Wednesday 15 August 2018

நஸீஉ (النَّسِيءُ) என்றால் என்ன?

பெரும்பாலான முஸ்லிம்கள் நபி(ஸல்) அவர்களின் வழிமுறைப்படி பிறை பார்த்து மாதங்களை கணக்கிட்டு வருகிறார்கள். இந்த வழிமுறைப்படி உலகம் முழுவதும் மாதத் தொடக்கம் இரண்டு கிழமைகளில் வருகிறது. ஸஹாபாக்கள் காலத்திலும் உலக அளவில் இரண்டு கிழமைகளில் மாதத் துவக்கம் வந்த ஆதாரங்களும் இருக்கிறது. 

உலக அளவில் இரண்டு கிழமைகளில் மாதத்துவக்கம் வருவதை ஒரு குற்றச் செயலாக ஸஹாபாக்கள் காலத்தில் கருதப்படவில்லை. பல நூற்றாண்டுகளாக உலகம் முழுவதும் இரண்டு கிழமைகளில்தான் மாதத் துவக்கம் அமைந்து வருகிறது. 

இரண்டு கிழமைகளில் மாதத்துவக்கம் வருவது ஹராம் என்று சமீபத்தில் சிலரால் கருத்திடப்படுகிறது. குர்ஆனில் அதற்கு ஆதாரம் இருக்கிறது என்று கூறி 9:37 வசனம் காட்டப்படுகிறது.

إِنَّمَا النَّسِيءُ زِيَادَةٌ فِي الْكُفْرِ


நிச்சயமாக! நஸீஉ(யானது) குஃப்ரை அதிகப்படுத்துவதே...(9:37)


இந்த வசனத்தை வைத்துதான் இரண்டு கிழமைகளில் மாதத்துவக்கம் வருவது ஹராம் என்று ஃபத்வா வழங்கப்படுகிறது. இதன் உண்மை என்ன என்பதை விரிவாகப் பார்ப்போம். இன்ஷா அல்லாஹ். 

நஸீஉ (النَّسِيءُ) என்பது காபிர்களின் செயல் என்று குர்ஆன் வசனம் இறங்கியவுடன் நஸீஉ என்ற செயல் அரபுலகத்தில் இருந்தே துடைத்தெறியப்பட்டுவிட்டது. அவர்கள் செய்த நஸீஉ என்ன? அதாவது நஸீஉ என்றால் என்ன? இதுதான் நாம் பார்க்கப்போவது. 

குர்ஆன் மொழிபெயர்ப்புகளில் நஸீஉ என்பதை எப்படி மொழிபெயர்த்திருக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம். 

** முன்பின் ஆக்குவது
** ஒத்திப் போடுவது
** தள்ளிவைப்பது
** Postponed
என்றெல்லாம் நஸீஉ என்ற வார்த்தையை மொழிபெயர்த்திருக்கிறார்கள். 

** Intercalating (இடைச் செருகல்)
** Disregard (அவமதித்தல்)
என்றும் மொழிபெயர்த்திருக்கிறார்கள்

சிலர் அந்த அரபு வார்த்தையையே அப்படியே போட்டிருக்கிறார்கள் (உதாரணமாக: ஜக்காத் , ருகூவு போன்ற வார்த்தைகளை அப்படியே சொல்வதுபோல்) 
** நஸீஉ
** Nasee

ஆக, நஸீஉ என்ற வார்த்தைக்கு இணையான ஒரு வார்த்தையை தேர்ந்தெடுத்து மொழிபெயர்ப்பு செய்வதில் கருத்தொற்றுமை இல்லை என்பது தெளிவாகிறது. ஏனெனில், இது அகராதியில்(Dictionary) தேட வேண்டிய வார்த்தை அல்ல. நஸீஉ என்பது நபி(ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்பே செய்யப்பட்ட ஒரு வரலாற்றுச் செயல். இதன் விளக்கத்தை வரலாறுகளில்தான் தேட வேண்டும். 

