Saturday 30 July 2016

அஹில்லா-வா? கமரா?

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
ஹிஜ்றா கமிட்டி என்போர் லண்டனில் அமாவாசை என்று நடக்கும் என்று ஆங்கிலக் காலண்டரில் பார்த்து (அ) அறிந்து லண்டனில் அதன் மறுநாள் என்ன ஆங்கில நாளோ அந்நாளில் மாதத்தின் முதல் நாளை அனுஷ்டிக்கும் வழக்கம் உடையவர்கள். இதற்கும் குர்ஆன் ஹதீஸுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் அவர்கள் தங்கள் காலண்டரை குர்ஆன் ஹதீசுடன் இணைப்பதற்கு பயன்படுத்தும் வாதம் “தினமும் பிறையைப் பார்த்து வாருங்கள் அது எங்கள் காலண்டருடன் ஒத்துப்போகிறது” எனும் வாதமாகும். இதைதான் அல்லாஹ் குர்ஆனில் அஹில்லா காலம் காட்டிகள் என்கிறான் எனும் வாதத்தையும் முன்வைப்பார்கள். மேலும் அஹில்லாவை தொடர்புபடுத்தி அப்துல் ரஸ்ஸாக் எனும் ஹதீஸ் புத்தகத்தில் இருக்கும் ஒரு செய்தியையும் ஆதாரமாக எடுத்துவைப்பார்கள்.
7306 - عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي رَوَادٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ جَعَلَ الْأَهِلَّةَ مَوَاقِيتَ لِلنَّاسِ، فَصُومُوا لِرُؤْيَتِهِ، وَأَفْطِرِوَا لِرُؤْيَتِهِ، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَعُدُّوَا لَهُ ثَلَاثِينَ يَوْمًا»
அல்லாஹ் பிறையின் படித்தரங்களை மனித சமுதாயத்திற்கு தேதிகளாக ஏற்படுத்தியுள்ளான். எனவே அவற்றின் காட்சியை அடிப்படையாகக் கொண்டே நோன்பு வையுங்கள். அவற்றின் காட்சியை அடிப்படையாகக் கொண்டே நோன்பை நிறைவு செய்யுங்கள். எனவே அவை உங்கள் மீது மறைக்கப்படும்போது முப்பது நாட்களாக கணக்கிட்டு கொள்ளுங்கள்.” அறிவிப்பாளர் இப்னு உமர் (ரழி) நூல்: முஸன்னஃப் அப்துர்ரஸ்ஸாக்
இன்னல்லாஹ ஜஅல அஹில்லதி மவாகீத லின்னாசி. ஃபசூமூ லி ருயதிஹி
இதுதான் அப்துல் ரஸ்ஸாக்கில் வரும் அந்த செய்தி. இது ஹதீஸ் அல்ல. இதன் அறிவிப்பாளர் தொடரில் வரும் அப்துல் அஸீஸ் இப்ன் அபீ ரவ்வாத் தன் தந்தை வழியாக அறிவிக்கும் செய்திகள் இட்டுக்கட்டப்பட்டவை என இப்ன் ஹிப்பான் கூறுகிறார். எனவே இது ஒரு இட்டுக்கட்டப்பட்ட செய்தி. ஒரு வாதத்திற்கு இதை ஹதீஸாக எடுத்துக்கொண்டாலும் தலைப்பிறையை கண்ணால் பார்த்து நோன்பு பிடிக்க வேண்டும் என்பதற்குத்தான் இது மிகப்பெரிய ஆதாரமாக அமையும். மாறாக தினமும் பிறை பார்த்தலுக்கு இது ஆதாரமாக அமையாது. இதன் சரியான மொழியாக்கம் “அல்லாஹ் பிறைகளை மனிதனுக்கு காலம்காட்டியாக ஏற்படுத்தியுள்ளான். எனவே அவனைப் பார்த்து நோன்பு நோருங்கள் என்பதாகும். இங்கே கவனிக்கவேண்டியது என்னவென்றால். பிறைகள் என்று மொழியாக்கம் செய்த இடத்தில் இருக்கும் அஹில்லா எனும் வார்த்தை பெண்பால் வார்த்தை. அஹில்லா என்றப் பெண்ணை காலம் காட்டி என்று சொல்லிவிட்டு, அவனைப் பார்த்து நோன்பு பிடியுங்கள் என்று ஒரு ஆணை குறிப்பிட்டு சொல்லப்படுகிறது. எல்லாப் பிறைகளையும் கவனித்துவந்து அமாவாசையை அறிந்து மறுநாள் நோன்பு நோற்க வேண்டும் என்றிருந்தால் “அல்லாஹ் பிறைகளை மனிதனுக்கு காலம்காட்டியாக ஏற்படுத்தியுள்ளான். எனவே அவளைப் பார்த்து நோன்பு நோருங்கள் என்று வந்திருக்கும். ஆனால் அந்த செய்தியில் அவனைப் பார்த்து நோன்பு நோருங்கள் என்று ஒருமை ஆண்பாலில் வந்துள்ளது. இங்கே சில அடிப்படை இலக்கணத்தையும் சில தகவல்களையும் தெரிந்துகொள்ளவேண்டியுள்ளது.
