அஹில்லா - அமாவாசி Vs பிறைவாசி
பிறைகள் காலங்காட்டிகள் என்றும் ஒவ்வொரு பிறையும் தேதிகள் என்றும் 2:189 வசனத்துக்கு அர்த்தம் கொடுக்கின்றது ஹிஜிரா கமிட்டி.
குர்ஆனில் 2:189 வசனம்தான் ஹிஜிரா கமிட்டியின் உயிர்நாடி.
இந்த வசனங்களுக்கு தமிழில் மொழிபெயர்த்த நமக்கு முந்தியவர்கள் அவர்களுக்கு தெரிந்த நியாயத்தின் அடிப்படையில் "அஹில்லா" என்பது சந்திரனின் வளர்ந்து தேயும் தோற்றங்கள்(பிறைகள்) என்று மொழிபெயர்த்தனர்.
அரபு மொழியை அலசி ஆராய்ந்து விஞ்ஞான காலண்டர் போட்ட விஞ்ஞானிகள் அதையே தங்களின் காலண்டருக்கு ஆதாரமாக காட்டுவதுதான் வேதனை.
அஹில்லா(الْأَهِلَّة) என்ற வார்த்தைக்கு "சந்திரனின் தினசரி தோற்றம்" என்று அதாவது "பிறைகள்" என்று அர்த்தம் கொடுக்கும் ஹிஜிரா கமிட்டியினர் மிகப்பெரிய மொழிபெயர்ப்பு மோசடி செய்கின்றனர்.
சந்திரனின் ஒவ்வொரு நாள் தோற்றத்தையும் ஒவ்வொரு பிறை என்கின்றனர். ஒரு மாதத்தில் சந்திரனில் தெரியும் காட்சிகள் அனைத்தையும் சேர்த்து "பிறைகள்" என்கின்றனர்.
அதாவது, 30 நாட்கள் கொண்ட மாதத்தில் 29 பிறைகளும், 29 நாட்கள் கொண்ட மாதத்தில் 28 பிறைகளும் இருக்குமாம்.
நமக்கு தெரிய வேண்டியது என்னவென்றால் 29 நாட்களின் பிறைவடிவங்களில் ஒவ்வொரு பிறை வடிவத்தின் பெயரும் "ஹிலால்" என்ற ஆதாரம் இருக்கிறதா என்பதே.
அரபு மொழியின் ஹிலால் ( هلال ) என்ற வார்த்தையை தமிழில் மொழிபெயர்க்கும்போது சொல்லப்படுப் வார்த்தைதான் "பிறை".
சூரியனை அடிப்படையாகக் கொண்டு எண்ணும் நாள் கணக்கை "தேதி" என்றும், சந்திரனை அடிப்படையாகக் கொண்டு எண்ணும் நாள் கணக்கை "திதி" என்றும் தமிழில் கூறுவர்.
அப்பாவை "அத்தா" என்றும், குழம்பு என்பதை "ஆணம்" என்றும் வேறுபடுத்தி காட்டி அதிலும் இஸ்லாமிய அடையாளத்தை புகுத்திய நம் முன்னோர்கள் "திதி" யை யும் வேறுபடுத்திக்காட்டுவதற்காக கூறியதுதான் "பிறை நாட்கள்". எந்த பிறையை பார்த்து மாத நாட்களை எண்ணினார்களோ அதே பிறையால் அந்த நாட்களையும் அழைத்தனர்.
அதாவது, சந்திரனின் முதல் தோற்றத்தைப் பார்த்து "பிறை" பிறந்து விட்டது என்று சொன்னவர்கள், நாட்களை எண்ணுவதற்கும் அதே பெயரை பயன்படுத்திக்கொண்டனர்.
முதல் தோற்றத்தை "பிறை" என்றும் பின்னர் வரும் நாட்களை இரண்டாம் பிறை, மூன்றாம் பிறை,பத்தாம் பிறை, இருபதாம் பிறை , முப்பதாம் பிறை என்று நாட்களை "பிறை" யால் எண்ணிக்கொண்டனர். இதனால் "திதி" என்ற எண்ணிக்கை பெயரை "பிறை" என்ற எண்ணிக்கை மூலம் இஸ்லாமியமாக ஆக்கினர்.
