இயன்ற சொத்து பங்கு வைக்கும் கணக்கை படிப்பறிவில்லாத அந்த காலத்து மக்களிடம் இறைவன் ஏன் வழங்கினான். மேலும் அதே உம்மி சமுதாயத்திற்கு தொழுகை நேரங்களை அறிந்து கொள்ளும் விஞ்ஞானத்தை நபி ஸல் ஏன் சொல்லி தர வேண்டும். உம்மி சமுதாயம் என்பதால் தொழுகை நேரங்களை கணக்கிடும் முறையை நபி ஸல் சொல்லாமல் விட்டு விட்டார்களா? சிலர் தொழுகை நேரங்களை கணக்கிடுவதை குச்சியை நட்டு நிழை பார்ப்பது என்று ஏதோ கற்கால மக்கள் அறிவில்லாமல் செய்ததைப்போல விமர்சிக்கின்றனர். குச்சியை நட்டு நிழலை பார்த்து தொழுகை நேரத்தை அறிவதை இவர்கள் என்னவோ மிக சாதாரணமாக ஏளனமாக பார்கின்றனர். விஞ்ஞானமும் வரலாறும் தெரியாததே இதற்கு காரணம். குச்சியை நட்டு நிழலை அளந்து நேரத்தை கணக்கிடுவது மிகப்பெரிய விஞ்ஞானமாகும். அதன் மறுபெயர் “நிழற்கடிகாரம்”. ஆங்கிலத்தில் சண்டையல் sun dial. இதுவும் ஒரு விஞ்ஞானமாகும். நிழர்கடிகாரத்தின் விஞ்ஞானம் இன்றும் நம்மை வியப்பில் ஆழ்த்துவதாகவே உள்ளது. இன்றைய விஞ்ஞானத்தில் கிப்லாவை துல்லியமாக அமைக்க வேண்டும் எனில் குச்சியை நடுவதை தவிர வேறு வழியில்லை (விபரங்களுக்கு எனது கிப்லா - ஓர் அறிவியல் பார்வை எனும் கட்டுரையை வாசிக்கவும்). அவர்கள் அன்றைக்கு இருந்த விஞ்ஞானத்தை பயன் படுத்தி நேரத்தை அறிந்தனர். அதே முறைகளை மனிதன் இன்று கணினியின் உதவியுடன் கணக்கிடுகிறான்.
மேலும் உம்மி சமுதாய மக்களுக்கு ஃபஜ்ர் மற்றும் லுஹ்ர் தொழுகை நேரங்களை நபி ஸல் விளக்குவது ஒரு விஞ்ஞானி விளக்குவதை போல் உள்ளது. அவர்கள் பயன்படுத்திய வார்த்தைகள் இன்றும் நமக்கு ஆச்சரியத்தை வரவழைக்கிறது. லுஹ்ர் நேரம் என்பது சூரியன் நமது தீர்க்க ரேகையை கடக்கும் நேரமாகும். சுபுஹானல்லாஹ் தீர்க்க ரேகையை சூரியன் கடப்பதை நபி ஸல் எவ்வளவு அழகாக விளக்கி இருக்கிறார்கள் தெரியுமா. மேலும் பஜ்ர் நேரமான Astronomical Twilightஐ Zodiacal Lightஇலிருந்து எப்படி பிரித்தறிவது என்பதையும் மிக அழகாக விளக்கி உள்ளார்கள். (அதிக விளக்கத்திற்கு தொழுகை நேரங்கள் எனும் நமது ஆக்கத்தை வாசிக்கவும்). இஷாவின் ஆரம்ப நேரத்தையும் முடிவு நேரத்தையும் விளக்கும் ஹதீஸ்களும் விஞ்ஞான அறிவை காட்டுவதாகவே உள்ளன. தொழுகை நேரத்தை துல்லியமாக தெரிந்து கொள்ளவேண்டும் எனும் ஒரே காரணத்திற்காகதான் நபி ஸல் உம்மி சமூகத்திற்கும் விஞ்ஞானத்தை கற்றுகொடுத்துவிட்டு சென்றனர். இன்று நாம் அதை மேம்படுதியுள்ளோம் என்பது மட்டுமே.
