Sunday 12 February 2017

திரிக்கப்பட்ட ஹதீஸ்கள், பாகம்-1

திரிக்கப்பட்ட ஹதீஸ்கள். பாகம்-1

ஹதீஸ்-1

الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ لَيْلَةً، فَلاَ تَصُومُوا حَتَّى تَرَوْهُ، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَأَكْمِلُوا الْعِدَّةَ ثَلاَثِينَ
மாதத்திற்கு இருபத்தி ஒன்பது நாட்களாகும். எனவே பிறையைக் காணாமல் நோன்பு பிடிக்காதீர்கள். உங்களுக்கு மறைக்கப்பட்டால் எண்ணிக்கையை முப்பதாக முழுமைப்படுத்துங்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1907
நபிகளாரின் அனைத்து ஹதீஸ்களும் முதல் பாகத்தை விளக்குவதாக இரண்டாம் பாகம் இருக்கும். உதா
(1) பிறை பார்த்து நோன்பு வையுங்கள் (2) மறைக்கப்பட்டால் மட்டும் 30 ஆக்குங்கள் என்பது.
இங்கே இருக்கும் ரூயத்தி எனும் வார்த்தைக்கு பல அர்த்தங்கள் இருப்பதாகவும். பிறை தொடர்பான இந்த ஹதீஸில் ரூயத்தி-க்கு கணக்கிட்டு அல்லது அறிவால் அறிதல் எனும் பொருள்தான் கொள்ளவேண்டும் என்றும் ஹிஜ்ராவினர் வாதிடுகின்றனர். இதற்கு இலக்கண ரீதியிலான விளக்கங்கள் ஏற்கனவே கொடுக்கப்பட்டுவிட்டன. எந்த இலக்கணமும் இல்லாமலே இதன் உண்மையை நிலையை அல்லாஹ் தந்த பொது அறிவைக்கொண்டு எப்படி விளங்குவது என்று பார்ப்போம்.
ரூயத்தி-க்கு கண்ணால்தான் பார்க்கவேண்டும் என்பதற்கு மறைக்கப்பட்டால் எனும் வார்த்தைதான் ஆதாரம். ஹதீஸின் இரண்டாம் பாகம் முதல் பாகத்துக்கு ஆதாரம். மறைக்கப்பட்டால் எனும் வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று கேட்டால் கண்களுக்கு மறைக்கப்படுதல் என்று அர்த்தம் சொல்லும் ஹிஜ்ராவினர் பார்த்தலுக்கு அர்த்தம் கேட்டால் அறிவால் பார்த்தல் என்று விளக்கம் சொல்வார்கள். இதுவே முரண்பாடு. மறைக்கப்படுவது கண்களுக்கு என்றால் அதை எதிர்ப்பதமாக மாற்றும் பார்த்தல் என்பதும் கண்களுக்குத்தான் என்பது *"உலக மொழி விதி."*
சாப்பாடு வந்தால் சாப்பிடுங்கள் வராவிட்டால் நோன்பு பிடியுங்கள் என்று நான் என் நண்பர்களிடம் சொல்கிறேன்.
என் நண்பர்கள் நான் சொன்னதை இவ்வாறு ஆய்வு செய்கிறார்கள்:- “வந்தால் எனும் வார்த்தைக்கு வருதல் என்றும் அர்த்தம் மட்டுமே இல்லை. வேறு அர்த்தம் உள்ளது எனவே நாம் சாப்பாடு வருவதைப் பற்றி கவலைப்படவேண்டாம். நோன்பு பிடித்துவிடுவோம். ஆனால் வராவிட்டால் என்பதற்கு வரவில்லை என்பது மட்டுமே அர்த்தம்” இவ்வாறு அவர்கள் ஆய்வு செய்தால் எவ்வளவு முட்டாள்த்தனம் என்று நாம் நினைப்போம். அதே போலத்தான். பார்த்தல் என்பதை அறிதல் என்று பொருள் செய்ய வேண்டுமாம். ஆனால் மறைத்தல் என்பதை மட்டும் கண்களுக்கு மறைத்தல் என்று பொருள் கொடுக்க வேண்டுமாம், ஏன்? பார்த்தல் கண்களால் என்றால் மறைக்கப்படுவதும் கண்களுக்கே. பார்த்தால் அறிவால் என்றால் மறைக்கப்படுவதும் அறிவுக்கே.
