Monday 24 April 2017

லைலத் vs அலகா

லைலத் என்றால் என்ன?
என்று ஹிஜிரா கமிட்டியின் ஒரு மேடைப்பேச்சாளரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அந்த மேடைப்பேச்சாளர் கூறிய பதில் அரபு அகராதியையே புரட்டிப்போட்டு விட்டது. லைலத் என்ற வார்த்தையை குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் கடைந்து ஆராய்ந்ததில் தர்ஜுமாக்களில் (மொழிபெயர்க்கப்பட்ட குர்ஆன்) பிழை இருக்கிறதாம். அரபு அகராதியிலேயே சரியான விளக்கம் இல்லையாம். அதாவது, இவர் சொல்லக்கூடிய அர்த்தத்தைதான் அரபு அகராதியில் மாற்றி அமைக்க வேண்டுமாம். அதாவது, லைலத் என்று தனியாக வரும்போது "இரவு" என்று மொழிபெயர்க்கக் கூடாதாம். "பகலும் இரவும் கொண்ட ஒரு நாள்" என்றுதான் மொழி பெயர்க்க வேண்டுமாம். "யவ்ம் மற்றும் லைலத்" என்று சேர்ந்து வரும்போது மட்டும்தான் யவ்மை பகல் என்றும், லைலத்தை இரவு என்றும் மொழிபெயர்க்க வேண்டுமாம்.
லைலத் பற்றிக் கேட்கப்பட்ட கேள்விக்கு அதற்குரிய பதில் அளித்திருந்தால் போதுமானது. ஆனால தேவையில்லாமல் கருவியல் விஞ்ஞானம் பேசித் தான் ஒரு கிணற்றுத்தவளை என்பதை நிரூபித்தார் அந்த மேடைப்பேச்சாளர். கீத் மூர் என்ற "கருவியல் விஞ்ஞானி" அரபு மொழியைக் கற்று குர்ஆன் வசனங்களை ஆய்வு செய்தாராம். கரு உருவாகும் விதத்தை 1400 வருடங்களுக்கு முன்பே குர்ஆனில் இருப்பதை பார்த்து ஆச்சர்யப்பட்டாராம்.அதில் அலக்கா (علقة) என்ற வார்த்தைக்கு "இரத்தக்கட்டி" என்று மொழிபெயர்க்கப்பட்டு இருந்ததாம். இரத்தக்கட்டி என்றொரு நிலை கருவியலில் கிடையாதே, பிறகு ஏன் இரத்தக்கட்டி என்று மொழிபெயர்த்தார்கள் என்று வருந்தினாராம். கிறிஸ்தவரான அவர் அல்லாஹ்வின் வேதத்தில் தவறு இருக்கக் கூடாது என்று எண்ணினாராம். இதற்காகவே அரபு மொழியை முழுமையாகக் கற்றுக்கொண்டு அரபு அகராதியையே திருத்தினாராம். அதாவது அலக்கா என்ற வார்த்தைக்கு இரத்தக்கட்டி என்று அகராதியில் இருந்ததை "ஒட்டுக்கொள்ளும் நிலை" என்று திருத்தினாராம்.
அலக்கா விஷயத்தில் இப்படி கீத் மூர் திருத்தியது போலத்தான் லைலத் மேட்டரிலும் ஹிஜிரா கமிட்டியின் ஆய்வைக் கண்டு அரபுலகமே அகராதியைத் திருத்தப்போகிறது என்று அந்தக் கிணற்றுத் தவளை உளறியது. கீத் மூர் விஷயத்தில் கிணற்றுத்தவளையின் உளறல் பெருமை பொங்க இருப்பதால் அதைக் கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம்.
Keith L. Moore (கீத் மூர்) என்பவர் "கருவியல்" (Embryology) துறையில் நிபுணத்துவம் பெற்றவர். கனடாவில் இருந்த அவரை சவுதியின் ஒரு பல்கலைக்கழகம் அழைத்ததின் பேரில் தனது துறை சார்பான கருத்துக்களை அங்கு சென்று எடுத்துரைத்தார். அவரிடம் மனிதப் படைப்பைப் பற்றி குர்ஆன் கூறும் வசனங்களை மொழிபெயர்த்து கொடுத்து விளக்கம் கேட்டனர். அவருடைய அனுபவத்தின்படி Embryology துறை அப்போதுதான் பல புதிய விஷயங்களை கண்டுகொண்டிருந்த காலம் அது. அந்தத் துறை பற்றிய செய்தி தெளிவான முறையில் குர்ஆனில் இருப்பதாக அவர் கருதினார். தன் துறை சார்ந்த விஞ்ஞானிகள் மற்றும் அரபு அறிஞர்களின் உதவியுடன் கருவியல் பற்றிய பல கண்டுபிடிப்புகளைக் குர் ஆன் வசனங்களோடு ஒத்துபார்த்தார். அலக்கா என்ற வார்த்தைக்கு அரபு அகராதியின்படி குர்ஆனின் அந்த வசனத்திற்கு பொருந்திப்போகக்கூடிய மூன்று அர்த்தங்களையும் சரிகண்டார்.
