Saturday 24 July 2021

நேரு காலண்டர் - வரலாற்றுப் பார்வை

 


இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டதாக சொல்லப்படும் ஒரு காலண்டரைப்பற்றி பார்ப்பதே இந்த பதிவின் நோக்கம்.


1952 ஆம் ஆண்டு "நாட்காட்டி மறுசீரமைப்புக் குழு" (Calendar Reform Committee) ஒன்றை ஜவர்ஹால் நேரு அவர்கள் அமைத்தார். இதில்தான் பலரும் பலவிதமான கருத்துக்களை கூறிவருகின்றனர். Calendar Reform Committee என்பதை சுருக்கமாக "CRC கமிட்டி" என்று கட்டுரையில் கையாண்டுள்ளோம்.


கிரிகோரியன் (ஆங்கில காலண்டர்) காலண்டருக்கு மாற்றுக் காலண்டரை கண்டுபிடிப்பதற்காகவே இந்த குழு அமைக்கப்பட்டது என்று பலர் தவறான நம்பிக்கையில் இருக்கின்றனர். உலகின் பல காலண்டர்களையும் ஆராய்ந்து இந்த குழு புது காலண்டரை கண்டுபிடித்ததாகவும் சிலாகிக்கின்றனர். 


உண்மையில் இந்த குழு செய்தது என்ன? இதுதான் நாம் பார்க்கப்போவது. 


இந்த குழு என்ன செய்தது என்பதை பார்ப்பதற்கு முன்பாக இந்த குழு அமைக்கப்பட்டதன் நோக்கத்தை பார்ப்போம்.


இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்டது. இந்தியாவை இந்தியர்களே ஆளத்தொடங்கிவிட்டனர். இப்போது, இந்தியர்களின் பண்டிகைகளுக்கு அரசாங்க விடுமுறை அளிப்பதில் சிக்கல் வருகிறது. ஒரு பண்டிகையானது இந்தியாவின் மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படும் நிலை இருந்ததே இந்த சிக்கலுக்குக் காரணம்.


பண்டிகைகள் இரண்டு விதத்தில் கணக்கிடப்பட்டு கொண்டாடப்படுகின்றன. 


(1) சூரியக் கணக்கு

(2) சந்திரக் கணக்கு


சூரியக் கணக்கில் பண்டிகை கொண்டாடப்படுவதற்கு உதாரணமாக பொங்கல் பண்டிகையைக் கூறலாம். இது ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் ஒன்றாம் தேதி கொண்டாடப்படும் பண்டிகை. சூரியக் கணக்கில் கொண்டாடப்படும் இதுபோன்ற பண்டிகைகளுக்கு விடுமுறை கொடுப்பதில் சிக்கல் இல்லை. சந்திரக் கணக்கில் பண்டிகை கொண்டாடப்படுவதற்கு உதாரணமாக தீபாவளி பண்டிகையைக் கூறலாம். இது, ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தின் அமாவாசை தினத்தில் கொண்டாடப்படும் பண்டிகை. இங்குதான் சிக்கல் எழுகிறது. 


அமாவாசை என்பது சந்திர ஓட்டத்தில் இருந்து எடுக்கப்படும் ஒரு கணக்கீடு. இந்த கணக்கீட்டை கொடுப்பது பஞ்சாங்கம். இந்த பஞ்சாங்கம் கணிப்பது பல விதத்தில் இருந்ததுதான் அமாவாசையை கணக்கிடுவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது. ஒரு ஊரில் திங்கள் கிழமையை அமாவாசை என்று கணக்கிட்டிருந்தால் இன்னொரு ஊரில் செவ்வாய் கிழமையை அமாவாசை என்று குறித்து வைத்திருக்கின்றனர்.  அமாவாசையில் கொண்டாடப்படும் பண்டிகைள் வெவ்வேறு கிழமைகளில் இருந்தால் எத்தனை நாள் விடுமுறை கொடுப்பது என்பதுதான் இங்கு சர்ச்சை. இந்த அமாவைசையை இந்தியா முழுவதும் ஒரே கிழமைக்கு மாற்றுவதன் மூலமாக ஒரே ஒரு நாள் விடுமுறையை இந்தியா முழுவதும் கொடுக்க முடியும் என்பதுதான் கிடைக்கும் முடிவு. 


