Thursday 3 November 2022

QSF14. உயிரினங்களை அறுத்து உண்பது நியாயமா?

 

இப்படியும் சில தப்ஸீர்கள்- ஜைனுலாபுதீன் தப்ஸீர்


ஜைனுலாபிதீன் அவர்களின் தப்சீரில் அறிவியலின் பெயரால் சொல்லப்பட்டிருக்கும் பிழையான கருத்துக்களை ஆய்வு செய்வதற்காக 2017ம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு சமர்ப்பித்த ஆய்வறிக்கைகள்


QSF ஆய்வுக்குழு

அறிமுகத்தை வாசிப்பது இந்த தொடரை புரிந்துகொள்ள உதவும். அறிமுகத்தை வாசிக்க https://www.piraivasi.com/2022/11/zina-ul-abdeen-intro.html


QSF14.


தப்சீரை வாசிக்க 171 உயிரினங்களை அறுத்து உண்பது நியாயமா?


“உயிரினங்களை அறுத்து உண்பது நியாயமா” என்கிற தலைப்புடன் தொடங்கும் ஜைனுலாபுதீன் தஃப்ஸீர்#171 விமர்சகர்களை திருப்தி செய்வதற்காக எழுதப்பட்டதாகத் தெரிகிறது. விலங்குகளை கழுத்தை அறுத்துக் கொல்லும்போது அவை வலியை உணர்வதில்லை என்றொரு இணையதள செய்தியை அடிப்படையாகக் கொண்டு இது எழுதப்பட்டது. இவ்வாறு விமர்சகர்களை திருப்திப்படுத்தும் நோக்கில் இது எழுதப்பட்டதால் மற்ற குர்ஆன் வசனங்களை கண்டுகொள்ளா நிலை ஏற்படுகிறது.


*//இஸ்லாம் கூறுகின்ற முறையில் உயிரினங்களை அறுக்கும்போது அவற்றுக்கு எந்த வேதனையும் தெரியாது என்று சோதனை மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.//*


*//எனவே பிராணிகளை இஸ்லாம் கூறும் முறையில் அறுத்தால் அதில் உயிரினங்களுக்கு வதை இல்லை என்பது நிரூபணமாகின்றது.//*


உண்மையான ஆய்வறிக்கையை நேரடியாக பார்த்துவிட்டு இந்த தஃப்ஸீர் குறிப்பு எழுதப்படவில்லை. இணையதளங்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் இது எழுதப்பட்டுள்ளது. உண்மையான ஆய்வறிக்கையில் எந்த வேதனையும் தெரியாது என்று சொல்லப்படவே இல்லை... உண்மையான ஆய்வறிக்கையை கீழே தந்துள்ளோம்.

விலங்குகளின் கழுத்தை அறுப்பதால் அவற்றுக்கு வலியே ஏற்படுவதில்லை எனவே இது மிருக வதை இல்லை என்று இந்த தஃப்ஸீர் வாதிடுகிறது. ஆனால் இஸ்லாம் மார்க்கம் கழுத்தை அறுத்துக் கொல்வதை மட்டுமே அனுமதிக்கவில்லை, அம்பெய்து வேட்டையாடுவதையும், வேட்டை விலங்குகள் மூலம்  வேட்டையாடுவதையும் அனுமதித்துள்ளது


