இன்றைய இஸ்லாமிய சமுதாயம் ஹிஜ்ரி ஆண்டுமானத்தை (சகாப்தத்தை) ஒரு இஸ்லாமிய வழிமுறையாகவேப் பார்க்கிறது. முஸ்லிம்கள் ஹிஜ்ரி ஆண்டைதான் பயன்படுத்த வேண்டும் என்று ஒரு கூட்டம் பிரச்சாரம் செய்கிறது. ஹிஜ்ரி ஆண்டுமுறை இஸ்லாத்தில் இருப்பதா? ஹிஜ்ரி ஆண்டுமுறையத்தான் இஸ்லாமியர்கள் பயன்படுத்த வேண்டுமா?
ஒரு நிகழ்வை சகாப்தமாகக் கொண்டு ஆண்டுகளை எண்ணும் வழக்கம் எல்லா காலத்திலும் எல்லா கலாச்சாரத்திலும் இருந்தது. ஒரு நிகழ்வை அடிப்படையாக கொண்டு அந்நிகழ்வு நடந்த ஆண்டிலிருந்து ஆண்டுகளை எண்ணுதல் ஆண்டுமானம் எனப்படும். ஹிஜ்ரி, ஹிஜ்ரா, ஹிஜ்ரத் என்பது நபி (ஸல்) மக்காவை நாடு துறந்து மதீனாவுக்கு வந்த நிகழ்வைக் குறிப்பதாகும். இந்த நிகழ்சி நடந்ததை முதலாம் ஆண்டாகக் கொண்டு ஆண்டுகளை எண்ணுவதே ஹிஜ்ரி ஆண்டுமானம். நபி (ஸல்) வாழ்ந்த காலத்தில் ஹிஜ்ரி எனும் ஆண்டுமானத்தை அவர்கள் பயன்படுத்தவில்லை. எந்த ஒரு இஸ்லாமிய வரலாற்று நிகழ்வுகளையும் (நுபுவத், ஹிஜ்ரத், போர்கள், உடன்படிக்கைகள்) நபி (ஸல்) தேதியுடன் பதிவு செய்யச் சொல்லவும் இல்லை. இஸ்லாமிய மார்க்கத்தில் வரலாற்று பதிவுகளுக்கு முக்கியத்துவம் இல்லை என்பதையும் ஆண்டுமானத்திற்கு எந்த வரையறையும் இஸ்லாத்தில் இல்லை என்பதையும் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். “நமக்கென்று தனியாக ஒரு நாட்காட்டி இருந்தால்தான் நம் வரலாற்றைப் பதிவு முடியும், வரலாறு இல்லாத சமூகம் அழிந்து போய்விடும்” என்பதெல்லாம் தங்கள் நாட்காட்டியை விற்க சிலர் போடும் மூடத்தனமான கூச்சலே அன்றி வேறில்லை. இஸ்லாத்தில் இதற்கு எந்த அடிப்படையும் இல்லை.
ஹிஜ்ரி ஆண்டுமானத்தின் வரலாறு
ரசூலுல்லாஹ் மரணித்து 7 வருடங்களுக்குப் பிறகு ஆட்சியாளராக இருந்த உமர் (ரலி) பல நிர்வாகக் கட்டமைப்புகளைச் செய்யத்துவங்கி இருந்தார். அதன் அடிப்படையில் வரி வசூலிக்கும் பதிவுப்புத்தகங்களையும் உருவாக்கி இருந்தார். அப்போதுதான் தொடர்ச்சியாகப் பல நிகழ்வுகள் நிகழ்கின்றன. உமர் (ரலி) எழுதிய மடல்களில் தேதிகள் இல்லை என்றும் கொடுத்த காசோலைகளில் தேதி இல்லை என்றும் புகார்கள் எழுந்தன. உடனடியாகச் சஹாபாக்களை கூட்டி ஆலோசனை செய்தார் உமர் (ரலி). 