புனித மாதங்கள்

துல்கய்தா, துல்ஹஜ், முஹர்ரம் மற்றும் ரஜப் ஆகிய நான்கும் அரபுகளின் புனித மாதங்கள். அந்த நான்கு மாதங்களிலும் அரபுகள் போர் செய்வதில்லை. அதற்குக் காரணம் அவர்களின் உயிர் மூச்சான ஹஜ். அரபுகள் தங்களுக்குள் குலப்பெருமை பேசிக்கொண்டு அடித்துக்கொண்டாலும் ஹஜ் கிரியையை நிறைவேற்றும் காலத்தில் அனைத்தையும் விட்டுவிடுவார்கள். அதற்காக அவர்களுக்காக செய்யப்பட்டிருந்த ஒரு ஏற்பாடுதான் "புனித மாதங்களில் போரிடுதல் கூடாது".

புனித மாதங்கள் என்பது நபி(ஸல்) அவர்கள் அறிமுகப்படுத்தியதல்ல. அவர்களுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்து வரும் ஒன்று. நபித்துவம் கிடைத்த பிறகு அரபுகளிடம் மண்டிக் கிடந்த முந்தைய கால நம்பிக்கைகளுள் பலவற்றை நபி(ஸல்) அவர்கள் தகர்த்தார்கள். "புனித மாதங்களில் போரிடக்கூடாது" என்பது அதுபோல தகர்க்கப்பட வேண்டிய ஒரு நம்பிக்கையா என்ற ரீதியில் மக்கள் கேள்வி எழுப்பினார்கள். 

يَسْأَلُونَكَ عَنِ الشَّهْرِ الْحَرَامِ قِتَالٍ فِيهِ
புனித மாதத்தில் போர் செய்வது குறித்து உம்மிடம் கேட்கின்றனர். "அதில் போரிடுவது பெருங்குற்றமே...  (2:217)

அது மூடநம்பிக்கை அல்ல என்றும் அதில் போரிடுவது பெருங்குற்றம் என்றும் வசனம் இறங்கியது. அதுமட்டுமல்லாமல் காபா ஆலயத்தை  மனிதர்களுக்கு (கியாமத் நாள்) வரைக்கும் நிலைக்கச் செய்தது போல் புனித மாதத்தையும் நிலைக்கச்  செய்துவிட்டதாகவும் வசனம் இறங்கியது. 


جَعَلَ اللَّهُ الْكَعْبَةَ الْبَيْتَ الْحَرَامَ قِيَامًا لِّلنَّاسِ وَالشَّهْرَ الْحَرَامَ وَالْهَدْيَ وَالْقَلَائِدَ 

புனித ஆலயமான கஅபாவையும், புனித மாதத்தையும், குர்பானிப் பிராணியையும், (அதற்கு) அடையாளமிடப்பட்டவைகளையும் மனிதர்களுக்கு நிலையானதாக அல்லாஹ் ஆக்கி விட்டான்... (5:97)

மேலும்,

 الشَّهْرُ الْحَرَامُ بِالشَّهْرِ الْحَرَامِ
"புனித மாதத்திற்கு நிகர் புனித மாதம்தான்" (2:194) என்று சிலாகித்தும் வசனம் இறங்கியது. 

இப்படிப் பட்ட புனித மாதங்களில் அரபுகள் நஸீஉ செய்ததைத்தான் இறை மறுப்பை அதிகமாக்கும் என்று குர்ஆன் வசனம் 9:37 கடுமையாக சாடுகிறது. இப்படிப்பட்ட புனித மாதங்களில் அரபுகள் செய்த நஸீஉதான் என்ன? 

அரபுலகத்தின் காலக் கணக்கை தெரிந்து கொள்ளாமல் அவர்கள் செய்த நஸீஉயை புரிந்து கொள்ள முடியாது. அரபுலகத்தின் காலக் கணக்கைப் பார்ப்போம். 

அரபுலகத்தின் காலக் கணக்கு

நட்சத்திரங்களை கணக்கிட்டு பருவங்களை அறிவது. பிறை பார்த்து மாதங்களை தொடங்குவது. இதுதான் அரபுலகத்தின் காலக்கணக்கு. 

