بِسْــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم
திரிக்கப்பட்ட குர்ஆன் வசனங்கள்
ஹிஜ்ரி கமிட்டி தங்களின் பிறைநிலைபாடன அமாவாசைக் கணக்கிற்கு குர்ஆனில் ஆதாரம் உள்ளதாகவும் குர்ஆனில் அல்லாஹ் ஒரு நாள்காட்டியை கூறுவதாகவும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அவர்கள் குர்ஆனிலிருந்து கூறும் வசனங்களின் உண்மையான விளக்கங்களை இங்கே அலசுவோம்.
முதல் வசனம்: மனாzில்
சூறா: 10 யூனுஸ்; வசனம்:5
هُوَ الَّذِي جَعَلَ الشَّمْسَ ضِيَاءً وَالْقَمَرَ نُورًا وَقَدَّرَهُ مَنَازِلَ لِتَعْلَمُوا عَدَدَ السِّنِينَ وَالْحِسَابَ ۚ مَا خَلَقَ اللَّهُ ذَٰلِكَ إِلَّا بِالْحَقِّ ۚ يُفَصِّلُ الْآيَاتِ لِقَوْمٍ يَعْلَمُونَ
அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளியுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை - அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான்.
டாக்டர். முஹம்மது ஜான்
ஜான் டிரஸ்ட் வெளியுட்டுள்ள இந்த மொழிபெயர்ப்பைக் காட்டிக் கமிட்டியினர் “சந்திரனின் மாறிவரும் படித்தரங்கள் மூலம் நாம் நாட்காட்டியை கணக்கிட்டு செயல்படுத்தலாம்” என்று அவர்கள் காலண்டருக்கு இதை குர்ஆனில் உள்ள ஆதராமாக வைக்கிறார்கள். இந்த வசனத்தின் உண்மை நிலையை அலசுவோம்.
மேலுள்ள இறைவசனத்தில் படித்தரம் என்று மொழிப்பெயர்க்கப்பட்ட இடத்தில் “மனாzில்” எனும் வார்த்தையை அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான். மனாzில் என்பது மன்zில் எனும் வார்த்தையின் பன்மையாகும். மன்zில் என்றால் பிறை என்றும் மனாஸில் என்றால் பிறையின் படித்தரங்கள் என்றும் இவர்கள் குர்ஆன் ஹதீஸில் இருந்து நிறுவாதவரை மனாஸில் படித்தரம் ஆகாது.
மனாஸில் என்றால் அராபிய விஞ்ஞானத்தில் ராசிகள் என்று பொருள். ராசிகள் என்ற உடன் சோதிடத்திற்கு தாவிவிடக் கூடாது. வானில் நிலையான நட்சத்திரங்கள் இருக்கின்றன. இந்த நட்சத்திரங்கள் ஒன்றுகொன்று என்றுமே நகர்வதில்லை. இந்த நட்சத்திரங்களை வைத்து வானில் இருக்கும் கோள்கள் அவை வானில் எங்கே இருக்கின்றன என்று மனிதன் பதிவுசெய்து வந்தான். இந்த பதிவை அவன் காலத்தை அளக்கவும், இரவில் திசைகளை அறியவும், வழிகளை தெரிந்து கொள்ளவும் பயன்படுத்தினான். அதற்கும் மேலாக காலநிலை மாற்றத்தை அறிந்துகொண்டு விவசாயம் செய்யவும் இந்த பதிவுகளை பயன்படுத்தினான். இது பழங்கால விஞ்ஞானம். வரலாற்றுக்காலத்திற்கு முன்பே இந்த விஞ்ஞானம் இருந்துள்ளது. பிற்காலத்தில் ஒரு மனிதன் பிறக்கும்போது வானில் கோள்கள் எந்த இடங்களில் இருக்கின்றனவோ அவை அவனின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதாக மனிதன் எண்ணினான். இதை வைத்து பிழைப்பு நடத்த துவங்கியதுதான் இந்த சோதிடம். சோதிடம் இணைவைப்பு என்றாலும் நட்சத்திரங்களின் மற்ற பயன்பாடுகள் ஹராமாகி விடாது.
இவ்வாறு வானில் சூரியன் எங்கே இருக்கிறது என்பதை அறியச் சூரியன் வானில் கடந்து செல்லும் பாதையை (eclpitic) மனிதன் கவனித்தான். அப்பாதையில் இருக்கும் நட்சத்திரங்களைக் குறித்துக்கொண்டான். அவற்றிற்குப் பெயரிட்டான். அவற்றை எளிதில் நினைவில் வைத்துக் கொள்வதற்காக (புள்ளிகளை இணைத்துக் கோலமிடுவதுபோல்) வானில் இருக்கும் நட்சத்திரங்களை மனிதன் கற்பனை கோடுகளால் இணைத்தான். இக்கோடுகளின் ஏற்பட்ட கற்பனை உருவங்களையே அவற்றிற்குப் பெயர்களாக (Zodiac) கொடுத்தான். கற்பனைக் கோடுகள் நண்டு வடிவில் இருந்தால் அதன் பெயரிலேயே அதைக் கடக ராசி என்று அழைத்தான். கற்பனைக் கோடுகள் தேள் வடிவில் இருந்தால் அதன் பெயரிலேயே அதை விருச்சிகம் என்று அழைத்தான். இப்போது சூரியன் வானில் தராசு வடிவில் இருக்கும் நட்சத்திரக் கூட்டத்தில் இருப்பதை “சூரியன் துலாம் ராசியில் இருக்கிறது என்றான்”.