01.05.2017 என்பது போன்ற இலக்கதினாலான தேதி அவர்களுக்கு தேவைப்பட்டது. தேதி என்பது ஏற்கனவே அவர்களிடமிருந்துதான். *முதல் நாள்*, - *மே மாதம்* - *கிருத்து பிறந்து இரண்டாயிரத்து பதினேழாம் வருடம்* என்பது போன்ற பெயர்களினாலான தேதி முஸ்லிம்களிடமும் இருந்தது. உதா, நபிகளார் ஹஜ் செய்தது எப்போது என்று கேட்டால் அவர்கள் *வெள்ளிக்கிழமை - ஒன்பதாம் நாள் - துல் ஹஜ் மாதம் விடை பெறும் வருடம்* என்பார்கள். இவ்வாறு தேதி என்பது பெயர்களாக இருந்தது. மக்கா வெற்றிகொள்ளப்பட்ட வருடத்தை *வெற்றி ஆண்டு* என்று அழைத்தார்கள். ஹுதைபிய்யா நிகழ்வு நடந்ததால் அவ்வாண்டை *ஹுதைபிய்யா ஆண்டு* என்றழைத்தனர். ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு பெயர் இருந்தது. ஒவ்வொரு மாதத்திற்கும் பெயர் இருப்பதை நாமறிவோம். அந்த தேதியின் ஆண்டுகளையும் மாதங்களையும் பெயரிலிருந்து இலக்கங்களாக மாற்றவேண்டிய தேவை ஏற்பட்டது. மாதத்திற்கு ஓர் எண் வருடத்திற்கு ஓர் எண் தேவைப்பட்டது. பெயர் கொண்டு அழைக்கப்பட்ட வருடத்தை எண்ணாக மாற்றவேண்டும். மாதத்தை பெயர் கூறி அழைத்தனர் அதையும் எண்ணாக மாற்றவேண்டும். முஹர்ரதிற்கு இலக்கம் 1ஐக் கொடுத்தனர். ஹிஜ்ரத் செய்த "அனுமதி ஆண்டை" 1ம் ஆண்டாக ஆக்கினர். இதற்கு எந்த கணக்கும் தேவையே இல்லை. ஹிஜ்ரத் செய்து இன்றோடு 17 ஆண்டுகள் ஆகிவிட்டன என்று அவர்களுக்கு தெரியும். அது சாதாரண பாட்டிக் கணக்குத்தான். அதன் பிறகு அவர்களின் கடிதங்கள் கணக்குகள் பதிவேடுகள் மற்றும் தகவல் தொடர்புகளில் இலக்கதினாலான ஆன தேதிகளை இட்டார்கள். பிற்காலத்தில் அவர்களிடம் நபிகளாரின் ஹஜ் என்று நடந்தது என்று கேட்டால் வெள்ளிக்கிழமை 09-12-10 AH (ஹி.பி) என்று அவர்களால் சொல்ல இயன்றது. பின்னர் தேதிகளை இலக்கங்களாக எழுதலானார்கள்.
இது நபிகளார் மரணித்து 7 ஆண்டுகளுக்குப்பின் உமர் ரலி ஆட்சிகாலத்தில் நடந்தது. இதற்கும் பல வருடங்களுக்குப் பிறகுதான் ஹதீஸ்கள் பதியப்படுகின்றன. ஒரு ஹதீஸில் கூட ஹிஜ்ரி தேதி அல்லது ஹிஜ்ரி வருடம் என்று பதியப்படவில்லை. இது பரவாயில்லை, உமர் ரலி காலத்திற்கு பிறகு நடந்த சம்பவங்கள் கூட ஹிஜ்ரி என்று பதியப்படவில்லை. ஆண்டுகளின் பெயரால் பதியப்பட்டுள்ளன. பல நிகழ்வுகள், குறிப்பாக, நபிகளாரின் உம்ராக்கள் வருடம் மாதத்துடன் பதியப்பட்டுள்ளன. ஹிஜ்ரி என்ற வார்த்தையே இல்லை. போர்கள் வருட மாதங்களுடன் பதியப்பட்டுள்ளன ஹிஜ்ரி இல்லை. ஹிஜ்ரி ஆண்டுமானத்தை உருவாக்கிய உமர் ரலி அறிவிக்கும் ஹதீஸ்களிலாவது ஹிஜ்ரி உள்ளதா? இல்லை.
