Tuesday 22 August 2017

ஹிலால் - அல் ஹிலால்

இணைவைப்பவர்களுடன் கைக் கோர்த்துக்கொண்டு "மூன்றாம் பிறை முட்டாள் துலுக்கர்" என்று நபிவழிப்பிறையாளர்களை ஏளனம் செய்யும் ஹிஜிரா கமிட்டியினர், 2:189 வசனத்திலும் விளையாடுகின்றனர்.
2:189 வது வசனத்தில் உள்ள அல் அஹில்லா (الْأَهِلَّة) என்ற சொல்லை தங்களின் மனம்போன போக்கில் மொழிபெயர்த்து தவறான வியாக்கியானமும் அளிக்கின்றனர்.
அல் அஹில்லா (الْأَهِلَّة) என்ற சொல்லின் சரியான விளக்கத்தை காணும் முன்பாக ஹிஜிராக் கமிட்டியின் விளக்கத்தைப் பார்ப்போம்.
ஹிஜிராவின் அஹில்லா :
அஹில்லா என்பது சந்திரனின் பல படித்தரங்கள். ஒவ்வொரு படித்தரமும் ஒரு தேதியை காட்டும். ஒரு சந்திர மாதத்தில் அதிகபட்சமாக 29 படித்தரங்களை பார்க்க முடியும். இதன் ஒருமைதான் ஹிலால் என்று ஹிஜிரா கமிட்டியினர் சொல்கின்றனர்.
இவர்களின் கூற்றின்படி பார்த்தால் ஒரு மாதத்தில் 28 அல்லது 29 ஹிலால்கள் இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அகராதிகளில் ஆய்வு செய்து ஒரு மாதத்தின் 14 படித்தரங்களை மட்டும்தான் ஹிலால் என்று சொல்கின்றனர்.
மேற்கண்டது அரபு அகராதிகளின்படி மட்டும்தான். இதுமட்டுமல்லாமல் அவர்கள் சுயமாக ஆய்வு செய்து ஒரு மாதத்தின் 12 படித்தரங்களை ஹிலால் என்று சொல்லலாம் என்றும் ஆதாரங்களுடன் விளக்கியிருக்கிறார்களாம்.
ஹிஜிராக்களுக்கு என்ன நேர்ந்தது? முன்னுக்குப்பின் முரண்பாடு முத்திவிட்டது போலும்.
அவர்களின் காலண்டர்படி ஒரு மாதத்தில் 29 ஹிலால்கள் இருக்கிறதாம்!
அவர்களின் சுய ஆய்வின்படி ஒரு மாதத்தில் 12 ஹிலால்கள் இருக்கிறதாம்!!
அரபு அகராதிகளின்படி ஒரு மாதத்தில் 14 ஹிலால்கள் இருக்கிறதாம்!!!
நல்லா இருக்கிறது ஹிஜிராக்கள் கணக்கு போடும் லட்சணம். ஒரு மாதத்தில் எத்தனை வடிவங்களை ஹிலால் என்ற சொல் குறிக்கிறது என்பதை ஹிஜிரா கமிட்டியினர் முடிவு செய்து அறிவிக்கட்டும். பிறகு சொல்லட்டும் அஹில்லா என்றால் என்னவென்று!!
2:189 ல் இருக்கும் அல் அஹில்லா என்ற சொல்லின் சரியான விளக்கம்தான் என்ன?
எந்த ஒரு மொழியையும் நாம் அறிந்துகொள்வதற்கு உறுதுனையாக இருப்பது அந்த மொழியின் அகராதி (Dictionary), இலக்கியம் மற்றும் வரலாறு ஆகியனவாகும்.
ஒரு வார்த்தையை இலக்கண ரீதியாகவும் நடைமுடையிலும் எப்படி பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதை அந்த மொழியின் எழுதப்பட்ட வரலாற்று சம்பவங்களை வைத்து நாம் அறிந்து கொள்ள முடியும்.
அந்த வகையில் உலகில் எந்த ஒரு மொழிக்கும் இல்லாத சிறப்பு அரபு மொழிக்கு இருக்கிறது. அந்த மொழியின் உயர்ந்த இலக்கியமான குர்ஆன் மூலம் அரபு மொழியின் செழுமையை நாம் அறிந்துகொள்கிறோம். அரபு மொழியில் எழுதப்பட்ட ஹஃதீதுகள் அரபு மொழியின் மாபெரும் வரலாற்றுப் பொக்கிஷமாக இருக்கிறது.