[பிறை பார்த்து மாதத்தை தொடங்குவது நபி(ஸல்) அவர்கள் அறிமுகப்படுத்திய முறை என்று பலர் தவறாக நினைக்கிறார்கள். அது உண்மை அல்ல]

நட்சத்திரங்களை வைத்தே அனைத்து இயற்கை நிகழ்வுகளையும் கணக்கிடக் கூடிய அரபுகளுக்கு பிறை பார்த்து மாதத்தை துவக்க வேண்டிய அவசியமென்ன? 

அவசியம் இருந்தது. அரபுகளின் உயிர் மூச்சான ஹஜ்ஜின் காலத்தை 
சந்திர மாதங்களின் கணக்கில்தான் அடைவார்கள். அந்த சந்திர மாதங்களை 
பிறை பார்த்து துவக்குவார்கள். .
ஒவ்வொரு மாதத்தின் பிறையையும் அந்த மாதத்தின் பெயராலேயே அழைத்தனர். அவர்கள் பார்த்த பிறையின் பெயர் துல்கய்தா என்று வைத்துக்கொண்டால் அதற்கு அடுத்த பிறையானது துல்ஹஜ் பிறையாக இருக்கும். இதுபோல அவர்கள் பார்க்கும் ஒவ்வொரு பிறையையும் வைத்தே ஹஜ் மாதத்தின் பிறைக்கு இன்னும் எத்தனை மாதங்கள் இருக்கின்றன என்பதை மக்கள் அறிந்து கொள்வார்கள். 

மக்காவைச் சுற்றி நெடுந்தொலைவு உள்ள  பகுதிகளிலும் இருந்து பிறை பார்த்து ஹஜ் மாதத்தை அறிந்து கொள்வார்கள்.  
பிறை பார்த்ததன் அடிப்படையில் எந்த மாதத்தை ஹஜ் மாதம் என்று மக்கள் சொல்கிறார்களோ அந்த மாதத்தில் ஹஜ் கிரியைகள் நடக்கும். இப்படித்தான் காலம் காலமாக இருந்து வந்தது. 

வரலாற்றின்படி, நபி(ஸல்) அவர்கள் பிறப்பதற்கு சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நிலைமை மாற்றப்பட்டுவிட்டது. மக்கள் பார்க்கும் பிறையும் ஹஜ்ஜும் மாறுபாட்டிற்குள்ளானது. பிறையைப் பார்த்து ஹஜ்ஜை அறிந்த நிலை மாற்றப்பட்டு, அல்லாஹ்வின் ஆலயத்தை நிர்வகித்தவர்கள் ஹஜ்ஜை அறிவிக்கும் நிலை ஏற்பட்டது. ஹஜ் நடக்கும் மாதத்தை அவர்கள் ஏன் அறிவித்தார்கள்? 

ஹஜ் அறிவிப்பு

பிறையின் அடிப்படையில் ஹஜ் நிகழ்வானது அனைத்து பருவகாலங்களிலும் மாறி மாறி வந்து கொண்டிருந்தது. சில சரிகட்டுதல்கள் மூலம் அதை ஒரே பருவத்தின் கீழ் அதை  கொண்டுவர முடியும் என்பதை உணர்ந்தனர். இதற்கு செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். சில வருடங்களில் மட்டும் ஒரு மாதத்தை இணைத்தால் போதும், குறிப்பிட்ட பருவத்திலேயே ஹஜ் கிரியைகளை நடத்த முடியும். இதைத்தான் செய்தனர். 

அப்படியென்றால், ஒவ்வொரு பனிரெண்டாவது மாதத்திலும் சரியாக நடந்த ஹஜ் நிகழ்வு சில வருடங்களில் பதிமூன்றாவது மாதத்திலும் நடக்குமே!!!

அதாவது, ஹஜ் நடந்து முடிந்ததில் இருந்து அடுத்த 12 வது மாதத்தில் மீண்டும் ஹஜ் நடக்கும். இதுதான் நடைமுறை. இந்த நடைமுறையை பருவகாலத்திற்காக
மாற்றி சில வருடங்களில் ஒரு மாதத்தை கூட்டினார்கள். அதனால் 13 வது மாதத்தில்தான் ஹஜ் நடக்கும். சில வருடங்களில் எப்போதும் போல 12 வது மாதத்திலேயே ஹஜ்ஜை நடத்துவார்கள். 