அவர்கள் ஒவ்வொரு வருடத்தையும் அவ்வருடத்தின் முக்கிய நிகழ்வைக்கொண்டு நினைவு கூர்ந்தனர். அவ்வாறுதான் ஹதீஸ்களும் பதியப்பட்டுள்ளன. எந்த எண்களும் ஹதீஸ்களில் அவர்கள் கொடுக்கவில்லை. கடந்த கால நிகழ்வுகள் எதையும் கணக்கிட்டு தேதி கொடுத்து அவர்கள் எந்த பதிவேடும் உருவாக்கவில்லை. எந்த வரலாற்று நிகழ்வுகளையும் அவர்கள் தேதியிட்டு பதிவு செய்யவில்லை. வருடத்தை எண்ணிவந்தார்கள். அந்த வருடத்தில் நடந்த முக்கிய நிகழ்ச்சியை வருடத்திற்கு பெயராக கொடுத்தார்கள். எல்லாமே நினைவாற்றலே தவிர வேறில்லை.
ஹிஜ்ரத் நடந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு ஹிஜ்ரத் நடந்து 17 ஆண்டுகள் ஆனதை உமர் ரலி எப்படி கண்டுபிடித்தார்? எழுதப்படிக்க தெரியாத எனது பாட்டியார் தனது மூன்று பிள்ளைகள், ஒன்பது பேரப்பிள்ளைகளின் என எல்லாருடைய வயதுக் கணக்கையும் அறிந்திருந்தார்கள். அவர்கள் வயதும் அவர்களுக்குத் தெரியும். அறியாமை காலத்தில், அவர்கள் கணவர் இறந்த நாளை நினைவு கூர்ந்து அவருக்காக வழிபாடுகளை செய்வார்கள். அவர் இறந்து எத்தனை ஆண்டுகள் ஆனது என்பதை அவர்கள் ஒவ்வொரு வருடமும் சொல்வார்கள். அவர்கள் பின்னோக்கி கணக்கிட்டு இவற்றை செய்தார்களா? அதே போல அதிக நினைவாற்றல் உள்ள அம்மக்கள் அன்றுடன் 17ஆண்டுகள் ஆனதை அறிவார்கள். அவர்கள் இருக்கும் மாதமும் நாளும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும் எல்லாவற்றையும் இலக்கமாக மாற்றினார்கள்.
இங்கே கவனிக்க வேண்டியது, உமர் (ரலி) பின்னோக்கி கணக்கிட்டு ஹிஜ்ரி 1-1-1 ற்கு முந்தைய நாள் அமாவாசை என்றோ ஹிஜ்ரி 9-12-1௦ வெள்ளிகிழமையா என்று எந்த ஆய்வும் செய்யவில்லை. ஹிஜ்ரத் நடந்து அன்றோடு 17 ஆண்டுகள் ஆயிற்று என்பது அன்றைய மக்கள் நினைவில் வைத்திருந்தனர். அதுவும் வியக்கத்தக்க காரியம் இல்லை. படிப்பறிவற்ற, பதிவு செய்யத்தெரியாத மக்கள் நினைவாற்றல் மிகுந்தவர்களாக இருப்பார்கள் என்பதற்கு இன்றும் நம்மிடையே படிக்காதவர்கள் சாட்சியாக இருக்கிறார்கள்.. ஹதீஸ்கள் அறிவிக்கப்படும் வியப்பு மிகு சங்கிலி தொடரும் இதற்குச் சான்று பகர்கிறது. உமர் (ரலி) பின்னோக்கி சென்று கணக்கிட்டார்கள் என்பது இந்தக் கூட்டம் எந்தக் கூச்சமும் இல்லாமல் சொல்லும் பொய்.
ஹிஜ்ரி ஆண்டுமானம் உமர் (ரலி)தான் நிர்வாக வசதிக்காக ஏற்படுத்தியது. அது மார்க்கக் காரியமல்ல. மார்க்கத்திற்கு முரணானதும் இல்லை. மார்க்கத்தால் கண்டுகொள்ளப்படாத, அனுமதி வழங்கப்பட்ட ஒரு காரியம். ஹிஜ்ரி ஆண்டுமானம் மார்க்கம் எனில் அது குர்ஆனில் இருந்திருக்க வேண்டும். அல்லது நபி (ஸல்) கட்டளையிட்டிருக்க வேண்டும். மார்க்கம் முழுமை அடைந்த பின் மார்க்கத்தின் பெயரால் ஏற்படுத்தப்படும் ஒவ்வொரு புதுமையும் பித்அத், ஒவ்வொரு பித்அதும் வழிகேடு, ஒவ்வொரு வழிகேடும் நரகத்திற்கு இட்டுச்செல்லும். உமர்(ரலி) அதை மார்க்கம் என்று சொல்லவில்லை. யாரேனும் ஹிஜ்ரி ஆண்டுமானத்தை ‘மார்க்கம்’ என்று சொன்னால் அவர் புதுமையைப் புகுத்துபவராவார்.