ஆனால் நாங்கள் மறைக்கப்படுவதை கண்களுக்கும் பார்த்தலை அறிவுக்கும் கொடுப்போம் என்பது எந்த மொழியும் அறியாமையைக் காட்டுகிறது.
எந்த மொழியாக இருந்தாலும் எதிர்ப்பதமாக இரண்டு வார்த்தைகள் இருந்தால் அதில் ஒன்று மற்றொன்றிற்கு நேர் எதிராக இருக்கும். வித்தியாசமாக நிச்சயம் இருக்காது.
பார்த்தால் பார்க்காவிட்டால்
வந்தால் வராவிட்டால்
நடந்தால் நடக்காவிட்டால்
அறிந்தால் அறியாவிட்டால்
இப்படித்தான் இருக்கும். அறிதல் என்று பொருள் கொடுத்தால் இரண்டாம் பாகத்தில் இருக்கும் கும்ம-வுக்கு அறியாவிட்டால் என்று பொருள் கொடுங்கள், அறிய இயலாவிட்டால் என்று பொருள் கொடுங்கள், அல்லது அறிந்தால் என்று பொருள் செய்தால் அறிவுக்கு மறைக்கப்பட்டால் என்று இரண்டாம் பாகத்துக்கு பொருள் கொடுங்கள்.
பிறையை அறிந்து நோன்பு பிடியுங்கள். அதை அறிந்து நோன்பை விடுங்கள். அறிதலிலிருந்து அது உங்களுக்கு மறைக்கப்படும்போது கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.
இவ்வாறு இவர்கள் மொழிப்பெயர்க்க இந்த ஹிஜ்ராவினர் தயாரா?
இப்படித்தான் இவர்கள் குழப்பத்தை உருவாக்கும் எல்லா ஹதீஸ்களிலும் அவற்றிலேயே தீர்வு இருக்கும்.
பிறையை எவையெல்லாம் மறைக்கும் என்று பார்ப்போம். பிறையை மறைக்கும் காரணிகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
1. வானிலை சார்ந்தது
2. பிறையின் வயது சார்ந்தது
வானிலை சார்ந்த மறைக்கும் காரணிகளைப் பார்ப்போம்.
1. மேக மூட்டம் & பனி மூட்டம்.:
சென்ற ஜனவரி 2016 இன் தலைப்பிறை அமெரிக்காவை அடைந்த பொது கண்பார்வைக்கு புலப்படும் அளவிற்கு வளர்ந்திருந்தது.
பிறையின் வயது 24மணி ஒரு நிமிடமாக இருந்தது.
சூரியன் மறைந்து 1 மணி 5 நிமிடங்களுக்குப் பிறகே சந்திரன் மறைந்தது
Elongation எனப்படும் விலகல் கோணம் 13.3 டிகிரியாக இருந்தது.
சூரியன் மறையும்போது சந்திரன் அடிவானத்திலிருந்து 12 டிகிரி உயரத்தில் இருந்தது.
1.3% சந்திரன் ஒளியூட்டப்பட்டிருந்தது.
இந்த அளவுகள் பிறை கண்ணுக்கு தெரிய அறிவியல் கூறும் குறைந்தபட்ச அளவுகளை விட அதிகம். பிறை இந்த அளவுக்கு வளர்ந்திருந்தும் அன்று அமெரிக்காவில் பிறை தெரியவில்லை.
ஜனவரி மாதம் அமெரிக்காவில் குளிர் காலம். எப்போதும் அடிவானம் மேக மூட்டமாகவும் பனி மூட்டமாகவும் இருக்கும். அன்றைய தினம் பிறை தெரியவில்லை எனும் தகவலுடன் தெரியாததற்கு காரணமாக வல்லுனர்கள் கூறியது வானிலையைத்தான்.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் எல்லாப் பருவகாலங்களிலும் அடிவானம் மேகத்துடனேயே காணப்படுகிறது.
2. புழுதி மண்டலம்:
அரபு நாடுகளில் புழுதி மண்டலம் என்பது சாதாரண விஷயம். சாதாரண நாளில் சூரியனை நாம் யாரும் நேரடியாகப் பார்க்கமாட்டோம். கண்களைச் சுட்டு பார்வையைப் பறித்து விடும். பௌர்ணமியை நம்மால் சாதாரணமாகப் பார்க்க இயலும். அதன் ஒளி சூரியனை விடப் பல நூறு மடங்கு ஆற்றல் குறைந்தது. ஆனால் புழுதி மூடிய நாட்களில் பௌர்ணமியை விட சூரியன் ஒளி குன்றி காணப்படும். இது சூரியன்தானா என்று சந்தேகிக்கும் அளவுக்கு அதன் ஒளி குன்றி இருக்கும்.