ரசூல்லுல்லாவுடன் இருந்தவர்களுக்கு விஞ்ஞானம் தெரியாது, பிறையை கணக்கிட தெரியாது என்றே வைத்துக்கொள்வோம். ஆனால் அதற்காக அந்த காலத்தில் அந்த அறிவே இல்லை என்று சொல்லி விடக்கூடாது. ஈசா நபி காலத்திற்கு 1000 ஆண்டுகளுக்கு முன்பே பிறையை கணிக்கும் அறிவை மனிதர்களுக்கு இறைவன் வழங்கியிருந்தான். பாபிலோனியர்களிடம் சிறந்த சந்திர நாள்காட்டி இருந்தது. அமாவாசையை அவர்கள் துல்லியமாக கணக்கிட்டனர். சந்திர நாள்காட்டியை நிறுவுவதை விட சிரமமானது சூரிய நாள்காட்டியை நிறுவுவது. அதை 2500 ஆண்டுகளுக்கு முன்பே ரோமானியர்கள் நிறுவிவிட்டனர். ஈசா நபிக்கு முன்பு வாழ்ந்த ஜூலியஸ் சீசர் பூமி சூரியனை சுற்றி வரும் நாட்களை கணக்கிட்டு வருடத்திற்கு 365.25 நாட்களை கொண்ட சூரிய நாட்காட்டியை வடிவமைத்தார். ரசூலல்லாஹ் வாழ்ந்த காலத்தில் பிறையை மட்டுமல்ல கிரகணங்களை கணிக்கும் நுட்பத்தை இந்தியர்கள் அறிந்து வைத்திருந்தனர். அவர்களிடம் பின்னாளில் ஏற்படும் சூரிய கிரகணத்திற்கான அட்டவணைகள் இருந்தன. யூதர்கள் சூரிய நாள்காட்டிக்கு இணையாக சந்திர நாள்காட்டியிலும் காலநிலை மாற்றங்கள் இருக்க வேண்டும் என்பதற்கு மாதங்களின் எண்ணிக்கையை மாற்றும் (intercalary ) அறிவை பெற்றிருந்தனர் எனில் அவர்களுக்கு சூரிய ஓட்டத்தையும் சந்திர ஓட்டத்தையும் மிகத்துல்லியமாக கணிக்கும் ஆறிவு இருந்ததை அறியலாம்.
இவர்கள் “கணக்கிட வேண்டும்” என்று ஹதீஸ்களுக்கு பொருள் கொடுக்கிறார்கள். அப்படி கணக்கிடதான் வேண்டுமெனில் கணக்கிடும் முறையை நபிக்கு இறைவன் வழங்கி இருக்க வேண்டுமல்லவா. நபிக்கு எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பு பாபிலோனியர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் ரோமனியர்களுக்கும் இந்தியர்களுக்கும் வழங்கிய அறிவை நபிக்கு வழங்க இறைவனுக்கு எவ்வளவு நேரம் தேவைப்படும். அதை சொத்து பங்கு வைப்பு மற்றும் தொழுகை நேரங்கள் ஆகிய கணக்கை போல உம்மி சமூகத்திற்கு எளிமையாக விளக்க நபி பெருமானாருக்கு இயலாதா. அல்லது அன்று ரோமபுரிக்கும், பாபிலோனுக்கும், பாரசீகதிற்கும் இந்தியாவிற்கும் வியாபாரத்திற்கு சென்ற சஹாபாக்களிடம் நபி ஸல் பிறையை கணக்கிடும் முறையை கற்று வாருங்கள் என்று சொல்லி அனுப்பினார்களா. குறைந்த பட்சம் உள்ளூரில் இருந்த யூதர்களிடம் இருந்து கற்றார்களா. முஸ்லிம்களாக மாறிய முன்னாள் யூதர்களிடமாவது கேட்டார்களா?