ஹிஜ்ரி ஆண்டுமானம் காலண்டரா?
ஆண்டுமானத்திற்கும் நாட்காட்டிக்கும் வேறுபாடு தெரியாத மக்கள் நம்மில் இருப்பது வேதனைக்குரியது. ஒரு நிகழ்விலிருந்து ஆண்டுகளை எண்ணி வருவதற்கு பெயர் ஆண்டுமானம், சகாப்தம், எறா(ERA). 2017ம் ஆண்டு என்று சொல்வது காலண்டர் அல்ல. கிருத்து பிறந்து 2017 ஆண்டுகள் ஆகின்றன என்று பொருள். இதுவே ஆண்டுமானம்.
காலண்டர், நாட்காட்டி என்று நாம் நடைமுறையில் பயன்படுத்துவது ஒரு ஆண்டிற்கான தேதிகளையும், அவைகள் எந்தக் கிழமையில் வரும் என்பதையும், மாதங்களின் துவக்கத்தையும், மாத நாட்களின் எண்ணிக்கையையும், அவ்வருடத்தில் நடக்க இருக்கும் நிகழ்சிகளையும் முன்கூட்டியே அட்டவணையாக வடிவமைத்துப் பயன்படுத்தும் முறையாகும். உதாரணமாக இவ்வருடம் கோடைகாலம் 21-6-2017 புதன் கிழமை தொடங்கும் என்பது காலண்டரில் இருந்து பெறப்படும் தகவல். அல்லது உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகள் 17-10-2017 அன்று துவங்கும் என்பது நாட்காட்டியில் இருந்து பெறப்படும் தகவல். குறைந்தது ஒரு வருடத்திற்கு முன் கூட்டியே தேதிகளை அறிவிப்பதுதான் நாட்காட்டி.
உமர் (ரலி) இதை செய்யவில்லை. உமர் (ரலி) ஹிஜ்ரி ஆண்டுமானத்தை (சகாப்தத்தை) மட்டுமே தொடங்கி வைத்தார்கள். உமர் (ரலி) செய்ததைத்தான் நாங்கள் செய்கிறோம் என்று யாராவது கூறினால் அவர்கள் நிச்சயம் பொய்யர்களே. உமர் (ரலி) அமாவாசையை கணக்கிடும் அமாவாசைக்காரர் அல்லர்.
ஆண்டுமானம் என்பது, அது உமர் (ரலி) செய்தது. நாட்காட்டி என்பது வேறு. அது உமர் (ரலி) பெயரால் ஹிஜ்ராவினர் செய்வது. அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன தொடர்பு?
உமர் (ரலி) செய்தது நாட்காட்டியல்ல, அது மார்க்கமும் அல்ல. உமர் (ரலி) அது மார்க்கம் என்று சொல்லவும் இல்லை. மார்க்கத்தில் ஆண்டுமானம் இல்லை. நாட்காட்டியும் இல்லை.
இனி சூரிய நாட்காட்டிபற்றிப் பார்ப்போம்.
