Thursday 3 November 2022

QSF12. புவி ஈர்ப்பு விசை பற்றிய முன்னறிவிப்பு?

 

இப்படியும் சில தப்ஸீர்கள்- ஜைனுலாபுதீன் தப்ஸீர்


ஜைனுலாபிதீன் அவர்களின் தப்சீரில் அறிவியலின் பெயரால் சொல்லப்பட்டிருக்கும் பிழையான கருத்துக்களை ஆய்வு செய்வதற்காக 2017ம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு சமர்ப்பித்த ஆய்வறிக்கைகள்


QSF ஆய்வுக்குழு


அறிமுகத்தை வாசிப்பது இந்த தொடரை புரிந்துகொள்ள உதவும். அறிமுகத்தை வாசிக்க https://www.piraivasi.com/2022/11/zina-ul-abdeen-intro.html



QSF12 புவி ஈர்ப்பு விசை பற்றிய முன்னறிவிப்பு?

284. புவி ஈர்ப்பு விசை பற்றிய முன்னறிவிப்பு

பீஜே தப்சீர் குறிப்பு எண் 284ஐ ஆய்வுக்கு எடுக்கிறோம். தப்சீர் குறிப்பு பின்வருமாறு.

இவ்வசனங்களில் (20:53, 43:10, 78:6) பூமியைத் தொட்டிலாக இறைவன் ஆக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

பூமி சூரியனால் ஈர்க்கப்பட்டு சூரியனை விட்டு விலகாமல் ரங்கராட்டினம் சுழல்வது போல் சூரியனைச் சுற்றி வருகிறது. சூரியனுடன் ஒரு கயிற்றால் கட்டி இழுக்கப்படுவது போன்ற நிலையில் இந்தப் பூமி சூரியனைச் சுற்றி வருகிறது.

மணிக்கு 1,07,000 கி.மீ. வேகத்தில் சூரியனை ஒரு ரங்கராட்டினம் போல் பூமி சுற்றி வந்தாலும் அதை நம்மால் உணர முடிவதில்லை. அது சுற்றுவது நமக்குத் தெரிவதும் இல்லை.

குழந்தைகளைத் தொட்டிலில் இட்டு ஆட்டும்போது அதன் சுழற்சி குழந்தைகளுக்குத் தெரியாது. அவர்களுக்கு அது சுகமாகவும், நித்திரை தருவதாகவும் இருக்கும்.

பூமி வேகமாகச் சுழன்றாலும் அந்தச் சுழற்சி நமக்குத் தெரியாது. எந்த விதமான பாதிப்பும் நமக்கு இருக்காது. 'தொட்டிலாக' என்ற சொல் மூலம் இதைத்தான் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

மாபெரும் அறிவியல் உண்மையை உள்ளடக்கி இவ்வசனம் இறைவனின் வார்த்தையே என்பதற்கான சான்றாக அமைகின்றது.

நமது மறுப்பு:-

பின் வரும் மூன்று ஆயத்துகளுக்கான தஃப்சீர்தான் மேலுள்ளவை


اَلَمْ نَجْعَلِ الْاَرْضَ مِهٰدًا ۙ وَّالْجِبَالَ اَوْتَادًا ۙ 

78:6, 7. பூமியைத் தொட்டிலாகவும்,284 மலைகளை முளைகளாகவும்248 நாம் ஆக்கவில்லையா?26


الَّذِىْ جَعَلَ لَـكُمُ الْاَرْضَ مَهْدًا وَّ جَعَلَ لَكُمْ فِيْهَا سُبُلًا لَّعَلَّكُمْ تَهْتَدُوْنَ‌ۚ‏ 

43:10. அவனே பூமியை உங்களுக்குத் தொட்டிலாக அமைத்தான்.284 நீங்கள் வழிகளை அடைவதற்காக அதில் பல பாதைகளை அமைத்தான்.


الَّذِىْ جَعَلَ لَـكُمُ الْاَرْضَ مَهْدًا وَّسَلَكَ لَـكُمْ فِيْهَا سُبُلًا وَّ اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً ؕ فَاَخْرَجْنَا بِهٖۤ اَزْوَاجًا مِّنْ نَّبَاتٍ شَتّٰى‏ 

20:53. அவனே பூமியை உங்களுக்குத் தொட்டிலாக அமைத்தான்.284 உங்களுக்காக அதில் பாதைகளை எளிதாக்கினான். வானத்திலிருந்து507 தண்ணீரை இறக்கி, அதன் மூலம் பல தரப்பட்ட தாவரங்களை ஜோடிகளாக242 வெளிப்படுத்தினோம்.