இந்தியா முழுவதும் ஒரே கிழமையில் அமாவாசையை கொண்டுவருதற்கு அனைத்து பஞ்சாங்களிலும் திருத்தம் கொண்டுவர வேண்டும். அப்போதுதான் எல்லா பஞ்சாங்களிலும் ஒரே கிழமையில் அமாவாசையை கொண்டுவர முடியும். இது சாத்தியமா?.


சாத்தியமே இல்லை.


ஏனென்றால், பஞ்சாங்கம் என்பது இந்துக்களின் நம்பிக்கை சார்ந்த ஒன்றாக இருக்கிறது.  பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு சித்தர்களின் வார்த்தைகள் மூலமாக உருவாக்கப்பட்டதாக நம்பப்படும் பஞ்சாங்கத்தில் அரசாங்கம் கை வைப்பதை எவரும் விரும்பமாட்டார்கள். டெலஸ்கோப், கடிகாரம், உருண்டை பூமி என பல விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் சுமார் நூற்றி ஐம்பது வருடங்களுக்கு முன்பு நவீனப்படுத்தப்பட்ட பஞ்சாங்கத்தையே பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.


நவீன பஞ்சாங்கத்தை "திருக்கணித பஞ்சாங்கம்" என்று தனியே பிரித்து அழைத்தனர். சித்தர்களின் வார்த்தைகள் மூலமாக தயாரிக்கப்பட்டதாக நம்பப்படும் பஞ்சாங்கத்தை "சுத்த வாக்கிய பஞ்சாங்கம்" என்று நம்பிக்கையாக அழைக்கின்றனர். 


பஞ்சாங்கம் தொடர்பான இந்த நம்பிக்கையை தகர்த்து அனைத்து பஞ்சாங்கங்களிலும் ஒரே நாளில் அமாவாசையை கொண்டுவருவது சாத்தியமில்லை. இங்குதான், நாட்காட்டி மறுசீரமைப்புக்கு குழு தன்னுடைய பணியைத் தொடங்கியது. அந்த குழுவின் 280 பக்க ஆய்வறிக்கையை விமர்சிப்பதன் மூலமாக அந்த குழு செய்தது என்ன என்பதைப் பார்ப்போம். கிறிஸ்தவ பாதிரியார்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட கிரிகோரியன் காலண்டருக்கு மாற்றாக இந்தியாவில் இருந்து அறிவியல் பூர்வமாக காலண்டர் தயாரிக்கப்பட வேண்டும் என்றது அந்த குழு. அந்த காலண்டரில் பண்டிகைகள் குறிக்கப்பட வேண்டும் என்றது. 


கிருஸ்தவ மதத்தை பின்பற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒற்றுமையாக ஆங்கில நாட்காட்டியைப் பார்த்து பண்டிகைகளை ஒரே நாளில் கொண்டாடுகிறார்கள். முஸ்லிம்கள் வாழும் அரபு நாடுகளில் ஹிஜ்ரி காலண்டரை பின்பற்றுகிறார்கள். ஆனால் இந்தியாவில் 30 க்கும் மேற்பட்ட நாட்காட்டிகள் உள்ளன. எதிர் கருத்துக்கள் கொண்ட இரு பஞ்சாங்க குழுக்கள் ஒரே ஊரில் இருவித பஞ்சாங்கங்களை வெளியிடுகிறார்கள். ஒரே நகரில் பல நாட்களில் ஒரே பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. [1]


என்கிற குமுறலுடன் அறிக்கை ஆரம்பம் ஆகிறது. 


அதாவது, கிறிஸ்தவர்களுக்கு நாடு இருப்பதுபோல், முஸ்லிம்களுக்கு நாடு இருப்பதுபோல் இந்துக்களுக்கு நாடு வேண்டாமா! என்று சங்கிகள் பேசும் சித்தாந்தத்தை அப்போதைய காலகட்டத்திலேயே இந்த காலண்டர் குழு ஆரம்பித்து வைத்துவிட்டது. கிறிஸ்தவர்களுக்கு ஒரே காலண்டர் இருப்பதுபோல் முஸ்லிம்களுக்கு ஒரே காலண்டர் இருப்பதுபோல் இந்துக்களுக்கும் ஒரே காலண்டர் வேண்டாமா! என்ற கோஷத்துடன் இந்த காலண்டர் குழுவின் அறிக்கை தொடங்குகிறது. 


