Saturday 29 July 2017

மெலிந்தது ஒட்டகமா...?

//மேலும் திருமறை குர்ஆனின் சூரத்துல் ஹஜ் அத்தியாயத்தின் 27-வது வசனத்தில் ''ஹஜ்ஜை பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் வெகு தொலைவிலிருந்து நடந்தும், மெலிந்த ஒட்டகங்களின் மீதும் உம்மிடம் வருவார்கள்'' என்று மெலிந்த ஒட்டகத்தைக் குறிப்பிட்டே அல்லாஹ் விவரிக்கின்றான். இன்றைய சூழ்நிலையில் ஹஜ்ஜிற்;கு எவரும் ஒட்டகத்தில் செல்வதில்லை. விதவிதமான வாகனங்களில் செல்கின்றனர். 'மெலிந்த ஒட்டகம்' என்ற சொல் ஒட்டகம் அல்லாத வேறு பொருளைத் தராது என்பதை நாம் அனைவரும் அறிவோம். மேற்கண்ட வசனத்தை வைத்துக்கொண்டு மெலிந்த ஒட்டகத்தில் சென்று ஹஜ்ஜூ செய்தால்தான் ஹஜ் நிறைவேறும் என்று சொன்னால் எவ்வளவு பிழையானதோ அதேபோன்றுதான் பிறைவிஷயத்தில், ருஃயத் என்ற சொல்லை தவறாக விளங்கி அதையே பிடித்துக்கொண்டு பிறந்த பிறையைப் புறக்கண்ணால் மட்டும்தான் பார்க்கவேண்டும் என்று சொல்வதும் மிகவும் தவறானதாகும்.//
ஹிஜ்ராவினர் தங்கள் இணையதளத்தில் பதிவிட்டிருப்பதை அப்படியே தந்துள்ளோம். பார்க்க:  http://mooncalendar.in/index.php/ta/ta-reviews/200-04
காலண்டரைக் கொண்டாடும் ஒவ்வொரு ஹிஜ்ரா கமிட்டியினரும் கேட்கும் அறிவுப்பூர்வமான கேள்விகளுள் ஒன்றுதான் "மெலிந்த ஒட்டகம்".
ஹஜ் கடமையை நிறைவேற்ற நடந்தும், மெலிந்த ஒட்டகத்திலும் வருவார்கள் என்றுதானே முகம்மது நபி () அவர்களிடம் குர்ஆனில் (22:27) அல்லாஹ் கூறுகிறான், நபி வழிப்படி பிறையைக் கண்ணால் கண்டுதான் நோன்பு பிடிப்போம் என்பவர்கள் நபி வழிப்படி மெலிந்த ஒட்டகத்தில் ஹஜ்ஜிற்கு செல்லாமல் ஏரோபிளேனில் செல்வது ஏன்?
ஏரோபிளேனில் ஹஜ் செய்ய செல்பவர்கள் கமிட்டியின் விஞ்ஞான காலண்டரை ஏன் ஏற்பதில்லை?
இதுதான் ஹிஜிரா கமிட்டியினரின் ஆதங்கமான கேள்வி.
வாகனத்தில் ஹஜ்ஜிற்கு செல்வதைப் பற்றிதான் அவர்களுடைய ஆதங்கம் இருப்பதினால் வாகனங்களைப் பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
وَالْخَيْلَ وَالْبِغَالَ وَالْحَمِيرَ لِتَرْكَبُوهَا وَزِينَةً ، وَيَخْلُقُ مَا لَا تَعْلَمُونَ ﴿١٦:٨﴾
குதிரைகள், கோவேறுக்கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச் செல்லவும், அலங்காரமாகவும் (அவனே படைத்தான்). நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைப்பான்.(16:8)
ஏறிச் செல்லும் வாகனங்களைப் பற்றி பேசிவிட்டு "நீங்கள் அறியாதவற்றையும் படைப்பான்" என்று சொல்வதன் மூலம் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இல்லாத வாகனங்களும் இனிமேல் வரும் என்ற முன்னறிவிப்பை பார்க்க முடிகிறது.