சூரியனை மறைக்கும் இத்தகைய புழுதி பிறையை மறைக்காதா?
3. மாசு மண்டலம்
நம் நகரங்கள் அனைத்தும் மாசடைந்து விட்டன. தலைக்கு மேலே வானம் தெளிவாகத் தெரியும். எந்த மாசும் காற்றில் இருப்பதாக நம் கண்களுக்குத் தெரியாது. ஆனால் அடிவானத்தின் கோண விகுதியாலும், ஒளிச்சிதறலாலும் அடிவானம் இருண்டே காணப்படும். அரபு நாடுகளில் புழுதிக்காற்று இல்லாத நாட்களிலும் சூரிய மறைவை பார்க்கவே முடியாது. காற்றில் இருக்கும் மாசு சூரியனையே மறைத்துவிடும். அது பிறையை மறைக்காதா?
பிறையின் வயது சார்ந்த மறைத்தல்.
பிறை புறக்கண்ணுக்கு தெரிய வேண்டும் எனில்
§. சூரியன் மறையும்போது, சூரியனிலிருந்து சந்திரன் இருக்கும் கோணம் 12 டிகிரிக்கு மேல் இருக்க வேண்டும். (விலகல் கோணம்) (Elongation)
§. சூரியன் மறையும்போது, பார்ப்பவரின் தொடுவானத்திலிருந்து சந்திரன் 10டிகிரிக்கு மேல் இருக்க வேண்டும். (எழுச்சிக்கோணம்) (Moon Altitude)
§. குறைந்த பட்சம் சந்திரன் 1% ஒளியூட்டப்பட்டு இருக்க வேண்டும். (Illumination)
மேலிருப்பவைகளில் ஒரு காரணி இருந்து மற்றொரு காரணி இல்லாவிடிலும் பிறை கண்ணுக்குத் தெரியாமல் மறைக்கப்படும்.
1. சூரிய வெளிச்சம் (அந்தி வெளிச்சம்).
பிறை 1% வரை வளர்ந்துவிட்டது. ஆனால் சூரியன் மறையும்போது சந்திரன் 5 டிகிரிதான் இருக்கிறதென்று வைத்துகொள்வோம். பிறையின் ஒளியை சூரியனின் அந்தி வெளிச்சம் மங்கச்செய்து விடும். பிறை கண்ணுக்குத் தெரியாது.
2. பிறையின் வயது.
சூரியன் மறைந்து 1 மணி நேரத்திற்கு பின் சந்திரன் மறைவதாக வைத்துக்கொள்வோம். இந்நிலையில் சூரியன் மறையும்போது சந்திரன் இருக்கும் உயரமும் 1௦டிகிரிக்கு மேல் இருக்கும். ஆனால் பிறை 1% வளரவில்லை என்றால் பிறை கண்ணுக்குத் தெரியாது.
சற்று சிந்திப்பவருக்கு இதில் இருக்கும் அல்லாஹ்வின் சான்று விளங்கும். பிறையை மறைப்பதே வளிமண்டலம்தான். வளிமண்டலம் இல்லாதிருந்தால் ஒளிச்சிதறல் இருக்காது. அம்மாவாசை நடந்த சில நிமிடங்களில் நம்மால் பிறையை பார்க்க இயன்றிருக்கும். காற்று இல்லாவிடில் தூசு எது? புகை எது? மேகம் எது? பிறையை மறைப்பதே அல்லாஹ் பூமியை பாதுகாக்க வைத்திருக்கும் வளிமண்டலம்தான்.
பிறையை மறைக்கும் காரணிகளில் அதிக சக்தி வாய்ந்தது மேகமே. மற்ற காரணிகள் குறிப்பட்ட வரையறைகளுக்கும் வரம்புகளுக்கும் உட்பட்டவை. மேகம் மட்டுமே எந்த வரம்புக்கும் வரையறைக்கும் உட்படாதது. மேகத்தால் பௌர்ணமி நிலவையும் மறைக்க இயலும், சுட்டெரிக்கும் நண்பகல் சூரியனையும் மறைக்க இயலும். அதனால் தான் நபிகளார் மற்ற காரணிகளைச் சொன்னதை விட மேகத்தைப் பற்றிதான் அதிகமாகச் சொன்னார்களோ. அல்லாஹ் அறிந்தவன். ஆனால் இந்த ஹிஜ்ரா கமிட்டி மேகம் பிறையை மறைக்குமா என்று ஏளனம் செய்கின்றனர்.
