Tuesday 19 April 2016

பிறை பார்த்த தகவலை ஏற்றால் உலகில் ஒரே நாளில் பெருநாள் வருமா? V2

சர்வதேசப் பிறை நடைமுறையில் சாத்தியம் இல்லை! எனினும் உலகில் எங்கிருந்து பிறைத் தகவல் வந்தாலும் அதை ஏற்று மாதத்தைத் துவங்கினால் உலகில் ஒரே நாளில் பெருநாளும் நோன்பும் வந்துவிடும் எனும் தவறான நம்பிக்கையை விளக்கும் விதமாக ஏற்கனவே அதிக விளக்கங்களுடன் இரண்டு ஆக்கங்களை வெளியிட்டிருந்தோம்.
ஆனால் இந்த விளக்கங்கள் IDL(தேதிக்கோடு) மற்றும் Time Zones (நேரமண்டலங்கள்) எனும் மனித ஏற்பாடுகளுக்கு உட்பட்டதால் இவை ஏற்புடையதல்ல என்று சில சகோதரர்கள் இதை நிராகரிக்கின்றனர். அத்தகைய சகோதரர்களுக்காக இந்தப் புது ஆக்கம். தேதிக்கோடும் நேரமண்டலங்களும் மனிதன் ஏற்படுத்தியது என்பதில் மாற்றுக்கருதில்லை. ஆனால் நாம் நமது ஆக்கங்களில் எடுத்தது மக்ரிப் மற்றும் ஃபஜ்ர் போன்ற இறைவன் உருவாக்கிய நேரங்களைத் தான். எனினும் அவர்களுக்கு இது விளங்கவில்லை என்பதால் நாம் இறைவன் உருவாக்கிய வக்துக்களையும் இறைவன் உருவாக்கிய வாரநாட்களையும் வைத்து இம்முறை விளக்க முயற்சிப்போம்.
ஒவ்வொருவரும் அவரவருக்குச் சூரியன் மறையும் பொது மக்ரிப் தொழுகிறோம். அவரவருக்குச் சூரியன் தலையைக் கடக்கும்போது லுஹ்ர் தொழுகிறோம். சூரியன் அவரவரை அடையும்போதே வார நாட்கள் ஏற்படுகிறது. ஜுமுஆ எனும் தொழுகை வெள்ளிக்கிழமை எனும் வாரநாளில் கிழக்கு நாடுகளில் உள்ளவர்களால் முதலில் தொழப்படுகிறது பின்னர் மேற்கில் உள்ள ஒவ்வொருவரும் அந்தத் தொழுகையை தொழுகின்றனர். இது தேதிக்கோடு ஏற்படுத்தப் படுவதற்கு முன்னரே உலகில் நடந்து வருவதாகும். இந்த அடிப்படையை எடுத்துச் சர்வதேசப் பிறையை ஆய்வு செய்வோம். இதற்காக நாம் மூன்று நகரங்களை எடுப்போம். இகுவேடர் நாட்டின் கிற்றோ, கென்யா நாட்டின் நைரோபி மற்றும் இந்தோனேசியாவின் ஜெயபுரா. இந்நகரங்களை தேர்ந்தெடுக்கக் காரணம்: சிலர் அமெரிக்காவை வடதுருவத்தில் இருப்பதாகக் கருதுகின்றனர், ஃபிஜியை கிழக்குத் துருவத்தில் இருப்பதாகக் கருதுகின்றனர், அத்தகைய அதி மேதாவிகளுக்காகப் பூமத்திய ரேகைப் பகுதிகளில் இருக்கும் இந்நகரங்களை எடுத்துள்ளோம். மேலும் பூமத்திய ரேகை பகுதியில் இருக்கும் நகரங்களில் தொழுகை நேர மாற்றங்கள் ஒன்றுக்கொன்று சீராக இருக்கும். உதா கோடையில் சூரியன் அரை மணி நேரம் தாமதமாக மறைந்தால் இந்த 3 நகரங்களிலும் அரை மணி நேர தாமதம் சமமாக இருக்கும். அமெரிக்காவையும் ஆஸ்திரேலியாவையும் எடுத்தால் காலநிலை மாறும்போது இவற்றுக்கிடையேயான தொழுகை நேரங்கள் சீராக மாறாது. இம்மூன்று நகரங்களும் அதிமேதாவிகள் நினைத்திருக்கும் வடதுருவம் அல்லது கிழக்குத் துருவத்தில் இல்லை.