அரபு அகராதிகளின்படி ஹிலால் (هِلاَل) என்ற சொல் பல பொருள் கொண்டதாக இருந்தாலும், ஹிலால் என்ற வார்த்தையை சந்திரனுடன் தொடர்புபடுத்தும்போது சந்திர மாதத்தின் சில நாட்களின் சந்திர வடிவங்களை குறிக்கும் சொல்லாக அது இருக்கிறது. ஒவ்வொரு அகராதியிலும் ஒவ்வொரு விதமாக ஹிலால் என்ற வார்த்தையை சந்திர வடிவங்களோடு இணைத்து சொல்கின்றனர்.
சந்திர மாதத்தின் சில நாட்களின் சந்திர வடிவங்களை ஹிலால் என்றும் மற்ற நாட்களின் சந்திர வடிவங்களை கமர் என்றும் அகராதிகளில் குறித்திருக்கின்றனர். ஹிலால் என்று சொல்லப்படும் சில நாட்களின் சந்திர வடிவங்களில்தான் அகராதிகளில் வித்தியாசம் இருக்கிறது.
**சந்திர மாதத்தின் முதல் இரண்டு நாட்கள் மற்றும் கடைசி இரண்டு நாட்கள்
**சந்திர மாதத்தின் முதல் மூன்று நாட்கள் மற்றும் கடைசி மூன்று நாட்கள்
**சந்திர மாதத்தின் முதல் ஏழு நாட்கள் மற்றும் கடைசி ஏழு நாட்கள்
ஆக, அகராதிகளின்படி ஒரு சந்திர மாதத்தின் அனைத்து நாட்களிலும் இருக்கும் சந்திரனின் வடிவங்களின் பெயர் "ஹிலால்" அல்ல என்பது நிரூபணமாகிறது. அதாவது ஒரு சந்திர மாதத்தில் சில நாட்களின் சந்திர வடிவங்கள்தான் "ஹிலால்".
**ஒரு மாதத்தின் அனைத்து சந்திர வடிவங்களையும் "அஹில்லா" என்ற சொல் குறிக்கிறது என்ற ஹிஜிராக்களின் கூற்று பொய் என்பதும் தெரிகிறது.
**ஒரு சந்திர மாதத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட சந்திர வடிவங்களை ஹிலால் என்று அழைப்பது அகராதிகளின்படி உண்மை.
அப்படியென்றால் அல் அஹில்லா என்ற சொல் குறிப்பது சந்திர மாதத்தின் 14 சந்திர வடிவங்களையா?
இல்லை..
நிற்க! அரபு மொழியின் அடிப்படை விதிகளின்படியும் வரலாற்று ரீதியாகவும் பார்த்துவிட்டு ஒரு முடிவு செய்வோம்.
"வீடு" என்றால் ஏதோ ஒரு வீடு என்று அர்த்தம். ஒரு குறிப்பிட்ட வீட்டை சொல்வதாக இருந்தால் "அந்த வீடு" என்போம்.
ஆங்கிலத்தில்:
(ஒரு) வீடு -a house
(குறிப்பிட்ட) அந்த வீடு -The house
அரபு மொழியில் :
(ஒரு) வீடு - பய்த் - بَيْت
(குறிப்பிட்ட) அந்த வீடு - அல் பய்த்- البَيْت
இது புரிகிறதா?
அதாவது பய்த் (بَيْت) என்று சொன்னால் ஒரு வீடு என்று அர்த்தம். அல் பய்த் ( البَيْت ) என்று சொன்னால் "ஒரு குறிப்பிட்ட வீடு" என்று அர்த்தம். அதாவது ஒரு பெயர்ச்சொல்லுடன் "அல்" சேர்ந்து வந்தால் அது ஒரு குறிப்பிட்டதைப் பற்றி பேசுகிறது என்று அர்த்தம். இதுபோலத்தான்...
ஹிலால் (هِلاَل) என்றால் ஏதோ ஒரு "பிறை" என்று அர்த்தம். அதாவது, அகராதிகளின்படி ஒரு சந்திர மாதத்தில் இருக்கும் 14 ஹிலால்களில் ஏதாவது ஒன்றைக் குறிக்கும்.
அல் ஹிலால் (الهِلاَل) என்றால் "ஒரு குறிப்பிட்ட பிறை" என்று அர்த்தம். அதாவது, அகராதிகளின்படி ஒரு சந்திர மாதத்தில் இருக்கும் 14 ஹிலால்களில் குறிப்பிட்ட ஒரே ஒரு ஹிலால் என்று அர்த்தம்.