பிறையை மெல்லிய மேகமும் மறைக்கும், சூரிய வெளிச்சம் பிறையின் வெளிச்சத்தை மங்கச்செய்யும், தூசுமண்டலம் பிறையை மறைக்கும், பனிமூட்டம் பிறையை மறைக்கும், பிறையின் வயது அதை மறைக்கும், போதிய அளவுக்கு வளராத பிறை வானத்தில் இருந்தாலும் அது நமது கண்களுக்குப் புலப்படுவதில்லை. இவ்வாறு பிறையை கண்கள் காண்பதிலிருந்து தடை செய்யும் காரணி எதுவாக இருந்தாலும் அது பிறையை மறைக்கும். அத்தகைய மாதங்களில் மட்டுமே 3௦ ஆக எண்ணிக்கையை முழுமைப்படுத்த நமக்குக் கட்டளை. ஆனால் ஹிஜ்ரா கமிட்டியினர்  “மாதத்தின் கடைசி நாளில் சந்திரன் புறக்கண்ணுக்கு மறைக்கப்படும் இதைத்தான் நபி ஸல் ஃப இன் கும்ம உங்களுக்கு மறைக்கப்படும்போது கணக்கிடுங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள். எனவே நாங்கள் மறைக்கப்படும் நாளைக் கணக்கிடுகிறோம்என்று கூறிக்கொண்டு அமாவாசையை கணக்கிட்டு அதன் மறுநாளில் மாதத்தைத் துவங்குகின்றனர். கும்ம என்றால் அமாவாசை என்கிறார்கள்.
மறைக்கப்படுதல் என்றால் கஞ்ஜங்ஷன் என்கிறார்கள். இருக்கும் ஒரு பொருளைத்தான் மறைக்க முடியும். மேலும் பார்வைக்கு தெரியும் ஒரு பொருளைத்தான் மறைக்க முடியும். இரவில் சூரியனை மறைக்கப்பட்டதாக யாரும் சொல்லமாட்டோம். காரணம் இரவில் வானில் சூரியன் இருக்காது. இல்லாத ஒன்றை மறைக்க இயலாது. காற்றை மறைத்தல் என்பது அறிவுக்கு எட்டாதது. காற்றை மறைக்க இயலாது. ஆக, இருக்கும் ஒன்றை கண்ணுக்கு தெரியும் ஒன்றைத்தான் மறைக்க இயலும். இவர்கள் சொல்லும் கஞ்ஜங்ஷன் எனும் நிகழ்வின்போது பிறையே இருக்காது. இல்லாத ஒன்றை எது மறைக்கும். நிலவு இருக்கும் என்று வாதிடுவார்களேயானால் அது கண்ணுக்கு தெரியாது. தெரியாத ஒன்றை மறைப்பதாக சொல்வது அறிவுடைமையா? நபிகளார் இவ்வாறு அறிவுக்கு எட்டாத பொருளில் பேசவே மாட்டார்கள். நபிகளார் பிறை பார்வையிலிருந்து மறைக்கப்பட்டால் மட்டுமே மாதத்தை முழுமையாக்க கட்டளையிட்டார்கள்.

ஹதீஸ்-2

உம்மி சமுதாயம்:
إِنَّا أُمَّةٌ أُمِّيَّةٌ، لاَ نَكْتُبُ وَلاَ نَحْسُبُ الشَّهْرُ هَكَذَا وَهَكَذَا ‏"‏‏.‏ يَعْنِي مَرَّةً تِسْعَةً وَعِشْرِينَ، وَمَرَّةً ثَلاَثِينَ‏.‏
நாம் உம்மி சமுதாயமாவோம். நமக்கு எழுதவும் தெரியாது. எண்ணவும் தெரியாது. மாதம் என்பது இப்படியும் அப்படியும் இருக்கும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதாவது ஒரு தடவை 29 ஒரு தடவை 30 என்றார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1913
(1)இன்னா உம்மதுன் உம்மிய்யா, லா நக்துபு வலா நஹ்ஸுபு, (2)அஷ்ஷஹ்ரூ ஹாகத வ ஹாகதா.
நாம் உம்மி சமுதாயம். எழுத மாட்டோம் எண்ணவும் மாட்டோம். மாதம் இப்படியும் இருக்கும் இப்படியும் இருக்கும்.
