Thursday 21 July 2016

"அஹில்லா" அவனா? அவளா?


ஹிஜிரா கமிட்டியின் உயிர் நாடியான அஹில்லாவை நாடி பிடித்து பார்ப்போம்.
அதற்கு முன்பாக கொஞ்சம் அரபு இலக்கணம் பார்ப்போம்.
அரபு மொழியில் எந்த ஒரு உயிருள்ள, உயிரற்ற பெயர்ச் சொல்லையும் ஆண்பால், பெண்பால் என்று இரு வகையில் கூறுகிறார்கள். அதாவது "அவன்" "அவள்" என்று அழைக்கின்றனர். உயிரற்ற பொருட்களை குறிக்கும் தமிழ் வார்த்தையான "அது" என்பது அரபு மொழியில் கிடையாது.
அரபி இலக்கணத்தில் ஒரு பெயர்ச் சொல்லின் ஒருமை வார்த்தை ஆண்பாலில் இருந்தால் அந்த பெயர்ச் சொல்லின் பன்மை வார்த்தையும் ஆண்பாலில் இருக்க வேண்டும் என்பதில்லை. பன்மை வார்த்தை பெண்பாலாகவும் இருக்கலாம்.
சந்திரனின் பிறை வடிவங்களை தினமும் பார்க்க வேண்டும் என்ற கருத்து சமீபத்தில் ஏற்பட்டிருப்பதால் பெருமானார் பார்க்கச் சொன்னது எது என்பதை முதலில் பார்ப்போம்.
ஹதீஸ்களில் வரும் "ஹிலால்" என்ற வார்த்தை. இது:-
** ஒருமை
** ஆண்பால்
ஹிலாலின் பன்மைச்சொல்லான குர் ஆனில் இடம்பெற்றிருக்கும் "அஹில்லா" என்ற வார்த்தை. இது:-
** பன்மை
** பெண்பால்
சரி ஹதீஸிற்கு வருவோம்,
பெருமானார் பிறை பார்க்கச் சொன்ன ஹதீஸில் இடம் பெற்றிருக்கும் "லி ருஃயதி ஹி" என்ற வாசகத்தில் உள்ள "ஹி" என்பது "ஹுவ - அவன்" என்ற சொல்லின் பிரதிப்பெயரான. "ஹி- அவனை" என்பதாகும்.
இங்கு பெருமானார் பார்க்கச் சொன்னது "ஹி" என்ற ஒருமை "ஹிலாலை"த்தான்.
ஆக, "அஹில்லா" தினசரிப் பிறைகள் என்ற பொருளில் "பன்மை ஹிலால்களை" அவர்கள் பார்க்கச் சொல்லவில்லை. "அஹில்லா" வுக்கு கமிட்டி கொடுக்கும் "தினசரி பிறை வடிவங்கள்" என்ற அர்த்தத்தின் பிரகாரம் பார்த்தால் பெருமானார் தினசரி பிறை வடிவங்களை பார்க்கச் சொல்லவில்லை.
ஒரு சந்திர மாதத்தின் சூரிய நாட்களை நாம் எண்ணும் முறையான
முதல் பிறை
இரண்டாம் பிறை
பத்தாம் பிறை
இருபதாம் பிறை
இருபத்தி ஒண்பதாவது பிறை
என்று சூரிய நாட்களை பிறையைக் கொண்டு எண்ணுகிறோம்.
அதனால்தான் ஒரு மாதத்தில் பல பிறைகள் இருக்கின்றன அதாவது ஹிலாலின் பன்மையான அஹில்லா இருக்கிறது என கமிட்டி நினைக்கிறது போலும்.
ஆனால், அரபுகள்
முதல் ஹிலால் (ஹிலால் அல் அவ்வல்)
இரண்டாம் ஹிலால் (ஹிலால் தானியா)
பத்தாம் ஹிலால் (ஹிலால் துலுத்)
இருபதாம் ஹிலால் (ஹிலால் இஷ்ரூன்)
இருபத்தி ஒன்பதாவது ஹிலால் என்று சூரிய நாட்களை ஹிலால் கணக்கில் எண்ணுவதில்லை.