சந்திரனின் ஒரு வடிவம் ஹிலால் (هِلاَل)
சந்திரனின் குறிப்பிட்ட ஒரு வடிவம் - அல் ஹிலால் (الهِلاَل)
இதுவரை ஒருமையை மட்டுமே பார்த்தோம். இப்போது அதன் பன்மையை பார்ப்போம்.
தமிழ் : வீடு - வீடுகள்
ஆங்கிலம் : a house - Houses
அரபு மொழி: بَيْت - புயூத் (بُيُوت)
(குறிப்பிடப்படாத ஏதோ ஒரு வீடு மற்றும் குறிப்பிடப்படாத ஏதோ வீடுகள் என்ற அதன் பன்மையும்)
ஹிலால் (هِلاَل) - ஒரு பிறை
அஹில்லா (أَهِلَّة) - பல பிறைகள்
(குறிப்பிடப்படாத ஒரு பிறை மற்றும் குறிப்பிடப்படாத பிறைகள் என்ற அதன் பன்மையும்)
தமிழ் : அந்த வீடு - அந்த வீடுகள்
ஆங்கிலம் : The house -The houses
அரபு மொழி: البَيْت -அல் புயூத் (البُيُوت)
(குறிப்பிடப்பட்ட அந்த வீடு மற்றும் குறிப்பிடப்பட்ட அந்த வீடுகள் என்ற அதன் பன்மையும்)
அல் ஹிலால்-(الهِلاَل) -குறிப்பிட்ட அந்த பிறை
அல் அஹில்லா- (الأَهِلَّة) - குறிப்பிட்ட அந்த பிறைகள்
(குறிப்பிட்ட அந்த பிறை மற்றும் குறிப்பிட்ட அந்த பிறைகள் என்ற அதன் பன்மையும்)
ஹிலால் (هِلاَل) என்ற சொல்லின் பன்மைதான் அஹில்லா (أَهِلَّة). அல் ஹிலால்-(الهِلاَل) என்ற சொல்லின் பன்மைதான் அல் அஹில்லா- (الأَهِلَّة).
அதாவது, அஹில்லா (أَهِلَّة) என்ற பன்மையை உடைத்தால் அந்த வார்த்தைக்குள் நிறைய ஹிலால் (هِلاَل)கள் இருக்கும். அல் அஹில்லா- (الأَهِلَّة) என்ற வார்த்தையை உடைத்தால் அந்த வார்த்தைக்குள் நிறைய அல் ஹிலால்-(الهِلاَل)கள் இருக்கும்.
அஹில்லா  هِلاَل, هِلاَل, هِلاَل = أَهِلّٙة ...
அல் அஹில்லா الهِلاَل, الهِلاَل, الهِلاَل = الأَهِلَّة  ….
2:189 வசனத்தில் உள்ள சொல் அஹில்லாவா (أَهِلَّة) ? அல்லது அல்-அஹில்லாவா (الأَهِلَّة) ?
يَسْأَلُونَكَ عَنِ الْأَهِلَّةِ ... 2:189
இந்த வசனத்தில் இடம்பெற்றிருக்கும் சொல் அல் அஹில்லா(الأَهِلَّة) . ஆக இந்த பன்மை வார்த்தையை உடைத்தால் கிடைப்பது என்னவாக இருக்கும்?
அல் அஹில்லா الهِلاَل, الهِلاَل, الهِلاَل = الأَهِلَّة  ….
சந்திர மாதத்தின் ஒரே ஒரு நாளின் சந்திர வடிவத்தைதான் அல் ஹிலால்-(الهِلاَل) என்பர். 2:189 ல் சொல்லப்படுவது இந்த அல் ஹிலால்-(الهِلاَل) - ன் பன்மைதான். இவைகள்தான் மக்களுக்கும் ஹஜ்ஜிற்குமான கால எல்லைகளாக இருக்கிறதாம்.
ஹிலால் என்ற வார்த்தையை "பிறை" என்றும், அல்ஹிலால் என்ற வார்த்தையை "தலைப்பிறை" என்றும் வேறுபடுத்திக் காட்டுகின்றனர் அறிஞர்கள்.
ஆங்கிலத்தில் சந்திரனின் வடிவங்களை Phases என்பர். ஆனால், சந்திரனின் முதல் வடிவத்தை மட்டும் New moon என்பர்.