புதுமையான வாகனங்கள் வரப்போவதை முன்னறிவிப்பு செய்து விட்டு, நடந்தும் ஒட்டகத்திலும் ஹஜ்ஜிற்கு வருவார்கள் என்று சொல்வது நேர் எதிரான கருத்தை தோற்றுவிக்கக்கூடுமே! அல்லாஹ்வின் வார்த்தைகள் ஒன்றை ஒன்று முரண்படுமா? சிந்திக்க வேண்டாமா?
நபிகளார் ஒரே ஒரு ஹஜ் மட்டுமே செய்தார்கள். அந்த ஹஜ்ஜிற்கு அறிவிப்பு செய்தபோது பெரும் எண்ணிக்கையில் மக்கள் திரண்டார்கள். அதில் எல்லோரும் மெலிந்த ஒட்டகத்தில் வந்தார்கள் என்ற எந்த குறிப்பும் இல்லையே.
அப்படியென்றால் 22:27 வசனம் சொல்லும் சேதி என்னவாக இருக்கும்?
22:27. ஹஜ்ஜை பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் நடந்தும் வெகு தொலைவிலிருந்து வரும் மெலிந்த ஒட்டகங்களின் மீதும் உம்மிடம் வருவார்கள் (எனக் கூறினோம்).
இவ்வசனத்தை வாசித்தால் அல்லாஹ் யாரிடமோ ஹஜ்ஜைப் பற்றி அறிவிப்பு செய்ய சொல்கிறான் என்பது விளங்குகிறது. இந்த வசனத்தில் மேலதிக தகவல் எதுவும் இல்லாத பட்சத்தில் இது நபிகளாரை நோக்கி சொல்லப்படும் வசனம்தான் என்ற முடிவுக்கு வந்துவிடலாம். ஆனால் இவ்வசனத்தின் தொடக்கத்தில் எனும் அரபு வார்த்தை வந்துள்ளது. பயன்படுத்தப்படும் இடத்தைப் பொருத்து இவ்வார்த்தை வெவ்வேறு அர்த்தங்களைப் பெறும். இந்த இடத்தில் இது மேலும்” (AND) எனும் இணைப்பு வார்த்தையாகவே பயன்படுகிறது என்பது சாதரணமாக அரபு மொழியின் ஆனா ஆவன்னா அறிந்தவருக்கும் விளங்கும். மேலும் ஹஜ்ஜைப் பற்றி அறிவிப்பீர்என்று தொடங்குகிறது. எனில் ஹஜ்ஜை பற்றி அறிவியுங்கள் எனும் கட்டளைக்கு முன்னால் வேறு எதோ ஒன்றை அல்லாஹ் சொல்லியிருக்கிறான். அது என்னவென்று தேடுவோம். ஒரு வேளை அது என்ன கட்டளை என்று நம்மால் கண்டுபிடிக்க முடிந்தால் அது யாருக்கு இடப்பட்ட கட்டளை எனும் குறிப்பு கிடைக்கலாம்.
இதை தேடுவதற்கு இதற்கு முந்தைய வசனத்தைத்தான் பார்க்க வேண்டும்.
22:26. நாம் இப்ராஹீமுக்குப் புனித ஆலயத்தின் இடத்தை நிர்ணயித்து நீர் எனக்கு எவரையும் இணைவைக்காதீர்; என்னுடைய (இந்த) ஆலயத்தைச் சுற்றி வருவோருக்கும், அதில் ருகூஃ, ஸுஜூது செய்(து தொழு)வோருக்கும், அதைத் தூய்மையாக்கி வைப்பீராகஎன்று சொல்லியதை (நபியே! நினைவு கூறுவீராக)
ஓகோ.. இது இப்ராஹீம் நபிக்கு இட்ட கட்டளையோ! அவருக்கு பல கட்டளைகளை அல்லாஹ் இட்டுள்ளான். அதன் தொடர்ச்சிதான் ஹஜ்ஜுக்கு அறிவிப்பு செய்வதும் மெலிந்த ஒட்டகத்தில் மக்கள் வருவதும்.
