Wednesday 15 August 2018

நாட்களை முன்பின்னாக மாற்றியது யார்?

"நாட்களை முன்பின்னாக ஆக்குவது குஃப்ர்" என்ற பரப்புரை ஹிஜிரா - நஜாத் கூட்டணியால் பரப்பப்படுகிறது.
திங்கள் கிழமை என்ற ஒரு நாளை ஞாயிற்றுக்கிழமை என்று அழைத்தாலோ அல்லது அதை செவ்வாய்க்கிழமை என்று அழைத்தாலோ அது நாட்களை முன்பின்னாக ஆக்குவதுதான். அதில் மாற்றமில்லை. அப்படி ஏதாவது செய்து விட்டார்களா !!!
இல்லை. இஸ்லாமிய மாதத் தொடக்கத்தை நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதபடி முஸ்லிம்கள் தொடங்குவதைத்தான் குஃப்ர் என்று சொல்கிறார்கள் இவர்கள்.
அதாவது, சந்திர மாதத்தை தொடங்குவதற்கு உலகம் முழுவதும் இரண்டு நாட்கள் ஆவதைத்தான் "நாட்களை முன்பின்னாக ஆக்கும் செயல்" என்று இந்த கூட்டணி கூறுகிறது.
இதற்கு ஆதாரமாக 9:36, 9:37 ஆகிய வசனங்கள் எடுத்து வைக்கப்படுகிறது.
இது தொடர்பாக அவர்கள் முன்வைக்கும் அனைத்து வாதங்களையும் பார்ப்போம்.
வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும்...(9:36)
▶ பன்னிரண்டு மாதங்கள் மட்டும்தான் என்று அல்லாஹ் நிர்ணயித்து விட்டான்.
▶ அப்படியென்றால், அதில் எத்­தனை வாரங்கள்? எத்­தனை நாட்கள்? உட்­பட அனைத்தும் அடங்கி விடுகின்றன.
▶ ஒரு மாதம் 29 நாட்களில் முடிவுறுவதையும் 30 நாட்களில் முடிவுறுவதையும் அல்லாஹ் பதிவேட்டில் வைத்திருக்கிறான்.
▶ எந்த நாளில்(கிழமையில்) மாதம் தொடங்கும் என்பதும் அல்லாஹ்வின் பதிவேட்டில் இருக்கிறது.
▶ எந்த கிழமையில் மாதத்தை தொடங்க அல்லாஹ் விதித்துள்ளானோ அந்த கிழமையில்தான் மாதத்தை தொடங்க வேண்டும்.
▶ திங்கள் கிழமையில் தொடங்குகிற ஒரு மாதத்தை அதற்கு முந்தைய ஞாயிற்றுக் கிழமையிலோ அல்லது அதற்குப் பிந்தைய செவ்வாய் கிழமையிலோ தொடங்கக்கூடாது.
▶ கிழமையை மாற்றி ஒரு மாதத்தை தொடங்கினால் அது நாட்களை முன்பின்னாக ஆக்கிவிடும்.
▶ நாட்கள் முன்பின்னாக மாறினால் மாதமும் முன்பின்னாக மாறிவிடும்.
▶ ஆக, நாட்களை முன்பின்னாக மாற்றுவதை 9:37 வசனம் குஃப்ர் என்று கூறி தடைசெய்கிறது.
▶ உலகம் முழுவதும் ஒரே கிழமையில்தான் மாதத்துவக்கம் இருக்க வேண்டும்.
இதுதான் ஹிஜிரா - நஜாத் கூட்டணியின் வாதமாகும்.
இவர்களின் வாதத்தின்படி இரு வெவ்வேறு கிழமைகளில் மாதத்தை தொடங்குபவர்கள் இறை நிராகரிப்பாளர்கள் ஆகிறார்கள்.
உலகம் முழுவதும் ஒரே கிழமையில் மாதத்தை தொடங்க வேண்டும் என்ற சிந்தனை சமீபகாலத்தில்தான் தோன்றியது. உலகம் முழுவதும் ஒரே கிழமையில் மாதத்தை தொடங்குவதற்கு தேவையான காலண்டரை கண்டுபிடிக்கும் முயற்சி சவுதியில் ஒரு பல்கலைகழகத்தில் தொடங்கப்பட்டது. ஒரு காலண்டரும் வெளிவந்தது. அந்த காலண்டர் 2007 ஆம் ஆண்டில்தான் தமிழ்நாட்டிற்கு வந்தது. இந்த காலண்டரை பரப்புபவர்கள்தான் ஹிஜிரா - நஜாத் கூட்டணியினர். (அந்த காலண்டரை சவுதி அரசாங்கம் குப்பையில் வீசியது வேறு விஷயம்)
இவர்களுடைய கொள்கையின் படி இவர்களுடைய காலண்டர் வருவதற்கு முன்பாக மாதத்தை தொடங்கிய அனைவருமே இறை நிராகரிப்பாளர்கள்தான். ஏனெனில் அதற்கு முன்பு உலகம் முழுவதும் ஒரே கிழமையில் மாதத்தை தொடங்கவில்லை.
மாதத்தை தொடங்குவது சம்பந்தமாக சுமார் 1400 வருடங்களாக முஸ்லிம்கள் அனைவரும் இறை நிராகரிப்பில்தான் இருந்து வருகிறார்கள். அது மட்டுமல்ல ஸஹாபாக்களும் கூட இவர்களின் கூற்றுப்படி இறை மறுப்பாளர்கள் ஆகிவிடுகிறார்கள்.
