Wednesday 13 April 2016

பிறை பார்த்த தகவலை ஏற்றால் உலகில் ஒரே நாளில் பெருநாள் வருமா?

உலகத்தில் 24 மணி நேர வித்தியாசம் தானே. பிறை பார்த்த தகவல் கிடைக்கும்போது உலகில் பாதி மக்கள் இரவில் இருப்பார்கள் அவர்கள் அனைவரும் அந்த இரவில் சஹர் செய்வார்கள் பகலில் இருப்பவர்கள் தொடர்ந்து வரும் இரவில் சஹர் செய்வார்கள். 24 மணி நேரத்தில் எல்லோரும் நோன்பு நோற்று விடுவார்கள். எனவே
“ஒரே இறை ஒரே மறை ஒரே பிறை”
என்று வாதிடும் சகோதரர்களுக்கு இந்தப் பதிவு.
உலகில் எப்போதும் இரு கிழமைகள் இருந்துகொண்டே இருக்கும். இவ்வாறு இரு கிழமைகள் இருந்துகொண்டிருப்பதால் உலகப் பிறைத் தகவலை ஏற்ற உடன் மாதத்தை துவங்கினால் ஏற்கனவே இருக்கும் இரண்டு கிழமைகளின் அடுத்த கிழமையில்தான் மாதம் துவங்கும். இரண்டு கிழமைகளில் நோன்பும் பெருநாளும் தானாக வரும்.
முதல் பிறை எல்லா மாதமும் ஒரே இடத்தில் தெரிவதில்லை. இந்த மாதம் மேற்கில் இருக்கும் அமெரிக்காவில் முதன் முதலாக தலைப்பிறை தென்பட்டால், அடுத்த மாதம் கிழக்கில் இருக்கும் இந்தோனேசியாவில் தென்படலாம். மற்றொரு மாதம் மத்தியில் இருக்கும் அல் ஜீரியாவில் தென்படலாம். இந்தியாவில் ஒரு மாதமும், சௌதியில் இன்னொருமாதமும் தலைப் பிறை முதன் முதலாக தென்படலாம். நாமும் பூமியில் ஒவ்வொரு பகுதியிலும் முதல் பிறை தென்பட்டால் அந்த அறிவிப்பு கிடைக்கும்போது உலகின் மற்ற பகுதிகள் எந்த கிழமையில் எந்த நேரத்தில் இருக்கும், அவர்கள் எப்போது சஹர் செய்து நோன்பு பிடிப்பார்கள் என்று பார்ப்போம்.
ஒவ்வொரு முக்கிய நாட்டையும் உதாரணத்துக்கு எடுத்து மற்ற நாடுகள் அப்போது எந்த நேரத்தில் இருக்கும் என்பதையும் காட்டியுள்ளேன். 6:30 க்கு சூரிய மறைவு 5:30 சூரிய உதயம் எனும் சராசரி நேரங்களை எடுத்துக்காட்டுக்காக எடுத்துள்ளேன். துல்லியமான நேரங்களையும் உண்மையான மாதத்துவக்கதுக்குமான ஆய்வை இங்கே நீங்கள் பார்க்கலாம். http://hafsa13.blogspot.com/2014/12/Universal-Hilail-An-Astronomical-Analysis.html இது எல்லா மக்களுக்கும் விளங்க வேண்டும் என்பதற்காக எளிமையாக காட்டியுள்ளேன்.
லாஸ் ஏஞ்சலிஸில் பிறை தெரிந்தால்:  
லாஸ் ஏஞ்சலிஸில் வியாழன் மாலை 6:30க்கு பிறை தெரிவதாக வைத்துக்கொள்வோம். அவர்கள் அந்த வெள்ளிக்கிழமை சஹர் செய்வார்கள். பிறை பார்த்த தகவல் அடுத்த வினாடியே உலகமெங்கும் அறிவிக்கப்படுகிறது. தகவல் கிடைத்த உடன் தொடர்ந்து வரும் சஹர் வேளையில் உலக மக்கள் சஹர் செய்தால் என்னவாகுமென்று பார்ப்போம்.
சென்னையில் அப்போது வெள்ளிக்கிழமை விடிந்திருக்கும். காலை 7 மணியாக இருக்கும். சஹர் செய்து நோன்பு பிடிக்க முடியாது. அவர்களுக்கு பிறை பார்த்த தகவல் வந்தாலும் சனிக்கிழமைதான் நோன்பு நோற்பார்கள். அமெரிக்காவில் வெள்ளிக்கிழமை நோன்பு. சென்னையில் சனிக்கிழமை நோன்பு.