இதை நான் என் நண்பர்களை பார்த்து சொல்வதாக இருந்தால்
*டேய் நண்பர்களா! நீங்க கைநாட்டா இருக்கீங்க. உங்களுக்கு எண்ணிக்கையில் சொன்னாலும் தெரியாது எழுதி காட்டினாலும் புரியாது. அதனால கையால் சைகை செய்து காட்டுகிறேன் பாருங்கடா. மாசம் இப்படியும் இருக்கும் இப்படியும் இருக்கும்*
என்பேன். நபிகளார் இதையே தன் தோழர்களை மரியாதையுடன் சொன்னார்கள்
இதற்கு மற்றோரு சான்று நபிகளார் மாதம் என்பதை எந்த வழிகளில் சொன்னார்கள் என்று பார்ப்பதே.
ஒரு சஹாபியிடம் திஸ்உன் வ இஷ்ரூன் என்று எண்ணிக்கையை சொன்ன நபி இன்னொரு தோழரிடம் ஹாகதா ஹாகதா வ ஹாகதா என்றார்கள். ஏன்? எண்ணிக்கை தெரிந்தவரிடம் எண்ணிக்கையில் சொல்லலாம், தெரியாதவரிடம் சைகை மட்டுமே செய்யமுடியும்.
சில வேளைகளில் இரண்டையும் செய்தார்கள். எண்ணிக்கை தெரியாத தோழர்களும் அச்சபையில் இருந்தார்கள் என்று அர்த்தம்.
மேலே சொன்ன சம்பவத்தில் அதிகப்படியாக பாமர மக்கள் இருந்துள்ளனர். எனவே அவர்களிடம் மக்களே நீங்க உம்மியாக இருந்தாலும் எழுதவும் எண்ணவும் தெரியாவிட்டாலும் மாதத்தைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் என்கிறார்கள்.
மிக எளிது! அங்கே ஹிசாப் என்றால் ராக்கட் விடுதல் என்று அர்த்தம் என்று சொல்லி மக்களை குழப்புதல் ஆகாது.
மேலும் இங்கே கவனிக்கவேண்டிய முக்கிய விஷயம், நபிகளார் உங்களுக்கு ஹிஸாப் செய்ய தெரியாது என்று சொல்லிவிட்டு வானியல் கணக்கை பற்றி எதுவுமே சொல்லவில்லை. நபிகளார் மாதநாட்களின் எண்ணிக்கையை பற்றியே சைகை செய்தார்கள். இதை விளங்க மனிதனுக்கு அல்லாஹ் வழங்கிய பொது அறிவு போதுமானது.
இன்னா உம்மத்துன் ஹதீஸுக்கு கணக்கா பிள்ளைகள் கொடுக்கும் விளக்கம்:

நாம் உம்மி சமுதாயம், வானியல் கணக்கை அறியமாட்டோம், பதிவு செய்து வைப்பதையும் அறியமாட்டோம். என்று நபிகள் நாயகம் சொன்னார்கள். அதனால் தான் பிறை பார்க்க சொன்னார்கள். பிற்காலத்தில் கணக்கீடு வரும் அவர்கள் கணக்கிட்டு கொள்ளலாம் எனும் அர்த்தத்தில் இப்படி சொன்னதாக சொல்கிறார்கள். ஆனால்...

நபி ஸல் இன்னா உம்மதுன் என்று சொன்னபோது சூமு லிருயதிஹி சொல்லவில்லை. சூமூ லி ருயதிஹி சொன்ன பொது இன்னா உம்மத்தன் சொல்லவில்லை .

இன்னா உம்மதுன் என்று சொன்ன இடத்தில் நபிகளார் மாதநாட்களின் எண்ணிக்கையை மட்டுமே சொன்னார்கள். மாத நாட்களின் எண்ணிக்கை 29க்கு குறையாது 30க்கு மிகாது என்பதை சொல்ல எதற்கு வானியல் கணக்கையும் பதிவு செய்து வைப்பதையும் சொல்லவேண்டும்?

இன்னா உம்மதுன் உம்மிய்யா!, லா நக்துபு, வலா நஹ்சுபு, ஃப சூமூ லி ருயதிஹி, வ அப்திரு லி ருயதிஹி.