இவ்வாறு ஹிலால் கணக்கில் அரபுகள் நாட்களை எண்ணியிருந்தால் கமிட்டியின் எண்னம் சரியே. நாட்களை ஹிலாலின் எண்ணிக்கையில் அரபுகள் எண்ணவில்லை என்பதற்கு உதாரணம் பிரபலமான. "பத்னு நக்லா" ஹதீஸ்.
அதில் இடம் பெற்றிருக்கும் மூன்று வார்த்தைகள். . .
(1) الْهِلاَلَ
(2) هُوَ ابْنُ لَيْلَتَيْنِ
(3) هُوَ ابْنُ ثَلاَثٍ
(1) ஹிலால்(பிறந்த மகன்)
(2) இரண்டாம் இரவின் மகன்
(3) மூன்றாம் இரவின் மகன்

(**ஹிலால் - பிறை - الْهِلاَلَ
**ஹுவ - அவன் - هُو
**இப்னு -மகன் - ابْنُ
**லைலதய்னி - இரண்டாம் இரவு - لَيْلَتَيْنِ
**ச(த)லாசின் - மூன்றாம் இரவு) - ثَلاَثٍ
இப்படித்தான் அழைக்கிறார்களே தவிர முதல் ஹிலால், இரண்டாம் ஹிலால், மூன்றாம் ஹிலால் என்று ஹிலால் கணக்கில் எண்ணுவதில்லை.
நடைமுறையில் புரிய சிறிய உதாரணம்.
ஒருவருக்கு மூன்று மகன்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அவர் தன்னுடைய முதல் மகனை அறிமுகம் செய்யும் போது "இவன் ஒன்றாவது மகன்" என்றோ "இவன் முதல் மகன்" என்றோ அறிமுகம் செய்வதில்லை. பெரும்பாலும் "மூத்தவன்" "பெரியவன்" என்றும் கிராம வழக்கில் "தலச்சம் பிள்ளை" என்றுதான் அறிமுகம் இருக்கும். அடுத்து இவன் இரண்டாவது மகன். , மூன்றாவது மகன் என அறிமுகப்படுத்துவதும் இயல்பே.
ஆக, ஹிலால் எனும் அரபிச் சொல்லிற்கு நிகரான தமிழ்ச் சொல்லாக நான் காண்பது "தலச்சம் பிள்ளை".
ஒரு சந்திர மாதத்தில் ஒரேயொரு "தலச்சம் பிள்ளை". அதாவது ஒரேயொரு "ஹிலால்".
ஆக, குர் ஆனில் இடம் பெற்றிருக்கும் ஹிலாலின் பன்மையான "அஹில்லா"விற்கு "தலச்சம் பிள்ளைகள்" என்று பொருளாகிறது. அந்த
"தலச்சம் பிள்ளைகள்" தான் மாதங்களை துவக்கி "காலம்" காட்டுகின்றன.
நாட்களை பிறை கணக்கில் எண்ணுவது நம்முடைய நடைமுறை. நாட்களின் பிறை எண்ணிக்கையை தமிழிருந்து அரபு மொழிக்கு மொழி பெயர்த்ததால் ஏற்பட்ட குழப்பத்தால் ஒரு மாதத்தில் இருக்கும் பல தமிழ்ப் பிறைகளை அரபு ஹிலாலின் பன்மையான அஹில்லாவாக கருதிவிட்டனர்.
அரபு மொழி பேசும் மக்களிடம் வாழ்ந்த பெருமானார் அந்த மக்களின் நடைமுறையிலேயே செய்தியை அறிவித்திருக்கிறார்கள்.
ஆக, அரபுகள் முதன் முதலில் கண்ணுக்குத் தெரியும் சந்திரத் தோற்றத்தையே "ஹிலால்" என்கின்றனர். அதற்கு மறுநாளுடைய சந்திரத் தோற்றத்தை நாட்களின் கணக்கில் எண்ணுகிறார்களே தவிர ஹிலால் கணக்கில் எண்ணுவதில்லை.