இந்த எண்ணிக்கையின் பிரகாரம்தான் ஒரு மாதத்தின் நாட்கள் "பிறைகள்" என்று சொல்லப்படுகிறதே தவிர அதன் உண்மை வார்த்தையான ஹிலால் ( هلال ) க்கு அல்ல.
ஹிலால் ( هلال ) என்பதற்கு "தினசரி பிறை" என்ற அர்த்தம் கிடையாது. சந்திரனின் முதல் தோற்றத்தை "ஒன்றாம் ஹிலால்" என்றோ இரண்டாம் நாள் தோற்றத்தை "இரண்டாம் ஹிலால்" என்றோ பத்தாம் நாள் தோற்றத்தை "பத்தாம் ஹிலால்" என்றோ அழைக்கும் வழமை அரபு மொழியில் இல்லை.
"கமிட்டியின் அஹில்லா"
கமிட்டியின் இணையதளத்தில் இருக்கும் ஹிலால் ( هلال ) பற்றிய ஒரு விளக்கத்தைப் பார்ப்போம். . .
ஹிலால் ( هلال ) என்பது...
**முதல் இரண்டு நாட்கள் மற்றும் கடைசி இரண்டு நாட்கள்
**முதல் மூன்று நாட்கள் மற்றும் கடைசி மூன்று நாட்கள்
**முதல் ஏழு நாட்கள் மற்றும் கடைசி ஏழு நாட்கள்`
தெரியும் சந்திரனின் தோற்றத்தின் பெயர் என்கின்றனர்.
ஆக, முதல் ஏழு மற்றும் கடைசி ஏழு என அதிகபட்சமாக 14 நாட்களின் சந்திரத் தோற்றத்தை ஹிலால் ( هلال ) என்றும் மற்ற நாட்களின் தோற்றத்தை "கமர்" என்றும் சொல்கின்றனர். இதில் முதல் நாளும் கடைசி நாளும் பிறை தெரியாது என்பதால் அதிகபட்சமாக 12 சந்திர தோற்றங்களை "மட்டும்" ஹிலால் ( هلال ) என்று கமிட்டியினர் பதிந்திருக்கின்றனர்.
மேலே உள்ள அவர்களின் கூற்றுப்படி பார்த்தால் , ஒரு மாதத்தில் அதிகபட்சமாக தெரியவேண்டிய 29 பிறைகளையும் அவர்களே கூட ஹிலால் ( هلال ) என்று சொல்லவில்லை.
அப்படியென்றால் ஒரு மாதத்தில் 12 ஹிலால்கள்(பிறைகள்) மட்டுமே அவர்களின் கருத்தின்படி வருகிறது.
அஹில்லா (أَهِلَّة) என்றால் என்ன?
அஹில்லா ( ْأَهِلَّة) என்ற அரபு வார்த்தையானது ஹிலால் ( هلال ) என்ற அரபு வார்த்தையின் "பன்மை" வார்த்தையாகும்.
அதாவது, அஹில்லா வில் பல ஹிலால்கள் இருக்கும்.
இதில்தான் கமிட்டியினர் அவர்களின் கூற்றிற்கு அவர்களே முரண்படுகின்றனர்.
இந்த அஹில்லாதான் தேதிகள் என்கின்றனர். அதாவது ஹிலால்கள் தான் தேதி என்றும் ஒவ்வொரு ஹிலாலும் ஒவ்வொரு தேதியை காட்டும் என்றும் சொல்கின்றனர்.
இவர்களின் கூற்றுப்படி ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 12 ஹிலால்கள் மட்டும்தான்இருக்கிறது. அந்த 12 ஹிலால்கள் மட்டும்தான் தேதிகளை காட்டுமா?