ஹிலால் (هِلاَل) = பிறை = a phase
அஹில்லா (أَهِلَّة) = பிறைகள் = Phases
அல்ஹிலால் (الهِلاَل) = தலைப்பிறை = Newmoon
அல்அஹில்லா (الأَهِلَّة) = தலைப்பிறைகள் = New moons
குர்ஆன் வசனம் 2:189 ல் இருப்பது அல்ஹிலால் (الهِلاَل) தான். குர்ஆனுக்கு விளக்கம் அளித்த நபி அவர்கள் பார்க்கச் சொன்னது அல்ஹிலால் (الهِلاَل) தான். அன்னாரை பின்பற்றி 1400 வருடங்களுக்கும் மேலாக முஸ்லிம் மக்கள் பார்த்து வருவதும் அல்ஹிலால் (الهِلاَل) தான்.
புழக்கத்தில் நாம் பிறை என்று தலைப்பிறையையே சொல்கிறோம். "பிறை பார்த்தீர்களா?" என்று நாம் கேட்பதும் "இன்று கோழிக்கோட்டில் பிறை தென்பட்டது!" என்று சொல்வதும் தலைப்பிறையையே. பிறை பார்த்தோம் என்று ஒருவர் சொல்வது 5ம் நாளில் தெரியும் வடிவத்தையோ, 24ம் நாளில் தெரியும் வடிவத்தையோ அல்ல.
பிறை என்று நாம் புழங்கும் வார்த்தையின் பொருளறியா ஹிஜ்ரா கமிட்டியினர், "பிறை என்றால் மாதத்தில் இருக்கும் எல்லாமே பிறைகள் தானே" என்று மக்களை ஏமாற்றுகின்றனர். எந்த மொழியை எடுத்தாலும் உள்நோக்கி வளைந்திருக்கும் வரை அதற்கு ஒரு பெயரும் (பிறை/ஹிலால்/crescent,  வெளிநோக்கி வளைந்து, கூன் விழுந்த வடிவில் இருக்கும்போது வேறொரு பெயரும் (மதி/கமர்/gibbous) இருக்கும்.
ஸஹாபாக்கள் காலத்திலிருந்தே ஒரு சந்திர மாதத்தில் முதன் முதலாக தெரியும் சந்திர வடிவத்தை மட்டும் அல்ஹிலால் (الهِلاَل) என்றனர். மற்ற வடிவங்களை கமர் (قمر ) என்றே அழைத்தனர். இதிலும் ஒரு நயத்தை கடைபிடித்தனர். அதாவது, முதல் நாள் வடிவத்தை "அல்ஹிலால்" என்று சொல்லிவிட்டு தொடர்ந்து வரும் வடிவங்களை "இரண்டாவது கமர்" "மூன்றாவது கமர்" என்று சொல்லாமல் ஒரு நயத்தை கடைபிடித்தனர்.
அரபு மொழியில் ابنُ اللَّيل - இப்னுல் லய்ல் என்றால் "இருட்டின் மகன்" என்ற நேரடி பொருள் வருகிறது. இதை "திருடன்" என்று அர்த்தம் கொடுக்கிறார்கள். அதே போல கமர் என்ற சந்திரனை "இப்னுல் லயாலீய் (ابنُ اللَّيالي )"-(இரவுகளின் மகன்) என்று அழைக்கின்றனர்.
அதிகமான பயணம் செய்பவரை "பாதைகளின் மகன்" என்றும் அரபு மொழியில் அழைப்பர். அதேபோல அதிகமான நாட்களின் இரவுகளில் சந்திரன் இருப்பதால் சந்திரனை "இரவுகளின் மகன்" என்று அழைக்கின்றனர்.
சந்திரனின் வடிவங்களை சொல்லும்போது முதன் முதலில் பார்க்கும் வடிவத்தை அல்ஹிலால் (الهِلاَل) என்றும் இரண்டாம் நாள் வடிவத்தை "இரண்டாம் இரவின் மகன்" என்றும் மூன்றாம் நாள் வடிவத்தை "மூன்றாம் இரவின் மகன்" என்றும் வரிசையாக சொல்கின்றனர்.
நாம் இதை கற்பனையாக சொல்கிறோம் என்று கமிட்டியினர் சொல்லக்கூடும். ஹிஜிராக் கமிட்டியால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு ஹதீதில் இருந்தே இதற்கு ஆதாரத்தை காட்ட முடியும். பதன் நக்லா ஹதீதை தங்களுக்கு சாதகமான முறையில் மொழிபெயர்த்து மக்களிடம் காட்டுகின்றனர் ஹிஜிராக் கமிட்டியினர். அவர்கள் கொடுக்கும் அர்த்தத்தை நாம் ஒதுக்கிவிட்டு அந்த ஹதீதை ஒரு ஆதாரபூர்வமானதாக அவர்கள் சொல்கிறார்கள் என்பதை இங்கு பதிகிறோம்.