காதல் கடிதத்தில் இடையிடையே மானே, தேனே, பொன்மானே என்று இடுவதைப் போல அறிக்கையில் ஆங்காங்கே எல்லா பிரச்சனைக்கும் காரணம் முஸ்லிம்களும் கிருத்தவர்களும்தான் என்கிறது அறிக்கை [2]. 


ஆங்காங்கே க்ரிகோரியன் நாட்காட்டி (unscientific) அறிவியல் அடிப்படையில் பிழையானது என்றும் அறிக்கையில் பதிவு செய்துள்ளார்கள் CRC கமிட்டி[3].


நாம் தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கும் கிரிகோரியன் (ஆங்கில) காலண்டரில் என்ன அறிவியல் பிழையை கண்டுபிடித்தார்களாம்?


அறிவியல் வளர வளர அறிவியல் அளவீடுகளின் துல்லியம் அதிகரிக்கும். ஜூலியஸ் சீசர் காலத்தில் வாழ்ந்த அறிவியலாளர்களால் ஒரு பருவ ஆண்டு 365 ¼ நாட்களைக் கொண்டது என்று அளவிட முடிந்தது. எனவே, மூன்று வருடங்கள் 365 நாட்களைக் கொண்டதாகவும் நான்காம் வருடம் 366 நாட்களைக் கொண்டதாகவும் ஒரு பருவ நாட்காட்டியை ஜூலியஸ் சீசரின் அறிவியலாளர்கள் வடிவமைத்திருந்தனர். ஆனால் பிற்காலத்தில் இதனை துல்லியமாக அளந்து 365.24219 என்று அறிந்தார் அலோசியஸ் லிலியஸ் என்பவர். இதனால் 1500 வருடங்களில் பருவ ஆண்டில் 10 நாட்கள் வித்தியாசம் ஏற்பட்டது. எனவே நாட்காட்டியில் 10 நாட்களைக் குறைத்து 365 ¼ நாட்கள் ஓர் ஆண்டு என்றிருந்ததை 365.2425 நாட்கள் ஓர் ஆண்டு என்று மாற்றினார் கிறிஸ்தவ போப் கிரிகோரி. இதனால் அதுவரை ஜூலியன் காலண்டர் என்றழைக்கப்பட்ட நாட்காட்டி அன்றிலிருந்து கிரிகோரியன் காலண்டர் என்று அழைக்கப்பட்டது [4].


அதாவது, ஜுலியன் காலண்டரில் இருந்து 10 நாட்களைக் குறைத்து உருவாக்கப்பட்டதுதான் கிரிகோரியன் (ஆங்கில) காலண்டரின் அறிவியல் பிழை என்கிறது அந்த கமிட்டி. ஆங்கில காலண்டர் பல நூறு வருடங்களாக பயன்படுத்தப்பட்டு அதனுடைய குறைகள் அவ்வப்போது சரிசெய்யப்பட்டுதான் வருகிறது. இயற்கையின் பருவகால சுழற்சியை கணக்கிடுவதற்கு ஒரு எளிமையான காலண்டர் இருக்கிறதென்றால் அது பத்து நாட்கள் குறைக்கப்பட்ட கிரிகோரியன் காலண்டர்தான். இதே போன்று நாட்கள் குறைக்கப்பட்ட நடைமுறை இந்தியாவில் இருந்ததை இந்த கமிட்டியே ஒத்துக்கொண்டிருக்கிறது. 


இதே போல கிபி 400 களில் அப்போதைய இந்திய வானியல் ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்ட சூரிய சித்தாந்தம் எனும் புத்தகத்தின் அடிப்படையில் ஓர் ஆண்டு என்பது 365.258756 நாட்களாக கணக்கிடப்பட்டிருந்தது. இதனால் 1400 வருடங்களில் 23 நாட்கள் பிழையாக கணக்கிடப்பட்டிருந்த. சூரிய சித்தாந்தத்தில் சொல்லப்பட்ட ஆண்டுக் கணக்கைப் பின்பற்றியே இந்திய சோதிடர்கள் பஞ்சாக்கங்களை உருவாக்குகின்றனர் எனவே அப்போது இந்தியாவில் கொண்டாடப்பட்ட இந்து, ஜைன, புத்த பண்டிகைகள் 23 நாட்கள் தாமதமாகக் கொண்டாடப்பட்டுள்ளன. பல ஜோதிடப் பிரிவுகளுக்கு இடையேயான கருத்து வேற்றுமைகளும் பழைய பஞ்சாங்க கணக்கைப் பின்பற்றியதால் ஏற்பட்ட 23 நாட்கள் பிழையும்தான் இந்தியாவில் அக்காலத்தில் இருந்த நாட்காட்டிப் பிரச்சனைகள் என்கிறது அறிக்கை [5].