இந்தோனேசியாவில் காலை 10:30 சென்னையைப் போல் பிறை பார்த்த தகவல் வந்தாலும் சனிக்கிழமைதான் நோன்பு நோற்பார்கள். அமெரிக்காவில் வெள்ளிக்கிழமை நோன்பு. இந்தோனேசியாவில் சனிக்கிழமை நோன்பு.
மக்கா: 4:30 க்கெல்லாம் மக்காவிலும் சஹர் வேளை முடிந்திருக்கும். அவர்களும் சனிக்கிழமைதான் நோன்பு நோற்பார்கள்.
நியு யார்க்கில் பிறை தெரிந்தால்...  
நியு யார்க்கில் வியாழன் மாலை பிறை தெரிந்தால் அவர்கள் வெள்ளிக்கிழமை சஹர் செய்வார்கள்.
அப்போது மக்கா வெள்ளிக்கிழமை சஹர் நேரத்தை கடந்திருக்க மாட்டார்கள். அவர்களால் வெள்ளிக்கிழமை சஹர் செய்ய இயலும்.
சென்னை: சென்னையில் ஃபஜ்ர் பாங்கு சொல்லி இருப்பார்களே. சரி பரவாயில்லை. நோன்பு பிடிப்போம் என்று ஒரு வேளை சென்னை மக்கள் நோன்பு பிடித்தாலும். சிங்கப்பூரில் அப்போது சூரியன் பல்லைக் காட்டிக்கொண்டிருக்கும் 6:30 மணி. சிங்கப்பூருக்கு கிழக்கிலிருக்கும் இந்தோனேசியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, ஃபிஜி... மேலும் நமக்கு தெரியாத எல்லா நாடுகளுக்கும் சனிக்கிழமைதான் நோன்பு நோற்க இயலும். உலகில் பாதி நாடுகள் வெள்ளிக்கிழமையில் நோன்பு மீதி நாடுகள் சனிக்கிழமையில் நோன்பு.
அல்ஜீரியாவில் பிறை தெரிந்தால்.
அல்ஜீரியாவில் வியாழன் மாலை பிறை தெரிந்தால் அவர்கள் வெள்ளிக்கிழமை சஹர் செய்வார்கள்.
லாஸ் ஏஞ்சலிஸில் இன்னும் வெள்ளி சஹர் நேரம் ஆகவில்லை அவர்களும் வெள்ளிக்கிழமை நோன்பு பிடிப்பார்கள்.
சென்னையிலும் வெள்ளிக்கிழமை நோன்பு சாத்தியம்.
ஆனால் ஃபிஜிக்கும் அதனை ஒட்டிய நாடுகளுக்கும் விடிந்திருக்கும். அவர்களால் சனிக்கிழமைதான் நோன்பு பிடிக்க இயலும்.
சென்னையில் வியாழன் மாலை பிறை தெரிந்தால் அவர்கள் வெள்ளிக்கிழமை சஹர் செய்வார்கள்.
லாஸ் ஏஞ்சலிஸில் அப்போதுதான் வியாழன் விடிந்திருக்கும் . அவர்களும் வெள்ளிக்கிழமை நோன்பு பிடிப்பார்கள்.
ஆனால் அமெரிக்க சமோவா ஹொனலுலு போன்ற இடங்களுக்கு இன்னமும் வியாழனே விடியவில்லை. சென்னையில் வியாழக்கிழமை மாலை பிரைபார்த்த தகவலை கேட்கும்போது இம்மக்கள் வியாழன் சஹருக்கு முன் நேரத்தில் இருப்பார்கள். அவர்கள் சென்னையின் தகவலை ஏற்றால் வியாழக்கிழையே நோன்பு பிடிக்கலாம்.
சென்னையில் வெள்ளிக்கிழமை நோன்பு சென்னையின் அறிவிப்பை ஏற்ற மேற்கத்திய நாடுகளில் வியாழக்கிழமை நோன்பு.  
இந்தோனேசியாவில் வியாழன் மாலை பிறை தெரிந்தால் அவர்கள் வெள்ளிக்கிழமை சஹர் செய்வார்கள்.