அதாவது "நாம் உம்மி சமுதாயம், வானியல் கணக்கை அறியமாட்டோம், பதிவு செய்து வைப்பதையும் அறியமாட்டோம் எனவே பிறை பார்த்து நோன்பு வையுங்கள் பிறை பார்த்து நோன்பை விடுங்கள்" என்று ஒரே தொடராக ஒரு ஹதீஸ் இருந்திருந்தால் ஹிஜ்ராவினர் சொல்வதில் ஒரு அர்த்தம் இருந்திருக்கும்.
என்னிடம் ஒருவர் வீடுகட்டும் தொழில் நுட்பத்தை பற்றி கேட்கிறார். நான் அவரிடம் உங்களுக்கு கட்டிட பொறியியல் தெரியாது. அதனால் நான் உங்களுக்கு எளிமையான ஒரு வழியை சொல்கிறேன். ஒரு மாடி வீடு கட்டுவதாக இருந்தால் 4 அடி அஸ்திவாரம் எழுப்புங்கள். 2 மாடி வீடு கட்டுவதாக இருந்தால் 6 அடி அஸ்திவாரம் எழுப்புங்கள்என்று கூறினால், கட்டிடக்கலை தெரியாத ஒருவருக்கு மாற்று வழி சொன்னதாக அமையும். இந்த உதாரணத்தை கவனாமாக மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள்.
மாதத்தை துவங்க தேவையான வானியல் கலையை தெரியாமல் நீங்கள் இருக்கிறீர்கள் எனவே பிறை பார்த்து மாதத்தை துவங்குங்கள்என்று மேலுள்ள ஹதீஸில் நபிகளார் சொல்லவில்லை. மாறாக நபிகளார் சொல்ல வந்தது மாத நாட்களின் எண்ணிக்கையை பற்றி மட்டுமே. உங்களுக்கு எண்ணவும் தெரியாது எழுதவும் தெரியாது. மாதம் என்பது இப்படியும் இருக்கும் இப்படியும் இருக்கும் என்று 29/30 எண்ணிக்கைகளை பற்றி மட்டுமே சொன்னார்கள். உங்களுக்கு வானியல் கலை தெரியாததால் பிறை பார்த்து நோன்பு வையுங்கள் என்று நபிகளார் கூறியிருந்தால் மேற்சொன்ன கட்டிடக்கலை உதாரணத்தை போல அது பொருந்திப்போயிருக்கும். ஹதீஸின் இரண்டாம் பாகம் எண்ணிக்கையை பற்றி மட்டுமே பேசுகிறது, எனில் தொடர்பே இல்லாமல் வானியல் கலையை முதல் பாகம் பேசுமா? இங்கே ஹிஸாப் தெரியாது என்று சொல்லிவிட்டு நபிகளார் எண்ணிக்கையையே சொல்கிறார்கள். எனவே நஹ்சுபு என்பதற்கு எண்ணமாட்டீர்கள் என்றே அர்த்தம்.
அச்சமுதாயம் எண்ணவும் எழுதவும் தெரியாமல் இருந்ததா?
இல்லை. அவர்கள் வியாபாரம் செய்தனர். ஒப்பந்தங்களை எழுதிக்கொண்டனர். கடன் வாங்குவதை எழுதி வைத்தனர். அவர்களுக்கு எண்ணவும் எழுதவும் தெரிந்திருந்தது. எனவே ஹிஸாப் வானியல் கலையை மட்டுமே குறிக்கும். அவர்கள் வானியல் கலையை அறியாமல் இருந்தார்கள். இவ்வாறு ஒரு வாதம் வைக்கப்படலாம். இதுவும் வரலாறு அறியாத வாதமே. ஹிஜ்ரா கமிட்டியினரை விட அவர்கள் வானியல் கலையை அதிக அளவு அறிந்திருந்தனர். வழி அறியவும் காலத்தை அறிந்துகொள்ளவும், பருவ காலங்களை அறிந்து கொள்ளவும் உலகில் எல்லா சமுதாயமும் வானத்தை சார்ந்தே இயங்கின. பகலில் சூரியை பார்த்து நேரத்தை அறிவர். இரவில் சந்திரன் மற்றும் நட்சத்திரங்களை பார்த்து நேரத்தை அறிவர். நட்சத்திரங்களை வைத்து வழி அறிவர். அதே நட்சத்திரங்களைக் கொண்டே பருவ காலங்களை அறிந்தனர். அரபுகள் மட்டுமல்ல வரலாற்றுக்கு முந்தய காலத்திலிருந்தே மனிதன் வானியலில் கை தேர்ந்தவானாக இருந்தான். இதற்கு பல சான்றுகள் ஹதீஸ்களிலேயே காணலாம்.