பத்து நாட்கள் குறைத்ததற்கே காற்சிலம்பை கழட்டி கண்ணகியாக மாறிய காலண்டர் குழு, இருபத்தி மூன்று நாட்கள் வித்தியாசம் இருந்த இந்திய காலண்டர் முறையை மேலோட்டமா பிழை என்று கூறிவிட்டு கடந்து விடுகிறது.


ஆனால், கிரிகோரியன் காலண்டரை கிழி கிழியென கிழிக்கிறது CRC குழு. 


கிரிகோரியன் நாட்காட்டி (unscientific) அறிவியல் அடிப்படையில் பிழையானது என்று அறிக்கையின் முன்னுரையில் கூறி இருந்தார்கள். மீண்டும் ஆங்காங்கே இதனை அறிக்கை முழுக்க பதிவு செய்துள்ளார்கள். ஆனால் 280 பக்க அறிக்கையில் எங்குமே கிரிகோரியன் நாட்காட்டியின் அறிவியல் பிழைகளை அவர்கள் காட்டவே இல்லை. அவர்கள் காட்டிய பிழைகள் நகைப்புக்குரியதாக மாறிப்போனது.


கிரிகோரியன் அறிவியல் பிழைகள் :


- ஆண்டின் துவக்கமும் மாதத்தின் ஒரே வாரநாளில் இருப்பதில்லை

- மாத நாட்கள் 28 முதல் 31 வரை மாறி மாறி வருகின்றன

- காலாண்டின் நாட்கள் 90-92 என மாறுகின்றன

- அரையாண்டின் நாட்கள் 180 - 184 என மாறுகின்றன


இவைதான் கிரிகோரியன் நாட்காட்டியின் பிழைகள் என்று அறிக்கை சொல்பவை [6].


** ஒரு வருடமானது திங்கள் கிழமையில் தொடங்கினால் அதற்கு மறு வருடம் செய்வாய் கிழமையில்தான் தொடங்கும். ஆனால், எல்லா வருடமும் ஒரே கிழமையில்தான் தொடங்க வேண்டும் என்றும் அதுதான் அறிவியல் பூர்வமான காலண்டர் என்றும் கூறுகிறது CRC கமிட்டி.


** மாதத்தின் நாட்கள் 28, 29, 30, 31 என நான்கு விதமாக அமைவது அறிவியல் பூர்வமானது அல்ல என்கிறது CRC கமிட்டி.


இப்படி குற்றப்பத்திரிக்கை வாசிக்கும் CRC கமிட்டியின் அறிக்கை முழுவதும் கிருத்தவ மதத்தை ஏளனம் செய்து செல்வதைப் பார்க்க முடிந்தது. அதிலும் வார நாட்கள் எனும் தலைப்பில் யூதர்கள் மீது மிகுந்த வெறுப்பை பதிவு செய்துள்ளார்கள். 


படைப்பின் ஆரம்ப காலத்திலிருந்தே வார நாட்கள் இருப்பதாக யூதர்கள் நம்புகிறார்கள். இது டார்வினும் ஐன்ஸ்டைனும் வாழும் இந்த காலத்தில் ஏற்றுக்கொள்ள இயலாதது என்கிறார்கள் [7][8].


வார நாட்கள் என்பதே தேவையில்லாத ஒன்று என்று முடிவு செய்து சொல்கிறார்கள். வார நாட்கள் என்பது முஸ்லிம்களுக்கும், கிருத்தவர்களுக்கும், யூதர்களுக்கும் மட்டுமே முக்கியமானதல்ல, இந்து மதத்தில் பல பிரிவினர் வார வழிபாடுகளை செய்கின்றனர். அதையும் இவர்கள் கண்டும் காணாததைப் போல கடந்து செல்கிறார்கள். வார நாட்கள் இந்துக்களுக்கு தேவை இல்லை எனும் முடிவுக்கு வரும் கமிட்டி அதற்கு ஆதாரமாக காட்டுவது பிராமண வேதங்களையே [9]


இதைவிட பெருங்கொடுமை இந்த குழுவினர் மெச்சிய ஒரு காலண்டர்தான். 