5:4. (நபியே! உண்ணுவதற்கு) தங்களுக்கு ஆகுமாக்கப்பட்டவை எவை, என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர், (அதற்கு) நீர் கூறுவீராக! (சுத்தமான) நல்ல பொருட்கள் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளன, இன்னும், *வேட்டையாட நீங்கள் பயிற்சி அளித்தவர்களாக இருக்க – அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத்தந்தவற்றிலிருந்து அவைகளுக்கு நீங்கள் (வேட்டையாட) கற்றுக் கொடுப்பவர்களாக இருக்க (நாய், சிறுத்தை, ராஜாளி போன்ற) வேட்டைப் பிராணிகளில் நீங்கள் கற்றுக்கொடுத்த(வைகள் வேட்டையாடிய)தும் (உங்களுக்கு உண்ணுவது ஆகுமாக்கப்பட்டுள்ளது). எனவே, அவை வே(ட்டையாடி, தாம் புசிக்காமல்) உங்களுக்காகப் பிடித்து வைத்திருப்பவற்றிலிருந்து (அவை இறந்து விட்டபோதிலும்) நீங்கள் புசியுங்கள்;* (எனினும், வேட்டைக்கு அனுப்பும்பொழுது, ‘பிஸ்மில்லாஹ்’ என்று) அவற்றின்மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள்; இன்னும், அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ், கேள்வி கணக்குக் கேட்பதில் மிக துரிதமானவன்.


அம்பெய்து ஒரு விலங்கை நாம் கொல்லும்போது நிச்சயமாக அது சாகும் வரையில் வலியை உணரும். அதை விடவும் மற்றொரு விலங்கு அதனை கடித்துப்பிடித்து இழுத்துவரும்போது அதிகமாக அது அவதிப்படும்.


5:96. உங்களுக்கும், ஏனைய பயணிகளுக்கும் பயன்படும் பொருட்டு *கடலில் வேட்டையாடுவதும், அதன் உணவும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.* இஹ்ராமுடன் இருக்கும்போது நீங்கள் தரையில் வேட்டையாடுதல் தடுக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அவனிடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.


கடல் உயிரனங்கள் எந்த விதத்தில் கொல்லப்பட்டாலும் அது வலியை உணராமல் இருக்காது. சொல்லப்போனால் ஒவ்வொரு மீனும் மூச்சுத்திணறியே உயிரிழக்கிறது. 


உயிரினங்களை அறுத்து உண்பதை மட்டுமே விமர்சித்து அடித்துக்கொன்று உண்பதை விமர்சிக்காதவர் உலகில் யாருமிலர். மேற்கத்திய நாடுகளில் மட்டுமே மிருகங்களை மயக்க நிலையில் கொண்டு சென்ற பிறகு அறுக்கும் நிலை உள்ளது. எனவே அறுத்து உண்பதை அடித்து உண்பதுடன் ஒப்பிட்டால் மட்டும் போதாது. நம்மை நோக்கி கேள்வி எழுப்பும் பெரும்பான்மை தமிழ் மற்றும் இந்திய துணைக்கண்டத்தை சார்ந்த மக்கள் சைவ உணவை உட்கொள்பவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் மொத்தமாக உயிர்வதையை விமர்சிக்கிறார்களே தவிர அறுப்பதை மட்டும் தனியாக விமர்சிக்கவில்லை. 


அறுத்துக்கொல்லும்போது அந்த மிருகம் எளிதில் குறைந்த வலியுடன் இறக்கும் வகையில் அறுங்கள் என்று மார்க்கம் நமக்கு கட்டளை இட்டுள்ளது. எனினும் வேட்டையையும் அனுமதித்துள்ளது. ஆக மனிதனின் உணவுக்காக அல்லாஹ் படைத்துள்ள விலங்குகள் வலியை உணர்ந்தாலும் அதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. அல்லாஹ் அனுமதித்துள்ளான் என்று மட்டுமே எடுத்துக்கொள்ளவேண்டும்.


*//ரத்தம் வெளியேற்றப்படுகிறது. அதனால் அந்த மாமிசம் உணவுக்கேற்ற சுகாதார நிலையை அடைகிறது//*

*//ரத்தம் தேங்கிவிடுகிறது. ரத்தம் உறைந்த அந்த மாமிசம் உட்கொள்ளத்தக்க சுகாதார நிலையை அடையவில்லை.//*


இது தவறான வாதமாகும் இதற்கான விளக்கத்தை QSF21ல் காண்க.


உண்மையான ஆய்வறிக்கை




மற்ற தலைப்புகளை வாசிக்க https://www.piraivasi.com/p/zina-ul-abdeen.html