நட்சத்திரங்களை பற்றிய நபிகளாரின் அறிவு:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மார்க்க (ஞான)ம் "கார்த்திகை" நட்சத்திரக் கூட்டத்தின் அருகில் இருந்தாலும், அதைப் "பாரசீகர்களில்" அல்லது "பாரசீக மக்களில்" ஒருவர் எடுத்துக்கொண்டுவந்து விடுவார்" என்று கூறினார்கள்.
அறி: அபூஹுரைரா (ரலி); முஸ்லிம் 4976
நட்சத்திரங்களை பற்றிய நபிதோழர்களின் அறிவு:
இப்ன் உமர் (ரலி) அறிவித்தார்: இரவுத்தொழுகைகள் இரண்டு இரண்டு ரகாத்துகளாக தொழப்படவேண்டும், வித்ர் ஒரு ரகாத்என அல்லாஹ்வின் தூதர் ஸல் கூறினார்கள் . எனக்கு தூக்கம் வந்து நான் தூங்க நாடுவதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்என நான் (இப்னு உமர்) கேட்டேன். அதற்கு நபி ஸல் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்என்பதை அந்த நட்சத்திரத்துடன் இட்டுப்பார்என்றார்கள். (தூக்கம் வருவதைப் பற்றி நினைக்கக்கூடாது எனும் அர்த்தத்தில் அப்படி கூறினார்கள்). நான் தலையை தூக்கிப் பார்த்தேன். சிமாக் (சித்திரை நட்சத்திரம்) தெரிந்தது. பின்னர் நபி ஸல் இரவுத்தொழுகைகள் இரண்டு இரண்டு ரகாத்துகளாக தொழப்பட வேண்டும், வித்ர் ஒரு ரகாத், சுபுஹுக்கு முன் (தொழவேண்டும்)என்றார்கள்.
அறி: அபு மிஜ்லஸ் (ரஹ்); இப்ன் மாஜா 1175
நட்சத்திரங்களைக் கொண்டு முஸ்லிம்கள் பருவ காலங்களை அறிந்தது:
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் மக்கள் மரத்திலுள்ள கனிகளை விற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். பழங்களைப் பறித்து வாங்குபவரிடம் ஒப்படைக்கும் நேரம் வந்ததும் வாங்கியவர், 'இது அழுகிவிட்டது; இது நோயால் தாக்கப்பட்டிருக்கிறது; இது செங்காயாக இருக்கிறது; இன்னும் பல குறைகள் இருக்கின்றன' எனக் கூறி சச்சரவு செய்வார். நபி(ஸல்) அவர்களிடம் இத்தகைய புகார்கள் பெருத்தபோது 'மரத்திலுள்ள கனிகள் பலன் உறுதிப்படும் நிலையை அடையும் வரை விற்காதீர்கள்!" என்று ஆலோசனை போல் கூறினார்கள்.
ஸைத் இப்னு ஸாபித்(ரலி), ஸுரையா (தோன்றக் கூடிய, பேரீச்சம் பழம் கனியும் பருவமான இளவேனிற்காலம்) வரும்வரை தம் தோட்டத்திலுள்ள மரங்களின் கனிகளை விற்க மாட்டார்.
அறி: ஸைத் இப்னு ஸாபித்(ரலி) ; புகாரி 2193.
கனிகளின் குறைகள் போகும்வரை அவற்றை விற்பதற்கு நபி (ஸல்) தடை விதித்தார்கள்என இப்ன் உமர் (ரலி) கூறினார்கள். அது எப்போது என இப்னு உமரிடம் கேட்டேன். சுரையாவின் உதயம்என்று கூறினார்கள்.