1930 ல் எலிசபெத் அகிலிஸ் என்பவர் உருவாக்கிய World Calendar என்கிற ஒன்றை கிரிகோரியன் நாட்காட்டியை விட சிறந்ததாக  முன்மொழிகிறது CRC கமிட்டி. [11]


CRC கமிட்டி கூறும் இந்த காலண்டரின் சிறப்பம்சங்கள்...


- எல்லா ஆண்டுகளுமே ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கும்.

- எல்லா காலாண்டுகளும் 91 நாட்களைக் கொண்டிருக்கும்

- எல்லா அரையாண்டுகளும் 182 நாட்களைக் கொண்டிருக்கும் [14]


அதெப்படி எல்லா வருடமும் ஞாயிற்றுக்கிழமையிலேயே தொடங்க முடியும்? என்ற சந்தேகம் உங்களுக்கு எழுந்தால் காலண்டரின் அடிப்படை உங்களுக்கு புரிந்திருக்கிறது என்று அர்த்தம்.


365 நாட்கள் கொண்டதை ஒரு வருடம் என்கிறோம். இதுமட்டும் 364 நாட்களாக இருந்தால் எல்லா வருடமும் ஞாயிற்றுக்கிழமையிலேயே தொடங்குவதாக இருக்கும். இங்கு பிரச்சினையே இந்த 1 நாள்தான். இந்த 1 நாளை தேதியில்லாத நாளாகவும் கிழமையில்லாத நாளாகவும் கருதவேண்டும் என்பதுதான் இந்த காலண்டரின் அம்சம்.ஒரு வருடத்தை, 364+1 என்று பிரித்து அந்த ஒரு நாளை கிழமையில்லாத நாள் என்று கருதி அதை "W" (worlds day) என்று அழைக்க வேண்டும் என்பதுதான் இந்த காலண்டரின் சிறப்பம்சம். வருடத்திற்கு ஒரு நாளை இவ்வாறாக கிழமையில்லாத நாளாக மாற்றினால் எல்லா வருடமும் ஞாயிற்றுக்கிழமையிலேயே தொடங்கும் என்பதுதான் இந்த சிறப்பம்சம்.


இது நவீன விரும்பிகளுக்கும் நாத்திகர்களுக்கும் ஒரு வேளை சுவாரஸ்யமானதாக இருந்திருக்கலாம். ஆனால், மதம் சார்ந்தவர்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெயரில்லாத நாட்களை இடையே சொருகினால் வார வழிபாடு நடத்துபவர்களுக்கு அது சிக்கலை ஏற்படுத்தும்.


** வெள்ளிக்கிழமை தொழவேண்டிய முஸ்லிம்கள் ஜும்ஆ தொழுகையை சனிக்கிழமையன்று தொழவேண்டும்.


** சனிக்கிழமை விரதம் இருக்கும் இந்துக்கள் ஞாயிற்றுக்கிழமைன்று விரதம் இருக்க நேரிடும்.


** ஞாயிற்றுக்கிழமை சர்ச்சிற்கு செல்ல வேண்டிய கிறிஸ்தவர்கள் திங்கட்கிழமை செல்ல நேரிடும்.


இப்படிப்பட்ட முட்டாள்தனமான காலண்டர் யோசனையை நமது இந்திய கணித மேதைகள் அறிவியலாளர்கள் வரவேற்றுள்ளார்கள் என்பது நம்மை வியப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்கிறது.


கிரிகோரியன் காலண்டரை ஏளனம் பேசி, முட்டாள்தனமான World calendar என்பதை ஆதரித்துப் பேசி ஆய்வறிக்கை எழுதிய CRC கமிட்டி கண்டுபிடித்த அந்த காலண்டர் எங்கே?


வாருங்கள் அதைப் பார்ப்போம்!.


சுவாரஸ்யமான இறுதிப் பகுதியை அடைந்துள்ளோம். கிரிகோரியன் நாட்காட்டி அறிவியல் பூர்வமானது இல்லை (unscientific) என்றும் அதில் பல குறைகள் இருப்பதாகவும் கூறிவிட்டு, இந்தியாவில் பல்வேறு பஞ்சாங்கள் இருப்பதற்கு முஸ்லிம்களும் கிருத்தவர்களும் தான் காரணம் என்று சொல்லிவிட்டு இறுதியாக இந்தியாவுக்காக ஒருகிணைக்கப்பட்ட புதிய நாட்காட்டி ஒன்றை நமது இந்திய கணித மேதைகளும் அறிவியலாளர்களும் கண்டுபிடித்ததாக அறிமுகம் செய்கிறார்கள். 