இந்தசெயல், பிறை பார்த்து ஹஜ் மாதத்தை அறிந்து பயணம் செய்து ஹஜ்ஜிற்கு வரும் மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துமே? பனிரெண்டாவது மாதத்தில்  அவர்கள் ஹஜ்ஜிற்கு வரும்போது அங்கே ஹஜ் கிரியைகள் எதுவுமே நடைபெறாமல் அல்லவா இருக்கும்! ஹஜ் கிரியைக்காக மேலும் ஒரு மாத காலம் அவர்கள் அங்கேயே தங்க வேண்டிய நிலையும் ஏற்படுமே!! ஹாஜிகளுக்கு இது தொந்தரவை அல்லவா தரும்!!! 

அரபுகள் ஹாஜிகளுக்கு தொந்தரவு தர விரும்பமாட்டார்கள். அதனால் ஒவ்வொரு ஹஜ்ஜின் இறுதியிலும் அடுத்த ஹஜ் எப்போது என்பதை மினாவில் அறிவிப்பு செய்தார்கள். அந்த அறிவிப்பை ஹாஜிகள் தங்களது பகுதிகளில் கூறுவார்கள். இதன் மூலம் அடுத்து ஹஜ் செய்ய செல்பவர்கள் ஹஜ் நடக்கும் சரியான காலத்திற்கு செல்ல முடிந்தது. 

பிறை பார்த்து ஹஜ்ஜிற்கு போன காலம் மாறிப்போனது. "இது ஹஜ் மாதம்" என்று பிறை பார்த்து மக்கள் சொல்லும் காலத்தில் ஹஜ் நடக்கவில்லை. மக்காவில் அரபுகள் "நஸீஉ" செய்து எதை ஹஜ் மாதம் என்று சொல்கிறார்களோ அந்த மாதத்தில்தான் ஹஜ் நடந்தது. 

அரபுகள் செய்த நஸீஉ

முஹர்ரம் மாதத்தில் இருந்து ஹஜ் மாதம் வரைக்கும் மொத்தம் பனிரெண்டு மாதங்கள். பருவகாலத்திற்காக ஒரு மாதத்தை கூட்டவேண்டும் என்று முடிவான பிறகு அதை எந்த இடத்தில் வைப்பது என்ற கேள்வி எழும். எந்த மாதங்களுக்கு இடையில் வைத்தாலும் குழப்பம்தான் ஏற்படும். எனவே, ஹஜ் மாதத்திற்கும் அதை அடுத்து வரும் முஹர்ரம் மாதத்திற்கும் இடையில் அந்த கூடுதல் மாதத்தை வைப்பதுதான் இதற்கு நிலையான தீர்வாகியது.

துல்ஹஜ் ஒரு புனித மாதம். அதை அடுத்து வரும் முஹர்ரமும் ஒரு புனித மாதம். இந்த இரண்டிற்கும் இடையில் ஒரு மாதத்தை நுழைத்தால் அந்த மாதத்தின் நிலை என்ன? அது புனித மாதமா அல்லது புனிதமல்லாத மாதமா? 

நுழைக்கப்பட்ட அந்த மாதத்தை புனிதமாதம் என்று அறிவித்தால் புனித மாதங்களின் எண்ணிக்கை ஐந்தாக மாறிவிடும். புனித மாதங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் கூடாது. அதனால் புனித மாதத்தை "தள்ளி வைத்தனர்". 

அதாவது, துல்ஹஜ் என்ற புனித மாதத்திற்குப் பிறகு வரவேண்டிய முஹர்ரம் எனும் புனித மாதத்தை   "தள்ளிவைத்தனர்". இவ்விரண்டு புனித மாதங்களுக்கிடையில் ஒரு மாதத்தை நுழைத்ததால் முஹர்ரம் என்ற புனித மாதம் "தள்ளிப் போனது". முஹர்ரத்தை தள்ளும் அந்த மாதத்தை "தள்ளிப்போடும் மாதம்" என்றனர். அரபு மொழியில் "ஸஹ்ருன் நஸீஉ (شهْرُ النَّسِيءُ ). 

இதுதான் நஸீஉ என்றழைக்கப்படுகிறது. 