மொழிப்பெயர்ப்புகளை மட்டுமே ஆதாரமாக கொண்ட ஹிஜ்ரா கமிட்டியினருக்கு அரபு மொழி தெரியாது. அவசர கோலத்தில் எதையோ தேடப்போக, கையில் சிக்கியதை அவசரகோலத்தில் விளங்கிக் கொண்டு அதை பெரிய வாதம் என்று கேட்டுவருகின்றனர்.
குர்ஆன் அருளப்படும்போது அவை வசன எண்களுடன் அருளப்படவில்லை. வசனங்களுக்கு இடையே எவ்வித நிறுத்தல் குறி இடப்பட்டும் குர்ஆன் அருளப்படவில்லை. குர்ஆனை எழுதும் எழுத்தர்களும் எவ்வித குறியீடுகளைப் பயன்படுத்தியும் வசனங்களை பிரிக்கவில்லை. ஒரு வசனம் எங்கே தொடங்கி எங்கே முடியுமென்பதை அக்கால முஸ்லிம்கள் அறிந்து வைத்திருந்தனர். அவர்களுக்கு அது ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை. பிற்கால முஸ்லிம்களே வசனங்களுக்கு எண்கள் இட்டனர், நிறுத்தல் குறிகளையும் சேர்த்தனர். இவ்வாறு எண்களிட்டு நிறுத்தல் குறிகளை சேர்த்தவர்கள் வசனங்களின் அர்த்தம் எங்கே தொடங்கி எங்கே முடியும் என்ற அடிப்படையில் வசனங்களை பிரிக்கவில்லை. குர்ஆன் ஓதும்போது ஏற்படும் ஓசை நயத்திற்கேற்ப வசனங்களை பிரித்தனர். அவ்வாறு பிரிக்கப்பட்ட வசனங்களில் இதுவும் ஒன்று. சற்று விரிவாக பார்ப்போம்..
وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَن لَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ ﴿٢٢:٢٦﴾
وَأَذِّن فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَىٰ كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِن كُلِّ فَجٍّ عَمِيقٍ ﴿٢٢:٢٧﴾
وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ = இப்ராஹிமுக்கு நாம் அடையாளப்படுத்தியபோது
مَكَانَ الْبَيْتِ = ஆலையத்தின் இடத்தை
أَن لَّا تُشْرِكْ = இணைகற்பிக்காதீர் என்று
بِي شَيْئًا = என்னுடன் எதையும்
وَطَهِّرْ = மேலும் தூய்மைப்படுத்துவீர்
بَيْتِيَ = எனது வீட்டை
لِلطَّائِفِينَ = தவாஃப் செய்பவர்களுக்காகவும்
وَالْقَائِمِينَ = நின்று வணங்குபவர்களுக்காகவும்
وَالرُّكَّعِ = ருகூ செய்பவர்களுக்காகவும்
السُّجُودِ = சஜ்தா செய்பவர்களுக்காகவும்
وَأَذِّن  = மேலும் அறிவிப்பீராக
فِي النَّاس  = மக்களுள்
بِالْحَجِّ = ஹஜ்ஜைப் பற்றி
يَأْتُوكَ  = உன்னிடம்  வருவார்கள்
رِجَالًا  = நடையாக
وَعَلَىٰ كُلِّ ضَامِر = ஒவ்வொரு மெலிந்த ஒட்டகத்தின் மீதும்
يَأْتِينَ  = அவை வரும்
مِن كُلِّ فَجٍّ عَمِيق  = தொலைவான ஒவ்வொரு பாதையிலிருந்தும்