இந்தோனேசியா மக்ரிப் வேளையில் இருக்கும்போது. இகுவேடர் முந்தைய நாளின் சஹர் வேளையிலும், கென்யா லுஹ்ர் வேளையிலும் இருக்கும்
கென்யா மக்ரிப் வேளையை அடையும்போது ஜெயபுரா நள்ளிரவிலும், இகுவேடர் லுஹா நேரத்திலும் இருக்கும்
இகுவேடர் மக்ரிப் வேளையை அடையும்போது ஜெயபுரா மறுநாளின் லுஹா வேளையிலும், கென்யா சஹர் வேளையிலும் இருக்கும்.
மக்ரிப் வேளையில் தான் முதல் பிறை தெரியுமென்பது நாமறிந்ததே. திங்கள் கிழமை அஸருக்குப் பின் தொழும் மக்ரிபிலிருந்து செவ்வாய்க் கிழமை துவங்குகிறது. சர்வதேசப் பிறைக்காரர்கள் சஹர் வரை பிறை பார்த்த தகவலுக்காகக் காத்திருப்பார்கள். செவ்வாய்க் கிழமை சஹர் வேளை முடிவதற்குள் பிறை தகவல் வந்தால் அவர்கள் மாதத்தைச் செவ்வாய்க் கிழமையிலிருந்து துவங்குவர். செவ்வாய்க் கிழமை சஹர் வேளையைத் தாண்டிப் பிறைத் தகவல் வந்தால் புதன் கிழமைதான் மாதத்தைத் துவங்க இயலும் என்பது அவர்களின் நிலை. இப்போது மேற்சொன்ன ஒவ்வொரு ஊரிலுருந்தும் பிறைத் தகவல் வந்தால் மற்ற ஊரார் எப்போது மாதத்தைத் துவங்குவர் என்று பார்ப்போம்.
ஒரு மாதத்தில் இந்தோனேசியாவில் முதன் முதலாகப் பிறை தெரிகிறது என்று வைத்துக் கொள்வோம். இந்தோனேசியாவில் திங்கள் அன்று மக்ரிபில் வேளையில் பிறை தெரிகிறது, இந்தோனேசியர் செவ்வாய் அன்று சஹர் செய்து நோன்பு பிடிப்பார். அந்தத் தகவல் கென்யாவை அடையும்போது கென்யா மக்கள் திங்கள் லுஹ்ர் வேளையில் இருப்பர். அவர்களும் செவ்வாய் அன்று சஹர் செய்து நோன்பு பிடிப்பர். ஆனால் அந்தத் தகவல் இகுவேடரை அடையும்போது அவர்கள் திங்கள் சஹர் வேளையில் இருப்பார் அவர்கள் திங்கள் கிழமையிலேயே சஹர் செய்து திங்களன்றே நோன்பு பிடிப்பர். இந்தோனேசியாவில் செவ்வாய் கிழமையில் நோன்பு அந்த அறிவிப்பை ஏற்ற இகுவேடரில் திங்கள் கிழமையில் நோன்பு.
மற்றொரு மாதத்தில் கென்யாவில் புதன் கிழமை மக்ரிப் வேளையில் பிறை தெரிகிறது. கென்ய மக்கள் வியாழன் நோன்பு நோற்பர். அந்தத் தகவல் கிடைக்கும்போது இந்தோனேசிய மக்கள் வியாழன் நள்ளிரவிலும், இகுவேடர் மக்கள் புதன் லுஹா வேளையிலும் இருப்பர் இரு நாட்டவரும் வியாழனன்று நோன்பு நோற்பர். கென்யாவில் பிறை தெரிந்தால் இம்மூன்று நாடுகளிலும் ஒரே நாளில் நோன்பு வரும்.