தமிழில் மனிதனைக் குறிப்பிடும்போது அவன் என்றும் மிருகங்களையும் உயிரற்ற பொருட்களையும் குறிப்பிடும்போது அது என்றும் சொல்வோம். மனிதனைக் குறிப்பிடும்போது அவன்/அவள் என்று பாலினத்தையும் சேர்த்து குறிப்பிடுவோம். மிருகங்கள் அல்லது உயிரற்ற பொருட்களை பாலினத்துடன் சேர்த்து அழைக்கமாட்டோம். பெண் மாட்டை “அந்த மாடு வந்தாள்” என்றோ ஆண் ஆட்டை “அவனைக் குர்பானி கொடுத்தோம்” என்றோ சொல்லமாட்டோம். அது என்று பாலினம் இல்லாமல் அழைப்பதுதான் தமிழ் மொழி. ஆனால் சில மொழிகளில் மிருகங்களையும் உயிரற்ற பொருட்களையும் பாலினத்துடன் அழைப்பார்கள். அரபியிலும் அப்படித்தான். அரபியில் சூரியன் பெண்பால். சூரியன் உதித்தாள் என்பார்கள். சந்திரன் அரபியில் ஆண்பாலாகும். சந்திரன் மறைந்தான் என்பார்கள்.
அஹில்லா மனிதனுக்கு காலம் காட்டி என்று பன்மையில் பெண்பாலில் சொல்லிவிட்டு அவனைப் பார்த்து நோன்பு வையுங்கள் என்று ஏன் ஒருமையில் ஆண்பாலில் சொல்லவேண்டும்? அஹில்லா என்பது ஹிலால் எனும் வார்த்தையின் பன்மையாகும். ஹிலால் என்பது ஆண்பாலாகும். அது ஒருமைச்சொல்லுமாகும். அதன் பன்மைச்சொல்லான அஹில்லா பெண்பால் சொல்லாகும். ஹிலால்கள் என்பதை அரபியில் அஹில்லா என்பார்கள். ஹிலால் என்றால் பிறை; அஹில்லா என்றால் பிறைகள். பிறைகள் காலம் காட்டிகள் என்று சொல்லி விட்டு அதில் ஒரே ஒரு பிறையை மட்டுமே பார்த்து நோன்பை வைக்க சொல்கிறார்கள். ஹிலால் என்பது ஆண்பால் என்பதால் அவனைப் பார்த்து நோன்பு வையுங்கள் என்கிறார்கள். பல பிறைகள் காலம்காட்டிகள் அதில் ஒன்றே ஒன்றைப் மாட்டும் பார்த்து நோன்பு வையுங்கள் என்பதே இதன் பொருள். ஒரு வருடத்திற்கு 12 பிறைகள் அதில் ஒரு பிறையைப் பார்த்து நோன்பை துவங்குங்கள் மறு பிறையைப் பார்த்து நோன்பை நிறைவு செய்யுங்கள் என்பதாகும். அந்த ஒரு பிறை எது? ரமலான் மாதத்தின் பிறை. ரமலான் மாதத்தின் எந்தப் பிறை? ரமலான் மாதத்தின் தலைப் பிறை.