கிரேக்கர்கள் சந்திர நாட்காட்டியைப் பயன்படுத்தி வந்தனர். அதில் மாதங்கள் 29 மற்றும் 3௦ நாட்களைக் கொண்டிருந்தது. பிற்காலத்தில் அது பல மாறுதல்களைக் கண்டது. பின்னர் அதை ரோம மன்னர் ஜூலியஸ் சீசர் கி. மு. 45இல் முறைப்படுதினார். எனவே அன்று முதல் அது ஜூலியன் நாட்காட்டியென அழைக்கப்பட்டது. இந்த நாட்காட்டியின் மாதங்கள் என்பது கிரேக்க, ரோம கடவுள்களின் பெயர்களாலும், அரசர்களின் பெயர்களாலும் அமைக்கப்பெற்றவை. பிப்ரவரி 28 ஆனதும் ஆகஸ்ட் 31 ஆனதற்கும் எந்தக் குடும்ப சண்டையும் காரணமல்ல. தங்கள் காலண்டரை விற்க இந்த ஹிஜ்ராவினர் எத்தகைய பொய்களையும் துணிந்து சொல்வர். வருடத்திற்கு 12 மாதம் என்பதும் மாதத்திற்கு 30 அல்லது 31நாட்கள் என்பதும் காலம் காலமாக அவர்கள் பின்பற்றிய முறை. இதற்கு எந்த வரையறையும் இல்லை. ரோம நாட்காட்டி கிரேக்க நாட்காட்டியை மேம்படுத்தி அமைக்கப்பட்டது. கிரேக்க நாட்காட்டியில் மாதங்கள் 30 நாட்களைக் கொண்டதாக இருந்தது. வருடம் 360 நாட்களைக் கொண்டதாக இருந்தது. கிரேக்க நாட்காட்டியை 365½ நாட்கள் கொண்ட சூரிய நாட்காட்டியாக மாற்றியபோது மாதநாட்களின் எண்ணிக்கை 30 & 31 ஆக மாறியது. ஜூலியஸ் சீசர் இப்படி செய்வதால் 365. 2421897 நாட்கள் கொண்ட சூரிய ஆண்டை 365 ¹/₄ எனத் தோராயப்படுதினார். இப்படி தோராயப்படுதியதால் 128 ஆண்டுகள் ஆகும்போதும் ஒரு வருடத்திற்கு 1 நாள் அதிகமானது.
ஜூலியஸ்க்கு 5௦ ஆண்டுகளுக்குப் பின்னர் ஈசா நபி பிறக்கிறார். ஈசா நபியைக் கடவுளின் குமாரனாக ஆக்கிய கிருத்தவர்கள் பல பண்டிகைகளைக் கொண்டாடினர். அதில் ஒன்று ‘ஈஸ்டர்’. ஈஸ்டர் எனும் கிருத்துவப்பண்டிகை வசந்தகாலம் தொடங்கிய பின் ஏற்படும் பௌர்ணமிக்குப் பின் வரும் ஞாயிற்றுக்கிழமையில் கொண்டாடப்படும் ஒரு திருவிழாவாகும். சூரிய நாள்காட்டி காலநிலையை பிரதிபலிப்பதாக இருப்பதால் எல்லா வருடமும் மார்ச் 21 வசந்த காலம் (SPRING EQUINOX) தொடங்குவதை அது காட்டியது. ஆனால் மேலே நாம் சொன்ன பிழையால் மார்ச் 21க்கு சில நாட்கள் முன்னாலேயே வசந்த காலம் தொடங்கியதை கத்தோலிக்க கிருத்தவ உலகம் உணர்ந்தது. 128வருடங்களுக்கு ஒரு நாள் அதிகமானதால் 15ம் நூற்றாண்டில் மார்ச் 10லேயே வசந்த காலம் தொடங்கிவிட்டது. இதை உணர்ந்த கத்தோலிக்க கிருத்தவ உலகம் தங்கள் ஈஸ்டர் பண்டிகைகளை முறையாகக் கொண்டாட ஜூலியன் நாட்காட்டியைச் சீர் செய்ய முடிவு செய்தது. அன்று கத்தோலிக்க மதத்தலைவராக இருந்த போப் எட்டாம் க்ரிகோரியின் தலைமையில் கிபி1582ம் ஆண்டு ‘நூற்றாண்டுகள் லீப் வருடங்கள் ஆகாது, இதில் நான்கு நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை வரும் நூற்றாண்டு விதிவிலக்கு’ எனும் லீப் வருட சீர்திருத்தம் செய்யப்பட்டது. இதைக் கண்டுப்பிடித்தது ‘அலோசியஸ் லிலியஸ்’ எனும் மருத்துவர் என்றாலும் அதை அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட க்ரிகோரியனின் பெயரில் அன்றிலிருந்து ஜூலியன் நாட்காட்டி க்ரிகோரியன் நாட்காட்டி’ என்றே அழைக்கப்பட்டது.