அந்த தகவல் மேற்குலத்தை அடையும்போது லாஸ் ஏஞ்சலிஸில் வியாழன் சஹர் வேளையைக் கூட அடைந்திருக்க மாட்டார்கள். பிறை பார்த்த தகவல் வந்துவிட்டதால் அவர்கள் வியாழக்கிழமையே நோன்பு பிடிப்பார்கள்.
இந்தோனேசியாவில் வெள்ளிக்கிழமை நோன்பு இந்தோனேசியாவின் அறிவிப்பை ஏற்ற அமெரிக்காவில் வியாழக்கிழமை நோன்பு.
மேற்குலக அமெரிக்க பிறை முதல் கிழக்குலக இந்தோனேசியா பிறை வரைப் பார்த்துவிட்டோம். பிறை உலகில் எங்கு தெரிந்தாலும் உலகப் பிறையை ஏற்றால் இரண்டு கிழமைகளில் நோன்பும் பெருநாளும் வருவதை தவிர்க்கவே இயலாது.
மேலும் உலகப்பிறையைப் பின்பற்றினாலும் உலகின் ஒரு பகுதிக்கு 29 நாளும் மற்றொரு பகுதிக்கு 3௦ நாளும் வரும். அதைப்பற்றி தெரிந்துகொள்ள மேலே தந்துள்ள லிங்கைப் பாருங்கள்.
ஒற்றுமை என்பது கொள்கையில் ஏற்பட வேண்டும். அல்லாஹ்வின் வேதத்தை ஒற்றுமையாக பற்றிப்பிடியுங்கள். பிரிந்து விடாதீர்கள். என்று சொல்லும் அல்லாஹ் “தலைப் பிறைகளை மக்களுக்கு காலங்களை காட்டும் கருவிகள்(2:189)” என்று பன்மையில் தலைப்பிறைகள் உலக மக்களுக்கு வெவ்வேறு காலங்களைக் காட்டும் என்கிறான். நாம் அந்த கயிற்றைப் பற்றிப்பிடிக்காமல் பிறையில் ஒற்றுமை ஏற்படுத்த முயல்கிறோம்.
வெவ்வேறு கிழமைகளில் பெருநாள் கொண்டாடினால் வேற்றுமை வராது மக்களே. வெவ்வேறுகிழமைகளில் பெருநாள் கொண்டாடினாலும் எல்லோரும் ஷவ்வால் 1 இலும் ஹிஜ்ஜா 1௦லும்தான் பெருநாள் கொண்டாடுவோம்.
இன்ஷா அல்லாஹ் வரும் 16 ஆண்டுகளில் (AH1437 1452) சவூதி மட்டும் பிறையைப் பார்க்காமலே பிறையைப் பார்த்ததாக பொய்யாக அறிவிக்காமல் இருந்தால் பின்வரும் 2 ரமலான், 3 ஷவ்வால் & 1 ஹஜ் மாதங்களைத் தவிர மற்ற மாதங்கள் சவுதிக்கும் நமக்கும் ஒன்றாகவே தொடங்கும். ( முந்தைய காலங்களில் சவூதி பொய்யாக அறிவித்த பிறைகள் http://hafsa13.blogspot.com/2015/07/6.html)
இன்ஷா அல்லாஹ் 32 பெருநாட்களில் 4 பெருநாட்கள் மட்டுமே இரண்டு நாட்களில் வரும். மற்றவை ஒன்றாகவே வரும்.
1444 ரமலான், 1447 ஹஜ், 1449 ஷவ்வால், 1450 ஷவ்வால், 1451 ஷவ்வால், 1452 ரமலான்
சவூதி அறிவிக்கும் முன்பே மலையாளி இறைச்சி வியாபாரிகள் பிறையைப் பார்த்ததாக பொய்யாக அறிவிக்காமல் இருந்தால் கேரளாவுக்கும் ஒரே நாளில் பெருநாள் வரும்.
இறையும் மறையும் ஒன்றாக இருப்பதே இஸ்லாம்.

ஆனால் இந்த விளக்கங்கள் IDL(தேதிக்கோடு) மற்றும் Time Zones (நேரமண்டலங்கள்) எனும் மனித ஏற்பாடுகளுக்கு உட்பட்டதால் இவை ஏற்புடையதல்ல என்று சில சகோதரர்கள் இதை நிராகரிக்கின்றனர். அத்தகைய சகோதரர்களுக்காக இந்தப் புது ஆக்கம். http://www.piraivasi.com/2016/04/19.html

நன்றி: http://www.worldtimebuddy.com/