'அலக்கா'(علقة) எனும் அரபிச் சொல்லுக்கு, அதன் அகராதிப் பொருள்படி,
1) அட்டைப் பூச்சி.
2) தொஙகிக் கொண்டிருக்கும் ஒரு பொருள்
3) இரத்தக் கட்டி
(1)
இந்த அலக்கா (علقة) நிலையிலுள்ள கருவானது அட்டைப் (Leech)-யின் புறத்தோற்றத்தின் உருவத்துடன் ஒத்துப்போகிறது என்றார்.
மேலும், இந்த அலக்கா (علقة) என்ற நிலையில் கருவானது தாயின் கருவறையில் "ஒட்டிக் கொண்டிருக்கும் நிலை"யில் தாயின் இரத்தத்தை உறிஞ்சி தன் வளர்நிலைகளுக்கு சக்தியைப் பெற்றுக் கொள்கின்றது என்றார். அதாவது அலக்காவின் செயல்பாடும் அட்டைப்பூச்சியைப் போன்றே இருக்கிறது என்றார்.
(2)
அலக்கா (علقة) எனும் அரபிப் பதத்திற்கான இரண்டாவது பொருளானது "தொட்டுக் கொண்டு" அல்லது " தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு பொருள்" எனப்படும். தாயின் கர்ப்ப அறையில், கருவானது வளர் நிலையில் எவ்வாறு அமைந்திருக்கும் என்பதையும், அது எவ்வாறு கர்ப்ப அறையில் தொங்கிக் கொண்டிருக்கின்றது என்பதையும் விளக்கி இரண்டாவது அர்த்தத்தையும் சரிகண்டார்.
(3)
அலக்கா (علقة) எனும் பதத்திற்கான மூன்றாவது பொருளாக. "இரத்தக்கட்டி" எனப் பொருள் கொள்ளப்படுகின்றது.
கருவின் ஆரம்ப வளர்நிலையில் அதன் புறத் தோற்றமும் அதை மூடி இருக்கும் பை போன்ற சவ்வுத் தோற்றமும், உறைந்த நிலையில் உள்ள இரத்தக் கட்டி போன்ற அமைப்புடன் இருப்பதாக அறிவித்தார்.
(கருவின் ஆரம்ப நிலையில் அதிகப்படியான இரத்த ஓட்டம் கருவின் மீது பாய்ச்சப்படுவதால், அதன் புறத் தோற்றம் உறைந்த நிலையிலுள்ள இரத்தக் கட்டி போன்று தோற்றமளிக்கிறதாம்.
மேலும் கருவின் வளர்நிலையில் அதனது மூன்றாவது வாரம்வரை இரத்த ஓட்டச் சுழற்சி செயல்படாதிருக்கும் என்பதால் அதுவரை அலக்காவானது இரத்தக்கட்டிபோலத்தான் இருக்கும் என்றார்)
மேற்கண்ட அலக்கா (علقة) எனும் அரபிப்பதத்திற்கான மூன்று அர்த்தங்களுமே அது தரும் பொருள்களுக்கான விளக்கத்திற்கு எந்த வித மாறுபாடும் இல்லாமல் ஒத்திருப்பதை கீத் மூர் சரிகண்டார்.
அலக்கா விஷயத்தில் மேற்கண்டவைகள்தான் கீத் மூர் அவர்களின் ஆய்விலிருந்து அறிய வருவது. இதில் அவர் அரபு அகராதியை (Dictionary) எங்கே திருத்தினார்???
கீத் மூர் அரபு மொழியைக் கற்கவே இல்லை. அவருக்கு அரபு வாசிக்கக் கூடத் தெரியாது என்பதை அவரே சொல்லும் வீடியோ ஆதாரம்.