சீசர் கி.மு 45 இல் அமைத்த காலண்டரில் க்ரிகோரி கி.பி 1582இல் சிறிய மாற்றம் மட்டுமே செய்தார். சீசர் ஈசா நபிக்கு (ஸல்) முன்னால் வாழ்ந்தவர் என்பதால் இந்த நாட்காட்டிக்கும் கிருத்துவ மதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஈசா நபி உயர்த்தப்பட்டு பல வருடங்களுக்குப் பிறகு அறிமுகப்படுதப்பட்டதுதான் கிருத்துவ மதம். கி. மு. கி. பி. எனும் பிரிவு வரக்காரணம் வருடங்களை எண்ணும் ஆண்டுமானம் தேவைப்பட்டதால்தான். கி.பி. 1ஆம் ஆண்டு சரியாகக் கிருத்து பிறந்த ஆண்டல்ல. அவர் கி.மு. 4 – 6 இல் பிறந்ததாக நம்பப்படுகிறது. மேலும் ஜனவரி 1 வருடப்பிறப்பு கிருத்துவிற்கு முன்னரே நடை முறையில் இருந்தது. ‘ஜானஸ்’ எனும் கிரேக்க கடவுளின் நாளாக அது கொண்டாடப்பட்டது. அதைக் கிருத்துவின் விருத்தசேன தினமாக அனுசரிப்பது ஒரு சில கிருத்துவர்கள் பிரிவுகள் ஏற்படுத்திக்கொண்டதே. இந்த நாட்காட்டியின் பிழைதிருத்தலிலும் எண்ணிடுதலிலும் கிருத்தவர்கள் பங்கெடுத்ததால் இது அதிகமாகக் கிருத்துவ நாள்காட்டி எனவே நம்பப்படுகிறது. அதைத் தவிர கிருத்துவ மதத்திற்கும் க்ரிகோரியன் நாட்காட்டிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
கி.பி. கிமு என்று அழைக்கும் ஆண்டுமானம் கிபி 525ல் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. கிபி ஆண்டுமானம் வேறு கிரிகோரியன் அல்லது ஜூலியன் காலண்டர் வேறு. கிரிகோரியன் நாட்காட்டியையே ஹிஜ்ரி ஆண்டுமானத்தைக் கொண்டும் பயன்படுத்தலாம். இதை சவுதி அரசு வெளியிடும் உம்முல் குரா நாட்காட்டியில் "ஹிஜ்ரி ஷம்சி" என்று காணலாம். க்ரிகோரியன் என்றாலே கிமு கிபி என்று நினைப்பது அறியாமை ஆகும்.
கி.பி. கிமு என்று அழைக்கும் ஆண்டுமானம் கிபி 525ல் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. கிபி ஆண்டுமானம் வேறு கிரிகோரியன் அல்லது ஜூலியன் காலண்டர் வேறு. கிரிகோரியன் நாட்காட்டியையே ஹிஜ்ரி ஆண்டுமானத்தைக் கொண்டும் பயன்படுத்தலாம். இதை சவுதி அரசு வெளியிடும் உம்முல் குரா நாட்காட்டியில் "ஹிஜ்ரி ஷம்சி" என்று காணலாம். க்ரிகோரியன் என்றாலே கிமு கிபி என்று நினைப்பது அறியாமை ஆகும்.
க்ரிகோரியன் நாட்காட்டி ஹராமா?
மார்க்கத்தில் ஒரு காரியம் தடை என்றுசொல்லவேண்டுமானால் அந்தத் தடையை அல்லாஹ் விதித்திருக்க வேண்டும் அல்லது தூதர் (ஸல்) விதித்திருக்க வேண்டும். அன்றாட தேவைகளுக்கும் நிர்வாகத் தேவைகளுக்கும் ஒரு சூரிய நாட்காட்டியைப் பயன்படுத்த மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை. இதைவிடத் தெளிவாகச் சொல்லவேண்டுமெனில் இன்றைய காலகட்டத்தில் தொழுகையை அதற்குரியநேரத்தில் நிறைவேற்றக் கண்டிப்பாகச் சூரிய நாட்காட்டி தேவைப்படுகிறது. கிப்லாவை துல்லியாமாகக் கணக்கிடவும் சூரிய நாட்காட்டியின் தேவை இன்றியமையாதது. மேலும் குர்ஆன் வசனங்கள் [6:96][10:5][17:12] அல்லாஹ் மனிதனுக்கு வழங்கியுள்ள சூரிய நாட்காட்டியைத் தெளிவாகப் பறைசாற்றுகின்றன. சூரிய நாட்காட்டிக்கு மார்க்கத்தில் தடையில்லை . மார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதையும் பார்க்க முடிகிறது. மேலும் தொழுகை நேரத்தையும் கிப்லா நிர்ணயத்தையும் அல்லாஹ் சூரிய நாட்காட்டியில் மட்டுமே வைத்து அதன் தேவையையும், இன்றியமையாத் தன்மையையும் நமக்குத் தெளிவுப்படுத்தி விட்டான்.