நஸீஉவால் நிகழ்ந்தது என்ன?

நஸீஉ என்பது பார்ப்பதற்கு எளிமையாக தோன்றினாலும் அது கடுமையான குழப்பங்களை விளைவித்தது. நஸீஉயின் நோக்கமே ஹஜ் மட்டும்தான். 

இதனால், மக்களின் நடைமுறை மாதக் கணக்கும், ஹஜ்ஜின் மாதக் கணக்கும் ஒன்றாக இருந்த நிலையை இது மாற்றியது. அரபு உலகில் மாதக்கணக்கு  இரண்டு விதமாக மாறியது. 

(1) நஸீஉயை அடிப்படையாகக் கொண்ட ஹஜ்ஜிற்கான மாதக்கணக்கு 
(2) மக்களிடம் நடைமுறையில் இருக்கும் மாதக் கணக்கு

ஹஜ்ஜிற்கான நஸீஉ மாதக் கணக்கும் இரண்டு விதத்தில் ஆனது.

(1) நஸீஉ செய்யப்படும் ஆண்டுகளில் புனித மாதங்கள் வரிசை மாறின.
(2) நஸீஉ செய்யப்படாத ஆண்டுகளில் புனித மாதங்கள் வரிசைப்படி வந்தன. 

மக்களின் நடைமுறை கணக்கின் 'புனித மாதங்களும்', ஹஜ்ஜிற்கான நஸீஉ கணக்கின் 'புனித மாதங்களும்' ஏட்டிக்குப் போட்டியாய் மாறின. இதை சரி செய்வதற்கும் பல குளறுபடிகள் நடந்ததாக வரலாறுகள் சொல்கின்றன. 

பார்க்கப்படும் பிறையை ஒருவர் துல்ஹஜ் என்று சொல்லும்போது மற்றொருவர் அதை துல்கய்தா என்று சொல்லும் நிலையை நஸீஉ எனும் செயல் ஏற்படுத்தியது.

நபிகளார் காலத்தில் நஸீஉ

நபி(ஸல்) அவர்களின் இறுதி காலம் வரையிலும் நஸீஉ இருந்தது. இறை மறுப்பை அதிகரிக்கும் என்று அல்லாஹ் சொல்லும் அந்த நஸீஉ நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இருந்ததா என்று யாரோ கேட்பது போல இருக்குதே!

மது தடை செய்யப்படுவதற்கு முன்பு வரை நபி(ஸல்) அவர்கள் காலத்தில் அது புழக்கத்தில்தான் இருந்தது. பத்ரு போர்க்களத்தில் கூட சிலர் மது அருந்தியிருந்ததாக பதிவு இருக்கிறது. ஆரம்பகாலத்தில் மது தடை செய்யப்படவில்லை. 

يَسْأَلُونَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ ۖ قُلْ فِيهِمَا إِثْمٌ كَبِيرٌ وَمَنَافِعُ لِلنَّاسِ وَإِثْمُهُمَا أَكْبَرُ مِن نَّفْعِهِمَا 

மது மற்றும் சூதாட்டம் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள், அவ்விரண்டிலும் பெரும் கேடும் மக்களுக்கு சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடுதான் பெரிது எனக் கூறுவீராக..(2:219)

மதுவைப் பற்றின விஷயம் என்ன என்று மக்கள் கேட்ட நிலையில் மதுவால் கேடுதான் என்ற முதல் அறிவுரை இறக்கப்படுகிறது. இறுதியாக மதுவை விட்டு விலகுமாறு கூறி மது தடைசெய்யப்படுகிறது (5:90).

இதுபோலத்தான் அல்அஹில்லா என்ற பிறைகளைப் பற்றி மக்கள் கேட்கும்போது, அவைகள்தான் மக்களுக்கும் ஹஜ்ஜிற்குமான காலத்தை நிர்ணயிப்பவைகள் என்று ஹஜ்ஜிற்காக செய்யப்படும் நஸீஉயைப் பற்றி 2:189 வசனம் எச்சரிக்கிறது. 