இதே போல் மனிதன் சந்திரன் கடந்து செல்லும் பாதையையும் கவனித்தான். அவற்றின் நட்சத்திரங்களுக்கும் பெயரிட்டான். அவற்றையும் உருவகப்படுத்தினான். சந்திரன் இன்றைய தினம் வானில் எங்கே இருக்கிறதென்பதை இந்த நட்சத்திரங்களை வைத்தே அவன் அடையாளப்படுத்தினான். இந்த விஞ்ஞானம் காலம் காலமாக எல்லா கலாச்சாரங்களிலும் சமூகங்களிலும் இருந்துள்ளது. அரபுகளும் இதில் வல்லுனர்களாக இருந்தனர். இன்றிருக்கும் நட்சத்திரங்களின் பெயர்களில் பெரும்பாலானவை அரபிப் பெயர்களே. பிற்காலத்தில் கிரேக்க கடவுள்களின் பெயர்களை இடுவதை வழக்கமாக கொண்டவர்கள் அதிகமான அரபுப் பெயர்களை நீக்கிவிட்டனர். அரபுகள் சந்திரனின் பாதையில் இருக்கும் ராசி நட்சத்திரங்களை “மனாசிலுல் கமர்” என்றழைத்தனர். சூரியனின் ராசிகளை புரூஜ் என்றழைத்தனர்.
எவ்வாறு நாம் பயன்படுத்தும் ஆங்கில நாட்காட்டி பருவ காலங்களைக் காட்டுகிறதோ அதே போலச் சூரியன் எந்த புரூஜில் இருக்கிறதோ அது நேரடியாக அந்தப் பருவநிலையை காட்டியது. ஆங்கில நாட்காட்டி வெய்யில் காலத்தை ஏப்ரல் மே மாதங்களிலும் குளிர் காலத்தை டிசம்பர், ஜனவரி மாதங்களிலும் காட்டும். இந்த வேலையை புரூஜுகள் அதே போல் துல்லியமாகக் காட்டின. பாபிலோனியர்கள் மூஸா நபிக்கும் முன்பு வாழ்ந்த சமூகம். இவர்கள் புரூஜுகளை வைத்துக் கால நிலை மாற்றத்தை அறிந்து கொண்டனர். இவர்கள் பயன்படுத்தியவைதான் இன்றளவு தொல்லியல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கும் முன்னரே மனிதன் இதை அறிந்திருக்கக்கூடும்.
ஆனால் அரபுகள் சூரியன் எந்த புரூஜில் இருக்கிறது என்று அறிந்து காலநிலை மாற்றத்தை அறிந்துகொள்ளாமல் வேறொரு முறையைக் கையாண்டனர். ஒரு ராசி (மன்சில் – நட்சத்திரம்) ஒரு வருடத்தில் முதலில் எப்போது உதிக்கிறது என்று பார்ப்பார்கள். உதாரணத்திற்கு ஸுரய்யா எனும் ராசி (நட்சத்திரம்-மன்சில்)யை எடுத்துக்கொள்வோம். நேற்று வரை அதை நான் வானில் பார்க்கவே இல்லை. இன்று ஃபஜ்ர் வேளைக்கு சற்று முன் அது உதிப்பதை பார்க்கிறேன் என்று வைத்துகொள்வோம். எனில் இந்த வருடத்தில் இன்றுதான் அந்த நட்சத்திரம் முதல் முதலாக பஜ்ர் வேளையில் உதிக்கிறது. இதை நான் குறித்துக்கொள்வேன். நாளை அது 4 (3 நிமிடம் 56வினாடிகள்) நிமிடங்கள் முன்பாகவே உதித்து விடும். இவ்வாறு ஓவ்வொரு நாளும் முந்தைய நாளைவிட 4 நிமிடங்கள் முன்பாக உதிக்கும். அடுத்த ஆறு மாதத்தில் அந்த நட்சத்திரம் (ராசி அ மன்சில்) மக்ரிப் வேளையில் உதித்து ஃபஜ்ர் வேளையில் மறையும். அடுத்த மூன்று மாதங்கள் கடந்தால் நண்பகலில் உதித்து இஷாவுக்கு முன்னதாகத் தலைக்குமேல் காட்சியளித்து நள்ளிரவில் மறையும். அடுத்த இரண்டரை மாதங்களில் மக்ரிப் வேளையில் அதை மறைவதை மட்டுமே பார்க்க இயலும். பின்னர் சில வாரங்களுக்கு அந்த நட்சத்திரம் என் கண்ணிலேயே தென்படாது. மீண்டும் ஒரு நாள் அது ஃபஜ்ர் வேளையில் உதிக்க துவங்கும். இப்போது மிகச்சரியாகப் பூமி சூரியனை ஒரு சுற்று சுற்றி இருக்கும். அதாவது 365.2425 நாட்கள் கடந்திருக்கும். பூமி சூரியனை ஒரு சுற்று சுற்றி ஒரு ஆண்டை முடித்துக் கொண்டதை இவ்வாறுதான் அன்றைய அரபுகள் அறிந்துகொண்டனர். இது சூரிய மன்சில்கள் எனும் புரூஜ்களை கவனிப்பதை விட எளிதானது. சூரிய மன்சில்களைக் கவனிக்க நிழல் கடிகாரங்களைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் சந்திர மன்சில்களைக் கவனிக்க பார்வை மட்டுமே போதும்.
ஒரு நட்சத்திர உதயத்திலிருந்து மீண்டும் அதே நட்சத்திர உதயம் வரையுள்ள இந்தச் சுற்றை ஒரு நட்சத்திர ஆண்டு (Sidereal year) என்கிறோம். அதாவது ஒரு ராசி (நட்சத்திரம் அ மன்சில்) முதன் முதலாக ஃபஜ்ர் வேளையில் உதிக்க துவங்கி மீண்டும் அது ஃபஜ்ர் வேளையில் உதிக்கும்போது. பூமி சூரியனை ஒரு சுற்று சுற்றி முடித்திருக்கும். நட்சத்திர ஆண்டுக்கும் சூரிய ஆண்டுக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை. இரண்டிற்கும் வித்தியாசத்தை உணர நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டும்.