க்ரிகோரியன் நாட்காட்டிமீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகள்:
1. மாதங்களின் பெயர்கள் கிரேக்க/ரோம கடவுள்களின் பெயர்களால் ஆனவை.
இஸ்லாமிய மாதங்களின் பெயர்கள் ‘அய்யாமுல் ஜாஹிலியா’ கால பெயர்கள் இவர்களுக்குத் தெரியவில்லை போலும். மேலும் திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என்று சொல்லும் வாரநாட்கள் பெயர்கள் இந்து கடவுள்களின் பெயர்கள் என்றும் இவர்களுக்குத் தெரியவில்லை. அறியாமைகாலத்தில் பயன்படுத்திய பெயர்களையே இஸ்லாமிய மாதங்களுக்கும் அல்லாஹ்வின் தூதர் பயன்படுத்தினார்கள். நாம் யாரும் கிரேக்க கடவுள்களை வழிபடும் நோக்கில் ஜனவரி, பிப்ரவரி என்று சொல்லவில்லை. இதையெல்லாம் ஒரு காரணமாகச் சொல்வது வியாபார யுக்தி.
2. மாத நாட்கள் 28, 29, 30, 31 ஆக இருக்கின்றன.
உலக அறிவாளிப்பட்டத்திற்கான கேள்வி இது. இஸ்லாமிய மாதங்கள் 29 - 30ஆக இருக்கும். யாருக்கும் மாற்று கருத்து இல்லை. யாராவது க்ரிகோரியன் நாட்காட்டியை இஸ்லாமிய நாட்காட்டி என்று சொன்னார்களா?. சூரிய நாட்காட்டியில் மாதம் என்ற ஒன்றே இல்லை. அதில் இருக்கும் மாதங்களும் அதன் பெயர்களும் ஏற்கனவே அவை சந்திர நாட்காட்டியாக இருக்கும்போது உருவானவை. க்ரிகோரியன் நாட்காட்டியில் இருக்கும் மாதங்களும் அவற்றின் நாட்களும் எந்த அடிப்படையும் இல்லாதவை. யாராவது மார்ச் 1 ஐ பார்த்து நோன்பு நோற்றுக்கொள்ளுங்கள், ஏப்ரல் 1 ஐ பார்த்து நோன்பை விடுங்கள் என்று சொன்னால் இவர்களின் இந்த வாதம் சரியாக இருந்திருக்கும். யாருமே க்ரிகோரியன் நாட்காட்டியை நிர்வாகத் தேவையைத் தவிர மார்க்க தேவைகளுக்குப் பயன்படுத்தச் சொல்லவேயில்லை. உமர் (ரலி) ஹிஜ்ரி ஆண்டைக் கொண்டு வந்தது எப்படி மார்க்கம் இல்லையோ, அது எப்படி மார்க்கத்திற்கு எதிர் ஆகாதோ அதே போல் ஒரு சூரிய நாட்காட்டியை மார்க்கம் அல்லாத தேவைகளுக்குப் பயன்படுத்துவதில் தவறே இல்லை.
நோன்பு, ஹஜ், ஆஷூரா, போன்ற பிறை தொடர்பான இஸ்லாமிய வணக்கங்களைத் தவிர வேறு நிர்வாக நடைமுறைத் தேவைகளுக்கு ஒரு சூரிய நாட்காட்டியைப் பயன்படுத்துவதில் மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை.