 يَسْأَلُونَكَ عَنِ الْأَهِلَّةِ ۖ قُلْ هِيَ مَوَاقِيتُ لِلنَّاسِ وَالْحَج
தலைப்பிறைகளைப் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள், அவைதான் மக்களுக்கும் ஹஜ்ஜிற்குமான கால நிர்ணயங்கள் என்று கூறுவீராக... (2:189)

ஹஜ்ஜிற்காக செய்யப்படும் நஸீஉயின் காரணமாக மனிதர்களுக்கு ஒரு மாதமும் ஹஜ்ஜிற்கு வேறு மாதமும் என்று இருந்த நிலையை இந்த வசனம் கண்டிக்கிறது. மாதங்களை காட்டும் தலைப்பிறைகள் மனிதர்களுக்கும் ஹஜ்ஜிற்கும் பொதுவானவையாகத்தான் இருக்க வேண்டும் என்று இந்த வசனம் எச்சரிக்கிறது. 

பின்னர், மக்கா வெற்றிக்கு பிறகு ஹஜ் கிரியைகளை நடத்தும் அதிகாரம் நபி(ஸல்) அவர்களின் நிர்வாகத்தின் கீழ் வந்தவுடன் நஸீஉயை தடை செய்து 9:37 வது வசனம் இறங்கியது. 

நஸீஉ தடை வசனம் 9:37

இந்த வசனத்தின் விளக்கத்தை இதுவரை மேலே நாம் பார்த்த விளக்கங்களைக் கொண்டு அறிய முயல்வோம். 

இதுவரை நாம் பார்த்ததன் சுருக்கம்: 

** மாதங்களின் எண்ணிக்கை 12
** அவற்றுள் போர் தடுக்கப்பட்ட மாதங்கள் அல்லாஹ்வின் கட்டளைப்படி நான்கு
** போர் தடுக்கப்பட்ட மாதங்களைத்தான்
புனித மாதங்கள் என்கிறோம். 
** துல்கய்தா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகிய மூன்றும் தொடர்ச்சியாக வரவேண்டிய புனித மாதங்கள். 

** ஹஜ் நிகழ்வை குறிப்பிட்ட பருவகாலத்தில் வருவதற்காக ஒரு மாதத்தை அதிகரித்தனர். இதுதான் நஸீஉ.
** இந்த அதிக மாதத்தை சில ஆண்டுகளில் இணைப்பார்கள். சில ஆண்டுகளில் இணைக்கமாட்டார்கள்.
** துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியவற்றிற்கு இடையில் அந்த மாதத்தை வைத்தனர். 
** இரண்டு புனித மாதங்களுக்கு இடையில் நுழைக்கப்பட்ட அந்த மாதத்தையும் புனிதமாக்கினால் புனித மாதங்களின் எண்ணிக்கை 5 ஆக மாறிவிடும். 
** அல்லாஹ்வின் கட்டளைப்படி போர் தடுக்கப்பட்ட மாதங்கள் நான்கு மட்டுமே. 
** அல்லாஹ்வின் எண்ணிக்கையை சரி செய்வதற்காக நுழைக்கப்பட்ட அந்த மாதத்தை போர் தடுக்கப்பட்ட மாதம் அல்ல என்றனர். 
** துல்ஹஜ்ஜிற்குப் பிறகு தொடர்ந்து வரும் அந்த மாதம் புனித மாதம் இல்லை என்றானது. 
** முஹர்ரம் தள்ளிப்போனது. இதன் மூலம் துல்ஹஜ் மாதத்தை தொடர்ந்தும்  போர்தடுக்கப்பட்ட மாதம் வரும் என்று அல்லாஹ் அமைத்ததை மாற்றினர். 
** துல்ஹஜ் மாதத்திற்குப் பிறகு வரும் மாதத்தை போர் செய்யும் மாதமாக ஆக்கிக் கொண்டனர். 

வசனம் 9:37

இதற்கு முன்பாக 9:36 வசனம் 'மாதங்களின் எண்ணிக்கை 12 மட்டுமே' என்று தொடங்குகிறது. இதன் தொடர்ச்சியாக 9:37 வது வசனம் "நஸீஉ"யானது இறை நிராகரிப்பை அதிகப்படுத்தக்கூடியது என்கிறது. 