பல காலமாகச் சந்திர மன்சில்களைக் கவனித்துவந்த மனிதன் குறிப்பிட்ட சில மன்சில்கள் உதிப்பது காலநிலையை பிரதிபலிப்பதைக் கண்டான். இதில் ஆச்சரியம் ஏதுமில்லை. நட்சத்திர உதயம் சூரிய ஓட்டத்தைப் பிரதிபலித்ததால் அவை சூரிய காலண்டரைப் போல் காலநிலையைப் பிரதிபலித்தன. சுரையா (கார்த்திகை) எனும் ராசி உதிப்பது இளவேனிற்காலத்தை உணர்த்தியது. தபறான் (ரோகினி) எனும் ராசி உதிப்பது மழைக்காலத்தை காட்டியது எனும் தகவல்களை நம்மால் ஹதீஸ்களில் பார்க்க முடிகிறது.
இந்த விடியோக்கள் உங்களுக்கு சூரியனும் சந்திரனும் எவ்வாறு ராசிகளை கடந்து செல்கின்றன என்பதை விளக்கும்.
இந்த வீடியோவில் சந்திரனும் தன் ராசிகளை கடப்பதை காட்டுகின்றனர். வீடியோ வேகமாக ஓடுவதால் அது தெரிவதில்லை. வீடியோவின் வேகத்தை 0.25X இல் வைத்து பாருங்கள்.
இந்த வீடியோவில் சூரியனின் புரூஜ்கள் எப்படி நேரடியாக காலநிலை மாற்றத்தை காட்டுகின்றன என்பதை விளக்குகிறார்கள்.
நட்சத்திரங்களை இணைந்து மனிதன் ராசிகளை எப்படி கற்பனை செய்தான் என்பதை இந்த வீடியோ விளக்கும்
இந்த கலை நவா & அன்வா என்றறியப்பட்டது. அன்றைய அரபுகளும் முஸ்லிம்களும் விவசாயத்திற்கு இக்கலையைப் பயன்படுத்தினர். மொத்தம் இருக்கும் 28 மன்சில்களில் குறிப்பிட்ட ஒரு மன்சில் (ராசி) உதிப்பது அந்த காலநிலையில் துவக்கத்தை காட்டியது. துரையா எனும் ராசி உதிப்பது இளவேனிற்காலத்தை காட்டியது. மிஜ்தஹ் எனும் ராசி உதிப்பது கார்காலத்தின் துவக்கத்தை குறித்தது.
அல்லாஹ் சந்திரனின் மன்சில்களில் இருந்து நீங்கள் ஆண்டுகளின் எண்ணிக்கையை அறிந்து கொள்ளலாம் என்கிறான். மாதங்களின் எண்ணிக்கையை அல்ல. அல்லாஹ் எந்த வார்த்தையையும் பொருத்தமின்றி பயன்படுத்தமாட்டான். இங்கே ஆண்டுகளின் எண்ணிக்கை என்று நேரடியாக குறிப்பிடுகிறான். மேலும் மனாஸில் என்ற வார்த்தை நீங்கள் எப்படி புரட்டிப்போட்டாலும் படித்தரம் என்ற பொருள் வராது. அதை தங்குமிடம் இருப்பிடம் என்று மொழி பெயர்ப்பதும் பொருத்தமற்றது. ஆங்கிலத்தில் eggplant எனும் வார்த்தை உள்ளது இதை யாராவது முட்டைச்செடி என்று மொழிபெயர்பார்களா. இல்லை. ஒரு பெயர் சொல்லை மொழிபெயர்க்க வேண்டுமெனில் அந்த பொருளுக்கு அந்த மொழியில் என்ன பெயரோ அதைதான் பயன்படுத்த வேண்டும்.
“கத்தரியால் காகிதத்தை வெட்டினான்” என்று தமிழில் எழுதியதை ஒருவர் he cut the eggplant with paper என்று மொழிபெயர்த்தால் எவ்வாறு இருக்குமோ அதே போல் தான் மனாசிலின் மொழிபெயர்ப்புகள் அமைந்துள்ளன. மனாஸில் என்ற வார்த்தைக்கு தங்குமிடம் இருப்பிடம் என்று அகராதிப்பொருளை தேடினாலோ அல்லது சந்திரனுடன் தொடர்புடையதால் அது படித்தரமாகத்தான் இருக்கும் என்ற எண்ணத்தில் மொழிப் பெயர்த்தாலோ அது தவறு. மனாஸில் என்ற வார்த்தையின் பயன்பாட்டை அறிந்து பொருள் செய்யவேண்டும்.
இந்தப்படங்கள் ஒரு வருடத்தில் சூரியன் கடந்து செல்லும் புரூஜ்களை (மன்zில்களை) தெளிவாக காட்டுகிறது. மன்zில்களை வைத்துதான் நீங்கள் ஆண்டுகளையும் அவற்றின் கணக்குகளையும் எண்ணமுடியும். பிறைகளைக்கொண்டு நீங்கள் மாததுவக்கத்தைதான் அறிந்து கொள்ள இயலும். மேலும் இது மற்றொரு உண்மையையும் பறைசாற்றுகின்றது. அல்லாஹ் மனிதனுக்கு சந்திர நாட்டியை மட்டுமல்ல ஒரு சூரிய நாட்காட்டியையும் நாடியுள்ளான்.