கிப்லாவும் சூரிய நாட்காட்டிக்கும் உள்ள தொடர்பு பற்றித் தெரிந்துகொள்ள : http://www.piraivasi.com/2014/11/QiblaaScientificviewinTamil.html
தொழுகைநேரங்களுக்கும் சூரிய நாட்காட்டிக்கும் உள்ள தொடர்பு பற்றித் தெரிந்துகொள்ள : http://www.piraivasi.com/2015/04/PrayerTimes.html
கருத்துச்சுருக்கம்:
ஂ எந்த ஒரு இஸ்லாமிய வரலாற்று நிகழ்வுகளையும் (நுபுவத், ஹிஜ்ரத், போர்கள், உடன்படிக்கைகள்) நபி (ஸல்) பதிவு செய்யச் சொல்லவும் இல்லை. இஸ்லாமிய மார்க்கத்தில் வரலாற்று பதிவுகளுக்கு முக்கியத்துவம் இல்லை என்பதையும் ஆண்டுமானத்திற்கு எந்த வரையறையும் இல்லை என்பதையும் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
ஂ “நமக்கென்று தனியாக ஒரு நாட்காட்டி இருந்தால்தான் நம் வரலாற்றைப் பதிவு முடியும், வரலாறு இல்லாத சமூகம் அழிந்து போய்விடும்” என்பதெல்லாம் தங்கள் நாட்காட்டியை விற்க சிலர் போடும் மூடத்தனமான கூச்சல் அன்றி வேறில்லை. இஸ்லாத்தில் இதற்கு எந்த அடிப்படையும் இல்லை.
ஂ ஹிஜ்ரத் செய்து வந்தவுடன் “இன்றிலிருந்து இஸ்லாமிய ஆண்டாக எண்ணிக்கொள்ளுங்கள்” என்று சொல்லவும் இல்லை
ஂ உமர் (ரலி) பின்னோக்கி கணக்கிட்டு ஹிஜ்ரி 1-1-1 ற்கு முந்தைய நாள் அமாவாசை என்றோ ஹிஜ்ரி 9-12-1௦ வெள்ளிகிழமையா என்று எந்த ஆய்வும் செய்யவில்லை. உமர் (ரலி) பின்னோக்கி சென்று கணக்கிட்டார்கள் என்பது இந்தக் கூட்டம் எந்தக் கூச்சமும் இல்லாமல் சொல்லும் பொய்.
ஂ ஹிஜ்ரி ஆண்டுமானம் உமர் (ரலி)தான் நிர்வாக வசதிக்காக ஏற்படுத்தியது. உமர்(ரலி) அதை மார்க்கம் என்று சொல்லவில்லை. யாரேனும் ஹிஜ்ரி ஆண்டுமானத்தை ‘மார்க்கம்’ என்று சொன்னால் அவர் புதுமையைப் புகுத்துபவராவார்.
ஂ ஆண்டுமானம் - அது உமர் (ரலி) செய்தது. நாட்காட்டி என்பது வேறு. அது உமர் (ரலி) பெயரால் ஹிஜ்ராவினர் செய்வது. அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன தொடர்பு?
ஂ கிரிகோரியன் நாட்கட்டிக்கும் கிருத்துவ மதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. அந்த நாட்காட்டி நபி ஈசா பிறப்பதற்கும் 50 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. அதில் இருந்த பிழைகளை ‘அலோசியஸ் லிலியஸ்’ எனும் மருத்துவர் கண்டுபிடித்தார். போப் கிரிகோரி நடைமுறைப்படுத்தினார். வேறு எந்த தொடர்பும் கிருத்தவ மதத்திற்கு இல்லை.
ஂ சூரிய நாட்காட்டியில் மாதங்களுக்கு எந்த அடிப்படையும் இல்லை. கிரிகோரியன் நாட்காட்டியில் இருக்கும் மாதத்தை பார்த்து நோன்பு, ஹஜ், ஆஷூரா, பால்குடி போன்ற பிறை தொடர்பான இஸ்லாமிய வணக்கங்களை செய்தாலொழிய கிரகோரியன் நாட்காட்டி ஹராம் ஆகாது. நிர்வாக நடைமுறை தேவைகளுக்கு ஒரு சூரிய நாட்காட்டியைப் பயன்படுத்துவதில் மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை.
ஂ சூரிய நாட்காட்டி இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதும், அதன் தேவை இன்றியமையாததும் ஆகும். சூரிய நாட்காட்டி இல்லாமல் தொழுகை நேர அட்டவணையும் துல்லியமான கிப்லாவும் அமைக்க இயலாது.