இதுவரை நாம் பார்த்த விளக்கத்தின்படி நஸீஉ என்பது ஒரு மாதத்தை அதிகப்படுத்துவது. 

மாதங்களின் எண்ணிக்கை 12 மட்டுமே. அவைகளின் எண்ணிக்கையை கூட்டக்கூடாது என்கிறது வசனம். அரபுகள் செய்த நஸீஉயை இன்றளவும் இந்தியாவில் செய்து வருகின்றனர். அதற்கு அவர்கள் வைத்திருக்கும் பெயர் "அதிக மாசம்". நஸீஉ என்ற அரபுச் சொல்லுக்கு இணையான வார்த்தை "அதிக மாசம்". 

 إِنَّمَا النَّسِيءُ زِيَادَةٌ فِي الْكُفْرِ 
 يُضَلُّ بِهِ الَّذِينَ كَفَرُوا

நிச்சயமாக! நஸீஉயானது (மாதத்தை அதிகப்படுத்துவது) குஃப்ரை அதிகப்படுத்துவதே ஆகும்.
இதன்(நஸீஉ) மூலம் நிராகரித்தோர் வழிகெடுக்கப்படுகின்றனர்.

மாதத்தை அதிகப்படுத்தும் இந்த செயலை அவர்கள் சில ஆண்டுகளில் செய்தனர். சில ஆண்டுகளில் இந்த செயலை செய்யவில்லை. அப்போதுதுதான் ஒரே பருவத்தில் ஹஜ் நிகழும். 
   
 يُحِلُّونَهُ عَامًا 
 وَيُحَرِّمُونَهُ عَامًا
இதை (நஸீஉ) ஒரு வருடம் அனுமதிக்கின்றனர். 
இதை (நஸீஉ) ஒரு வருடம் தடுத்தும் வைக்கின்றனர்.

ஒரு மாதத்தை அதிகப்படுத்தி அதை இரு புனித மாதங்களுக்கு இடையில் வைக்கும்போது புனித மாதங்களின் எண்ணிக்கை அதிகமாகிவிடக்கூடாது என்பதால், தொடர்ந்து வரவேண்டிய புனித மாதத்தை புனித மாதம் இல்லை என்று கூறிவிடுகின்றனர். 

அதாவது, போர்தடுக்கப்பட்ட மாதங்கள் நான்கு என்ற அல்லாஹ்வின் 
எண்ணிக்கையை சரிசெய்வதற்காக, துல்ஹஜ்ஜிற்குப் பிறகு வரவேண்டிய 
போர் தடுக்கப்பட்ட மாதத்தை போர் செய்ய தடுக்கப்படாத மாதமாக மாற்றிவிடுகின்றனர். 

 لِّيُوَاطِئُوا عِدَّةَ مَا حَرَّمَ اللَّهُ
 فَيُحِلُّوا مَا حَرَّمَ اللَّهُ 

அல்லாஹ் (போர் செய்ய) தடுத்த (மாதங்கள் நான்கு என்ற) எண்ணிக்கையை சரிசெய்வதற்காக

அல்லாஹ் (போர் செய்ய)
தடுத்த(மாதத்)தை ஆகுமாக்கிக் கொள்கின்றனர்.

நிச்சயமாக! நஸீஉ குஃப்ரை அதிகப்படுத்துவதே, இதன்(நஸீஉ) மூலம் நிராகரித்தோர் வழிகெடுக்கப்படுகின்றனர். இதை ஒரு வருடம் அனுமதிக்கின்றனர், பிரிதொரு வருடம் இதை தடுத்தும் வைக்கின்றனர். அல்லாஹ் தடுத்தவற்றின் எண்ணிக்கையை சரிசெய்வதற்காக அல்லாஹ் தடுத்ததை ஆகுமாக்கிக் கொள்கின்றனர். அவர்களின் தீய செயல்கள் அவர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளன
மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் வழிகாட்ட மாட்டான். (9:37)

முடிவு

இரு கிழமைகளில் மாதத்துவக்கம் அமைவதற்கும் நஸீஉ தடை செய்யப்பட்டதற்கும் சம்பந்தமேயில்லை.