அறி: உஸ்மான் பின் அப்துல்லாஹ் பின் சுராகா ; அஹமத் 5012, தஹாவி-1906
நிலவைக் கொண்டு இரவில் நேரத்தை அறிவது:
அன்-நுமான் பின் பஷீர் அறிவிக்கிறார்: நான் தான் மக்களுள் இஷா தொழுகையின் நேரத்தை பற்றி அதிக அறிவுடையவனாவேன். அல்லாவின் தூதர் (ஸல்) மூன்றாம் இரவில் நிலவு மறைந்தபின் அதைத் தொழுபவர்களாக இருந்தார்கள். திர்மிதி 165, நஸாயி 533,534
ஸஹீஹ் முஸ்லிம்: 2484 (1291)
அஸ்மா (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான அப்துல்லாஹ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அஸ்மா (ரலி) அவர்கள் முஸ்தலிஃபா இல்லத்தின் அருகே இருந்தபோது, என்னிடம்சந்திரன் மறைந்துவிட்டதா?” என்று கேட்டார்கள். நான்இல்லைஎன்றேன். அவர்கள் சிறிது நேரம் தொழுதுவிட்டுப் பிறகுமகனே! சந்திரன் மறைந்துவிட்டதா?”என்று கேட்டார்கள். நான்ஆம்என்றேன். “என்னுடன் புறப்படுஎன்று கூறினார்கள். அவ்வாறே நாங்கள் புறப்பட்டுச் சென்றோம். அவர்கள்ஜம்ராவில் கல்லெறிந்துவிட்டுப் பின்னர் தமது கூடாரத்தில் தொழுதார்கள். அப்போது அவர்களிடம் நான், ”அம்மா! நாம் விடிவதற்கு முன்பே வந்து விட்டோம்என்றேன். அவர்கள், ”இல்லை, மகனே! நபி (ஸல்) அவர்கள் பெண்களுக்கு அனுமதியளித்துள்ளார்கள்என்று சொன்னார்கள்.
நபிகளார் காலத்தில் மக்கள் நிலவின் மன்சில்களைக் கொண்டு காலத்தை அறியும் கலையில் கைதேர்ந்தவர்களாக இருந்தனர். இவற்றிற்கு மேலுள்ள ஹதீஸ்கள் சான்று பகர்கின்றன. அதிக விளக்கங்களுக்கு இக்கட்டுரைகளை பார்வையிடுக
http://www.piraivasi.com/2015/08/20.html
http://www.piraivasi.com/2016/03/16.html
http://www.piraivasi.com/2016/05/11.html
http://www.piraivasi.com/2016/11/11.html
ஹிஜ்ராவினர் சொல்வதைப் போல அமாவாசையை கணக்கிடுவதைப் பற்றிதான் ஹிஸாப் பேசுகிறது என்றால் அதை செய்ய அன்றைய முஸ்லிம்களுக்கு எந்த சிரமமும் இல்லை. சூரியனும் சந்திரனும் ஒரே மன்ஸிலில் வரும் நாள்தான் அமாவாசை நாள். இதை அவர்கள் மிக எளிதாக அறிந்துகொண்டு மறுநாளில் மாதத்தை துவங்கி இருப்பார்கள். இதை கட்டளை இடுவதும் நபிகளாருக்கு எளிதாக இருந்திருந்திருக்கும். எனவே இங்கே ஹிஸாப் என்றால் வானியல்கலை என பொருள் கொள்வது எவ்விதத்திலும் பொருத்தமில்லை.
இங்கே மற்றொரு முரண்பாட்டையும் கவனிக்க வேண்டும். எந்த வாயால் நபிகளாரின் சமுதாயம் உம்மி சமுதாயம், அவர்களுக்கு அன்று அமாவாசையை கணக்கிட தெரியவில்லை என்று இந்த ஹிஜ்ராவினர் சொல்கிறார்களோ அதே வாயால்தான், நபிகளார் மறைக்கப்படும்போது கணக்கிட சொன்னார்கள் என்றும் நபிகளார் முன்கூட்டியே கணக்கிட்டார்கள் என்றும் சொல்கிறார்கள்.
“அவர்கள் வியாபாரம் செய்தனர். ஒப்பந்தங்களை எழுதிக்கொண்டனர். கடன் வாங்குவதை எழுதி வைத்தனர். அவர்களுக்கு எண்ணவும் எழுதவும் தெரிந்திருந்தது” என்பது உண்மையே. இதனால் தான் நாம் மேலே தெளிவாக விளக்கியுள்ளோம். நபிகளார் எழுதப்படிக்கத் தெரியாத மக்கள் அதிமாக இருந்த சபையில் அவ்வாறு பேசினார்கள். பொய்யை பேசுவதைப் பற்றி பயான் செய்யும் ஆலிம் “நாம் பொய் பேசுகிறோம்” என்றுதான் சொல்வார். நீங்கள் பொய் பேசுகிறீர்கள் என்று சொல்லமாட்டார். அவர் பொய் பேசாதவராக இருக்கலாம், சபையில் இருப்பவர்களில் பொய் பேசாதவர்கள் இருப்பார்கள். பொதுவாக மக்களிடம் பேசும்போது எல்லோரையும் உட்படுத்தி இவ்வாறுதான் பேசுவோம்.