Sunday 4 February 2024

அறிமுகம் - ஜெயினுலாபிதீன் தப்சீரின் பிழைகள்

அறிமுகம்


குர்ஆனும் அறிவியலும் – அறிவியலா? ஆர்வக்கோளாறா?


குர்ஆனின் சிறப்புகள் எனும் தலைப்பில் யாரிடமாவது கட்டுரை எழுதச்சொல்லுங்கள் அவர் எந்த மொழியில் எழுதினாலும் குர்ஆனில் அறிவியல் உண்மைகள் உள்ளன என்றொரு பட்டியலை அதில் சேர்க்காமல் இருக்கமாட்டார். இந்த அறிவியல் கருத்துக்கள் அனைத்தும் உண்மையா என்று பார்த்தால் அநேகமானவை பொய்யாகவே இருக்கின்றன. குர்ஆனுக்கு பெருமை சேர்க்கிறோம் எனும் பெயரில் ஆர்வக்கோளாறு முஸ்லிம்களும், முஸ்லிம்களின் ஆர்வக்கோளாறை புரிந்துகொண்ட இஸ்லாத்தின் எதிரிகளும் இத்தகைய கதைகளை உருவாக்குகின்றனர். (ராபர்ட் கில்ஹாமின் கதை இதற்கு சிறந்த உதாரணம்) இதை அப்பாவி பாமர முஸ்லிம்கள் பரப்புகின்றனர். இந்த போலி அறிவியல்களை உடைப்பதன் மூலம் குர்ஆன் எதார்த்த உண்மைக்கு மாற்றமாக பேசுவதாக கூறி நாத்திகர்களும் இஸ்லாத்தின் மற்ற எதிரிகளும் பிரச்சாரம் செய்வதைக் கூட உணராமல் இந்த பாமர முஸ்லிம்கள் செயல்படுகின்றனர்.


மேலும் இது எத்தகைய ஆபத்தானது என்றால் குர்ஆன் இறைவேதம் என்பதற்கு இன்று முதன்மை ஆதாரமாக வைக்கப்படுவது இந்த போலி அறிவியல்தான். இது எத்தகைய ஈமானிய பலவீனம் என்பதைக் கூட இந்த பாமர முஸ்லிம் சமூகம் உணரவில்லை என்பதே வேதனை.

சுமார் இருநூறு வருடங்களுக்கு முன்பு, அறிவியல்தான் இந்த உலகம்! என்ற எண்ணம் மேலோங்கத்தொடங்கியது. அறிவியலாளர்களை கிறிஸ்தவ மதம் அடக்கியாண்ட அந்த  காலகட்டம் மாறத்தொடங்கியது. இதன் விளைவாக கிறிஸ்தவ மதத்தின் வேத புத்தகமான பைபிள் அறிவியலைக் கொண்டு உரசிப்பார்க்கப்பட்டு அறிவியலுக்கு முரணான புத்தகமாக அது பார்க்கப்பட்டது. மதங்களின் வேதங்களை அறிவியலோடு உரசிப்பார்க்கும் முறை இஸ்லாத்தையும் தீண்டியது. குர்ஆன் மற்றும் சுன்னாவை அறிவியலோடு உரசிப்பார்த்து அறிவியலுக்கு முரணாக பார்க்கப்பட்டு இஸ்லாம் அறிவியலுக்கு முரணான மதம் என்ற ரீதியில் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதற்கான நியாயமான பதில்களை அந்ததந்ந காலத்தில் வாழ்ந்த முஸ்லிம் அறிஞர்களால் அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில்தான், 1970 ஆம் ஆண்டு Revisionist school of Islamic studies என்ற பெயரில் மேற்கத்திய அறிஞர்கள் ஒன்று கூடி இஸ்லாம் தொடர்பானவற்றை மறுபார்வை செய்தனர். இஸ்லாத்தின் நம்பிக்கைகளை விளாசினர். அப்போது அறிவியலுக்கு முரணான மதமாக இஸ்லாம் சித்தரிக்கப்பட்டது. இவர்களுக்கு பதில் கொடுக்க வேண்டிய பகிரங்கத்தேவை முஸ்லிம்களுக்கு ஏற்பட்டது.