ஹிலால் என்றால் பிறை என்றுதானே அர்த்தம். அதை ஏன் தலைப்பிறை என்று மாற்றவேண்டும்? ஹிலால் என்ற வார்த்தைக்கு மாதத்தில் முதன் முதலில் கண்ணுக்கு தெரியும் தலைப்பிறை என்பதைத் தவிர வேறு அர்த்தமே இல்லை. ஹிலால் என்ற வார்த்தை ஒட்டு மொத்த ஹதீஸ் புத்தகங்களிலும் ஒட்டுமொத்த இஸ்லாமிய வரலாற்றிலும் தலைப் பிறை எனும் பொருளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. மாற்றுக் கருத்துடையவர்கள் இரண்டாம் நாள் பிறையை ஹிலால் தானியா என்றும் மூன்றாம் நாள் பிறையை ஹிலால் துலுத் என்றும் அரபுகள் அழைத்ததாக சான்றுகளைக் கொண்டு வரவேண்டும். ஆனால் இரண்டாம் மூன்றாம் பிறைகளை கமர் என்று அழைத்ததாகவே சான்றுகள் உள்ளன.
ஹிலால் என்றால் தலைப் பிறை என்றும் அஹில்லா என்றால் தலைப் பிறைகள் என்பதற்கும் ஹதீஸில் நேரடி சான்றுகள் உள்ளன.
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ يَزِيدَ بْنِ، رُومَانَ عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا كَانَتْ تَقُولُ وَاللَّهِ يَا ابْنَ أُخْتِي إِنْ كُنَّا لَنَنْظُرُ إِلَى الْهِلاَلِ ثُمَّ الْهِلاَلِ ثُمَّ الْهِلاَلِ ثَلاَثَةَ أَهِلَّةٍ فِي شَهْرَيْنِ وَمَا أُوقِدَ فِي أَبْيَاتِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم نَارٌ - قَالَ - قُلْتُ يَا خَالَةُ فَمَا كَانَ يُعَيِّشُكُمْ قَالَتِ الأَسْوَدَانِ التَّمْرُ وَالْمَاءُ إِلاَّ أَنَّهُ قَدْ كَانَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم جِيرَانٌ مِنَ الأَنْصَارِ وَكَانَتْ لَهُمْ مَنَائِحُ فَكَانُوا يُرْسِلُونَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ أَلْبَانِهَا فَيَسْقِينَاهُ ‏.‏ صحيح مسلم ٢٩٧٢/٣

உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என்னிடம்) ஆயிஷா (ரலி) அவர்கள், "என் சகோதரி (அஸ்மாவின்) மகனே! அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் பிறை பார்ப்போம். அடுத்த பிறையும் பார்ப்போம். அதற்கடுத்த பிறையும் பார்ப்போம். இரண்டு மாதங்களில் மூன்று பிறைகளைப் பார்த்துவிட்டிருப்போம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (துணைவியர்) இல்லங்களில் (சமைப்பதற்காக அடுப்பில்) நெருப்பு பற்றவைக்கப்பட்டிராது" என்று கூறினார்கள். முஸ்லிம் : 5690, புகாரீ 2567 & புகாரீ 6459

இந்த ஹதீஸ் நபிகளார் காலத்தில் மாதத்தை எப்படி முடிவு செய்தார்கள் என்பதை தெளிவாக பறை சாற்றுகிறது. மாதத்தை ஒரே ஒரு பிறையைப் பார்த்துதான் முடிவு செய்துள்ளனர். ஹிலாலைப் பார்போம், ஹிலாலைப் பார்ப்போம், மீண்டும் ஹிலாலைப் பார்ப்போம். இவ்வாறு இரண்டு மாதங்களில் மூன்று ஹிலால்களைப் பார்ப்போம் என்கிறார்கள். கமுட்டி சொல்வதைப் போல தினமும் பிறைகளைப் பார்த்திருந்தால் இரண்டு மாதங்களில் குறைந்தது 58 பிறைகளைப் பார்த்திருப்பார்கள். இங்கே ஆயிஷா ரலி இரண்டு மாதங்களில் பார்த்த 3 பிறைகள் எவை என்று பார்ப்போம். முதல் மாதம் சஃபர் என்று வைத்துக்கொள்வோம் சஃபர் மாதத்தின் தலைப் பிறையைப் பார்த்து சஃபரை தொடங்குவார்கள். இதை 1 என்று எண்ணிக்கொள்ளுங்கள். சஃபர் மாத இறுதியில் ரபியுல் அவ்வல் பிறையைப் பார்த்திருப்பார்கள். இது சஃபர் மாத முடிவையும் ரபியுல் அவ்வல் மாத துவக்கத்தையும் காட்டும். இதை 2 என்று எண்ணிக்கொள்ளுங்கள். இப்போது சஃபர் எனும் ஒரு மாதம் முடிவுற்றது. 2 பிறைகளை பார்த்துவிட்டார்கள். ஆனால் ஒரு மாதம்தான் முடிவுற்றது. ஒரு மாதத்தைதான் எண்ணியுள்ளோம். பின்னர் ரபியுல் ஆகிர் பிறையைப் பார்த்திருப்பார்கள். இது ரபியுல் அவ்வல் மாத முடிவையும் ரபியுல் ஆகிர் மாத துவக்கத்தையும் காட்டும். இதை 3 என்று எண்ணிக்கொள்ளுங்கள். இப்போது ரபியுல் அவ்வல் எனும் இரண்டாம் மாதம் முடிவுற்றது. இவ்வாறுதான் இரண்டு மாதங்களில் மூன்று பிறைகளைப் பார்த்தார்கள்.