இவற்றில் இருக்கும் مهد எனும் வார்த்தையை தொட்டில் என்று மொழிபெயர்த்துவிட்டு அதற்கு கூடுதல் அறிவியல் சாயம் பூசுவதுதான் மேலுள்ள தப்சீர். இதற்கான விளக்கமும் அதன் அறிவியலும் சரியா என்று ஆராய்வதற்கு முன்னர் இதுபோன்று வந்துள்ள பிற வசனங்களைப் பார்ப்போம்.


وَهُوَ الَّذِىْ مَدَّ الْاَرْضَ وَجَعَلَ فِيْهَا رَوَاسِىَ وَاَنْهٰرًا‌ ؕ وَمِنْ كُلِّ الثَّمَرٰتِ جَعَلَ فِيْهَا زَوْجَيْنِ اثْنَيْنِ‌ يُغْشِى الَّيْلَ النَّهَارَ‌ ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّـقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ‏ 

13:3. அவனே பூமியை விரித்தான். மலைகளையும், நதிகளையும் அதில் அமைத்தான். ஒவ்வொரு கனி வகைகளிலும் ஒரு ஜோடியை அமைத்தான்.242 இரவைப் பகலால் மூடுகிறான். சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.


وَالْاَرْضَ مَدَدْنٰهَا وَاَلْقَيْنَا فِيْهَا رَوَاسِىَ وَاَنْۢبَتْنَا فِيْهَا مِنْ كُلِّ شَىْءٍ مَّوْزُوْنٍ‏ 

15:19. பூமியை விரித்தோம். அதில் முளைகளை நாட்டினோம்.248 அதில் எடை வரையறுக்கப்பட்ட ஒவ்வொரு பொருளையும் முளைக்கச் செய்தோம்.


  وَالْاَرْضَ مَدَدْنٰهَا وَاَ لْقَيْنَا فِيْهَا رَوَاسِىَ وَاَنْۢبَتْنَا فِيْهَا مِنْ كُلِّ زَوْجٍۢ بَهِيْجٍ ۙ‏ 

50:7. பூமியை நீட்டினோம். அதில் முளைகளை நிறுவினோம். 248 அதில் கவர்கின்ற ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்தோம்.

தொட்டில் என்று மொழிபெயர்க்கப்பட்ட 78:6,7ம் வசனத்தைப் போலவே இவ்விரு வசனங்களிலும் பூமியில் மலைகளை அமைத்ததைப் பற்றி பேசுகின்றன. ஆனால் இவ்விரு இடங்களிலும் தொட்டில் எனும் வார்த்தை வரவில்லை. விரித்தோம் என்றே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.


وَاللّٰهُ جَعَلَ لَـكُمُ الْاَرْضَ بِسَاطًا ۙ لِّـتَسْلُكُوْا مِنْهَا سُبُلًا فِجَاجًا‏ 

71:19, 20. பூமியில் உள்ள பல வழிகளில் நீங்கள் செல்வதற்காக அல்லாஹ்வே உங்களுக்காக அதை விரிப்பாக அமைத்தான். 26 (என்றும் கூறினேன்.)

தொட்டில் என்று மொழிபெயர்க்கப்பட்ட 20:53 மற்றும் 43:10 ஆகிய வசனங்களைப் போலவே இவ்வசனத்தில் பூமியில் பாதைகள் அமைத்ததைப் பற்றி பேசுகின்றன. ஆனால் தொட்டில் எனும் வார்த்தை வரவில்லை. பூமியை விரிப்பாக அமைத்தோம் என்றே வந்துள்ளது.

அதே பொருளில் வந்துள்ள மற்ற குர்ஆன் வசனங்களை ஒப்பிட்ட பிறகு குறிப்பிட்ட அம்மூன்று இடங்களில் மட்டும் தொட்டில் என்று ஏன் மொழிபெயர்க்கப்பட்டது என்ற கேள்வி எழுகிறது. مهد எனும் வார்த்தை வந்துள்ளதால் அம்மூன்று இடங்களில் மட்டும் தொட்டில் எனும் பொருள்தான் வரும் என்று வாதிடவும் முடியாது. ஏனெனில் مهد எனும் வார்த்தைக்கு விரிப்பு/படுக்கை எனும் பொருளும் இருக்கிறது. பூமியை விரித்து வைத்திருப்பது பற்றி குர்ஆனின் அநேக இடங்களில் பல்வேறு வார்த்தைகள் மூலமாக சொல்லப்பட்டிருக்கும்போது அதே போன்று مهد எனும் வார்த்தை மூலம் பூமியை விரிப்பதைப் பற்றித்தான் இம்மூன்று வசனங்களிலும் சொல்லப்பட்டுள்ளது என்ற முடிவுக்கும் வர இயலும்.