நாம் உம்மி சமுதாயமாவோம். நமக்கு எழுதவும் தெரியாது. எண்ணவும் தெரியாது. மாதம் என்பது இப்படியும் அப்படியும் இருக்கும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதாவது ஒரு தடவை 29 ஒரு தடவை 30 என்றார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1913
நாம் எண்ணவும் மாட்டோம் எழுதவும் மாட்டோம்” என்பதை இவர்கள் “நாம் வானியல் கலையை அறிய மாட்டோம் அதை எழுதி வைக்கவும் தெரியாது” என்று மொழிப்பெயர்த்து குழப்பத்தை உருவாக்குகின்றனர். அரபுகள் அன்வா எனும் உயரிய நட்சதிரக்கலையை அறிந்து வைத்திருந்தனர். நாம் இன்று பயன்படுத்தும் சூரிய நாட்காட்டியைப் போல காலநிலையை காட்டும் சூரிய நாட்காட்டியாக அந்த அன்வா கலைப்பயன்பட்டது. ஆங்கில காலண்டர் எப்படி மழைக்காலத்தை காட்டியதோ அதே போல அன்வாவும் மழைக்காலம் எதுவெனக் காட்டியது. ஆனால் அரபுகள் சில நட்சத்திரங்களால் மழைப் பொழிகிறது என்று நட்சத்திரங்களை ஈமான் கொண்டு குஃப்ரில் விழுந்தனர். அதை மட்டுமே நபிகளார் தடை செய்து அன்வாவை விவசாயத்திற்குப் பயன்படுத்த அனுமதி வழங்கினார்கள். அத்தகைய உயரிய வானியல் கலையை அரபு சமுதாயம் அறிந்து வைத்திருந்தது. மேலும் சூரிய நாட்காட்டியைப் போல சந்திர நாட்காட்டியிலும் காலநிலை மாற்றங்கள் வரவேண்டும் என்பதற்காக அவர்கள் நசிய்யு எனும் கலையையும் செய்தனர். அன்வாவைப் பயன்படுத்தி காலநிலை மாற்றங்களை அறிந்து கொண்டு அதை சந்திர நாட்காட்டியில் புகுத்தினர். சில மாதங்களை அங்கும் இங்கும் மாற்றியும் சிலவருடங்களில் மாதங்களின் எண்ணிக்கையை 13 ஆக மாற்றியும் தாங்கள் விரும்பிய மாதங்கள் நல்ல காலநிலையில் வருமாறு செய்தனர். இந்த நசிய்யு கலையை அல்லாஹ் தடை செய்துவிட்டான். சூரிய நாட்காட்டி அன்வாவை தனியாகவும் பிறையை அடிப்படையாக கொண்ட நாட்காட்டியை மார்க்க விஷயங்களுக்கு தனியாகவும் பயன்படுத்த எந்த தடையும் மார்க்கத்தில் இல்லை.