ஆக. , ஹிலால் என்பது ஒரு சந்திர மாதத்தை துவக்கி வைக்கும் தலைப் பிறை மட்டுமே.
பெருமானார் பார்க்கச் சொன்ன அந்த "ஹி" எனும் ஹிலாலைப் பார்த்த பிறகு, பெருமானார் விரல் காட்டி நாட்களை எண்ணச் சொன்னார்களே தவிர தினசரி சந்திரத் தோற்றத்தை பார்க்கச் சொல்லவில்லை. தினசரி சந்திரத் தோற்றங்களை பெருமானார் பார்க்கச் சொன்னார்கள் என்று கூறுபவர்கள் ஊசியின் காதில் ஒட்டகத்தை நுழைத்தவர்களாகிறார்கள்.
ஹிலால் - இலக்கணம்.
தங்களுக்கு எதிராக ஆதாரங்களை வழங்குவதில் கமிட்டிக்கு நிகர் கமிட்டியேதான்.
ஹிலால் என்ற வார்த்தைக்கு பல விளக்கங்களை கொடுத்திருந்த கமிட்டியின் பழைய பதிவு ஒன்றை பாத்தேன். (பிறை ஆய்வு 2)
ஒவ்வொரு நாளின் பிறையும் ஹிலால் என்று கூறிய கமிட்டி தற்போது பல்டியடித்து மாதத்தின் முதல் 7 மற்றும் கடைசி 7 நாட்கள்தான் "பிறை" என்ற "ஹிலால்" என்று உளறுகிறார்களே, அந்த விஷயங்கள் எதுவும் அந்த பதிவில் இல்லை.
அந்த பதிவிலிருந்து அறிவது,
** சந்திரனில் பார்க்கக் கூடிய அளவிற்கு இரவில் தெரியும் காட்சியே "பிறை".
** இரண்டு, மூன்று அல்லது அதிகபட்சம் ஏழு நாட்கள் வரை உள்ளது மட்டுமே "பிறை".
** மாதத்தின் இரண்டு அல்லது மூன்று கடைசி நாட்களும் "பிறை" எனப்படும்.
** ஏனைய நாட்கள் சந்திரன்(கமர்) என்றழைக்கப்படும்.
** ஆனால் பெரும்பாண்மையான முடிவு மாதத்தின் முதல் இரண்டு நாட்கள் மட்டுமே "பிறை".
இவ்வளவுதான் அவர்களின் கடைந்தெடுத்த ஆய்வில் தெரிவது.
சரி, ஹிலால் என்ற பிறையின் வரைவிலக்கணத்தை நாமும் இலக்காணத்தோடு அனுகுவோம்.
"ஹிலால்" என்பதற்கு மாதத்தின் துவக்க நாட்கள் என்றும் இல்லை இறுதி நாட்கள் என்றும் பல மாற்று கருத்துக்கள் இருந்தாலும் "கமர்" என்ற சந்திரனைக் குறிக்கும் வார்த்தையைப் பொறுத்தவரை ஒரு ஒரு கருத்துதான் இருக்கிறது.
மாதத்தின் 3 வது நாளிலிருந்து 26 வது நாள் வரை உள்ள பிறைத் தோற்றத்தை "கமர்" என்றுதான் அழைக்கின்றனர்.
இங்கு சர்ச்சையாக்கப்படுவது மாதத்தின் முதல் இரண்டு நாட்கள் மற்றும் கடைசி இரண்டு அல்லது மூன்று நாட்கள்.
ஹிலால் என்ற வார்த்தை எதைக் குறிக்கிறது என பார்ப்போம்.
ஹிலால் என்பது
** தோன்றுதல்
**துவக்குதல்
என்ற இரண்டு முக்கியமான பொருள் தருகிறது.
அதாவது "ஹிலால்" தோன்ற வேண்டும் மற்றும் ஒன்றை துவக்க வேண்டும்.