CRC கமிட்டி கண்டுபிடித்த அந்த காலண்டரின் பெயர் "சாகா".


** இந்த காலண்டர் 365 நாட்கள் கொண்டது. 


** நான்கு வருடங்களுக்கு ஒருமுறை 366 நாட்களாக இருக்கும்.


இது கிரிகோரியன் காலண்டர்தானே! என்று நீங்கள் கேட்காவிட்டால் உங்களுக்கு காலண்டரின் அடிப்படை தெரியவில்லை என்றே அர்த்தம். [12]


கிரிகோரியன் காலண்டரை கழுவி கழுவி ஊற்றிவிட்டு பிறகு அதையே "சாகா" என்று பெயர் மாற்றி வெளியிட்டிருக்கிறது CRC கமிட்டி.


** கிரிகோரியன் மாதங்களுக்கு சித்திரை வைகாசி என இந்தியப் பெயர்சூட்டி 

மகிழ்ந்திருக்கிறது இந்த கமிட்டி. [13]


** ஒரு மாதத்திற்கு 30 அடுத்த மாதத்திற்கு 31 என நாட்கள் இருந்தால் அது கிரிகோரியன் மாதம். தொடர்ச்சியாக ஆறு மாதங்கள் 30 மீதம் ஆறு மாதங்கள் 31 என நாட்கள் இருந்தால் அது சாகா காலண்டர். [13]


** ஜனவரி 1 அன்று புதுவருடம் என்று சொன்னால் அதூ கிரிகோரியன் காலண்டர். மார்ச் 22 அன்று புதுவருடம் என்று சொன்னால் அது சாகா வருடம். [13]


** பிப்ரவரி மாதத்தில் 1 நாளைச் சேர்த்தால் அது கிரிகோரியன் லீப் வருடம். சித்திரை மாதத்தில் 1 நாளைச் சேர்த்தால் அது சாகா லீப் வருடம். [13]


இரட்டை வேடத்தில் (Double action) எம்ஜிஆர் நடித்த ஒரு படத்தில் இரண்டு எம்ஜிஆருக்கும் இடையில் இருக்கும் ஒரே வேறுபாடு முகத்தில் ஒட்டப்பட்டிருக்கும் ஒரு மரு மட்டுமே. 


மரு இல்லாவிட்டால் அது நல்ல எம்ஜிஆர். மரு இருந்தால் அது கெட்ட எம்ஜிஆர். 


கிரிகோரியனின் மரு வைத்த இரட்டை வேடக் காலண்டர்தான் இந்த சாகா காலண்டர். 


கிரிகோரியன் காலண்டரை அவ்வளவு குறை சொல்லிவிட்டு, எல்லா மதங்களையும் ஏளனம் செய்துவிட்டு, வார நாட்களையும் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டு இறுதியில் அதே கிரிகோரியன் காலண்டரில் வந்து சரணடைந்தனர் இந்திய கணித மேதைகளும் அறிவியலாளர்களும். 


சாகா என்று பெயர் வைத்து சாகா ஆண்டுமானம் துவங்குவதற்கு காரணமாக அவர்கள் சொன்னது காலம் காலமாக சாகாத்விபி (Sakadvipi) எனும் பிராமண சோதிட சாதியினர் பின்பற்றி வருவதுதான் காரணமாம் [10].


ஆங்கிலேயர்களையும் கிருத்தவர்களையும் அவ்வளவு குறை சொல்லிவிட்டு இறுதியாக இவர்கள் அறிவியல் தகவல்கள் அனைத்தையும் சர். ஹரோல்ட் ஸ்பென்சர் எனும் வெள்ளைக்கார கிருத்தவரிடமே வாங்கியதையும் பதிவு செய்துள்ளனர். நேரு அவர்களின் ஆட்சியில் பிராமணர்களால் செய்யப்பட்ட வரலாற்றுப்பிழை இந்த ஆய்வறிக்கை.


கிரிகோரியன் காலண்டரையே காப்பியடித்து புதிய காலண்டர் கண்டுபிடித்ததாக கூற வேண்டியத் தேவை CRC கமிட்டிக்கு ஏன் ஏற்பட்டது? இதுதான் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம்.