இந்த காலகட்டத்தில்தான், சவுதி மன்னர் பைசல் அவர்களின் குடும்ப மருத்துவராக 1973 ஆம் ஆண்டு மோரிஸ் புகைல் (Maurice Bucaille) எனும் பிரெஞ்சு கிறிஸ்தவர் நியமிக்கப்பட்டார். மேற்குலகால் இஸ்லாம் நசுக்கப்படுவதை உணர்ந்து அறிவியலால் ஆயுதம் ஏந்து! என்று முழங்கிய மன்னர் பைசல் அவர்களின் மருத்துவராகச் சேர்ந்த மோரிஸ் புகைல் 1976 ஆம் ஆண்டு பிரெஞ்ச் மொழியில் ஒரு புத்தகம் வெளியிட்டார்.

Book's name : La Bible, le Coran et la Science

"பைபிள் குரான் மற்றும் அறிவியல்" என்ற பெயரில் வெளிவந்த அந்த புத்தகத்தில் பைபிள் மற்றும் குரான் ஆகிய இரண்டு வேதங்களையும் அறிவியலைக் கொண்டு சோதித்து அறிவியலுக்கு பைபிள் முரண்படுகிறது! ஆனால் குரான் முரண்படவில்லை!! என்று கூறியிருந்தார் மோரிஸ் புகைல். அந்த புத்தகத்தில் பல விமர்சனங்கள் எழுந்தாலும், அறிவியலுக்கு முரணாக குர்ஆன் இல்லை என்று ஒரு கிறிஸ்தவர் கூறியதால் அதை இஸ்லாமிய உலகம் கொண்டாடியது. அந்த புத்தகம் மொழிபெயர்க்கப்பட்டு முஸ்லிம்களால் பரப்பப்பட்டது. இதற்குப் பிறகு குர்ஆனில் அறிவியலைத் தேடும் முயற்சி முஸ்லிம்களாலும் செய்யப்படது.

1980 ஆம் வருடத்திற்குப் பிறகு அறிவியலைக் கொண்டு குர்ஆனை இறைவேதம் என்று நிறுவும் மோகம் முஸ்லிம்களிடம் ஏற்பட்டது. அதற்குக்காரணம் அப்துல் மஜீதுல் ஸிந்தானி (al-Zindani Abdul-Majeed) என்பவர். சவுதி அரேபியாவின் சேவை நிறுவனமான 'ராபிதத்துல் ஆலமுல் இஸ்லாமியா' (رابطة العالم الاسلامي ) எனும் அமைப்பிடமிருந்து நிதிபெற்று இவர் இவர் ஒரு அமைப்பைத் தொடங்கியிருக்கிறார். குர்ஆன் மற்றும் சுன்னாவில் இருந்து அறிவியல் அத்தாட்சிகளை கண்டுபிடிப்பதாகக் கூறி இந்த அமைப்பை தொடங்கியிருக்கிறார்.

அந்த அமைப்பின் பெயர் :

Commission on Scientific Signs in the Quran and Sunnah (الهيئة العالمية للإعجاز العلمي في القرآن والسنة)

ஸிந்தானி அவர்கள் உலகில் உள்ள விஞ்ஞான  ஆராய்ச்சியாளர்களை அணுகி அவர்களுடன் உரையாடல் செய்து அதை வீடியோ பதிவும் செய்து அதை பிரபலப்படுத்தியவர். குர்ஆன் வசனங்களை மேற்கோள் காட்டி அந்த வசனங்களில் இருக்கும் அறிவியல் கருத்துகளைப் பற்றி பேசும்போது அவர்கள் வெளிப்படுத்தும் பாவனைகளை முன்னிலைப்படுத்தி விஞ்ஞானிகளே குர்ஆனைக் கண்டு ஆச்சர்யப்படுகின்றனர் என்ற தோற்றத்தை ஏற்படுத்தினார்.

துறை சார்பான ஆய்வாளர்களை கண்டுபிடித்து அவர்களிடம் அது தொடர்பான வசனங்களைக் காட்டி இந்த வசனம் அறிவியலைச் சொல்கிறதா! என்று கேட்பது ஸிந்தானி அவர்களின் வழிமுறை.

உதாரணம்:

கடல் தொடர்பான விளக்கங்களுக்கு வில்லியம் ஹே (William Hay) எனும் கடல் ஆய்வாளரை (marine scientist) தொடர்பு கொண்டார்.