சூரியனின் 12 புரூஜ்கள் (மன்zில்கள்) , அரபுப் பெயர்களுடன்
சூரியனின் 12 புரூஜ்கள் (மன்zில்கள்) , அரபுப் பெயர்களுடன்
விஞ்ஞானப்பெயர்
|
அரபுப் பெயர்
|
தமிழ்ப் பெயர்
|
Aquarius
|
الدلو
|
கும்பம்
|
Aries
|
الحمل
|
மேஷம்
|
Cancer
|
الشرطان
|
கடகம்
|
Capricornus
|
الجدي
|
மகரம்
|
Gemini
|
التوأمان
|
மிதுனம்
|
Leo
|
الأسد
|
சிம்மம்
|
Libra
|
الميزان
|
துலாம்
|
Pisces
|
الحوت
|
மீனம்
|
Sagittarius
|
الرامي
|
தனுசு
|
Scorpius
|
العقرب
|
விருச்சிகம்
|
Taurus
|
الثور
|
ரிஷபம்
|
Virgo
|
العذراء
|
கன்னி
|
சந்திரனின் 28 மன்zில்கள், அரபுப் பெயர்களுடன்
அரபுப் பெயர்
|
தமிழ்ப் பெயர்
|
விஞ்ஞானப்பெயர்
|
الشرطان (or) النطح
|
அஸ்வினி
| |
البطين
|
பரணி
| |
الثريا
|
கார்த்திகை
| |
الدبران
|
ரோகினி
| |
الهقعة
|
மிருகசீர்ஷம்
| |
الهنعة
|
ஆதிரை
| |
الذراع
|
புனர்பூசம்
| |
النثرة
|
பூசம்
| |
الطرف
|
ஆயில்யம்
| |
الجبهة
|
மகம்
| |
الزبرة
|
பூரம்
|
δ θ Leo
|
الصرفة
|
உத்தரம்
| |
العواء
|
ஹத்சம்
| |
السماك
|
சித்திரை
| |
الغفر
|
ஸ்வாதி
| |
الزبانان
|
விசாகம்
| |
الإكليل
|
அனுஷம்
| |
القلب
|
கேட்டை
| |
الشولة
|
மூலம்
| |
النعائم الواردة
النعائم الصادرة |
பூராடம்
| |
உத்திராடம்
| ||
البلدة
|
σ φ τ ζ γ Sagittarius
| |
سعد الذابح
|
அபிஜித்
|
Coalsack in Sagittarius
|
ஓணம்
| ||
سعد بلع
| ||
سعد السعود
|
அவிட்டம்
| |
سعد الأخبية
|
சதயம்
| |
الفرع المقدم
|
பூரட்டாதி
| |
الفرع المؤجر
|
உத்திரட்டாதி
| |
بطن الحوت
|
ரேவதி
|
அவ்வசனம் இவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். “ஆண்டுகளின் எண்ணிக்கையையும், கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவனே சூரியனை வெளிச்சமாகவும், சந்திரனை ஒளியாகவும் அமைத்து அவைகளுக்கு பல மன்zில்களை (ராசிகளை) ஏற்படுத்தினான். தக்க காரணத்துடன் தான் அல்லாஹ் இதைப் படைத்துள்ளான். அறிகின்ற சமுதாயத்திற்கு வசனங்களை அவன் தெளிவாக்குகிறான்"
ஹதீஸ் ஆதாரங்கள்:
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالَ عَبْدٌ أَخْبَرَنَا وَقَالَ ابْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ جَعْفَرٍ الْجَزَرِيِّ، عَنِ يَزِيدَ بْنِ الأَصَمِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لَوْ كَانَ الدِّينُ عِنْدَ الثُّرَيَّا لَذَهَبَ بِهِ رَجُلٌ مِنْ فَارِسَ - أَوْ قَالَ مِنْ أَبْنَاءِ فَارِسَ - حَتَّى يَتَنَاوَلَهُ "
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மார்க்க (ஞான)ம் "கிருத்திகா" ராசியின் (ஸுரையா) அருகில் இருந்தாலும், அதைப் "பாரசீகர்களில்" அல்லது "பாரசீக மக்களில்" ஒருவர் எடுத்துக்கொண்டுவந்து விடுவார்" என்று கூறினார்கள்.
அறி: அபூஹுரைரா (ரலி); முஸ்லிம் 4976
وَقَالَ اللَّيْثُ عَنْ أَبِي الزِّنَادِ، كَانَ عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ يُحَدِّثُ عَنْ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ الأَنْصَارِيِّ، مِنْ بَنِي حَارِثَةَ أَنَّهُ حَدَّثَهُ عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ النَّاسُ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَتَبَايَعُونَ الثِّمَارَ، فَإِذَا جَدَّ النَّاسُ وَحَضَرَ تَقَاضِيهِمْ قَالَ الْمُبْتَاعُ إِنَّهُ أَصَابَ الثَّمَرَ الدُّمَانُ أَصَابَهُ مُرَاضٌ أَصَابَهُ قُشَامٌ ـ عَاهَاتٌ يَحْتَجُّونَ بِهَا ـ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَمَّا كَثُرَتْ عِنْدَهُ الْخُصُومَةُ فِي ذَلِكَ " فَإِمَّا لاَ فَلاَ يَتَبَايَعُوا حَتَّى يَبْدُوَ صَلاَحُ الثَّمَرِ ". كَالْمَشُورَةِ يُشِيرُ بِهَا لِكَثْرَةِ خُصُومَتِهِمْ. وَأَخْبَرَنِي خَارِجَةُ بْنُ زَيْدِ بْنِ ثَابِتٍ أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ لَمْ يَكُنْ يَبِيعُ ثِمَارَ أَرْضِهِ حَتَّى تَطْلُعَ الثُّرَيَّا فَيَتَبَيَّنَ الأَصْفَرُ مِنَ الأَحْمَرِ.