26 நாட்களும் தொடர்ச்சியாக தோன்றிய பிறைத்தோற்றம் 27 வது நாளும் தொடர்ந்து வருவது எப்படி "தோன்றி துவக்கியதாகும்". அது முடிக்கக்கூடியதாகும்.
அமாவாசையின் இருட்டுக்குள் சுமார் இரண்டு நாட்கள் அளவிற்கு சந்திரனில் எந்த காட்சியும் காணமுடியாத அளவில் இருந்து திடீரென ஒருநாள் "தோன்றி" மாதத்தை நமக்கு "துவக்கும்" அந்த ஆரம்ப தோற்றம் மட்டுமே "ஹிலால்" ஆகும்.
கமிட்டியின் கொல்லைப்புற புத்தியால் பின்வாசல் நுழைதல் என்ற தொடர் நிகழ்வு நிற்பது என்றோ!!!!!!!!!!
பிறை மீரான்.
அஹில்லா என்ற அவள் (Part - 2)
ஹிஜிரா காலண்டர் விஞ்ஞான காலண்டர் இல்லையாம்!!!.
அதில் குர்ஆன், சுன்னா என கலந்திருக்கிறதாம். ஆகவே நான் அதை குர் ஆன், சுன்னாவோடு உரசிப்பார்க்க முடிவு செய்தேன்.
"அஹில்லா" என்ற குர்ஆன் வார்த்தைக்கு "தினசரிப் பிறைகள்" என கமிட்டி விளக்கம் கொடுப்பதால்
"அஹில்லா" வை குர்ஆனிலிருந்து எடுத்தேன்.
இந்த அஹில்லாக்களைதான் பெருமானார் பார்க்கச் சொன்னார்கள் என கமிட்டி கூறுவதால் "லி ருஃயதி ஹி" யில் உள்ள. "ஹி" (அவனை) யை ஹதீஸிலிருந்து எடுத்தேன்.

கமிட்டியின் கருத்தின்படி ஒரு சந்திரமாதத்தில் 29 தனித்தனி ஹிலால்கள் உள்ளன. அதாவது முதல்நாள் பார்ப்பது ஒரு ஹிலால், இரண்டாம் நாள் பார்ப்பது ஒரு ஹிலால், பத்தாம் நாள் பார்ப்பது ஒரு ஹிலால், இருபத்தி ஒன்பதாம் நாள் பார்ப்பது ஒரு ஹிலால்.

கமிட்டி காலண்டரை பார்த்து தட்டுத்தடுமாறி ரமலானை அடைந்தேன்.

கமிட்டி காலண்டரின் பிரகாரம் நோன்பு வைத்துக் கொண்டு பிறையை பார்க்க வேண்டும் என்பதால் ரமலான் 1 ல் நோன்பு வைத்து அன்றைய பிறையை எதிர்நோக்கினேன். அது என்ன மாயமோ தெரியலை அந்த மாதத்தில் மட்டும் காலண்டர்ல படம் போட்டிருந்த மாதிரியே பிறை தெரிந்தது.
பிறையை பஜ்ரில் பார்த்தியான்னு கேக்குறீங்களா அதுதான் இல்லீங்க. காலம் காலமாக ஒரு குருட்டு சமுதாயம் மஃக்ரிபின் இருட்டில் பிறை தேடுமே அந்த நேரத்தில்தான் பார்த்தேன்.
அப்போதுதான் பொறி தட்டியது "அவனைப் பார்த்து நோன்பு வையுங்கள்" என்றுதானே பெருமானார் கூறினார்கள். நான் நோன்பு வைத்துக் கொண்டுதானே அவனைப் பார்த்தேன். இது எப்படி சுன்னாவை பின்பற்றியதாகும்.
ஆனால் இன்னொரு விந்தையை கண்டேன், நான் குருட்டு சமுதாயம் என நினைத்துக் கொண்டிருந்த, 1400 வருடங்களுக்கு முந்தைய நடைமுறையை பெருமானாரின் வழிமுறை என நம்பி பின்பற்றும் அந்த இருட்டு சமுதாயம் அன்று நான் பார்த்த அதே பிறையை பார்த்த பின்னர் நோன்பு வைத்தார்கள். அதாவது பெருமானாரின் வழிமுறையான "அவனை பார்த்து நோன்பு வையுங்கள்"என்ற சுன்னாவை மெய்ப்படுத்தினார்கள்.