ஒரு ரமலான் மாதத்தை வெள்ளிக்கிழமையில் தொடங்கிய முஆவியா(ரலி) அவர்களும் அதே ரமலான் மாதத்தை  சனிக்கிழமையில் தொடங்கிய
இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களும் இவர்களின் பார்வையில் இறை மறுப்பாளர்களா? (நவூதுபில்லாஹ்)
தன்னுடைய காலண்டரை நிலை நாட்டுவதற்காக ஸஹாபாக்களையும் இறைமறுப்பாளர்களாக ஆக்கத் துணிந்த ஹிஜிரா - நஜாத் கூட்டணி மிகவும் ஆபத்தான கூட்டணியே.
வசனங்களின் கருத்துப்படி..
9:36 வது வசனத்தில் "மாதங்களின் எண்ணிக்கை 12 மட்டுமே" என்ற செய்தி இருக்கிறது.
9:37 வது வசனத்தில் "மாதத்தை கூட்டும் நஸீஉ என்பதை செய்வது இறை மறுப்பை அதிகரிக்கும்" என்ற கூடுதல் செய்தியும் இருக்கிறது. இதன் மூலம் மாதத்தை கூட்டும் செயல் தடை செய்யப்பட்டது. மேலும் விபரங்களுக்கு (நஸீஉ என்றால் என்ன? http://www.piraivasi.com/2018/08/15.html)
ஆக, நஸீஉ என்பது மாதத்துவக்கத்தைப் பற்றியது அல்ல, மாதத்தை அதிகப்படுத்துவது தொடர்பானது என்பது தெளிவாகிறது.
தமது இறுதி ஹஜ்ஜில் நபி(ஸல்) அவர்கள் "படைக்கப்பட்டதுபோல் காலம் திரும்பிவிட்டது" என்றார்கள். அதாவது 9:37 வது வசனம் சொல்லக்கூடிய  குஃப்ரான காரியத்தை செய்வதில் இருந்து முஸ்லிம்கள் வெளியேறிவிட்டார்கள் என்று பிரகடணப்படுத்தினார்கள்.
நபி(ஸல்) அவர்கள் கொடுத்த இந்த உத்திரவாதத்தைத்தான் ஹிஜிரா - நஜாத் கூட்டணி ஏற்க மறுக்கிறது. ஏனென்றால், அல்லாஹ்வின் பதிவேட்டில் இருக்கும் மாதத்துவக்கத்தை பூமியில் இருந்தே நாங்கள் கணக்கிட்டு விட்டோம் என்ற கற்பனையின் காரணமாகத்தான் நபிகளாரின் உத்திரவாதத்தை புறந்தள்ளி மனோஇச்சையை முன்னிலைப் படுத்துகின்றனர்.
▶ தங்களுடைய காலண்டர்தான் "அல்லாஹ்வின் காலண்டர்" என்கின்றனர்.
▶ தங்களுடைய காலண்டரின் தேதிகள் மட்டும்தான் துல்லியமானவை என்கின்றனர்.
▶ இதன் மூலம் மலக்குகள் கூட நெருங்க முடியாத அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ள தேதிகளை கண்டுபிடித்து விட்டோம் என்கின்றனர்.
▶ தங்களுடைய காலண்டரின் பெருநாள் நாளில் யாராவது நோன்பிருந்தால் அது ஹராம் என்கின்றனர்.
ஆனால்...
◀ வெள்ளிக்கிழமைகளில் கூட்டாக ஜும்ஆ தொழுகை நடத்த சொன்ன நபி(ஸல்) அவர்கள், உலகமே ஒன்று சேர்ந்து கூட்டாக ஒரே கிழமையில் மாதத்தை துவங்குங்கள் என்று சொல்லவில்லை.
அல்லாஹ்வின் பதிவேட்டின்படி மாதங்களின் எண்ணிக்கை 12 மட்டுமே என்று கூறும் வசனம் மாதத்துவக்கம் ஒரே கிழமையில்தான் இருக்க வேண்டும் என்று கூறவில்லை.
அல்லாஹ்வின் பதிவேட்டில் மாதத்துவக்கத்தைப் பற்றியும், மாதம் எத்தனை நாட்களில் முடிவுறும் என்ற கணக்கும் இருக்கிறது என்று அல்லாஹ் சொல்லித்தந்தால் மட்டுமே எவருக்கும் தெரியும். அது பற்றி அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறியிருக்காத நிலையில் பதிவேட்டைப் பற்றி பேசுவது வரம்பு மீறலே.
உண்மையில், நாட்களை முன்பின்னாக மாற்றியது இந்த ஹிஜிரா - நஜாத் கூட்டணிதான்.
ஒரு ஊரில் இருக்கும் அனைவரும் ஒரு கிழமையில் பெருநாள் கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில் "சர்வவதே பிறை"க்கு வக்காலத்து வாங்கி ஒரு ஊரில் இரண்டு கிழமைகளில் பெருநாளைக் கொண்டு வந்தனர்.
பின்னர், திடீரென பல்டியடித்து சவுதி அரசாங்கம் குப்பையில் வீசிய ஒரு காலண்டரை கொண்டு வந்து இனிமேல் இதன்படிதான் அமல் செய்ய வேண்டும் என்று மூன்றாவது கிழைமையில் அவர்களுடைய பெருநாளை கொண்டுவந்தனர்.
ஒரு ஊரின் பெருநாளுடைய நாளை "முன்பின்னாக" மாற்றிய பாவிகள் இந்த ஹிஜிரா- நஜாத் கூட்டணிதான்.