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் மக்கள் மரத்திலுள்ள கனிகளை விற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். பழங்களைப் பறித்து வாங்குபவரிடம் ஒப்படைக்கும் நேரம் வந்ததும் வாங்கியவர், 'இது அழுகிவிட்டது; இது நோயால் தாக்கப்பட்டிருக்கிறது; இது செங்காயாக இருக்கிறது; இன்னும் பல குறைகள் இருக்கின்றன' எனக் கூறி சச்சரவு செய்வார். நபி(ஸல்) அவர்களிடம் இத்தகைய புகார்கள் பெருத்தபோது 'மரத்திலுள்ள கனிகள் பலன் உறுதிப்படும் நிலையை அடையும் வரை விற்காதீர்கள்!" என்று ஆலோசனை போல் கூறினார்கள்.
ஸைத் இப்னு ஸாபித்(ரலி), ஸுரையா (தோன்றக் கூடிய, பேரீச்சம் பழம் கனியும் பருவமான இளவேனிற்காலம்) வரும்வரை தம் தோட்டத்திலுள்ள மரங்களின் கனிகளை விற்க மாட்டார்.
அறி: ஸைத் இப்னு ஸாபித்(ரலி) ; புகாரி 2193.
مسند أحمد
حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ ، قَالَ : أَخْبَرَنِي ابْنُ أَبِي ذِئْبٍ ، عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سُرَاقَةَ ، قَالَ : كُنَّا فِي سَفَرٍ وَمَعَنَا ابْنُ عُمَرَ ، فَسَأَلْتُهُ ؟ فَقَالَ : رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ " لَا يُسَبِّحُ فِي السَّفَرِ قَبْلَ الصَّلَاةِ وَلَا بَعْدَهَا ، قَالَ : وَسَأَلْتُ ابْنَ عُمَرَ عَنْ بَيْعِ الثِّمَارِ ؟ فَقَالَ : نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَيْعِ الثِّمَارِ حَتَّى تَذْهَبَ الْعَاهَةُ " ، قُلْتُ : أَبَا عَبْدِ الرَّحْمَنِ ، وَمَا تَذْهَبُ الْعَاهَةُ ؟ مَا الْعَاهَةُ ؟ قَالَ : طُلُوعُ الثُّرَيَّا .
கனிகளின் குறைகள் போகும்வரை அவற்றை விற்பதற்கு நபி (ஸல்) தடை விதித்தார்கள்” என இப்ன் உமர் (ரலி) கூறினார்கள். அது எப்போது என இப்னு உமரிடம் கேட்டேன். “சுரையாவின் உதயம்” என்று கூறினார்கள்.
அறி: உஸ்மான் பின் அப்துல்லாஹ் பின் சுராகா ; அஹமத் 5012, தஹாவி-1906
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، حَدَّثَنَا عَاصِمٌ، عَنْ أَبِي مِجْلَزٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " صَلاَةُ اللَّيْلِ مَثْنَى مَثْنَى وَالْوِتْرُ رَكْعَةٌ " قُلْتُ أَرَأَيْتَ إِنْ غَلَبَتْنِي عَيْنِي أَرَأَيْتَ إِنْ نِمْتُ قَالَ اجْعَلْ أَرَأَيْتَ عِنْدَ ذَلِكَ النَّجْمِ . فَرَفَعْتُ رَأْسِي فَإِذَا السِّمَاكُ ثُمَّ أَعَادَ فَقَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " صَلاَةُ اللَّيْلِ مَثْنَى مَثْنَى وَالْوِتْرُ رَكْعَةٌ قَبْلَ الصُّبْحِ " .
இப்ன் உமர் (ரலி) அறிவித்தார்: “இரவுத்தொழுகைகள் இரண்டு இரண்டு ரகாத்துகளாக தொழப்படவேண்டும், வித்ர் ஒரு ரகாத்” என அல்லாஹ்வின் தூதர் ஸல் கூறினார்கள் . “எனக்கு தூக்கம் வந்து நான் தூங்க நாடுவதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்“ என நான் (இப்னு உமர்) கேட்டேன். அதற்கு நபி ஸல் “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்” என்பதை அந்த நட்சத்திரத்துடன் இட்டுப்பார்” என்றார்கள். (தூக்கம் வருவதைப் பற்றி நினைக்கக்கூடாது எனும் அர்த்தத்தில் அப்படி கூறினார்கள்). நான் தலையை தூக்கிப் பார்த்தேன். சிமாக் (சித்திரை ராசி நட்சத்திரம்) தெரிந்தது. பின்னர் நபி ஸல் “இரவுத்தொழுகைகள் இரண்டு இரண்டு ரகாத்துகளாக தொழப்பட வேண்டும், வித்ர் ஒரு ரகாத், சுபுஹுக்கு முன் (தொழவேண்டும்)” என்றார்கள்.
அறி: அபு மிஜ்லஸ் (ரஹ்); இப்ன் மாஜா 1175
ஸிமாக் & ஸுரையா எனப்படுபவை இன்றளவும் சந்திர ராசிகளாக பயன்பாட்டில் இருப்பவை. இவற்றை நாம் மேலே இட்டுள்ள பட்டியலில் சரிபார்த்துக்கொள்ளவும். இந்த ஹதீஸ்கள் மொழிபெயர்ப்புக்களைப் புரட்டியபோது நம் பார்வையில் பட்டவை. ஹதீஸ் ஆய்வாளர்கள் தேடினால் பல தகவல்கள் கிடைக்கும்.