الَّذِىْ جَعَلَ لَـكُمُ الْاَرْضَ فِرَاشًا وَّالسَّمَآءَ بِنَآءً وَّاَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَاَخْرَجَ بِهٖ مِنَ الثَّمَرٰتِ رِزْقًا لَّـكُمْ‌ۚ فَلَا تَجْعَلُوْا لِلّٰهِ اَنْدَادًا وَّاَنْـتُمْ تَعْلَمُوْنَ 

2:22. அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாகவும், வானத்தை507 முகடாகவும் அமைத்தான்.288 வானிலிருந்து507 தண்ணீரையும் இறக்கினான். அதன் மூலம் கனிகளை உங்களுக்கு உணவாக (பூமியிலிருந்து) வெளிப்படுத்தினான். எனவே அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு நிகராக எவரையும் கற்பனை செய்யாதீர்கள்!


وَالْاَرْضَ بَعْدَ ذٰلِكَ دَحٰٮهَا ؕ‏ 

79:30. இதன் பின்னர் பூமியை விரித்தான்.


وَالْاَرْضِ وَمَا طَحٰٮهَا ۙ 

91:6. பூமியின் மீதும், அது விரிக்கப்பட்டதன் மீதும் சத்தியமாக!379


وَاِلَى الْاَرْضِ كَيْفَ سُطِحَتْ 

88:20. பூமி எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது? (என்பதையும் பார்க்க வேண்டாமா?)


مَدَدْ, دَحَىٰ, طَحَىٰ, سُطِحَتْ, فَرَشْنَاهَا என்று வினை சொற்களாக பூமியை விரித்தேன் என்றும் பூமி விரிக்கப்பட்டது என்றும்

بِسَاطًا, فِرَاشًا என்று பெயர் சொற்களாக பூமியை விரிப்பாக ஆக்கினேன் என்றும்

பல்வேறு விதமாக குர்ஆன் சொல்கிறது. எனில் مهد மட்டும் ஏன் தொட்டில் ஆனது?


وَالْاَرْضَ فَرَشْنٰهَا فَنِعْمَ الْمٰهِدُوْنَ 

51:48. பூமியை விரித்தோம். நாம் அழகுற விரிப்பவர்கள்.

இந்த வசனத்தில்தான் நமக்கு مهد தொட்டில் ஆனதன் அறிவியல் உள்நோக்கம் விளங்குகிறது. இங்கே விரிப்பவர்கள் என்று மொழிபெயர்க்கப்பட்ட இடத்தில் இருக்கும் மூலச்சொல் مهد வில் இருந்து உருவானது. مَهْدًا  வை “தொட்டில்” ஆக்கினால் الْمَاهِدُونَதொட்டில் கட்டுபவன்” என்று மொழியாக்கம் செய்வதுதான் நியாயம். ஆனால் அதனை “விரிப்பவன்” என்று மொழியாக்கம் செய்ததில் இருந்து மற்ற வசனங்களைப் போல مَهْدًا  என்பதை விரிப்பு என்று பொருள் கொள்ளவேண்டும் என்றும் தொட்டில் என்று பொருள் கொள்வது தவறு என்றும் விளங்குகிறது.

அடுத்ததாக தொட்டில் என்று பொருள் செய்தால் அது புவி ஈர்ப்பு விசையைக் குறிக்குமா என்று பார்ப்போம்:-

புவி ஈர்ப்பு விசை என்று தலைப்பிட்டுவிட்டு சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான ஈர்ப்பு பிணைப்பைப் பற்றி தப்சீர் விளக்குகிறது. புவி ஈர்ப்பு விசை என்பது பூமியில் உள்ள பொருட்களை அது தன்வசம் ஈர்த்து வைத்துள்ள அதன் பண்பாகும். ஆனால் தப்சீர் விளக்குவதோ பூமியை தனது ஈர்ப்பு விசையால் சூரியன் வசப்படுத்தி வைத்திருப்பதைப் பற்றியாகும். தலைப்பிலிருந்தே தவறு ஆரம்பிக்கிறது.

தொட்டிலில் ஆடும் குழந்தைக்கு அதன் சுழற்சி தெரியாது எனவேதான் அது தூங்குகிறது என்று தப்சீர் சொல்கிறது. இது மிகப்பெரிய அறியாமை ஆகும். தொட்டில் ஆடும்போது அதன் நகர்வால் ஏற்படும் அதிர்வுகள்தான் குழந்தைகளை தூங்க வைக்கின்றது. எந்த அதிர்வும் இல்லாமல் இருப்பதால் குழந்தை தூங்குகிறது என்று வாதம் வைப்பதாக இருந்தால் அதற்கு தொட்டிலின் தேவை என்ன? தரையில் படுக்கவைத்தாலே எந்த அதிர்வும் இல்லாமல் இருக்குமே. தரையில் படுக்கவைத்தாலே குழந்தைகள் தூங்க வேண்டுமே? அவ்வாறல்ல. தொட்டிலில் இட்டு ஆட்டும்போது ஏற்படும் அதிர்வுகளால் மட்டுமே குழந்தைகள் தூங்குகின்றன.

குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்ளும் வாகனத்தில் ஏறி அமர்ந்து சிறிது நேரத்தில் நமக்கு தூக்கம் வரக் காரணம் வாகனத்தில் இருந்து வரும் சீரான அதிர்வுகளே. தொட்டிலில் இடாமல் தோளில் இட்டு சீராக தட்டினாலோ அல்லது சீராக நடந்தாலோ அதிர்வுகள் காரணமாகவே குழந்தைகள் தூங்குகின்றனர். ஆக! தொட்டிலை உதாரணாமாக சொல்லி விளக்குவது பொருத்தமற்றதாகும்.

தொட்டில் சுழல்வதைப் போலத்தான் பூமி சூரியனை சுழல்கிறதா?

வீட்டுக் கூரையில் கட்டப்பட்ட தொட்டிலின் ஒரு பகுதி சூரியன் என்றும் குழந்தை பூமி என்றும் ஒப்பிட்டு தொட்டில் எனும் வார்த்தையை தப்சீர் விளக்குகிறது. சற்று சிந்தித்துப் பாருங்கள். சூரியனை சுற்றி வட்டமாக ஒரே திசையில் பூமி சுழல்கிறது. உதாரணமாக ராட்டினத்தை தஃப்சீரே குறிப்பிட்டுள்ளதைக் காண்க. ஆனால் தொட்டிலோ இவ்வாறு ஆடுவதில்லை. தொட்டில் ஆடுகிறது என்று சொல்வோமே தவிர தொட்டில் சுழல்கிறது என்று சொல்ல மாட்டோம். ஏனென்றால் தொட்டில் சுழல்வதில்லை. இந்த வகையிலும் தொட்டில் பொருத்தமற்ற பொருளாக மாறுகிறது.

புவி ஈர்ப்பு:-

// சூரியனுடன் ஒரு கயிற்றால் கட்டி இழுக்கப்படுவது போன்ற நிலையில் இந்தப் பூமி சூரியனைச் சுற்றி வருகிறது//

// குழந்தைகளைத் தொட்டிலில் இட்டு ஆட்டும்போது அதன் சுழற்சி குழந்தைகளுக்குத் தெரியாது. அவர்களுக்கு அது சுகமாகவும், நித்திரை தருவதாகவும் இருக்கும்.//

தொட்டிலாக பூமி என்று தலைப்பிட்டு விட்டு தொட்டிலுக்கு என்ன விளக்கம் தஃப்ஸீர் கொடுக்கிறது என்று பார்த்தால் பூமியை இழுத்து வைத்திருக்கும் சூரியனின் சூரிய ஈர்ப்பு விசைதான் தொட்டில் என்கிறது தஃப்ஸீர். இவ்வளவு வேகத்தில் சூரியனை பூமி சுழன்ற பிறகும் பூமி அதை உணராமல் இருப்பதை தொட்டிலில் கிடக்கும் குழந்தையுடன் ஒப்பிடுகிறது தஃப்ஸீர். ஆக, தொட்டிலாக இருப்பது சூரிய ஈர்ப்பு விசை என்றும் குழந்தையாக இருப்பது பூமி என்றும்தான் இருந்திருக்க வேண்டும். தஃப்ஸீர் வாதம் உண்மையாக வேண்டுமெனில் “மிஹாதா” என்பதை “ராட்டினத்தில் சுற்றும் குழந்தை” என்று மொழிபெயர்த்து தொட்டிலில் ஆடும் குழந்தையாக பூமி என்று தலைப்பிட்டிருக்க வேண்டுமே தவிர தொட்டில் என்று மொழிபெயர்த்திருப்பது அறவே பொருந்தாது..

இறுதியாக...

அல்லாஹ்வோ அவன் தூதரோ சொல்லாத காரணத்தை கற்பனை செய்துகொண்டு 

//'தொட்டிலாக' என்ற சொல் மூலம் இதைத்தான் அல்லாஹ் குறிப்பிடுகிறான் // 

இதுதான் அல்லாஹ் சொன்னதற்கான காரணம் என்று சொல்லவே கூடாது.


மற்ற தலைப்புகளை வாசிக்க https://www.piraivasi.com/p/zina-ul-abdeen.html