இங்கே நாம் சொல்லவருவது என்னவென்றால் நபி ஸல் காலத்தில் வானியல்கலை இருந்தது அதை எழுதிவைக்கவும் (பதிவு செய்யவும்) அறிந்திருந்தார்கள். பதிவு செய்யாமல் அன்வா மற்றும் நசியுவை செய்ய இயலாது. அதனால் அவர்கள் வானியலை அறியவில்லை என்று மொழிப்பெயர்ப்பது முட்டாள்தனம். பல வேளைகளில் “மாதம் என்பது 29நாட்களைக் கொண்டது“ என்று எண்ணிக்கையை வாயால் நபி ஸல் சொல்லியுள்ளார்கள். சில வேளைகளில் எண்ணிக்கையை சொல்லாமல் சைகை செய்தார்கள். அவர்கள் யாரிடம் சைகை செய்தார்களோ அவர்களுக்கு 29என்று எண்ணக்கூட தெரியாதவர்கள். மேலே ஹதீஸிலும் அதுதான் சங்கதி. எப்போதுமே ஒரு ஹதீஸில் பாதியை எடுத்து மீதியை விடுவதால்தான் குழப்பமே ஏற்படுகிறது. எண்ணவும் எழுதவும் தெரியாத மக்களிடம் சைகையில் சொல்கிறார்கள். எண்ணிக்கை தெரிந்தவர்களிடம் வாயால் சொல்கிறார்கள். ஹதீஸின் இரண்டாம் பாகத்தில் அவர்கள் சைகையில் காட்டுவது இதை தெளிவாக நமக்கு விளக்குகிறது. எண்ணவும் எழுதவும் தெரியாத மக்களிடம் மாதத்தைப் பற்றி விளக்குவதற்காக நமக்கு எண்ணவும் எழுதவும் தெரியாது என்று சொல்லிவிட்டு சைகையில் காட்டுகிறார்கள். இதற்கு வானியல்கலை என்றும் அவர்கள் அதை அறியாததால் செய்யவில்லை என்றும் நாம் இன்று அறிந்ததனால் செய்கிறோம் என்பதும் மூடத்தனமான வாதமாகும்.
மேலும் பிறையைப் பற்றிய வானியல் மிகவும் எளியது, அது பாகப்பிரிவு மற்றும் தொழுகை நேரங்களை கணக்கிடுவதை விட மிக எளிமையானது. இன்று கணக்காபிள்ளைகள் என்று குதிக்கும் கூட்டத்தில் இருப்பவர்களில் பள்ளிக் கல்வி இல்லாதவர்கள் கூட தினமும் பிறையைப் பார்த்து அமாவாசையைக் கண்டு பிடித்து அதற்கு மறுநாள் நோன்பு பிடிக்கவேண்டும் என்று கூறுகின்றனர். இவ்வளவு எளிமையான கணக்கையா அம்மக்கள் தெரியாமல் இருந்தார்கள். அல்லது இதை அவர்களுக்கு விளக்குவதுதான் நபிக்கு சிரமமான காரியமா? அன்வா எனும் கணக்கை நாம் கணக்குபிள்ளைகளுக்கு விளக்க மண்டையை உடைக்க வேண்டியாதாக இருக்கிறது. அத்தகைய சிரமமான கணக்கை அன்றைய பாமரர்கள் அறிந்திருந்தனர். இன்றைய கணக்குப்பிள்ளை பாமரர்களுக்கு தெரிந்த கணக்கு அவர்களுக்கு சிரமமானதா?
மேலும் முக்கியமான தகவல் என்னவென்றால் கணக்காப்பிள்ளைகள் கணக்கிடுவது பிறையை அல்ல சந்திரனை. அல்லாஹ் மனிதனுக்கு காலம்காட்டியாக ஏற்படுத்தியிருப்பது சந்திரனையல்ல, பிறையை (2:189). பிறைகளைக் கணக்கிடவே முடியாது.
தெளிவுரை:
1. நபி ஸல் காலத்தில் உயரிய விண்கலை இருந்தது.
2. விண்கலை தெரியாமல் அவர்கள் அமாவாசைக்கு மறுநாள் நோன்பு பிடிக்காமல் இருக்கவில்லை. இறைக்கட்டளை என்பதால் மட்டுமே பிறையைக் கண்ணால் பார்த்து வணக்க வழிபாடுகளை செய்தார்கள்
3. நமக்கு விண்கலை தெரியாது அதை எழுதி பாதுகாத்து வைக்கவும் தெரியாது என்று பொருள்கொடுப்பது மூடத்தனமான வாதமாகும்.
தொடர்புடைய கட்டுரைகள்:
அன்வாவைப் பற்றி தெரிந்துகொள்ள
சர்வதேசப் பிறை ஒரு வெற்று சித்தாந்தம் என்பதை அறிய