*இப்ராஹிமுக்கு (இறை) இல்லத்தின் இடத்தை நாம் அடையாளப்படுத்தியபோது என்னுடன் எதையும் இணைகற்பிக்காதீர், மேலும் தவாஃப் செய்பவர்களுக்காகவும், நின்று வணங்குபவர்களுக்காகவும், ருகூ செய்பவர்களுக்காகவும், ஸஜ்தா செய்பவர்களுக்காகவும் எனது இல்லத்தை சுத்தப்படுத்துவீராக! மேலும் ஹஜ்ஜைப் பற்றி மக்களுள் அறிவிப்பீராக! நடையாகவும் ஒவ்வொரு மெலிந்த ஒட்டகத்தின் மீதும் அவர்கள் உம்மிடம் வருவார்கள்! தொலைவான ஒவ்வொரு பாதையிலிருந்தும் அவை (மெலிந்த ஒட்டகங்கள்) வரும்!" என்று (கூறினோம்)*
இவ்வாறு, 26 & 27 என்று பிரிக்கப்பட்ட இரு வசனங்களையும் சேர்த்து பொருள்கொண்டால் மட்டுமே முழுமையான பொருள் கிடைக்கும். இப்ராஹிம் நபியின் காலத்தில் நடந்த ஒரு விஷயத்தை அல்லாஹ் சொல்லிக்காட்டுகிறான். இப்ராஹிம் நபியிடம் தான் பேசிய விஷயத்தை மக்களுக்கு நினைவூட்டுமாறு நபி அவர்களிடம் அல்லாஹ் சொல்கிறான். இந்த வசனத்தையும் ஹிஜ்ரா கமிட்டியினர் திரித்துவிட்டனர்.
கால் நடையாகவும் மெலிந்த ஒட்டகத்திலும்தான் ஹஜ்ஜுக்கு மக்கள் வருவார்கள் என்று அல்லாஹ் சொல்லியிருந்தால் கியாமத் நாள் வரை மக்கள் அவ்வாறுதான் ஹஜ்ஜுக்கு வருவார்கள். அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறாமல் போகாது. இதைச் சிந்தித்தீர்களா சகோதரர்களே?
அவ்வசனம் நபிகளாரை நோக்கி பேசுவதாக இருந்தால் நபிகளார் மதீனாவிலிருந்து ஹஜ்ஜுக்கு அறிவிப்பு செய்தபோது முஸ்லிம்கள் எவருமே கொழுத்த ஒட்டகத்தில் வந்திருக்க முடியாது. அவ்வாறு ஒரு ஹதீஸை காட்டமுடியுமா? இதைச் சிந்தித்தீர்களா சகோதரர்களே?
மாறாக நபிகளார் பயணித்தது மெலிந்த ஒட்டகத்தில் அல்ல, மேலும் உடன் சென்றவர்களும் நல்ல கொழுத்த ஒட்டகத்தில் ஹஜ்ஜுக்கு சென்றதற்கான சான்றுகள் நபிமொழித் தொகுப்புகளில் உள்ளன. (பார்க்க புகாரி 1863, 1607, முஸ்லிம் 2497)

ஹஜ்ஜுக்கு அறிவிப்பு செய்யுங்கள், அவர்கள் *உம்மிடம் வருவார்கள்”* என்கிறான் அல்லாஹ். அறிவிப்பு செய்பவர் மக்காவில் இருந்தால் மட்டுமே இந்த வார்த்தை அமைப்பு சாத்தியமாக இருக்கும். முஹம்மது நபி ஹஜ்ஜுக்கு அழைக்கும்போது நபிகளார் மக்காவிலா இருந்தார்கள்? சிந்தித்தீர்களா சகோதரர்களே?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipzuPvNvIlY1pOP4zsjvfQctgcXOsi1cHxELdWAmp02ApYvmoJdez7X-tDH8nVnc-u8Hd1TrLghpTwGNoDlS2zvv7-3cJnaCR2rPTBJ1ufVqGBarc0VlFNCUQRQ3VNwUNT4uuiKTQt4EA/s1600/Camel-05.jpg