அறிந்து கொண்டேன் அவர்கள்தான் மறையும் பிறையில் மாநபியின்(ஸல்) மான்பைப் போற்றும் "மதியூகிகள்" என்று.
இருந்தாலும் நான் கொண்ட கொள்கையை தவறென்று அறிவித்தால் என் கௌரவம் என்னாவது.
காலண்டர் பிரகாரம் 2 வது நோன்பு வைத்தேன். அந்த இருட்டுக் கூட்டத்திற்கு முதல் நோன்பு.
காலண்டர் பிரகாரம் அன்று தெரியவேண்டியது இன்னொரு ஹிலால். அதாவது இன்னொரு "அவன்".
அதுவும் மஃரிபிற்கு பிறகு தெரிந்தது. சற்று தெளிவாகவும் கொஞ்ச நேரம் அதிகமாகவும் தெரிந்தது.
அப்போது ஹதீஸின் மீதி எனக்கு நினைவுக்கு வந்தது "அவனைப் பார்த்து நோன்பு விடுங்கள்". கமிட்டியின் பிரகாரம் அதுவும் ஒரு ஹிலால். எனவே ஒரு ஹிலாலை பார்த்து நோன்பை துவங்கிய நான் அடுத்த ஹிலாலைப் பார்த்த உடன் நோன்பை விட்டாக வேண்டும். ஆக மறு நாள் ஹிலாலை பார்த்த பிறகு அதற்கு மேல் நோன்பு வைக்க முடியாது. நோன்பை விட்டுவிட்டு பெருநாள் கொண்டாட வேண்டும். கமிட்டியின் அர்த்தத்தின்படி இரண்டு நோன்புதான் வைக்க முடியும்.
இது எப்படி குர் ஆனையும் ஹதீஸையும் அடிப்படையாக கொண்ட காலண்டர் ஆகும். இது விஞ்ஞானக் காலண்டர் மட்டும்தான். UTC. GMT. IDL  conjunction என விஞ்ஞானக் கணக்கில் அமைக்கப்பட்ட விஞ்ஞானக் காலண்டர்தான்.
நான் காலண்டரின் முதல் நாள் பிறையைப் பார்த்தபோது அந்த இருட்டுக் கூட்டமும் பார்த்தது என்றேனே, அப்போது அவர்கள் "தலச்சம் பிள்ளை" என்ற பொருளில் ஹிலால் பிறந்துவிட்டது என்று கூவினார்கள். அவர்களின் கணக்கின்படி அடுத்த தலச்சம் பிள்ளை அதாவது ஹிலால் மீண்டும் 29 நாள் கழித்துதான் வருமாம். 29 நாட்களை கடந்து மீண்டும் ஹிலாலைத் தேடுவார்களாம். பார்த்தால் நோன்பை விட்டுவிட்டு பெருநாள் கொண்டாடுவார்களாம்.
ஹதீஸின் மீதி, "அவனைப் பார்த்தால் நோன்பை விடுங்கள்" அவர்கள் விஷயத்தில் உண்மையாகிறது.
குர்ஆன், சுன்னாவின் பிரகாரம் நோன்பை நிறைவு செய்யும் அந்த இருட்டுக் கூட்டமே "மறையின் மதியூகிகள்".
கமிட்டி அர்த்தத்தின் பிரகாரம் அஹில்லாக்களை எடுத்தால் ஹதீஸை விட்டுவிட வேண்டும். ஹதீஸை எடுப்பதாக இருந்தால் அஹில்லாவிற்கு ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் மட்டுமே ஹிலால் என பொருள் கொடுக்க வேண்டும்.
குர்ஆனையும் ஹதீஸையும் மோதவிட்டு கமிட்டி ஆடும் "இருட்டு விளையாட்டை" அறிந்தேன். அதிர்ந்தேன். . .