இங்கே நாம் முக்கியமாக கவனிக்கவேண்டியது என்னவென்றால் இரண்டு மாதங்களில் மூன்று பிறைகள் என்று சொல்வதற்கு அன்னை ஆயிஷா பயன்படுத்திய வார்த்தை. ஸலாஸ அஹில்லத்தின் ஃபீ ஷஹ்ரைன் என்கிறார்கள். ஆம்! அதே அஹில்லா எனும் வார்த்தையைத்தான் பயன்படுத்துகிறார்கள். இங்கே அஹில்லா எனும் வார்த்தை மாதங்களின் தலைப்பிறைகள் என்பதை தவிர வேறு எதையும் குறிக்காது. ஹிலால் என்பது தலைப்பிறையைத் தவிர வேறில்லை. இதைத்தவிர இஸ்லாமிய வரலாற்றில் அஹில்லா எனும் வார்த்தையும் ஹிலால் எனும் வார்த்தையும் தலைப்பிறை எனும் பொருளில் தவிர வேறு பொருளில் பயன்படுத்தப்படவில்லை என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. இது ஒன்றே போதுமானது.
அஹில்லா என்பதற்கு மேலே விளக்கப்பட்டதைத் தவிர வேறு மாற்றுக்கருத்தே இல்லை. ஆனால் கமுட்டி அஹில்லா என்றால் படித்தரங்கள் அந்தப் படித்தரங்களை கவனித்து வந்தால் அமாவாசை எந்த நாள் என்று கண்டுபிடித்துவிடலாம். பின்னர் அந்த அமாவாசையை வைத்து நமது சடங்கு சம்பிரதாயங்களை செய்யலாம் என்று சொல்கிறது. இதற்கு இவர்கள் கொடுக்கும் விளக்கம் என்னவென்றால் ஹிலால் என்றால் பொதுவாக ஒவ்வொரு பிறையையும் குறிக்கும். ஒரு மாதத்தில் 29 பிறைகள் இருந்தால் அவை ஒவ்வொன்றும் ஹிலால்தான் என்கிறார்கள். ஒருமுறை இந்தக் கருத்தை சொல்லும் இவர்கள் மறுமுறை ஹிலால் என்றால் முதல் 7 நாட்களின் பிறையையும் கடைசி 7 நாட்களின் பிறையையும் குறிக்கும் என்று குழப்பமான நிலையில் உள்ளனர்.