பிறிதொரு மாதத்தில் இகுவேடரில் ஞாயிற்றுக்கிழமை மக்ரிப் வேளையில் பிறை தெரிகிறது. இகுவேடர் மக்கள் திங்களன்று சஹர் செய்து நோன்பு நோற்பார்கள். அந்நேரம் கென்யா திங்கள் சஹர் வேளையிலும் இருக்கும், அவர்களும் திங்கள் சஹர் செய்து நோன்பு நோற்பார்கள். ஆனால் இந்தோனேசியர் திங்கள்கிழமை விடிந்து லுஹா வேளையில் இருப்பார்கள். அவர்களால் செவ்வாய்க் கிழமையில்தான் நோன்பு நோற்க இயலும். இகுவேடரில் திங்கள் கிழமையில் நோன்பு, அதன் பிறை அறிவிப்பை ஏற்ற இந்தோனேசியாவில் செவ்வாய்க்கிழமையில் நோன்பு.
மேலே நாம் சொன்ன கிழமைகளும் சூரிய வக்துக்களும் உலகம் படைக்கப்பட்ட நாள் முதல் இவ்வாறுதான் இருக்கின்றன. இவை எதுவும் 1884இல் உருவாக்கப்பட்ட உலக தேதிக்கோட்டின் அடிப்படியில் செய்யப்பட்டவை அல்ல. என்பதை மனதில் நிறுத்திகொள்ளுங்கள். எல்லா மாதமும் கென்யா போன்ற மத்திய ஆப்ரிக்க நாடுகளில் பிறை தெரிந்தால் உலகில் ஒரே நாளில் பெருநாளும் நோன்பும் வருவதற்கு சாத்தியம் உள்ளது. ஆனால் பிறையின் உதயம் மாதா மாதமும் மாறிக்கொண்டிருக்கிறது. ஒரே இடத்தில் எல்லா மாதமும் பிறை உதயமாவதில்லை.
சர்வதேச பிறை ஒரு வெற்று சித்தாந்தமே! பிறையில் ஒற்றுமை ஏற்பட்டு எதுவும் ஆவதில்லை. உலகில் எல்லோரும் ஒரே நாளில் பெருநாள் கொண்டாடுவதால் எந்த நன்மையையும் அதிகமாக கிடைக்கப் போவதில்லை. இரண்டு நாட்களில் கொண்டாடுவதால் எந்த இழப்பும் இல்லை. ஒரே நாளில் பெருநாள் வந்தால் அதை நாம் எதிர்ப்பவரும் அல்லர். நடை முறையில் சாத்தியம் இல்லாத ஒன்றையும், மார்க்கத்தில் அடிப்படையில்லாத ஒன்றையும் பரப்புரை செய்து என்ன பயன். நபி வழிப்படி பிறை பார்த்தால் இரண்டு அல்லது அதிக பட்சமாக மூன்று நாட்களில் பெருநாள் வரும். சர்வதேச பிறையை எடுத்தாலும் இரண்டு நாட்களில் பெருநாள் வருவதை தவிர்க்க முடியாது. இவ்வாறு இல்லாத ஒன்றை ஏன் பேசவேண்டும். நபி வழிப்படி பிறை பார்த்தால் கேரளாவுக்கும் தமிழ் நாட்டுக்கும் இரண்டு பெருநாள் வந்துவிடாது. கேரளாக பொய்யாக அறிவிப்பதாலேயே இது நிகழ்கிறது. சவூதி அரசு பிறையைப் பார்க்காமலே அறிவிப்பதையும் நிறுவிவிட்டோம்.

அல்லாஹ் சொல்லும் ஒற்றுமையைப் பற்றிப் பிடிப்போம். இல்லாத பிறை ஒற்றுமை என்றுமே வராது




மத்திய ஆப்ரிக்கா மக்ரிப் வேளையில் இருக்கும்போது உலகின் மற்ற பகுதிகள் எந்தெந்த நேரத்தில் இருக்கும் எனும் வரை படம்.