இவரால் அரபுலகிற்கு கொண்டுவரப்பட்டவர்தான் கீத் மோர் (Moore, Keith L) கருவியல் விஞ்ஞானியான இவர் கருவியல் துறை இல்லாத காலகட்டத்தில் கருவறைக்குள் நடப்பதை குர்ஆன் கூறுவது ஆச்சர்யமாக இருக்கிறது என்றார். கருவியல் தொடர்பாக இவர் எழுதிய மருத்துவத்துறை சம்பந்தமான புத்தகத்தை டெவலப்செய்து குர்ஆன் வசனங்களை இணைத்து The Developing Human with Islamic Additions என்ற பெயரில் வெளியிட்டார் ஸிந்தானி.

ஸிந்தானி பல ஆய்வாளர்களை அரபுலகத்திற்கு அழைத்து வந்தார். அவர்கள் அங்கு இருந்தவரை இஸ்லாத்தைப் புகழ்ந்தனர். இது உலகம் முழுவதும் பரவியது. உலகில் பலரும் இதனை தங்கள் மொழிகளில் மொழிபெயர்தனர். தங்கள் பங்கிற்கு தாங்களும் குரானில் அறிவியல் என்று எழுதி சேர்த்தனர். இதில் பங்கு வகிப்பவர்கள் ஹாரூன் யஹ்யா எனும் துருக்கியர், இந்தியாவை சேர்ந்த சாகிர் நாயக், அக்பர் எனும் மலயாளி இறுதியாக தமிழ்நாட்டை சேர்ந்த ஜெயினுலாபிதீன்.

இந்த கருத்துக்களை தமிழ் உலகத்தில் அதிகமாக கொண்டு சேர்த்தவர் ஜெயினுலாபிதீன் என்றால் அது மிகையாது. இவர் தனது குர்ஆனின் மொழிபெயர்ப்பில் இதனை விளக்கமாக சேர்க்கப்போக நாளடைவில் இதுதான் குர்ஆன் வசனங்ககளுக்கு சரியான பொருள் என்று மக்கள் மனதில் பதிந்துவிட்டது. இவர் ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் இருந்த புத்தகங்களை பிறரின் உதவியுடன் மொழிபெயர்த்து தனது விளக்கங்களில் சேர்த்து வந்தார். இறுதியில் இவராகவே அறிவியல் விளக்கங்களை எழுத ஆரம்பித்தார். தினமலர், லங்காஸ்ரீ, வீரகேசரி போன்ற தமிழ் இணயதளங்களில் வரும் செய்திகளை தொடர்ந்து வாசிப்பார். அதில் ஏதேனும் செய்தி குர்ஆனுடன் ஒத்துப்போவதாக இவருக்கு தோன்றினால் உடனே தனது தப்சீரின் அடுத்த பதிப்பில் அதனை சேர்த்துவிடுவார். இவருக்கு அரபு தெரியும் என்பதால் எகிப்திய இணய தளங்களில் வரும் சுவாரஸ்யமான கட்டுக்கதைகளையும் மொழிபெயர்த்து தப்சீரில் சேர்த்துவிடுவார். இவ்வாறு செய்வதில் என்ன தவறு என்று கேட்கிறீர்களா? இவர் கண்ட கண்ட இணய தளங்களில் வரும் செய்திகளையும் குர்ஆனுக்கு விளக்கமாக சொல்லிவிடுவார். ஆனால் உண்மையில் அப்படிப்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புகளோ, நிகழ்வுகளோ நடந்திருக்காது. செய்திகளின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்யாமல் குர்ஆனுக்கு விளக்கமாக எழுதிவிடுவார். உள்ளிருக்கும் ஆக்கங்களை நீங்கள் வாசிக்கும்போது இந்த உண்மையை உணர்வீர்கள். தான் பார்த்த சில ஆங்கில திரைப்படங்களை அடிப்படையாகக் கொண்டு சில தப்சீர் விளக்கங்களை எழுதியுள்ளார் என்பதையும் நீங்கள் காண்பீர்கள்.

ஜெயினுலாபிதீனின் இத்தகைய விபரீத விளக்கங்களின் உண்மை நிலையை அலசுவதே இந்த கட்டுரைகளின் நோக்கம். 

விளக்கங்களை காண https://www.piraivasi.com/p/zina-ul-abdeen.html