கமிட்டியின் இந்தக் கொள்கையை நபிகளாரின் பிறை பார்த்து நோன்பு வையுங்கள் பிறைப் பார்த்து நோன்பை விடுங்கள் எனும் ஹதீசுடன் உரசிப்பார்ப்போம். பிறையைப் பாருங்கள் என்று நபி சொன்னது மாதத்தின் இறுதியில் தெரியும் கடைசி தேய்பிறையாம். அந்தப் பிறைக்கு மறுநாள் அமாவாசையாம். அன்று நோன்பு பிடிக்காமல் மறுநாள் நோன்பு பிடிக்க வேண்டுமாம். இது கமிட்டிக் கொள்கை. கமிட்டிக் கணக்கின்படியே பஜ்ரில் தெரியும் கடைசிப் பிறையைப் பார்த்து நோன்பை ஆரம்பியுங்கள். ஒரு செவ்வாய்க்கிழமை பஜ்ர் வேளையில் உங்களுக்கு பிறை தெரிகிறது. நீங்கள் பஜ்ரில் பார்ப்பதால் சஹர் வேளையைக் கடந்திருப்பீர்கள், அன்று உங்களால் நோன்பு வைக்க முடியாது. கமிட்டி கணக்குப்படி மறு நாள் (புதன்கிழமை) அமாவாசை நாள் அன்றும் நோன்பு வைக்கக்கூடாது என்பார்கள். எனவே புதன் நோன்பு வைக்காமல் அதன் மறுநாள் வியாழன் சஹர் செய்து நோன்பை துவங்குங்கள். செவ்வாய்கிழமை ஹிலாலைப் பார்த்து வியாழன் முதல் நோன்பை நோற்றுள்ளீர்கள். சூமூ லிருயதிஹி எனும் ஹதீஸின் முதல் பகுதியை நிறைவு செய்துவிட்டீர்கள். வியாழன் மக்ரிபில் உங்களது முதல் நோன்பை திறப்பீர்கள். கமிட்டி கணக்குப்படி நீங்கள் நோன்பு பிடித்தது முதல் நாள். தினமும் பிறை பார்க்கும் பழக்கமுடைய நீங்கள் முதல் பிறையான அன்றும் நோன்பை திறந்துவிட்டு பிறையைப் பார்ப்பீர்கள். கமிட்டி கணக்குப்படி இதுவும் நீங்கள் பார்க்கும் ஒரு ஹிலால். அன்று பிறை தெரிந்தால் நபிகளாரின் ஹதீஸின் இரண்டாம் பாகத்தின்படி வ அஃப்திரு லி ருயதிஹி பிறையைப் பார்த்து நோன்பை விட வேண்டும். செவ்வாய்க்கிழமை பிறையைப் பார்த்து வியாழன் நோன்பைத் துவங்கிய நீங்கள் வியாழன் மாலை பிறையைப் பார்த்ததும் நோன்பை விட்டுவிட்டு வெள்ளிக்கிழமை பெருநாள் கொண்டாட வேண்டும். நீங்கள் வியாழன் ஒரே ஒரு நோன்பு பிடித்தீர்கள். மறுநாள் வெள்ளி பெருநாள் கொண்டாடுவீர்கள்.
மேற்சொன்ன நடை முறை உதாரணம் உங்களுக்கு விளங்கியிருக்கும். ஹிலால் என்பதற்கு ஒரு மாதத்தில் நாம் பார்க்கும் சந்திரனின் ஓவ்வொரு வடிவமும் பிறை தான் எனும் பொருள் இருந்தால் உங்களால் ஒரே ஒரு நோன்பை மட்டுமே பிடிக்க இயலும். ஒரு ஹிலாலை பார்த்து நோன்பைத் துவங்கி மறு ஹிலாலை பார்த்தவுடன் நோன்பை விட்டுவிட்டு பெருநாள் கொண்டாட வேண்டியதுதான். ஹிலால் என்பது தலைப்பிறையாக இருந்தால் மட்டுமே ஒரு தலைப்பிறையைப் பார்த்து நோன்பை துவங்கி அடுத்த மாதத் தலைப்பிறையைப் பார்த்து பெருநாள் கொண்டாட இயலும்.
ஹிலால் என்றால் தலைப் பிறை! அஹில்லா என்றால் தலைப் பிறைகள்! இதைத்தவிர வேறு பொருட்கள் இவற்றிற்கு இல்லை...  
நேற்றுவரையில் வரை மேலே சொன்ன அப்துர் ரஸ்ஸாக் செய்தியில் வரும் சூமூ லி ருயதிஹி ஹி அஹில்லாவைத்தான் குறிக்கும் என்று இலக்கணம் தெரியாமல் கூறிவந்த கமுட்டி இப்பொது இந்த இலக்கணத்தை விளங்கிக் கொண்டனர். ஹி என்பது பெண்பாலானா அஹில்லாவைக் குறிக்காது அது ஆண்பால் பொருளைத்தான் குறிக்கும் என்று ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால் அந்த ஆண்பால் சொல் கமர் என்கின்றனர். அஹில்லா எனும் பிறைகள் கமர் எனும் சந்திரனுக்கு உரியதுதானே அதனால் ஹி என்பது சந்திரன் எனும் கமரைக் குறிக்கும் என்கின்றனர்.