சுரையா எனும் கார்த்திகை நட்சத்திரம் உதிப்பது இளவேனிற் காலத்தைக் காட்டியது. மிஜ்தஹ் (தபறான்) எனும் ரோகிணி நட்சத்திரம் உதிப்பது மழைக்காலத்தை காட்டியது. இக்காலத்தில் மார்ச் மாதத்தில் இருந்தால் இன்னும் ஒரு மாதத்தில் கோடைக் காலம் வந்துவிடும் என்று நமக்கு தெரியும். மே மாதத்தில் இருக்கும்போது ஜூன் மாதத்தில் மழை பெய்யும் என்று எதிர்பார்ப்போம். அக்காலத்தில் ஒவ்வொரு நட்சத்திரத்தை வைத்தும் பருவ காலங்களை கணிக்கும் கலை இருந்தது. இதுவும் நாமின்று பயன்படுத்தும் சூரிய காலண்டரும் ஒன்றே. ஒரு மன்ziல் உதிப்பதை வைத்து காலத்தை அறிந்த மக்கள் பிற்காலத்தில் அந்த மன்ziல் (நட்சத்திரம்தான்) மழையைக் கொண்டுவருவதாக நம்பிக்கை கொண்டனர். அந்த இணைவைப்பை கண்டிப்பதே மேற்கண்ட ஹதீஸ்.
மேலும் இந்த ராசிகளை பற்றி விளக்கும் ஹதீஸ் விரிவுரையாளர்களும் இதே கருத்தில்தான் விளக்கியுள்ளனர். 10:5 36:39 9:36-37 ஆகிய வசனங்களுக்கான விளக்கவுரைகளில் குர்துபி தபரி போன்ற தப்சீர்களிலும் “மநாசிலுல் கமருக்கும்” “புரூஜு”க்கும் இதே விளக்கத்தைதான் காண்பீர்கள். பத்ஹுல் பாரியில் இப்னு ஹஜர் அவர்களும் இதை விவரித்துள்ளார்.
சவுதி அரசின் உம்முல் குறா நாட்காட்டியில் இன்றளவும் சந்திர ராசிகள், சூரிய ராசிகள் & நவாக்களைக் காட்டுகிறார்கள்.
மேலே நாம் வைக்கும் வாதத்திற்கு சான்றாக மற்றொரு குர்ஆன் வசனமும் உள்ளது
وَجَعَلْنَا اللَّيْلَ وَالنَّهَارَ آيَتَيْنِ ۖ فَمَحَوْنَا آيَةَ اللَّيْلِ وَجَعَلْنَا آيَةَ النَّهَارِ مُبْصِرَةً لِّتَبْتَغُوا فَضْلًا مِّن رَّبِّكُمْ وَلِتَعْلَمُوا عَدَدَ السِّنِينَ وَالْحِسَابَ ۚ وَكُلَّ شَيْءٍ فَصَّلْنَاهُ تَفْصِيلًا
இரவையும், பகலையும் நாம் இரண்டு அத்தாட்சிகளாக்கினோம்; பின்னர் இரவின் அத்தாட்சி மங்கி(இருளாகி)டச் செய்தோம்; உங்கள் இறைவனுடைய அருட்கொடையை நீங்கள் தேடிக்கொள்வதற்காகவும் - ஆண்டுகளின் எண்ணிக்கைகளையும் கணக்குகளையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும், பகலின் அத்தாட்சியைப் பிரகாசமாக்கினோம் - மேலும் நாம் ஒவ்வொரு பொருளையும் தெளிவாக விவரித்திருக்கிறோம்.
(அல்குர்ஆன் : 17:12)
இந்த வசனத்திலும் لِتَعْلَمُوا عَدَدَ السِّنِينَ وَالْحِسَابَ என்று 10:5 இல் பயன்படுத்திய அதே வார்த்தை அமைப்பை பயன்படுத்தி அல்லாஹ் ஆண்டுகளின் எண்ணிக்கையை அறிந்து கொள்வீர்கள் என்று சொல்கிறான். பகலின் அத்தாட்சியை பிரகாசமாக ஆக்கியதால் நீங்கள் ஆண்டுகளின் எண்ணிக்கையை அறிந்து கொள்வீர்கள் என்று அல்லாஹ் கூறுகிறானே இதன் பொருள் என்ன. இதிலும் முதல் வசனத்தில் இருப்பது போல் ஆழ்ந்த விஞ்ஞான உண்மையும் வரலாறும் புதைத்துள்ளது. அல்லாஹ் குர்ஆனில் எந்த வார்த்தையையும் தேவை இல்லாமல் பயன்படுத்த மாட்டான்.
பகலின் பிரகாசத்திலிருந்து ஆண்டுகளை எண்ணுவது எப்படி?
காலத்தைக் கணிப்பது எல்லா காலத்திலும் மனிதனின் தேவையாகவே இருந்துள்ளது. காலத்தைக் கணிக்காமல் விவசாயம் செய்ய இயலாது. எனவே அதைக் கணிக்கும் யுக்தியை அல்லாஹ் பழங்கால மனிதனுக்கே கற்றுக்கொடுத்துவிட்டான்.
வருடத்தின் எல்லா நாட்களிலும் பகலின் நீளமும் இரவின் நீளமும் சமமாக இருப்பதில்லை. 14 மணி நேரம் பகல் நீடித்தால் 8 மணி நேரமே இரவு நீடிக்கும். அல்லது 9 மணி நேர பகலும் 15 மணி நேர இரவும் இருக்கிறது. இவ்வாறு இரவும் பகலும் வித்தியாசமான நீளத்தில் அமைகிறது. ஆனால் வருடத்தின் இரு நாட்களில் மட்டும் இரவும் பகலும் சமாமாக அமைகின்றன. அதில் ஒன்று வசந்த காலத்திலும் மற்றொன்று இளவேனிற் காலத்திலும் அமையும். இரவும் பகலும் சம அளவில் வரும் நாளைக் கண்டுபிடிக்க மனிதன் சில கருவிகளைக் கண்டுபிடித்தான். அவை காலங்களை காட்டின. ஆண்டுகளின் எண்ணிக்கையைக் காட்டின.