பதன் நக்லா ஹதீதின் சுருக்கம் :
...قَالَ فَلَقِينَا ابْنَ عَبَّاسٍ فَقُلْنَا إِنَّا رَأَيْنَا الْهِلاَلَ فَقَالَ بَعْضُ الْقَوْمِ هُوَ ابْنُ ثَلاَثٍ وَقَالَ بَعْضُ الْقَوْمِ هُوَ ابْنُ لَيْلَتَيْنِ ...
...பின்னர் நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைச் சந்தித்தபோது, நாங்கள் "அல்ஹிலாலை" பார்த்தோம். மக்களில் சிலர் அது "மூன்றாவது இரவின் மகன் " என்றனர். வேறுசிலர் அது "இரண்டாவது இரவின் மகன் " என்று கூறினர்" என்று (நடந்ததை) சொன்னோம்...
இந்த ஹதீதில் சந்திரனின் முதல் வடிவத்தை அல்ஹிலால் (الهِلاَل) என்றும் சந்தேகத்திற்குரிய இரண்டாம் நாள் வடிவத்தை இப்னு லைலதய்னி (ابْنُ لَيْلَتَيْنِ)
என்றும் மூன்றாம் நாள் வடிவத்தை இப்னு தலாதின் (ابْنُ ثَلاَث) என்ற வரிசையில் அவர்கள் கூறுவதை அறிய முடிகிறது.
ஒரு சந்திர மாதத்தில் ஒரே ஒரு வடிவத்தை மட்டுமே அல்ஹிலால் (الهِلاَل) என்கின்றனர். மற்ற வடிவங்கள் அல்ஹிலால் (الهِلاَل) ஆகாது.
நபி அவர்களின் வார்த்தைகள் இந்த அல்ஹிலால் (الهِلاَل) ஐத்தான் பார்க்கச் சொல்கிறது. வெறும் ஹிலால் ( هِلاَل) பார்க்கச் சொல்லவில்லை.
**2:189 வசனத்தில் இருப்பது அல்ஹிலால் (الهِلاَل)-ன் பன்மையான அல்அஹில்லா (الأَهِلَّة)
**இந்த அல்அஹில்லா (الأَهِلَّة) வில் உள்ள ஒவ்வொரு அல்ஹிலால் (الهِلاَل) - யும்தான் நபி அவர்கள் பார்க்கச் சொன்னார்கள்.
**ஒவ்வொரு அல்ஹிலால் (الهِلاَل) -வும் ஒரு புது மாதத்தை மக்களுக்கு அறிக்கும்.
**மாதத்தின் பெயரை அந்த தலைப்பிறைக்கு சூட்டி, முஹர்ரம் பிறை, ரஜப் பிறை, ரமலான் பிறை என்று அழைப்பர்.
**இதில் 12 வது அல்ஹிலால் (الهِلاَل)-ன் பெயர் "துல்ஹஜ் பிறை" .
**இந்த துல்ஹஜ் பிறை, ஹஜ் கடமை நிறைவேற்ற வேண்டிய மாதம் என்பதை மக்களுக்கு அறிவிக்கும்.
**அறியாமை காலத்தில் நஸிய்யு செய்பவர்கள் முடிவு செய்யும் மாதம்தான் ஹஜ் மாதமாக இருந்தது. அதை தடை செய்து அல்ஹிலால் (الهِلاَل) கள் ஹஜ் மாதத்தை அறிவிக்கும் என்ற வசனம் அருளப்பட்டது.
**இந்த அல்ஹிலால் (الهِلاَل) - கள்தான் மக்களுக்கும் ஹஜ்ஜிற்கும் கால எல்லைகள் என்று குர்ஆன் வசனம் 2:189 கூறுகிறது.
இந்த இறை வசனத்தில் விளையாடும் ஹிஜிரா கமிட்டியினர் மக்களை ஏமாற்றுவதை காலண்டர் மோகத்தில் இருக்கும் கல்வி கற்ற மேன்மக்கள் கண்டிக்க வேண்டிய நேரமிது. கண்டிப்பார்களா???
photo credit: astropixels.com