நான் உங்களிடம் “10 மாங்கனிகள் உள்ளன, ஒன்றை நீ எடுத்துக்கொள்” என்றால் ஒரு மாங்கனியை எடுப்பீர்களா அல்லது மாங்கனிகளுக்கு சொந்தமான மாமரத்தை பிடுங்கி எடுத்துசெல்வீர்களா? நீ ஒரு மாங்கனியை எடு என்று சொல்லவில்லை, ஒன்றை எடு என்றுதானே சொன்னாய் அதனால் மாங்கனிகள் உருவாவதற்கு காரணமான மாமரத்தை எடுத்தேன் என்று சொல்வீர்களா? பன்மையில் சிலவற்றை சொல்லிவிட்டு ஒருமையில் அதிலிருந்து ஒன்றைக் குறிப்பிட்டால் அதே பொருளில் ஒன்றைத்தானே அது குறிக்கும்.
எனக்கு 5 பெண் மக்கள் உள்ளனர் ஒருத்தியை நீங்கள் திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று உங்களிடம் ஒருவர் கூறினால் ஐந்துபேரும் உருவாவதற்கு காரணமான உங்கள் மனைவியைத்தான் நான் திருமணம் செய்வேன் என்று அடம்பிடித்தால் அவர் உங்களை என்ன செய்வார்.
இங்கே பிறைகள் என்று பன்மையில் சொல்லிவிட்டு, அவனைப் பார்த்து நோன்பு வையுங்கள் என்றால் அது பிறைகள் என்ற பன்மையில் இருக்கும் பல பிறைகளில் ஒன்றைக் குறிக்கும் என்று பொது அறிவுக்கு விளங்குமல்லவா. அப்படி விளங்காதவருக்கு 6 அறிவுகள் இல்லை என்பது திண்ணம். குறைந்த பட்சம் ஹி எதைக் குறிக்கும் என்று ஹதீஸில் தேடியிருக்கலாமல்லாவா.
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ذَكَرَ رَمَضَانَ فَقَالَ ‏ "‏ لاَ تَصُومُوا حَتَّى تَرَوُا الْهِلاَلَ، وَلاَ تُفْطِرُوا حَتَّى تَرَوْهُ، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَاقْدُرُوا لَهُ ‏"‏‏.
புகாரி 1906 / முஸ்லிம் 1080; அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி):- நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமளான் பற்றிக் குறிப்பிட்டார்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பு பிடிக்காதீர்கள். அதைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் (முப்பது நாட்களாக) எண்ணிக் கொள்ளுங்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
عَنْ أَبِي هُرَيْرَةَ، - رضى الله عنه - قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِذَا رَأَيْتُمُ الْهِلاَلَ فَصُومُوا وَإِذَا رَأَيْتُمُوهُ فَأَفْطِرُوا فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَصُومُوا ثَلاَثِينَ يَوْمًا ‏"‏ ‏.‏
முஸ்லிம் 1081; அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி):- நீங்கள் பிறையைக் காணும் போது நோன்பு பிடியுங்கள். பிறையைக் காணும் போது நோன்பு விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் முப்பது நாட்கள் நோன்பு பிடியுங்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஹி எனும் வார்த்தை ஆண்பால் மற்றும் ஒருமையில் உள்ள ஹிலாலைத்தான் குறிக்கும் என்பது மேலுள்ள ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன. இதெல்லாம் இவர்களுக்கு தெரியாமலோ புரியாமலோ இல்லை. அல்லாஹ் பிறைகளை காலம்காட்டிகள் என்கிறான். இவர்கள் சந்திரனை காலம்காட்டி என்கின்றனர். இரண்டிற்கும் வித்தியாசமும் இவர்களுக்கு தெரியும். தெரிந்தும் தங்களின் யூத சந்திர கலண்டரை நிலைநாட்ட குர்ஆன் ஹதீஸில் இந்தக் கையாடல்களை செய்கின்றனர்.
பிறைக்கும் சந்திரனுக்குமுள்ள வித்தியாசம் >> piraivasi.com/2016/02/8.html