இத்தைகைய கருவிகளில் இன்றளவும் வியப்புடன் பார்க்கப்படுபவை தற்போதைய இங்கிலாந்து நாட்டில் இருக்கும் STONEHENGE ஸ்டோன்ஹெஞ் ஆகும். மேலே படத்தில் காட்டப்பட்டுள்ளது. சுமை தாங்கிகளைப்போல வட்டவடிவத்தில் சில கற்களை நட்டு வைத்துள்ளனர். இவை கிமு 3000 இல் கட்டப்பட்டவையாக கணிக்கப்பட்டுள்ளது. நான்கு காலங்களையும் மேலும் பல வானியர் ஆய்வுகளையும் இந்த கற்களைக் கொண்டு கணக்கிடலாம். இது ஒரு கோளரங்கம் என்றால் அது மிகையாகாது.
இந்த கருவி பகலின் வெளிச்சத்தில் மட்டுமே வேலை செய்யும். சூரிய ஒளியைக் கொண்டு மட்டுமே இந்த கருவியிலிருந்து காலங்களைக் கணக்கிட இயலும். ஒரு பருவ காலம் தொடங்கி மீண்டும் அதே பருவ காலம் வருவதுதான் ஓர் ஆண்டு.
இது மால்டாவில் இருக்கும் ஒரு கோயில். இது கிமு 3600 களில் கட்டப்பட்டதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடமும் காலங்களை கணக்கிடும் அம்சங்களுடன் கட்டப்பட்டுள்ளது. இதில் இரவும் பகலும் சமமாக இருக்கும் அந்த நாளில் சூரிய உதயத்தின்போது ஒளிக்கீற்று கட்டிடத்தின் வாயிலை ஒளிர்விக்க செய்கிறது.
மனித இனம் காலம் காலமாக சூரிய வெளிச்சத்திலிருந்து ஆண்டுகளின் எண்ணிக்கையையும் பருவ காலங்களையும் கணக்கிட்டதற்கு சான்றுகள்தான் மேற்சொன்ன கட்டிடங்கள். பகலின் வெளிச்சத்திலிருந்து ஆண்டுகளை எண்ணும் பழங்கால முறை இவைஎனில் பிற்கால மக்கள் இன்னமும் துல்லியமாக பகலின் வெளிச்சத்திலிருந்து காலத்தை கணக்கிடலானார்கள்
சூரியனின் மன்சில்களான புரூஜ்கள் ஆண்டுகளின் எண்ணிக்கையை நேரடியாக காட்ட வல்லவை. ஆனால் இதில் ஒரு சிக்கல் உள்ளது. பகலில் சூரியன் இருக்கும் மன்சிலை கண்ணால் பார்த்து தெரிந்துகொள்ள இயலாது. சூரியனின் வெளிச்சத்தில் நட்சத்திரங்கள் மங்கிவிடும். எனவே சூரியன் இருக்கும் மன்சிலை மனிதன் சில யுக்திகளைப் பயன்படுத்தியே அறிந்தான். மேலே சூரியனின் புரூஜ்வட்டதில் ஒரு புரூஜ்க்கு நேர் எதிராக மற்றொரு புரூஜ் இருக்கும். உதாரணத்திற்கு மீன புரூஜ்க்கு நேர் எதிரே கன்னி புரூஜ் உள்ளது. இன்று நள்ளிரவில் என் தலைக்கு மேலே உச்சத்தில் மீன புரூஜ் இருந்தால் சூரியன் அந்த கன்னி புரூஜ்யில் இருப்பதாக அர்த்தம். இதே போல் சூரியன் மறைந்த உடன் எந்த புரூஜ் வெளிப்படுகிறதோ அதை வைத்தும் மனிதன் சூரியனின் புரூஜை அறிந்துகொண்டான்.
இவற்றையெல்லாம் விட எளிமையான யுக்தியை அல்லாஹ் மனிதனுக்கு கற்றுத்தந்துள்ளான். அதுதான் பகலின் வெளிச்சத்தில் இருந்து ஆண்டுகளை எண்ணும் யுக்தி. பகலின் வெளிச்சத்தில் விழும் நிழல்கள் நேரத்தை கட்டின, திசையை காட்டின, இன்னும் அதிகமாக சூரியன் இருக்கும் மன்சிலையும் காட்டின.
இது துனிசியாவில் கைறவான் நகரில் உள்ள அல் உக்பா மஸ்ஜிதில் உள்ள நிழல் கடிகாரம். ஆய்வாளர்களை வியக்க வைக்கும் விதமாக இதில் நான்கு Gnomonகள் உள்ளன.
|
இந்த நிழல் கடிகாரம் பழவேற்காட்டில் உள்ள மஸ்ஜிதில் உள்ளது. இது 1915 ஆம் ஆண்டு கட்டமைக்கப்பட்டது. இது ஒரு பக்கவாட்டு நிழல் கடிகாரம் (horizontal sundial) நடுவிலிருக்கும் Gnomon இன் நிழல் இரண்டு பக்கமும் விழாமலிருக்கும் நிலை ளுஹ்ருடைய நேரத்தை குறிக்கும். இது ஒரு நாளின் நேரத்தை மட்டுமே காட்டும். இதில் எல்லா நாளும் சூரிய உதயம் காலை 6மணிக்கும் சூரிய மறைவு மாலை 6 மணிக்கும் இருக்கும். வருடத்தின் எல்லா நாட்களிலும் சூரியன் சரியாக 12மணிக்கு உச்சியில் வரும்.