நாட்காட்டி மறுசீரமைப்புக் குழு (CRC) அமைக்கப்பட்டதன் நோக்கமே இந்துக்களின் பண்டிகைகளை இந்தியா முழுவதும் ஒரே தேதியில் கொண்டுவருவதற்காகவே. பஞ்சாங்கத்தின் அடிப்படையில் அமைந்திருக்கும் இந்துக்களின் பண்டிகைகள் பலவிதமான பஞ்சாங்கக் கணிப்பினால் வெவ்வேறு கிழமையில் கொண்டாடப்படும் நிலையில் இந்தியா முழுவதும் ஒரே கிழமையில் அந்த பண்டிகைகளை மாற்றுவதில் இருந்த சிக்கல் எந்த பஞ்சாங்கத்தை அடிப்படையாக வைத்து பண்டிகைகளைமுடிவு செய்வது என்பதுதான்.


பஞ்சாங்கத்தை கணிப்பவர்கள் அவரவர் பகுதியை முன்னிறுத்துவதுதான் ஒரே பண்டிகை பல நாட்களிள் வருவதற்கு காரணமாக அமைந்துவிடுகிறது என்பதை கண்டுபிடித்த CRC கமிட்டி, இந்தியா முழுமைக்கும் ஒரே பஞ்சாங்கத்தை கணிக்கும் விதமாக

எல்லைக் கோட்டை நிர்ணயித்தது CRC கமிட்டி. 


மத்தியப் பிரதேச மாநிலத்தின் (தற்போதைய சத்தீஸ்கார்) ஓரிடத்தில் அந்த கற்பனை எல்லைக் கோட்டை போட்டது CRC கமிட்டி. ( 82° 30' E, 23° 11' N)


இந்த இடத்தில் இருந்து பஞ்சாங்கத்தை கணித்து இந்தியா முழுவதும் ஒரே கிழமையில் இந்து பண்டிகைகளை கொண்டு வந்தது. இதன் மூலம் எதிர்காலத்தில் வரக்கூடிய பண்டிகைகளின் தேதியை முன்கூட்டியே காலண்டரில் குறித்து வைத்துக் கொள்ள முடியும்.


இந்த பண்டிகை நாட்களை இந்தியாவின் அரசிதழிலும் (Gazette) வெளியிட முடியும். 


இந்தியாவின் அதிகாரப்பூர்வ காலண்டராக கிரிகோரியன் காலண்டர் மட்டுமே அப்போது இருந்த நிலையில் இந்துக்களின் பண்டிகைகளை கிறிஸ்தவ காலண்டராக சித்தரிக்கப்பட்ட கிரிகோரியன் காலண்டரில் குறித்து வைத்தால் அது இந்துக்களின் பஞ்சாங்க நம்பிக்கையை தகர்ப்பதாக அமைந்துவிடும்.


இந்துக்களின் பண்டிகைகளை கிறிஸ்தவ காலண்டர் அடிப்படையில் கொண்டாடும் நிலை ஏற்படுவதை தவிர்ப்பதற்காகவே கிரிகோரியன் காலண்டரையே காப்பியடித்து "சாகா" எனும் காலண்டரை தயாரித்தது CRC கமிட்டி. இந்தியா முழுமைக்கும் பொதுவான ஒரு பஞ்சாங்கத்தை கணிக்கும் வழிமுறையை கண்டுபிடித்ததுதான் CRC கமிட்டியின் சாதனை. இந்த பஞ்சாங்கத்தை கிரிகோரியன் காலண்டரில் கணக்கிடுவதை  அசிங்கமாகக் கருதி அதே கிரிகோரியன் காலண்டரை சாகா காலண்டர் என பெயர் மாற்றி அதில் பஞ்சாங்கத்தை கணக்கிட்டது இந்த கமிட்டி.


நிலமை இப்படி இருக்க தமிழ்நாட்டில் ஒரு கூட்டம் நேருவே கிரிகோரியன் காலண்டர் பிழையானது என்று சொல்லிவிட்டார் என்றும் நாட்காட்டி மறுசீரமைப்புக்குழுவும் சொல்லிவிட்டது என்றும் 1952 ஹிஜ்ரா கமிட்டி இருந்திருந்தால் ஹிஜ்ரா காலண்டர் இந்திய தேசியக் காலண்டராக ஆகியிருக்கும் என்றும் பரப்புரை செய்கின்றனர்.