12 ஹிலால்கள் மட்டும் ஒரு மாதமாக இருக்க முடியாது. 12 ஹிலால்கள் மட்டும் தேதியை காட்டினாலும் அது மாதமாக இருக்க முடியாது.
2:189 ல் உள்ள அஹில்லாவிற்கு சந்திரனின் தினசரி தோற்றம் என்ற பொருளில் அர்த்தம் கொடுத்தால், ஹிலால் என்ற வார்த்தைக்கு அவர்கள் கொடுத்த அர்த்தம் பொய்யாகிறது.
அதாவது
(1) அஹில்லா என்பது ஒரு மாதத்தில் அதிகபட்சமாக தெரியக்கூடிய 29 ஹிலால்கள். அந்த ஹிலால்கள்தான் அவர்களின் கூற்றுப்படி தேதிகள்.
(2) ஒரு மாதத்தில் 12 பிறைகளை மட்டும்தான் "ஹிலால்" என்றும் மற்ற தோற்றங்களின் பெயர் "கமர்" என்பதும் அவர்களின் கூற்றுதான்.
தெரிய வேண்டியது என்னவென்றால், அஹில்லா என்பதில் இருப்பது 12 ஹிலால்களா அல்லது 29 ஹிலால்களா என்பதுதான்.
இரண்டில் ஒன்றுதான் உண்மையென்றால் மற்றொன்று பொய்யாகிவிடும்.
29 நாட்களின் பிறைகளின் பெயரும் "ஹிலால்" என்று அவர்கள் நிரூபிக்காதவரை அவர்களின் "அஹில்லா" தேதிகளாக ஆகவே முடியாது.
"பிறைவாசிகளின் அஹில்லா"
அஹில்லா என்பது "ஹிலால்" என்பதன் பன்மைச் சொல்.
ஹிலால் என்றால் அரபு அகராதியின்படி
"தோன்றுவது" மற்றும் "துவக்குவது" என்று பொருள்படும்.
1400 வருடங்களுக்கும் மேலாக "மாலையில் மேற்கு திசையில் தோன்றி மாதத்தைத் துவக்கக்கூடிய பிறைதான் ஹிலால்" என்று அறிந்திருக்கிறோம்.
இந்த ஹிலாலை தமிழில் பிறை என்று சொன்னாலும், தினமும் எண்ணும் முதல் பிறை, இரண்டாம் பிறை, பத்தாம் பிறை, என்று எண்ணும் பிறைக்கணக்கில் இருந்து ஹிலாலை வேறுபடுத்திக் காட்டுவதற்காக ஹிலால் என்பதை "தலைப்பிறை" என்று மொழிபெயர்க்கின்றனர். ஆங்கிலத்தில் New moon என்றும் மொழிபெயர்க்கின்றனர்.
இந்த தலைப்பிறைதான் மாதத்தை துவக்குகிறது. தலைப்பிறை(New moon) என்பது ஒரு மாதத்தில் ஒரு தடவை மட்டுமே இருப்பது. இந்த தலைப்பிறையின் (هلال) பன்மைதான் "தலைப்பிறைகள்" (أَهِلَّة -அஹில்லா).
இந்த தலைப்பிறைகள் (أَهِلَّة) தான் மனிதர்களுக்கும் ஹஜ்ஜிற்கும் "மவாக்கீத்" என்று 2:189 வசனம் சொல்கிறது.
திருக்குர்ஆன் 2:189
உம்மிடம் கேட்கிறார்கள் - يَسْأَلُونَكَ
தலைப்பிறைகளைப் பற்றி - عَنِ الْأَهِلَّةِ
கூறு(ங்கள்) -قُلْ
அவை - هِيَ
மவாக்கீத் - مَوَاقِيتُ
மனிதர்களுக்கும் ஹஜ்ஜிற்கும் - لِلنَّاسِ وَالْحَج
"தலைப்பிறைகளைப் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள், மனிதர்களுக்கும் ஹஜ்ஜிற்கும அவை மவாக்கீத் என்று கூறு(ங்கள்)" ...(2:189)
மவாக்கீத் என்றால் என்ன?