|
இதுவும் க்றகோவ் நகரில் Jagiellonian பல்கலை கழகத்தில் இருப்பதாகும். ஆண்டுகளின் எண்ணிக்கையை காட்டும் மற்றொரு நிழல் கடிகாரம்.
|
மேலே இருப்பது போலந்து நாட்டின் க்றகோவ் நகரில் உள்ள மேரி கிருத்தவ ஆலையத்தின் சுவற்றில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு நிழல் கடிகாரமாகும். நிழல் கடிகாரம் என்றால் என்னவென்று நமக்கு தெரியும். செங்குத்தாக நடப்பட்ட குச்சியின் நிழலின் திசையை வைத்து நேரத்தை அறிந்து கொள்ளும் கருவி. நீள வாக்கில் அமைக்கப்பட்ட நிழல் கடிகாரங்களும் உள்ளன. இந்த நிழல் கடிகாரம் நேரம் மற்றும் மன்ஸில்களை காட்டவல்லது. சூரியனின் மன்சில்களான புரூஜ்கள் நேரடியாக ஆங்கில காலண்டருடன் ஒப்பிட ஏதுவானவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்
|
பழவேற்காடு மஸ்ஜிதில் இருப்பதை போல் நேரத்தை மட்டும் காட்டும் நிழல் கடிகாரமல்ல போலந்தில் இருப்பது. அதன் சிறப்பம்சம் அது நேரத்தை காட்டுவதோடு மட்டுமல்லாமல் அது எந்த நாள் என்பதையும் தெளிவாகவே காட்டும் தன்மை வாய்ந்தது. இது ஒரு வருடத்தின் தொடக்கத்தையும் முடிவையும் தெளிவாக காட்டும். மேலும் இது காலத்தை காட்ட சூரிய வெளிச்சம் இன்றியமையாதது. அதாவது இது பகலின் வெளிச்சத்தில்தான் ஆண்டுகளின் எண்ணிக்கையை நேரடியாகக் காட்டும்.
| |
இது இஸ்தான்புல் டாப் காப்பி அரண்மனையில் இருக்கும் நிழல் கடிகாரம்.
|
இதுவும் இஸ்தான்புல் நகரில் உள்ள மிஹ்ரிமா மஸ்ஜிதில் உள்ள ஒரு நிழல் கடிகாரம். இதுவும் நேரத்தை மட்டுமல்லாமல் ஆண்டுகளின் எண்ணிக்கையையும் நேரடியாக காட்டவல்லது. ஆங்கில காண்டருக்கு இணையான தேதியையும் காட்டவல்லது.
|
உதுமானிய பேரரசில் இருந்த முஸ்லிம் விஞ்ஞானிகளால் வடிவமைக்கப்பட்டவை. மேலே பார்த்த மேரி தேவாலயத்தில் இருந்த கடிகாரத்தை போல இதிலும் ஆண்டுகளின் எண்ணிக்கையை சூரியனின் மன்zில்களில் இருந்தே அறிந்து கொள்கிறோம். மேரி ஆலயத்தில் சூரியனின் மன்zில்கள் அவற்றின் குறியீடுகளில் குறிக்கப்பட்டிருந்தன. இந்த கடிகாரத்தில் சூரியனின் மன்சில்கள் அவற்றின் அறபிப்பெயர்களில் குறிக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் சூரியனின் மன்ஸில்களை (ராசிகளை) ஜோதிடத்திற்கு பயன்படுத்தாமல் காலத்தை கணக்கிட பயன்படுத்தினர் என்பதற்கு இது ஒரு சிறந்த சான்றாக உள்ளது.
|
பகலை வெளிச்சமாகியத்தில் இருந்து ஆண்டுகளின் எண்ணிக்கையை இப்படித்தான் அறிந்துகொள்ள முடியும். மேலும் அதை அல்லாஹ் அத்தாட்சிகள் என்கிறான்.
10:5 & 17:12 இந்த இரண்டு வசனங்களில் சொல்லப்பட்டிருக்கும் ஆண்டுகள் சூரிய ஆண்டுகள். இவை சூரிய நாட்காட்டியையும் அல்லாஹ் மனிதனுக்கு நாடியுள்ளதை காட்டுகின்றன.
ஏற்கனவே நமது இபாதத்துகளுக்கு ஒரு சூரிய நாட்காட்டியின் தேவையை பின்வரும் கட்டுரைகளில் தெளிவுபடுத்தியுள்ளேன்.
32) தொழுகை நேரங்கள் >> பிறைவாசி/2015/04/PrayerTimes.html
17) நாட்காட்டிகளும் நுஜூமியாவும் >> பிறைவாசி/2015/04/nujumiyya.html
நபி ஸல் “நவா இல்லை” என்றதையும் “ஜோதிடத்தை கற்றுகொள்வது சிஹ்ரை கற்றுகொள்வதாகும்” என்றதையும் மன்ziல் விஷயத்தில் குழப்பிக்கொள்ளக்கூடாது. அம்மக்கள் குறிப்பிட்ட அந்த ராசிதான் மழையை பொழிவிப்பதாக எண்ணினர். எனவே அந்த நவா இல்லை என நபி ஸல் கூறினார்கள். ராசியைகொண்டு ராசி பலன் பார்க்கத்தான் தடை. ராசியைக்கொண்டு காலநிலையை அறிந்ததையும் நட்சத்திரங்களை காலம் காட்டியாகவும் வழியை அறிந்துகொள்ளவும் பயன்படுத்தியதையும் மறந்துவிடக்கூடாது.