வீடியோவை 48:40ம் முதல் 48:48ம் வரைக் கேட்கவும்
"As Dr. Persaud said, we don't read Arabic. The Scholars translated for us. We simply give our interpretations." - Dr. Keith Moore
டாக்டர் பெர்சொத் சொன்னதைப் போன்று எங்களுக்கு அரபிக் வாசிக்கத் தெரியாது. அறிஞர்கள் எங்களுக்கு மொழிப்பெயர்த்து தந்தார்கள். நாங்கள் எங்களது விளக்கத்தை மட்டுமே கொடுத்தோம்” என்கிறார்
கிணற்றுத் தவளை சொல்வது போல Clinging Substance தொங்கிக்கொண்டிருக்கும் பொருள் எனும் அர்த்தத்தைக் கீத் மூர் சேர்க்கவில்லை. ஏற்கனவே அரபு அகராதிகளில் இந்த அர்த்தம் இருக்கிறது. எண்பதுகளில் தான் மூர் இந்த ஆய்வுகளை அரபு நாட்டைச் சேர்ந்த வலுனர்களுடன் இணைந்து செய்தார். ஆனால் அதற்கும் 140வருடங்களுக்கு முன்னாள் எழுதப்பட்ட ஆங்கில அகராதியில் அலக் எனும் வார்த்தைக்கு Clinging Substance எனும் பொருளை எழுதியுள்ளனர்.
ஆதாரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன
அலக்கா எனும் வார்த்தை அரபு அகராதியின்படி கிடைக்கும் பல அர்த்தங்களும் கருவியல் அறிவோடு தொடர்பு ஏற்படுகிறது என்பதுதான் அவரது ஆய்வின் சாரம்சம்.
இது எதுவுமே தெரியாத கிணற்றுத்தவளை கிறுக்கு விஞ்ஞானம் பேசி அலைகிறது.
அலக்கா என்ற வார்த்தைக்கு இரத்தக்கட்டி என்ற அர்த்தத்தை முந்திய மக்கள் ஏன் கொடுத்தனர்?
பெண்களின் மாதவிடாய் காலத்தில் உதிரம் வெளியாவது அனைவரும் அறிந்ததே. பெண்கள் கருத்தரிக்கும்போது மாதவிடாய் ஏற்படாது. அதனால் இரத்தம் வெளியேறாது. வெளியேறாத இந்த இரத்தம்தான் உறைந்து கருவாக மாறுவதாகக் கருதினர். அதன் அடிப்படியில்தான் அலக்கா என்ற வார்த்தை பல அர்த்தங்களைக் கொண்டிருந்தபோதும் "இரத்தக்கட்டி" என்ற அர்த்தத்தை தேர்ந்தெடுத்தனர்.
இதில் முக்கியமான செய்தி என்னவென்றால் இரத்தக்கட்டி என்ற அர்த்தத்தையும் கீத் மூர் அவர்கள் சரி காண்கிறார் என்பதுதான். அவர் இரத்தக்கட்டி என்ற அர்த்தத்தையும் மறுக்கவில்லை. இந்தச் செய்தியை கிணற்றுத் தவளைகள் அறிந்து கொள்ளட்டும்.
கீத் மூரை விட இன்னும் பெரிய விஞ்ஞானிகள் எதிர்காலத்தில் தோன்றி அலக்காவிற்கு ஆயிரம் விளக்கங்கள் அளித்தாலும்கூட குர்ஆனிலோ அல்லது நம் மார்க்க கடைமைகளிலோ எந்த மாற்றமும் வரப்போவதில்லை.
ஆனால், லைலத் என்ற வார்த்தைக்கு இரவும் பகலும் கொண்ட நாள் என்று அரபு அகராதியை மாற்றச்சொல்லும் கிணற்றுத் தவளைகளின் அறைகுறை அறிவால் நம் மார்க்கக் கடமைகளில் எழும் பிரச்சினைகளைப் பார்ப்போம்.
லைலத் என்று தனியாக வரும்போது "இரவு" என்று மொழிபெயர்க்கக் கூடாது, "பகலும் இரவும் கொண்ட ஒரு நாள்" என்றுதான் மொழி பெயர்க்க வேண்டும் என்று மேடைப்பேச்சாளர் முழங்கியவாறு மொழிபெயர்ப்போம்.
குர்ஆனில் 10 இடங்களில் லைலத் என்று தனியாக வருகிறது. "நாள்" என்றுதான் மொழிபெயர்க்க வேண்டும் என்று மேடைப்பேச்சாளர் கூறுவதால் அந்த பத்து இடங்களிலும் லைலத்திற்கு "நாள்" என்று மொழிபெயர்ப்போம்.
إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ ، وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ ، لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ
கத்ருடைய நாளில் இதை (குர்ஆனை) நாம் அருளினோம்.
கத்ருடைய நாள் என்னவென்று உமக்கு எப்படித் தெரியும்?
கத்ருடைய நாள் ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்தது.
إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُّبَارَكَةٍ 44:3
இதைப் பாக்கியம் நிறைந்த நாளில் நாம் அருளினோம்.
وَوَاعَدْنَا مُوسَىٰ ثَلَاثِينَ لَيْلَةً وَأَتْمَمْنَاهَا بِعَشْرٍ فَتَمَّ مِيقَاتُ رَبِّهِ أَرْبَعِينَ لَيْلَة 7:142
மூஸாவுக்கு முப்பது நாட்களை வாக்களித்தோம். அதை (மேலும்) பத்து (நாட்கள்) மூலம் முழுமையாக்கினோம். எனவே அவரது இறைவன் நிர்ணயித்த காலம் நாற்பது நாட்களாக முழுமையடைந்தது.
وَإِذْ وَاعَدْنَا مُوسَىٰ أَرْبَعِينَ لَيْلَةً 2:51
மூஸாவுக்கு நாற்பது நாட்களை நாம் வாக்களித்ததையும் எண்ணிப் பாருங்கள்!
قَالَ رَبِّ اجْعَل لِّي آيَةً ، قَالَ آيَتُكَ أَلَّا تُكَلِّمَ النَّاسَ ثَلَاثَ لَيَالٍ سَوِيًّا 19:10
"என் இறைவா! எனக்கொரு அடையாளத்தைக் காட்டு!'' என்று அவர் கேட்டார். "குறைபாடற்ற நிலையில் நீர் இருந்தும் மூன்று நாட்கள் மனிதர்களிடம் பேச மாட்டீர் என்பதே உமக்கு அடையாளம்'' என்று அவன் கூறினான்.
وَلَيَالٍ عَشْرٍ 89:2
பத்து நாட்கள்மீதும் சத்தியமாக!
மேற்கண்ட 9 லைலத்திற்கும் இரவு என்று அர்த்தம் கொடுத்தாலும் அல்லது நாள் என்று அர்த்தம் கொடுத்தாலும் பாதகமான கருத்து எதுவும் வந்துவிடாது.
ஆனால் 2:187 ல் லைலத் என்ற வார்த்தைக்கு நாள் என்று அர்த்தம் கொடுத்தால் என்ன பிழை நிகழும் என்பதை பார்ப்போம்.
أُحِلَّ لَكُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ إِلَىٰ نِسَائِكُمْ 2:187
நோன்பு நாளில் உங்கள் மனைவியரிடம் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
இது எவ்வளவு பெரிய பிழை!!!
நோன்பு நாளில் மனைவியிடம் கூட முடியுமா?
கூடினால் என்ன ஆகும்?
நோன்பு வைத்துக்கொண்டு தன் மனைவியிடம் கூடிய ஒரு ஏழை ஸஹாபியின் செயலுக்குப் பரிகாரமாகக் கூடை நிறைய பேரீச்சம் பழம் அளிக்க உத்தரவிட்ட நபி(ஸல்) அவர்களின் அறிவிப்பு ஹிஜிராக் கமிட்டியின் மேடைப்பேச்சாளர்களை எட்டவில்லையா?
அல்லது, அந்தப் பேரிச்சம்பழக்கூடையை தனக்கே கிடைக்கப்பெற்ற சஹாபியை போலத் தாங்களும் நோன்பு நாளில் மனைவியுடன் வீடு கூடி பேரீச்சம் பழக்கூடையை அடைய விரும்புகின்றனரோ!!!
ஆக, லைலத் என்ற வார்த்தை தனியாக இருந்தால் "நாள்" என்றுதான் பொருள் கொள்ள வேண்டும் என்ற கிணற்றுத் தவளையின் ஆய்வு அர்த்தமற்றது.
சரி, லைலத் சொல்லும் சேதிதான் என்ன?
இன்ஷா அல்லாஹ் அதை விரிவாகப் பார்ப்போம்.
ஆதராங்கள்:
A Scientist's Interpretation Of References To Embryology In The Qur'an
- by Keith L. Moore, Ph.D., F.I.A.C.,
Human development As Describes in the Quran and Sunnah
by authors Abdul-Majeed A. Zindani, E Marshall Johnson, Mustafa A. Ahmed, Gerald C Goeringer, Joe Lee Simpson, Keith Moore, T. V. N. Persaud.

Lane’s Lexicon