ஹிஜ்ரா காலண்டர் எனும் பெயரில் 2000ம் ஆண்டுமுதல் தமிழ்நாட்டில் காயல்பட்டினம் மற்றும் ஏறுவாடி எனும் கிராமங்களில் சில வீடுகளில் பயன்படுத்தப்படும் இந்த காலண்டர் உண்மையில் 1972ம் ஆண்டு முதல் 1999ம் ஆண்டுவரை சவூதி அரேபியாவில் பயன்படுத்தப்பட்ட காலண்டர் ஆகும். 1999ல் அக்காலண்டரை சவூதி அரசு குப்பையில் எறிந்தது அந்த வழியாக சென்ற முதியவர் ஒருவர் அதனை எடுத்து வந்து தானே அதை உருவாக்கியதாக சொல்லி தமிழ் நாட்டில் சிலரிடம் விற்றார். ஆக 1953ல் அந்த சவுதிக் கழிவு இல்லாததால் ஹிஜ்ரா இயக்கத்தினர் கனவு காண இயலாது.


அடுத்ததாக கிரிகோரியன் காலண்டரில் என்னென்ன பிழைகள் இருப்பதாக நாட்காட்டி மறுசீரமைப்புக்குழு சொன்னதோ அந்த பிழைகள் அனைத்துமே ஹிஜ்ரா காலண்டரில் இருக்கிறது.


- ஆண்டின் துவக்கமும் மாதத்தின் ஒரே வாரநாளில் இருப்பதில்லை


- ஒரே மாதம் ஓராண்டில் 29 நாட்களாக இருந்தால் மறு ஆண்டில் 30 நாட்களாக இருக்கிறது


- காலாண்டின் நாட்கள் சமமாக இல்லை 


- அரையாண்டின் நாட்கள் சமமாக இல்லை


1953 ல் ஹிஜ்ரா கமிட்டி இருந்திருந்தாலும் இவர்களின் காலண்டர் அப்போதும் குப்பையில்தான் சென்றிருக்கும்.


நாட்காட்டி மறுசீரமைப்புக்குழுவுக்கும் ஹிஜ்ரா இயக்கத்திற்கும் சில ஒற்றுமைகள் உள்ளன. நாட்காட்டி மறுசீரமைப்புக்குழுவைப் போலவே கிரகோரியன் காலண்டரை குறை சொல்லித் திரிவதே ஹிஜ்ரா இயக்கத்திற்கு வாடிக்கை. எனினும் கிரிகோரியன் காலண்டரில் இருக்கும் அறிவியல் பிழை என்ன என்பதை இரு தரப்பினரும் சொல்லவில்லை. நாட்காட்டி மறுசீரமைப்புக்குழு க்ரிகொரியன் காலண்டரை எடுத்து சம்ஸ்கிருத முலாம் பூசியதைப் போலவே கிரிகோரியன் தேதிகளில் கொடுக்கப்பட்ட அமாவாசை நேரங்கள் மீது அரபு மாதங்களின் பெயர்களை ஒட்டி வைத்து நாங்களே கண்டுபிடித்த காலண்டர் என்று சொன்னவர்கள் ஹிஜ்ரா இயக்கம். காலண்டர் ஏமாற்று வித்தையை பிராமணர்களிடமிருந்துதான் கற்றார்களோ ஹிஜ்ரா இயக்கத்தினர்.


பிராமணர்களை தவிர மற்ற அனைத்து இந்து சாதியினரையும் முஸ்லிம்களையும் கிருத்தவர்களையும் இந்துக்களையும் கொச்சைப்படுத்தி வாரநாட்களை கேள்விக்குறியாக்கிய இந்த அறிக்கைக்குள் என்ன இருக்கிறதென்றே தெரியாமல் க்ரிகொரியன் காலண்டரை குறை சொல்லிவிட்டார்கள் என்றும் ஒற்றை காரணத்திற்காக இதனை பரப்பி மகிழ்கிறார்கள் ஹிஜ்ரா இயக்கத்தினர்.


ஆதாரங்கள்:- அடிக்குறிப்பு எண்களை பின்வரும் PDF file ல் இருக்கும் bookmarkகளை க்ளிக் செய்வதன் மூலம் நாம் மேற்கோள் காட்டும் பகுதியை CRCயின் ஆய்வறிக்கையில் வாசிக்க இயலும் 


https://drive.google.com/file/d/1vpbvfpv6g4xgT6DLGdUGhCRigOwgr7XK/preview?usp=sharing